ஈழத்தமிழ் அறிஞர் சிவத்தம்பி போன்ற பெருமக்களின் வேண்டுகோளை ஏற்று, தமிழக அரசு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஆறு மாத காலம் தள்ளி வைத்துள்ளது. இம்மாநாடு, கடந்த காலங்களில் நடைபெற்ற எட்டு உலகத் தமிழ் மாநாடுகளின் தொடர்ச்சி இல்லை என்று கூறிச் சிலர் மகிழ்கின்றனர். அறிஞர் அண்ணா நடத்தியதே பண்பாட்டு மாநாடுதான், உலகத் தமிழ் மாநாடு அன்று எனக் கூறவும் சிலர் துணிந்துள்ளனர்.

ஒரு மாநாடு என்ன நோக்கத்திற்காக நடைபெறுகின்றது, அதன் விளை பயன்கள் எவ்வாறிருக்கும் என்பதுதான் முக்கியமே தவிர, அது எதன் தொடர்ச்சி என்பது முக்கியமன்று. பழைய மாநாடுகளின் தொடர்ச்சியாக இது இல்லாவிட்டாலும், அதனால் ஒரு கேடும் வந்துவிடப் போவதில்லை. அந்த மாநாடுகள் அனைத்தும், தமிழ், செம்மொழி ஆவதற்கு முன்பு நிகழ்ந்தவை. எனவே அவை வெறும் உலகத் தமிழ் மாநாடுகளாக அமைந்தன.

செம்மொழி ஆன பின்பு நடைபெறும் மாநாடு இது என்பதால், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடாக நடைபெறுகின்றது. இதனால் பெருமையே தவிரக் குறை ஒன்றுமில்லை. இனி வரும் நாள்களில், உலகத் தமிழ்ச் செம்மொழி இரண்டாவது, மூன்றாவது மாநாடுகள் கண்டிப்பாய் நடைபெறும் என நாம் நம்பலாம். எனவே இது புதிய தொடக்கம்.

இம்மாநாட்டில் உலகத் தமிழ் அறிஞர்கள் எவரும் கலந்து கொள்ளக் கூடாது என்று கூறித் தடுக்கும் நடவடிக்கை ஒன்று மறைமுகமாக நடைபெற்று வருகின்றது என முதலமைச்சர் கூறியுள்ளார். அப்படிச் செய்கின்றவர்கள் தமிழ்ப் பகைவர்களாகவே இருப்பர்.

தமிழீழத்தில் மக்கள் கொல்லப்பட்டிருக்கும் வேளையில், தமிழ்ச் செம்மொழி மாநாடா என்று சிலர் கேட்கின்றனர். தமிழீழ மக்களின் மீதுள்ள பரிவினால் இக்கேள்வி எழுப்பப்படவில்லை. கலைஞர் ஆட்சியில் நல்லது எதுவும் நடந்துவிடக் கூடாதே என்ற கவலையினால்தான் அதனை எழுப்புகின்றனர்.

தமிழினத்திற்கு உணர்வூட்டும் வகையிலும், தமிழீழ மக்களின் நிலையை உலகிற்கு உணர்த்தும் வகையிலும் மாநாடு நடைபெற வேண்டும் என்று விரும்புவதே நம் அனைவரின் நோக்கமாக இருக்க வேண்டும். மொழியின் உயர்வுக்கும், இனத்தின் மேம்பாட்டிற்கும் உதவக் கூடிய மாநாட்டில் நாம் அனைவரும் பங்கேற்று, நம் பங்களிப்பைச் செய்வோம்!

இரங்கல்

திராவிட இயக்கத்தின் மூத்த உறுப்பினரும், எழுச்சிமிக்க இன உணர்வாளரும் மதுரை அன்பு அச்சகம் மாறன் அவர்களின் தந்தையாருமாகிய அய்யா அனல் விவேகானந்தன் அவர்கள் 29. 10. 2009 அன்று காலமானார். அவர் மறைவால் ஏற்பட்டிருக்கும் துன்பத்தை அன்னாரின் குடும்பத்தார் மறறும் இன உணர்வாளர்களுடன் நாமும் பகிர்ந்து கொள்கிறோம்.

வருந்துகிறோம்

மூத்த பத்திரிகையாளர், பெரியாரியச் சிந்தனையாளர் திரு. நாத்திகம் ராமசாமி 24. 09. 2009 அன்று இயற்கை எய்தினார். அவருடைய மறைவுக்கு நம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பேரிழப்பு

மிகச் சிறந்த சிந்தனையாளர், மாண்புமிகு மனிதநேயப் பண்பாளர், எவரையும் தன் குணத்தால் ஈர்க்கக்கூடிய மாமனிதர் தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள் 16. 09. 2009 அன்று காலமானார். தமிழ் இனத்திற்கு நல்ல தகவல்களை இனி யார் தருவார்கள்.

இடியாய் இறங்கிய செய்தி

தொடக்ககாலம் தொட்டு திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் உறுப்பினராக உள்ள தோழர் நெய்வேலி கோ. இரத்தினவேலு அவர்களின் ஒரே மகன் மதிவாணன் தன் 24 ஆம் வயதில் சிறுநீரகக் கோளாறு காரணமாக 20. 10. 2005 அன்று சென்னை இராமச்சந்திரா மருத்துவமனையில் காலமான செய்தியறிந்து பேரவைத் தோழர்கள் அனைவரும் கலங்கி நிற்கின்றோம். பொறியியல் பட்டதாரியும், பெரியாரியல் சிந்தனையாளருமான மதிவாணனின் மறைவு அவர்தம் குடும்பத்திற்கு மட்டுமின்றி, எதிர்காலத் தலைமுறைக்கும் ஒரு பேரிழப்பே ஆகும். நான்கு வயதுமுதல் நான் அறிந்திருக்கும் அந்தப் பிள்ளையின் மரணம் என் நெஞ்சை இடியாய் உலுக்குகின்றது.

- சுப.வீரபாண்டியன்