தலையங்கம்

மனிதப்புலன்களின் செயல்பாடுகள் காட்சிப்புலனை அடிப்படையாகக் கொண்டிருப்பதாகக் கருதமுடியும். எழுத்துப்பயிற்சி மூலம் உருவான வாசிப்புப் பழக்கம், காட்சி வழி செயல்படுவதை அச்சுஊடகத்தில் காணமுடிகிறது. இதனைக் “காமிக்ஸ்” (Comics) என்று அழைக்கலாம். சித்திரம் வழி கதையை வாசிப்பதால் சித்திரக்கதை என்று மொழி பெயர்த்துக் கொள்கிறோம்; இந்நிகழ்வு அச்சுப்பண்பாட்டில் குறிப்பிடத்தக்க ஒன்றாக அண்மைக்காலங்களில் உருப்பெற்று வளர்ந்து வருகிறது. படங்களை உள்ளடக்கிய இவ்வடிவத்தில் வரைபடநாவல் (Graphic Novel) என்பது ஐரோப்பிய மொழிகளில் சிரத்தையுடன் வெளிவருவதைக் காண்கிறோம்.

கடந்த இருநூறு ஆண்டுகளில் ஐரோப்பிய மொழிகளில் வளமுடன் செயல்பட்டு வரும் இவ்வகைமை கடந்த அறுபது ஆண்டுகளில் தமிழ்ச்சூழலில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. வரைபடநாவல் தமிழில் இன்னும் உருவாகவில்லை. தமிழ் அச்சுப்பண்பாட்டின் போக்குகளைத் தமிழ்ச் சித்திரக்கதை தமிழ்ச்சூழலில் புழங்கப்படுவதைக் கொண்டு மதிப்பிடலாம்.

வாசிப்புப்பழக்கம் தமிழ்ச்சூழலில் பெரும்பான்மையாக வெகுசனத் தன்மையைக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். உலகின் அனைத்து மொழிகளிலும் வெகுசனத்தன்மை நடைமுறையில் இருந்தாலும் தமிழில் மிக அதிகமாக இத்தன்மை செயல்படுவதாகக் கூறலாம். ‘தினத்தந்தி’, ‘தினமலர்’ போன்ற பிற நாளிதழ்களிலும் நக்கீரன், குமுதம் போன்ற பருவ இதழ்களும் பாக்கெட் நாவல்களும் இத் தன்மையை அறிவதற்கான நேரடித் தரவுகளாக உள்ளன.    தமிழில் உருவான சித்திரக்கதை மரபும் வெகுசனத் தன்மையைப் பெரிதும் உள்வாங்கியதாகவே செயல்பட் டுள்ளது. மாற்றுச் சித்திரக்கதை மரபு உருவாக்கம் தமிழில் இனிமேல்தான் உருவாக வேண்டும்.

இதன் தொடக்கமாக, விடியல் பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்த சத்ரபியின் ‘ஈரான்: ஒரு குழந்தைப் பருவத்தின் கதை’ மற்றும்’ ‘ஈரான்: திரும்புதல்’ ஆகிய மொழியாக்க வரைபட நாவல்கள் அமைகின்றன*. இதனைச் சாத்தியப்படுத்திய எம். கண்ணன், எஸ். பாலச்சந்திரன் மற்றும் விடியல் சிவா ஆகியோருக்குத் தமிழ்ச்சமூகம் நன்றி பாராட்டுவது அவசியம். இதனைத் தொடர்ந்து ‘சே: வாழ்க்கை வரலாறு’, ‘அமெரிக்கப் பேரரசின் மக்கள்வரலாறு’ ஆகிய இரு நூல்கள் இரா.செந்தில் அவர்கள் மொழிபெயர்ப் பில் ‘பயணி’, வெளியீட்டகம் கொண்டு வந்துள்ளது. தமிழ் அச்சுப் பண்பாட்டின் வளமாக இதனைக் கருதலாம். வெகுசனப் பண்பாடும் மாற்றுப் பண்பாடும் சமஅளவில் செயல்படும் சூழலே வளமான சூழலாகக் கருதமுடியும். தமிழில் சித்திரக்கதை மரபு வெகுசனத்தன்மை யிலிருந்து மாற்றுப்பண்பாட்டை நோக்கிச் செயல்படும் எத்தனமாக, இத்தருணத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் வழிகாட்டுதலில் 1992ஆம் ஆண்டுவாக்கில் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறை மாணவர்கள், ‘வாசிப்புப்பழக்கமும் வெகுசனப்பண்பாடும்’ எனும் களஆய்வை மேற்கொண்டனர். அதன்மூலம் பள்ளிக்கல்வியைப் பாதியில் விட்டவர்கள் (Drop outs) நுகர்வத் தன்மைய நோக்கியே, தமிழ்அச்சப் பண்பாடு கட்டமைக்கப்படுவதைக் காணமுடிந்தது. தமிழ் சினிமாவின் தொங்குதசையாக வாசிப்புப் பழக்கமும் அதன் விளைவான நுகர்வுசார் அச்சுப்பண்பாடும் தமிழ்ச்சூழலில் செயல்பட் டதை மேற்குறித்த களஆய்வு உறுதிப்படுத்தியது. அன்றைய சூழலில் சுமார் இருபது பருவஇதழ்கள் ரஜினிகாந்த் பெயரில் வெளிவந்தன.

