மெக்கன்சி ‘தமிழக வரலாற்றி’னை அறிந்து கொள்வதற்கான பல்வேறு தரவுகளைத் திரட்டியுள்ளார். அவை ஊர் வரலாறு, வமிசாவளி வரலாறு, சாதி வரலாறு, அரசர் வரலாறு, கோயில் வரலாறு... எனப் பல்வேறு பொருண்மைகளைக் கொண்டுள்ளன. இதுவரை உருவாக்கப்பட்டுள்ள தமிழக வரலாறு குறித்த பதிவுகள் என்பவை ஏதோ ஒரு குறிப்பிட்ட பிரிவினரையோ அல்லது குழுக்களையோ அல்லது மன்னர்களையோ மையமிட்டு மக்களை உள்ளடக்கிய முழுமைத்தன்மை கொண்டதாக உருவாக்கப்பட வில்லை என்ற கருத்து வரலாற்றறிஞர்களிடையே நிலவி வருகிறது. அதற்கு முக்கியக் காரணம் மக்கள் குறித்த பதிவுகளைக் கொண்ட தரவுகளை அடையாளங்காணாத தன்மையாகும். மேற்கண்ட தன்மையிலிருந்து மாறுபட்ட மக்களின் வாழ்வியலோடு தொடர் புடைய பல்வேறு தரவுகளை உள்ளடக்கியதாக மெக்கன்சியின் சேகரிப்பைக் கருதமுடியும். ஒரு வரலாற்றை எழுதுவதற்கோ அல்லது புரிந்து கொள்வதற்கோ மெக்கன்சியின் சேகரிப்புகள் எந்தவகையில் உதவும் என்பதை கோயில்கள் குறித்த அவரது தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது.

மெக்கன்சி கோயில்களில் உள்ள தரவுகளை தாள் மற்றும் ஓலைச்சுவடிகளில் பதிவு செய்துள்ளார். அவர் கோயில்களில் உள்ள தரவுகளை சிலாசாசனங்கள், தலமகத்துவம், தலமகாத்மியம், தேவத்தான வரலாறு, தலவரலாறு ஆகிய பொருண்மைகளில் சேகரித்துள்ளார். அதில் சிலாசாசனங்கள் என்பது கோயில் கல்வெட்டுக்களில் உள்ள தரவுகளைக் குறிப்பிடுவதாகும். கோயில், சிலாசங்கள் குறித்த பதிவினை அந்தக் கோயிலின் பெயரையே சிலாசனத்திற்கும் பெயராகச் சூட்டியுள்ளார். சான்றாக, திருப்பழூவூர் சிவன் கோயிற் சிலாசாசனம். இதே போல் கோயில்களின் சிறப்புகளை தலமகத்துவம், தலமகாத்மியம் ஆகிய தலைப்புகளில் பதிவுசெய்துள்ளனர். தலம் தோன்றியதற்கான காரணம், தலத்தின் பெருமை, இறைவனின் பெருமை, வழிபாட்டு முறைகளை விளக்குவனவாக தேவத்தான வரலாறு (அ) தல வரலாறுகள் உள்ளன. இது தவிர கோயில்களுக்குக் கொடுக்கப்பட்ட தானங்கள் குறித்த பதிவுகளும் இதனுள் அடங்கும்.

