வியட்நாம் போர் நடைபெற்ற வேளையில் அங்கு ஏராளமான வியட்நாம் மக்கள் அமெரிக்க ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டனர். அப்போது இத்தனை ஆயிரம் மக்களை எந்த வகையான மன உறுத்தலுமின்றி கொன்று குவிக்கிறீர்களே என்ற கேள்வி அமெரிக்க மக்களால் அமெரிக்க அரசை நோக்கி எழுப்பப்பட்ட போது அமெரிக்க ஆட்சியாளர்கள் அளித்த பதில், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைப் போல் ஆசிய நாடுகளில் மனித உயிரிழப்பு அத்தனை பெரிதாகக் கருதப்படுவதில்லை என்பதாகும். ஆசிய நாட்டு மக்களின் உயிர்கள் அத்தனை அற்பமாகப் போய்விட்டன அமெரிக்க ஆட்சியாளர்களுக்கு. ஆனால் இன்று நமது நாட்டின் நிலையையும் பார்த்தால் அமெரிக்க ஆட்சியாளர்கள் கூறியதில் அத்தனை உண்மையில்லாமல் போகவில்லை என்றே தோன்றுகிறது.

கடந்த 3 மாதங்களில் மட்டும் தென் தமிழ்நாட்டில் பட்டாசுத் தொழில் நிலை கொண்டுள்ள சிவகாசி மற்றும் மதுரைப் பகுதிகளில் அடுத்தடுத்து நடந்த பட்டாசு ஆலை விபத்துகளில் ஏறக்குறைய 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்னும் நூற்றுக் கணக்கானோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் விபத்துக்கள் நேரும்போது மட்டும் ஏதோ மும்முரமாக செயல்படுவதுபோல் தன்னைக் காட்டிக் கொள்ளும் வெடி பொருள் பாதுகாப்புத்துறை போன்ற துறைகளை உள்ளடக்கிய அரசு நிர்வாகம் சிறிது பரபரப்பினைக் காட்டுகிறது. அதன் பின்னர் உயிர் இழப்புகள் குறித்து கவலையேதுமின்றி பட்டாசுத் தொழிற்சாலைகளுக்குப் பொருந்தக்கூடிய விதிகள் உரிய முறையில் அமுலாகின்றனவா என்பது குறித்து சிறிதளவு கூட கண்டுகொள்ளாமல் கண்ணை மூடிக் கொள்கிறது.

ஊதுகிற சங்கை ஊதி வைக்கும் உதவாக்கரை அமைப்புகள்

விபத்துகள் நடந்தவுடன் அது குறித்து தாங்களும் சில நடவடிக்கைகள் எடுத்தோம் என்று காட்டுவதற்காக அங்கு தொழிற்சங்கங்கள் வைத்துச் செயல்படும் சி.பி.ஐ, சி.பி.ஐ(எம்) போன்ற கட்சிகள் சில நடவடிக்கைகளைப் பெயரளவிற்கு எடுக்கின்றன. அதன்பின் பெயர்ப் பலகை தொழிற்சங்கங்களாக மாறி தொழிலாளர் உரிமைக்குப் போராடும் பணியில் ஈடுபடாமல் தொழிலாளருக்கு கணக்கு முடித்துத் தரும் வேலையை வழக்கம்போல் செய்ய ஆரம்பித்துவிடுகின்றன.

கள ஆய்வு - ஒரு ஒப்புதல் வாக்குமூலம்

அதிலும் இந்த முறை சி.பி.ஐ.(எம்) கட்சியின் பட்டாசுத் தொழிற்சங்கம் ஏற்பாடு செய்த கள ஆய்வு என்ற நிகழ்ச்சி அவர்களது தொழிற்சங்க ரீதியிலான செயல்பாடின்மையை அழுத்தம் திருத்தமாக கோடிட்டுக்காட்டியது. ஒரு பகுதியில் தொழிற்சங்கம் வைத்து ஆண்டாண்டு காலமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அமைப்பு தனது பல்லாண்டு காலச் செயல்பாட்டுக்குப் பின்னரும் கூட கள ஆய்வு செய்துதான் வெடி விபத்துக்கான காரணங்களை அறியமுடியும் என்ற நிலையில் இருப்பது எதனைக் காட்டுகிறது? அதாவது அது அத்தனை தூரம் ஒரு பெயர்பலகை அமைப்பாக மாறிவிட்டது என்பதைத் தவிர?

இந்நிலையில் சிவகாசி வட்டாரத்தில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களுக்கான காரணங்களையும் மற்றும் அவ்வட்டாரத் தொழிலாளர்கள் எதிர் கொண்டுள்ள பல்வேறு பிரச்னைகளையும் எவ்வித பாரபட்சமும் ஒளிவுமறைவும் இல்லாமல் பார்க்க முயல்வது நமது உழைக்கும் வர்க்கக் கடமையாகும்.