சினிமாவைப் பார்க்கும் வாசிப்பாளனுக்குத் தீனிபோடுவதாகவே தமிழில் வாசிப்புப்பழக்கம் நிலவியது, இன்று அத்தன்மை ஓரளவு மாறியிருப்பதாகக் கருதலாம். மேற்குறித்தக் களஆய்வை: வாசிப்பவர், விநியோகிப்பவர், உற்பத்தியாளர், ஆக்கத்திற்கு எழுதிக்கொடுப்பவர் (படைப் பாளியன்று) எனப் பலதரப்புகளில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வை அடிப்படையாகக் கொண்டு செய்தோம். தமிழகம் முழுவதும் உள்ள சுமார் ஐம்பது மாணவர்கள் இக்களஆய்வில் ஈடுபட்டனர்.  (அத்திட்டம் எழுத்து வடிவில் முழுமையாக வெளியிட இயலாமல் போயிற்று. இப்போது அது காணாமல் போய்விட்டது.)

இந்தச் சித்திரக்கதைச் சிறப்பிதழ்; வெளியீட்டாளர், ஓவியர், வாசிப்பாளர், சேகரிப்பாளர், ஆய்வாளர் எனும் ஐந்து தளங்களிலும் செயல்படுவதைப் பதிவு செய்துள்ளன. இவ்விதழின் அழைப்பாசிரியர்கள் பல்வேறு சுவையான விவரணங்களை பதிவு செய்துள்ளனர்.  சித்திரக்கதை ஓவியர்கள் மிகவும் பிரபலாமான வெகுசன விருப்புசார் (Populist) தளத்தில் செயல்படும் அச்சுஊடகத்தில் வரைபவர் களாக உள்ளனர். இவர்களின் கோடுகள் பெண் என்ற உயிரியைக் காட்டுவதில்லை. மாறாக அவர்களது உடல் உறுப்புக் களையே காட்சி  மரபாக   வெளிப்படுத்துபவை. அது வெகுசன விருப்பு மரபு சார்ந்த நுகர்வுப் பண்ட விற்பனை யோடு இணைந்த பண்பாகக் கருதலாம். இவர்களே தமிழ்ச் சித்திரக்கதை ஓவியர்களாக வும் இருப்பதைக் காண்கிறோம். இதன்மூலம் தமிழ்ச்சித்திரக்கதை மரபு வெகுசனநுகர்வுத் தளத்தை மீறவில்லை என அறியமுடிகிறது.

மேலும் சித்திரக் கதையின் நுகர்வோர் சிறார்கள் எனும் பொது ஊகம் பொய்யாகிறது. இவற்றை நுகர்வோர் பெரும் எண்ணிக்கையில் பதின்பருவத்தைக் கடந்தவர்களாகவே உள்ளனர். சித்திரக்கதை வாசிப்பும் சேகரிப்பும் ஒரு வகையான விருப்பார்வத் துறை (Hobby)யாகவே செயல்படுவதைக் காண்கிறோம். இதனை மீறிய கருத்துநிலைசார் பிரக்ஞையாக இத்துறை தமிழில் உருவாக வேண்டும். அப்போது நம் குழந்தைகளும் பதின் பருவத்தோரும் புதிய வாசிப்புப் பழக்கத்திற்கு உட்படுவதற்கான வாய்ப்புகள் மிகுதி. ஆங்கிலம் வழி வாசிக்கும் பதின் பருவத்தோர் வரைபட நாவல்களைத் தேடித் தேடி வாசிப்பதைக் காணமுடிகிறது. அத்தன்மை விருப்பார்ந்த துறையாகச் செயல்படும் அதே வேளையில் கருத்துநிலைசார் (Ideological) உரையாடலுக்கும் களனாக அமைவதைக் காண்கிறோம். இவ்வகையான உரையாடலை முன்னெடுக்க இவ்விதழ் உதவும் என்று நம்புகிறோம்.

சித்திரக்கதையின் காட்சித்தன்மை, சித்திரக்கதைகளுக்கும் சிறார்களுக் கும் உள்ள உறவு ஆகியவை தொடர்பான உரையாடல்களை மருது மற்றும் வேல் சரவணன் ஆகியோர் பதிவுகள் முன்வைக்கின்றன. வியப்பளிக்கும் வகையில், சித்திரக்கதை சேகரிப்போர் குறித்த விவரணங்கள் உள்ளன. இத்தன்மை உலகம் தழுவியதாகவும் உள்ளதைக் காண்கிறோம். சேகரிப்போரின் மனநிலை, எப்போதும் குழந்தை மனநிலை யாகவே உள்ளது. குழந்தை மனநிலையில் மனிதர்கள் வாழ்வது சில கணமாயினும், அது அபூர்வமான கணம். இவ்வகையில் வாசிப்பு மற்றும் சேரிப்புசார் உளவியல் தன்மைகளும் இவ்வகைமையில், மகிழ்ச்சியளிப்பதாகவே அமைகிறது.

