கேரள மற்றும் தமிழக உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையைக் குலைக்கும் அரசியல் வர்க்கத்தின் சந்தர்ப்பவாதத்தை முறியடிப்போம்

தமிழக மற்றும் கேரள மக்களின் ஒற்றுமையைக் குலைத்து அவர்களுக்கிடையில் கடுமையான வெறுப்பையும் பூசலையும் உருவாக்கும் வகையில் பல்வேறு வளர்ச்சிப் போக்குகள் முல்லை பெரியாறு அணையினை மையமாக வைத்துத் தற்போது இரண்டு மாநிலத்தையும் சேர்ந்த அரசியல் வர்க்கத்தினரால் கிளப்பிவிடப்படுகிறது.

தங்களது தேர்தல் அரசியல் ஆதாயத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் அரசியல் கட்சிகளின் பட்டியலில் தற்போது கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளக் கூடிய கட்சிகளும் இணைந்துள்ளன.

சார்ந்து வாழவேண்டிய கட்டாயம்

கேரளா, தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களைப் பொறுத்தவரையில் அவ்விரண்டு மாநில மக்களும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பல்வேறு வி­சயங்களில் சார்ந்து வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள். இவ்விரு மாநிலங்களின் பூகோள ரீதியான நிலையும் அப்படிச் சார்ந்து வாழ்வதை மிகவும் அவசியமாக்கியுள்ளது. கேரளாவில் வற்றாத நீர் வளத்துடன் 44 -க்கு மேற்பட்ட நதிகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் அந்நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதற்கு ஏற்ற சமவெளிப் பிரதேசமாக அம்மாநிலத்தின் பெரும்பான்மை நிலப்பரப்பு இல்லை. ஏற்ற இறக்கங்கள் கொண்ட மலைப் பகுதியாக அம்மாநிலத்தின் நிலப்பரப்பு இருப்பதால் அதில் மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் அரிசி, காய்கறிகள் போன்றவற்றை விளைவிப்பதற்கு வாய்ப்பில்லை. எனவே அவற்றிற்குப் பிற மாநிலங்களைச் சார்ந்தே அம்மாநில மக்கள் இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

அந்த வகையில் அண்டை மாநிலமாக இருக்கக்கூடிய தமிழகம் அவற்றை அம்மாநில மக்களுக்கு விற்பனை செய்யும் வாய்ப்பினைப் பெரிய அளவில் கொண்டதாக உள்ளது. அதைப்போல் ஆரம்பம் முதற்கொண்டே கல்வி வளர்ச்சி மிகுந்ததாக அம்மாநிலம் இருந்ததால் அம்மாநில மக்களில் குறிப்பிடத்தக்க பகுதியினர் பிற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் சென்று வேலை செய்யும் வாய்ப்புப் பெற்றவர்களாக உள்ளனர். அதனால் அங்கு நடைபெறும் கட்டுமானம், தோட்ட விவசாயம் போன்ற அனைத்திற்குமே பெரும்பாலும் பிற மாநிலத் தொழிலாளரையே சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலையில் அவர்கள் உள்ளனர்.

அதைப்போல் தமிழகத்தைப் பொறுத்தவரையிலும் விவசாயம் நடைபெறுவதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ள பரந்த சமதள நிலப்பரப்பு இங்கு இருந்தாலும் அதில் தொடர்ச்சியாக விவசாயம் செய்வதற்குத் தேவைப்படும் நீர்வளம் போதிய அளவில் இல்லை. தமிழகத்தில் ஓடும் நதிகளில் பெரும்பாலானவை பிற மாநிலங்களில் உருவாகி தமிழகத்திற்குள் வருபவை. சில நதிகள் தமிழ்நாட்டில் உருவானாலும் பிற மாநிலங்களில் ஓடக் கூடியவை. அதனால் அந்த நதிகள் ஓடும் மாநிலங்கள் தாங்கள் உபயோகித்தது போக மீதியுள்ள தண்ணீரை மட்டுமே தமிழகத்திற்கு வழங்க முடியும் என்று கருதும் போக்கு மென்மேலும் வளர்ந்து வருகிறது.

சுயநல அரசியல்

அப்போக்கு அதாகவே அவ்வாறு வளர்ந்து வருகிறது என்று கூற முடியாது. ஏனெனில் விடுதலைக்கு முன்பு வெள்ளையர் நம்மை ஆண்ட போது தமிழகத்தின் பங்கிற்குக் கிடைக்க வேண்டிய தண்ணீர் அந்நதிகளில் இருந்து குறைவின்றிக் கிடைத்து வந்தது. நமது சுதேசி அரசாங்கம் ஏற்பட்ட பின் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதன்பின்னர் மாநில அரசியலில் செல்வாக்குப் பெற வேண்டும் என்பதற்காக மாநிலங்களில் செயல்படும் கட்சிகளின் அரசியல்வாதிகள் இப்பிரச்னையைத் தூண்டி தாங்கள் தான் மாநில நலனில் பெரிதும் அக்கறை உள்ளவர்கள் என்று காட்டி சுயநல அரசியல் நடத்தத் தொடங்கினர். அதனால் இப்பிரச்னை பெரிய அளவிற்கு வளர்ந்துள்ளது.

விடுதலைக்கு முன் நிலவிய நிலைமை அப்படியே தொடர முடியாது என்பது உண்மைதான். இருந்தாலும் இரு மாநிலத்தின் தேவைகளையும், நிலத்தின் தன்மைகளையும் கணக்கிற்கொண்டு பரந்த நோக்குடன் அப்பிரச்னைகளைப் பார்க்கும் அவற்றைப் பேசி முடிவு செய்யும் மனப்பான்மையுடைய அரசியல் வாதிகள் ஒரு சிலராவது இருக்க வேண்டும்.ஆனால் அப்படிப்பட்டவர்கள் மருந்திற்குக்கூட இல்லாமல் போய்க் கொண்டிருக்கும் இன்றையச் சூழ்நிலை பிரச்னையை இன்னும் அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறது.

தமிழக விவசாயிகளின் உணவுப் பொருட்களான அரிசி மற்றும் காய்கறி விற்பனையில் ஒரு முக்கியப் பங்கினை கேரள மக்களின் அப்பொருட்களுக்கான தேவை வகிக்கிறது. கேரளாவின் மலைப் பகுதிகளிலும் உதிரி வேலைகளிலும் எண்ணிறந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். மலையாளமும், தமிழும் சகோதர மொழிகளாக இருப்பதால் மக்கள் இதுபோன்ற வேலைகளிலும் அன்றாட வாழ்க்கையிலும் இரண்டறக் கலந்து பழகுவதற்கு ஏற்ற சூழல் யதார்த்தமாகவே இவ்விரு மாநிலங்களிலும் உள்ளது. தமிழகத்தின் பல முக்கிய நகரங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மலையாளம் பேசும் மக்கள் வசிக்கின்றனர்.

