அனைத்துக் கட்சிகளும் கைவிட்ட காரணத்தால் காங்கிரஸ் இன்று அனாதையாக நிற்கிறது. இதைக் ‘கடவுளின் வரப்பிரசாதம்’ என்கிறார் ஞானதேசிகன்.

இன்னொரு வரப்பிரசாதம் கம்யூனிஸ்டுகள்.  ஜெயலலிதா ஊழல்வாதியுமில்லை, மதவாதியுமில்லை. எனவே அவருடன் மட்டும்தான் கூட்டணி என்று போயஸ் தோட்டத்தில் கிடையாய்க்கிடந்த தா. பாண்டியனையும், ஜி.இராமகிருஷ்ணனையும் “மகிழ்ச்சியோடு சேர்ந்தோம், மகிழ்ச்சியோடு பிரிவோம்” என்று வீட்டுக்கு அனுப்பிவிட்டார் அம்மையார்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பா.ஜ.க.வை விமர்சிக்காத ஜெயலலிதா, தேர்தலுக்குப்பின் அக்கட்சிக்கு ஆதரவு தரப்போகிறார் என்பது அப்பட்டமான உண்மை. இன்று பெங்களூர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் பவானிசிங் ஜெயலலிதாவின் ஊழலைப் பட்டியல் போட்டுக் கொண்டு இருக்கிறார்.

இவையெல்லாம் கம்யூனிஸ்டுகளுக்குத் தெரியாமலா இருக்கிறது. போலிக் கொள்கை பேசும் கொள்கையற்ற கட்சிகள் கம்யூனிஸ்டுகள். தலா 9 தொகுதிகளில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சிகள், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், பொள்ளாச்சியில் போட்டியிடும் மதச்சார்பற்ற ஜனதாதள வேட்பாளர்களில் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலைத் தொகுதிகளுக்கு மட்டும் ஆதரவைத் தெரிவித்துவிட்டு, மற்ற இரு தொகுதிகள் குறித்து வாய்திறக்கவில்லை. இது தமிழகத்தில்.

ஆனால கர்நாடகத்தில் சிக்மகளூர் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதாதள வேட்பாளர் தனஞ்சயகுமாரை எதிர்த்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் விஜயகுமார் போட்டியிடுகிறார். மார்க்சிஸ்ட் கட்சியும், மதச்சார்பற்ற ஜனதாதளத்தை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஒரு கொள்கை, கர்நாடகத்தில் ஒரு கொள்கை. இதுதான் கம்யூனிஸ்ட் கட்சியின் சாயம்.

மூன்றாவது அணியைக் கட்டப்போகிறோம் என்று முண்டியடித்துக் கொண்டிருந்த கம்யூனிஸ்டுகளுடன், அந்த அணியில் இருந்தவர்கள்தான் மதச்சார்பற்ற ஜனதாதளமும், அ.தி.மு.க.வும்.

இதில் யார் முதுகில் யார் குத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை.

காரல்மார்க்ஸ், பிரட்ரிக் எங்கெல்ஸ் இவர்களின் பொதுவுடைமைச் சித்தாந்தம் சிவப்புத் துண்டுகளில் இல்லை, கொள்கையில்தான் இருக்கிறது என்பது கம்யூனிஸ்டுகளுக்குப் புரியவில்லை.

Pin It