முதலாளித்துவ உலகம் முழுவதையும் நடுங்கவைத்துள்ள ஒரு மிகப்பெரும் பொருளாதார நெருக்கடி தற்போது தோன்றியுள்ளது. சிலகாலமாகவே முதலாளித்துவ உலகின் தலைமை நாடான அமெரிக்காவில் உற்பத்தி தேக்கம் (Recession) வருவதற்கான சுவடுகள் தோன்றியுள்ளதாக பொருளாதார நிபுணர்களும் பத்திரிக்கைகளும் கூறி வந்தன. அதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே இங்கிலாந்து நாட்டில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கியான நார்தன் ராக் என்ற வங்கி திவாலாகும் நிலைக்கு வந்தது. அதனை இங்கிலாந்து அரசு நாட்டுடமையாக்கி திவால் நிலையிலிருந்து மீட்டெடுத்தது. இங்கிலாந்தில் தொடங்கி ஸ்பெயின் போன்ற நாடுகளிலும்கூட வீடுகளின் விலைகள் மளமளவென சரியத்தொடங்கின. இந்த மோசமான அறிகுறிகள் தற்போது மிகப்பெரும் நெருக்கடிகளாக வெளிப்பட்டுள்ளன.

நெருக்கடியின் தாக்கத்தைக் கண்டு பீதி அடைந்த முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் இனி முதலாளித்துவம் தப்பிக்குமா என்னும் அளவிற்கு புலம்பத் தொடங்கினர். தோன்றிய இந்த நெருக்கடி பங்குச் சந்தையில் பங்குகளின் சரிவின் மூலம் வெளிப்பட்டது. பங்கு வர்த்தகத்தில் ஈடுபடாத பலரிடையே இந்த நெருக்கடி என்ற கூற்றும் அதைத் தொடர்ந்து முதலாளித்துவ சிந்தனையாளர்களிடையே தோன்றிய பதைபதைப்பும் இந்த நெருக்கடி புரிந்து கொள்ளமுடியாத புதிர் என்ற எண்ணத்தையே தோற்றுவித்தது. அதனால் பொருளாதாரத்தை மீட்டெடுக்கிறோம் என்ற பெயரில் பல்வேறு அரசுகள் பொதுப்பணத்தை செலவிட்டு இந்த நெருக்கடியை சமாளிக்க முயன்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடி நெருக்கடியை தீர்க்க விவாதங்கள் மூலம் வழி தேடியும் வருகின்றனர்.

திவாலாகிப் போன நிதி, காப்பீட்டு நிறுவனங்கள்

இந்நெருக்கடியின் விளைவாக அமொரிக்காவின் ஏ.ஐ.ஜி என்ற இன்சூரன்ஸ் நிறுவனமும், லேமன் என்ற நிதி நிறுவனமும் திவாலாகும் நிலைக்கு வந்ததும் அவற்றை அவை சிக்கியிருந்த நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்க ஏழாயிரம் லட்சம் டாலர் பொதுப்பணத்தை பயன்படுத்தப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ்புஷ் அறிவித்தார்.

மோசடித்தனமான சில நிதி நிறுவனங்களின் செயல்பாட்டினால் விளைந்த இந்த நெருக்கடிக்கு எவ்வாறு பொதுப்பணத்தை செலவிடலாம் என்று அமெரிக்கா முழுவதும் எதிர்ப்புக் குரல்கள் கிளம்பின. முதலில் பிரதிநிதிகள் சபை இத்தீர்மானத்தை நிறைவேற விடவில்லை. அதன் பின்னர் மிகவும் சிரமப்பட்டு இந்த ஏற்பாட்டிற்கு ஜார்ஜ்புஷ்-ம் அவரது கூட்டமும் ஒப்புதல் பெற்றது.

நெருக்கடியின் உச்சத்தில் இங்கிலாந்து

அமெரிக்காவைத் தவிர்த்த ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக இங்கிலாந்து நாடு மிகப்பெரிய நெருக்கடியையும், உற்பத்தி தேக்கத்தையும் சந்தித்துக் கொண்டுள்ளது. அதன் மொத்த உள்நாட்டு வளர்ச்சி குறியீட்டளவில் (GDP) 0.5 சதவீதம் இந்த ஆண்டு குறைந்துள்ளது.

அனைத்து தொழில்களிலும் உற்பத்தி தேக்கம் ஏற்பட்டு தொழிலாளரை ஆள்குறைப்பு செய்யும் நிலையில் பல நிறுவனங்கள் உள்ளன. வேலையில்லா திண்டாட்டம் 20 லட்சம் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. வீட்டுக் கடன் செலுத்த இயலாமல் பத்தாயிரக் கணக்கில் வீடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. ஆனால் அவற்றை வாங்குவதற்கு யாரும் இல்லாததால் வீட்டுச் சொந்தக்காரர்களுக்கே தவணை செலுத்தும் விதிகளை தளர்த்தி அவற்றை மீண்டும் கொடுத்துவிடலாமா என்று அந்நாட்டில் வங்கிகள் திட்டமிட்டுக் கொண்டுள்ளன.

வேலையிழந்த பொதுமக்கள் மற்றும் வீடுகளை இழந்த குடும்பங்கள் கண்ணீரும் கம்பலையுமாக புலம்பும் காட்சிகள் பி.பி.சி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நிரப்புகின்றன. இந்த நெருக்கடி கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் முன்னர் சோவியத் யூனியனுடன் இணைந்திருந்து தற்போது அதிலிருந்து பிரிந்து சென்று தனி நாடுகளாக தங்களை அறிவித்துக் கொண்டுள்ள உக்ரேன், ஜார்ஜியா போன்ற நாடுகளையும் கூட விட்டுவைக்கவில்லை.

கூடுமானவரை மூடிமறைத்த இந்திய மந்திரிகள்

இந்த நெருக்கடி வெடித்தவுடன் முதலில் வர்த்தக அமைச்சர் கமல்நாத்தும், அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரமும் இது நமது பொருளாதாரத்தை ஒன்றும் பாதிக்கப்போவதில்லை. அமெரிக்க வங்கிகளைப் போல் தன்னிச்சையாக செயல்பட நமது வங்கிகள் அனுமதிக்கப்படவில்லை; மிகவும் கடுமையான ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் நமது வங்கிகளுக்கு உள்ளன; எனவே பிரச்னை எதுவும் நமது பொருளாதாரத்தை பொறுத்தவரை இல்லை என்று கூறினர்.

சி.பி.ஐ (எம்)-ன் தற்பெருமை

அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்தை மையமாகக் கொண்டு அரசிற்கான ஆதரவை திரும்பப் பெற்ற சி.பி.ஐ, சி.பி.ஐ(எம்) போன்ற கட்சிகள், நிதி அமைச்சர் மற்றும் வர்த்தக அமைச்சரின் மேற்கண்ட குரல்களை பிரதிபலிக்கும் விதத்தில் நமது பொருளாதாரம் அமெரிக்காவைப் போல் அத்தனை பாதிப்பிற்கு ஆளாகாதிருப்பதற்கான காரணம் தங்களது கட்சிகள் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை அத்தனை துரிதமாக அமுல்படுத்தவிடாமல் முட்டுக்கட்டை போட்டதாலேயே என்று தற்பெருமை அடித்துக் கொண்டன.

அமெரிக்க பனை மரத்தில் தேள் கொட்டியதும் இந்தியத் தென்னை மரத்தில் நெறிகட்டியதும்

இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த சில நாட்களிலேயே இந்திய பங்குச்சந்தையும் சரிவுகண்டது. அமெரிக்க நிதி நிறுவனங்கள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களோடு வர்த்தக இணைப்புகளால் கட்டுண்டிருந்த டாடா-ஏ.ஐ.ஜி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி குறித்து ஒரு மிகப்பெரிய கேள்விக்குறி முதலீட்டாளர்கள் மனதில் எழுந்தது. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் ஏ.டி.எம் களுக்கு முன்பு ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை எடுத்துவிடவேண்டும் என்ற பீதியில் திரண்டனர். அதனைத் தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பைலட்டுகள் உள்பட பல ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யப் போவதாக அறிவிப்பு வெளியிட்டது.

கல்லூரி வளாகங்களுக்குள் முகாம்கள் நடத்தி நல்ல மாணவர்களை வேலைக்கு தெரிவு செய்த பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அவர்கள் கூறியிருந்த காலக்கெடுவுக்குள் தெரிவு செய்யப்பட்டவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ளாது காலம் கடத்தத் தொடங்கின. ஏற்கனவே உள்ள ஊழியர்களுக்கு சலுகைகளும் சம்பள உயர்வும் ரத்து செய்யப்பட்டன.

அதுவரை அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தம் கையயழுத்தான கையோடு பல்வேறு நாடுகளுக்கு புளகாங்கிதத்துடன் வருகைபுரிந்து கொண்டிருந்த பிரதமர் மன்மோகன்சிங் இந்த நெருக்கடி குறித்து முதல் முதலாக தன் கருத்தை வெளியிட்டார். "இந்த நெருக்கடி அமெரிக்கா, ஐரோப்பாவை மட்டுமல்ல அனைவரையும் பாதிக்கக் கூடிய நெருக்கடி; எனவே நெருக்கடி சூழ்ந்த அந்நாடுகளோடு நாமும் ஒருங்கிணைந்து இந்த நெருக்கடியை கூட்டாக எதிர்கொள்ள வேண்டும்' என்று கூறினார்.

"இதற்கு முன்னர் அமெரிக்காவில் தோன்றிய பல நெருக்கடிகளை நாம் ஓரளவு நமது பொருளாதார மேம்பாட்டிற்காக பயன்படுத்தக்கூட செய்திருக்கலாம். ஆனால் இப்போது தோன்றியுள்ள நெருக்கடியை சமாளிக்க அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுடன் நாம் தோளுடன் தோள் கொடுத்து நிற்க வேண்டும்' என்று கூறத்தொடங்கினார்.

அத்துடன் தற்போது இந்திய பொருளாதாரத்தில் நிலவுகிற பணப்புழக்க தட்டுப்பாட்டைப் போக்க வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய சி.ஆர்.ஆர் என்று கூறப்படும் பயன்படுத்தாது பாதுகாத்து வைக்கப்பட்ட கையிருப்பில் இருந்து 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை வெளியே விடவும் நடவடிக்கை எடுத்தார். சில நாட்கள் கழித்து இந்திய முதலாளிகளின் அமைப்பான 'அசோசம்' கூறியது: நமது தகவல் தொழில்நுட்ப பி.பி.ஓ நிறுவனங்களும் அவற்றுடன் பல விமான போக்குவரத்து நிறுவனங்களும்கூட அவர்களது மொத்த உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும் மனித உழைப்புத்திறனில் 25 சதவீதத்தை குறைக்க வேண்டிய கட்டாய நிலையில் உள்ளன என்று.

அவ்வறிக்கை பொறுப்பற்றது என்று நமது நிதியமைச்சர் கூறியுள்ளார். அவரும் அவரது அரசாங்கமும் மக்களை ஒரு பொய்யான மாயையில் ஆழ்த்த விரும்புவதற்கு எதிரானதாக இக்கூற்று இருந்ததால் அதனை பொறுப்பற்றது என்றுதானே அவர் சொல்வார்.

நாணய மதிப்புகளில் தலைதூக்கிய வினோத நிலை

இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் இதைத் தொடர்ந்து இன்னும் ஒரு விநோதமான நிலை தோன்றியுள்ளது. நெருக்கடியின் உச்சகட்டத்தில் இருக்கிறது அமெரிக்க நாடு; மற்ற நாடுகளில் நெருக்கடி அமெரிக்காவில் இருக்கும் அளவிற்கு இல்லை. இருந்தாலும் மற்ற நாடுகளின் நாணய மதிப்புகள் அமெரிக்க நாணய மதிப்போடு ஒப்பிடுகையில் மிகவேகமாக குறைந்து வருகின்றன. நான்கு மாத காலத்திற்கு முன்பு இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு 37 ரூபாய் என்ற விகிதத்தில் இருந்தது. ஆனால் தற்போது இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து ஒரு டாலருக்கு 49 ரூபாய் என்ற அளவில் உள்ளது. அதைப் போல இங்கிலாந்து நாட்டின் நாணயமான பவுண்ட் ஸ்டர்லிங் ஒன்று மூன்று மாதங்களுக்கு முன்பு இரண்டு அமெரிக்கன் டாலர் மதிப்புடையதாக இருந்தது. தற்போது அது 1.65 டாலராக குறைந்துள்ளது.

அதாவது மிகப்பெரும் நெருக்கடியில் இருக்கும் ஒரு நாட்டின் நாணயத்தின் மதிப்பு அதைக்காட்டிலும் குறைவான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நாடுகளின் நாணயங்களின் மதிப்பைக் காட்டிலும் அதிகரித்துக் கொண்டேயுள்ளது. இது உலக வர்த்தகத்தில் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட நாணயம் அமெரிக்க டாலரே என்ற நிலை நிலவுவதால் ஏற்பட்டுள்ள ஒரு முன்னுக்குப்பின் முரணான சூழ்நிலை.

எனவே அமெரிக்க டாலருக்கு அத்தகைய உன்னத உயரத்தைக் கொடுத்திருந்த பிரட்டன்உட்ஸ் ஏற்பாட்டை தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அதிலிருந்து மாறுபட்ட வேறொரு புது திட்டத்தையும், வழிமுறையையும் உருவாக்க வேண்டுமென்றும் ஐரோப்பிய நாடுகள் ஒருமித்த குரலில் கூறிவருகின்றன. இவ்வாறு கூறுகின்றனவே தவிர அம்மாற்றுக்கான திட்ட உருவரை (Blue Print) எதையும் அவற்றால் கூற முடியவில்லை.

மேலே நாம் விவரித்திருப்பது தற்போது நிலவிவரக்கூடிய உலகப் பொருளாதார நெருக்கடியின் ஒரு சிறிய படப்பிடிப்பாகும். சாதாரண மக்களைப் பொறுத்தவரை இந்த நெருக்கடி, அதன் காரணம் ஆகியவை முழுமையாக புரிந்துகொள்ள முடியாத ஒன்று என்பது போலவே காட்சியளிக்கிறது. ஒரு புறம் சாதாரண மக்களிடம் இதற்கான காரணம் என்ன என்பதை தர்க்க பூர்வமாக எடுத்துரைப்பது தமக்கு ஒரு பெரிய சிக்கலையும் அபாயத்தையும் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என்பதால் சாதாரண மக்கள் புரிந்து கொள்ளக்கூடாது என்ற எண்ணத்துடனும் முதலாளித்துவ பத்திரிக்கைகளும், ஊடகங்களும் இவ்விசயத்தை பல புதிர்கள் நிறைந்ததாக காட்டுகின்றன.

இந்நிலையில் நமது நோக்கம் வங்கிகள், பங்குச் சந்தை நிதி நிறுவனங்களில் தலைகாட்டியுள்ள இந்த நெருக்கடிக்கான காரணமென்ன? அது எதன் மூலம் எவ்வாறு வெளிப்பட்டது? நாம் மேலே விவரித்த நாணயமதிப்பு விகிதங்களில் நிலவும் விநோத நிலைகளுக்கான காரணம் என்ன? இதனை தீர்க்க முதலாளித்துவ பொருளாதார நிபுணர்கள் தங்கள் கைவசம் வைத்திருக்கும் தீர்வுகள் என்ன? அவை உண்மையில் நிரந்தர தீர்வு எதையும் கொண்டுவரக் கூடியவையா? என்பனவற்றை பார்ப்பதாகும்.

