ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேயின் இயக்கம் மக்கள் இயக்கமாக மாற்றப்பட வேண்டும்

இந்திய அரசியல் அரங்கில் சமீப காலத்தில் ஊழலுக்கு எதிரான இயக்கப் போக்கு முழுவீச்சுடன் தலைதூக்கி வருகிறது. இந்த இயக்கப் போக்கினைத் தொடங்கி வைத்தது கம்யூனிஸ்ட் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் கட்சிகளோ அல்லது பிரதான எதிர்க் கட்சியான பி.ஜே.பி-யோ அல்ல.

சமூக ஊழியர் அன்னா ஹசாரே இதனைத் தொடக்கி வைத்தார். அவர் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் தொடங்கிய போது அவருடன் பிரசாந்த் பூசன், சாந்தி பூசன் போன்ற வழக்கறிஞர்களும், மேத்தா பட்கர் போன்ற சமூக இயக்கங்கள் கட்ட முனைவோரும், கிரண்பேடி போன்ற ஓய்வு பெற்ற அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவரும் பங்கேற்றனர். அவர்களோடு ஏராளமான படித்த இளைஞர்கள், மத்தியதர வர்க்கத்தினர், பல மட்டங்களிலான சமூக ஆர்வலர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

ஆட்சியாளரை நடுங்க வைத்த போராட்டம்

உண்ணாவிரதத்தின் வீச்சையும் அதற்கு நாடு முழுவதிலிருந்து பொங்கி எழுந்த ஆதரவினையும் கண்டு நமது ஆட்சியாளர்கள் நடுநடுங்கிப் போய் விட்டனர். அதன் காரணமாகவே அமைச்சர்கள் பலர் அவருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு உண்ணாவிரதத்தை உடனேயே முடிவுக்குக் கொண்டுவந்து விட்டனர். உண்ணாவிரதத்தின் விளைவாக ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா கொண்டுவருவது உறுதி செய்யப்பட்டது. அம்மசோதாவின் வரைவுக்காக கமிட்டி ஒன்றும் அமைக்கப்பட்டது. அதில் பிரசாந்த் பூசன் போன்ற சமூக நலன் கருதும் வழக்கறிஞர்களும் இடம் பெற்றனர்.

பாபா ராம் தேவின் பக்குவமற்ற நடவடிக்கைகள்

அதைத் தொடர்ந்து பாபா ராம்தேவ் என்ற யோகக் கலை கற்பிக்கும் ஒருவர் ஊழலுக்கு எதிரான இயக்கத்திற்குக் கிட்டும் மக்கள் ஆதரவினைப் பார்த்து மதவாத சக்திகளின் தேர்தல் அரசியல் ஆதாயத்தை மேம்படுத்துவதற்காக ஒரு உண்ணாவிரதத்தைத் துவக்கினார். டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் மிகப்பெரும் விளம்பரத்துடன் தொடங்கிய அந்த உண்ணாவிரதத்தில் சாது ரிதம்பரா போன்ற பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட மத வெறிவாதிகளும் இடம் பெற்றிருந்தனர்.

அத்துடன் இந்திய தேசம் குறித்து ஒரு குறுகலான கண்ணோட்டத்தை அதாவது இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியே இருக்க வேண்டும்; அதன் முழு உரிமை பெற்ற குடிமக்களாக இந்து மதத்தைச் சேர்ந்தவர்களே இருக்க வேண்டும்; மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்துக்களை அனுசரித்து வாழப் பழகிக்கொள்ள வேண்டும்; இந்தியா ஹிந்துஸ்தான் என்று அழைக்கப்பட வேண்டும் என்ற அதாவது ஹிந்தி, ஹிந்து, ஹிந்துஸ்தான் என்ற முழக்கத்தைக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களும் இருந்தனர்.

ஒரு உயர்ந்த குறிக்கோளைக் கொண்ட பொது நிகழ்வுக்கு இருக்க வேண்டிய கண்ணியம் மிக்க தோற்றத்திற்கு மாறாகப் படாடோபமான தோற்றத்துடனும் மிகுந்த ஆடம்பரத்துடனும் அந்த உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டது. உண்ணாவிரதப் பந்தலுக்குக் கட்டணமின்றி ஆட்களை ஏற்றிச் செல்வதற்காக 20,000 ஆட்டோக்கள் டெல்லியில் ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதாக ஊடகங்கள் கூறின.

