இந்தியாவின் புகழ்பெற்ற மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான குஷ்வந்த் சிங் மறைந்த ஒரு வாரத்தில், தமிழகத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான தி.க.சி என்று அனைவராலும் அறியப்பட்டுள்ள தி.க.சிவசங்கரனும் மறைந்துள்ளார். கடவுள் பற்றிய கவலை தனக்கில்லை ((Agnostic)என்று அறிவித்துக் கொண்டவர் குஷ்வந்த் சிங். மதங்களைப் பற்றிய நையாண்டி நிறைந்த அவருடைய எழுத்துகள் மறக்க முடியாதவை.

தி.க.சி.யோ, காந்தியத்தில் தொடங்கிப் பொதுவுடைமைக் கோட்பாடுகளில் நிலைகொண்டவர். சிறுவயதிலேயே தன் பெற்றோரை இழந்த அவர், காந்திய நூலகங் களிலேயே வளர்ந்தார். அதனால் அந்தச் சிந்தனைகளில் அவர் மனம் தோய்ந்தது. எனினும், மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் நூல்களைப் படிக்கத் தொடங்கியபின், மார்க்சியத்தின் பால் அவர் ஈர்க்கப்பட்டார். தன் வாழ்நாளின் கடைசி நாள் வரை, ஒரு பொதுவு டைமையாளராகவே வாழ்ந்து மறைந்தார் என்பதே அவருடைய சிறப்பு.

வங்கி ஒன்றில் பணியாற்றிய அவர், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு முழுநேர இலக்கிய எழுத்தாளரானார். புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், வல்லிக் கண்ணன் என்று அரிய தமிழ் எழுத்தாளர்களை அந்தக் கரிசல் மண் கொடையாகத் தந்திருக்கிறது. அந்த வரிசையில் தி.க.சி. அவர்களுக்கும் வரலாற்றில் நிலையான இடமுண்டு.

“21 இ, சுடலைமாடன் தெரு, திருநெல்வேலி டவுன்” என்னும் பெயரில் அவரைப் பற்றிய குறும்படம் ஒன்றை ராஜகுமாரன் இயக்கி வெளியிட்டுள்ளார். தி.க.சி மறைந்தாலும் அவருடைய எழுத்துகள் மட்டுமின்றி, அவருடைய மகன் எழுத்தாளர் வண்ணதாசனும், தமிழ்கூறு நல்லுலகிற்கு அவர் வழங்கிய கொடைகள்.

Pin It