சுரண்டலில் முத்திரை பதிக்கும் சிவகாசி முதலாளிகள்

பொதுவாக முதலாளித்துவம் லாப நோக்கை அடிப்படையாகக் கொண்டது. முதலாளிகள் லாபவெறி பிடித்தவர்கள். இது அனைவரும் அறிந்த ஒன்று. இருந்தாலும் சிவகாசி வட்டாரப் பட்டாசு முதலாளிகளைப் போல் லாபவெறி பிடித்தவர்களை வேறு எங்கும் எப்போதும் காணவே முடியாது. அவ்வாறான ஈவிரக்கமற்ற சுரண்டல் மூலம் அவர்கள் ஈட்டும் அபரிமித லாபமே பெரும் பெரும் ஆடம்பர பங்களாக்களாக அங்கு உருவாகிக் கொண்டும் சொகுசுக் கார்களாக சிவகாசி வீதிகளை வலம் வந்து கொண்டும் உள்ளன.

நிலவும் கொடும் சுரண்டலுக்கு ஒரு எடுத்துக்காட்டு இவ்வட்டாரத்தில் நிலவும் குழந்தை உழைப்பு. குழந்தை உழைப்பிற்கு எதிரான கூக்குரல் உலகின் பல மூலைகளிலிருந்தும் பல்வேறு அரங்குகளில் ஒலித்துக் கொண்டிருந்தாலும் குழந்தை உழைப்பு குறைவதற்குப் பதில் இவ்வட்டாரத்தில் அதிகரித்துக் கொண்டேயுள்ளது.

பட்டாசுத் தொழில்

சிவகாசியைப் பொறுத்தவரை அங்கு ஏறக்குறைய 700 பதிவு பெற்ற பட்டாசு ஆலைகள் உள்ளன. அவற்றில் மிகப்பெரிய ஆலைகளாக ஏ மற்றும் பி குரூப்புகளின் கீழ் பதிவு பெற்று இருப்பவை 100க்கும் மேற்பட்டவை ஆகும். இந்த ஆலைகளில் பட்டாசு தயார் செய்யும் அறைகள் சராசரியாக ஒரு ஆலைக்கு 30 முதல் 50 வரை இருக்கின்றன. சி பிரிவின் கீழ் வரும் ஆலைகளில் 20 முதல் 30 அறைகள் உள்ளன. பட்டாசு ஆலை விதிகளின்படி ஒரு அறையில் 4 பேர் மட்டுமே வேலை செய்ய வேண்டும். அதில் 10 கிலோ எடை உள்ள வெடிபொருட்கள் மட்டுமே கையாளப்பட வேண்டும். ஆனால் அவ்விதிகள் இங்கு அமுலாவதேயில்லை.

முதலாளிகள் தப்பித்துக் கொள்ள உதவும் ஒப்பந்தத் தொழிலாளர் முறை

பட்டாசு ஆலை முதலாளிகள் இப்படிப்பட்ட விபத்துக்கள் மூலம் உயிர் இழப்புகள் அடிக்கடி நேர்வதை மனதிற்கொண்டும் தொழிற்சாலை விதிகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மிகுந்த தந்திரத்துடன் கடைப்பிடித்து வரும் ஒரு முறை ஒப்பந்தத் தொழிலாளர் முறையாகும். அதாவது ஒரு சில பெரிய ஆலைகளைத் தவிர மற்ற ஆலைகளில் ஒவ்வொரு தொழிற்சாலையும் ஓரிருவரை ஒப்பந்தக்காரர்களாக தங்களது ஆலைகளில் நியமிக்கின்றன. அவர்களைக் கொண்டு பட்டாசுத் தொழிலாளரை வேலைக்கு அமர்த்துவதைச் செய்கின்றன. இவ்வாறு செய்வதன் மூலம் தொழிற்சாலைகளின் பதிவேட்டில் அங்கு வேலை செய்யும் அனைத்துத் தொழிலாளர் பெயர்களும் இடம் பெறுவதில்லை.