ஒரு சரியான இயக்கத்திற்கான எந்த உள்ளடக்கமும் வெளித்தோற்றமுமின்றி ஆரம்பிக்கப்பட்ட போதும் இந்த உண்ணாவிரத அறிவிப்பு வெளிவந்த உடனேயே அமைச்சர்கள் அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் தங்களது விருப்பத்தைப் பரபரப்புடன் வெளியிட்டனர்.

உண்ணாவிரதப் பந்தலுக்கு வருவதற்காக டெல்லி விமான நிலையம் வந்த பாபா ராம்தேவுடன் பேச்சுவார்த்தை நடத்த கபில்சிபல் போன்ற மூத்த மந்திரிகள் விமான நிலையத்திற்கு விரைந்தனர். பாபா ராம்தேவின் அர்த்தமுள்ள, அர்த்தமற்ற அரை வேக்காட்டுத் தனமான கோரிக்கைகள் குறித்தெல்லாம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

உண்ணாவிரதம் போன்ற தன்னை வருத்திக் கொள்ளும் ஒரு தீவிர இயக்கத்தில் ஈடுபடுவோரின் தோற்றத்திலும் நடவடிக்கைகளிலும் இருக்க வேண்டிய பக்குவம் எதுவும் இல்லாமல் தனக்குக் கிடைத்துள்ள ஆதரவு அதனை அங்கீகரிக்கும் விதத்திலான அமைச்சர்களின் பேச்சுவார்த்தை முயற்சி ஆகியவற்றில் மதி மயங்கிப் போனது போன்ற ஒரு ஆணவப் பெருமிதம் பாபா ராம்தேவ்-ன் முகத்தில் இழையோடியது.

பேச்சு வார்த்தை ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் போதே உண்ணாவிரதமும் நான் மேற்கொள்வேன் என்ற அடிப்படையில் உண்ணாவிரதப் பந்தலில் இருந்தே அவ்வப்போது வெளியேறிப் பேச்சு வார்த்தைக்குச் செல்லும் பொருத்தமற்ற செயலிலும் அவர் ஈடுபட்டார்.

இதற்கிடையில் பாபா ராம்தேவிற்கு அரசாங்கம் கொடுத்த முக்கியத்துவத்தைக் கண்டு காங்கிரஸ் கட்சி எரிச்சலடைந்துள்ளது என்ற செய்தியும் மற்றொருபுறம் வெளிவந்தது.

வகுப்புவாத சக்திகளின் ஆதரவு

இதற்கு மாறாக பி.ஜே.பி. மற்றும் அதன் கிளை அமைப்புகளின் ஆதரவு இந்த உண்ணாவிரதத்திற்குப் பெருமளவு இருந்தது. சில பத்திரிக்கைகளும் கூட அன்னா ஹசாரேக்கு என்று அமைப்பு எதுவும் இல்லை.

ஆனால் பாபா ராம்தேவ்-க்குச் சீடர்களும் பக்தர்களும் நாடு முழுவதும் நிரம்பித் ததும்புகின்றனர். எனவே அன்னா ஹசாரேயின் இயக்கத்திற்குக் கிட்டியதைக் காட்டிலும் மிகப் பெரும் ஆதரவு பாபா ராம்தேவ்-க்கு கிட்டும் என்று பாமரத்தனமாக எழுதின.

நாடு முழுவதிலும் உள்ள சமூக அவலங்களுக்கு எதிராகப் பொதுவாகவும் ஊழலுக்கு எதிராகக் குறிப்பாகவும் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற மனநிலை கொண்ட சமூக ஈடுபாடு உடையோரின் கண்களுக்குப் பாபா ராம்தேவ்-ன் இந்த மேளா பாணியிலான உண்ணாவிரதம் ஒரு அப்பட்டமான அபத்தமாகவே தோன்றியது.

ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே தொடங்கிய இயக்கமே உண்மையான தலை வலியாக இருந்தது. அதனைத் தலை தூக்காதிருக்கச் செய்ய வேண்டும் என்பதே அவர்களின் உள்ளார்ந்த விருப்பமாக இருந்தது.