மெக்கன்சியின் சேகரிப்புகள் குறித்து அறிவதற்கு நமக்குக் கருவூலமாக இருப்பது அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், ஆவணக்காப்பகம், தொல்லியல் துறை நூலகப் போன்ற வரலாற்று ஆவணங்களைப் பாதுகாத்து வைக்கக் கூடிய இடங்களாகும். அதில் அரசினர் கீழ்த்திசைச்சுவடி நூலக ஆவணச்சேகரிப்புகளில் மெக்கன்சியின் சேகரிப்புகளை அறிந்துகொள்ள தனித்த பட்டியல் ஒன்று உள்ளது. அந்தப் பட்டியலை ஒருமுறைப் பார்த்தால் மெக்கன்சி சேகரிப்பின் ஆழ, அகலங்களைப் புரிந்து கொள்ள முடியும். அதில் தமிழகக் கோயில்கள் குறித்த தகவல்கள் தோராயமான எண்ணிக்கையின் அடிப்படையில் சிலாசாசனம் - 191, தல வரலாறு - 53, தலமகத்துவம் - 15, தாமிர சாசனம் - 15, கைபீது -22, இது தவிர பிற தரவுகளும் உள்ளன. இச்சேகரிப்புகள் சைவ, வைணவ, ஜைன சமயம் சார்ந்த கோயில்களிலிருந்து திரட்டப்பட் டுள்ளன. மெக்கன்சியின் சேகரிப்புகள் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் மூலம் மூன்று தொகுதிகளாக வந்துள்ளதை தென்னிந்திய கோயிற் சாசனங்கள் பாகம் - 3, பகுதி 2இன் வழி அறியமுடிகின்றது. அதில் மெக்கன்சியின் உதவியாளர்கள் சேகரித்த முறைமைகள் குறித்து சில பதிவுகள் உள்ளன. அதனை இங்குப் பதிவு செய்வது பொருத்தமாக அமையும். ஒரு செய்தியை சேகரிக்கும்போது, சேகரித்த பின்னரும் உள்ள தன்மைகளைப் புரிந்து கொள்ள இது போன்ற பதிவுகள் உதவும்.

-           கர்னல் மெக்கன்சியின் உதவியாளர்கள் சில சாசனங்களைக் கல்லில் கண்ட வரிவடிவத்தில் படம் எழுதுவது போலப்பிரதி செய்திருக்கிறார்கள். அவர்களால் அந்த சாசனங்களைப் படிக்க முடியவில்லை போலும். தமிழ்ச் சம்பந்தப்பட்ட வரையில் அத்தகைய சாசனங்கள் வட்டெழுத்தில் உள்ளவை. (பக்.ஜ்ஸ்வீவீவீ, தென்னிந்திய கோயிற் சாசனங்கள் பாகம் - 3, பகுதி 2, Madras Goverment Oriental series, 1957)

-           தாங்கள் சென்ற கிராமங்கள் பலவற்றிலிருந்தும் ஊர் வரலாறு களைக் கேட்டறிந்து எழுதி வாங்கி வந்திருக்கிறார்கள். அவை கைப்பிடி அல்லது கைபீயத் எனப்பெறும். அந்த வரலாறு களிலும் சில இடங்களில் அந்த அந்தக் கிராமங்களைப் பற்றிய சாசனங்களையும் அவற்றை வழங்கிய அரசர் பெயர், வருஷம் முதலிய விவரங்களும் குறித்திருக்கிறார்கள்.

என்று தொகுப்புப் பணி சார்ந்த சில பதிவுகளை அந்நூலிலிருந்து அறிய முடிகின்றது.

அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் உள்ள சுவடிகளின் விவரணங்களை அறிந்து கொள்ளும் வகையில் ‘சுவடி விளக்க அட்டவணை’யை உருவாக்கியுள்ளனர். அவ்வட்டணையில் ஒவ்வொரு சுவடிகள் குறித்தும், சுவடிகளின் பொருண்மை, அதில் உள்ள ஏடுகளின் எண்ணிக்கை, அட்டவணை உருவாக்கத்தின் போது சுவடியின் தன்மை, சுவடி முழுமையாக உள்ளதா, என்பதை அறியும் வகையில் உள்ளது. அதில் ஒவ்வொரு சுவடி பற்றிய மேற்கண்ட தகவல்கள் ஆங்கிலத்திலும் பதிவுசெய்யப்பட்டிருக்கும். அதனைத் தொடர்ந்து சுவடியின் தொடக்கமும், இறுதியும் தமிழில் எழுதப்பட்டிருக்கும் இறுதியாக அந்தச் சுவடி குறித்த குறிப்புரையும் இடம்பெறும். சுவடி விளக்க அட்டவணையிலிருந்து பின்வரும் சில கருத்துக்களைப் பதிவு செய்வது பொருத்தமாகத் தோன்றுகிறது.