நெருக்கடிகளும் முதலாளித்துவமும்

தற்போது முதலாளித்துவ உலகம் சந்தித்துள்ளது முதல் நெருக்கடியல்ல. முதலாளித்துவம் தோன்றிய காலத்தில் இருந்து இன்றுவரை அது முப்பதிற்கும் மேற்பட்ட நெருக்கடிகளை சந்தித்துள்ளது. மிகப் பரந்த அளவில் வகைப்படுத்தினால் தற்போது முதலாளித்துவம் சந்தித்துக் கொண்டுள்ள நெருக்கடி காலகட்டம் மூன்றாவது உலகப் பொது நெருக்கடி காலகட்டமாகும்.

அதாவது முதலாவது உலகப்பொது நெருக்கடி முதல் உலக யுத்தத்திற்கு வழிவகுத்தது. அதைப்போல் இரண்டாவது உலகப் பொது நெருக்கடி இரண்டாவது உலக யுத்தத்திற்கு வழிவகுத்தது. அதாவது ஏகாதிபத்திய நாடுகள் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள பல நாடுகளை தங்களது காலனியாக ஆக்கி சுரண்டுவதற்காக நடத்தப்பட்டவையே முதல் இரண்டு உலகயுத்தங்களாகும். அதாவது தங்களது சந்தை தேவைக்காக உலக ஏகாதிபத்திய நாடுகள் உலக நாடுகளை மறுபங்கீடு செய்து கொள்வதற்காக உருவாக்கிய வையே உலக யுத்தங்களாகும்.

இரண்டாவது உலக யுத்தத்தின் முடிவில் உலகின் முதல் நிலை இராணுவ, பொருளாதார சக்தியாக சோசலிச சோவியத் யூனியன் உருவானது. இது ஏகாதிபத்திய நாடுகளின் காலனியாதிக்க பிடியில் இருந்த பல நாடுகள் விடுதலை பெறுவதற்கு உதவியது. அவ்வாறு விடுதலையடைந்த நாடுகளில் மக்கள் ஜனநாயகங்களாக மாறிய கிழக்கு ஐரோப்பிய நாடுகளைத் தவிர பிற நாடுகள் அனைத்தும் தத்தம் நாடுகளில் சொந்த முதலாளித்துவ அரசுகளை வளர்த்தெடுக்க தலைப்பட்டன.

உலக ஏகாதிபத்தியத்தை, பொருளாதார, சமூக மற்றும் இராணுவ ரீதியாக எதிர்கொள்ளும் வகையில் சோசலிச முகாம் ஒன்று உருவானது. அது மீண்டும் காலனி ஆதிக்கத்தை உலகில் எங்கும் ஏகாதிபத்திய நாடுகள் ஏற்படுத்த முடியாது என்ற நிலைக்கு ஏகாதிபத்தி யங்களைத் தள்ளியது.

மாற்றுப் பொருளாதாரமும் போட்டிப் பொருளாதாரமும்

அதற்கு முன்பு நிலவிய உலகம் முழுவதும் ஏகாதிபத்திய சுரண்டலின் வேட்டைக்காடு என்ற நிலை மாறி சோ­லிஸ நாடுகளில் மாற்றுப் பொருளாதாரம் ஏற்பட்டது. அது மட்டுமின்றி ஏகாதிபத்திய நாடுகளின் பொருளாதாரத்திற்கு ஓரளவு போட்டி பொருளாதாரமாக புதிதாக விடுதலையடைந்த நாடுகளின் புதிதாக வளர்ந்த முதலாளித்துவப் பொருளாதாரங்கள் மாறின. எனவே புதிதாக காலனிகளை ஏற்படுத்தி சுரண்டும் பழைய வழிமுறையும் அதன் மூலம் ஏகாதிபத்திய நாடுகளுக்கு இருந்த நெருக்கடிக்கான ஒருவகைத் தீர்வும்கூட இன்று இல்லாமல் போய்விட்டது. இந்நிலையில் தற்போதைய மூன்றாவது பொது நெருக்கடி காலகட்டத்தில் உலக முதலாளித்துவப் பொருளாதாரம் சந்தித்துக் கொண்டுள்ளது அனுதினமும் ஆழமாகிக் கொண்டுவரும் நெருக்கடியாகும்.

தொடரும் நெருக்கடி

உண்மையில் இந்த காலகட்டத்தில் எப்போதும் நெருக்கடி இருந்துகொண்டே உள்ளது. இருந்தாலும் நெருக்கடி அதன் கோர வடிவத்தில் வெளிப்படும் சமயங்களில் தவிர வேறு சமயங்களில் முதலாளித்துவ பத்திரிக்கைகளும், ஊடகங்களும் அவற்றைப் பற்றி எழுதுவதுமில்லை, அவற்றை வெளிப்படுத்துவதுமில்லை. இதற்கான காரணம் அனைவரும் அறிந்ததே.

அதாவது இருக்கக்கூடிய நெருக்கடிகளை உண்மையாக வெளிக்கொண்டுவந்தால் அது இந்த அமைப்பு குறித்த உண்மை நிலவரத்தை மக்கள் உணருமாறு செய்துவிடும். மக்களில் உணர்வுபெற்ற ஒரு பகுதியினராவது இதற்கு மாற்று எதுவும் கிடையாதா என்று எண்ணத் தொடங்கிவிடுவர். எனவே அவர்கள் இந்த நெருக்கடியை எப்படி எல்லாம் மூடி மறைக்க முடியுமோ அப்படி எல்லாம் மூடிமறைக்கவே விரும்புகிறார்கள்.

அவ்வாறு தவிர்க்க முடியாமல் நெருக்கடியை வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலை தோன்றும் போதும் இந்த சுரண்டல் முதலாளித்துவ அமைப்பிற்கு பங்கம் நேர்ந்துவிடாமல் இருக்கும் வகையிலான தீர்வுகளையே முன்வைக்கிறார்கள். அவை, பல நியாயமான கேள்விகளுக்கு தர்க்க ரீதியாக பதில் கூற முடியாதவையாக இருக்கின்றன. அதனால்தான் அவற்றை நிலை நிறுத்துவதற்கு ஏராளமான சுற்றி வளைத்துப் பேசும் போக்குகளையும் புதுப்புது சொல்லாடல்களையும் உருவாக்கி சாதாரண மக்கள் இந்நெருக்கடிக்கான காரணங்களையும் அவற்றிற்கு அவர்கள் கூற முன்வரும் தீர்வுகளையும் புரிந்து கொள்ளமுடியாத வகையில் அவற்றைக் கூறுகிறார்கள்.

நெருக்கடிக்கான காரணம் உற்பத்தி முறையே

உண்மையில் இந்த நெருக்கடிக்கான காரணம் முதலாளித்துவ அமைப்பும் அதன் லாப நோக்க உற்பத்தி முறையுமே ஆகும். இந்த அமைப்பில் உற்பத்தியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களாக விளங்கும் முதலாளிகள் அதிக லாபம் ஈட்டுவதை நோக்கமாகக் கொண்டு தங்களால் இயன்ற வகையிலெல்லாம் உழைப்புத் திறனை சுரண்டுகின்றனர். அதனால் பரந்துபட்ட மக்கட்பகுதியினர் தங்களது தவிர்க்கவே முடியாத அத்தியாவசியத் தேவைகளைத் தவிர வேறு பொருட்களை வாங்கும் அளவிற்கு வருவாய் கொண்டவர்களாக இல்லை.

அதாவது முதலாளித்துவம், பெரும்பகுதி தொழிலாளரை அடுத்த நாள் அவர்களுக்கு வேலை செய்து கொடுப்பதற்குத் தேவைப்படும் சக்தியைத் தருவதற்கு எவ்வளவு ஊதியம் வழங்கினால் போதுமோ அவ்வளவையே அவர்களின் ஊதியமாக தீர்மானிக்க விரும்புகிறது. எப்போதும் தட்டுப்பாடின்றி உயர்ந்துவரும் தன்மை கொண்டதாக உழைப்பாளர் எண்ணிக்கை உள்ளதால் முதலாளித்துவம் தனது இந்த நோக்கத்தை பெரிய அளவில் சுலபமாக நிறைவேற்ற முடிகிறது.

இதனால் சமூகத்தில் வாங்கும் சக்தி குறைவு பரந்துபட்ட மக்களிடம் தொடர்ச்சியாக நிலவிக் கொண்டே இருக்கிறது. பகட்டான விளம்பரங்கள் மூலம் நுகர்வோர் கலாச்சாரத்தை மக்களிடையே ஏற்படுத்தி பொருட்களின் விற்பனையை அதிகப்படுத்துவது போன்ற அனைத்து வேலைகளையும் செய்கின்றனர். இருந்தும் கூட இந்த வாங்கும் சக்தி குறைவு முதலாளித்துவ பொருளாதாரத்தை வாட்டி வதைக்கவே செய்கிறது.

மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாததால் அமெரிக்கா போன்ற நாடுகள் இராணுவ தளவாட உற்பத்தியில் தங்களை பெரிதும் ஈடுபடுத்தி இராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்து குவித்தன. ஏனெனில் இராணுவ தளவாடங்களின் விற்பனை சாதாரண மக்களின் வாங்கும் சக்தியோடு தொடர்புடையது அல்ல. அவற்றை வாங்குபவர்கள் அரசுகளே. ஆனால் ஆயுத வியாபாரமும் தடையின்றி நடைபெற வேண்டுமானால் அப்பொருட்களின் பயன்பாட்டை அதிகப்படுத்த சண்டைகளும் யுத்தங்களும் நடந்துகொண்டே இருக்கவேண்டும்.

அது போன்ற பிற நாடுகளுக்கிடையே சச்சரவுகளையும் உரசல்களையும் ஊக்குவித்து நாடுகளுக்குள் பகைமையை உருவாக்கி ஆயுத வியாபாரம் செய்யும் வேலைகளையும் அமெரிக்கா செய்தது; இப்போதும் செய்து வருகிறது. இருந்தாலும் கூட தங்குதடையில்லாத ஆயுத வியாபாரத்தை உருவாக்கி வளர்க்க தேவைப்படும் அளவிற்கு போர்களை அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் உருவாக்க முடியவில்லை.

மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்தாலும் மறுபுறத்தில் தொழிலாளரின் உழைப்பைச் சுரண்டி அதன் விளைவாகக் கிடைக்கும் உபரியானது, லாபம் என்ற பெயரில் முதலாளிகளின் கைகளில் குவிகிறது. அந்த உபரிமூலதனம் முதலாளித்துவ அமைப்பில் ஏதாவது ஒரு வகையில் லாபம் ஈட்டத்தக்க வகையில் மறுமுதலீடு செய்யப்பட வேண்டும்.

அவ்வாறு அந்த லாபம் முழுவதும் ஆக்கப்பூர்வமாக மக்களுக்கு பயன்படும் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்களில் முதலீடு செய்யப்பட வாய்ப்பிருந்தால் உற்பத்தி முறையில் சிக்கல் எதுவும் தோன்றாது. ஆனால் அவ்வாறு மறுமுதலீடு செய்து மக்கள் பயன்படுத்தும் பொருட்களை உற்பத்தி செய்தால் மக்களால் அவற்றை வாங்கி பயன்படுத்த முடியும் அளவிற்கு அவர்களுக்கு வருவாய் இருக்கவேண்டும். ஆனால் நாம் ஏற்கனவே பார்த்தவாறு மிகப்பெரும்பாலான மக்களுக்கு இந்த அமைப்பில் வழங்கப்படும் ஊதியம் அவர்கள் மறுநாள் உழைப்பதற்கும் அவர்களது உடலில் உயிர் ஒட்டிக் கொண்டிருப்பதற்கும் எவ்வளவு பணம் தேவையோ அந்த அளவே உள்ளது.

நிதி மூலதனமாக மாறும் உபரி மூலதனம்

இதன் காரணமாக முதலாளிகள் கையில் இருக்கும் உபரிமூலதனம் மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் உற்பத்தியில் முழுமையாக மறுமுதலீடு செய்யப்பட முடிவதில்லை. எனவே முதலாளிகள் வசம் பயன்படுத்தப்படாத உபரி மூலதனம் என்பது நிறைய தேங்கும் சூழ்நிலை உருவாகிறது. ஆனால் முதலாளித்துவ அமைப்பில் மூலதனம் என்பது எதிலும் பயன்படுத்தப்படாமல் வெறுமனே சும்மா இருக்கவே முடியாது. எனவே அப்படிப்பட்ட உபரி மூலதனம் நிதி மூலதனமாக மாறுகிறது. அது உலகின் எந்த மூலையில் மூலதனத்தேவை ஏற்பட்டாலும் அங்கு அதன் பயன்பாட்டைத் தேடி அலைகிறது. இந்தப் போக்கின் காரணமாகவே பொதுவாக உலகம் முழுவதிலுமான மூலதனப்பரவல் நடைபெறுகிறது.

அவ்வாறு எளிதான வகையில் மூலதனப்பரவல் நிகழ முடியாத சூழ்நிலையில்தான் இரண்டு பெரும் உலக யுத்தங்களும் தோன்றின. இங்கிலாந்திற்குப் பின்னால் முதலாளித்துவ வளர்ச்சி ஏற்பட்ட ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகள் தங்கள் நாட்டு முதலாளிகளின் உபரி மூலதனத்தை உலகின் பல பின்தங்கிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய விரும்பின. ஆனால் அந்நாடுகளோ முதலாளித்துவ தொழில் உற்பத்தி முறை முதன்முதலில் தோன்றிய இங்கிலாந்து போன்ற நாடுகளின் காலனிகளாக ஏற்கனவே இருந்தன. அந்நாடுகளை தங்களது மூலதன ஏற்றுமதிக்கு தங்குதடையின்றி பயன்படும் நாடுகளாக மாற்ற அதாவது உலகை தங்களுக்குள் சமாதானப்பூர்வமாக மறுபங்கீடு செய்து கொள்ள முடியவில்லை.

இந்நிலையில்ஜெர்மனி போன்ற நாடுகள் இங்கிலாந்து போன்ற ஏகாதிபத்தியங்களின் காலனிகளாக இருந்த நாடுகளை தங்களது காலனிகளாக்க விரும்பின அதனாலேயே இரண்டு பெரும் உலகயுத்தங்களும் மூண்டன.

இவ்வாறு பின்தங்கிய நாடுகளுக்குள் செல்லும் மூலதனமும் கூட அந்தந்த நாட்டு மக்களின் வாங்கும் சக்தியைப் பொறுத்தே வளர முடியும். ஏற்கனவே அவை பின்தங்கிய நாடுகளாய் இருப்பதனால் அந்நாட்டு மக்களின் வாங்கும் சக்தி பெருமளவு இருப்பதற்கு வாய்ப்பில்லை. எனவே ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அந்நாடுகளில் முதலாளித்துவ வளர்ச்சியை எட்டியதோடு இந்த உபரி மூலதனத்தின் ஆக்கப்பூர்வமான பயன்பாடு முடிவு பெற்றுவிடுகிறது. ஆனால் அதையும் தாண்டி உள்ள உபரி மூலதனமே முதலாளித்துவ அமைப்பில் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்பட்டு ஒரு மிகப்பெரும் சிக்கலை உருவாக்குகிறது.