கலாச்சார ஒற்றுமை

பல இடங்களில் கேரள சமாஜம் என்ற பெயரில் கேரள மக்களின் கலாச்சார நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டுள்ளன. அதைப்போல் திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழிக்கென ஒரு துறையே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கலை, இலக்கியம் அனைத்திலும் இரு மாநில மக்களுக்கிடையிலான பரிவர்த்தனைகள் மிக அதிகம் உள்ளன. கேரள எழுத்தாளர்களில் பலர் தமிழ் மக்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர்கள். இப்போதும் கூடக் கேரளத் திரையரங்குகளில் ஓடக்கூடிய திரைப்படங்களில் பெரும்பாலானவை தமிழ்த் திரைப்படங்களே.

இந்த நிலையில் தேன் கூட்டில் கல்லெறிந்தது போன்ற ஒரு சூழ்நிலை தற்போது முல்லை பெரியாறு அணையினை மையமாக வைத்து கிளப்பிவிடப் பட்டுள்ளது. அந்தச் சூழ்நிலை தற்போது குறிப்பாக கேரள அரசியல் வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினரால் திட்டமிட்டு உருவாக்கிவிடப் பட்டுள்ளது. எவ்வாறெல்லாம் இந்த அணை விசயத்தில் தமிழக மக்கள் மீது கேரள மக்களுக்கு வெறுப்பினை ஏற்படுத்த முடியுமோ அவ்வாறெல்லாம் வெறுப்பு நெருப்பினைப் பற்ற வைத்து விசிறிவிடும் போக்கு அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் 100 ஆண்டுகளுக்கு மேல் இருந்து கொண்டிருக்கும் நீர்த் தேக்கங்கள் 400 க்கு மேல் உள்ளன. அத்தகைய நீர்த் தேக்கங்களில் 120 க்கும் அதிகமானவை இந்தியாவில் உள்ள நிலையில் தென் தமிழ்நாட்டின் விவசாயத்தின் உயிர் ஆதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணை எந்த நேரமும் உடையக் கூடும் என்ற பீதியினை உருவாக்கும் வகையிலான பிரச்சாரங்கள் பத்திரிக்கைகள் மூலமும் இணையதளங்கள் மூலமும் நேர்த்தியான விதத்தில் கேரள அரசியல்வாதிகளாலும் அதிகாரவர்க்கத்தாலும் செய்யப்பட்டு வருகின்றன.

அதனைச் செய்வதற்குச் சுற்றுச் சூழல் ஆர்வலர்களுடைய சில கருத்துக்களும் நன்கு ஒருங்கு திரட்டப்பட்டு பீதி மனநிலை அதன் உச்சத்தை எட்டும் வகையில் கேரள மக்களிடையே பரப்பப்படுகிறது. அதுதவிர முல்லைப் பெரியாறு அணை குறித்து வெள்ளை அரசாங்கத்திற்கும் திருவாங்கூர் மன்னருக்கும் இடையில் 1886ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் அன்றிருந்த நமது மன்னரின் பலவீனமான நிலையைப் பயன்படுத்திக் கொண்டு செய்யப்பட்ட ஒன்று; அந்த அவமானகரமான ஒப்பந்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்ற ஏற்கனவே நிலவிய எண்ணப்போக்கும் வெற்றிகரமாக அவர்களால் புது வேகத்துடன் தூண்டிவிடப் படுகிறது.

தமிழக மக்களுக்கு அக்கறையில்லையா?

அவர்களது ஒட்டுமொத்தப் பிரச்சாரத்தின் போக்கே அணையின் வலுவைப் பற்றியோ அது உடைந்தால் அதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியோ தமிழக மக்களுக்கு ஒரு அக்கறையும் இல்லை என்று காட்டும் விதத்தில் உள்ளது. அப்படியயாரு சூழ்நிலை இருக்கவே முடியாது என்பது சாதாரண மக்களின் மனதில் எட்ட முடியாத விதத்தில் இந்த வி­மப் பிரச்சாரம் திட்டமிட்டுச் செய்யப்படுகிறது.

கேரள மக்களைப் பொறுத்தவரையில் அணை உடைந்தால் அதனால் பாதிப்பு வரும் என்பது முக்கியமாகக் கருத வேண்டியதாக இருந்தாலும் தமிழக மக்களைப் பொறுத்தவரையில் 2லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பிலான விவசாயத்திற்கும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர் பிரச்னைக்கும் மூல ஆதரமாக இருக்கக்கூடிய அந்த அணையின் பாதுகாப்பைத் தமிழக மக்கள் கருதாமல் இருக்க முடியுமா?

ஆனால் இந்த எண்ணம் தோன்றவே முடியாத அளவிற்குக் கேரள மக்களிடையே பொய்ப்பிரச்சாரம் நடைபெறுகிறது. அவர்கள் மேற்கொள்ளும் பிரச்சாரங்களில் பல வி­யங்கள் திட்டவட்டமாக மறைக்கப்படுகின்றன. அணையின் வலுவினை ஆராய்வதற்காக உச்ச நீதிமன்றம் நிபுணர் குழுவை நியமித்தது; பல்வேறு வகை ஆராய்ச்சிகளுக்குப் பின்பு அது உச்ச நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தது; அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு உச்ச நீதிமன்றம் அணையின் நீர்மட்டத்தை 142 அடி உயர்த்தலாம் என்று ஆணையிட்டது போன்ற விசயங்கள் கேரள மக்களின் பார்வைக்கு வரவேவிடாமல் செய்யப்படுகின்றன.

தீர்வுக்கு வழிவகுக்காத தேவையற்ற பிரச்சாரம்

தமிழக அரசியல் வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்களின் பிரச்சாரமும் முழுக்க முழுக்க நடுநிலைத் தன்மை வாய்ந்ததாக உள்ளது என்று கூற முடியாது. தேவையற்ற விதத்தில் பெரியாற்றில் ஓடும் நீரின் ஆதாரம் தமிழகத்தில் உள்ள சிவகிரி மலையில் தான் உள்ளது என்பதில் தொடங்கி தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் முன்னாள் தமிழகக் குறுநில மன்னர்களில் ஒருவரான பூனைத்தம்பிரானின் ஆளுகை வரம்பிற்குள்ளேயே இருந்தன; வெள்ளையர்கள் இந்த விவரம் புரியாது அது திருவாங்கூர் மன்னரின் ஆளுகைக்கு உள்பட்டது என்று தவறாகக் கருதி அப்பகுதிகள் குறித்து திருவாங்கூர் மன்னருடன் ஒப்பந்தம் செய்து கொண்டனர் என்பது போன்ற தற்போதைய பிரச்னையின் தீர்வுக்கு வழிவகுக்காத பழங்கதைகளைப் பேசி பிராந்திய வெறியினை ஏற்படுத்தும் தேவையற்ற பிரச்சாரத்தை இவர்களும் மேற்கொள்கின்றனர்.