ஆனால் அதில் கலந்து கொண்டோர் மற்றும் அதனால் ஈர்க்கப் பட்டோரின் தரமும் அதற்கு எதிராக அடக்கு முறையைப் பிரயோகித்தால் அதன் விளைவு தங்களுக்கு எதிராகப் பெருமளவு சென்றுவிடும் என்ற அச்சமும் ஆட்சியாளர்களுக்கு இருந்தது.

அவர்களது அந்த ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் மீதிருந்த வெறுப்பையும் இயக்க விரோத மனநிலையையும் பாபா ராம்தேவ்-ன் உண்ணாவிரதத்தின் மீது வெகு ஆவேசமாக உண்ணாவிரதம் தொடங்கிய நாளன்றே காட்டி வஞ்சம் தீர்த்துக் கொண்டனர்.

அவர் உண்ணாவிரதம் தொடங்கிய நாளன்று நள்ளிரவில் டெல்லி காவல்துறை ராம்லீலா மைதானத்தில் புகுந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டோரை அடித்து நொறுக்கி பாபா ராம்தேவைக் கைது செய்து அவரை அங்கிருந்து விமானம் மூலம் அவரது ஹரித்துவார் ஆசிரமத்திற்குக் கொண்டு சென்றது.

இத்தகைய இயக்கங்களில் ஈடுபடுவோருக்கு இருக்க வேண்டிய தெளிவும், மனோதிடமும் சிறிதும் இன்றி உண்ணாவிரதப் பந்தலிலிருந்து பாபா ராம்தேவ் குதித்தோடிய விதம் இவரெல்லாம் இத்தகைய முயற்சியை ஏன் மேற்கொள்கிறார் என்ற எண்ணத்தையே அதனைப் பார்த்தோரது மனங்களில் ஏற்படுத்தியது.

நல்ல இயக்கத்தை ஒடுக்கப் பயன்படும் தவறான இயக்கம்

பல சமயங்களில் ஒரு தவறான இயக்கமே ஆளும் வர்க்கத்தால் பல நல்ல இயக்கங்களை அடக்குவதற்குப் பயன்படுத்தப் படுகிறது. இதில் வினோதம் என்னவென்றால் ஊழலுக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு நிற்பது போல் பி.ஜே.பி. கட்சி இந்த விஷ‌யத்தைக் கையிலெடுத்தது தான்.

வேஷ‌தாரித் தனங்கள்

இக்கட்சிகளெல்லாம் மக்களின் நினைவாற்றல் மிகக் குறுகிய காலமே நீடிக்கக் கூடியது என்பதில் அதீத நம்பிக்கை வைத்தவையாய் இருக்கின்றன.

அதனால் தான் தனது குடும்பத்தினர் பலர் மீது ஊழல் குற்றச்சாட்டு பெரிதாக எழுப்பப்பட்டுக் கட்சியையும் குடும்பத்தையும் சேர்ந்த சிலர் அதற்காகச் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ள நிலையில் கூட ஊழலுக்கு எதிரான இயக்கம் பற்றி கருத்துக் கேட்கப்பட்ட போது தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் ஊழலை ஒழிப்பதற்காகத் தான் 1973-ம் ஆண்டே ஒரு மசோதாவை வரைவு செய்ததாகவும் அதனை அவருக்குப்பின் ஆட்சியதிகாரத்திற்கு வந்த எம்.ஜி.ராமச்சந்திரன் ஒரு கருப்பு மசோதா என்று அறிவித்துச் சட்டமாகாமல் தடுத்து விட்டதாகவும் கூறுகிறார்.

பி.ஜே.பி-யைப் பொறுத்த வரையிலும் கூடக் கேவலமான விதத்தில் நாடாளுமன்றத்தில் சில வி­ஷயங்களைப் பேசுவதற்காகச் சில நிறுவனங்களிடமிருந்து பணம் வாங்கிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அதன் காரணமாக சம்பந்தப்பட்ட அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. தற்போது லோக்பால் பில் கொண்டு வருவதிலும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்த இழிவான செயலே பெரும் முட்டுக் கட்டையாக நிற்கிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கென்று சில உரிமைகள் உள்ளன. அதாவது நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்களில் அவர்கள் பேசும் விஷ‌யங்களுக்காக அவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது.