பங்குச் சந்தைகளும் வர்த்தகமும்

முதலாளித்துவம் தோன்றிய ஆரம்ப காலத்தில் தொழில் தொடங்குவதற்கு வேண்டிய பெரும் மூலதனத்தை திரட்டுவதற்காக முதலாளிகள் பங்குகளை வெளியிடத் தொடங்கினர். அந்த பங்குகளை வாங்குபவர்கள் அதனால் கிடைக்கும் டிவிடெண்ட் தொகைக்காகவே அவற்றை வாங்கினர். அந்த வகையில் தங்களுக்கு அதன் மூலம் ஒரு வருவாய் கிட்டும் என்பதே அவர்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட காரணமாக இருந்தது. ஆனால் நாளடைவில் டிவிடெண்ட் தொகைக்காக என்றில்லாமல் பங்குகளை விற்பதும் வாங்குவதும் ஒரு தொழிலாக முதலாளித்துவ அமைப்பில் மாறிவிட்டது.

ஆரம்பத்தில் ஏதாவது ஒரு தொழில் நிறுவனத்தில் ஒருவர் பங்குகள் வாங்கினால் அவர் பெரும்பாலும் அந்த நிறுவனத்தைப் பற்றி அறிந்தவராக இருப்பார். ஆனால் நாளடைவில் பங்கு வெளியிடும் நிறுவனங்களைப் பற்றி எதுவும் அறியாதவர்கள் கூட அவ்வர்த்தகத்தில் ஈடுபடலாயினர். பங்கு விலைகளின் ஏற்ற இறக்கங்களே அவர்கள் அவற்றை வாங்குவதா, விற்பதா என்பதை முடிவு செய்யும் காரணிகளாயின.

சூதாட்டமாகிவிட்ட பங்கு வர்த்தகம்

யாராவது ஒருவர் தன் கையில் பெரும் தொகையை வைத்துக் கொண்டு எந்த உருப்படியில்லாத ஒரு நிறுவனத்தின் பங்கினை வேண்டுமென்றே அதிகம் வாங்கினால் கூட அந்த நிறுவனத்தின் பங்குகளின் விலைகள் ஏறத்தொடங்கும். இவ்வாறு அந்நிறுவனத்தின் பங்கு விலையேற்றத்தைக் கண்டு அது நல்ல இலாபம் ஈட்ட வாய்ப்புள்ள நிறுவனம் என்று நம்பி பலரும் அந்நிறுவனப் பங்குகளை வாங்கத் தொடங்குவர். இவ்வாறு பலரும் வாங்க வாங்க அந்நிறுவனப்பங்கின் விலை மிக அதிகமாக ஏறும். அவ்வேளையில் தன்னுடைய பெரும் பணத்தைக் கொண்டு ஆரம்பத்தில் அதிகமான பங்குகளை அப்போது நிலவிய மிகக் குறைந்த விலையில் வாங்கி அதன் விலையேற்றத்திற்கு வழி வகுத்தவர், தன்னிடமுள்ள அதிகமான பங்குகளை கூடுதல் விலைக்கு விற்று பெரும் ஆதாயம் ஈட்டுவார். இப்படிப்பட்ட ஊகவணிகம் ஒரு சூதாட்டம் போல் பங்குச் சந்தையில் நடைபெறுகிறது.

இதற்கு ஒரு சிறந்த உதாரணம் 'ஹர்சத் மேத்தா' என்ற பங்கு சந்தை தரகராவார். வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய ரொக்க சேமிப்புத் தொகைக்கான சேமிப்பு பத்திரங்களை வாங்கித் தரும் தரகர் வேலையே அவர் செய்து வந்த வேலை. அவர் அந்த பத்திரங்கள் வாங்குவதற்காக வங்கிகள் அவரிடம் கொடுக்கும் தொகைகளை சில காலம் தான் பயன்படுத்தி அதனைக் கொண்டு இதுபோன்ற பங்கு வர்த்தக சூதாட்டத்தில் ஈடுபட்டு ரூபாய் 18,000 கோடி வரை ஏமாற்றி சம்பாதித்தார். இது, பங்கு வர்த்தகம் எவ்வாறு சூதாட்டம் போல் நடைபெறுகிறது என்பதற்கு நல்ல உதாரணம் ஆகும். இச்சூதாட்டத்தில் பெரும்பாலும் பாதிக்கப்படுபவர்கள் சிறு முதலீட்டாளர்கள் ஆவர்.

பங்குச் சந்தைகளை வைத்துக் காட்டப்பட்ட பகட்டான வளர்ச்சித் தோற்றம்

மக்களின் வாங்கும்சக்தி சுருங்கி சந்தை நெருக்கடி தோன்றிய பின்னர் முதலாளித்துவம் தொடர்ச்சியான வளர்ச்சியினை கொண்டிருக்க முடியாததாகிவிட்டது. அவ்வேளையில் முதலாளித்துவப் பொருளாதாரம் இன்னும் உயிரோட்டமுள்ளதாக இருக்கிறது என்பதை பகட்டாகக் காட்டுவதற்கு பயன்பட்டது இந்த பங்குச் சந்தைகளே. 'சந்தை நிலவரம் நன்றாக இருக்கிறது'; 'பங்கு விலைகள் ஏறுமுகத்தில் உள்ளன'; 'இத்தனை ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் பங்குச் சந்தை வளர்ச்சி உள்ளது' என்று பகட்டாகக் காட்டி கிழடுதட்டிவிட்ட முதலாளித்துவப் பொருளாதாரத்தை இன்னும் அது இளமையுடன் இருப்பதாகக் காட்ட பெரும்பாலும் பயன்பட்டது இந்த பங்குவர்த்தகமே. பெரும் முதலாளித்துவ நிறுவனங்கள் கூட தங்களிடம் உள்ள உபரி மூலதனத்தை இது போன்ற பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுத்தி வர்த்தக சூதாட்டத்தில் ஈடுபடத் தொடங்கின.

இதையே மாமேதை மார்க்ஸ் தெளிவுபடக் கூறினார்: முதலாளித்துவம் தன்னிடம் உள்ள பணத்தை லாவகமாக பயன்படுத்தி எந்த உழைப்பும் இல்லாமல் பெரிய அளவில் இலாபம் மட்டும் சம்பாதிக்கும் இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று. தற்போது நடைபெறும் பங்கு வர்த்தகம் அவருடைய கூற்று எத்தனை சரியானது என்பதை 100 சதவிகிதம் நிரூபிக்கிறது. சமூகத்திற்கு பயன்படும் பொருள் உற்பத்தியில் ஈடுபடாமல் இந்த பங்கு வர்த்தகத்தில் மட்டும் பரபரப்பாய் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் என்று ஒரு புதுமனித இனத்தையே முதலாளித்துவம் உருவாக்கியுள்ளது.

இவ்வாறு ஆக்கப்பூர்வ முதலீடுகளும் வளர்ச்சியும் இல்லாமல் போய்விட்ட முதலாளித்துவம் பங்குவர்த்தக சூதாட்டத்தில் ஈடுபடுவது உண்மையில் வளர்ச்சியல்ல. அது ஒரு வளர்ச்சி போன்ற மாயத்தோற்றமே. அவ்வப்போது அந்தப் பொய்தோற்றம் மங்கி மறைந்து முதலாளித்துவப் பொருளாதாரத்தை சூழ்ந்துள்ள கடுமையான நெருக்கடியின் உண்மை வடிவம் வெளிப்பட்டே தீரும். அந்த வகையில் முதலாளித்துவம் அடிக்கடி நெருக்கடிகளை சந்திக்கலாயிற்று.

இதுவரையில் முதலாளித்துவ உற்பத்தி முறை அதன் வரலாற்றில் முப்பதுக்கும் மேற்பட்ட நெருக்கடிகளை சந்தித்துள்ளது. அதாவது அந்த நெருக்கடிகளுக்கு பல்வேறு புதுப்புது பெயரிட்டு அழைப்பது முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்களின் வழக்கமாகும். அதாவது ஒரு குறிப்பிட்ட காலத்தில் பொருளாதார வளர்ச்சியே இல்லாமல் நின்று போய் அதற்கு முன்பிருந்த வளர்ச்சியைக் காட்டிலும் வளர்ச்சி குறைந்து போகுமானால் அதற்கு உற்பத்தித் தேக்கம் என்றும், இப்படிப்பட்ட உற்பத்தி தேக்கம் மூன்று ஆண்டுகளுக்கு மேல் நீடிக்குமானால் அதற்கு பொருளாதார மந்தநிலை என்றும் முதலாளித்துவ வாதிகள் பெயரிட்டுள்ளனர்.

முதல் பொருளாதார மந்த நிலை

அப்படிப்பட்ட ஒரு மந்தநிலை 1929-ம் ஆண்டு முதலாளித்துவப் பொருளாதாரத்தில் ஏற்பட்டது. அந்நிலையில் முதலாளித்துவ சகாப்தமே இதனால் முடிந்துவிடுமோ என்று அஞ்சிய முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் அதிலிருந்து தப்பிப்பதற்காக பல புது தந்திர உபாயங்களை பொருளாதாரக் கண்ணோட்டங்கள் என்ற பெயர்களில் கையாளத் தொடங்கினர். அவற்றில் ஒன்றுதான் 'கீன்ஸ்' என்ற பொருளாதார நிபுணர் வகுத்துக் கொடுத்த 'கீன்ஸ் பாணி பொருளாதாரம்' ஆகும். அதாவது முதலாளித்துவச் சுரண்டலினால் வாங்கும் சக்தியற்று இருக்கும் சமூகத்தின் பெரும்பான்மை மக்களுக்கு வாங்கும் சக்தியை செயற்கையாக உருவாக்குவதற்கு அரசுத்துறை முதலீடுகளை அதிகப்படுத்த வேண்டும் என்ற கண்ணோட்டத்தை அவர் உருவாக்கினார். அதன் விளைவாக பொதுநல அரசு கண்ணோட்டம் உருவானது.

பொதுநல அரசு என்ற அரிதாரம்

அக்கண்ணோட்டத்தின்படி கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் அரசு முதலீடுகள் அதிகரிக்கப்பட்டு அது பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கி அதன்மூலம் சமூகத்தின் ஒரு பகுதியினரின் வாங்கும் சக்தியின் அதிகரிப்பிற்கு வழிவகுக்கப்பட்டது. அதன்மூலம் அடக்குமுறைக் கருவியான அரசும் தான் அனைத்துப் பகுதி மக்களின் பொது நலனுக்காக இருக்கக்கூடிய ஒரு கருவி என்று புது அரிதாரம் பூசிக் கொண்டது. வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கு முன்னுரிமை தரவேண்டும் என்ற கண்ணோட்டம் கீன்ஸ் அவர்களால் வற்புறுத்தப்பட்டதால் தாங்கள் லாபத்திற்காகத் தொழில் நடத்துகிறோம் என்பதையே மூடிமறைத்துப் பலருக்கு வேலை தருவதற்காகவே தொழில் நடத்துவதாக முதலாளிகள் நாடகமாடினர்.

வாங்கும் சக்தியை அதிகரிக்கும் வகையில் எதைவேண்டுமானாலும் செய்யலாம் என்று கீன்ஸ் கூறினார். அதாவது ஒன்றுமே முடியாவிட்டால் தேவையில்லாமல் ஒரு பள்ளத்தை வெட்டச் சொல்லி அதற்கு கூலியாக பணம் கொடுக்கலாம். அதன் பின்னர் அதே பள்ளத்தை மூடச்சொல்லி அதற்கு கூலியாகவும் பணம் கொடுக்கலாம் என்று கூறினார்.

இவ்வாறு அரசுத் துறையில் செய்யப்படும் முதலீடுகள் பொருள் எதையும் உற்பத்தி செய்யப் பயன்படாததால் அரசின் வரவற்ற செலவினங்கள் அதிகரித்தன. அவற்றை ஈடுகட்ட காகித நோட்டுகளை மென்மேலும் அச்சடித்து புழக்கத்தில் விடவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதனால் பணவீக்கம் ஏற்பட்டது.

அத்துடன் மோசடி செய்தாகிலும் இலாபத்தை ஈட்ட விரும்பிய இந்தியா போன்ற வளர்முக நாடுகளின் முதலாளிகள் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்கி ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் தாங்கள் வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தவில்லை. பலருக்கு வேலை கொடுப்பதற்காகவே முதலாளிகள் தொழில் தொடங்குகின்றனர் என்று புதிதாக உருவாக்கப்பட்ட கண்ணோட்டத்தை கடன் கட்டாமல் இருப்பதை நியாயப்படுத்த அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.

அக்கடன்கள் திருப்பிச் செலுத்தப்படாத நிலை ஏற்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் கூட அவை கணக்கில் உள்ள கடன்களாகவே கருதப்பட்டு அவற்றிற்கு வட்டியும் கணக்கிடப்பட்டு வங்கிகளின் லாப விகிதங்கள் தீர்மானிக்கப்பட்டன. எனவே வங்கிகளால் கூறப்பட்ட லாபம் உட்பட வளர்ச்சி என்று கூறப்பட்ட அனைத்துமே போலியானவையாக ஆகிவிட்டன. ஆனால் முழுக்க முழுக்க போலியாகவே பொருளாதாரத்தை பராமரிக்கமுடியாது.

மறுகட்டுமானமும் சீரமைப்பும்

எனவே இந்த நிலையில் இருந்து மீள்வதற்காக முதலாளித்துவம் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதாயிற்று. அப்படிப்பட்ட நடவடிக்கைகள்தான் பொருளாதாரத்தை மறுகட்டுமானம் செய்கிறோம் என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களாகும். அந்த கொள்கையின்படி பொருளாதாரத்தில் அமைப்பு ரீதியான பல மாறுதல்கள் கொண்டுவரப்பட்டன. வங்கிகளிலும் காரிய அறிவு சார்ந்த விதிகள் கடைபிடிக்கப்பட்டன. அதனடிப்படையில் இந்திய சூழ்நிலையில் பெரிய முதலாளிகள் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வங்கிகளுக்கு செலுத்த வேண்டியிருந்த கடன்களும் அவற்றிற்கான வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டன. வேலை வாய்ப்பை உருவாக்குவதற்காக என்று உருவாக்கப்பட்ட அரசுதுறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டன. அவற்றை இலாபகரமாக நடத்தக்கூடிய நிறுவனங்களாக ஆக்குகிறோம் என்ற பெயரில் ஆட்குறைப்பு செய்யப்பட்டது. சந்தை விதிகளின் முழுமையான செயல்பாட்டைப் பேணிப்பராமரிப்பதே இவ்வாறு புதிதாகக் கொண்டுவரப்பட்ட புதிய தாராளவாத கொள்கையாகும்.

அதாவது இந்தியா போன்ற நாடுகளில் அரசு செலவினங்களை கட்டுப்படுத்தி அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதன் மூலம் கிடைத்த தொகைகளைக் கொண்டு வரவு-செலவு திட்டத்தில் வரும் பற்றாக்குறைகளை ஈடுகட்டி பணவீக்கத்தை கட்டுக்குள் வைப்பதே இந்தக் கொள்கையின் முக்கிய அம்சமாக இருந்தது. உலக அளவில் இக்கொள்கையை அமெரிக்காவில் ரீகனும் இங்கிலாந்தில் தாட்சரும் இந்தியாவில் தற்போதைய பிரதமரும் இந்த கொள்கை அறிமுகமான காலத்தின் நிதியமைச்சருமான மன்மோகன்சிங்கும் கொண்டுவந்தனர்.