ஒப்பந்தத் தொழிலாளர்களையும் தங்களிடம் வேலை செய்யும் தொழிலாளராகப் பதிவு செய்ய வேண்டும் என்று அரசின் தொழிலாளர் நிர்வாகம் வற்புறுத்துவதில்லை. ஏனெனில் அவ்வாறு பதிவு செய்வதால் ஒட்டுமொத்தமாக வரும் பட்டாசுத் தொழிலாளர் எண்ணிக்கை அறைக்கு 4 பேர் எனக் கணக்கிட்டால் வருவதைக் காட்டிலும் மிகமிக அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில் ஒப்பந்தக்காரர்களிடம் ஆலையின் உற்பத்தித் தேவையை முதலாளிகள் கூறிவிடுகின்றனர். அதற்கு உகந்த விதத்தில் தொழிலாளரை ஒப்பந்தக்காரர்கள் ஆலைகளில் வேலைக்கு அழைத்து வருகின்றனர். அறைக்கு 4 பேர் மட்டுமே என்ற நியதியைக் கடைபிடிக்காமல் ஒப்பந்தக்காரர்கள் உற்பத்தித் தேவைக்கு உகந்தவிதத்தில் கூடுதல் எண்ணிக்கையில் ஒவ்வொரு அறையிலும் தொழிலாளரை வேலை செய்ய அனுமதிக்கின்றனர். அத்துடன் கூடுதல் எடை உள்ள வெடிபொருட்களையும் கையாள அனுமதிக்கின்றனர்.

வேதியியல் கற்றவரை நியமிக்காது உயிருடன் விளையாடும் போக்கு

இது தவிர இங்குள்ள பட்டாசுத் தொழிற்சாலைகளில் முறையாக வேதியியல் பயின்றவர்கள் இங்கு பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்களை அவை முறையான விகிதத்தில் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை சோதித்தறிய நியமிக்கப்படுவதில்லை. ஃபோர்மேன் என அனுபவசாலிகள் சிலர் வேதிப் பொருட்களின் தன்மைகளை அறிந்தவர்கள் என நியமிக்கப்படுகின்றனர். அரசின் வெடிபொருட்துறை அதிகாரிகள் பெயருக்கு ஒரு சில கேள்விகளை கேட்டுவிட்டு அவர்களை வேதிப்பொருள் குறித்த அறிவு பெற்றவர்கள் என அறிவிக்கின்றனர். வெடி பொருள் துறையில் நிலவும் ஊழல் இதற்குத் துணை புரிகிறது.

மேலும் புதிது புதிதாக சீனத் தொழில்நுட்பம் சார்ந்த வேதிப் பொருட்கள் தற்போது பயன்படுத்தப் படுகின்றன. அவற்றின் தன்மை வழக்கமாக சிவகாசி வட்டாரத்தில் கையாளப்படும் வேதிப் பொருட்களின் தன்மையிலிருந்து மாறுபட்டிருப்பதால் வேதிப்பொருள் குறித்த முழுமையான அறிவு பெற்றவர்கள் வேதியியல் நிபுணர்களாக நியமிக்கப்படுவது அத்தியாவசியமாகியுள்ள போதும் அரசு அதிகாரிகள் அது குறித்துக் கவனம் செலுத்துவதில்லை.

தொழிலாளரின் வாழ்க்கை பீஸ் - பீஸாவதில் பீஸ் ரேட் முறை வகிக்கும் பங்கு

பட்டாசுத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளருக்கு 8 மணி நேர வேலைக்கு இவ்வளவு கூலி என்ற நிர்ணயம் செய்யப்படுவதில்லை. மாறாக அவர்கள் செய்யும் வெடிகளின் எண்ணிக்கையை வைத்து கூலி வழங்கும் "பீஸ் ரேட்" முறையே நடைமுறையில் உள்ளது. இதனால் வேலை செய்யும் தொழிலாளருக்கு தங்களுக்கு கட்டுபடியான கூலி கிடைக்க வேண்டும் என்பதற்காக அவசர கதியில் வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. இதுவும் வெடிவிபத்துக்கள் அடிக்கடி நடைபெறக் காரணமாக உள்ளது.

எட்டாக் கனியாக ஆகிப்போன உரிய இழப்பீடு

வெடி விபத்துக்களில் எத்தனை உயிரிழப்புகள் நேர்ந்தாலும் அவற்றிற்கு உரிய இழப்பீடு தொழிலாளருக்கு வழங்கப்படுவதில்லை. இங்கு பட்டாசுத் துறையில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அரசின் ஈட்டுறுதி மருத்துவமனை (இ.எஸ்.ஐ) திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுவதில்லை. தொழிலாளர் பலரும் அத்திட்டத்தில் தாங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கேட்பதும் இல்லை. அதற்குக் காரணம் அவர்கள் பெறும் கூலி அடிமட்டமாக இருப்பதால் இ.எஸ்.ஐ-க்கு பிடித்தம் செய்யப்படும் பணமும் அவர்களது ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்பட்டால் அது வாழ்க்கைச் செலவினங்களை ஓரளவாவது எதிர்கொள்ள வழிவகை செய்வதாக இருக்கும் என்பதே. எனவே இ.எஸ்.ஐ மூலமாகத் தீர்மானிக்கப்பட்டு வழங்கப்படும் முறையான இழப்பீடு எதுவும் விபத்தில் சிக்கும் தொழிலாளரில் பலருக்குக் கிடைப்பதில்லை.

