உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் புகழ்பெற்ற இவ்வரி என்ன சொல்கிறது? நெருப்பாய் இருப்பது என்றால் எப்படி?

நெருப்புக்குப் பல குணங்கள் உண்டு. எனினும், சட்டென்று நினைவுக்கு வருவது, நெருப்பு சுடும் என்பதுதான். எனவே, நெருப்பாய் இரு என்றால், தமிழா நீ சூடு, சுரணை உள்ளவனாக இரு என்று பொருள். தமிழனுக்குச் சூடே கிடையாதா, அவனுக்குக் கோபமே வராதா என்று கேட்டால், அப்படிச் சொல்லிவிட முடியாது. தன் சாதியைப் பற்றி யாராவது இழிவாகக் கூறிவிட்டால், தமிழன் கோபக் கனலாகி விடுகிறான். அவனிடம் சூடு பறக்கிறது. ஆனால், நம் மொழி, இனம் பற்றி எவரேனும் இழிவாய்ப் பேசினால், நாம் ஆறிய சோறாய் அடங்கிப் போகிறோம். அங்கேதான் நெருப்பாய் இருக்க வேண்டும் என்கிறார் கவிஞர்.

நெருப்புக்கு இன்னொரு குணமும் உண்டு, தீச்சுடரை நாம் எப்படி ஏந்தினாலும் - நேராக, பக்கவாட்டில், தலைகீழாக எப்படி ஏந்தினாலும் - நெருப்பு மேல் நோக்கித்தான் எழும். தஞ்சாவூர் பொம்மையைத் தலையாட்டி பொம்மை என்று நாம் தவறாகச் சொல்கின் றோம். அது தலையாட்டி பொம்மை அன்று. எப்படி நாம் சாய்த்து வைத்தாலும், உடனே தலைநிமிர்ந்து விடுகிற தலை தாழாப் பொம்மை அது! அது நெருப்பின் குணம். எனவே, நெருப்பாய் இரு என்றால், என்றும் தலை வணங்காத சுயமரியாதைக்காரனாக இரு என்றும் பொருள்.

மேலும், நெருப்பு என்றால் வெளிச்சம். அதாவது அறிவு. அறியாமை இருள் நீக்கும் அறிவு. அதனால்தான் அறிவின் அடையா ளமாய், சுடரேந்தி நிற்கும் ஒரு கையை நாம் பயன்படுத்துகிறோம்.

எனவே, இருப்பாய் தமிழா நெருப்பாய் என்று கவிஞர் ஏன் பாடினார்? தமிழர்கள் இன, மொழி உணர்வுடையவர்களாகவும், சுயமரி யாதைக்காரர்களாகவும், அறிவாளிகளாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்து வதற்காகத்தான்!

(கலைஞர் தொலைக்காட்சியின் ஒன்றே சொல், நன்றே சொல் பகுதியில் - சுப.வீரபாண்டியன்)

- சுப.வீரபாண்டியன்