இக்காலகட்டத்தில் ஒவ்வொரு நாடும் தங்களது சிலதுறைகளை அந்நிய பொருட்களின் படையயடுப்பிலிருந்து பாதுகாப்பதற்காக கடைபிடித்து வந்த தற்காப்புக் கொள்கைகளை உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தம் மூலம் தகர்த்தெறிந்தன. உலகமயம் என்ற முழக்கம் பிரபலமாயிற்று மேலை நாட்டின் வளர்ச்சியடைந்த முதலாளிகள் தங்களது நவீன உற்பத்தி மூலம் செய்யப் படும் பொருட்களை உலகெங்கிலும் விற்று அதிக லாபம் ஈட்டலாம் என்ற எண்ணத்துடன் கீன்ஸ் பாணி பொருளாதாரத்திற்கு விடைகொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டுக் கொண்டு வந்ததே இந்த உலகமயம்.

உலகமயத்தின் உதயம்

ஓரளவு சமுதாய அக்கறையுடன் செயல்படுத்தப்பட்டது போன்ற தோற்றத்துடன் நடைமுறைப் படுத்தப்பட்ட 'கீன்ஸ்' பாணி பொருளாதாரக் கொள்கை இவ்வாறு அறவே கைவிடப்படுவதற்கு வேறொரு காரணமும் இருந்தது. எதுவரையிலும் சோசலிசம் முதலாளித்துவத்திற்கு ஒரு போட்டி பொருளாதார அமைப்பாக விளங்கியதோ அது வரையிலும் இந்த ஈவிரக்கமற்ற சுரண்டலை அறிமுகப்படுத்தும் புதிய தாராளமயக் கொள்கையை முழுமையாக அமுலாக்க உலக முதலாளித்துவ நாடுகள் தயங்கின. சோசலிசத்தின் உலகளாவிய வீழ்ச்சி அவர்களுக்கு 'கீன்ஸ்' பாணி பொருளாதாரத்திலிருந்து பின்வாங்கி மிகத் துணிச்சலுடன் சந்தை விதிகளின் முழுமையான செயல்பாட்டிற்கும் காட்டுத்தனமான சுரண்டலுக்கும் வழிவகுக்கும் புதிய தாராளமய கொள்கையை அமுல்படுத்துவதற்கு சாதகமாக இருந்தது.

இச்சூழ்நிலையில் புதிதாக விடுதலையடைந்த நாடுகளைப் பொறுத்தவரை அவற்றின் வளர்ச்சிக்கு தேவையான உயர் தொழில்நுட்பத்தை வழங்குவதற்கு சோசலிச நாடுகளின் மூலம் இருந்தவாய்ப்பு அந்நாடுகளில் சோசலிசம் வீழ்ச்சியடைந்ததால் இல்லாமல் போய்விட்டது. இந்நிலையில் முழுக்க முழுக்க உயர்தொழில்நுட்பத்தை பெறுவதற்கு ஏகாதிபத்திய-முதலாளித்துவ நாடுகளையே புதிதாக விடுதலையடைந்த நாடுகள் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வளர்ச்சியடைந்த ஏகாதிபத்தியங்கள் இதனை பயன்படுத்திக் கொண்டு குறைந்த கூலிக்கு கிடைக்கும் உழைப்புத்திறனை பயன்படுத்தி இன்னும் அதிக லாபம் ஈட்டலாம் என்ற எண்ணத்துடனும் இந்த உலகமயகொள்கையை முன் வைத்தன.

மூலதனத்தில் மட்டுமல்ல வேலைவாய்ப்பிலும் உலகமயம்

அதன் விளைவாக வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளின் சேவைத்துறை சார்ந்த பல தொழில்கள் மலிவான உழைப்புத்திறனை கணக்கில் கொண்டு இந்தியா போன்ற நாடுகளுக்கு வரத்தொடங்கியது. சீனா உற்பத்தித்துறை பொருட்களை உலகெங்கிலும் மலிவான விலைக்கு ஏற்றுமதி செய்து இந்த உலகமயத்தை பயன்படுத்தத் தொடங்கியது.

இந்நிலையில் அமெரிக்கா போன்ற நாடுகளின் தொழிலாளர்கள் தாங்கள் இதுவரை செய்து வந்த மூளை உழைப்பு சார்ந்த வேலைகளை பெரிய அளவில் இழந்தனர். பெரிய எண்ணிக்கையில் ஆலை மூடல்களும் கதவடைப்புகளும் ஏற்பட்டன. பெரிய எண்ணிக்கையிலான அமெரிக்கத் தொழிலாளர்கள் துரித உணவகங்களில் வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஆனால் அமெரிக்க முதலாளிகள் மட்டும் வேற்றிட வேலைவாய்ப்பு போன்றவற்றின் மூலம் கோடி கோடியாக லாபம் சேர்த்துக் குவித்தனர். வேற்றிட வேலைவாய்ப்பு மூலம் உலக அளவில் ஈட்டப்பட்ட லாபத்தில் ஏறக்குறைய 75 சதவீதத்தை அமெரிக்க முதலாளிகள் அடைந்தனர்.

இந்த புதிய தாராளவாதக் கொள்கையை மையமாக வைத்து இறந்து கொண்டிருக்கும் முதலாளித்துவப் பொருளாதாரத்தில் புது இரத்தம் பாய்ச்சப்பட்டது போல் ஒரு பொய்த் தோற்றம் உருவாக்கப்பட்டது. அதனால் உள்ளூர வேலை இழந்து வாங்கும் சக்தியில் சரிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்டிருந்த அமெரிக்க மக்களுக்கு ஆக்கப்பூர்வமாக நீண்டகால அடிப்படையிலான தீர்வு எதையும் கொடுக்க முடியவில்லை. இந்நிலையிலும் வளர்ச்சி உள்ளது என்று காட்டுவதற்காக வங்கிகளும் நிதி நிறுவனங்களும் ஒரு புதுவகை சூதாட்டத்தில் ஈடுபடத் தொடங்கின.

அனைத்தும் சந்தைச் சரக்கே

எதை எல்லாம் சந்தைச் சரக்காக்கி விலையாக்க முடியுமோ அதை எல்லாம் சரக்காக மாற்றுவதே முதலாளித்துவம். அந்த அடிப்படையில் அமெரிக்க வங்கிகள் தாங்கள் வீடு கட்டுவதற்காக அமெரிக்க மக்கள் பலருக்கு வழங்கியிருந்த வீட்டுக்கடன் அடமானப் பத்திரங்களை சரக்காக ஆக்கி பல நிதி நிறுவனங்களிடம் மறு அடமானம் வைத்து பணம் பெற்றுக் கொண்டன. அந்நிதி நிறுவனங்கள் அந்த அடமானப் பத்திரங்களையும் பங்குகளாக பாவித்து உலகின் மூலை முடுக்கெல்லாம் விற்கத் தொடங்கின. தங்களிடம் இருந்த வீட்டு கடன் பத்திரங்களை அடமானம் வைத்து தாங்கள் பெற்ற தொகைகளைக் கொண்டு புது வீட்டுக் கடன்களை அமெரிக்க வங்கிகள் மீண்டும் வாரி வழங்கத் தொடங்கின.

கீன்ஸ் பாணி பொருளாதாரம் உருவாக்கிய போலியான வளர்ச்சித் தோற்றம் அம்பலப்பட்டு போனதால் அதை சரிசெய்வதற்காக புதிய தாராளவாத பொருளாதார கொள்கையை முன் வைத்த சிந்தனையாளர்கள் வங்கிகள் கடன் வழங்குவதில் பல காரியார்த்தமான விதிகளை கடைபிடிக்கவேண்டும் என்ற புது நியதியை கொண்டுவந்தனர் என்பதைப் பார்த்தோம்.

அதன்படி எந்தவொரு கடனும் கடனுக்கான தவணையும் மூன்று மாதங்களுக்குமேல் தொடர்ச்சியாக செலுத்தப்படாமல் இருந்தால் அந்த கடன் வராக்கடன் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்ற புது நியதி வகுக்கப்பட்டது. அதனால் வங்கி நிர்வாகங்கள் கடன் கொடுப்பதில் மிகுந்த தயக்கம் காட்டின. குறிப்பாக கோடிக்கணக்கான ரூபாய்களை பெரும் முதலாளிகளுக்கு கடன் கொடுக்க அஞ்சினர். ஏனெனில் அவர்களது கடந்தகால அனுபவம் அவர்களை தெளிவாகவே எச்சரித்தது. அதாவது முதலாளிகள் ஏமாற்றுவதற்காகவே வங்கிகளில் கடன்பெற முன்வருகின்றனர் என்று.

மத்திய தர வர்க்கத்தின் பக்கம் திரும்பிய வங்கிகளின் பார்வை

இதனால் கடன் வழங்கி இலாபகரமாக தொழில் நடத்துகிறோம் என்று காட்ட விரும்பும் வங்கிகளின் பார்வை சாதாரண மத்தியதர வர்க்கத்தினரின் பக்கம் திரும்பியது. அவர்கள் வீடு கட்டுவதற்காக என்றும் ஏற்கனவே கட்டியுள்ள வீடுகளின் பேரிலும் கடன் கொடுத்தால் அந்த கடனுக்கு பிணையமாக அவர்கள் கட்டவிருக்கும் வீடுகளும் கட்டியுள்ள வீடுகளும் இருக்கும்; முதலாளிகளின் தொழில் நடத்தும் திட்டம் என்ற அத்தனை உறுதி இல்லாத ஒன்றை நம்பி கடன் வழங்குவதைக் காட்டிலும் கண்ணுக்கு முன்னால் கட்டிக் கொண்டிருக்கும் அல்லது ஏற்கனவே கட்டப்பட்டுள்ள வீட்டின் பேரில் கடன் கொடுப்பது சரியானதாக இருக்கும் என்று வங்கி நிர்வாகங்கள் எண்ணின. அதனால் அவை வீட்டுக் கடன்களை வாரி வழங்கின.

இப்பின்னணியில் ஆரம்பத்தில் கடனை திருப்பிச் செலுத்தும் அளவு வருவாய் உள்ளவர்களுக்கு வங்கிகள் வீட்டுக் கடன் வழங்கின. பின்னர், தங்களிடம் கடன் வழங்க இருந்த தொகை முழுவதையும் லாபகரமாகப் பயன்படுத்தும் எண்ணத்துடன், கடன் தவணைகளை திருப்பி செலுத்த போதிய வருவாய் உள்ளதா என்று கூட பார்க்காமல் கடன் கோரும் அனைவருக்கும் வீட்டு கடன்களை வாரி வழங்கத்தொடங்கின. இவ்வாறு பலர் இலட்சோபலட்சம் டாலர் வீட்டுக் கடன் தொகைகளை கையில் வைத்துக் கொண்டு வீடுகள் வாங்க முனைந்ததால் வீடுகளின் விலைகள் கடுமையாக உயர்ந்தன. ஏற்கனவே வீட்டுக் கடன் பெற்று வீடு கட்டி இருப்பவர்கள் திடீரென ஏற்பட்ட இந்த வீட்டு விலை உயர்வினை பயன்படுத்தி அதே வீடுகளுக்கு கூடுதல் கடன்களை வங்கிகளிடம் இருந்து பெற்றனர்.

அன்றாடச் செலவுக்குப் பயன்பட்ட வீட்டுக் கடன்

வேற்றிட வேலை வாய்ப்புக் கொள்கையால் வேலையிழந்து வருவாய் குறைந்து இருந்த பல அமெரிக்க மக்களுக்கு இவ்வாறு அவர்கள் பெற்ற கடன் தொகை அன்றாட செலவுகளுக்கு பெரிதும் பயன்பட்டது. ஆனால் அத்தொகையினை அவர்கள் செலவழித்து முடித்த பின்னர் வீட்டுக்கடன் செலுத்தும் அளவிற்கு கூட அவர்களிடம் வருமானம் இல்லாமல் போய்விட்டது. இதனால் கடன் தவணைகளை அவர்கள் செலுத்த முடியாதவர்களாயினர்.

நெருக்கடியின் தொடக்கம்

கடன் தவணைகள் வராததால் கடன் பத்திரங்களை பங்குகள் போல் வாங்கியிருந்தவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஈவுத் தொகைகள் கிடைக்காமல் போயின. எனவே அவர்கள் பத்திரங்களை பங்குகளாக தங்களிடம் விற்ற நிதி நிறுவனங்களை நெருக்க, நிதி நிறுவனங்கள் அப்பத்திரங்களை பிணயமாக வைத்து காப்பீடு செய்திருந்த காப்பீட்டு நிறுவனங்களை அணுக, காப்பீட்டு நிறுவனங்கள் முடிந்த அளவு இழப்பீட்டுத் தொகைகளை வழங்க, அதன் பின்னரும் கொடுக்கவேண்டி வந்த இழப்பீட்டுத் தொகைகள் பிரிமியம் மூலம் அவர்கள் பெற்ற தொகையைக் காட்டிலும் அதிகமாகிப் போக - அவை நலிவடையத் தொடங்கின.

காப்பீட்டு நிறுவனங்களின் வீழ்ச்சியைத் தொடர்ந்து வீட்டு அடமான பத்திரங்களை பங்குகளாக விற்ற நிதி நிறுவனங்களும் திவாலாகிவிட்டன. மக்களின் வாங்கும் சக்திக் குறைவினால் வேறு உருப்படியான முதலீடுகள் முடங்கிவிட்ட நிலையில் சாதாரண மக்களுக்கு வீட்டுக் கடன்கள் வழங்குவதையே முக்கியமாகச் செய்து வந்த வங்கிகளின் நடவடிக்கைகள் முற்றாக முடங்கிப் போயின. மேலும் அவை கடன் தவணைகள் பெறாமல் வருவாய் குன்றிவிட்டதால் திவாலாகும் நிலையை எட்டின.

இதன் விளைவாக கடன் தவணைகள் செலுத்தாததால் கடன் பெற்றவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட வீடுகளின் ஆவணங்கள் வங்கிகளிலும் நிதி நிறுவனங்களிலும் குவிந்தன. இந்த வீடுகளை விற்று கடன் தொகைகளை சரிசெய்ய வேண்டும் என்றால் அவற்றை வாங்குவதற்கு ஆட்கள் தயாராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட வாங்கும் சக்தி கொண்டவர்கள் அதிகம் இல்லாததாலேயே வங்கிகள் அவற்றை விற்று கடன் தொகைகளை பெற முடியாமல் உள்ளன. இந்த நெருக்கடியிலிருந்து வங்கிகளையும் நிதி நிறுவனங்களையும் மீட்பதற்காக அமெரிக்க அரசும் பிற ஐரோப்பிய நாடுகளின் அரசுகளும் ஒதுக்கியுள்ள பெரும் தொகைகளை கொண்டு இந்த அடமானப் பத்திரங்களை அரசுகள் வாங்கப் போகின்றன.