-           இவ்வட்டவணை உருவாக்கும் போது மெக்கன்சியின் சேகரிப்புகள் எழுதப்பட்டு நூறாண்டுகளுக்கு மேல், சென்றுவிட்டது. அதில் ஏறக்குறைய 1950ஆம் ஆண்டு மெக்கன்சி சுவடியின் தன்மை குறித்து பதிவு செய்யப்பட் டுள்ளது. தற்போது அதற்குப் பின்னர் அறுபதாண்டுகளைக் கடந்துவிட்டது. தமிழ் ஆய்வுலகைப் பொருத்தவரை மெக்கன்சி சேகரிப்புகள் பற்றிய அறிதல், தேடல் என்பது தொடக்கநிலையிலே இருப்பதாகத் தோன்றுகிறது.

-           சுவடி எழுதப்பட்ட காலத்தில் உள்ள மொழிநடைக்கும், அட்டவணை உருவாக்கப்பட்ட காலத்தின் மொழிநடைக்கும் உள்ள வேறுபாட்டினை புரிந்து கொள்ளுதல். தற்போதுள்ள மொழிநடையையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

மெக்கன்சி சுவடிகளை எடுத்து வாசிக்கும் போது, அச்சுவடியின் தற்போதைய நிலை பின்வருமாறு,

-           ஒரு பக்கத்தில் உள்ள எழுத்துகளின் மீது மற்றொரு பக்கத்திலுள்ள எழுத்துகள் ஒன்றன் மீது ஒன்று ஒட்டிக்கொண்டுள்ளன.

-           சில எழுத்துகள் அழியத் தொடங்கியுள்ளன.

-           சில இடங்களில் இரண்டு மூன்று வரிகள் தெளிவாகவும், அதனைத் தொடர்ந்து சில வரிகள் வெண்மையாகவும் காணப்படுகின்றன.

-           சுவடிகளைப் பிரித்துப் பார்த்தால் உடைந்து நொறுங்கும் தன்மையில் உள்ளன.

அறிவியல் தொழில் நுட்பங்கள் வளர்ந்துள்ள காலச்சூழலில் வரலாற்றைப் பாதுகாப்பது குறித்த எந்தவித பிரக்ஞையும் இல்லாமல் இருப்பதை உணரமுடிகிறது. ஆவணக்காப்பகங்கள் என்பவை பாதுகாப்போடு வரலாற்றுத் தரவுகளை அழிக்கும் நிறுவனங்களாக செயல்படுகின்றனவோ என்கிற சந்தேகமும் தோன்றுகின்றன. பிற நாடுகளில் முக்கிய ஆவணங்கள் டிஜிட்டல் செய்து இணையத்தில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் செய்துள்ளனர். அதுபோன்ற செயல் பாடுகள் நடைறுமா?

மெக்கன்சியின் கோயில் சார்ந்த சேகரிப்புகள் குறித்த தகவல்களையும், சேகரிப்பு முறைமைகளையும், சேகரிப்பு குறித்த அறிதலுக்கான அட்டவணை குறித்தும், மெக்கன்சி சுவடியின் தற்போதைய நிலை குறித்தும் கூறுவதாக இதுவரை உள்ள தகவல்களை விளங்கிக் கொள்ள முடியும். இந்தப் பின்புலத்தோடு ஒரு வரலாற்றை எழுதுவதற்கும் அதனை மீட்டுருவாக்கம் செய்வதற்குமான தரவுகளாக மெக்கன்சியின் சேகரிப்பை எப்படிப் புரிந்து கொள்வது என்பதைப் பற்றியதாகப் பின்வரும் பகுதி அமைகின்றது.

-           கூடலூர் தேவத்தான வரலாற்றிலிருந்து “வெஞ்சமர்க் கூடல்” என்னும் ஊரின் வரலாற்றைப் புரிந்து கொள்ள முடியும். அதாவது, “வெஞ்சமான் என்றுமொரு சமணவரசன்” இவ் வூரையாண்டிருந்து இறுதியில் சோழவரசனால் மாண்டுபோக நேரிட்டபொழுது அவன்தன் பெயரால் இவ்வூரை வழங்கல் வேண்டுமெனச் சோழனை வேண்டிக் கொள்ள அவனும் அவ்வாறே ஆகட்டுமென விட்ட பெயராகுமிது. (d.2829, Vol.vii,பக்.2480) என்ற குறிப்பிலிருந்து வெஞ்சமக் கூடல் என்னுமூரின் வரலாற்றுச் சிறப்பினை அறிய முடிகின்றது.

