‘ஆலயம் செய்தோம் அங்கே அனுமதியில்லை’ என்று பழைய திரைப்படப் பாடலில் ஒரு வரி வரும். உண்மை. கோவில்களைக் கட்டியவர்களுக்கும், நிதியளித்தவர்களுக்கும் பிற்காலத்தில், அக்கோவில்களுக்குள்ளேயே நுழையத் தடை ஏற்படுத்தப்பட்டுவிட்டது. அந்தச் சிக்கல்களை இன்றுவரை நாம் எதிர்கொண்டு வருகிறோம். இந்த நிலை எப்படி ஏற்பட்டது? கோவில்கள் ஒரு சிறிய கூட்டத்தாரின் கையில் அகப்பட்டுக்கொண்டதன் பின்னணி என்ன? ‘வானத்தில் இருந்து குதித்தவர்கள்’ என்று சொல்வதை, நீதிமன்றம் ஏற்கின்ற இழிநிலை ஏன் வந்தது?

இதற்கான விளக்கங்களையும், விடைகளையும் தருகிறது, பி.சிதம்பரம்பிள்ளை அவர்கள் எழுதிய, “கோவில் நுழைவு உரிமை” என்னும் நூல். முதலில் ‘ஸிவீரீலீt ஷீயீ ஜிமீனீஜீறீமீ ணிஸீtக்ஷீஹ்’ என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் வெளிவந்து, பிறகு 1936ஆம் ஆண்டு தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. சிறந்த சட்ட அறிஞரான சிதம்பரம்பிள்ளை, சட்டப்படியாகவும், சாஸ்திரப்படியாகவும் அனைவருக்கும் கோவிலுக்குள் நுழையும் உரிமை உண்டு என்பதை அசைக்கமுடியாத, ஆதாரங்களோடும், வாதங்களோடும் இந்நூலில் எடுத்து வைத்திருக்கிறார்.

கோவில் நுழைவு குறித்து மட்டுமில்லாமல், தீட்சிதர்களின் சிதம்பர ரகசியத்தின் பின்னணி, நம்மைச் சூத்திரர்கள் என்று சொல்லும் பூணூலில் அப்பிக்கிடக்கும் அழுக்குகள் எனப் பலவற்றைப் பற்றியும் அரிய பல செய்திகளை இந்நூல் நமக்குத் தருகிறது.

திராவிட இயக்க வரலாற்றில், கோவில் நுழைவுப் போராட்டம் என்பது குறிப்பிடத்தக்க ஒரு பகுதி என்பதை நாம் அறிவோம். சாதி, தீண்டாமை என்னும் திணிக்கப்பட்ட காரணங்களைச் சொல்லி ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் கோவிலுக்குள் நுழைய தடைசெய்யப்பட்டதையும், அந்தத் தடையை உடைக்கத் திராவிட இயக்கம் உள்ளிட்ட சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் மேற்கொண்ட போராட்டங்களையும், அதன் விளைவாக அனைவரும் கோவிலுக்குள் செல்லும்படியாக நிலைமை மாறியிருப்பதையும் நாம் அறிவோம்.

மன்னர்களால், வருமானத்திற்காக மட்டுமே கோவில்கள் ஏற்படுத்தப்பட்டன. மோட்சம் போகத் தேவையான புண்ணியத்தைச் சேர்ப்பதற்காக அன்றைய மன்னர்கள் கோவில்களைக் கட்டவில்லை என்பதை, சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் தரும் செய்திகளைக் கொண்டு விளக்கியிருக்கிறார். பேய், பூதங்கள், தந்திரங்கள் என எதையாவது செய்து, மக்களைக் கோவில்களின் பக்கம் இழுத்து, அதன் மூலம் காணிக்கைகளை வாங்கி, மன்னனின் கருவூலத்தை நிரப்ப வேண்டும் என்பது சாணக்கியர் வகுத்துத்தந்த, நிர்வாக நடைமுறை. அதன்படி பார்த்தால், அக்காலத்தில் கோவில் அனைவருக்கும் பொதுவானதாகவே இருந்திருக்கிறது.