ஆனால் வாங்கிய பத்திரங்களை அரசுகள் விற்க வேண்டுமென்றாலும் கூட வாங்கும் சக்தி உள்ளவர்கள் அவற்றை வாங்க முன் வர வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட வாங்கும் சக்தி உள்ளவர்கள் அதிகம் இல்லாத சூழ்நிலையை முதலாளித்துவ சுரண்டல் உருவாக்கிவிட்டது என்பதே கசப்பான உண்மையாகும். ஆனாலும் இதனை மீட்டெடுக்கும் செயலில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாக கூறும் அரசுகள் இந்த வாங்கும் சக்தி குறைவு நாளடைவில் சரியாகிவிடும் என்ற குருட்டுத்தனமான எதிர்பார்ப்பை மையமாக கொண்டே அவ்வாறு கூறிக்கொண்டுள்ளன.

மேலும் அவர்கள் குருட்டுத்தனமான சில விதிகளை கடைப்பிடிப்பதையே இப்பிரச்னையில் இருந்தான தீர்வாக கருதுகின்றனர். அதாவது கடன்களை குறைந்தவட்டிக்கு வழங்கினால் அது கூடுதல் முதலீட்டிற்கு வழிவகுக்கும்; கூடுதல் முதலீடு வேலைவாய்ப்புகளை உருவாக்கும்; அதைப்போல் பொருட்களின் வரவினை சந்தையில் அதிகப்படுத்தினால் அது அப்பொருட்களின் பயன்படுத்தும் தேவையை அதிகரிக்கும் என்பது போன்றவையே அந்த குருட்டுத்தனமான கொள்கைகள்.

உண்மையில் வாங்கும் சக்தியை மையமாக கொண்டே முதலீடுகள் செய்யப்படும். முதலாளித்துவ சுரண்டலினால் வாங்கும் சக்தி முழுமையாக சூறையாடப்பட்டுள்ள நிலையில் எவ்வளவு கடன்கள் வழங்கினாலும் அது ஆக்கப்பூர்வமான முதலீட்டை அதிகரிக்காது. அதைப்போல் பொருட்களின் அதிகமான வரத்து அதற்கான தேவையை ஒரு போதும் உருவாக்காது. ஆனால் முதலாளித்துவத்தைப் பொறுத்தவரையில் இந்த குருட்டுத்தனத்தை நம்பியிருப்பதை தவிர அதற்கு வேறு வழியில்லை.

பணவீக்கம் அதிகரித்தாலும் பரவாயில்லை அரசு முதலீடுகளை ஊக்குவித்து வாங்கும் சக்தியை பராமரிக்க வேண்டும் என்ற கருத்தினை கீன்ஸ் பாணி பொருளாதார கண்ணோட்டம் முன் வைத்தது. ஆனால் அரசு முதலீடுகள் மூலம் உருவான தொழில்கள் லாபம் ஈட்டாதவையாக ஆகி அவை அரசுகளின் அடுத்தடுத்த ஒதுக்கீடுகளை வேண்டுவனவாய் ஆன சூழ்நிலையில் பணவீக்கம் கண் மண் தெரியாத அளவில் அதிகரித்தது. அதிலிருந்து பொருளாதாரத்தை மீட்பதற்கென்று கொண்டுவரப்பட்ட நவீன தாராளமயக் கொள்கை தனியார் மயத்தை ஊக்குவித்து பணவீக்கத்தை கட்டுக்குள் வைப்பதை முக்கியத்துவப் படுத்தியது.

அதன் விளைவாக ஏற்கனவே இருந்த தொழிலாளரின் ஊதிய விகிதங்கள் கூட பராமரிக்கப்படாமல் காட்டுத்தனமான சுரண்டல் கட்டவிழ்த்து விடப்பட்டது. வேலையில்லாதோர் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதை பயன்படுத்தி கூலிகள் எந்த நியதியுமின்றி குறைக்கப்பட்டன. இதனால் மக்களின் வாங்கும் சக்தி அடிமட்டமாக சரிந்தது. இதிலிருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கிறோம் என்ற பெயரில் இப்போது மீண்டும் அரசு முதலீடுகளை அதிகப்படுத்தி அதாவது அரசு முதலாளித்துவத்தை ஊக்குவித்து கீன்ஸ் முன்வைத்த பொருளாதார கண்ணோட்டத்தின் அடிப்படையில் தான் விழுந்திருக்கும் புதை சேற்றிலிருந்து மீண்டும் எழலாமா என்று தற்போது முதலாளித்துவம் பிரம்மபிரயத்தனம் செய்துகொண்டுள்ளது.

மீட்பு என்ற பெயரில் நடைபெறும் கேலிக்கூத்து

இந்தியா போன்ற நாடுகளில் இது இன்னும் பெரியதொரு கேலிக்கூத்தாக ஆகியுள்ளது. அதாவது புதிய தாராளமயக் கொள்கையை ஒத்த விதத்தில் ஒரு புறம் பணவீக்கத்தை கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் வங்கிகளின் சேமிப்பிற்கான வட்டி விகிதத்தை அதிகப்படுத்தினர். மறுபுறம் வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளனர். ஆனால் அந்த அளவிற்கு சேமிப்புத் தொகைகளுக்கான வட்டியினை உடனடியாகக் குறைக்க முடியவில்லை. இதன் விளைவு என்னவாகும்? வங்கிகளின் வருவாய் குறைந்து அவை நெருக்கடிக்கு ஆளாகும்.

உண்மையிலேயே இம் முரணான நடவடிக்கைகளை விளக்க வேண்டுமென்றால் இந்தியாவின் அமெரிக்க தூதுவராகப் பணியாற்றும் ரனேன்சன் என்பவர் இந்திய-அமெரிக்க அணுஒப்பந்தம் குறித்து இந்தியாவில் செயல்பட்ட பல்வேறு கட்சிகளின் எதிர்ப்புகள் சம்பந்தமாக முன்வைத்த ஒரு சித்திரம்தான் நமக்கு நினைவிற்கு வருகிறது. அதாவது இன்று நெருக்கடியிலிருந்து தப்பிக்க நடவடிக்கைகள் எடுக்கிறோம் என்ற பெயரில் முதலாளித்துவ நிபுணர்களும், ஆட்சியாளர்களும் தலையறுபட்ட கோழிகள் போல் இலக்கேதுமின்றி இங்கும் அங்கும் தாவிக்குதித்துக் கொண்டுள்ளனர்.

உண்மையான பிரச்னை

முதலாளித்துவ அமைப்பின் உண்மையான பிரச்னை உற்பத்தி சமூக அளவில் நடைபெறுவதும் அந்த உற்பத்தியின் பலன் சமூக அளவில் பகிர்ந்து கொள்ளப்படாமல் தனியார் முதலாளிகளுக்கு லாபமாக சென்று சேர்வதுமே ஆகும். இந்த மறுக்க முடியாத விஞ்ஞானபூர்வ உண்மையினை ஒப்புக் கொண்டு அந்த அடிப்படையில் நெருக்கடிக்குத் தீர்வுகாண முற்பட்டால் அது முதலாளித்துவத்தின் தற்கொலைக்கு வழிவகுக்கும். எனவே இந்த உண்மையை மூடி மறைத்து இதைத் தவிர வேறு ஏதாவது ஒரு தீர்வினை காணவே முதலாளித்துவ சிந்தனையாளர்கள் மீண்டும் மீண்டும் முயன்று கொண்டுள்ளனர்.

இப்போது நம்முன் எழும் கேள்வி இந்நெருக்கடியிலிருந்து மீள வழியே கிடையாதா? என்பதே. நிச்சயமாக இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு மட்டுமல்ல இந்த நெருக்கடியே மீண்டும் தலையயடுக்காத வகையிலான ஒரு தீர்வும் நிச்சயம் இருக்கவே செய்கிறது. ஆனால் அத்தீர்வினை இன்றுள்ள இந்த சுரண்டல் முதலாளித்துவ அமைப்பினை அடிப்படையில் மாற்றாமல் கொண்டுவரவே முடியாது.

தேவைக்காக உற்பத்தி

அதாவது இலாப நோக்கிற்காக என்று இன்று நடைபெறும் இந்த உற்பத்திமுறை ஒழிக்கப்பட்டு மக்களின் தேவைக்காக என்ற இலக்கை நோக்கி உற்பத்தி திருப்பிவிடப்படவேண்டும். உற்பத்தி சமூக அளவிலானதாக ஆகிவிட்ட போதிலும் அதனை நடத்தும் உற்பத்தி சாதனங்கள் தனியார் வசம் இருப்பது முடிவிற்கு கொண்டுவரப்பட்டு உற்பத்தி சாதனங்கள் சமூக மயமாக்கப்பட வேண்டும்.

சமூக உற்பத்தியின் பலன் சில முதலாளிகள் எனும் தனி நபர்களின் தொந்தி தொப்பைகளை நிரப்பும் போக்கு களையப்பட்டு, அது உழைப்பவர் அனைவருக்கும் அவரவரது உழைப்பிற்கு ஏற்ற விதத்தில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சமூக அமைப்பு உருவாகுமானால் அது மக்கள் தொகை பெருகப் பெருக அவர்களின் தேவைகளும் பெருகும். மக்களின் தேவைகள் பெருகப் பெருக அத்தேவைகளின் பெருக்கத்திற்கு ஏற்ற விதத்தில் புதுப்புதுத் தொழில்கள் பெருகுவதற்கும் வழிவகுக்கும்.

வேலையின்மைக்கும் பணவீக்கத்திற்கும் வேலை இல்லை

அப்புது தொழில்கள் புது வேலைவாய்ப்புகளை உருவாக்கும். புது வேலைவாய்ப்புகள் மக்களின் வாங்கும் சக்தி பெருக்கத்திற்கு தொடர்ச்சியாக வழிவகுக்கும். வேலையின்மைக்கு அத்தகைய அமைப்பில் ஒரு வேலையும் இருக்காது. பணவீக்கம் என்பது தலைதூக்கவோ அதன் விளைவான விலை உயர்வு என்பது தலைவிரித்தாடவோ அச்சமூகத்தில் வாய்ப்பேதுமில்லை.

அதனால் தான் மாபெரும் தலைவர் ஸ்டாலினுக்குப் பின் சோவியத் யூனியனின் தலைமைப் பொறுப்பிற்கு வந்த ஏறக்குறைய அனைத்துத் தலைவர்களும் சோசலிஸக் கோட்பாடுகளை சரிவர அமல் நடத்தாத நிலையிலும் கூட 40 ஆண்டுகாலம் பொருட்களின் விலை உயர்வு என்பதே அங்கு இல்லாதிருந்தது. இதுதான் மாமேதை மார்க்ஸ் தனது சிந்தனை திறனால் சமூகத்திற்கு வழங்கிய சோசலிச, கம்யூனிச கருத்தோட்டமாகும்.

சோசலிசம் என்ற பூலோக சொர்க்கம்

சொர்க்கம் என்று மதங்கள் எவற்றை முன்வைக்கின்றன? இந்த சமூகத்தில் உள்ள நெருக்கடி மற்றும் கோளாறுகளால் பல்வகை பாதிப்புகளுக்கு ஆளான மக்கள் இதிலிருந்து மீள்வதற்கு வழியேதுமில்லை என்ற நிராசையில் உழலும் போது, இந்த கோளாறுகள் எவையுமே இல்லாத ஒரு சமூகத்தை தங்களது கற்பனை திறனால் உருவாக்கி அதனையே சொர்க்கம் என்ற பெயரில் மதங்கள் முன் வைக்கின்றன.

அக்கற்பனாவாதக் கருத்தை தகர்த்தெறிந்து இந்த சமூகத்தில் நிலவும் வர்க்க முரண்பாடுகளே அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணம் என்பதை விஞ்ஞானப்பூர்வமாக பகுத்தாய்ந்து, அக்கருத்தை வரலாற்றிற்கும் பொருத்திக்காட்டி, இந்த வர்க்க முரண்பாட்டில் இருந்தான தீர்வு எவ்வாறு வர்க்கப் போராட்டங்கள் இட்டுச் செல்லும் தர்க்க ரீதியான தீர்வான உழைக்கும் வர்க்கப்புரட்சியின் மூலம் மலரும் சமுதாயமாற்றத்தில் முடியும் என்பதையும், அவ்வாறு புதிதாக மலரும் அச்சமுதாயம் எங்கோ இருப்பதாக மதவாதிகள் கூறிய அந்த சொர்க்கத்தை நிதர்சனமாக இந்த பூமிக்கே கொண்டுவரும் என்பதையும் அந்த மாமேதை நிறுவினார். சோசலிசம், கம்யூனிசம் என்ற பூலோக சொர்க்கமே இன்று முதலாளித்துவம் சந்தித்துக் கொண்டுள்ள அனைத்து நெருக்கடிகளிலிருந்துமான முற்றான முழுமையான தீர்வாகும்.

திசை திருப்பல் வேலை

இந்தத் தீர்வு மக்கள் மனதில் பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே பல முதலாளித்துவ சிந்தனையாளர்கள் முதலில் மெளனம் சாதித்தனர். பின்னர் மேலை நாடுகளின் அறிவுஜீவிகள் மார்க்சை நோக்கிச் சென்றவுடன், இந்த நெருக்கடிக்கான தீர்வு மார்க்சிடம் இல்லை; கீன்ஸிடம் தான் உள்ளது எனக் கூறத் தொடங்கியுள்ளனர்.

மார்க்சிய ரீதியிலான தீர்வை மூடிமறைப்பவர்களிடமிருந்து சற்றே மாறுபட்டு நமது தமிழகத்தில் பிறந்து அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைகழகத்தின் பேராசிரியர் என்ற அளவிற்கு உயர்ந்த சுப்ரமணியன்சாமி ஒரு புது விளக்கத்தை முன் வைக்கின்றார். அதாவது புதிதாக கொண்டுவரப்பட்ட புதிய தாராளவாதப் பொருளாதார சீர்திருத்தம் முதலாளித்துவத்திற்கு நெருக்கடியை கொண்டு வந்தது என்பது உண்மைதான். இது போன்ற நெருக்கடிகளை அவ்வப்போது முதலாளித்துவம் சந்தித்தேயுள்ளது. ஆனால் அவற்றில் இருந்தெல்லாம் முதலாளித்துவம் மறுபடி மீண்டு வரவும் செய்துள்ளது. ஆனால் சோசலிசம் சீர்திருத்தங்களை தாக்குப்பிடிக்க முடியாத அமைப்பு. அதனால்தான் அது கோர்பசேவ் கொண்டுவந்த சீர்திருத்தங்களை ஜீரணிக்க முடியாமல் அமைப்பே அழிந்து போய்விட்டது. எனவே பலவீனமான சமூக அமைப்பு சோசலிச அமைப்பே என்று கூறுகிறார்.

ஒரு வகையில் அவர் பாராட்டப்பட வேண்டியவரே. ஏனெனில் இந்த நெருக்கடிக்கு தீர்வு சோசலிசம் என்பதாக இருப்பதால் சோசலிசம் என்ற வார்த்தையை உச்சரிக்கவே உலகம் முழுவதிலும் உள்ள முதலாளித்துவப் பொருளாதார சிந்தனையாளர்கள் அஞ்சி வாயை திறக்காதிருந்த வேளையில் இவருக்காவது சோசலிசம் என்ற வார்த்தையை உச்சரிக்கும் தைரியம் இருந்திருக்கிறது என்ற வகையில் அவர் பாராட்டுக் குரியவர்தான்.