-           விக்கிரம சோழபுரம் ஈசுவரன் கோயில் தாமிர சாசனத்தில் விக்கிரம சோழபுரம் என்னுமிடத்திலுள்ள சோளீசுவரசுவாமி கோவிலுக்கு அபிஷேகம் நைவேத்தியம் முதலான செலவிற்காக பல தேசங்களிற் சென்று பட்டுநூல் வியாபாரஞ் செய்து வந்த தராசுரம் பட்டுநூல்காரர் பலரால் ஒன்று சேர்ந்து ஏற்படுத்தப் பட்டது என்பதை அறியமுடிகின்றது.

-           திருவாவடுதுறைக் கோயில் கைபீதில் பிறமொழியில் உள்ள சமயத் தொடர்பான பதிவுகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, அதிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட தகவலானது “ஆயாசிய மகத்துவம், வாயு ஸம்ஹிதை, பிருமாண்ட புராணம், சிவஞான போதம், சித்தாந்த ரத்னாவளி... இந்த பாஷிய¢ முன்னம் ஆமகங்களின்றும் திருவேற்காடு ரா.முத்தைய்யா முதலியார் இங்கிலீஷ் பாஷையால் செய்தார். அதைச் சைவ கந்தப்ப முதலியார் மருமகன் அனக்கட்டாப்புத்தூர் நயினப்ப முதலியார் தமிழாற் செய்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது (Vol - vii, பக்.2436). வடமொழி/சமஸ்கிதத்தில் உள்ள தரவுகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப் பட்ட தன்மையை விளங்கிக்கொள்ள முடிகிறது.

-           இலக்கியச் சான்றுகள் வரலாற்றினை அறிய உதவும் சான்றுகள் என்பதை உணர்த்தும் விதமாக பார்வதிபுரம் ஆருத்ர கபாலேசுவர சுவாமி கைபீதில் “தாம்மிர சாஸனங்கள் முதலான ஆதரவுகள் காலந்தரங்களில் கைசோர்ந்து விட்டன. கூர்ம புராணத்தில் வயிரவன் பலிகொண்ட அத்தியாயத்தில் இத்தல புராண வரலாற்றை அறியலாம் என்ற குறிப்பினைப் பெறமுடிகின்றது. (Vol-vii-பக்.2436) கண்ணபுரம் விக்கிரம சோழசுவர சுவாமி தேவஸ்தான வரலாற்றில் ‘சோழராசர்’ தன்னுடைய பிரும்ஹிருத்தி நிவாரண மாகும்படிக்கு இந்த «க்ஷத்திரம் யோக்கியமான ஸ்தலம் என்று பிரதிஷ்டையும் பண்ணிப் பூஜை பண்ணின படியாலே “விக்கிரம சோழேசுவரன்’ என்னும் பெயர் சுவாமிக்கு இடப்பட்ட வரலாற்றினை அறிய முடிகின்றது.

-           கோயில்களில் சிலாசனம் எழுதும் முறைமை பற்றியும், அதனை நாசம் செய்பவர்கள் பெறும் தண்டனை குறித்து மசகூர் பெருமானார் கோயிற் சிலாசாசனத்தில் “இந்த நாற்பாங்கு எல்லையும் ‘சூலக்கற்கள்’ போட்டுச் சாஸனம் எழுதிக் கொடுத்து.. இந்த தருமத்தை அசுத்தம் பண்ணின பேர்கள் ‘கங்கைக்’ கரையில் காராம் பசுவைக் கொன்ற தோழம் பெறக் கடவார்கள்” என்ற பதிவு செய்யப்பட்டுள்ளது.

-           திருக்கண்டியூர் முதலான விடத்து ஈசுவரன் கோயில் என்று சுட்டப்பட்டுள்ளது. அதில் திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, கோவில் பட்டி, தில்லைத்தானம், கடுவெளி, கருந்தட்டாங்குடி முதலிய ஊர்களில் உள்ள சிலாசனங்களின் தொகுப்பாக குறிப்பிடப்பட் டுள்ளது. ஒவ்வொரு ஊரிலும் உள்ள கோயில் களில் எத்தனை சிலாசாசனங்கள் உள்ளன என்பதும் சுட்டப்பட்டுள்ளன. இதிலிருந்து மேற்குறிப்பிடப்பட்ட ஊர்களில் சிலாசனங்கள் உள்ளனவா அவை எத்தன்மையில் உள்ளன என்று பல்வேறு நோக்கில் சிந்திப்பதற்கும் ஆய்வு மேற்கொள்ளவும் இச்சேகரிப்புகள் உதவுகின்றன.

