பா.ரா. சுப்பரமணியன் (தொகு.) இன்றைய தமிழ் உரைநடை வாசிப்பு நூல் குறிப்புகள், மொழிபெயர்ப்பு, சொல்லடைவுகளுடன். சென்னை: மொழி, 2008. பக். xii+383. ரூ. 550.

மதிப்புரை: பாவல் ஹான்ஸ், கீழ்த்திசை அறிவியல் நிறுவனம்: பராக், ஆர்கிவ் ஓரியன்டாலினி, தொகுதி 76, 2008.

தமிழ் மொழிபெயர்ப்பு: இராம. சுந்தரம், தஞ்சாவூர்.

தமிழில் தேர்ச்சிபெற்றுள்ள (பிற மொழி) மாணவர்களின் மொழித்திறனை மேலும் வளர்க்க உதவும் மொழிப் பயிற்சி நூல்கள் குறைவாகவே உள்ளன. மொழி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள இப்புதிய பயிற்சி நூல் அந்தக் குறையைப் போக்குகிறது. இந்த நூலின் தொகுப்பாசிரியர் பா.ரா. சுப்பரமணியன் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு நீண்ட காலம் தமிழ் கற்பித்த பட்டறிவு உடையவர். அதனால் மாணவர்களின் தேவைகளை நன்கு அறிந்து, அதற்கேற்ப, முன்பே வெளிவந்துள்ள பயிற்சி நூல்களின் குறைகள் இந்நூலில் நிகழாவண்ணம் நூலைத் தந்துள்ளார். தமிழ் இலக்கணக் கட்டமைப்பு குறித்துப் போதிய புலமை பெற்றுள்ள மாணவர்கள் அதனை மேலும் வளப்படுத்திக்கொள்ளத் துணைபுரியும் நோக்கில் இந்த நூல் அமைந்திருக்கிறது. இன்றைய இலக்கியத் தமிழை மையப்படுத்தி அமைந்துள்ள போதிலும் பேச்சுத் தமிழ்க் கூறுகளையும் (இடையிடையே) ஓரளவு கொண்டுள்ளது.

ஏற்கனவே வெளிவந்த வாசிப்பு நூல்களில் கிலேட்டன் (1948), பரமசிவம் லிண்ட்ஹோம் (1980), சண்முகம் பிள்ளை (1975) ஆகியோரின் நூல்கள் தொடக்கநிலை, இடைநிலை மாணவர்களை மனதில் கொண்டு பல்வேறு தரத்தில் உருவாக்கப்பட்டவை யாகும். 1905இல் வெளியான போப்பின் பல படிநிலைகளை உடைய நூல், இன்றைய மாணவர்களுக்குப் பயன்படக் கூடியதாக இல்லை. பயன்மிகு பல தகவல்களைத் தரும் ஷிஃப்மனின் (1971) நூல் பேச்சுத் தமிழைத்தான் முதன்மைப் படுத்துகிறது. பல்வேறு நோக்கங்களைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட பட்நாயக், அரங்கன், திருமலை (1974) ஆகியோரின் நூல் மேலோட்டமான நிலையில் அமைந்திருப்ப தால் மாணவர்களின் தேவைகளை நிறைவு செய்வதாக இல்லை. ஆஷர், - இராதா கிருஷ்ணன் (1971) ஆகிய இருவரும் தயாரித்த நூல் பயனுள்ளது என்றாலும் அதிலும் சில குறைகள் உள்ளன. அவற்றுள் முதன்மையானது, உரைநடைப் பகுதியில் (tமீஜ்t) காணப்படும் சிக்கலான பகுதிகளை நன்கு விளக்காமல் அதற்கான மொழிபெயர்ப்பை மட்டுமே அடிக்குறிப்பில் தந்திருப்பது. பல இடங்களில் மொழிபெயர்ப்பும் விடுபட்டுள்ளது. பேச்சுத் தமிழில் உள்ள பெரும்பாலான பகுதிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. பேச்சுத் தமிழில் பயிற்சி இல்லாத மாணவர்களுக்கு அவற்றைப் புரிந்துகொள்வதில் சிக்கலையும் உண்டுபண்ணுகின்றன. மேலும் அதில் உரைநடைப் பகுதிகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படாததால் ஆசிரியர் உதவியின்றி அவற்றைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டும்.