சோசலிசம் பலவீனமானதா-சுவாமியின் இயக்கவியல் ஞானம் பலவீனமானதா?

முதலாளித்துவப் பொருளாதாரத்தில் அவர் நிபுணராக இருக்கலாம்; ஆனால் மார்க்ஸிசம் கம்யூனிசம் குறித்து ஒருஅறிவுஜீவிக்குரிய நேர்மையுடன் அவர் பேசவேண்டுமென்றால் அதற்கு சிறிதேனும் இயக்கவியல் தெரிந்திருக்க வேண்டும். அதாவது சோவியத் யூனியனில் மறுசீரமைப்பு, வெளிப்படைக் கொள்கை என்ற பெயர்களில் கோர்பசேவ் கொண்டுவந்தது எந்தவொரு அமைப்பிலும் அவ்வப்போது கொண்டு வரப்படும் அந்த அமைப்பை வலிமைப்படுத்துவதற்கான கொள்கை மற்றும் திட்டம் அல்ல. மாறாக அது அந்த அமைப்பின் அடிப்படையையே தகர்க்கும் எதிர்ப்புரட்சித் திட்டமாகும்.

எதிர்ப்புரட்சியும் சீர்திருத்தமும் வெவ்வேறானவை

ஸ்டாலின் மறைவிற்கு பின்பு அங்கு அதிகாரத்திற்கு வந்த திருத்தல்வாதிகள் தங்களது சோசலிசக் கருத்துக்களோடு தொடர்பில்லாத கருத்துக்களால், சிறிது சிறிதாக சோசலிசத்தின் அடிப்படை கூறுகளை செல்லரிப்பதுபோல் அரித்து அதனைப் பலவீனப்படுத்திக் கொண்டே வந்தனர். அதன் உச்சகட்டமாக அந்த அமைப்பில் மீதமிருந்த - முதலாளித்துவவாதிகள் மற்றும் அவர்களோடு ஒத்தூதிய கோர்பச்சேவின் மொழியில் சொல்வதானால்- ஆணைகளின் அடிப்படையிலான நிர்வாக முறையிலும் (Commandist Administraive Method) சோசலிசக் கருத்துக்களுக்கு நேர்முரணானதொரு மாற்றம் கொண்டுவந்ததே அவருடைய எதிர்ப்புரட்சி திட்டமாகும்.

சோசலிஸப் பொருளாதாரத்தின் ஒரு மிக முக்கிய அம்சம் திட்டமிடுதலாகும். ஏனெனில் முதலாளித்துவப் பொருளாதாரம் லாப நோக்கம் என்ற விதியினால் சுயமாகவே உந்தப்படுவது. சமூகத் தேவை குறித்து கவலை எதுவும் இல்லாது எது எதை எல்லாம் அதிக விலைக்கு விற்பதற்கு வாய்ப்பு உள்ளதோ அதை எல்லாம் உற்பத்தி செய்து விற்று லாபம் ஈட்ட தனியார் முதலாளிகள் முன்வருவர். அதாவது மக்கள் முதலாளித்துவச் சுரண்டலால் சூறையாடப்பட்டு வாழ வழியேதுமின்றி சாக விரும்பினால், அந்நிலையில் அவர்கள் சாவதற்குப் பயன்படும் விசம் அதிகம் விற்குமென்றால் அதையும் தாராளமாக உற்பத்தி செய்து விற்று பணம் சம்பாதிக்கவே விரும்புவர். அப்படிப்பட்ட சுயஉந்துதல் சோசலிஸப் பொருளாதாரத்தில் இல்லாததால் சமூகத் தேவையைக் கணக்கிட்டு அதற்கு உரிய விதத்தில் உற்பத்தியையும், தொழிற்சாலைகளையும் கட்டியமைக்க வேண்டியது சோசலிஸப் பொருளாதாரத்தின் அத்தியாவசிய முன் தேவையாகும்.

அவ்வாறு திட்டமிடுதல் மூலம் வகுக்கப்பட்ட முடிவுகளை அரசாணைகள் மூலமே அமலாக்க வேண்டும். அதையே கோர்ப்பசேவ் ஆணைகளின் அடிப்படையிலான நிர்வாக முறை என்று கூறினான். அந்த முறையை முடிவுக்குக் கொண்டு வருகிறேன் என்ற பெயரில் தான் அவன் மறுசீரமைப்புக் கொள்கைகளை அறிமுகம் செய்தான். அந்த முறை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுவிட்டால் சுயஉந்துதல் அடிப்படையிலான லாப நோக்க உற்பத்தி முறையே மீண்டும் வந்தாக வேண்டும். அதுதான் முதலாளித்துவம்.

எனவேதான் கோர்ப்பச்சேவ் கொண்டு வந்தது சீர்திருத்தமல்ல: எதிர்புரட்சி என்று கூறுகிறோம். அதாவது பிரச்னைகளின் ஊற்றுக் கண்ணாகவும், முரண்பாடுகளின் மொத்த உருவமாகவும் உள்ள முதலாளித்துவத்திலிருந்து அதைவிட உயர்வான சோசலிச அமைப்பிற்காக நடத்தப்படுவது புரட்சி. பழைய குருடி கதவை திறடி என்று பழைய அமைப்பிற்கே செல்வது எதிர்ப்புரட்சி.

உணர்வு மட்டம் பராமரிக்கப்படுவதன் அவசியம்

அடுத்தது சோசலிஸம் நீடித்து நிலவ வேண்டுமென்றால் அதுகுறித்த மக்களின் சமூக உணர்வு மட்டம் பராமரிக்கப்படுவதும் அவசியமாகும். முதலாளித்துவச் சுரண்டலின் நேரடிப் பாதிப்பில் இருந்த மக்கட் பகுதியினர் அந்த அமைப்பின் அவலத்தையும் சோசலிஸ அமைப்பின் மேன்மையினையும் சோசலிசத்திற்கு வந்தபின் உணர்ந்தவர்களாக இருப்பர். இருப்பினும் சோசலிச அமைப்பின் அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு முதலாளித்துவச் சுரண்டலின் கொடுமை குறித்த நேரடி அனுபவம் இல்லாமல் போய்விடும். அக்கொடுமை குறித்த அறிவு பூர்வமான விசயங்களை வேண்டுமானால் அத்தலைமுறையினருக்கு கொடுக்க முடியுமே தவிர அதுகுறித்த உணர்வுபூர்வ புரிதலை அத்துடன் இணைந்த வேதனையோடு அவர்களுக்கு வழங்க முடியாது.

மேலும் சோசலிஸ அமைப்பாகிய தங்கள் நாட்டைத் தவிர உலகின் அனைத்து நாடுகளும் முதலாளித்துவச் சுரண்டலிலிருந்து விடுவிக்கப்படவேண்டும் என்ற உணர்வும் சோசலிஸ நாட்டின் உழைக்கும் வர்க்கத்திடம் பராமரிக்கப்பட வேண்டும். இல்லை எனில் புதிதாக சோசலிஸ அமைப்பிற்குள் வந்த நாட்டின் கம்யூனிஸ்டுகள் என்ற உயர்ந்த உணர்வு மட்டத்தைக் கொண்டுள்ளவர்களைத் தவிர மற்ற பரந்த மக்கட் பகுதியினரிடையே மனநிலை மட்டத்தில் முதலாளித்துவச் சிந்தனைப் போக்கே மிகுந்து இருக்கும். அதனை அடிப்படையாகக் கொண்டு முதலாளித்துவம் மீண்டும் அதிகாரத்திற்கு வரமுயலும்.

எனவே ஒருபுறம் சோஸலிச உணர்வினை பரந்துபட்ட மக்கள் மனதில் கொண்டுவரவேண்டும். மறுபுறம் சோசலிஸ நாட்டில் சிறுபான்மையினராகவே இருந்தாலும் பழைய உடமை வர்க்கத்தினருடன் முதலாளித்துவ சிந்தனைப் போக்கு கொண்ட மக்களும் தங்களின் சோசலிஸம் குறித்த புரிதலின் போதாமை காரணமாகவோ அல்லது குழப்பத்தினலோ இனைந்து விடாதவாறு தடுக்கப்பட வேண்டும். அதைச் செவ்வனே செய்வதற்கு பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்பது அரசு வடிவமாக சோசலிஸத்தில் கட்டாயமாக இருக்க வேண்டும்.

உலகம் முழுவதும் சோசலிஸம் வர வேண்டும் என்ற ஆர்வத்தை சாதாரண மக்களிடம் கொண்டு வர வேண்டும் என்று கூறுவதும், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரக் கண்ணோட்டமும் அவற்றிற்கு எதிராக உலக அளவில் செய்யப்பட்டுள்ள பிரச்சாரத்தின் காரணமாக சாதாரணமக்களிடமே கூட ஒரு சந்தேகப் பார்வையை உருவாக்குகிறது. அதில் பயன்படுத்தப் பட்டுள்ள சர்வாதிகாரம் என்ற வார்த்தை அவர்களை அவ்வாறு பார்க்க வைக்கிறது.

மனிதன் சுயநல விலங்கா?

அதாவது சாதாரணமாக மனிதன் ஒரு சுயநலப் பிராணி என்ற அடிப்படையில் காலங்காலமாகக் கூறப்பட்டு வந்த கருத்து உலக அளவில் சோசலிஸத்திற்காக மக்கள் நிற்க முடியுமா என்ற சந்தேகத்தை மக்களிடம் இயல்பாகவே தோற்றுவித்திருக்கிறது. விஞ்ஞானப்பூர்வ சமூகவியல் கருத்துக்களின் அடிப்படையில் பார்த்தால் மனிதன் அடிப்படையில் சுயநலவிலங்கு என்று முன்வைக்கப்படும் கருத்து அடிப்படையிலேயே தவறானது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். மனிதனின் அடிப்படை உணர்வு அவன் எப்படியாவது வாழ்ந்தாக வேண்டும் என்பதாகவும், மனித இன விருத்தி குறித்ததாகவுமே இருக்கும்.

சுயநலம், சூது, வஞ்சகம், பொய், ஏமாற்று, பித்தலாட்டம் இவை அனைத்துமே சமூகத்தில் தனிச்சொத்து என்று தோன்றியதோ அன்றிலிருந்து உருவாகி வளர்ந்தவையே. ஆனால் பல நூற்றாண்டுகளாக தனிச்சொத்துடமை நீடித்துள்ளதால் அந்தப் பின்னணியில் தோன்றி வளர்ந்த இந்த கேடுகெட்ட குணங்கள் சாதாரண மக்கள் மனதில் ஆதிக்கம் செலுத்துபவையாக இன்று இருக்கவே செய்கின்றன. ஆனால் அவை போக்க முடியாதவையே அல்ல. பரந்த அளவிலான நீண்ட நெடிய இடைவிடாத கலாச்சாரப் போராட்டங்களின் மூலம் அவற்றை நிச்சயமாக அகற்ற முடியும்.

அரசு என்பது ஏதாவது ஒரு வர்க்கத்தின் சர்வாதிகாரமே

அரசு என்பது வர்க்கங்களால் பிளவுபட்ட சமூகம் ஏற்பட்ட பின்னரே தோன்றியதாகும். எனவே அது உள்ளடக்கத்தில் ஓர் அடக்குமுறைக் கருவியே. இன்றைய முதலாளித்துவ சமூக அமைப்பில் அது அனைத்து மக்களுக்குமானது என்று பாவனை காட்டிக்கொண்டு உள்ளடக்கத்தில் முதலாளி வர்க்கத்தைப் பொறுத்த வரையில் முழுமையான ஜனநாயக மாகவும் அதனை எதிர்க்கும் உழைக்கும் வர்க்கத்திற்கு சர்வாதிகாரமாகவும் விளங்குகிறது. இதை முதலாளித்துவ பிரச்சார சாதனங்கள் தங்களது அனைத்துத் திறமைகளையும் பயன்படுத்தி மூடி மறைக்கின்றன.

எனவே, ஒளிவு மறைவின்றிக் கூறுவதானால் சோ­லிச அரசும் ஓர் அடக்குமுறைக் கருவியே. அது மிகப் பெரும்பான்மை மக்களான உழைக்கும் வர்க்கத்தைப் பொறுத்தவரையில் முழுமையான ஜனநாயகம். ஆனால் சரக்குப் பரிவர்த்தனை நிலவுவதால் பழைய முதலாளித்துவச் சமூகத்தின் மிச்ச சொச்சமாக நிலவக்கூடிய தனிவுடைமைச் சிந்தனைப்போக்கு அதனை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்து, அது மீண்டும் முதலாளித்துவம் வருவதற்கான சிறிதளவு வாய்ப்பைக் கொண்டிருப்பதால் அந்தப் போக்கையும் அதனை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுபான்மையினரையும் பொருத்தவரை அது சர்வாதிகாரமாகும்.

இந்த பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கடுமை சரக்குப் பரிவர்த்தனை முறை சிறிது சிறிதாகக் குறைந்து வரும் வேளைகளில் அதற்கு உகந்த விதத்தில் குறைந்து சரக்குப் பரிவர்த்தனையே இல்லாத அமைப்பாக என்றைக்கு சமூகம் மாறுகிறதோ அன்று அரசு என்பது தேவையற்ற ஒன்றாக உலர்ந்து உதிர்ந்துவிடும். அது உலகின் அனைத்து நாடுகளிலும் சோ­லிஸம் ஏற்பட்டபின்தான் நடைபெற முடியும். ஏனெனில் வர்க்கங்களும் வர்க்க சிந்தனையும் இருக்கும்வரை அடக்குமுறைக் கருவியான அரசும் கடுமையாகவோ கடுமை குன்றியோ இருந்தே தீரும்.

ஸ்டாலினின் நடவடிக்கைகள்

இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில்தான் சரக்குப் பரிவர்த்தனையை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை சோவியத் யூனியனில் மாபெரும் தலைவர் தோழர் ஸ்டாலின் எடுத்து வந்தார். தொலைபேசி உள்பட மக்களுக்கான பல அத்தியாவசியத் தேவைகளை இலவசமாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டார்.

கூட்டுப்பண்ணைகளின் விளை பொருட்களை அவைகளுக்குத் தேவையான உழவு, அறுவடை எந்திரங்கள் போன்றவற்றிற்கு பண்டமாற்றாக பெற்று சரக்குப் பரிவர்த்தனையையும் லாபநோக்க உற்பத்தியையும் கட்டுப்படுத்தினார். படிப்படியாக கூட்டுறவுப் பண்ணைகளை கூட்டுப் பண்ணை களாகவும், கூட்டுப் பண்ணைகளை அரசுப் பண்ணைகளாகவும் ஆக்கி தனிச்சொத்து மனப்பான்மை நிலவுவதற்கு தேவையான புறச்சூழ்நிலையை இல்லாமல் செய்ய விரும்பினார்.

