மோடி அலை சுனாமியாக உருமாறி பா.ஜ.க. கப்பலின் நங்கூரத்தை ஆட்டத் தொடங்கிவிட்டது. இந்திய மதவாத வானிலைக் குழப்பம் மோடியை மையம் கொண்டு, சூறாவாளியைக் கிளப்பி யிருக்கிறது பா.ஜ.க.வில்.

மோடி, பா.ஜ.க.வைக் கபளீகரம் செய்துவிடுவார் என்ற அச்சமும், சிறிய அளவில் கூட, மோடியை எதிர்த்தால் என்னாகுமோ என்ற அச்சமும், அந்தக் கட்சித் தலைவர்களை முரண்பட வைப்பதாக இந்தியா டுடே ஜதின் காந்தி குறிப்பிடுகிறார்.

இந்துத்துவ மதவாதச் சிந்தனையில் பா.ஜ.க. தலைவர்கள் முரண்படமாட் டார்கள். அது ஆர்.எஸ். எஸ் அளித்துள்ள பயிற்சி.

“நரேந்திர மோடிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், பா.ஜ.க.வில் முக்கிய முடிவுகள் எடுக்கப் படும் நடைமுறை, ஆகியவை அவசரகாலப் பிரகடனம் செய்யப்பட்ட காலத்தை நினைவு படுத்து வதாக இருக்கிறது” என் கிறார் பா.ஜ.க.வின் மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்.

இவரது இந்த வாக்குமூலத்தில் மோடி ஒரு சர்வாதிகாரி என்ற தொனி இருக்கிறது. அதாவது மோடியின் பிடிக்குள் கட்சி போய்விட்டது என்ப தையும், அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறார் அவர்.

ஒரு காலத்தில் மோடியைத் தன் சீடனைப் போல ஏற்று வழிநடத்தியவர் எல்.கே.அத்வானி. 2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தால் மோடிக்குக் கட்சியில் எழுந்த எதிர்ப்பைச் சமாளித்து அவரைக் காப்பாற்றியவர் அத்வானி. வாஜ்பேயிக்கு அடுத்துப் பிரதமர் பட்டியலில் இருந்த அத்வானியை, 2013ஆம் ஆண்டு கோவாவில் நடந்த கட்சிக் கூட்டத்தில் ஓரம் கட்டிவிட்டுத் தன் பெயரைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கச் செய்தார் மோடி - ஆர்.எஸ்.எஸ் துணையுடன்.

ஊழல் காரணமாக பா.ஜ.க தேசியத் தலைவரான கட்கரி, பதவி இழந்தவுடன், ராஜ்நாத் சிங் கட்சியின் தேசியத் தலைவரானதில் அத்வானியின் பங்கு குறிப்பிடத்தக்கது. இப்பொழுது அவர் மோடியுடன் சேர்ந்துகொண்டு அத்வானி யின் காலை வாரிவிட்டுவிட்டார்.

1991 தொடக்கம் 5 முறை குஜராத் மாநில காந்திநகர் தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அத்வானி. 2014ஆம் ஆண்டுத் தேர்தலுக்கு அத்தொகுதியை அத்வானிக் குக் கொடுக்காமல், காலம் தாழ்த்தி, இழுத்தடித்தது பா.ஜ.க.

இது அத்வானிக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று கொட்டித்தீர்த்தார் உத்தவ்தாக்ரே.

தடுமாறிப் போன அத்வானி காந்திநகர் வேண்டாம், மோடி தோற் கடித்து விடுவார், நான் போபால் போகிறேன் என்றார். விடவில்லை ராஜ் நாத்சிங். காந்திநகரே இப்பொழுது அத்வானியின் கதியாகிவிட்டது.

பா.ஜ.க.வின் இன்னொரு தலைவர் ஜஸ்வந்த் சிங். பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசில் அமைச்சராக இருந்தவர். ஜோத்பூர், சித்தோர்கர் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர், இப்பொழுது மேற்கு வங்க டார்ஜிலிங் தொகுதி உறுப்பினராக இருக்கிறார்.

இந்த முறை தன்சொந்தத் தொகுதி யான இராஜஸ்தான் மாநில பார்மர் தொகுதியில் நிற்க விரும்பினார். ஆனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜ.க.வுக்கு அண்மையில் வந்து சேர்ந்த இராணுவ அதிகாரி சோனாராம் சவுத்திரிக்கு அந்தத் தொகுதி ஒதுக்கப் பட்டு, ஜஸ்வந்த் சிங் புறக்கணிக்கப்பட்டார்.

நொந்து போன சிங், பார்மர் தொகுதி யில் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு மோடியைக் கடுமையாகத் தாக்கியதோடு, ராஜ்நாத் சிங்கும், மாநில முதல்வர் வசுந்தர ராஜேவும் தனக்குத் துரோகம் செய்துவிட்டதாக அறிவித்தார். நான் கட்சியில் இருப்பதா, இல்லையா - முடிவு செய்யட்டும் பா.ஜ.க. என்று கூறிவிட்டார் அவர்.

