ஆவணம்-2

பேராசிரியர் தனிநாயகம் அவர்களின் நூல்கள், இதழ்களில் எழுதிய கட்டுரைகள், மாநாடுகளில் நிகழ்த்திய ஆய்வுரைகள் மற்றும் அவர் நிகழ்த்திய ஆய்வுச் சொற்பொழிவுகள் ஆகியவைகளை கால ஒழுங்கில் தொகுத்துள்ளோம். அவரது முதுநிலை (Master)  மற்றும் முனைவர் பட்டத்திற்கு செய்த ஆய்வுகள் நூல் வடிவில் வெளிவந்துள்ளன. சில கட்டுரைகளும் தொகுத்து நூலாக்கம் பெற்றுள்ளன. பல்வேறு நாடுகளில் அவர் செய்த பயணம் குறித்த நூல் ‘ஒன்றே உலகம். அவரது சொற்பொழிவுகளும் நூல் வடிவம் பெற்றுள்ளன.

பேராசிரியரது கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளவர்கள், கால ஒழுங்கைப் பின்பற்றவில்லை. அவை வெளிவந்த விவரங்கள் குறித்த தகவல்களையும் முறையாகக் கொடுக்கவில்லை. பேராசிரியர் குறித்த ஆய்வில் ஈடுபடுவோருக்கு இத்தன்மைகள் சிக்கல்களை உருவாக்கும். பேராசிரியரின் ஆக்கங்கள் பெரிதும் கட்டுரைகளே ஆகும். இக்கட்டுரைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்யும் தேவையுண்டு.

பேராசிரியரின் ஆக்கங்களைக் கால ஒழுங்கில் அணுகும்போது அவரது படிநிலை மாற்றங்களைக் காண முடிகிறது. தொடக்கத்தில் கிறித்தவ சமயம் சார்ந்து பொதுவான கட்டுரைகளை எழுதியுள்ளார். பின்னர் சமயம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டபோது, பல்வேறு சமயம் சார்ந்த கருத்துநிலைகள் அடிப்படையில் ஆய்வு செய்திருப்பதைக் காணமுடிகிறது. காலப்போக்கில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவனாக சேர்ந்த காலம் முதல் தமிழியல் ஆய்வில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

சங்க இலக்கியம் குறித்த விரிவான புரிதல் உருப்பெற்ற காலத்தில் அதன் அடிப்படைகளை தமது ஆய்வாக தேர்வு செய்து கொண்டார். உலகம் முழுவதும் பயணம் செய்த அநுபவம் சார்ந்து, உலகின் பல நாடுகளிலும் உள்ள  தமிழர்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டார். இவ்வாய்வுகள், உலகத் தமிழ் மாநாட்டு ஆய்வுக் கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்டு, மாநாட்டுத் தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளன. ஈழத்தமிழரின் உரிமைகள் தொடர்பாகவும் அவ்வப்போது பல சிறுவெளியீடுகளை பேராசிரியர் எழுதி வெளியிட்டார். பேராசிரியர் மேற்குறித்த பாங்கில் எழுதிய ஆக்கங்களை இப்பகுதியில் தொகுத்துள்ளோம்.

இப்பதிவுகள் முழுமையானது என்று கூறமுடியாது. கால ஒழுங்கு மற்றும் பொருள் ஒழுங்கில் முழுமையான ஆய்வடங்கல் (Annotated Bibliography) ஒன்றைப் பேராசிரியர் ஆக்கங்களுக்கு உருவாக்குவது அவசியம்.

நூல்கள்

1) 1950, The cartheginian clergy, Tamil literature society, Tuticorin

பேராசிரியர் ரோம் நகரில் தமது குருத்துப் பயிற்சியை மேற் கொண்ட காலத்தில் எழுதிய ஆய்வேடு இந்நூல். இது 1947ஆம் ஆண்டில் முதல் பதிப்பும் 1950இல் இரண்டாம் பதிப்பும் வந்தது. தமிழிலக்கியக் கழகத்தின் வெளியீடாக இரண்டு பதிப்புகளும் கொண்டு வரப்பட்டன.

2) 1952, தமிழ்த்தூது, தமிழ் இலக்கியக் கழகம்

இந்நூலில் பேராசிரியரின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. 1959ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பாக வெளிவந்தபோது மேலும் சில கட்டுரைகள் இணைக்கப்பட்டன. 1962ஆம் ஆண்டில் சென்னை பாரி நிலையம் இந்நூலின் நான்காம் பதிப்பை வெளியிட்டுள்ளது.