ஒரே தவறு

ஸ்டாலின், அவருக்கு இருந்த சோசலிசத்தை நிர்மாணிக்கும் மாபெரும் கடமையினை அவர் எதிர்கொண்ட பல்வேறு கடுமையான சூழ்நிலைகளுக்கு மத்தியில் செய்யவேண்டி இருந்தது. உலக ஏகாதிபத்தியங்கள் சோவியத்து யூனியனை தனிமைப்படுத்தி அதற்குக் கொடுத்த நிர்பந்தங்கள், உள் நாட்டின் எதிர்ப்புரட்சி சக்திகளுக்கு ஆயுதமேந்தி சோசலிஸத்தை நிர்மூலமாக்க அவை கொடுத்த ஆதரவு ஆகியவற்றை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக இரண்டாவது உலக யுத்தத்தை எதிர்கொண்டு பல ஆண்டுகள் தன்னந்தனியாகப் போராடி பாசிஸ ஹிட்லரின் படைகளை முறியடித்து அதன் பின்னர் அந்நாட்டில் போரினால் ஏற்பட்ட சேதமனைத்தையும் சரி செய்து சோவியத்யூனியனை உலகில் மிகப்பெரும் பொருளாதார, அரசியல், ராணுவ சக்தியாக உருவாக்கும் வேலையில் இடைவிடாது அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. இந்த நிர்ப்பந்தங்களால் சாதாரண மக்கள் மனதில் நிலைகொண்டிருந்த முதலாளித்துவ சிந்தனைப் போக்கிற்கு எதிரான கலாச்சாரப் புரட்சியை அவரால் நடத்த முடியவில்லை. அதுதான் அவர் சோசலிஸ அமைப்பை இன்னும் உறுதியானதாக்கும் விதத்தில் செய்யத் தவறிய நம்மால் அறிய முடிந்த ஒரே கடமையாகும்.

ஸ்டாலினுக்குப் பின் வந்தவர்களால் பின்பற்றப்பட்ட முதலாளித்துவப் பாதை

அவருக்குப் பின் சோவியத்யூனியனின் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த குருஷ்சேவ் முதல் பிரஸ்னேவ் வரை அனைவரும் இந்தப் பாதையில் சோசலிஸத்தை பயணிக்கச் செய்து அதனை உறுதிப்படுத்த சாதாரண மக்கள் மனதிலிருந்த முதலாளித்துவச் சிந்தனைப் போக்கை மாற்றுவதற்கு கலாச்சாரப் புரட்சியை தொடங்கி இருக்கவேண்டும். ஆனால் அதற்கு மாறாக அவர்கள் அம்முதலாளித்துவ சிந்தனைப் போக்கிற்கும் மதிப்பளித்து வளர்க்கும் விதத்தில் ஊக்க போனஸ் கொடுத்து வேலை வாங்குவது போன்ற நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினர்.

இதன் விளைவாக வளர்ந்த முதலாளித்துவச் சிந்தனைப் போக்கிற்கு இன்னும் தீனி போடும் விதத்தில் ஏகாதிபத்திய கலாச்சாரம் ஊடுருவ அனுமதிக்கப்பட்டது. சோவியத்யூனியனில் நடைபெறுவது பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சி என்பதை மாற்றி சோவியத்து அரசு, அனைத்து மக்களுக்குமான அரசு என்ற புதுவிளக்கம் குருஷ்சேவால் தரப்பட்டது.

அது முதலாளித்துவச் சிந்தனைப் போக்கிற்கு முழு வாய்ப்பினை அளித்து அதன் வளர்ச்சியை மேலும் தழைத்தோங்கச் செய்தது. இதன் விளைவாக ஒரு வகையான சோ­லிஸத் தனிநபர் வாதம் வளர்ந்தோங்கி அது சோசலிஸ கூட்டு வாதத்திற்கு எதிரானதாகியது. அது படிப்படியாக வேலையில் சிரத்தையின்மை, வேலைக்குச் செல்லாமல் இருப்பது போன்ற முதலாளித்துவப் போக்குகளை உருவாக்கி பாட்டாளி வர்க்க உணர்வோடு ஒரு தொடர்புமில்லாத நடவடிக்கைகளை வளர்த்தது.

தளர்த்தப்பட்ட கட்சி விதிகள்

இவ்வாறு படிப்படியாக வளர்ந்த முதலாளித்துவப் போக்குகள் சோசலிஸ சமூக அமைப்பை உள்ளிருந்தே புற்றுநோய் செல்கள் போல் அரித்துக் கொண்டிருந்தன. இதற்குகந்த வகையில் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகும் தகுதி குறித்த கட்சி விதிகளும் தளர்த்தப் பட்டதால் கட்சியில் கம்யூனிஸ்ட் கொள்கையோடு தொடர்பில்லாத பல சுயநலவாத சந்தர்ப்பவாத நபர்களும் ஆசாமிகளும் உள்ளே நுழைய வாய்ப்பு ஏற்பட்டது. இதன் விளைவாகத்தான் கோர்பச்சேவ் போன்ற அப்பட்டமான கம்யூனிஸ விரோதிகள் கம்யூனிஸ்ட் கட்சியில் நுழைந்தது மட்டும்அன்றி, அதன் தலைமைப் பதவிக்கு வரும் அளவிற்கு பாட்டாளிவர்க்க உணர்வு குன்றிய தளர்வடைந்த அமைப்பாக சோவியத் கம்யூனிஸ்டு கட்சி ஆகிவிட்டது.

துரோகம் வெளிப்படையாக ஆனது

அந்த சோசலிஸ துரோகி கோர்பச்சேவ்தான், அவனது எதிர்ப்புரட்சித் திட்டமான மறுசீரமைப்பு (பெரஸ்த்ரோஸ்க்கா), வெளிப்படைக் கொள்கை (கிளாஸ்னாஸ்ட்) போன்ற திட்டங்களின் மூலம் சோவியத் யூனியனின் தொழிலாளிவர்க்க ஆட்சிக்கு சமாதிகட்டி முதலாளிவர்க்க ஆட்சியை நிறுவினான். பின்னர் அவனையும் தாண்டி கொலைகார முதலாளித்துவத்தின் பிரதிநிதியாக உருவெடுத்த எல்ட்சினால் அவன் தூக்கியயறியப்பட்டபின் வெளிநாட்டு நிருபர்களிடம், புலம்பல்தொனியில் ஒப்புக் கொள்ளவும் செய்தான்! சோசலிஸத்தை முடிவுக்குக் கொண்டு வருவதே நான் எடுத்த முயற்சிகளின் நோக்கமாக இருந்தது என்று. அவன் வெளிநாட்டு பத்திரிக்கைகளுக்கு அளித்த ஒரு பேட்டியின் போது வெளிப்படையாக இதைக் கூறினான்.

அப்படியிருக்கையில் அவன் கொண்டுவந்த சீர்திருத்தங்கள் சோவியத்து அமைப்பையே தகர்த்துவிட்டன, அந்த அளவிற்கு சோசலிஸ அமைப்பு பலவீனமானது என்று திருவாளர் சுப்பிரமணியன்சுவாமி போன்றவர்கள் கூறுவது ஒரு கூற்றைத்தான் நமக்கு நினைவு படுத்துகிறது. அதாவது தூங்குபவர்களை எழுப்ப முடியும் "தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது' என்ற கூற்றையே நமக்கு நினைவுறுத்துகிறது.

சீர்திருத்தங்கள், திட்டங்கள் ஆகியவை ஓர் அமைப்பில் கொண்டுவரப்படும் போது அவை அக்குறிப்பிட்ட அமைப்பை வலிமைப்படுத்துவதற்காகவே கொண்டு வரப்படுகின்றன. அந்த அடிப்படையில் லெனின் காலத்தில் சோவியத் யூனியனில் கொண்டுவரப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை என்றத் திட்டத்தை ஒரு சீர்திருத்தத் திட்டம் என்று கூறலாம். அது அடிப்படை சோவியத் கோட்பாட்டிற்கு விரோதமானதாக இருந்தபோதிலும் தேவையான தொழிற்துறை முதலீட்டைக் கொண்டுவர ஒரு தருணத்தில் அது அவசியமானதாக இருந்தது. அது போன்ற திட்டங்களை நன்கு பயன்படுத்தவும் ஜீரணிக்கவும் சோசலிசத்தால் முடிந்தது. அதன் தேவையைப் பயன்படுத்திய பின் அதனை அவசியமற்றதென தூக்கி எறியவும் அதனால் முடிந்தது.

முதலாளித்துவத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கீன்ஸ் பாணிப் பொருளாதாரத் திட்டம் நவீனத் தாராளமயக் கண்ணோட்ட அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தக்கோட்பாடுகள் போன்றவை நெருக்கடிச் சூழ்நிலைகளிலிருந்து முதலாளித்துவத்தை தருணங்களுங்கேற்ற விதத்தில் காப்பாற்றி வலிமைப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டவை. இருந்தாலும் சமூகரீதியான உற்பத்தி - அதன் பலன் தனிநபர் ரீதியாக கபளீகரம் செய்யப்படும் போக்கு ஆகிய ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகவே முடியாத முரண்பாட்டை முதலாளித்துவச் சுரண்டல் அமைப்பு கொண்டிருப்பதால் நெருக்கடிமேல் நெருக்கடி ஏற்பட்டு அந்த அமைப்பு எத்தனை திட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும் நிரந்தரமான தீர்வை எட்டமுடியாததாக இருக்கிறது.

மரணப்படுக்கைக்கு வந்துவிட்ட முதலாளித்துவத்தைக் காக்க மேற்கொள்ளப்படும் வீண் முயற்சிகள்

புதிதாக அறிமுகம் செய்யப்படும் எந்தத் திட்டமும் நீண்ட காலத்திற்கு முதலாளித்துவ அமைப்பை நெருக்கடியில் இருந்து காப்பாற்ற முடியாததாக ஆகிவிடுகிறது. அதனால் அடுத்தடுத்து அறிமுகம் செய்யப்படும் திட்டங்கள் குறுகிய காலத்தில் பலன்தரமுடியாதவைகளாக ஆகிவிடுகின்றன. கீன்ஸ் பாணி பொருளாதாரத் திட்டம் ஒரு 50 ஆண்டுகள் முதலாளித்துவம் தட்டுத் தடுமாறி காலம் தள்ளுவதற்கு உதவி செய்தது என்றால் நவீன தாராளவாதம் 20 ஆண்டுகள் கூட முதலாளித்துவப் பொருளாதாரம் நெருக்கடியில் இருந்து தப்பிக்க வழிகாட்டவில்லை. இப்போதோ, புதிதாக எந்த வழியும் புலப்படாமல் மீண்டும் வேறு வழியின்றி பழைய கீன்ஸ் பாணி பொருளாதாரத் திட்டத்திற்கே திரும்பியுள்ளது. இதன்படி அரசுக் கட்டுப்பாடுகள் மூலம் பொருளாதாரத்தை நிலைப்படுத்த முயற்சி செய்வது போன்ற தகிடுதத்த வேலைகளை முதலாளித்துவம் தற்போது செய்து கொண்டுள்ளது.

முட்டாளை புத்திசாலி முட்டாளாக்கும் முயற்சி

அராஜகவாத முதலாளித்துவப் போக்கே நெருக்கடிக்குக் காரணம்; புத்திசாலித்தனமான முதலாளித்துவமே இன்றைய தேவை என்று சிலர் சொற்சிலம்பமாடுகின்றனர். உண்மையில் முதலாளித்துவ பொருளாதாரத் திட்டமே அராஜகவாதத் தன்மை வாய்ந்ததுதான். மக்களின் அடிப்படைத் தேவைகளைப் புறக்கணித்து எது விற்குமோ அதை உற்பத்தி செய்வதுதான்.

அது தேவைப்பட்டால் தென்னந் தோப்புகளை அழித்து மணலை வியாபாரம் செய்யும். மக்களின் வாங்கும் சக்தி குறைந்து போனால் மக்கள் வாங்காமல் அரசுகள் மட்டுமே வாங்கக் கூடிய ஆயுதத் தளவாடங்களை உற்பத்தி செய்யும். அதிக லாபம் அது ஈட்டுவதற்கு தேவைப்படும் சாதக சூழ்நிலைகள் இருந்தால் விளை நிலங்களை அழித்து தொழிற்சாலைகளாக்கும். லாபநோக்கிற்காக சுற்றுச்சூழலையே பாழாக்கும். பூமி வெப்பமடைந்து படிப்படியாக அதை வாழ்வதற்கு லாயக்கற்றதாக ஆக்கும் சீரழிவைக்கூட அதிக லாபம் ஈட்டுவதற்காக அது செய்யும்.

இந்த அடிப்படைகளில் திட்டமிடுதல், மக்கள் நலன் என்ற வரையரைக்குள் நிற்காத அராஜகத் தன்மை கொண்டதே முதலாளித்துவம். அதனை புத்திசாலித்தனமாக ஆக்க முயல்கிறோம் என்று கூறுவது அடிப்படையில் அடிமுட்டாளான ஒருவனை புத்திசாலியான முட்டாளாக்குகிறேன் என்று கூறுவது போன்றதுதான்.

இன்றும் சோசலிஸம் தூரத்துக் கனவுதானா?

இந்த சூழ்நிலையில் சோசலிஸம் என்ற நிலையான பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வைத் தரக்கூடிய அமைப்பை கொண்டுவருவது குறித்த பேச்சு முதலாளித்துவ சக்திகளால் மட்டுமின்றி கம்யூனிஸ்டுகள் என்ற பெயரில் நடமாடும் வர்க்க சமரச சக்திகளாலும் பேசப்படுவதில்லை. இந்த நெருக்கடி வெடிப்பதற்கு முன்பு சோசலிஸம் என்பது தொலைதூரக் கனவு. முதலாளித்துவமே இன்றைய நியதி. முதலாளித்துவ ரீதியிலான தொழிற்சாலைகள் கொண்டுவருவதே எங்களது நோக்கம் என்று கூறியவர் சி.பி.ஐ(எம்) கட்சியின் முதுபெரும் தலைவரும் மேற்குவங்க முன்னாள் முதல்வருமான திருவாளர் ஜோதிபாசு ஆவார்.

மாற்றிக் கொள்ளுங்கள் கட்சியின் பெயரை

அவரது அந்த சந்தர்ப்பவாத சறுக்கலை எத்தனை தவறானது என்று இன்று தோன்றியுள்ள - யாராலும் மறுக்கமுடியாத - நெருக்கடி தலையில் கொட்டி புரிய வைத்துள்ளது. இந்நிலையிலும் சோசலிஸமே இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு என்று அவர் சார்ந்துள்ள கட்சி அதன் பெயருக்குப் பொருத்தமான விதத்தில் கூற முன்வரவில்லை. மாறாக நாசூக்காக சி.பி.ஐ(எம்) கட்சியின் இன்றைய பொதுச்செயலாளர் முதலாளித்துவத்தின் இந்த நெருக்கடிக்குக் காரணமாக பொருளாதார சீர்திருத்தக் கொள்கையைக்காட்டி முதலாளித்துவத்தை மூடிமறைத்துக் காக்கவே முயல்கிறார். அதாவது பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகளை அமுல்நடத்துவதை தாங்கள் தடுத்து நிறுத்தியது இந்திய முதலாளித்துவத்தை காப்பாற்றியுள்ளது என்ற பொய்த்தோற்றத்தையே ஏற்படுத்த முயல்கிறார்.