ஏகாதிபத்திய நோக்கில் செய்யப்பட்டதல்ல

வெள்ளை ஏகாதிபத்தியம் தனது நலனுக்காக அதன் ஆட்சிக் காலத்தில் பிற நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை விடுதலை பெற்றபின் சீர்தூக்கிப் பார்த்து விரைவில் சரிசெய்வது மிகவும் அவசியம். ஏனெனில் அவை அதன் ஏகாதிபத்திய நோக்கைப் பிரதிபலிப்பவையாகவே பெரும்பாலும் இருக்கும். அதே சமயத்தில் உள்நாட்டில் வெள்ளை அரசும் அத்துடன் இணையாதிருந்த பல்வேறு சமஸ்தானங்களும் செய்து கொண்ட ஒப்பந்தங்களை அவை வெள்ளையரால் அவர்களின் ஆதிக்க வலிமையைக் கொண்டு செய்து கொள்ளப்பட்டவை என்ற அடிப்படையில் அவற்றையும் மாற்றியாக வேண்டும் என்று கருதுவது எந்த வகையிலும் சரியான ஒன்றாக இருக்காது. அந்த ஒப்பந்தத்தின் ­ரத்துக்கள் தற்போது பொது நன்மைக்காகப் பயன்படுகிறதா? இல்லையா? என்பதை மையமாக வைத்தே அது கருதப்பட வேண்டும்.

இந்த முல்லை பெரியாறு ஒப்பந்தத்தைப் பொறுத்தவரையில் இந்த அணை மூலம் வரும் நீர் எந்த வகையிலும் கேரளாவில் விவசாயத்திற்குப் பயன்படப் போவதில்லை. எனவே அந்த நீர் தமிழக விவசாயிகளின் நலனுக்குப் பயன்படுவதற்குச் சிக்கலின்றி வழிவகுக்கும் ஒப்பந்தத்தை அது வெள்ளையரால் செய்யப்பட்டது என்பதற்காக எப்படியாவது மாற்றியாக வேண்டும் என்று கருதுவது சரியா என்ற எண்ணமே பொறுப்புள்ளவர்களிடம் இருக்க வேண்டும்.

ஆனால் இதற்கு மாறாகக் கேரள அரசியல் வாதிகள் வெள்ளையரால் அன்று வெள்ளையர் ஆட்சியோடு ஒப்பிடும் போது பலவீனமாக இருந்த திருவாங்கூர் மன்னரை அச்சுறுத்தி செய்யப்பட்டதொரு ஒப்பந்தம் என்ற கருத்தின் அடிப்படையில் அதை எவ்வாறாகிலும் மாற்றியாக வேண்டும் என்பதற்காகவே முக்கியமாகப் புதிய அணை கட்ட வேண்டும் என்ற கருத்தை முன் வைக்கின்றனர். அக்கருத்தை வலுப்படுத்துவதற்காக அணை உடையும் நிலையில் உள்ளது என்ற கருத்தை கேரள மக்களிடையே பரப்புகின்றனர்.

வளர்ச்சி இருந்தவரை பிராந்திய வெறி இல்லை

இப்படி அனைத்து விசயங்களையும் பொறுப்பில்லாமல் பார்க்கும் போக்கு 1976ம் ஆண்டுவரை தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநில அரசியல்வாதிகளுக்கிடையிலும் பெரும்பாலும் இருக்கவில்லை. ஏனெனில் அக்காலகட்டம் வரை ஓரளவு வளர்ச்சித் திட்டங்கள் நாடு முழுவதும் செய்யப்பட்டு வந்தன. அதனால் மக்களில் வாழ்க்கை நெருக்கடிகள் ஒப்பு நோக்குமிடத்துக் குறைவாக இருந்தன.

வளர்ச்சி குன்றி அதன் விளைவாக மக்களிடையே ஒரு பாதுகாப்பற்ற உணர்வு மேலோங்கிய நிலையில் நாடு முழுவதிலும் இருந்த அரசியல்வாதிகளின் போக்கு பெரிதும் மாறியது. அவர்கள் மாநில நலன் என்ற முழக்கத்தை முன்வைத்து சந்தர்ப்பவாத அரசியல் நடத்தத் தலைப்பட்டனர். ஒரு மாநில மக்களின் பின்னடைவிற்குக் காரணம் மற்றொரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களே என்பது போன்ற பாரபட்ச எண்ணப் போக்கை மக்களது மனங்களில் புகுத்தத் தொடங்கினர். அந்தச் சூழ்நிலையில் தான் இந்த முல்லை பெரியாறு பிரச்னையை மையமாக வைத்து முதன்முதலில் தமிழக, கேரள மக்களுக்கிடையே வேற்றுமை தோன்றுவதற்கான வித்து ஊன்றப்பட்டது.

1976ம் ஆண்டு முல்லை பெரியாறு அணையைப் பார்வையிட்ட மத்திய அரசைச் சேர்ந்த பொறியியல் நிபுணர் ஒருவர் இந்த அணை இன்னும் ஓரளவு பலப்படுத்தப்பட வேண்டும். ஆனால் அடிப்படையில் அணை பலமாகவே உள்ளது என்ற கருத்தை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து அதனைப் பராமரிக்கும் பணியினை மேற்கொள்வதற்காக நீர்மட்ட அளவை குறைக்கத் தமிழக அரசும் ஒப்புக் கொண்டது. அந்த அடிப்படையில் பல மராமத்து வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. மராமத்து வேலைகள் முடிந்த பின்னர் அந்தக் குறிப்பிட்ட அளவு நீர்மட்ட அளவை அதிகரிப்பதற்காகப் பொறியியல் நிபுணர்கள் பரிந்துரைத்த பேபி அணையினை மராமத்து செய்ய தமிழகப் பொதுப்பணித்துறை முயன்ற போது அங்கு வேலை செய்யப் பொருட்கள் கொண்டு சென்றோரை கேரளாவின் வனத்துறை அனுமதிக்கவில்லை. அதன் விளைவாகச் சிறிய அணையின் பராமரிப்பு வேலை நின்றுவிட்டது. அதனால் நீர்மட்ட அளவையும் 152 அடிவரை உயர்த்த முடியவில்லை.