‘மொழி’ வெளியிட்டுள்ள இந்த நூல் மேலே கூறப்பட்டுள்ள குறைகளை எல்லாம் நீக்கியுள்ளது. கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளில் நன்கு அறிமுகமான எழுத்தாளர்களால் எழுதப் பட்டுள்ள இருபத்து மூன்று உரைநடைப் பகுதிகளை இந்த வாசிப்பு நூல் கொண்டுள்ளது. மாணவர்களின் தேவைகளைக் கருத்தில்கொண்டு நூலிற்கான பனுவல்கள் தேர்வுசெய்யப் பட்டுக் கற்பதற்கு ஏற்ற வகையில் படிப்படியாக ஒழுங்குபடுத்தப் பட்டுள்ளன. ஒரு நாட்டுப்புறக் கதையோடு இந்த நூல் தொடங்குகிறது. அதை அடுத்து ஒரு சிறுகதையும் தொடர்ந்து எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய மற்றொரு நாட்டுப்புறக் கதையும் வருகின்றன. நீண்ட, கடினமான உரைநடைப் பகுதிகள் அடுத்தடுத்துத் தரப்பட்டுள்ளன. வெவ்வேறு மொழி நடையில் அமைந்துள்ள படைப் பிலக்கியங்கள் மட்டுமல்லாமல் எட்டுப் பொது உரைநடைகளையும் இந்நூல் கொண்டுள்ளது. ஒரேயரு சிறுகதை இலங்கைத் தமிழில் உள்ளது. இவற்றின் மூலம் மாணவர்கள் இன்றைய பல்வேறு தமிழ்ப் படைப்புகளைப் பற்றி அறிந்துகொள்ள முடியும். ஒன்றிரண்டு சிறுகதைகளில் இடம் பெற்றுள்ள உரையாடல்களில் காணப் படும் பேச்சு மொழியைத் தவிரப் பேச்சுமொழியிலேயே அமைந்த பனுவல்கள் இல்லை.

இந்த நூல், உரைநடைப் பகுதிகளில் உள்ள கடினமான பகுதிகளை உரிய இடத்தில் குறிப்புகள் மூலம் மிகக் கவனமாக விளக்குகிறது. இலக்கணக் கூறுகள், மரபுத்தொடர்கள், பண்பாடு தொடர்பான சிறப்புச் சொற்கள் ஆகியவையும் விளக்கப் பட்டுள்ளன. பெயர்த்தொடர்களை அதிகமாகக் கொண்டுள்ள வாக்கியங்கள், எழுவாய் இடம்பெறாத வாக்கியங்கள் போன்ற கடினமான வாக்கியங்களையும் கவனத்தில் எடுத்து உரிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. துணைவினைகள், இரட்டைக் கிளவிகள், சொல்லுருபுகள் ஆகியவற்றில் தனிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. துணைவினைகளின் பொதுப் பொருளை விளக்குவதோடு நின்றுவிடாமல் அதன் குறிப்புப் பொருளையும், அவை பயன்படுத்தப்படும் மொழிச் சூழலைக்கொண்டு விளக்கியிருப்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். தமிழ் இலக்கணத்தின் இந்தச் சிறப்புப் பகுதியை மாணவர்கள் புரிந்துகொள்ள இந்த விளக்கங்கள் உதவுகின்றன. தமிழ்மொழி நுட்பங்களை விளக்குவது இந்த நூலின் மற்றொரு சிறப்பாகும். இது மற்ற நூல்களில் காணப்படாத ஒன்று. சான்றாக, தொழிற்பெயர்களின் வழக்கு இரண்டினைக் காட்டலாம். (1) அது+ஆக+இரு (வருவதாக இரு): இது ஒருவரது உள்ளக் கருத்தை வெளிப்படுத்தப் பயன்படுகிறது; (2) அது+ஆவது (அவனாவது வருவதாவது): வினைச்சொல் உணர்த்தும் செயலைக் குறித்து ஒருவரது ஐயத்தைக் கூறுவது இது.