அதாவது அவர்கள் காங்கிரஸ் அரசுக்கு நிர்பந்தங்கள் கொடுத்து கீன்ஸ் பாணிப் பொருளாதார மிச்ச சொச்சங்களை அழியாமல் காப்பாற்றியதே இந்தியப் பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்கு செய்த வேலையாகும். இப்போதும் அவரது கட்சியும் அதன் சிந்தனைப் பெட்டகங்களான பிரபாத் பட்நாயக் போன்றவர்களும் வலியுறுத்துவதும் கீன்ஸ் பாணி பொருளாதாரத்தை மீண்டும் கொண்டு வருவதே தவிர, மார்க்ஸியத்தின் பக்கம் தங்களது பார்வையை திருப்புவது அல்ல. இதுதான் இவர்கள் முன்வைக்கும் தீர்வு என்றால் பேசாமல் இவர்கள் தங்களது கட்சியின் பெயரை 'கேப்பிட்டலிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா (கீன்ஸ்)' அதாவது சி.பி.ஐ.(கே) என்று மாற்றிக் கொண்டால் அது அவர்களது செயலுக்குப் பொருத்தமான பெயராக இருக்கும்.

இந்நிலையில் சோசலிஸம் அடைந்த பின்னடைவுகளிலிருந்து படிப்பினை எடுத்துக் கொண்டு, ஓர் அடிப்படைச் சமூக மாற்றத்தின் மூலம் சோசலிஸப் பொருளாதாரத்தை கொண்டு வருவதே இன்று மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கக் கூடிய அனைத்துப் பிரச்னைகளுக்குமான தீர்வு என்பதை உணர்ந்து, மாமேதைகளான மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின் போன்ற தலைவர்களின் வழி நின்று இன்றைய தேவைகளுக்கு உகந்த விதத்தில் அவர்கள் உருவாக்கிய மார்க்சிஸ லெனினிஸ கருத்துக் கருவூலத்தைச் செழுமைப்படுத்தி சோசலிஸத்தைக் கொண்டுவர பாடுபடுவதே உணர்வு கொண்ட உழைக்கும் வர்க்கத்தின் கடமையாகும்.

விழிப்படைந்து வரும் மேலைநாட்டுத் தொழிலாளி வர்க்கம்

மேலை நாட்டு உழைக்கும் வர்க்கத்தின் பார்வை அந்த திசை வழியில் திட்டவட்டமாக திரும்பத் தொடங்கிவிட்டது. மாமேதை மார்க்ஸின் முதலாளித்துவம் குறித்த இந்த சகாப்தத்தின் இணையற்ற நூல்களான கம்யூனிஸ்ட் அறிக்கை, மூலதனம் போன்றவற்றின் விற்பனை பல மடங்கு அதிகரித்திருப்பதை முதலாளித்துவப் பத்திரிக்கைகளே மறைக்க முடியாமல் வெளியில் சொல்லும் சூழ்நிலை தோன்றியுள்ளது.

முன்னாள் ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு என்ற பெயரில் சோசலிஸ நாடாக இருந்து இன்று ஜெர்மனியுடன் இணைந்த பகுதியில் 30 சதவீதத்திற்கு மேலான மக்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புகளில் சோசலிஸமே இன்றைய நெருக்கடி மற்றும் சமூகப் பிரச்னைகளுக்கான தீர்வு என்று கூறியுள்ளனர்.

இங்கிலாந்து நாட்டின் ஆர்ச்பி­ப் போன்ற மதகுருமார்கள் கூட மார்க்ஸின் கருத்துக்கள் எத்தனை உன்னதமான பகுப்பாய்வு தன்மை வாய்ந்தவை; அவை முன்வைக்கப்பட்டு 150 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் சமுதாய முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் வழி காட்டக் கூடியவையாக எவ்வாறு விளங்குகின்றன என்பதை கூறத்தொடங்கியிருக்கிறார்கள்.

ஆங்கிலக்கவி ஷெல்லி அவரது மேற்குத் திசைக்காற்று என்ற கவிதையில் கூறினார் : வந்துவிட்ட கடும் குளிர் காலம் வசந்தத்தின் வருகை வெகு தொலைவில் இல்லை என்பதையே முன்னறிவிக்கிறது என்று. ஆம். இன்று தோன்றியுள்ள நெருக்கடி வரப்போகும் சமூக மாற்ற வசந்தம் தொலைவில் இல்லை என்பதை முன்னறிவிப்பதாகவே உண்மையில் இருக்கிறது.

வாசகர் கருத்துக்கள்
Anon
2009-02-18 01:37:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Wonderful article. Who is the author ?

joseph raja
2009-02-18 04:50:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

yar eludunadunu podamatigala ena.nanum oru marxiyavaditan inda karuthula enaku matrukarutu illai.nantri

த.சிவக்குமார்
2009-02-21 04:53:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

வாசகர்கள் பலரும் கட்டுரையை படித்துவிட்டு அதை எழுதியவர் பெயர் குறிப்பிடுமாறு கேட்கின்றனர். Ðஎனவே மாற்றுக்கருத்து! இதழில் வெளியிடப்படும் இந்த அறிவிப்பினை இங்கும் வெளியிடுவது பொருத்தமானதாக இருக்கும் என்று நம்புகிறோம்.
நன்றி!

த.சிவக்குமார்,
ஆசிரியர்
மாற்றுக்கருத்து!
22.02.2009

பதிப்பாசிரியர் குறிப்பு
மாற்றுக்கருத்து! இதழில் வெளிவரும் கட்டுரைகளில் அவற்றை எழுதியவர் பெயர் குறிப்பிடப்படாத கட்டுரைகள் அனைத்தும் ஆசிரியர் குழுவின் கூட்டு விவாதத்தின் அடிப்படையில் வெளியிடப்படும் கட்டுரைகள் ஆகும்.

தொடர்புக்கு:
த. சிவக்குமார்,
3/112, திலகர் தெரு, பேங்க் காலனி,
நாராயணபுரம், மதுரை -625 014.
இ மெயில் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

விடுதலை
2009-03-10 04:27:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

//மாற்றிக் கொள்ளுங்கள் கட்சியின் பெயரை//

கத்தியை எடுடா விரமாக பேசுடா ஆவேசமா கத்துடா கழுத்துக்குகீழே வைத்து புரட்சி ஓங்குக என்று சொல்லி குத்திக்கிட்டு சாவுடா என்பதுபோல் இந்த கட்ரையில் சிபிஎம் பார்த்து பெயரை மாற்றசொல்வதும் ஏதோ சிபிஎம் தான் உண்மையான முதலாளித்துவ கட்சி என்பதுபோலவும். அவர்கள் புரட்சிக்கு தடையாக இருப்பதுபோலவும் கூச்சலிடுவது யாரை திருப்த்திப்படுத்த என்பதை நன்பர் சிவக்குமார் விளக்குவார் என்று எதிர்பார்க்கிறேன்.

இந்தியாவில் இன்றைக்கு இடது சாரிகளின் நிலை என்ன திரிபுரா, மேற்குவங்கம், கேரளா பிறகு ஆந்திரா,தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் தவிர்த்து குறிப்பிட்ட அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில் இல்லாதபோது.

இங்கே சிபிஎம் மீது சேற்றை வாரி விசுவது எதற்கு? இந்தியாவில் புரட்சி வந்தால் அது நிச்சயம் சிபிஎம் கட்சியின்மூலம் மட்டுமே வரவாய்பு உள்ளதை வரலாறு சொல்லிக்கொண்டு இருப்பதை தவிற்க நினைப்பதன் உள்நோக்கம் என்ன என்பதை புரிந்துகொள்வது சுலபம்.

மற்றப்படி சிறப்பான கட்டுரை வாழ்த்துகள்

த.சிவக்குமார்
2009-03-12 12:12:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

கார்க்கி விஜய் அவர்களுக்கு,

// சிபிஎம் பார்த்து பெயரை மாற்றசொல்வதும் ஏதோ சிபிஎம் தான் உண்மையான முதலாளித்துவ கட்சி என்பதுபோலவும். அவர்கள் புரட்சிக்கு தடையாக இருப்பதுபோலவும் கூச்சலிடுவது யாரை திருப்த்திப்படுத்த//

இது யாரையும் திருப்திப்படுத்த அல்ல நண்பரே, போலிகளை அம்பலப்படுத்த.
சி.பி.எம். மட்டுமல்ல, காங்ரஸ், பிஜேபி போன்றவையும் முதலாளித்துவ கட்சிகள்தான். ஆனால் அவை கம்யூனிஸ்ட் கட்சி என்ற போர்வையில் உலாவருவதில்லை. ஆனால் சி.பி.எம். கட்சி தன்னை ஒரு கம்யூனிஸ்ட் கட்சி என்று தோற்றம் காட்டிக் கொண்டு முதலாளித்துவ நச்சுக்கருத்துக்களை நாசூக்காக கூறிவருகிறது. இதனால் சி.பி.எம். கட்சியின் கருத்தே உண்மையான கம்யூனிசத்தின் கருத்து என்று எண்ணும் மக்கள் கம்யூனிசத்தைப் பற்றியே தப்பாக நினைத்து விடுகின்றனர். எனவே அவர்களை அம்பலப்படுத்த வேண்டிய வேலையும் நமக்கு கூடுதல் பணியாகி விடுகிறது.

இன்று உலக முதலாளித்துவத்தை சூழ்ந்துள்ள நெருக்கடிக்கு தீர்வு சோசலிசப் புரட்சியே என்று கூறும் துணிவு அவர்களுக்கு இல்லை. ஆனால் அவர்கள் முன்பு போல் இன்று “சோசலிசம் தூரத்துக்கனவு, முதலாளித்துவமே இன்றைய நியதி” என்று வெளியில் சத்தமாகச் சொல்வதில்லை.
இருந்தாலும் இந்தியாவில் புரட்சி சாத்தியமில்லை என்ற அவநம்பிக்கையை தனது தொண்டர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அக்கட்சி ஏற்படுத்தி வருகிறது.

அதனால்தான் அதன் ஆதரவாளராகிய தங்களால் “இந்தியாவில் நிச்சயம் புரட்சி வரும். அதுவும் சிபிஎம் கட்சியின்மூலம் மட்டுமே வரும்” என்று கூறமுடியவில்லை. // இந்தியாவில் புரட்சி வந்தால் அது நிச்சயம் சிபிஎம் கட்சியின்மூலம் மட்டுமே வரவாய்பு உள்ளது// என்றுதான் கூறமுடிகிறது.

இந்தியாவில் புரட்சி வந்தால்..... அல்ல என் நண்பரே! இந்தியாவில் புரட்சி வரும். நிச்சயம் வரும். அது ஒன்றைத்தவிர கோடானுகோடி இந்திய மக்களின் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் விடிவைத்தர வல்ல தீர்வு வேறொன்றில்லை.

ஆனால் அப்புரட்சி இந்தியாவில் வரவேண்டுமென்றால் புரட்சியின் மீது அவநம்பிக்கையை பரப்பும் சி.பி.எம். போன்ற போலிகளை அம்பலப்படுத்த வேண்டியது நம் கடமையே.

தங்களுக்கு இந்த விளக்கம் திருப்தி இல்லையென்றால் எழுதுங்கள்.... விவாதிப்போம்.

மற்றபடி... // சிறப்பான கட்டுரை வாழ்த்துகள்// என்ற தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

த.சிவக்குமார்,
ஆசிரியர்
மாற்றுக்கருத்து!

kesavkumar
2009-03-28 01:53:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

சி பி எம் கட்சி ஒரு முதளித்துவ கட்சி என்பதற்கு உதாரணம்
1.சிங்கூர்,நந்திக்ராம் யில் விவசாயிகள் நிலத்தை பிடுங்கி டாடாவிற்கு கொடுத்து விட்டு , நீதி கேட்டு போராடிய விவசாகிகளை சுட்டு கொன்றான் புத்ததேவ்
2. கேரளாவில் விஜயன் உழல்
3. தமிழகத்தில் கூட்டு

kannan.k
2009-04-06 08:02:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

hello suci part II 60 varusa ma katchi vachirukkara neenka ennatha kelichikanga , summa oru otta maatrukaruthu paperla eluthana mattum poothuma. muthalithuvam ennaikum aliyathu , villunthalum elunthu varum kunam atharkku undu. communism ella ungala mathiri suyanalamikal irrukum varikum varave varathu mr . maarukaruthu. summa cpm ,cpi kurai solra yogithai yaarukum ketaiyathu indiana cpi,cpim than intha cwp,suci ellam velaikku akathu kannukala, marks sariya purichukittu athan valliyil chellum oray thalaivar mr prakash karat

suresh s
2009-04-12 05:53:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

It is a wonderful article except some views about cpi(m). mr.sivakumar, please see the articles which were written by com.seetharam yechuri in peoples democracy inthe recent past which advocate the socialism is the only remedy for the current global melt down

த.சிவக்குமார்
2009-04-12 11:38:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Mr.Suresh
Even in their Election Campaign Booklet for Lok Sabha Election 2009 entitled as
Global economic crisis and India: Need for alternative pro people policies released in March 2009 they advocates Keynesian economy not Socialistic Economy as solution to the current crisis. The relevant para is :
“CPI(M)’S ALTERNATIVE PROPOSALS
The way out of the slowdown in the Indian economy cannot be found
unless massive public expenditure is undertaken aimed at creating
jobs and increasing the purchasing power of the people. A big increase
in public investment is required in employment generation, rural
development, agriculture, social sectors and infrastructure.”
http://vote.cpim.org/sites/default/files/Global%20Crisis%20and%20India.pdf

It is nothing but Keynesian alternative not socialistic. What we say in this article//இப்போதும் அவரது கட்சியும் அதன் சிந்தனைப் பெட்டகங்களான பிரபாத் பட்நாயக் போன்றவர்களும் வலியுறுத்துவதும் கீன்ஸ் பாணி பொருளாதாரத்தை மீண்டும் கொண்டு வருவதே தவிர, மார்க்ஸியத்தின் பக்கம் தங்களது பார்வையை திருப்புவது அல்ல.// is not without basis.

You can not satisfy with the argument that it is meant for voters. Because If they are seriously believe that the Socialism is the only solution to this Economic crisis, it should be reflected in their election manifesto. Otherwise there is no meaning in the Communists participating the Parliamentary Politics if they are real communists. Please think over.

Mr. Suresh, You referred me to // see the articles which were written by com.seetharam yechuri in peoples democracy in the recent past which advocate the socialism is the only remedy for the current global melt down //

I have visited to the site of PD, but I could not get the articles you referred. There is also no search facility. Please post some links or URL address if possible. After that we can discuss further.

suresh s
2009-04-13 07:12:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

mr.sivakumar, thank you for your openness.please go to the website cpim.org. then go to peoples democracy march 8th 2009 issue the articles titled by capitalist crisis and socialist revolution

shahul
2009-04-13 09:43:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

world crices

த.சிவக்குமார்
2009-04-13 11:15:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Mr Suresh
Thank you. I got the article.

kathiresan .k
2009-05-01 05:20:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Mr.கண்ணன் கே அவர்களே ,

எங்களது மாற்றுக்கருத்து பத்திரிக்கை உபயோகமற்றது என்றும் மற்றும் எங்கள் கட்சியை பற்றி குறை சொல்லும் நீங்கள் எங்கள் மீது என்ன குற்றம் சாட்டு கிரிகர்கள் என்பதை தெளிவாக சொன்னால் நாங்கள் பதில் சொல்ல தயாராக இருக்கிறோம்

கதிரேசன்.கே
advocate,
comunist worker platform for action (CWP)
Chennai

தியாகு
2009-09-12 07:30:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

மிக பயனுள்ள கட்டுரை நன்றி