ஆனால் இவ்வாறு பணம் வாங்கிக் கொண்டு அதனைப் பேசினார்கள் என்றால் அந்த உரிமை மிகவும் தவறாகப் பயன்படுத்தப் பட்டதாகிறது. அதை மையமாக வைத்து அவ்வாறு பணம் வாங்கிக் கொண்டு அவர்கள் ஆற்றிய உரைகளும் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் பராமரிக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளே என்று ஆகிவிடும்.

அதனால்தான் காங்கிரஸ் கட்சி தற்போது சாதுர்யமாக பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் உரிமைகள் குறித்த விஷ‌யத்தை அதாவது லோக்பால் சட்டத்தில் அதனை எப்படிக் கையாள்வது என்பது குறித்து அனைத்துக் கட்சிகள் மற்றும் மாநிலங்களிடம் கருத்துக் கேட்கப் போவதாகக் கூறிச் சட்டம் இயற்றுவதில் காலம் கடத்தும் வேலையைச் செய்து கொண்டுள்ளது.

எதையுமே அரசியலாக்கி அதில் ஆதாயம் பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரத் துடிக்கும் போக்குள்ள பி.ஜே.பி. கட்சியும் கூட இந்தக் காலம் கடத்துதல் குறித்து எதுவும் கூற முடியாத நிலையில் நிற்கிறது. மேலும் அக்கட்சி அடிக்கடி பிரதமர் மன்மோன்சிங் மேல் வைக்கும் ஒரு குற்றச்சாட்டே அவர் பலவீனமான பிரதமர் என்பதாகும்.

எனவே அக்கட்சிக்கு பிரதமர் பொறுப்பை பலவீனமானதாக்கும் எந்த ஷ‌ரத்தும் லோக்பால் மசோதாவில் இடம் பெறுவதில் இயல்பாகவே உடன்பாடு இருக்காது. மேலும் கர்நாடக மாநிலத்தில் அக்கட்சியின் முதல்வர் மீது ஊழல் குற்றச் சாட்டுகள் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன.

இத்தனை சூழ்நிலைகள் இருந்தாலும் கூட பாபா ராம்தேவ்-ன் அரை வேக்காட்டுத்தனமான இயக்கத்தை தனது அணிகளை ஒருங்கிணைத்து ஆதரித்து அதில் அரசியல் ஆதாயம் தேடவே அக்கட்சி முனைந்தது.

கட்சிகள் ஊழலுக்கு எதிரான இயக்கங்களைக் கட்டியதில்லை

இந்திய வரலாற்றில் ஆட்சிக்கு வந்த அல்லது ஆட்சிக்கு வரும் வாய்ப்பினைக் கொண்டிருந்த எந்தவொரு கட்சியும் ஊழலுக்கு எதிரான இயக்கம் எதையும் கையிலெடுத்ததில்லை.

டைம்ஸ் நவ் ஊடகத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.கோஸ்வாமி கூறியது போல் இந்த முறையும் நடந்த ஊழல்களை சமூகப் பொறுப்புணர்வுடன் அரசியல் நடத்த வேண்டிய வெளிப்படையான கட்டாயம் உள்ள அரசியல் கட்சிகள் கொண்டுவரவில்லை. ஊடகங்கள் தான் அவற்றை வெளிப்படுத்தின.

ஊடகங்களின் மூலம் வெளிவந்தபின் அதில் அரசியல் ஆதாயம் பெற அனைத்துக் கட்சிகளுமே களத்தில் குதித்தன. 2ஜி அலைக்கற்றை ஊழலில் ஊழல் நடைபெற வழிவகுத்த நடைமுறையைப் பின்பற்றிய கட்சி என்ற ரீதியில் அதை மனதிற்கொண்டு பி.ஜே.பி. கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அருண் செளரி கரன் தாப்பருடன் கலந்து கொண்ட டெவில்ஸ் அட்வகேட் என்ற பிரபலமான நேர்காணல் நிகழ்ச்சியின் போது பி.ஜே.பி. கட்சி 2ஜி அலைக்கற்றை வி­யத்தை இதற்குமேல் வற்புறுத்தாது என்று ஒரு கட்டத்தில் கூறினார்.