அச்சூழ்நிலையிலும் கூட கேரள, தமிழக முதலமைச்சர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை மூலம் குத்தகைக்கு விடப்பட்ட 8000 ஏக்கர் நிலத்தில் மீன்பிடி உரிமை போன்ற பிரச்னைகள் தீர்க்கப்பட்டன. அதன் பின்னர் தங்கள் தங்கள் மாநிலங்களில் மாநில மக்களின் பிரச்னைகளை தீர்க்க முடியாத சூழ்நிலைகள் தோன்றும் போதெல்லாம் மாநில அரசியல் வாதிகள் அதற்கான உண்மைக் காரணத்தை கண்டறிய முயலாது செயற்கையான தொடர்பற்ற பிற காரணங்களை அதுவும் அண்டை மாநில மக்கள் குறித்து வெறுப்பை ஏற்படுத்தும் தன்மைவாய்ந்த காரணங்களைக் கண்டுபிடித்து அதை இடைவிடாமல் கூறி ஆதாயமடையும் அதில் குளிர்காயும் போக்கு வளர்ந்துவிட்டது. அந்தப் பின்னணியில் கேரள, தமிழ்நாட்டு அரசியல் வாதிகளிடமும் இப்போக்கு தோன்றி வளரத் தொடங்கியது.

உச்சநீதிமன்றத் தலையீடு

அதாவது நமது இடத்தில் அணையை வைத்துக் கொண்டு அதை மராமத்து செய்கிறேன் என்ற பெயரில் தமிழ்நாடு இங்கு நாட்டாண்மை செய்து கொண்டிருக்கிறது என்ற எண்ணப்போக்கு கேரள மக்களிடையே கேரள அரசியல் வாதிகளால் பரப்பப்பட்டது. தமிழ்நாட்டிலும் முன்னால் இருந்த அளவிற்கு ஒப்பந்தப்படி நீரைத் தேக்க கேரள அரசை நிர்ப்பந்திக்கவில்லை என ஆளும் கட்சியினரை எதிர்க்கட்சியினரும் எதிர்க்கட்சியாக இருந்த கட்சி ஆளும் கட்சியானவுடன் அப்போதைய எதிர்க்கட்சியினரும் தேர்தல் அரசியல் ஆதாயம் கருதி பொறுப்பில்லாமல் விமர்சனம் செய்யும் போக்கைத் தொடர்ந்து கடைப்பிடித்தன.

இந்தப் பின்னணியில் அணையின் நீர்மட்டத்தைக் குறைந்தபட்சம் சிறிய அணை பராமரிப்பு செய்யப்படாத நிலையிலும் கூடப் பராமரிக்கப்பட்ட 142 அடி என்ற அளவிற்கேனும் கொண்டுசெல்ல வேண்டும் என்று கோரும் வழக்கு ஒன்று உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதிகள் பொறியியல் மற்றும் மண்ணியல் வல்லுனர்கள் கொண்ட குழுவினை அமைத்து அணையின் வலுவைச் சோதனை செய்ய வேண்டும்; சோதனை செய்தபின் அது சமர்ப்பிக்கும் அறிக்கையை மையமாக வைத்து அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் கேள்வி முடிவு செய்யப்படும் என்ற தீர்ப்பினை வழங்கினர். நிபுணர் குழுவின் தீர்ப்பு அணை வலுவுடன் இருக்கிறது என்று வந்தவுடன் உச்சநீதி மன்றம் அணையின் நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்தலாம் என்ற தீர்ப்பினையும் வழங்கியது.

136 அடி 120 அடியான நிலை

அதன் பின்னர் கேரள அரசியல் வாதிகள் சிறிது கூடப் பொதுநல நோக்கின்றி கூடுதல் முனைப்புடன் இந்த அணை வி­சயத்தில் நடந்துகொள்ளத் தொடங்கினர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அணையின் நீர்மட்டத்தை எந்தச் சூழ்நிலையிலும் 136 அடிக்கு மேல் உயர்த்த முடியாது என்று கூறும் சட்டம் ஒன்றினைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றினர். தமிழக அரசியல் வாதிகளும் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பினை அமல் செய்ய வைக்கமுடியாத அரசுகள் என அடுத்தடுத்து ஆட்சியதிகாரத்திற்கு வந்த அரசுகளைக் குற்றம் சுமத்தி தேர்தல் அரசியலில் லாபம் ஈட்டும் பாதையில் செயல்படத் தொடங்கின. அந்தப் பிரச்னையே இப்போது இந்த அளவிற்கு முற்றி இப்போது கேரள அரசு 120 அடிக்கு மேல் அணையில் நீரைத் தேக்கக்கூடாது என்று சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியதோடு உச்சநீதி மன்றத்திலும் அந்த அளவிற்கு மேல் நீரைத் தேக்கக் கூடாது என்று கோரி வழக்குத் தொடர்வதுவரை சென்றுள்ளது. தனது தீர்ப்பை அமுலாக்காத கேரள அரசை எதுவும் செய்ய முடியாத உச்சநீதி மன்றம் அதன் பின்னர் தமிழக அரசு அதனிடம் முறையிட்ட போது பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்னைக்குத் தீர்வு கண்டுகொள்ளுங்கள் என்று பிரச்னையை இரு மாநில அரசுகளின் பக்கம் உருட்டிவிட்டு விட்டது.

பேச்சுவார்த்தை வெறும் பேச்சுக்கான வார்த்தையே

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள் என்ற வாதம் தற்போது உச்ச நீதி மன்றத்தால் மட்டுமல்ல, பிரதமர் உட்பட அனைவராலும் முன்வைக்கப் படுகிறது. தீர்ப்பு வழங்கும் நீதிமன்றங்களுக்கு அதனை அமலாக்க வைப்பதற்குத் தேவையான நிர்வாகமோ, அதிகாரமோ இருப்பதில்லை. அதிகாரம் படைத்த மத்திய அரசோ அதற்குத் தலைமை தாங்கும் கட்சியின் நலனைத் தாண்டி எதுவும் செய்யத் துணிவதில்லை. இந்நிலையில் முரண்பாடற்ற ஒன்றைக் கூறியாக வேண்டும் என்ற அடிப்படையில் அனைவரும் கூறுவதே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள் என்பதாகும்.

இன்றைய காலகட்டத்தில் அரசியல் வாதிகளின் தரம் மலிந்து தனது பிராந்திய நலன் என்பதைத் தாண்டி சிறிது கூட யோசிக்காதது மட்டுமின்றி மாநில மக்களுக்கிடையில் எப்படியெல்லாம் பிளவினைத் தூண்டி அரசியல் லாபம் ஈட்டலாம் என்ற மனநிலையே மண்டிக்கிடக்கிறது. இந்த மனநிலை கொண்ட மாநில அரசியல்வாதிகளினால் தலைமை தாங்கப்படும் அரசுகள் பேச்சுவார்த்தை மூலம் உருப்படியான எந்தத் தீர்வையும் எட்ட முடியுமா என்பதே கேள்விக்குரியதாகும்.