இவ்விதழ் வெகுசன வாசிப்பு மரபின் அரசியலைப் புரிந்து கொள்ள உதவுகிறது. தமிழ்ச்சூழலில் அச்சுப்பண்பாட்டின் ஒரு பகுதி குறித்த உரையாடலுக்கும் களமாக அமைகிறது. பல்பரிமாணத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது இவ்விதழில் உலகம் தழுவிய அளவில் உருப்பெற்று வளர்ந்த ‘காமிக்ஸ்’ தொடர்பான வரலாற்றுப் பூர்வமான விவரணங்கள்,  விரிவாக இடம் பெறவில்லை. தமிழ்ச்சித்திரக்கதை என்பதால், அதனை அழைப்பாசிரியர்கள் தவிர்த்திருக்கலாம். தமிழில் வாசிக்கும் வாசகனுக்கு உலகம் தழுவிய விவரணங்களையும் வழங்க வேண்டிய கடமை நமக்குண்டு.

இவ்விதழை உருவாக்கியுள்ள அழைப்பாசிரியர்களுக்கு மாற்றுவெளி ஆசிரியர் குழு தனது மனப்பூர்வமான நன்றியை உரித்தாக்குகிறது. விடியல் பதிப்பக வரைபட நாவல் வெளிவருவதற்கும் இவ்விதழ் உருப்பெறுவதற்கும் மூலமாக அமைந்தவர் நண்பர் எம். கண்ணன். சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத்துறையில் உருவான சு.பிரபாவதி  மிகக் கடுமையான உழைப்பாளி. தான் தேர்வு செய்த துறை தொடர்பான தொடர்ந்த தேடுதல் சார்ந்த அலைச்சலைப் பெரும் விருப்பமாகக் கொண்டிருப்பவர். ஆர்வம், தேடுதல், புரிதல் ஆகியவை இணைந்த ஆய்வாளர்களில் ஒருவர்.

அவரை தமிழ்ச்சித்திரக்கதைகள் தொடர்பான ஆய்வுலகில் ஆற்றுப்படுத்தியவரும் நண்பர் கண்ணன் அவர்களே. புதுச்சேரிப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில், தமிழ்ச் சித்திரக்கதை தொடர்பான ஆய்வை மேலெடுக்க நண்பர் முனைவர்.மூ.கருணாநிதி வாய்ப்பளித்துள்ளார். தமிழ்ச் சித்திரக்கதை ஆய்வாளரை உருவாக்கும்/உருவாக்கிய இவர்களுக்கு எனது நன்றி உரியது. நண்பர் கண்ணன் வழிகாட்டுதலில் பிரபாவதி இவ்விதழ் உருவாக்கத்தில் தனது ஆத்மார்த்த உழைப்பைக் காட்டியுள்ளார். அவருக்கு Ôமாற்றுவெளிÕ தனது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறது. ஊர்கூடித் தேரிழுக்கும் மரபு நமது மரபு. இத்தேரை இழுக்கும் சாரதி; நண்பர் சிவ.செந்தில்நாதன். இதனை வடிவமைக்கும் நண்பர் முரளி. இக்கூட்டுழைப்பைத் தமிழ்ச்சமூகம் கொண்டாட வேண்டும்.

இறுதியாக,

தமிழ்ச்சூழலின் வாசிப்புமரபு கட்சிமரபு குறிப்பாகச் சினிமா மரபு, கதையைப் பார்க்கும் மற்றும் கேட்பு மரபு கோடுகள் சொல்லும் கதைகள்சார் உணர்வுகள், சிறார் வாசிப்பு மற்றும் கலை ஆக்கங்கள், பதின்பருவ வாசிப்பு சார் விருப்பார்வத் துறைகள், வாசிப்பு மரபும் நுகர்வுப் பண்பாடும் ஊடாடும் புள்ளிகள், விநியோக மற்றும் உற்பத்தி மரபுகள் எனப் பல பரிமாணங்களில் தமிழின் அச்சுப் பண்பாட்டை நாம்புரிந்து கொள்ள வேண்டும். அப்புரிதல்சார் அரசியல் நம் மனப் பதிவாக அமையவேண்டும். இவ்வகையான அச்சுப்பண்பாடு குறித்தப் புரிதலில் ‘காமிக்ஸ்’ பெறுமிடம் ஆழமானது. இவ்வகையான உரையாடலை இவ்விதழ் மூலம் சாத்தியப்படுத்திய அனைவர்க்கும் மீண்டும் நன்றி.

சி-ர்

Pin It