கடந்த 9-08-09 அன்று பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் தமிழக முதல்வர் கருணாநிதி திறந்து வைக்க, அதற்கு பரிகாரமான 13-08-09 அன்று சென்னையில் சர்வக்ஞர் சிலையை கர்நாடக முதல்வர் திறந்து வைத்தார். 

பல ஆண்டுகளாக அல்சூர் ஏரியில் கோணி சாக்குப் பைக்குள் சிறை வைக்கப் பட்டிருந்த திருவள்ளுவர் சிலைக்கு விடுதலை கிடைத்ததில் தமிழர்களுக்கெல்லாம் மகிழ்ச்சி தான் என்ற போதிலும் இந்த சிலை திறப்புகளுக்குப் பின்னே இருக் கும் அரசியலை நாம் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். 

இந்த சிலை திறப்பை யொட்டி அப்போது செல்பேசியில் ஒரு குறுஞ்செய்தி தமிழ் உணர்வாளர்களிட மிருந்து உலா வந்து கொண்டிருந்தது. பெங்களூரில் சிலை திறந்து ஒருவர் அண்ணன் ஆனார். சென்னையில் சிலை திறந்து ஒருவர் தம்பி ஆனார். இரு சிலை திறப்பையும் பார்த்த தமிழன் கேணையன்ஆனான்என்று. செய்தி சற்று கொச்சையானது போல் தோற்றம் தந்தாலும் உண்மை நிலை இது தான். 

இந்த சிலை திறப்புகளையொட்டி என்ன பேசப்பட்டது. அதாவது, இரு சிலைகளையும் திறந்து வைத்ததின் விளைவாக தமிழர் - கன்னடர் உறவு செழிக்கும் என்றெல் லாம் பேசப்பட்டது. இதுநாள் வரை கர்நாடகம் மறுத்து வந்த தமிழக உரிமைகளை யெல்லாம் விட்டுக் கொடுத்து தமிழகத்தோடு நட்பு பாராட்டும் என்கிற ஒரு கருத்தை - தோற்றத்தை ஏற்படுத்த முயன்றார்கள். ஆனால் உண்மை நிலை என்ன?

தமிழகத்தோடு கர்நாடகா தொடர்ந்து மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறது. ஏற்கெனவே தமிழக மக்களின் உரிமைகளை மறுத்து உச்சநீதி மன்றத் தீர்ப்புக்கு கட்டுப் படாமல், காவிரி உரிமையை மறுத்து வரும் நிலையில், அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழ்நாட்டின் ஒகேனக்கலை கூறு போடும் வேலையில் இறங்கி யுள்ளது. 

ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் வருகையால் தமிழ்நாட்டிற்கு அதிகளவில் வருவாய் கிடைக்கிறது. கர்நாடகாவிலிருந்தும் அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஒகேனக்கல் மூல மாக தமிழ் நாட்டிற்கு அதிக வருவாய் வருவதைக் கண்டு அதைப் பொறுக்க மாட்டாத கர்நாடக அரசு கடந்த 2005ஆம் ஆண்டில் கர்நாடக மாநிலத்தின் மாறு கொட்டாய் பகுதியைச் சுற்றுலாத் தலமாக்கி அங்கு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டது. ஆனால் அப்பகுதியில் பார்த்து ரசிக்க வனப்புமிக்க எந்த இடமும் இல்லாததால் கர்நாடக அரசுக்கு எந்த இலாபமும் கிடைக்கவில்லை.

இதனால் ஏமாற்றமடைந்த கர்நாடக அரசு மாற்றுத் திட்டத்துடன் தமிழகத்தின் ஒகேனக்கல் பெரிய பாணி பகுதியை போல், கர்நாடக மாநிலத் திலும் ஒன்று உருவாக்க, அதன் அரு வியை எல்லையிலிருந்து பார்க்கும் வசதியைக் கொண்ட ஐவர்பாணி பகுதி யில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகளை மேற் கொண்டுள்ளது. 

ஐவர் பாணி அருவியாக கொட்டும் பகுதி கர்நாடக எல்லையிலும், தண்ணீர் பெருக்கெடுத்து செல்லும் பகுதி தமிழக வனத்துறை எல்லையிலும் உள்ளது. இந்த அருவியை கர்நாடக எல் லையில் இருந்து மட்டுமே கண்டு களிக்க முடியும். எனவே இந்த அரு வியை மையமாகக் கொண்டு, கர்நாடக வனத்துறை போட்டி ஒகேனக்கல் அமைக்க திட்டமிட்டுள்ளது. அதே போல ஐவர் பாணி அருகே பரிசில் துறை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது.

இதற்காக வேண்டி, சுற்றுலாப் பயணிகள் வந்து போவதற்கு வசதியாக மாறுகொட்டாயிலிருந்து 1 கி.மீ. தூரத் திலுள்ள கர்நாடக காவிரி ஆற்றுக்கு குறுக்கே காட்சிக் கோபுரம் அமைக் கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 40 விழுக்காடு பணிகள் முடிந்துள்ளது. 