அதாவது ஆட்சியில் இருக்கும் மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்குத் தீர்வுகாண வேண்டுமென்றால் பரஸ்பரம் சில விசயங்களை விட்டுக் கொடுப்பதன் மூலமே அத்தகைய தீர்வினைக் காண முடியும். அவ்வாறு ஒரு மாநிலத்தில் ஆட்சியிலிருக்கும் கட்சியின் முதல்வர் சில விசயங்களை விட்டுக் கொடுத்து பிரச்னைக்குத் தீர்வுகாண முயன்றார் என்றால் அங்குள்ள எதிர்க்கட்சி அதனைப் பெரிது படுத்தி மாநில நலனுக்கு அவர் குந்தகம் விளைவித்து விட்டதாகப் பிரச்சாரம் செய்து அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது.

அப்படிப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு என்பது நடைமுறை சாத்தியமற்ற ஒன்றே. இதையெல்லாம் கடந்து செயல்படும் நிலையில் பெரிய கட்சிகளின் தலைவர்கள் என்று யாருமே இல்லை. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு சாத்தியமில்லை என்பதற்குப் பொருத்தமான எடுத்துக்காட்டு காவிரி நதிநீர்ப் பங்கீடு பிரச்னையாகும். பேச்சுவார்த்தைகள் எதுவும் பலனளிக்கவில்லை என்ற நிலையில் தான் அது இப்போது நதிநீர் பங்கீட்டு முத்தரப்புத் தீர்ப்பாயத்தில் கிடப்பில் போடப்பட்டுக் கிடக்கிறது.

பொதுவாக காங்கிரஸ், தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் போன்றில்லாமல் கம்யூனிஸ்ட் என்ற பெயரில் செயல்படும் கட்சிகளிடம் சற்றுப் பரந்த மனப்பான்மையை எதிர்பார்க்க முடியும் என்பதே மக்களிடமிருந்த பரவலான நம்பிக்கை. ஆனால் கேரளாவிலோ அத்தகைய எதிர்பார்ப்பிற்கு அணுவளவும் இடமில்லாத விதத்திலேயே அங்குள்ள சி.பி.ஐ(எம்). கட்சியின் நிலைபாடு உள்ளது.

மனிதனைக் காட்டிலும் பாம்பும் பல்லிகளும் முக்கியமானவையா?

தற்போது இத்தனை இறுக்கமான நிலை எடுத்துள்ள கேரள அரசு அதன் துணைக்கு சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர் பலரது கருத்துக்களை கையிலெடுத்துக் கொண்டு தனது வாதத்தை வலுப்படுத்த முயல்கிறது. சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களின் வாதம் எப்போதுமே இயற்கையை உள்ளது உள்ளபடி பராமரிக்க வேண்டும்; அதாவது நதிகளுக்கிடையில் அணைகள் கட்டக் கூடாது; அவை அவற்றின் போக்கில் செல்ல அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அணைகளில் நீரைத் தேக்கி வைப்பதால் பூமிப் பரப்பில் நீரின் அழுத்தம் ஒருபகுதியில் அதிகமாகி பூகம்பங்கள் போன்றவை ஏற்படுகின்றன;  அது மட்டுமின்றி அணை உடைந்தால் அதன் விளைவாகக் காடுகள், வன விலங்குகள், பாம்புகள் போன்றவை அனைத்தும் அழிந்துவிடும் என்பன போன்ற வாதங்களை முன்வைக்கக கூடியவர்கள்.

மேலை நாடுகளைப் பொறுத்தவரையில் சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள் பெரும்பாலும் இடதுசாரி இயக்கத்தினரோடு சேர்ந்து செயல்படுகின்றனர். அதற்குக் காரணம் சுற்றுப்புறச் சூழல் மாசு படுவதில் மிகமுக்கியப் பங்கு வகிப்பது முதலாளித்துவ உற்பத்தி முறையின் உந்து சக்தியாக இருக்கும் லாப நோக்கமே. அதாவது ஆலைக் கழிவுகள், ஆலையிலிருந்து வெளிவரும் புகை ஆகியவற்றை சுத்திகரித்து இயற்கையை மாசு படாமல் பராமரிப்பதற்குச் செலவிட முதலாளித்துவ நிறுவனங்கள் முன்வருவதில்லை. அந்தப் பணத்தையும் லாபமாக ஈட்ட அந்நிறுவனங்கள் விரும்புகின்றன. எனவே முதலாளித்துவத்தை எதிர்த்துச் செயல்படும் இடதுசாரிகளோடு அந்நாடுகளின் சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் இந்த அம்சத்தில் ஒன்றிணைந்து செயல்படுகின்றனர்.

ஆனால் நமது நாட்டிலோ சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் இவ்வாறு முதலாளித்துவ நிறுவனங்களை எதிர்த்துப் போராடுவதைக் காட்டிலும் அணை கட்டாதே; அணுமின் நிலையம் கொண்டு வராதே என்பது போன்ற முழக்கங்களை முன்வைப்பதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். அதாவது அதற்கு எடுத்துக்காட்டுகளாக மேலை நாடுகளில் அணைகள் இப்போதெல்லாம் கட்டுவதில்லை. ஏற்கனவே உள்ள அணுமின் நிலையங்களையும் அவர்கள் மூடிக் கொண்டுள்ளனர் என்று கூறி இங்குள்ள சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் அந்த நாடுகளின் முதலாளித்துவ அரசுகளுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கிக் கொண்டுள்ளனர்.

தேக்கமும் வளர்ச்சியும்

மேலை நாடுகளுக்கும் நமது நாட்டிற்கும் இடையில் தற்போதுள்ள ஒரு பெரிய வேறுபாட்டை அவர்கள் பார்க்கத் தவறுகின்றனர். மேலை நாடுகளில் ஒருபுறம் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. மறுபுறம் உலகமயத்தின் விளைவாக அவர்களின் ஆலைகள் குறைந்த கூலிக்கு ஆள் கிடைக்கும் நாடுகளை நோக்கித் தங்கள் மூலதனத்தைக் கொண்டு செல்கின்றன. அத்தகைய நாடுகளில் நமது நாடும் ஒன்றாக இருப்பதால் இங்கு சில துறைகளில் மேலை நாடுகளைக் காட்டிலும் கூடுதல் தொழில் வளர்ச்சி உள்ளது. இங்கு பெருகிவரும் மக்கட்தொகையின் உணவுத் தேவையை ஈடுகட்ட அணைகள் போன்ற நீர்ப்பாசனத்திற்கு வழிசெய்யும் கட்டுமானங்களைப் பராமரிப்பது அத்தியாவசியத் தேவையாக உள்ளது.