அந்த இமாலய ஊழல் நடைபெற்ற பி.எஸ்.என்.எல். தொலை தொடர்பு நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக இருந்த சி.பி.ஐ(எம்). கட்சியின் வழிகாட்டுதலில் செயல்படும் பி.எஸ்.என்.எல்.இ.யு. அது நடைபெற்ற போது அதனை வெளிக் கொண்டு வரவோ அது குறித்து அறிக்கைகள் விடவோ குறைந்தபட்சம் தொலைத் தொடர்புத் தொழிலாளரிடம் அதனைக் கொண்டு சென்று இத்தகைய பேரிழப்பினைச் செய்து பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பொருளாதார வலுவினை சீர்குலைத்துவிட்டு தொழிலாளருக்கு வழக்கமாக வழங்கும் ஊக்கத் தொகையைக் கூட அதன் நிர்வாகம் இந்த ஆண்டு வழங்க மறுத்துவிட்டது என்பதைக் கூட அம்பலப்படுத்தவோ இல்லை.

இவ்வாறு இந்திய வரலாற்றில் எந்தவொரு ஆளும் கட்சியாக இருந்த அல்லது ஆளும் கட்சியாக ஆகும் வாய்ப்பினைக் கொண்டிருந்த கட்சியும் ஊழலுக்கு எதிரான இயக்கத்தைத் தொடங்கவோ அல்லது அது உருவெடுத்த பின் முனைப்புடன் அதில் பங்கேற்கவோ இல்லை. அத்தகைய ஊழலுக்கு எதிரான இயக்கங்கள் பொறுப்புள்ள தனிநபர்களால் தான் கடந்த காலங்களில் நடத்தப் பட்டுள்ளன.

ஜே.பி. இயக்கம்

இதற்கு எடுத்துக்காட்டாக 1975-ம் ஆண்டு பீஹாரில் ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களால் தொடங்கப்பட்ட ஊழலுக்கு எதிரான இயக்கத்தைக் கூறலாம். நாடு முழுவதும் மாணவர், இளைஞர் மற்றும் மக்கள் ஆதரவினைப் பெற்ற அந்த இயக்கமே காங்கிரஸ் கட்சி அவசர நிலையைக் கொண்டுவந்து பாசிஸ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குக் காரணமாக இருந்தது.

அந்த இயக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளும் பங்கேற்றன. ஆனால் ஜே.பி-யின் தலைமை அத்தகைய அமைப்புகளைக் கூட ஜீரணித்து அத்தகைய அமைப்புகள் இருப்பதால் இயக்கம் தடம் புரண்டு விடாத ஒரு நிலையை ஊர்ஜிதம் செய்தது. ஆனால் தற்போது பாபா ராம்தேவ்-ன் இயக்கம் அத்தகைய தலைமையினைக் கொண்டதல்ல.

எப்படியிருந்தாலும் மத்திய காங்கிரஸ் அரசு ஒரு இயக்கம் என்ற ரீதியில் நடத்தப்பட்ட பாபா ராம்தேவின் உண்ணாவிரத்தை இவ்வாறு அடக்குமுறை மூலம் முடிவுக்குக் கொண்டு வந்தது அப்பட்டமான பாசிஸத் தன்மை வாய்ந்ததே.

இத்தகைய அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டதன் நோக்கமே அன்னா ஹசாரேயுடன் உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்களையும் இனிமேல் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்களும் இதுபோன்ற விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று அச்சுறுத்துவதற்கேயாகும்.

அதை நன்கு புரிந்து கொண்ட அன்னா ஹசாரே தன்பின்னால் அணிதிரண்டவர்கள் இத்தகைய அச்சுறுத்தலைக் கண்டு அஞ்சிவிடக் கூடாது என்பதற்காகவே அடுத்து ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு பாபா ராம்தேவ்-ன் உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது போல் தனது உண்ணாவிரதத்தை அரசால் முடிவுக்குக் கொண்டுவந்துவிட முடியாது என்பதை நிரூபித்தார்.

அன்னா ஹசாரேயின் இயக்கத்தின் மீது கைவைத்தால் அது ஜே.பி. இயக்கம் போல் ஆனாலும் ஆகிவிடும்; பல்வேறு வாழ்க்கைப் பிரச்னைகளால் அல்லாடிக் கொண்டிருக்கும் மக்களைத் தட்டியயழுப்பி விடுவதாக அது ஆகிவிடும் என்ற அச்சத்திலிருந்த காங்கிரஸ் அரசிற்கு அதனைத் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் ஒரு வாய்ப்பினைத் தந்தது பாபா ராம்தேவ்-ன் உண்ணாவிரதக் கேலிக்கூத்தே.