3) 1961, நம் மொழியுரிமைகள், 3ஆம் பதிப்பு, நந்தன் பதிப்பகம், கண்டி

தனிச் சிங்களச் சட்டம், 1956இல் சிங்களப் பேரினவாத அரசால் கொண்டு வரப்பட்டபோது அதனை மறுத்து பேராசிரியர் எழுதிய குறு நூல் இதுவாகும்.

4) 1966, A reference guide to Tamil studies, University of Malaya, Kuala Lampur. (தொகுப்பு நூல்)

இத்தொகுப்பில் 1355 நூல்களைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. 1960ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலங்களில் தமிழியல் ஆய்வு உலக அளவில் நடைபெற்றதை அறிய இந்நூல் உதவுகிறது. பல்வேறு நாடுகளிலும் உள்ள 18 அறிஞர்கள், பேராசிரியர்கள் தனிநாயகம் அடிகளுக்கு அனுப்பியக் குறிப்புகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

5) 1966, ஒன்றே உலகம், பாரி  நிலையம், சென்னை

பேராசிரியர் தனிநாயகம் அடிகள் உலகம் முழுவதும் மேற்கொண்ட பயண அனுபவத்தை இந்நூலில் வெளிப்படுத்தி யுள்ளார். ஒவ்வொரு நாட்டிலும் வாழும் தமிழர்கள் குறித்த விரிவான குறிப்புகளை பதிவு செய்துள்ளார். 1974ஆம் ஆண்டு இந்நூலின் இரண்டாம் பதிப்பு வெளிவந்துள்ளது. தற்போது மூன்றாம் பதிப்பாக 2012இல் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ்ப் பேராயம் வெளியிட்டுள்ளது.

6) 1967, திருவள்ளுவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் தனிநாயகம் திருக்குறள் குறித்து நிகழ்த்திய சொற்பொழிவை அப்பல்கலைக் கழகம்  ‘திருவள்ளுவர்’ எனும் தலைப்பில் 1967ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.

7) 1968, Tamil Studies Abroad, The International Association of Tamil Research (தொகுப்பு நூல்)

பல்வேறு நாடுகளில் தமிழியல் ஆய்வு குறித்த  விரிவான விவரங்களை இந்நூலில் காண முடியும். உலகின் பல நாடுகளில் நடைபெறும் தமிழியல் ஆய்வு பற்றிய விவரங்களை அந்தந்த நாட்டில் உள்ள அறிஞர்கள் தொகுத்து அனுப்பினர். அதனை பேராசிரியர் தனிநாயகம் அடிகள் இத்தொகுப்பு நூலாக உருவாக்கியுள்ளார்.

8) 1970, Tamil culture and civilization : Readings - The Classical Period, Asia Publishing House, London (தொகுப்பு நூல்)

மலாயா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிபுரிந்தபோது மாணவர்களுக்குத் தமிழ்ப் பண்பாடும் நாகரிகமும் என்ற பாடத்தை நடத்தி வந்தார். மாணவர்களுக்கு உதவும் வகையில் மேற்குறித்த பொருண்மை சார்ந்த பல்வேறு கட்டுரைகளைத் தொகுப்பு நூல் வடிவில் கொடுத்தார். இத்தொகுப்பில் மிகச்சிறந்த அறிஞர்களின் கட்டுரைகள் தெரிவு செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

9) 1980, தமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்புகளும், Research in Tamil studies : Refrospect and Prospect, Thanthai Chelva memorial Trust, Jaffna

தந்தை செல்வா அறக்கட்டளையின் மூலம் பேராசிரியர் தனிநாயகம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நிகழ்த்திய இரு சொற்பொழிவுகள் இக்குறு நூலில் இடம் பெற்றுள்ளன.

10) 1997, Landscape and Poetry a Study of Nature in Classical Tamil Poetry

பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை எனும் இந்நூல் எம்.லிட்., பட்டத்திற்கான அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு கொடுக்கப் பட்ட ஆய்வேடாகும். 1972இல் ‘Nature in ancient Tamil Poetry’ எனும் தலைப்பில் தமிழ் இலக்கிய கழகத்தால் வெளியிடப்பட்டது. பின்னர் 1963இல் சிங்கப்பூரில் இந்நூல்‘Nature poetry in Tamil :The classical period’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டது. 1966ஆம் ஆண்டு பம்பாய் ஆசிய வெளியீட்டகத்தின் சார்பில் இந்நூல் Landscape and poetry : A study of nature in classicasl tamil poetry  எனும்  தலைப்பில் வெளியிட்டனர். இந்நூலே உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தால் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.

11) 2009, பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் கல்வி, மொழியாக்கம் : ந.மனோகரன், மாற்று, சென்னை.