தமிழக அரசு விபத்துக்களினால் மரணம் அடையும் சாதாரண மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்கும் தொகையே அரசு நிர்வாகத்தின் ஆதரவோடு முதலாளித்துவச் சுரண்டல் மற்றும் அரசு நிர்வாகத்தின் அக்கறையற்ற போக்கினால் உயிரிழப்பிற்கு ஆளாகும் தொழிலாளருக்கான நஷ்ட ஈடாக முதலாளிகளால் வழங்கப்படுகிறது.

கையூட்டளவிற்குக் கூட இல்லாத இழப்பீடு

இந்த வகையில் தங்கள் ஆலையில் பாடுபட்டு இலாபம் குவிக்க வழிவகை செய்யும் தொழிலாளர் தங்களுக்காக வேலை செய்யும் போது வேலை செய்யும் இடத்திலேயே விபத்துக்களினால் மரணம் அடையும் சூழ்நிலையில் அவர்களுக்கு முதலாளிகள் நஷ்டஈடு எதையும் பெரும்பாலும் வழங்குவதில்லை.

ஒரு சிலர் வழங்கினாலும் அவர்கள் வழங்கும் தொகை அரசு அதிகாரிகள் மற்றும் கையூட்டுத் தொழிற்சங்கங்களின் தலைவர்களுக்கு விபத்துகள் நேரும் போது தொழிலாளரைச் சாந்தப்படுத்துவதற்காக அவர்களால் வழங்கப்படும் தொகையைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது. இத்தகைய கொடுமையும் அவலமும் ஊழலும் இவ் வட்டாரத்தில் அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டன.

முறையான இழப்பீடு மட்டுமல்ல வருங்கால வைப்பு நிதியும் பல பட்டாசுத் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் சூழ்நிலை இல்லை. எந்த இடத்திலும் நிரந்தரமாக வேலைசெய்ய இயலாமல் அவர்களை இங்கு நிலவும் ஒப்பந்தத் தொழில் முறை வைத்திருக்கிறது. எனவே குறுகிய காலமே ஒவ்வொரு இடத்திலும் தாங்கள் வேலை செய்ய நேர்வதால் பல பட்டாசுத் தொழிலாளர்கள் வைப்புநிதித் திட்டத்தின் கீழ் வரும் வாய்ப்பினை இழந்தவர்களாக இருக்கின்றனர். மேலும் ஐந்தாண்டு காலம், 6 ஆண்டு காலம் என்று பல இடங்களில் வேலை செய்யும் பட்டாசுத் தொழிலாளர் ஒவ்வொரு இடத்திலும் பிடித்தம் செய்த பி.எஃப் தொகையினை வாங்குவதற்கு பி.எஃப் அலுவலகங்களில் அல்லாட நேர்கிறது. இதனாலும் தொழிலாளர் இத்திட்டத்தில் சேர்வதில் பெரிய ஆர்வம் காட்டுவதில்லை.

இதைச் சாக்காகப் பயன்படுத்திக் கொண்டு முதலாளிகள் இத்திட்டத்தில் அவர்களைச் சேரவிடாமல் செய்து பி.எஃப், இ.எஸ்.ஐ நிறுவனங்களுக்கு தாங்கள் அதற்காக செலுத்த வேண்டிவரும் தங்கள் பங்குத் தொகையையும் கபளீகரம் செய்து கொண்டு விடுகின்றனர். பல முதலாளிகள் இ.எஸ்.ஐ, பி.எஃப்-பிற்குத் தொழிலாளர் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்துவிட்டு அதனை இ.எஸ்.ஐ, பி.எஃப் அலுவலகங்களில் செலுத்தாது அப்பட்டமான மோசடியிலும் ஈடுபடுகின்றனர். இவை எதையும் இ.எஸ்.ஐ, பி.எஃப். நிர்வாகங்கள் கண்டு கொள்வதில்லை.

இந்த ஆண்டு வெடி விபத்துக்கள் நடந்த போது கடந்த ஆண்டுகளைப் போல் அல்லாமல் நிர்வாகம் அதிக மும்முரத்துடன் செயல்பட்டது. அதன் விளைவாக கிருஷ்ணா ஃபயர் ஒர்க்ஸ் என்ற நிறுவனம் இதுவரை இல்லாத அளவிற்கு அவ்வாலையில் விபத்தின் போது இறந்த தொழிலாளர் 17 பேருக்குத் தலா 2 லட்சம் இழப்பீடாகவும் வழங்கியது. அதற்கும் காரணமில்லாமல் இல்லை. கடந்த ஆண்டு பட்டாசுத் தேவை மிக அதிகம் இருந்ததால் அத்தேவையை ஈடுகட்டுவதற்காகப் பல சிறு முதலாளிகள் பட்டாசு உற்பத்தியில் அதிகம் ஈடுபட்டனர்.