ஊழலின் பின்னணியில் முதலாளித்துவம்

மேலோட்டமாகப் பார்த்தால் அடிப்படை சமூக மாற்றத்தோடு தொடர்பில்லாதது போல் ஊழலுக்கு எதிரான இயக்கம் தோன்றினாலும் அதனை மட்டும் கருத்திற்கொண்டு அதற்கு உரிய முக்கியத்துவம் தராமல் விட்டுவிடக் கூடாது.

ஏனெனில் முதலாளித்துவத்திற்கு மாற்றான சோசலிச சமூக அமைப்பு இன்று உலகின் எந்த நாட்டிலும் அதன் உண்மையான வடிவத்தில் இல்லாததால் சமூகமாற்ற அடிப்படையினைக் கொண்ட இயக்கங்கள் எவையும் பெரும்பாலும் தற்போது நடத்தப் படுவதில்லை. அந்தப் பக்கம் மக்களின் பார்வை திரும்பிவிடாமல் இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் நமது காட்சி மற்றும் எழுத்து ஊடகங்கள் செய்கின்றன.

அந்நிலையில் மக்களிடம் உள்ள அவர்களது வாழ்க்கைப் பிரச்னைகள் சார்ந்த ஒட்டுமொத்த அதிருப்தியும் இதுபோன்ற இயக்கங்கள் கட்டப்படும் போது அவற்றிற்கான நேரடி அல்லது மறைமுக ஆதரவுகள் மூலமாகவே வெளிப்படுகின்றன.

உண்மையில் இவ்வியக்கமும் அதன் தர்க்க ரீதியான உச்சகட்டத்திற்குக் கொண்டுசெல்லப் படுமானால் இந்த ஊழல் நடவடிக்கைகள் அனைத்திற்கும் காரணமாக உள்ள முதலாளி வர்க்கம் கட்டாயம் வெளிச்சத்திற்கு வரவே செய்யும்.

இப்போது வெளிவந்துள்ள ஊழல்களிலும் பல முதலாளித்துவ நிறுவனங்களே அவை அனைத்தின் பின்னணியிலும் உள்ளதே வெளிவருகிறது. அவை தங்களுக்கிடையிலான தொழிற் போட்டியில் முன்னிலை பெறுவதற்கே இத்தகைய ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்பதே அப்பட்டமாக வெளிவந்துள்ளது.

எனவேதான் அத்தகைய இயக்கமாக அதாவது இந்த அமைப்பின் அடிப்படைக் கோளாறினை அம்பலப்படுத்தும் இயக்கமாக அன்னா ஹசாரே உருவாக்கிய போராட்டம் ஆகிவிடக் கூடாது என்பதில் ஆளும் வர்க்கத்திற்கும் அக்கறையிருந்தது.

அதன் காரணமாகவே அவசரஅவசரமாக லோக்பால் சட்டம் இயற்ற ஆளும் வர்க்கத்தின் நம்பகமாக ஏஜெண்டான மத்திய காங்கிரஸ் அரசு ஒப்புக் கொண்டது. எந்தவொரு போராட்டமும் அதன்மூலம் ஒருசில விஷ‌யங்கள் சாதிக்கப்பட்டால் மட்டுமே மென்மேலும் அது உற்சாகத்துடன் தொடர முடிந்ததாக இருக்கும்.

அன்னா ஹசாரேயின் கோரிக்கை அத்தகைய இயக்கங்களுக்கான உற்சாக பானமாக இருக்குமே தவிர அவர் வலியுறுத்திய லோக்பால் சட்டம் ஊழலை ஒட்டுமொத்தமாக முடிவுக்குக் கொண்டு வருவதாக ஒருபோதும் ஆகிவிடாது.

ஜே.பி-யின் இயக்கத்திற்கும், அன்னா ஹசாரேயின் இயக்கத்திற்கும் இடையில் உள்ள பெரிய வேறுபாடே அதில்தான் உள்ளது. ஜே.பி-யின் அறிவும் அனுபவமும் மக்கள் இயக்கங்கள் மூலமே ஊழல் முடிவுக்குக் கொண்டுவரப்பட முடியும் என்பதை உணர்த்தியது.