-           திருக்காட்டுப்பள்ளி ஈசுவரன் கோயில் சிலாசாசனத்தில் இந்த சாசனமானது ஹிந்தி பாஷையில் தேவநாகரி எழுத்தில் எழுதப்பட் டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அச்சாசனத்தில் நிலங்கள் ‘வேலி’ என்ற நில அளவை முறையால் அளக்கப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது. நிலங்களை அளப்பதற்கு இதே அளவை முறை தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் பின்பற்றப்படுவதில்லை. எந்தெந்த பகுதியில் இத்தகைய அளவை முறைகள் பின்பற்றப்படுகின்றன என்பதை அறிவதற்கு இச்சாசனங்கள் குறித்த தரவுகள் உதவும்.

-           மேற்கண்ட பல்வேறு குறிப்புகளிலிருந்து, மெக்கன்சியின் கோயில் சேகரிப்புகள் ஒரு வரலாற்றினை அறிவதற்கான அல்லது மீட்டுருவாக்கம் செய்வதற்கான பல்வகைமைப்பட்ட தரவுகளைக் கொண்டுள்ளது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

மெக்கன்சியின் கோயில்கள் குறித்த தரவுகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களைப் பின்வருமாறு தொகுத்துக் கொள்ளலாம்.

-           தொகுப்பு சார்ந்த செயல்பாடுகளில் மெக்கன்சி பின்பற்றிய முறைமைகளை இனங்காணுதல்.

-           வரலாற்று சான்றுகள் கிடைக்காத/சிதைந்து போன சூழலில்இலக்கியங்களில் எந்தப் பகுதியில் உள்ளது என்பதைச் சுட்டுதல். குறிப்பாக கோயில் சார்ந்த பதிவுகளில் ‘புராணங்கள்’ அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளதை இவரது சேகரிப்புகளின் வழி அறிய முடிகின்றது.

-           தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஊர் வரலாறுகளை மெக்கன்சியின் கோயில் வரலாற்றுத் தரவுகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பது.

-           நிலம் சார்ந்த அளவை முறைகள் எந்தப் பகுதியில் எத்தகைய அளவு முறைகள் பின்பற்றப்படுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ள இவரது சேகரிப்புகள் உதவும்.

-           தற்போதைய தமிழகத்தின் வரைபடத்தைக் கொண்டு மெக்கன்சியின் கோயில் தொடர்பான தரவுகளைக் குறித்துப் பார்த்ததால் அவரது சேகரிப்பின் பயண தூரத்தையும் அதன் வழி பெறப்பட்ட வரலாற்றுத் தரவுகளின் மதிப்பீட்டினையும் அறிந்து கொள்ள வேண்டும்.

-           தமிழ் மற்றும் வரலாறு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளருக்கு மெக்கன்சியின் தரவுகள் ஆய்வு ரீதியாகவும், தரவுகளைத் தேடிக்கொடுக்கும் கருவூலமாகவும் மெக்கன்சியின் சேகரிப்புகள் அமையும்.

-           பொதுவாக மெக்கன்சியின் சேகரிப்புகள், வரலாறு, மானுடவியல், தொல்லியல், நாட்டார் வழக்காற்றியல் எனப் பல்துறை ஆய்வுக்கும் பயன்படக் வடிய தரவுகளைக் கொண்டுள்ளது.

பயன்பட்ட நுல்கள்

  • A Descriptive Catalogue of the Tamil Manuscripts in the GOML, Madras, Volume VII, 1948
  • தென்னிந்திய கோயிற் சாசனங்கள் பாகம் 3, பகுதி 2, GOML,1957

 Mahalingam, T.V., Mackanzie Manuscripts, Summarises of Historical Manuscripts inh the Mackanzie collection, Vol-I, University of Madras, 2011

Pin It