இன்னொரு செய்தியும் நமக்குக் கிடைக்கிறது. அரசாங்கத்திற்கு வருமானம் கிடைப்பதற்குச் சாணக்கியர் வகுத்தளித்த இன்னொரு திட்டம், ‘அரசு சாராயத் திட்டம்’. அந்த சாராயக் கடைகளின் விற்பனையை அதிகரிக்க, அமர்த்தப்பட்ட விலைமாதர்கள் அப்படியே காலப்போக்கில், கோவில்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, அங்கே இசையும், நடனமும் இணைக்கப்பட்டன. இவையெல்லாம், ‘பக்தர்களின் வருகையை’ அதிகரிப்பதற்கான உத்திகளாகச் செய்யப்பட்டன. நியாயமான விலையில் பார்ப்பனர்களுக்கும் சாராயம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்தது, இசை, நடனம், அழகிய விலைமாதர்கள் என சுகபோகங்களால் ஈர்க்கப்பட்ட பார்ப்பனர்கள், கோவில்களுக்குச் சென்றனர். அதனால் தீட்டுப்பட்டவர்கள் என்று சொல்லி, சாதியிலிருந்து விலக்கப்பட்டனர். சாஸ்திரப்படி, அவர்கள் தொட்டு வணங்கினால், கோவிலும், கோவிலிலுள்ள கடவுள் சிலைகளும் தீட்டுப்பட்டு விடும். அதோடு, மன்னனுக்கும், நாட்டுக்கும் கேடு வந்து சேரும்.

எனவே பார்ப்பனன் தீண்டத்தகாதவன், அவன் வழிபட்டதால், நம்முடைய கோவில்கள் தீட்டுப்பட்டு விட்டன. ஆகவே முதலில் கோவிலுக்குள் இருக்கும் பார்ப்பனனை வெளியேற்றிக் கோவிலைக் கழுவிவிட வேண்டும் - அதுதானே நியாயம்!

ஆங்கிலேயர்கள் காலம்வரை, சாணக்கிய சட்டம் மட்டுமே செல்லுபடியானது. ஆங்கிலேயர்கள் காலத்தில்தான், தங்களுக்குச் சாதகமான சட்டதிட்டங்களை ஸ்மிருதிகள் என்னும் பெயரில் உருவாக்கி, ஆங்கிலேயர்களுக்கு வடமொழியின் மீதிருந்த ஈர்ப்பினைப்  பயன்படுத்தி நிலைநிறுத்திக்கொண்டனர் பார்ப்பனர்கள். காலம் காலமாக இருந்து வந்த நடைமுறைப்படி, இங்கிருந்த வழிபாட்டுத் தலங்களை ஆங்கிலேய அரசே நிர்வகித்து வந்தது.

‘இங்கு குறிப்பிட வேண்டிய தேவையில்லாத சில காரணங்களை முன்னிட்டு’ என்னும் முன்னுரையோடு, 1863ஆம் ஆண்டு 20ஆவதாக ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அதன்படி, அனைத்து வழிபாட்டுத் தலங்களையும், அவற்றோடு தொடர்புடைய நிறுவனங்களையும் அந்தந்த “மதஸ்தர்களின்” நிர்வாகத்திற்கே விட்டுவிடுவது என்று தீர்மானித்து, அப்படியே செய்தார்கள்.

இந்துக்களின் மத நிறுவனங்கள் இந்துக்களுக்கும், மகமதியர்களின் மத நிறுவனங்கள் மகமதியர்களுக்கும் கிடைத்தன. இங்கே கவனிக்க வேண்டியது, அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு  நிர்வாகத்தைக் கொடுத்ததாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, குறிப்பிட்ட வருணாத்தாருக்கு என்று சொல்லப்படவில்லை. அதெல்லாம் பின்னாளில் அவாள்களின் சூழ்ச்சியினால் செய்து கொள்ளப்பட்டதாகும். அப்படித்தான் சிதம்பரம் தீட்சிதர்களின் காலட்சேபமும் நடந்து வருகிறது. 1863 சட்டத்தில், இன்னின்னாரை மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என்று எங்குமே சொல்லப்படவில்லை.