காவிரியின் குறுக்கே அமைக்கப் பட்டுள்ள காட்டுக் கோபுரத்திற்கு செல்ல வசதியாக பரிசல் துறை அமைத்து படிக்கட்டுகள் கட்டப்பட் டுள்ளன. பரிசல் துறையிலிருந்து மாற்று பாதையும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 

மேலும் பரிசல் துறைக்கு அருகில் செயற்கை அருவியை அமைத்து ஒகே னக்கல் போல் கர்நாடக மாநில பகுதி யையும் மாற்றி சுற்றுலா பயணிகளைக் கவரவும் திட்டமிட்டு உள்ளது. 

கடந்த 2005ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தமிழகத்தில் ஒகேனக்கல் பகுதி யில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகளை மேற் கொண்ட போது, கர்நாடகா அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு அல்லாமல், மத்திய அரசுக்கு, தமிழ்நாடு, கர்நாடக எல்லைகளை மீண்டும் அளவீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தது. இதன் தொடர்ச்சியாகவே திட்டமிட்டு தமிழ்நாட்டுக்கு எதிராக போட்டி ஒகேனக்கலை உருவாக்கி வருகின்றது. 

ஏற்கெனவே காவிரி நதி நீரில் இரு மாநிலங்களின் கூட்டு ஒப்பந்தப்படி வெற்றிகரமாக பெங்களூர் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டு, அதே ஒப்பந்தத்தை மீறும் வகையில் தமிழகத்தின் ஒகேனக்கல் குடிநீர் திட் டத்தை எதிர்த்து வரும் சூழ்நிலையில்திருவள்ளுவர் சிலையைக் கடந்த 18 ஆண்டுகளுக்கு மேலாக கோணிப் பையில் கட்டி வைத்து அவமானப் படுத்தி, அது தமிழர்களின் மனதில் ஆறாத வடுவாக மாறிவிட்ட நிலையில்தமிழ்நாட்டின் எல்லைக்கு உட் பட்ட காவிரி ஆற்றில் நீர் மின் திட்டங் களை நிறைவேற்ற விடாமல் கர்நாடகா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வரும் நிலையில்மேற்கண்டுள்ளவாறு பறி போயுள்ள தமிழ்நாட்டின் உரிமை களை மீட்டெடுக்காமல், தமிழக மக்களின் உயிரான பிரச்சினைகளை திசை திருப் பும் நோக்கிலும், மைய அரசின் மாற் றாந்தாய் போக்கினை மூடி மறைக்கும் திருப்பணியாகவுமே இரு மாநில அரசுகளும் இணைந்து இந்த சிலை திறப்பு விழாக்களை நடத்தியுள்ளன.

திருக்குறள் உலக பொது மறை யாகப் போற்றப்படும் ஒரு நூல், பைபி ளுக்கு அடுத்தபடியாக உலக மொழி களில் அதிகமான அளவில் மொழிப் பெயர்ப்பு செய்யப்பட்டுள்ள நூல் திருக்குறள்தான். அதற்கு இணையாக சர்வக்ஞர் படைப்பு களைக் கொள்ள முடியுமா? இருவரை யும் சமமாக பாவிக்க முடியுமா?

தமிழை செம்மொழி ஆக்கிய கூத்து போல் திருவள்ளுவர் சிலை திறப்பு நாடகம் அரங்கேறியுள்ளது. சிலை திறப்பு என்பதன் பேரால் தமிழக மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். 

அண்டை மாநில கன்னட, தெலுங்கு, மலையாளத் தலைவர்கள் அம்மாநிலப் பிரச்சினைகளை அம் மக்கள் மத்தியில் முன்வைத்து, அவர் களை விழிப்போடு வைத்திருக்கிறார் கள். ஆனால் தமிழ்நாட்டுத் தலைவர் கள் தமிழ் மக்களிடையே இதுபோன்ற விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தாமல் இருப்பது ஒருபுறம் இருக்க மக்களிடம் தானாக ஏற்படும் விழிப்புணர்ச்சியையும் மழுங்கடித்து வருகிறார்கள்.  

அது காவிரி, முல்லைப் பெரி யாறு, பாலாறு, ஒகேனக்கல், ஈழப் பிரச் சினையானாலும் தமிழக மீனவர்களை இலங்கை கப்பற்படை தாக்கும் பிரச் சினையானாலும் சரி, எதை எடுத்துக் கொண்டாலும் எல்லாவற்றுக்கும் இது பொருந்தும்.  

இப்பிரச்சினை தொடர் பாக யாராவது சில அதிகாரிகள் அக்கறை யோடு பேசினாலும் அவர்களுக்கு வாய்ப்பூட்டு போடுவது, தமிழ் ஆர்வலர்கள் மீது அடக்குமுறை சட்டத்தை ஏவுவது என எப்படியாவது பிரச்சினை களை மூடி மறைக்கவே திசை திருப் பவே முயல்கிறார்கள் தமிழக ஆட்சி யாளர்கள். 