முழுக்க முழுக்க இயற்கையோடு இயைந்த வாழ்க்கை எங்கு சாத்தியமென்றால் எங்கு உணவுத்தேவை போன்றவை அதிகரிக்காமல் இருந்த நிலையிலேயே இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறதோ அங்குதான் சாத்தியம். மனிதனை மனிதன் சுரண்டும் அடிப்படையான முரண்பாட்டை முடிவுக்குக் கொண்டு வராமல் இயற்கையை உள்ளதை உள்ளபடி பராமரிக்கவே முடியாது. அந்நிலையில் இயற்கையைப் பராமரிக்காமல் இருப்பதே இன்றைய பிரச்னைகளுக்குக் காரணம் என்பது போன்ற சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களின் கருத்து கேரள சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரவர்க்கத்தினருக்கு நன்கு பயன்படுகிறது.

மேலை நாடுகளைப் பொறுத்தவரையில் அவை விவசாயம் போன்றவற்றில் தன்னிறைவு பெற்றவையாக ஆகிவிட்டன. பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு அந்நாடுகளில் உணவு உற்பத்தி நடைபெறுகிறது. எனவே புதிய அணைகள் கட்டி விவசாய உற்பத்தியைப் பெருக்குவது அங்குள்ள விவசாய முதலாளிகளின் லாபத்தில் கைவைப்பதாக அமையும். எனவே அந்தச் சூழ்நிலையை இங்குள்ள சூழ்நிலையோடு ஒப்பிடுவது முற்றிலும் பொருத்தமற்றதாகும். இயற்கை நிச்சயம் பராமரிக்கப்பட வேண்டியது தான்; எதற்காக என்றால் அதைச் சார்ந்து வாழும் மனிதனின் சுபிட்சமான வாழ்க்கையை பராமரிப்பதற்காகவே.

மேலை நாடுகளைப் போலன்றி நமது நாட்டில் மக்கள்தொகை அதிகரிப்பும் அதைத் தொடர்ந்த உணவுப் பொருள் தேவையும் தொடர்ச்சியாக இருந்து கொண்டுள்ளன. எனவே இங்கு இருக்கும் அணைகளைத் தகர்த்துவிட்டு நீரை அது போகும் போக்கில் ஓட அனுமதித்து இயற்கையின் அழகைப் பார்த்துப் பரவசப்படுவதற்கான சூழ்நிலை இல்லை.

அதாவது ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்த சமூக அமைப்பில் இயற்கையின் மிக உயர்ந்த உருவாக்கமான மனிதனின் வாழ்க்கையே சிரமம் மிகுந்ததாக இருக்கிறது; அதற்குக் காரணமான ஏற்றத்தாழ்வைப் போக்கி சமூகத்தில் உடமை வர்க்கம், உழைக்கும் வர்க்கம் என்ற இரு வர்க்கங்கள் இல்லாத சூழ்நிலையை உருவாக்கிய பின்னரே இயற்கையை அது பாழ்படாத, மாசுபடாத விதத்தில் பராமரிக்க முடியும். இந்த அடிப்படை உண்மையை மறந்துவிட்டு ஏதோ இன்றுள்ள நமது மக்களின் பிரச்னைகள் அனைத்திற்கும் மூலகாரணம் அணைகள், பெரிய தொழிற்சாலைகள், அணுமின் நிலையங்கள் போன்றவையே என்ற கருத்தினை முன்வைப்பது சமூகச் சூழலை ஒட்டுமொத்தமாகப் பார்க்காத அதன் ஒரு அம்சத்திற்கு மட்டும் அதீத முக்கியத்துவம் கொடுத்துப் பார்க்கும் போக்காகும்.

வக்கிரமாகிப்போன அதிகார வர்க்கம்

சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களின் கருத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் முன்னாள் நீர்ப்பாசானத்துறைச் செயலாளராகவும், அதன் பின்னர் பல நதிநீர் பிரச்னைகளின் தீர்விற்காக நியமிக்கப்பட்ட குழுக்களில் பணியாற்றியவருமான திரு.ராமசுவாமி ஐயர் அவர்கள் படிப்படியாகத் தமிழக மக்கள் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து வரும் நீர் இல்லாமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணிப் பார்க்க முடியாத ஒரு வாதத்தை முன்வைக்கிறார். ஆற்று நீர் அதன் போக்கிலேயே விடப்பட வேண்டும் என்று கூறுவதோடு அதையும் கடந்து ஒருபடி மேலே சென்று கேரளா மற்றொரு அணை கட்டலாம் என்று கூறுவதும் அத்தனை சரியானது அல்ல என்று கூறுகிறார். அதாவது இலட்சோபலட்சம் மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்துவிட்டும் அவர்கள் வாழ முடியும் என்ற ஒரு ஈவிரக்கமற்ற கருத்தை முன்வைக்கிறார். அதன்மூலம் நமது நாட்டின் அதிகார வர்க்கம் எத்தனை தூரம் சாதாரண மக்களின் வாழ்க்கைப் பிரச்னைகளிலிருந்து அன்னியப்பட்டுள்ளது என்பதைப் பிரதிபலிக்கிறார்.

புதுப் பிரச்னைகளை ஏற்படுத்தவல்ல புதிய அணை

இந்நிலையில் இந்தப் பிரச்னையின் தீர்விற்காக கேரள அரசால் முன்வைக்கப்படும் மாற்று அணைத்திட்டம் பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்றே. ஆனால் இன்றுள்ள அரசியல்வாதிகளின் தரத்தையும், பக்குவமற்ற போக்கையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் வெள்ளையருடன் திருவாங்கூர் மன்னர் செய்து கொண்ட 999 ஆண்டு ஒப்பந்தத்தில் இருக்கும் விவசாய நலன் பேணும் அம்சங்களைப் பராமரித்துப் பேணும் விதத்தில் புதிய அணை கட்டும் போது எட்டப்படும் ஒப்பந்தத்தின் ­ரத்துக்கள் அமையுமா? என்பதே முக்கியக் கேள்வியாக எழுந்து நிற்கிறது.

ஏனெனில் நாம் ஏற்கனவே பார்த்தபடி அணை வலுவில்லாமல் உள்ளது; தமிழ் நாட்டிற்கு அணைப் பாதுகாப்பு வி­சயத்தில் அக்கறை இல்லை என்றெல்லாம் பெரிய அளவிற்குப் பிரச்சாரம் செய்வதன் நோக்கமே 999 ஆண்டு ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வரவே என்பது தெளிவாகியுள்ளது. இந்நிலையில் புது அணை கட்டுவது கேரள அரசின் நிபந்தனைகள் மற்றும் நிர்ப்பந்தங்களுக்கு உட்பட்ட ஒரு புதிய ஒப்பந்தத்தைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே என்பதும் வெளிப்படையானது. அத்தகைய ஒப்பந்தம் தங்கு தடையற்ற தண்ணீர் வழங்குவதை உறுதி செய்வதாக இருக்குமா என்பதே அடிப்படைக் கேள்வியாக உள்ளது.