அந்நிலையில் அவர்களது உற்பத்தித் தேவையை ஈடுகட்டக் கூடுதல் தொழிலாளர் தேவைப்பட்டதால் அச்சிறு முதலாளிகள் பெரிய ஆலைகளில் வழங்கப்படுவதைக் காட்டிலும் மிக அதிகக் கூலியினைத் தொழிலாளருக்குக் கொடுக்க முன்வந்தனர். அதனால் பெரிய ஆலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களில் பலர் சிறு முதலாளிகளின் ஆலைகளுக்கு வேலைக்கு வரத் தொடங்கினர்.

அவர்கள் வழங்க முன் வந்த அந்தக் கூடுதல் கூலியைப் பெரிய பட்டாசு ஆலை முதலாளிகள் வழங்க முன் வந்திருந்தால் நிச்சயமாக அவ்வாறு தொழிலாளர் பெரிய ஆலைகளை விட்டு சிறு முதலாளிகளிடம் வேலைக்குச் சென்றிருக்கமாட்டார்கள். ஆனால் உழைத்துக் கொடுப்பவனுக்கு ஊதியத்தை மட்டும் எச்சூழ்நிலையிலும் உயர்த்திக் கொடுப்பதில்லை என்ற 910 மனநிலையில் ஊறிப்போயிருக்கும் பெரிய பட்டாசு ஆலை முதலாளிகள் அரசு அதிகாரிகளைத் தூண்டிவிட்டு சிறிய பட்டாசு ஆலை அதிபர்களுக்கு எதிராகப் பல இடையூறுகளை விளைவித்தனர். ஆண்டாண்டு காலமாக பெரிய பட்டாசு ஆலை அதிபர்கள் தங்களது தேவைகளுக்கு சிறிய பட்டாசு உற்பத்தி செய்யும் நிறுவனங்களைப் பயன்படுத்தியே வந்துள்ளனர்.

அப்போதும் சரி இப்போதும் சரி சிவகாசி வட்டாரத்தில் எந்தப் பட்டாசு ஆலை அதிபரும் முழு அளவில் பட்டாசுத் தொழிற்சாலைகளில் கடைபிடிக்கப்பட வேண்டிய விதிகளைக் கடைபிடிப்பதே இல்லை. சிறு பட்டாசு ஆலைகள் இவ் விதிகளை இன்னும் குறைவாகவே கடைபிடிக்கின்றன. இந்நிலையில் தங்களது இலாபத்திற்குப் பங்கம் வராத வரையில் இந்த விதிமுறை மீறிய சிறுபட்டாசு உற்பத்தி நிறுவனங்களை தொழில் நடத்த அனுமதித்துக் கொண்டிருந்த பெரிய ஆலை அதிபர்கள் தங்களைக் காட்டிலும் தொழிலாளருக்குக் கூடுதல் கூலி கொடுத்துத் தாங்களும் கூலியை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தத்தினை சிறு ஆலை அதிபர்கள் தங்களுக்கு ஏற்படுத்தியவுடன் அவர்களுக்கு எதிராக அரசு நிர்வாகத்தை ஏவிவிடத் தொடங்கினர். பெரிய முதலாளிகளின் பணபலமும் அரசு நிர்வாகத்தின் ஊழலுக்கு அடிபணியும் போக்கும் இதனை இலகுவாகச் செய்ய அவர்களுக்கு உதவியது.

தூண்டப்பட்ட கிடாய் தன் மார்பை நோக்கி வந்த கதை

பெரிய ஆலை அதிபர்களின் தூண்டுதலின் பேரில் சிறிய ஆலை அதிபர்கள் மேல் சீறிப்பாயத் தொடங்கிய அரசு நிர்வாகத்திற்கு அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்துகள் பல்வேறு நிர்ப்பந்தங்களைக் கொடுத்ததால் வேறு வழியின்றி தாங்கள் விதிமுறைகளைக் கறாராகக் கடைப்பிடிக்கிறோம் எனக் காட்டுவதற்காக இந்த முறை பெரிய பட்டாசு ஆலை அதிபர்களுக்கு எதிராகவும் கூட அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது போல் அங்கும் இங்கும் செயல்பட்டது. இதனை எதிர்த்து ஒரு நாள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தைக் கூட பட்டாசு ஆலை அதிபர்கள் சங்கம் அறிவிக்க நேர்ந்தது. ஆனால் இந்த நாடகம் உதவி முதலமைச்சருடன் பேச்சு வார்த்தை என்ற உச்ச கட்டக் காட்சியுடன் முடிவடந்து விட்டது.