கடந்த மார்ச் 8ஆம் நாள் பா.ஜ.க.வின் மத்திய தேர்தல் கமிட்டிக் கூட்டத்தில், வாரணாசி தொகுதி மோடிக்கு ஒதுக்கப் பட்டதால், அந்தத் தொகுதி உறுப்பினர் முரளி மனோகர் ஜோஷி கட்சியின் மூத்த தலைவர்களுடன் சண்டையிட்டதாகத் தகவல் வெளியானது.

கட்சியில் கலகக் குரல்கள் எழுவதைப் பார்த்த ஆர்.எஸ்.எஸ், பெங்களூரில் நடந்த அகில பாரத சபா கூட்டத்தில், நரேந்திர மோடி அலையைத் தடுப்பதற்கு முன்பாகவே உட்கட்சிப் பூசல்களை நிறுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுத்தது-.

மோடி அலை - மோடி அலை என்று ஊடகங்களும், பா.ஜ.கவும் ஊதிப் பெருக்கியதைச் சகிக்க முடியாத ஆர்.எஸ்.எஸ், மோடியின் தனிமனித பிம்பத்தைப் பொறுக்க முடியாமல், ஆர்.எஸ்.எஸ் தனி மனிதனுக்கோ, கட்சிக்கோ பணியாற்றவில்லை என்பதை ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று மோகன் வைத்தியா மூலம் ஓர் அறிக்கையை வெளியிட்டது.

மோடியை கடவுளுக்கு இணையாக, “அர அர மோடி, கர கர மோடி” என்ற அவரின் ஆதரவாளர் கள் எழுப்பிய கூச்சலால் ஆத்திரமடைந்த துவாரகை சங்கர பீடாதிபதி சரஸ்வதி சங்கராச்சாரி அதனைக் கடுமையாகக் கண்டித்து மோடியைப் பின்வாங்கச் செய்தார்.

மோடியின் அதிகார மையத்தால் சோனாபேட் தொகுதியை இழந்த அரியான மாநில பா.ஜ.க. செயலாளர், அப்பொறுப்பை ராஜினாமா செய்து விட்டு, “அரியானாவில் மீண்டும் பா.ஜ.க தோல்வி அடையக் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறது” என்று சொன்னார். அவரின் ஆதரவாளர்கள் மோடியின் உருவ பொம்மையை எரிப்போம் என்று முழக்கங்களை எழுப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

பா.ஜ.க.வின் விவசாயிகள் பிரிவு துணைத்தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுபாஷ் மகாரியா, ராஜஸ்தான் சிகார் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளரை எதிர்த்துச் சுயேச்சை வேட்பாளராகக் களம் இறங்குகிறார்.

பீகார் மாநில மூத்த பா.ஜ.க தலைவரும், பக்சர் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரு மான லால்முனி சவுபே, சுயேச்சை வேட்பாளராக, பா.ஜ.க வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

குஜராத்தின் அகமதாபாத் தொகுதி நாடாளுமன்ற பா.ஜ.க. உறுப்பினர் ஹரன் பதக், அத்தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் பாலிவுட் நடிகர் பரேஸ் ராவலுக்கு எதிராகச் சுயேட்சையாகக் களம் இறங்குகிறார்.

முரளி மனோகர் சர்ச்சைக்கு இடையே வாரணா சியில் மோடியும், உத்திரபிரதேச காசியாபாத்தில், மாநில பா.ஜ.க. எதிர்ப்பை மீறி முன்னாள் இராணுவ தளபதி வி.கே.சிங்கும் போட்டியிட இருக்கிறார்கள் - குழப்பத்தின் நடுவில்.

உத்திரப்பிரதேசத்தில் தியோரியா, முசாபர் நகர், அலகாபாத், அலிகார், பைசதாபாத், பிஜ்னோர், ஜான்சி உட்பட பலதொகுதிகள் அதிருப்தியின் உச்சமாக இருக்கின்றன.

உ.பி.யில் பா.ஜ.க. வுக்கு பாதுகாப் பான தொகுதிகளாகக் கருதப்படும் வாரணாசியில் ஜோஷி எதிர்ப்புத் தெரிவிக்கிறார். ராஜ்நாத் சிங் விரும்பும் லக்னோ தொகுதியை விட்டுத்தர இப்போதைய உறுப்பினர் லால்ஜி டாண்டன் கலகக் குரல் எழுப்புகிறார்.

ஊழல் பேர்வழி எடியூரப்பா மீண்டும் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட சுஷ்மா சுவராஜ் கடுமையாக எதிர்க்கிறார்.

அத்வானி சொல்கிறார், “கடந்த சில நாட்களாகவே கட்சி செயல்படும் முறை, அது செல்லும் திசை, இவற்றுடன் என்னால் ஒத்துப்போக முடியவில்லை”.

இதுதானப்பா... மோடி அலை.

Pin It