இவ்வாறு எந்தவொரு உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை அல்லது நீதிமன்றத் தீர்ப்புகள் ஆகியவற்றின் மூலமான தீர்வும் எட்டப்படாத நிலையில் தென் தமிழக மக்கள் அவர்களுடைய பிரச்னையின் தீர்விற்கு முனைப்புடனும் நடுநிலை மனநிலையுடனும் யாரும் வருவர் என்ற நம்பிக்கையில்லாத நிலையில் தாங்களாகவே தங்களுக்குத் தோன்றும் விதங்களில் போராடத் தொடங்கியுள்ளனர். இதில் அரசியல் ஆதாயம் அடைய முயலும் அரசியல் கட்சிகளின் அறைகூவல்களுக்குப் பெரிய அளவில் செவிமடுக்காது அவர்களாகவே ஒன்று திரண்டு கேரள எல்லையை நோக்கிச் செல்வது என்பது போன்ற இயக்கங்களில் ஈடுபட்டுக் கொண்டுள்ளனர். அத்துடன் கேரளாவிற்குக் காய்கறிகள் ஏற்றிச் செல்லும் வாகனங்களைத் தடுப்பது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். சில அரசியல் இயக்கங்கள் அணை அமைந்திருக்கும் இடிக்கி மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் சேர்ப்பதே பிரச்னை தீர ஒரே வழி என்றும் கூறுகின்றனர்.

அச்சுதானந்தனின் அப்பட்டமான சந்தர்ப்பவாதம்

கேரளாவிலோ அரசியல் வாதிகளையும் தாண்டி வருந்தத் தகுந்த விதத்தில் கிருஷ்ணய்யர், குரூப் போன்ற முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாநில நலன் என்ற குறுகிய வட்டத்திற்குள் நின்று முழு உண்மையை பார்க்க முடியாதவர்களாக உள்ளனர். கேரள மக்களுக்கிடையில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தற்போது இப்பிரச்னையை மையமாக வைத்துத் தமிழ் விரோத மனநிலை மேலோங்கியிருப்பதற்கு மற்றொரு முக்கியக் காரணம் கேரளாவில் மிகப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் செயல்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)‡ன் நிலைபாடாகும். எந்தவொரு பிரச்னையிலும் பரந்த மன நிலையோடு ஓரளவேனும் செயல்படுவர் என்று எதிர்பார்க்கப்படும் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்களின் நிலை இவ்வி­யத்தில் படுகேவலமானதாக உள்ளது.

கம்யூனிஸ்ட்கள் அடிப்படையில் சர்வதேச வாதிகளாக இருக்க வேண்டியவர்கள். தேசியவாத நிலை எடுத்து முதல் உலக யுத்தத்தின் போது ஜெர்மன் அரசை ஆதரித்த கம்யூனிஸ்ட்களை மாமேதை லெனின் அழுகி நாற்றமெடுக்கும் பிணம் என்று வர்ணித்தார். ஆனால் லெனின் தாங்கிய செங்கொடியைத் தாங்கிக் கொண்டிருக்கும் கேரள சி.பி.ஐ(எம்). கட்சி தேசிய வாதமல்ல அப்பட்டமான பிராந்தியவாதச் சாக்கடையில் புரண்டு கொண்டுள்ளது. அக்கட்சியின் முன்னாள் முதல்வரான அச்சுதானந்தனின் நிலைபாடே இன்று இத்தனை தமிழ் விரோத மனநிலை கேரள மக்களிடம் வருவதற்கு ஒரு முக்கியக் காரணமாக ஆகியுள்ளது. அக்கட்சியின் முக்கியத் தலைவரான அவர் அகிலஇந்திய மனநிலையைக்கூடக் கைவிட்டு, பிராந்திய மனநிலையைக் கையிலெடுத்துத் தேர்தல் அரசியலில் தனது இன்றைய நலனை உறுதி செய்வதே முக்கியம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

மாமேதை லெனின் சந்தர்ப்பவாதம் குறித்து ஒரு அருமையான விளக்கத்தை முன்வைத்தார். அதாவது இறுதி இலக்கைத் தற்காலிக நலனுக்காகக் காவு கொடுப்பதே சந்தர்ப்பவாதம் என்று அவர் கூறினார். அதனை அசலும் நகலும் நிரூபிக்கும் விதத்தில் கடந்தமுறை தோல்வி அடைந்தாலும் கேவலமான தோல்வியாக அது இல்லாமல் போனதற்குக் காரணம் அச்சுதானந்தனே என்று நிலவிய கருத்தின் மூலம் தனக்கு மாநில அரசியலில் கிடைத்துள்ள கூடுதல் வாய்ப்பை இன்னும் அதிகப்படுத்த வேண்டும்;அந்தத் தற்காலிக நலனைப் பாதுகாப்பதற்காக பிராந்திய, தேசிய வரையறைகளைத் தாண்டி மனித குலத்தின் இறுதி விடுதலையைச் சாதிப்பது என்ற கம்யூனிஸ்டுகளின் இறுதி நலனைக் காவு கொடுத்துப் பிராந்திய வெறிவாதம் தூண்டப்பட முழுமுதற் காரணமாக ஆகியுள்ளார்.

அதாவது நேரடியாக புது அணை கட்டுவது அணையின் நீர்மட்டத்தை 120 அடி என்ற அளவிற்குக் குறைப்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தும் போராட்டங்களை முன்னெடுக்கிறார். அதற்காக மக்களின் உணர்வினைத் தட்டியெழுப்பும் விதத்தில் உண்ணாவிரதம் போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்.

அடாவடித்தனமான ஆலோசனைகள்

தமிழக அரசியல் வாதிகளில் ஒரு பகுதியினர் பரிந்துரைக்கும் கேரளாவின் இடிக்கி மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நடைமுறை சாத்தியமானதல்ல என்பதோடு ஒரு வகையில் அடாவடித்தனமானதும் கூட. இது மக்களுக்கிடையிலான பிளவினை இன்னும் அதிகப்படுத்தி சாதாரண கேரள மக்களிடம் இன்னும் கூடுதல் தமிழர் விரோத மனநிலையை உருவாக்கும். அதைப் போன்றதே கேரளாவிற்குச் செல்லும் உணவுப் பொருட்கள், காய்கறி ஆகியவற்றைத் தடுக்கும் நடவடிக்கைகளும். எந்தவொரு மாநிலத்தையும் மற்றொரு மாநிலம் அச்சுறுத்திப் பணிய வைக்க முடியாது. அவ்வாறு பணிய வைக்க வேண்டும் என்று நினைக்கவும் கூடாது. இதுபோன்ற கோரிக்கைகளை முன் வைப்பதற்கு முன் இடிக்கிக்குப் பதிலாக தமிழகத்தின் வேறொரு மாவட்டத்தை கேரளாவிற்குத் தரத் தமிழ்நாடு முன்வருமா என்ற கேள்வியை இக்கருத்தை முன்வைப்பவர்கள் தங்களுக்குத் தாங்களே கேட்டுப் பார்க்க வேண்டும். உணவுப் பொருள் செல்வதைத் தடுப்பதால் பாதிப்பு நமது விவசாயிகளுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் சேர்த்துத்தான் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