பேராசிரியர் தனிநாயகம் அடிகள் Tamil Culture இதழில் பண்டைத் தமிழ் கல்வி பற்றி எழுதிய நான்கு ஆங்கிலக் கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட்டு இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளது.

12) 2010, Educational Thought in Ancient Tamil Liteature, Bharathidasan University, Tiruchirappalli-24

1955-1957ஆம் ஆண்டுகளில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் பழந்தமிழ் இலக்கியத்தில் கல்விச் சிந்தனைகள் எனும் பொருளில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்தார். அந்த ஆய்வேடு இப்பொழுது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

மாநாட்டுத் தொகுப்புகள்

பேராசிரியர் - நூல் தொகுப்புகள்

பேராசிரியர் தனிநாயகம் நூற்றாண்டையட்டி அவருடைய ஆக்கங்கள் பின்வரும் வகையில் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன.

சொற்பொழிவுகள்

பேராசிரியர் தனிநாயகம் நிகழ்த்திய சொற்பொழிகள் தொடர்பான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1959-1960, Aspects of Tamil Humanism

1962  Indiajn Thought and Roman Stoicism, an Inaugural Lecture Delivered on 14th December, University of Malaya, Kuala Lumpur

1967  Tiruvalluvar, Sornammal Endowment Lectures, Annamalai University

1972  The Humanistic Scene

1972  The Humanistic Ideals

1972  Tamil Humanism - The Classical Period

1997  The Tirukkural and the Greek Ethical Thought

1980  Research in Tamil Studies, - Retrospect and Prospect

1980  தமிழர் பண்பாடும் அதன்  சிறப்பியல்புகளும்

இதழ்கள்

Bottled Sunshine

பேராசிரியர் தனிநாயகம் அடிகள் கிறித்தவக் குருமாராகப் பணி யாற்றியபோது பல்வேறு கிறித்தவ இதழ்களிலும் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார். அவ்வகையான இதழ்களில் ஒன்றே, மேலே காணப்படும் இதழ். இவ்விதழில் தனது இளமைக்காலப் பெயரில் கட்டுரைகளை எழுதியுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து இவ்விதழ் வெளிவந்தது. கட்டுரைகள் அனைத்தும் பொதுவான பொருண்மை களில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.

The messenger of the Sacred heart for Ceylon

கொழும்பிலிருந்து வெளிவந்த மேற்குறித்த இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் கீழ்வரும் வகையில் அமைந்துள்ளன. இவ்விதழும் கிறித்தவ சமயச் சார்பிதழே.

Tamil Culture

1952 முதல் 1966 வரை இவ்விதழ் வெளிவந்தது. முதல் நான்கு ஆண்டுகள் தூத்துக்குடி கல்விக் கழகத்தின் மூலமே இவ்விதழ் வெளியிடப்பட்டது. பின்னர், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகம் மூலமாக இவ்விதழ் வருவதற்கு மானியம் வழங்கப்பட்டதை அறிகிறோம். 45 இதழ்கள் வெளிவந்துள்ளன. இதில் சுமார் 350 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு அறிஞர்கள் தமிழியல் தொடர்பாக எழுதிய கட்டுரைகள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன.

Journal of Tamil Studies

பேராசிரியர் தனிநாயகம் அடிகள் தமிழக அரசு உதவியுடன், சென்னையில், உயர் கல்வி ஆய்வு நிறுவனம் ஒன்றை தமிழியல் ஆய்வுக்காக உருவாக்கத் திட்டமிட்டார். இதன் ஒரு பகுதியாக கொண்டு வரப்பட்ட இதழே மேற்குறித்த இதழ். 1969 இதழ் ஒன்று பகுதி இரண்டில் உலகம் தழுவிய தமிழியல் ஆய்வு குறித்த விரிவான ஆவணங்களைப் பதிவு செய்துள்ளார்.

பேராசிரியர் தனிநாயகம் அடிகள் வேறு சில இதழ்களிலும் ஒரு சில கட்டுரைகள் எழுதினார். அவ்விவரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

சத்தியவேத பாதுகாவலன்

மாநாடுகள்

பேராசிரியர் தனிநாயகம் அடிகள் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் மூலமாக (IATR) நடைபெற்ற மாநாட்டுக் கட்டுரைத் தொகுதிகளில் இடம்பெற்றுள்ள ஆக்கங்கள் பின்வருமாறு அமை கின்றன. இதில் இரண்டு மாநாட்டுத் தொகுதிகளை இவரே பதிப்பித்தார்.

ஆய்வேடுகள்

இப்பதிவுகளைத் தொகுத்த வி.தேவேந்திரன், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறை முனைவர் பட்ட ஆய்வாளர்.