இலக்கிய அனுபவம் பெற்றுத் தேர்ந்த மொழியாளுமை மிக்கவரால் தான் ‘நல்ல’ நாவல் படைக்கமுடியுமென்ற எண்ணம் இன்று தகர்ந்துவிட்டது. ஒரு வட்டாரத்தில் வாழும் மக்களின் வாழ்க் கையை யதார்த்தப் பின்புலத்தில் யாராலும் நாவலாக வெளியிட முடியுமென்ற நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில்தான் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றும் ஜோ டி குரூஸ் ‘ஆழிசூழ் உலகு’எனும் உயிர்ப்புமிக்க நாவலை எழுதினார்.

குமரி மாவட்டத்திலுள்ள ஆமந்துறை என்ற மீனவக் கிராமத்தினை மையமாகக் கொண்டு நாவல் விரிகிறது. 1985ஆம் ஆண்டு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று திரும்பும் சிலுவை, சூசை, கோத்ரா பிள்ளை என்ற மூன்று பரதவர்களும் புயலில் மாட்டிக் கொள்வதாக நாவல் தொடங்குகிறது. மூவரும் மூன்று தலைமுறை களின் குறியீடுகள். பசியாலும் குளிராலும் வாடி நீரில் மிதக்கையில் ஒருவர் மற்றவருக்காக உயிர் துறக்கின்றனர்; சிலுவை மட்டும் காப்பாற்றப்படுகிறான். இதற்கிடையில் 1933ஆம் ஆண்டு தொடங்கி வெவ்வேறு காலகட்டங்களில் கடலிலும் கடற்கரையிலும் நடைபெற்ற சம்பவங்களின் வழியாக நாவல் தொடர்கிறது.

பதினைந்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் விவரிப்பில் மூன்று தலைமுறைகளாக, கிராமத்தில் ஏற்படும் மாற்றங்கள் பதிவாகியுள்ளன. ஆமந்துறையில் மீனவர்களும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நாடார்களும் வாழ்கின்றனர். இவர்களிடையே அவ்வப் போது மோதல்களும் கொலைகளும் நிகழ்கின்றன. ஆனால் நடப்பில் நாடார்களும் பரதவர்களும் ஒருவரை ஒருவர் சார்ந்தே வாழ்கின்றனர். கிறித்துவர்களாக வாழ்ந்தாலும் பரதவர் களிடம் நாட்டார் நம்பிக்கைகளும் நாட்டார் தெய்வ வழிபாடும் செல்வாக் கோடு உள்ளன. சான்றாக, திமிங்கலம் போன்ற பெரிய மீனிடம் மாட்டிக்கொள் ளும்போது குமரி ஆத்தாவைத் துணைக்கு அழைக்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் கடலில் மீனுக்காகப் பயணம் செய்கையில் அவர்கள் கரை திரும்புவார்கள் என்பது நிச்சயமற்ற ஒன்று. எப்பொழுதாவது கடலில் உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் அவர்களுடைய போராட்டம் இடைவிடாமல் தொடர்கிறது. பரதவர்கள் எல்லா வழிகளிலும் பொருளியல் ரீதியாகச் சுரண்டப்படுகின்றனர்; அவற்றி லிருந்து மீள்வது குறித்த தெளிவும் அவர்களிடமில்லை. அவர்கள் தங்களுக்குள்ளாகவே குழுக்களாகப் பிரிந்துகொண்டு அடிதடி, வெட்டுகுத்து, கொலை முதலான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

பரதவர் வாழ்க்கையில் திருச்சபையின் ஆதிக்கம் மறுக்க முடியாத ஒன்று. அது நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ இருக்கலாம். கிறித்துவ ஆலயத்தில் பங்குத் தந்தையாகப் பணி யாற்றிய காகு பாதிரியாருக்கும் ஆமந்துறைப் பரதவர்களுக்கும் இடையிலான உறவு நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கடனாக, கருவாடு வாங்கி வியாபாரம் செய்ய வந்த ரத்னசாமி நாடாருக்கும் ஆமந்துறைப் பரதவர்களுக்கும் இடை யிலான உறவு குறித்த சித்திரிப்பு மனித உணர்வின் உன்னதமான வெளிப்பாடு. பரதவர்கள் தொழில்ரீதியில் ஒன்றிணைந்தாலும் தனிப்பட்ட நிலையில் கிராமத்தினருடனும் தங்களுக்குள்ளும் முரண்பட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

பரதவர்களிடையே நிகழும் ஆண்-பெண் உறவின் பாலியல் ‘அத்துமீறல்களை’ நாவல் இயல்பாகப் பதிவு செய்துள்ளது. ஆண்களைப் போலவே பெண்களும் தங்கள் காமத்தினையும் காதலினையும் வெளிப்படுத்திடத் தயங்குவதில்லை. ரோஸம்மா இதற்கோர் உதாரணம்; தன்னிடம் உறவு கொள்பவனின் மகனிடம் உறவு கொள்கிறாள். பரதவர் குறித்த பல நாவல்களிலும் அவர் களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே பிரச்சினைகளும் அதனைத் தொடர்ந்து கலவரங்களும் நிகழ்வது பதிவு செய்யப் பட்டுள்ளது. இந் நாவலிலும் இவ்வாறான சம்பவமொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாவலின் இடையிடையே சங்ககால நெய்தல் நில வாழ் வினைச் சித்திரிக்கும் பாடல்களை இணைத்திருப்பது நம்மை அருஞ்சொற்பொருட்களைத் தேடிப் படிக்கவைக்கிறது. பரதவர்களின் வாழ்வியலைப் பின்புலமாகக் கொண்டு தமிழில் கடல்புரத்தில், உப்புவயல், மாணிக்கம், வாங்கல், கன்னி எனப் பல நாவல்கள் வெளிவந்துள்ளன. அத்தனையும் சுவாரஸ்யமாகவும் புதுவித வாசிப்பனுபவத்தைத் தருவனவாகவும் உள்ளன. நிலத்தில் மட்டுமே வாழும் நமக்குக் கடற்புரத்தில் வாழும் பரதவர்கள் பற்றிய அறிமுகமின்மையும் பெரும்பான்மையான மக்களாக இருந்தும் அவர்கள் ஆதிக்க அரசியல் செய்யாமலிருப்பதும் அவர் களின் சாகச வாழ்வும் அவர்களைப் பற்றி வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.