இவ்வாறு அடுத்தடுத்து நிகழும் வெடி விபத்துக்கள் மூலம் அற்பப்புழுக்கள் போல் பட்டாசுத் தொழிலாளர் மாண்டுமடிந்து கொண்டிருக்கும் நிலையில் இதனைத் தடுக்க வழியே இல்லையா என்பது நம் முன் எழும் மிகப் பெரிய கேள்வி நிச்சயமாக இதற்கு வழி இருக்கவே செய்கிறது.

விபத்துக்கள் ஒழிய, பிரச்னைகள் தீர செய்யப்பட வேண்டியவை

அதாவது முதற்கண் பட்டாசுத் தொழிலில் ஒப்பந்த முறை முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். அத்துடன் 'பீஸ் ரேட்' உற்பத்தி முறையும் கைவிடப்பட வேண்டும். தொழிலாளருக்கு தேவை அடிப்படையிலான குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

முறையாக வேதியியல் கற்ற ஒருவராவது வேதிப் பொருட்கள் குறித்த அறிவினை தொழிலாளருக்கு வழங்க ஒவ்வொரு ஆலையிலும் நியமிக்கப்பட வேண்டும்.

விதி மீறல்களில் ஈடுபடும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஏற்படும் உயிரிழப்பு ஒவ்வொன்றிற்கும் முறையான இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அதற்கு உயிரிழக்கும் தொழிலாளியின் மீதமுள்ள வாழ்நாள், அக்கால கட்டத்திற்கு தேவை அடிப்படையிலான குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட்டால் எவ்வளவு தொகை வழங்க வேண்டி வருமோ அத்தொகையும் அத்துடன் நஷ்டஈடும் கணக்கிடப்பட்டு அதனை முதலாளிகள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் விபத்து காரணமாக மாதக்கணக்கில் மூடப்படும் ஆலைகளில் வேலை செய்யும் பிற தொழிலாளருக்கு மூடப்படும் காலத்திற்கு குறைந்தபட்சம் லே-ஆஃப் இழப்பீடாவது வழங்க வேண்டும்.

இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டாலே பெருமளவு விபத்துக்களைத் தவிர்க்க முடியும். இது தவிர அனைத்து ஆலைகளும் இ.எஸ்.ஐ, பி.எஃப், திட்டத்தின் கீழ் கட்டாயம் கொண்டுவரப்பட வேண்டும். இ.எஸ்.ஐ மருத்துவமனைகளில் நிலவும் ஊழலும் முறைகேடுகளும் மருத்துவர்கள் சம்பளம் வாங்கிக் கொண்டு பணிக்கு வராமல் இருக்கும் போக்கும் மருத்துவமனைக்கு வரும் மருந்துகளை இ.எஸ்.ஐ மருத்துவர்களும் ஊழியர்களும் கூட்டுச் சேர்ந்து கொண்டு வெளிச் சந்தைகளில் விற்கும் அவலமும் முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு இ.எஸ்.ஐ மருத்துவமனை நிர்வாகம் தொழிலாளர் பதிவு போன்ற விசயங்களில் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் போக்கும் முடிவுக்குக் கொண்டு வரப்படவேண்டும்.

வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் தாங்கள் செலுத்திய பணத்தைத் தாங்கள் திரும்பப் பெறுவதில் பல சிரமங்களை ஏற்படுத்தும் நடைமுறைகளும், அங்கு நிலவும் ஊழலும் களையப்பட வேண்டும். அப்போதுதான் தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ, பி.எஃப் நிறுவனங்கள் மீது ஏற்பட்டுள்ள அவநம்பிக்கை அகலும். அவர்களுக்குத் தேவை அடிப்படையிலான குறைந்தபட்சக் கூலி வழங்கப்பட்டால் அவர்கள் செலுத்தும் இ.எஸ்.ஐ, பி.எஃப் ஈவுத் தொகைகளும் அவர்களுக்குப் பெரிதாகத் தெரியாது.

ஆற அமர யோசித்துப் பார்த்தால் பட்டாசுத் தொழிலாளரின் வாழ்க்கையினைச் சீரழித்துச் சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கக் கூடிய இச்சூழ்நிலை ஒரு நாளில் தோன்றியதல்ல என்பதையும் தானாகவே உருவானதுமல்ல என்பதையும் எவரும் அறியமுடியும். இது எவ்வாறு ஏற்பட்டது என்பதற்கும் அதற்கு ஒரு முக்கியக் காரணம் யார் என்பதற்குமான விடை சி.ஐ.டி.யு சங்கத்தினர் இந்த ஆண்டு ஏற்பட்ட விபத்துக்களை ஒட்டி ஏற்பாடு செய்த கள ஆய்வுக் கூட்டத்தின் போது காந்தியவாதி திரு.மார்க்கண்டன் அவர்களால் முன் வைக்கப்பட்டது. அவர் அக் கூட்டத்தில் கூறினார். 'இப்பிரச்னைக்குக் காரணமாக முதலாளிகளையும் அரசு அதிகாரிகளையும் மட்டும் குறை கூறுவதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்; இதற்கு ஒரு முக்கிய காரணம் இங்கு செயல்படும் தொழிற்சங்கங்களும் தான்' என்று.