உரையாடல்களில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான பேச்சு வடிவங்கள் விளக்கப்படுவதோடு, அவற்றிற்கு நிகரான இலக்கிய வடிவங்களும் தரப்பட்டுள்ளன. பனுவல்களில் இடம்பெற்றிருக்கும் ஆங்கிலச் சொற்களும் அடிக்குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அனைத்துப் பனுவல்களும் தக்கவர் களைக் கொண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தரப்பட்டுள் ளன. இம்மொழிபெயர்ப்புகள் மூலத்திற்கு நெருக்கமாக இருப்ப தால் புரியாத பகுதிகளை ஆசிரியர் உதவியின்றிப் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் உள்ளன. மாணவர்கள் தங்களது புரிதிறனின் தன்மையை மொழி பெயர்ப்புகள் வழியாகச் சரிபார்த்துக்கொள்ள முடியும். உரைநடைப் பகுதிகளில் உள்ள சொற்களுக்கான சொல்லடைவும் (glossary) இடம்பெற்றுள்ளது. சொற்களின் பொருள் அவை இடம்பெற்றிருக்கும் முறைக்கேற்பத் தரப்பட்டுள்ளன. கதை, கட்டுரை எழுதிய ஆசிரியர்கள் பற்றியும் நடை பற்றியும் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த நூலைப் பொருத்தமட்டில் ஒருசில குறைகளே உள்ளன. மாணவர்களுக்கு வழிகாட்டக்கூடிய பிற வாசிப்பு நூல்கள், இலக்கணங்கள், அகராதிகள் அடங்கிய நோக்கு நூற்பட்டியல் இல்லாதது குறிப்பட வேண்டிய குறையாக உள்ளது. இரண்டே இரண்டு சொற்கள் மட்டும் உரிய விளக்கம் பெறாமல் விட்டுப்போயின. இலங்கைத் தமிழ் வேறுபடும் இடங்கள் ஒரு கதையின் அடிக்குறிப்பில் தெளிவுறுத்தப் பட்டிருப்பினும், அவை சில வழக்குகளை மட்டும் காட்டுவதாக உள்ளன. (கதை ஒரு பக்க அளவில் இருப்பதால்) போதிய அளவு விளக்கிச் சொல்ல இடம் இல்லாமல், மிகச் சுருக்கமாக அமைந் துள்ளது. விரிவான ஒரு கதை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம்.

மொழியுடனும் இலக்கியத்துடனும் நெருக்கத்தை உண்டு பண்ணவும் அவை குறித்த அறிவை வளர்த்துக்கொள்ளவும் இந்த நூல் பெரிதும் உதவுகிறது. கற்றுத்தரும் ஆசிரியர்களும் இந்த நூலை மேனிலைத் தமிழ்க் கல்விக்கு (Advanced course) ஒரு துணை நூலாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். இலங்கைத் தமிழுக்கான விளக்கத்தோடு சேர்த்துப் படிக்கத்தக்க விதத்தில் தமிழின் பல்வேறு கிளைமொழிகளில் எழுதப்பட்டுள்ள இன்றைய படைப்புகளைக் கொண்ட ஒரு நூலை மொழி ஆய்வுக் குழு அடுத்தபடியாக வெளியிடும் என நம்புவோமாக.

References:

1.  Asher, R.E. and Radhakrishnan R., A Tamil Prose Reader: selections from contemporary Tamil prose with notes and glossary. Cambridge University Press, Cambridge, 1971. 

2.  Clayton, A.C., Graded Tamil Reader. Madras, 1948. 

3.  Paramasivam, K. and Lindholm J., A Basic Tamil Reader and Grammar, 3 vols. (and cassettes). Tamil Language Study Association, 1980. 

4.  Pattanayak, D.P., Rangan, K. and Thirumalai, M.S., Advanced Tamil Reader, 2 vols. 

5.  Central Institute of Indian Languages, Mysore, 1974. 

6.  Pope, G.U., A Tamil Prose Reader. Asian Educational Services, New Delhi, 1905. 

7.  Shanmugam Pillai, M., Tamil Reader for Beginners. Muthu Pathipakam, Madurai, 1975. 

8.         Schiffman, Harold, Reader for Advanced Spoken Tamil, 2 vols. U.S. Dept. of Health, Education and Welfare, Institute of International Studies, 1971.

Pin It