“கோர்ட்டில் வழக்கு ஏற்படும் போது, சரித்திர ஆராய்ச்சிக்கு அங்கு இடமில்லை. பழக்க வழக்கத்தையே பார்க்கிறார்கள்” என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார். அந்தப் போக்கை, பாபர் மசூதி வழக்கில், இன்றுள்ள வழக்கத்தின் அடிப்படையிலும், புராண நம்பிக்கையின் அடிப்படையிலும் அந்த இடம் ராமன் பிறந்த இடம் என்று சொன்ன நீதிபதிகளின் சட்டப் புலமையில் நாம் பார்த்தோம். அவர்கள் சொல்லுகின்ற வழக்கத்தின் அடிப்படையைச் சிதம்பரம் கோவிலுக்குப் பொருத்திப் பார்த்தோமென்றால், கோவில் நிர்வாகம் என்றென்றைக்கும் அரசின் கட்டுப்பாட்டிலே இருப்பதுதான் சரி என்ற முடிவுக்கு எளிதில் வந்துவிட முடியும்.

“.....கோவிற் செலவு போக மீதமான வருமானம் முழுவதையும் அரசாங்கத்தாரே கைப்பற்றிவந்தார்கள் என்பதாகும். இந்த நடைமுறை, பிரிட்டிஷ் அரசாங்கத்தார் தமக்கு முந்திய இந்து, முஸ்லிம் அரசாங்கத்தாரிடமிருந்து பிதுரார்ஜிதமாகப் பெற்றுக் கொண்டதாகும். இது பண்டைக் காலம் முதலேயிருந்து வந்திருக்கிறது.....” என்று, திருப்பதி தேவஸ்தான வழக்கொன்றில், நீதிபதிகள் சர் அர்னால்டு ஒயிட், எயிலிங் ஆகியோர் அளித்த தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார் நூலாசிரியர்.

ஆகமங்களை நன்கு ஆய்ந்து படித்தால், ஆகமங்களின் படி கோவிலில் நுழைந்து வழிபட எந்த ஒரு பார்ப்பானுக்கும் உரிமை இல்லை. ஆங்கிலேய அரசாங்கம் ஏற்பட்டது முதல் இதுவரை, வழக்கத்தை முன்னிறுத்துகின்ற சட்டத்தையும், பாமரமக்களின் அறியாமையையும், மூடநம்பிக்கையையும் பயன்படுத்தி தனக்குச் சாதகமாக ஏற்படுத்திக் கொண்ட சகல உரிமைகளையும் அவன் இழக்க நேரிடும். இவை உள்ளிட்ட பல்வேறு உண்மைகள் இந்நூலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

இந்துவாக அறியப்பட்ட ஒவ்வொருவருக்கும் பொதுக்கோவில்களில் நுழைந்து வழிபாடு செய்வதற்குச் சட்டப்படியும், சாஸ்திரப்படியும் உரிமை இருக்கிறது என்பதை மறுக்க முடியாத வாதங்களுடன் நிறுவுகிறார் நூலாசிரியர்.

இந்நூலின் ஆங்கிலப் பதிப்புக்குத் தந்தை பெரியார் வழங்கியுள்ள, சிறப்பான முன்னுரையில் கூறியிருப்பது போல, ‘இந்நூலுக்கு இந்நூலே சமம், ஆதலால் இதில் கிடக்கும் மதிக்க முடியாத பொக்கிஷத்தை அவரவரே வாங்கிப் படித்தாலொழிய அதை முழுவதும் எடுத்துக் கூறிவிடுதல் முடியாத காரியமேயாகும்.’

 

கோவில் நுழைவு உரிமை

 

ஆசிரியர் : பி.சிதம்பரம்பிள்ளை

 

வெளியீடு : சாளரம்

 

348 - ஏ, டி.டி.கே. சாலை,

 

இராயப்பேட்டை, சென்னை- 14.

விலை : ரூ. 70/-- 

Pin It