அவர் கூறியது முழுக்க முழுக்க உண்மையானதாகும். அவருக்கு இவ்விசயத்தில் தொழிற்சங்கங்களிடம் இருப்பதாகப்பட்ட குறைபாடு என்னவென்று முழுமையாக நமக்குத் தெரியாது. காந்திய சீர்திருத்தவாதியான அவர் குறைபாடாகக் கண்ட விசயங்கள் அடிப்படையில் சமூகம் முழுவதுமே மாற்றப்பட வேண்டும் என்ற கருத்தோட்டத்தின் அடிப்படையிலிருந்து வரும் காரணங்களிலிருந்து மாறுபட்டதாகவே இருக்கும். இருந்தாலும் அவர் கூற்று அடிப்படையில் சரியானது.

பார்வைக் கோளாறு ஆற்றிய பங்கு

இந்த அடிப்படையில் பார்த்தால் பட்டாசு முதலாளிகள் அனைவரும் சிறு முதலாளிகள் என்ற கருத்தின் அடிப்படையில் அவர்களின் காட்டுத்தனமான சுரண்டலையும் விதி மீறல்களையும் கண்டும் காணாததுபோல் காலங்காலமாக 'இடதுசாரித் தொழிற்சங்கங்கள்' இங்கு செயல்பட்டதன் விளைவே இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் வரைமுறையற்ற கொடுமைகளுக்கு ஒரு முக்கிய காரணம் என்பது தெரியவரும்.

உண்மையில் சிவகாசியில் உள்ள சில பட்டாசு முதலாளிகள் சீனா போன்ற நாடுகளுக்குக் கூடத் தங்களது மூலதனத்தைக் கொண்டு சென்று லாபம் ஈட்டிக் கொண்டிருக்கின்றனர். அப்படியிருந்தும் அவர்கள் சிறு முதலாளிகள் என்று இந்த இடதுசாரிக் கட்சிகளால் வரையறுக்கப்பட்டு இவர்களது நேச சக்திகளாகவும் கருதப்படுகின்றனர்.

இத் தவறான கண்ணோட்டம் இலக்கற்றதாக இவ்வமைப்புகளை ஆக்கி விடுவதால் அவற்றின் உள்ளூர் மட்டத் தலைவர்கள் படிப்படியாகச் சீரழிந்து பட்டாசு முதலாளிகளின் நலன்களுக்காகவே செயல்படுபவர்களாக நாளடைவில் ஆகிவிட்டனர். அதற்கான ஆதாயங்களையும் சாதகங்களையும் அத்தலைவர்கள் முதலாளிகளிடமிருந்து அவ்வப்போது கையூட்டுப் பெற்று அனுபவித்துக் கொண்டும் உள்ளனர்.

செங்கொடியை உயர்த்திக் கொண்டு முதலாளிகளைத் தேசிய முதலாளி, சிறு முதலாளி என்று தங்களுக்கு வசதிப்படும் விதத்திலெல்லாம் வகைப்படுத்தி அவர்களுக்கு எதிரான இயக்கத்தை உள்ளிருந்தே முடமாக்கும் இவர்களின் நடைமுறையே இன்று தோன்றியுள்ள கொடுமையான நிலைக்கு ஒரு முக்கிய காரணமாகும்.

சரியான பார்வை

ஒரு உண்மையான உழைக்கும் வர்க்க இயக்கம் உழைக்கும் வர்க்கத்தின் நலனுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். அந்த அடிப்படையில் உழைப்பாளிக்கு குறைந்தபட்சமாக தேவை அடிப்படையிலான குறைந்தபட்ச ஊதியமாவது வழங்கப்படுகிறதா என்பதையே குறிப்பாகப் பார்க்க வேண்டும்.அவ்வாறு வழங்கப்பட வில்லை என்றால் அதற்கான இயக்கத்தினை எந்த வகையான சமரசமும் இன்றி வழங்கத் தவறும் முதலாளிகளுக்கு எதிராக சிறிய முதலாளி, பெரிய முதலாளி என்ற பாகுபாடு பாராமல் நடத்தத் தயாராக வேண்டும். இதனால் சிறு முதலாளிகள் நலிவடைந்துவிடுவார்களே என்ற கவலை நமக்கு அவசியம் இல்லாத ஒன்று. தேவைப்பட்டால் அவர்களது பிரச்னைகளுக்காக அவர்களிடம் பட்டாசு வாங்கும் பெருமுதலாளிகளையும் வணிகர்களையும் அவர்கள் எதிர்த்துப் போராடி அவர்களது தேவைகளை ஈடுகட்டிக் கொள்ளட்டும் என்பதே இதைப் பொறுத்தவரை ஒரு சரியான உழைக்கும் வர்க்க நிலையாக இருக்க முடியும்.