அவர் தனது முழு நம்பிக்கையையும் இளைஞர் மற்றும் மாணவர் சமூகத்தின் மீதே வைத்திருந்தார். அத்தகைய இயக்கங்கள் பொங்கி எழுந்ததன் விளைவாகவே அன்றைய காங்கிரஸ் அரசு அவசர நிலையைப் பிரகடனம் செய்தது.

காங்கிரஸ் என்ற வேலிக்குச் சாட்சி கூறும் ஓணான் பாணியில் அப்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமெரிக்காவின் தூண்டுதலினால் நடைபெறும் இயக்கம் என்று அதற்கு முத்திரைகுத்தி அவசர நிலையை ஆதரிக்கும் இழிவான நிலைக்குச் சென்றது.

நோக்கம் கற்பிக்கும் காங்கிரஸ் கட்சி

மக்கள் இயக்கத்தின் மூலம் ஊழலை எதிர்ப்பதைக் குறிக்கோளாகக் கொள்ளாமல் லோக்பால் சட்டத்தை மட்டும் தன் குறிக்கோளாக அன்னா ஹசாரேயின் இயக்கம் வைத்திருந்தாலும் இப்போதும் காங்கிரஸ் கட்சி இதற்கு எதிராகவும் பல்வேறு நோக்கம் கற்பிக்கும் வேலைகளைச் செய்து கொண்டுதான் உள்ளது.

அதாவது பாராளுமன்ற ஜனநாயகத்தின் மீது மேலாதிக்கம் செலுத்தும் ஒரு பிளாக் மெயில் நடவடிக்கையே இதுபோன்ற உண்ணாவிரதங்கள் என அது கூறுகிறது.

பாராளுமன்ற ஜனநாயகம் கொண்டு வரப்பட்டதன் நோக்கமே பெரும்பான்மை மக்களின் விருப்பத்தின் படி நடைபெறுவதாக ஒரு ஆட்சி இருக்க வேண்டும் என்பதுதான்.

அத்தகைய ஆட்சி ஊழல் உருவாவதை, தங்கு தடையின்றி அது நடைபெறுவதைத் தடுக்க முடியாததாக ஆகிவிட்டாலும் கூட மக்கள் அடுத்த தேர்தல் வரை காத்திருந்து தங்கள் வாக்குகளின் மூலமே அரசாங்கத்தின் மீதான தங்களது எதிர்ப்பைக் காட்ட வேண்டும்; அதைவிடுத்து இதுபோல் போராடக் கூடாது; வேண்டுமானால் இதுகுறித்துப் பேசலாம் என்பதே காங்கிரஸ் முன்வைக்கும் வாதத்தின் உள்ளடக்கம் ஆகும்.

காங்கிரஸ் வலியுறுத்தும் இதுபோன்ற ஜனநாயகம் எதிர்ப்பை வெற்றுப் பேச்சுக்களில் வெளிப்படுத்தி அதன்மூலம் விஷ‌யம் பேசப்பட்டு விட்டது என்ற ஆத்ம திருப்தியோடு அதனை அடிபட்டுப் போகச் செய்யும் உயிரற்ற ஜனநாயகமாகும்.

உண்மையில் உயிரோட்டமுள்ள ஜனநாயகம் எது என்றால் தற்போது நடப்பவை போன்ற இயக்கங்களே. இதுபோன்ற இயக்கங்கள் மூலமே சமூக நடவடிக்கைகளின் பாலான மக்களின் பங்கேற்பு அதிகமாகிறது.

அதன் மூலம் மட்டுமே மக்களின் விழிப்புணர்வும் அதிகரிக்கும். உண்மையில் தங்களால் தேர்ந்தெடுக்கப் படுபவர்களே தங்களுக்கானவர்களாக உள்ளனரா என்ற மக்களின் கண்காணிப்பினை உண்மையான ஜனநாயகத்தை வலியுறுத்தும் எவரும் மறுக்க மாட்டார்.

ஆனால் காங்கிரஸ் உட்பட எந்தக் கட்சியும் அத்தகைய உண்மையான ஜனநாயகத்தை வலியுறுத்தும் திராணியுள்ளதாக இன்று இல்லை.