இப்படிப்பட்ட முயற்சிகளின் ஒரு கூறுதான் இந்த சிலை திறப்பு. தமிழர்கள் இந்நிகழ்ச்சிகளில் மயங்கி ஏமாந்து தங்கள் உரிமைகளை மறந்துவிடக் கூடாது. கர்நாடகம் நம் உரிமைகளைப் பறிக்க அனுமதிக்க, விட்டு விடக் கூடாது. 

சிதம்பரம் நடராசர் கோயில் - அரசு ஏற்றது செல்லும்

சிதம்பரம் நடராசர் கோயில் அரசே ஏற்று நடத்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஆர். பானுமதி அளித்த தீர்ப்பு செல்லும் என உயர்நீதி மன்ற நீதிபதிகள் ஆயம் உறுதி படுத்தியுள்ளது. 

சிதம்பரம் நடராசர் கோயிலில் அரசு ஏற்றது செல்லாது என இதை எதிர்த்து பொது தீட்சிதர்கள் மற்றும் சுப்பிரமணியசாமி முதலானோர் தொடுத்த வழக்கின் மீதே நீதிபதிகள் கே. கவிராஜ பாண்டியன் மற்றும் டி. ராஜா இருவரும் இத்தீர்ப்பை அளித்துள்ளனர். 

சிதம்பரம் கோயிலை தீட்சிதர்களின் கொள்ளையிலிருந்தும் மேலாதிக்கத்திலிருந்தும் மீட்டு அதை அரசே ஏற்று நடத்துவதில் மக்களெல்லாம் மகிழ்ச்சிக்கடலில் திளைக்க, எப்போதும் மக்களுக்கு எதிராகவும், மத ஆதிக்கத் தலைவர்களுக்கு ஆதரவுமாகவே செயல்பட்டு வரும் வி.எச்.பி. தலைவர் அசோக் சிங்கால், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி ஆகியோர் சிதம்பரம் வாழ் தீட்சிதர்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளதுடன், வழக்கை உச்சநீதிமன்றம் கொண்டு சென்று தீட்சிதர்களுக்கு சார்பாக தீர்ப்பைப் பெறமுடியும் என அவர்களுக்கு நம்பிக்கையூட்டித் திரும்பியிருக்கின்றனர். 

மக்கள் இந்த ஆதிக்க சக்திகள் குறித்து விழிப்போடிருக்க வேண்டும். நடராசர் கோயிலை அரசே ஏற்று நடத்தும் நிலையைப் பாதுகாக்க வேண்டும். 

*

திபெத்திற்கு வெண்ணெய் தமிழீழத்திற்கு சுண்ணாம்பு!

திபெத்திய மதத் தலைவர் தலாய்லாமா இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் செல்வதற்கான சுதந்திரம் உண்டு என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறியுள்ளார். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக இந்தியாவின் தர்மசாலா பகுதியில் திபெத்தின் நாடு கடந்த அரசின் தலைமையகத்தை வைத்து நடத்தி வருபவர் தலாய்லாமா. சமீபத்தில் இவர் தாவாங் பகுதியைப் பார்வையிட இந்தியா அனுமதி அளிக்க, அதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடியாகத்தான் கிருஷ்ணா இப்படித் தெரிவித்துள்ளார். 

அதாவது தாவாங் பகுதிக்கு தலாய்லாமா செல்ல இந்தியா அனுமதிக்கிறது என்று சொன்னால் இப்பகுதி அருணாசலப் பிரதேசத்தின் ஓர் அங்கம். அருணாசலப் பிரதேசம், இந்தியாவின் ஒரு மாநிலம். ஆகவே இந்தியாவின் எந்தப் பகுதியிலும் செல்ல தலாய் லாமாவுக்கு சுதந்திரம் உண்டு என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

எல்லாம் சரி, சீன வல்லாதிக்கத்திலிருந்து திபெத் விடுபட உரிமையுண்டு, அதன் தலைவர் இந்தியாவில் தங்க, நாடு கடந்த அரசு வைத்து செயல்பட சுதந்திரம் உண்டு என்றால், இதே சுதந்திரம் சிங்களப் பேரினவாத அரசை எதிர்த்துப் போராடும் போராளிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் ஏன் இல்லை ? அவர்களுக்கு மட்டும் அந்த சுதந்திரம் ஏன் மறுக்கப்பட்டது ? தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது என்பதுதான் கேள்வி. திபெத்தியர்களுக்கு ஒரு நீதி, தமிழர்களுக்கு ஒரு நீதி. இதுதான் தில்லி அரசின் நீதியா? தமிழகம் சிந்திக்கவேண்டும்.