அடிமட்டமான குறைந்தபட்ச பீஸ் -ரேட் கூலி

இந்த அடிப்படையில் செயல்படாதவையாகவே இந்தப் போலி இடதுசாரிக் கட்சிகளின் தொழிற் சங்கங்கள் இருக்கின்றன. அதற்கான ஒரு எடுத்துக்காட்டு பட்டாசுத் தொழிலில் 'பீஸ் ரேட்' -க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்சக் கூலியாகும்.
இந்தக் குறைந்தபட்சக் கூலி இத்தகைய இடதுசாரித் தொழிற்சங்கங்களின் தலைவர்களையும் உறுப்பினர்களாகக் கொண்ட குறைந்தபட்சக் கூலி நிர்ணயக் கமிட்டியினால் தான் முடிவு செய்யப்படுகிறது. இவ்வாறு நிர்ணயிக்கப்படும் கூலி எவ்வளவு குறைவாக உள்ளது என்றால் கடந்த ஆண்டு எந்தவகையான போராட்டமும் இன்றி பட்டாசு முதலாளிகளே சிவகாசி வட்டாரத்தில் தொழிலாளருக்கு சாதாரணமாக வழங்கிய கூலியைக் காட்டிலும் பல மடங்கு குறைவாக உள்ளது.

ஊழலினாலும் மக்கள் ஆதரவு மனநிலை அறவே இல்லாமல் போனதாலும் மரத்துப்போன அரசு அதிகார வர்க்கத்தினரோடு நட்சத்திர ஓட்டல்களில் தங்கி வர்க்க உணர்வைச் சிறிதும் பிரதிபலிக்காமல் பட்டாசு முதலாளிகளுக்குச் சாதகமாக, முதலாளிகள் தாமாகவே தந்த கூலிக்கும் கூடக்குறைவான கூலியினை இத்தலைவர்கள் குறைந்த பட்சக் கூலியாக நிர்ணயித்து முதலாளிகளுக்கு உதவும் வேலையையும், தொழிலாளரின் வயிற்றிலடிக்கும் காரியத்தையும் செய்துள்ளனர் என்றால் அதைக்காட்டிலும் இவர்களின் வர்க்கப் பார்வையற்ற போக்கிற்கு பொருத்தமான எடுத்துக்காட்டாக எதாவது இருக்கமுடியுமா?

எனவே அடிக்கடி பட்டாசு ஆலைகளில் நடக்கும் விபத்துக்கள் மற்றும் பட்டாசுத் தொழிலாளரின் பிரச்னைகள் ஆகியவை குறித்து ஆய்வுகள் செய்யும் எவரும் இவை அனைத்தையும் கணக்கிலெடுத்துக் கொண்டே முடிவுகளுக்கு வரவேண்டும். பட்டாசு முதலாளிகளின் சட்டவிரோத, விதிமுறைகளைச் சிறிதும் மதிக்காத, காட்டுத்தனமான சுரண்டலையும், அவர்களின் ஏவலர்களாகச் செயல்படும் நிலைக்கு - துறையில் நிலவும் புரையோடிப் போன ஊழலினால் தரம் தாழ்ந்துவிட்ட அரசு நிர்வாகத்தையும் எதிர்த்து தொழிற்சங்க ரீதியில் மட்டுமின்றி இவ்விசயத்தில் அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்களையும், பொது மக்களையும் ஈடுபடுத்தி மகத்தான இயக்கங்கள் கட்ட முயல வேண்டும்.

அதன் மூலம் மட்டுமே இப்பிரச்னையின் விளிம்பினையாவது தொடமுடியும். அதை விடுத்து பல அமைப்புகளால் அரசால் தட்டிக் கொடுக்கப்பட்டு நடத்தப்படும் ஜனரஞ்சகமான குழந்தை உழைப்பு எதிர்ப்பு என்பன போன்ற பெயரளவிலான, இயக்கம் என்ற பெயரில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள், பல தொழிலாளி வர்க்கப் பார்வையற்ற சீர்திருத்தவாத முதலாளிகளின் தரகு அமைப்புகளுக்குச் சுயவிளம்பரம் பெற்றுத் தந்து பிரச்னை திசை திருப்பிவிடப்பட உதவுமேயன்றி பட்டாசுத் தொழிலாளர் பிரச்னையின் தீர்விற்கு எந்த வகையிலும் உதவாது.