கருணை மிகுந்த கலைஞருக்கு ஒரு வேண்டுகோள்

மரணதண்டனைக்கு அடுத்த நிலையில், வாழ்நாள் (ஆயுள்) தண்டனையைக் கருதலாம். சில வேளைகளில் மரணதண்டனையைவிட அது கொடுமையானதாகவும் ஆகிவிடுகிறது.

வாழ்நாள் தண்டனை என்பது காலம் வரையறுக்கப்படாத ஒன்று. காந்தியார் கொலை வழக்கில் வாழ்நாள் தண்டனை வழங்கப்பட்ட கோபால் விநாயக் கோட்சே விடுதலை கோரி உச்சநீதி மன்றத்தை அணுகிய போது, ஐந்து பேர் அடங்கிய நீதிபதிகள் குழு, வாழ்நாள் தண்டனை என்பது சிறையாளியின் இறுதி மூச்சு அடங்கும்நாள் வரை தொடரும் என்று அறிவித்தது. இந்தக் கொடூரமான தீர்ப்பை, புகழ் பெற்ற மாருராம் வழக்கில், உச்சநீதிமன்றம் மீண்டும் ஒருமுறை உறுதிசெய்தது.

Naliniஇந்த நிலையில்தான், வாழ்நாள் சிறையாளிகள் எப்போது விடுதலை செய்யப்பட்டாலும் அதனை முன்விடுதலை(Premature release) என்று கூறுகிறோம். இந்திய தண்டனைச் சட்டம் 57 ஆவது பிரிவின்படி 20 ஆண்டுகள் தண்டனையை நிறைவு செய்தவர்களை முன்விடுதலை செய்வது குறித்து ஆராயலாம். 20 ஆண்டுகள் என்பதையும் கூட முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. சிறையாளியின் நன்னடத்தை, மத்திய மாநில அரசுகள் தரும் சிறப்புத் தண்டனைக் கழிவுகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, பத்தாண்டுகள் நிறைவடைந்த உடனேயே, முன்விடுதலைக்குப் பரிந்துரைக்கும் அறிவுரைக் குழுவை நியமிக்கலாம் என்பது விதிமுறை.

மேற்காணும் விதிமுறையில் 1978 ஆம் ஆண்டு ஒரு மாற்றம் வந்தது. அதன்படி மரணதண்டனை விதிக்கப்பட்டுப் பிறகு வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப்பட்டவர்களின் முன்விடுதலை குறித்து 14 ஆண்டுகள் நிறைவடைந்த பின்பே நன்னடத்தை பற்றிய கணக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆயிற்று. 2003 முதல் நடைமுறைக்கு வந்த அரசு ஆணை எண்: 1762ன்படி முன்விடுதலைக்குத் தகுதி அற்றோர் என்று ஒரு பட்டியல் உருவாயிற்று. அதன் பிறகு 20 ஆண்டுகள் நிறைவடைந்தால் மட்டுமே சிலருக்கு அறிவுரைக் குழு அமைக்கப்படும் என்னும் நிலை ஏற்பட்டது. அந்த வகையில்தான் நளினி முதலானவர்களின் முன்விடுதலை இப்போது மறுக்கப்படுகிறது.

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இவ்விதிமுறைகள் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஏழு ஆண்டுகள் நிறைவடைந்தால் போதும், முன்விடுதலை குறித்து அவர்களுக்கு ஆய்வு நடத்தலாம் என்னும் கட்டத்தைச் சில மாநிலங்கள் அடைந்துள்ளன. ஆனால் தமிழகத்திலோ 22 ஆண்டுகள் நிறைவடைந்தபின்னும், கோவைச் சிறையில் மணி என்ற மாணிக்கம் முன்விடுதலை அளிக்கப்படாமலே உள்ளார். 20 ஆண்டுகள் நிறைவடைந்தும் விடுதலை ஆகாத சிறையாளிகள் ஐவர் தமிழகச்சிறைகளில் உள்ளனர்.

வாழ்நாள் சிறையாளிகளின் இன்றைய நிலை, தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் நேரடிக் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்படுமானால் அவர்களுக்குக் கண்டிப்பாய் ஒரு விடியல் பிறக்கும் என்று நம்புகிறோம். கோவை வெடிகுண்டு வழக்கில் கைதான இஸ்லாமியர்கள் பலர், பத்தாண்டுகளுக்கு மேலாகச் சிறைகளில் உள்ளனர். பல வழக் குகளில் இன்னும் விசாரணையே முடியாத நிலை உள்ளது. விசாரணை முடிவில், அவர்கள் குற்றமற்றவர்கள் என மெய்பிக்கப்பட்டால், இத்தனை ஆண்டுகாலச் சிறைவாசத்தால் அவர்களுக்கு ஏற்பட் டிருக்கக்கூடிய இழப்புகளை எப்படி நாம் ஈடுசெய்ய முடியும்? 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் கூட, நெடுநாள் விசாரணைக் கைதிகளாக இன்னும் உள்ளனர்.

அறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி பத்தாண்டுகள் நிறைவுசெய்த ஆயிரக்கணக்கான சிறையாளிகள் இன்றுவரை விடுதலை ஆகியுள்ளனர். அதிலும் கூட, ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் நான்காண்டுகள் அந்த நடைமுறையும் நிறுத்தி வைக்கப்பட்டது. கலைஞர் ஆட்சி வந்ததற்குப் பிறகு கடந்த நான்காண்டுகளாக மீண்டும் முன்விடுதலைகள் தொடர்கின்றன.

எனினும், நளினி உள்ளிட்ட வாழ்நாள் சிறையாளிகளில் மிகப் பலர் எந்த தண்டனைச் சலுகையும் வழங்கப்படாமல் சிறையாளிகளாகவே தம் வாழ்வைத் தொடர்கின்றனர். தமிழக அரசும் , தமிழக முதலமைச்சர் அவர்களும் பரிவுடன் அணுகி, பத்தாண்டுகளுக்கு மேலாகச் சிறையில் இருக்கும் அனைவரையும் முன்விடுதலை செய்ய வேண்டும் என்பது மனித நேயப்பற்றாளர்ளின் ஒருமித்த வேண்டுகோள்.

அறிஞர்அண்ணா அவர்கள் நடத்திய இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டில் 11,488 சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டதைப் போல, வரவிருக்கும் உலத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினையொட்டி இப்போது சிறையிலிருக்கும் வாழ்நாள் சிறையாளிகள் பலருக்கும் முன்விடுதலை கிடைக்க வேண்டுமென்று மிகுந்த விருப்பத்துடன் உள்ளோம்.

- சுப.வீரபாண்டியன்