அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். ஒரு மொழியையும் அந்த மொழியுடன் தொடர்புடைய கலைச் செல்வங்களையும் அழித்துவிட்டால் அந்த இனம் வேரற்றுப் போகும் என்பது அவர்களுக்குத் தெளிவாகவே தெரியும். சமச்சீர் கல்வியைத் தடுக்க நினைத்த வர்கள் அவர்கள். அது முடியாமல் போனதும், ஆரம்பப் பள்ளி முதல் ஆங்கில வழிக்கல்வி என்ற கவர்ச்சிகர மான புதுப்பாதையில் தாய்மொழியை அழிக்கும் பணிகள் கச்சிதமாகத் தொடங் கப்பட்டுவிட்டன. அடுத்த இலக்கு, கலைச்செல்வங்கள்தான். அதன் ஒரு வெளிப்பாடுதான் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றுவது என்ற பெயரிலான அழிப்பு முயற்சி. இது ஒன்றும் இந்த அரசுக்குப் புதிதன்று.

                2001ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது ஜெயலலிதா அரசு, சென்னை கடற்கரையில் நின்ற கண்ணகி சிலையை அகற்றியது. நள்ளிரவில் ஏதோ ஒரு லாரி இடித்துத் தள்ளிவிட்டதாகவும், போக்கு வரத்துக்கு இடையூறாக இருப்பதால் அதனை நிறுவப்போவதில்லை என்றும் காரணம் சொன்னது. சோதிடப்பலன் களின் அடிப்படையில்தான் இந்தச் சிலை அகற்றம் என அப்போதே செய்தி கசிந்தது. அது அவர்களின் நம்பிக்கை. ஆனால், அகற்றப்பட்ட கண்ணகியைக் கொண்டுபோய் அருங்காட்சியகத்தில் கொடுங்கோலன் நீலன் சிலைக்குப் பக்கத்திலே கிடத்திவிட்டார்கள். ஏன் இந்த அவலம்?

                கண்ணகி கதாபாத்திரம் குறித்து பகுத்தறிவான-முற்போக்கான பார்வையில் மாறுபாடுகள் பல உண்டு. எனினும், தமிழின் ஐம்பெருங்காப் பியங்களில் ஒன்றான சிலப்பதி காரத்தின் நாயகி. மன்னனைப் பாடாமல் மக்களைப் பாடிய அந்தக் காப்பியத்தில் அன்றைய தமிழ் மக்களின் வரலாறு ஓரளவு பதிவாகி யிருக்கிறது. அன்றிருந்த பண்பாட்டின் நினைவுச் சின்னமாக கண்ணகிக்கு அறிஞர் அண்ணா முன்னின்று நடத்திய இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின்போது கடற்கரையில் சிலை வைக்கப்பட்டது. அந்த பண்பாட்டுச் சின்னத்தை மறைமுகக் காரணங்கள் கூறி அகற்றியது அன்றைய ஜெயலலிதா அரசு. அதே ஜெயலலிதா அரசு, அதே கடற்கரையில் உள்ள நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் சிலையைப் போக்கு வரத்துக் காரணத்தைக் காட்டி அகற்ற ஆயத்தமாகிவிட்டது.

நவீனக் கலைவடிவமான திரைப்படத்தில் உலகப்புகழ் பெற்ற கலைஞர்களுக்கு ஈடாக முத்திரை பதித்த தமிழ்க் கலைஞர் சிவாஜி கணேசன். இன்றைய நடிகர்களுக்கும் அவர்தான் பல்கலைக்கழகம். முத்தமிழறிஞர் கலைஞர் வசனத்தில் சிவாஜி பேசிய வசனங்களைப் பேசித்தான் இன்றைய சூப்பர் ஸ்டார்களும் திரைப்பட வாய்ப்பைப் பெற்றனர். தமிழர்களின் கலை அடையாளமாக விளங்கும் சிவாஜி சிலையாக நிற்கலாமா? சினிமா நூற்றாண்டு விழாவில் தன்னைத் தவிர வேறு யாருக்கும் முக்கியத்துவம் கிடைத்துவிடக் கூடாது என்று கண்ணும் கருத்து மாக இருந்த ஒரு முதலமைச்சர் ஆளும் மாநிலத்தில், சிவாஜி என்ற மகாகலைஞனை சிலை வடிப்பதே குற்றமல்லவா! அதனால் போக்கு வரத்துக்கு இடையூறு என்று காரணம் காட்டப்படுகிறது.

கடற்கரைச் சாலையில் சிவாஜி சிலையிலிருந்து வலப்புறமாகத் திரும்புவதற்கு வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள் என்றும், அந்த இடத்தில் கடந்த இரண்டாண்டுகளில் விபத்துகள் நடந்துள்ளன என்றும் அரசு சார்பில் நீதிமன்றத்தில் புள்ளிவிவரம் காட்டப்பட்டுள்ளது. சிவாஜி சிலை நிறுவப்பட்ட 2006ஆம் ஆண்டுக்கு முன்பாக அந்த இடத்தில் விபத்தே நடக்கவில்லையா? ஒவ்வோர் ஆண்டும் ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தைச் சென்னை இளைஞர்கள் கொண்டாடுவது அந்த இடத்தில்தான். மறுநாள் காலையில் அந்த இடத்தில் மோட்டார் வாகன விபத்துகள் நடந்த செய்தி வருவது வழக்கம். சிவாஜி சிலை நிறுவப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே இப்படிப் பட்ட விபத்துகள் நடந்துள்ளன என்பதே உண்மை. சிவாஜி சிலையிலிருந்து வலப்புறம் திரும்பினால் வருவது டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை. அண்மையில் அந்த சாலையில் உள்ள ஓர் உயரமான கட்டடத்திலிருந்து இளம்பெண் கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டாரே, அதற்காகச் சென்னையில் உள்ள உயரமான கட்டடங்களையெல்லாம் இடித்துத் தள்ளிவிடலாமா?

பழனி அருகே நடந்த ஒரு சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாகத் தொலைக்காட்சிகளில் செய்திகள் ஓடுகின்றன. இதற்காக, பழனியில் முருகன் அமர்ந்துள்ள மலையையே இடம் பெயர்த்துவிடவேண்டும் என்று ஆட்சி யாளர்கள் உத்தரவிடுவார்களா? நெடுஞ்சாலைகள் இன்று நான்கு வழி,-ஆறு வழிப் பாதைகளாக மாற்றப்பட்டும் தமிழகத்தில் அதிக அளவில் விபத்துகள் நடக்கின்றன. இதற்குக் காரணம், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதுதான் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசு உடனடியாக டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு முன்வருமா?

கண்ணகி தமிழர்களின் இலக்கிய அடையாளம். சிவாஜி தமிழர்களின் கலை அடையாளம். இந்த இரண்டையும் சிதைக்கவேண்டும் என்பதுதான் இரண்டு சிலைகள் மீதான அரசாங்கத்தின் முடிவுக்குக் காரணம். இதில் கவனிக்க வேண்டிய முக்கிய செய்தி, கண்ணகி சிலையும் சிவாஜி சிலையும் தம் பீடங்களில் கலைஞர் மு. கருணாநிதி என்ற பெயரைத் தாங்கி நிற்கின்றன. உண்மைக்காரணம், அதுதான்.. அதுவேதான். போக்குவரத்து என்பது போலிக்காரணமே.