துண்டாடப்பட்டுள்ள வர்க்க ஒற்றுமை

இதுபோன்ற நிலைபாடுகளின் விளைவாக நாம் ஏற்கனவே விவரித்த விதத்தில் மிகப்பெரும் பாதிப்பிற்கு ஆளாகியிருப்பது இரண்டு மாநிலங்களையும் சேர்ந்த சாதாரண உழைக்கும் மக்களே ஆவர். போக்குவரத்துத் தடுக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளின் விளை பொருட்கள் தமிழகத்தில் தேங்கி அவற்றைச் சுத்தமாகவே கட்டுபடியாகாத விலைக்கு விற்று அல்லலுறும் நிலையில் தமிழக விவசாயிகளும் அதே சமயத்தில் காய்கறிகளின் வரவு குன்றியதால் விண்ணை முட்டும் அளவிற்கு அவற்றின் விலை உயர்ந்துள்ள சூழ்நிலைக்குக் கேரள மக்களும் தள்ளப்பட்டுள்ள கொடுமை ஏற்பட்டுள்ளது. இரண்டு மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் மாநிலம் விட்டு மாநிலம் வேலைக்குச் செல்லும் சூழ்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வசிக்கும் கேரள மக்களும், கேரளத்தில் வசிக்கும் தமிழக மக்களும் பாதுகாப்பு உணர்வின்றி இருக்கும் அவலநிலை தோன்றியுள்ளது. கேரளாவில் தமிழர் கடைகளும், தமிழகத்தில் கேரள மக்களுக்குச் சொந்தமான நிறுவனங்களும் தாக்கப்படும் கொடுமை எங்கே இரு மாநில மக்களுக்குமிடையில் தீராத வெறுப்பும் பகையும் ஏற்பட்டு விடுமோ என்ற சூழ்நிலையைத் தோற்றுவித்துள்ளது.

இச்சூழ்நிலையில் பேச்சுவார்த்தை போன்றவற்றின் மூலம் பலன் எதுவும் ஏற்படப் போவதில்லை என்பதும் நிதர்சனமாகியுள்ளது. இந்தப் பின்னணியில் பிரச்னையை ஓரளவேனும் தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான வழிமுறைகளை யோசிக்க வேண்டும். பிரச்னைக்கான தீர்வு என்று பேசும் போது அதிலும் நமக்கு எந்த மாயையும் பிரமையும் இருக்கக் கூடாது. இதுபோன்ற பிரச்னைகளுக்கான முழுமையான தீர்வு முதலாளித்துவக் கட்சிகளின் தரம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குச் சீரழிந்துள்ள நிலையில் இன்றுள்ள முதலாளித்துவ அமைப்பில்  எட்டப்பட முடியாது. எனவே இந்நிலையில் எந்தத்தீர்வு எட்டப்பட்டாலும் அது தற்காலிகத் தீர்வாகவே இருக்கும்.

இச்சூழ்நிலையில் இதற்கு இப்போது இருக்கும் ஓரே தீர்வு ஏற்கனவே உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீர் வினியோகத்தைப் பராமரித்து அணையின் பாதுகாப்புக் குறித்த கேள்விகள் அது போன்ற ஒரு நடுநிலை அமைப்பின் மத்தியத்துவத்தின் அடிப்படையில் தேவைப்படும் போதெல்லாம் சரிசெய்யப்பட வேண்டும் என்பதுதான். அதாவது தற்போதைய நிலையே அதாவது தற்போதுள்ள அணையைத் தேவைப்படுமானால் இன்னும் பலப்படுத்தி அதன்மூலம் தமிழக மக்களின் விவசாயத்திற்கு நீர் வழங்கல் உத்திரவாதப்படுத்தப்பட வேண்டும் என்பதே ஒரே தீர்வாக இருக்க முடியும்.

கருதப்பட வேண்டிய கண்ணோட்டங்கள்

கேரளாவைப் பொறுத்தவரை இந்த நீரை விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியாது. இருந்தாலும் இதை இடிக்கி அணைப் பகுதிக்குத் திருப்பி விட்டால் அதைப் பயன்படுத்தி கூடுதல் மின்சாரம் தயாரிக்கலாம் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் தண்ணீரைப் பொறுத்தவரை அதன் பிரதான உபயோகம் நீர்ப்பாசனமே தவிர மின்சாரத் தயாரிப்பல்ல. எனவே விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்துத் தண்ணீரைத் தமிழகத்திற்கு வழங்கும் அதே வேளையில் அந்த நீரைக் கொண்டு தமிழகம் தயாரிக்கும் மின்சாரத்தில் கேரளாவிற்குக் கூடுதல் பங்கினைத் தரலாம் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் கூறியுள்ள கருத்தும் கருதப்பட வேண்டிய ஒன்றே.

இப்பிரச்னையில் மிகவும் எதிரெதிரான மற்றும் கத்தி தீட்டும் அரசியலில் ஈடுபடும் நிலை எடுக்காது ஓரளவு பிரச்னையைப் பெரிதுபடுத்தாமல் அதற்குத் தீர்வுகாணும் விதத்திலான கருத்துக்களைக் கொண்டுள்ளவர்கள் போல் இன்றுவரை காட்சியளிக்கும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களும் கேரளாவின் முன்னாள் முதல்வரும் தற்போதைய இந்தியப் பாதுகாப்பு அமைச்சருமான ஏ.கே.அந்தோணி போன்றவர்களும் ஓரளவு முன்கை எடுத்து இருமாநில மக்களுக்கிடையிலான ஒற்றுமை பாழ்படாதிருக்கும் வகையில் ஒரு தீர்வுக்கு முயற்சிக்கலாம். அந்த அடிப்படையிலான தீர்வு வரும் வரை இரு மாநில மக்களின் ஒற்றுமை பாழ்படாதிருக்கப் பாடுபடுவதே உண்மையான உழைக்கும் வர்க்க இயக்கத்தின் முழுமுதற் கடமையாகும். அதனைச் செவ்வனே செய்யப் பிராந்திய வெறியினைத் தூண்டி அதன்மூலம் அரசியல் ஆதாயம் அடைய முயலும் இரு மாநிலங்களின் அரசியல்வாதிகளையும் அதற்குத் துணை போகும் அதிகார வர்க்கத்தையும் கண்காணித்து அம்பலப்படுத்துவதும் நமது கடமையாகும்.