உண்மையில் ஊடகங்கள் இவ்வி­யத்தை வெளிக் கொணர்ந்தாலும் அவை அதைக் கொண்டு வரும் விதத்தில் ஊழலில் முதலாளித்துவ நிறுவனங்களின் பங்கு என்ன என்பதை மூடிமறைக்கும் விதத்திலேயே கொண்டுவருகின்றன. அதனை ஒரு தனித்த விஷ‌யமாகவே நிலைநிறுத்தப் பார்க்கின்றன.

பி.ஜே.பி. போன்ற இதுபோன்ற வி­யங்களைக் கையிலெடுத்து அரசியல் ஆதாயம் பெறவிரும்பும் எதிர்க்கட்சிகள் பாபா ராம்தேவ் போன்ற கற்றுக் குட்டிகளையும் உண்மையான சமூக அக்கறையற்றவர்களையும் ஊழலுக்கெதிரான இயக்கங்களில் இறக்கி விட்டுத் தனக்குச் சாதகமான தேர்தல் அரசியல் ஆதாயம் பெறுவதற்கே முயல்கின்றன.

காங்கிரஸ் கட்சி லோக்பால் சட்டம் இயற்றுவதில் கூடப் பல முட்டுக்கட்டைகளை முன்னிறுத்தி காலம் தாழ்த்த முயல்கிறதென்றால் பி.ஜே.பி-யோ லோக்பால் சட்டம் எப்படியிருக்க வேண்டும் என்று கருத்து எதுவும் கூற முடியாத நிலையில் உள்ளது.

ஜே.பி-யின் தலைமை போன்ற தலைமை வேண்டும்

இவற்றையயல்லாம் உணர்ந்து அன்னா ஹசாரே அவர்கள் ஊழலுக்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயண் கொடுத்த ஒரு மகத்தான தலைமையைக் கொடுக்க முன்வர வேண்டும்.

லோக்பால் சட்டம் இயற்றுவதுடன் நின்றுவிடாமல் அதைத் தாண்டியும் ஊழலுக்கு எதிரான இயக்கத்தைக் கொண்டு செல்ல அவர் முன்வர வேண்டும்.

ஏனெனில் இந்த அமைப்பில் உடைமை வர்க்கங்களுக்குச் சாதகமாக உள்ள அனைத்துச் சட்டங்களும் அதீத முனைப்புடன் அமலாகும். ஆனால் உடைமை வர்க்கங்களுக்கு எதிரான சட்டங்களை மக்களின் விழிப்புணர்வினை அடிப்படையாகக் கொண்ட இயக்கங்கள் மூலமாகவே அமல் செய்ய முடியும்.

இடதுசாரி மற்றும் கம்யூனிஸ்ட் அமைப்புகளோடு ஒத்துப்போகாத பல கருத்துக்களைக் கொண்டவராக ஜே.பி. இருந்தாலும் அவர் இதை உணர்ந்தவராக இருந்தார்.

முதலாளித்துவ அமைப்பு இன்றுள்ள அதன் சீரழிந்த நிலையில் ஊக வணிகத்தையும் சூதாட்டப் போக்குகளையும் மையம் கொண்டதாக உள்ளது.

ஊழல் மூலமாக வரும் மூலதனத் திரட்சியும் அதன் பொருளாதாரத்தை உந்திச் செல்வதற்கு இன்று அடிப்படையாக உள்ளது. எனவே அனைத்து இடதுசாரி, சமூகமாற்ற சக்திகளும் நிபந்தனைகள் ஏதுமின்றி ஊழலுக்கு எதிரான இயக்கங்களை ஆதரிக்கவும் அதில் பங்கேற்கவும் முன்வர வேண்டும்.

அத்தகைய சரியான சக்திகளின் பங்கேற்பின் மூலமே ஊழலுக்கு எதிரான இயக்கங்களைப் பிற்போக்குவாதிகளால் கடத்திக் கொண்டு செல்லப்படாமல் காப்பாற்றவும் அவற்றை அவற்றின் அடுத்தகட்ட முதலாளித்துவத்திற்கு எதிரான சமூகமாற்ற இயக்கங்கள் என்ற நிலைக்கு கொண்டு செல்லவும் முடியும்.