தமிழகத்தில் தி.மு.க. அ.தி.மு.க.வுக்கு மாற்றாக மூன்றாவது அணி ஒன்று உருவாக்குவது பற்றி நாம் நீண்ட காலமாகவே பேசி வருகிறோம்.

நாம் குறிப்பிடுகிற மூன்றாவது அணி என்பது தேர்தல் களத்தில் உருவாவதல்ல. மாறாக அது போராட்ட களத்தில் உருவாவது. அதாவது தமிழக உரிமைகளுக்கான பிரச்சனைகளை எடுத்துத் தொடர்ந்து போராடுவதன் மூலம், அந்தப் போராட்டங்களில் பங்கு கொள்ளும் சக்திகளின் அணி சேர்க்கையில் உருவாவது. இந்த அணியே முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தேர்தல் அணியாக மாறலாம். தேர்தலை இந்த அணி சேர்க்கையை வைத்தே சந்திக்கலாம். இதில் தேர்தலில் நேரடியாகப் பங்கு கொள்ளாத விரும்பாத கட்சிகள், தாங்கள் போட்டியிடுவதைத் தவிர்த்து இந்த மூன்றாவது அணி வேட்பாளர்களை ஆதரிக்கலாம். இப்படி தமிழக உரிமைகளுக்காகப் போராடி, இந்தப் போராட்ட களத்தில் உருப்பெற்று வளர்ந்து வரும் அணியே தேர்தலைச் சந்திக்கும் தகுதி பெற்ற வலுமிக்க அணியாக விளங்க முடியும்.

அல்லாது திடீரென்று இந்தத் தேர்தலுக்காக மட்டும் அப்படி ஏதும் மூன்றாவது அணி உருவானால் அது பலவீனமானதாகவே அமையும்.

காரணம், ஏற்கெனவே மூன் றாவது அணியில் இடம்பெறும் வாய்ப்புள்ள கட்சிகளெல்லாம் ஒவ்வொன்றும் தற்போது தி.மு.க. அல்லது அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுவிட்டன. அவரவரும் அவரவர் கட்சிகளைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதால், இப்படி ஏதாவதொரு கூட் டணியில் இடம் பெற வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு. ஆகவே அவர்களைப் போய் இப்போது குறை சொல்ல முடியாது.

அப்புறம் இந்தக் சாட்சிகளை விட்டால் எஞ்சியிருப்பது யார். உணர்வாளர்கள் மட்டுமே. இவர்கள் தொகுதிக்கு எவ்வளவு பேர் இருப்பார்கள். சில ஆயிரம் பேர் என்பதாகவே வைத்துக்கொள்வமே. இவர்கள் என்ன செய்ய முடியும்...?

சில உணர்வாளர்கள் மத்தியில் ஒரு மதிப்பீடு இருக்கிறது. மக்களெல்லாம் தி.மு.க., அ.தி.மு.க. மேல் அதிருப்தியில் இருக்கிறார்கள். மாற்று அணியைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, நாம் நின்றால் நமக்கு வாக்களித்து நம்மை வெற்றி பெற வைத்து விடுவார்கள் என்று.

இது தவறான மதிப்பீடு. மக்கள் உணர்வுநிலை வேண்டுமானால் அப்படி இருக்கலாம். ஆனால் மக்கள் கட்சியாக இருக்கிறார்கள். கட்சி சார்ந்துதான் நிலை எடுப்பார்கள். கட்சிகளின் கூட்டணியே வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பதாக இருக்கும். எனவே இந்த வம்பில் இப் போது நாம் போய் மாட்டுவது அவ்வளவு உசிதமல்ல.

அப்படியென்றால் வேறு என்ன செய்யலாம். இப்போதைக்கு நமக்கு எதிரி காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணிதான். ஆகவே இந்தக் கூட்டணியை வீழ்த்த நாம் என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண் டும். இப்படி யோசிக்க இந்தக் கூட் டணியை வீழ்த்தும் வாய்ப்பும் வல்லமையும் யாருக்கு இருக்கிறதோ, அவர் யாரானாலும் சரி, அவருக்கு வாக்களிப்பது, ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள உணர்வாளர் வாக்கு களைத் திரட்டி அவருக்கு அளிப்பது என முடிவெடுக்கலாம். இதுவே இந்தச் சூழலுக்கு பொருத்தமான சரியான முடிவாகவும் இருக்கும்.

இதில் சிலருக்கு சில கேள்விகள் எழலாம். நாம் வாக்களிக்கும் நபர், இதற்குமுன் நமக்கு எதிராகப் பேசியுள்ளரே, எதிரான நடவடிக்கை களில் ஈடுபட்டுள்ளாரே எனலாம். உண்மைதான்.

இவருக்கு நாம் வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் இனியாவது இவர் யோக்கியமாய் இருப்பார், வரும் நாளில் நமக்கு துரோகம் இழைக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம் எனலாம். எதுவுமே நிச்சய மில்லைதான்.

எல்லாம் நன்கு தெரிந்ததுதான். அவருக்கு வாக்களிக் கிறோம். காரணம் நமது இலக்கு காங்கிரசை வீழ்த்துவது. இதை நிறை வேற்ற வேண்டுமென்றால் எதிர்த்து நிற்பவர் யாரான்று பார்க்காமல் காங்கிரசை வீழ்த்தும் வாய்ப்பும் வல்லமையும் படைத்தவருக்கு வாக்களிக்க வேண்டியதுதான்.

இப்படிச் சொல்வதால் காங்கிரசை வீழ்த்தி விடுவதால் மட்டுமே நம் இலட்சியம் நிறைவேறி விடும் என்று அல்ல. நாளையே யுகப்புரட்சி வந்துவிடும் என்று அல்ல. இதில் எந்த மாயையும் நமக்கு இல்லை. இப்போதைக்கு நம் இலக்கு காங்கிரசை வீழ்த்துவது. அதற்கு ஒரு பாடம் கற்பிப்பது. அதை நம்மால் தனித்து நின்று செய்ய முடியாது. வேறு யாரால் முடியுமோ அவரை வைத்து இதைச் சாதிக்கிறோம். அவ்வளவு தான்.

ஆகவே, உணர்வாளர் தனித்து நிற்பது காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகள் சிதறவும் பிரியவும் ஆகி, காங்கிரஸ் வெல்லவே வழிவகுக்கும். எனவே அது வேண்டாம். யாரும் சரியில்லை என்று ஒதுங்கி நிற்பதும் எதிரிக்கு சாதகமாகவே முடியும். ஆகவே அதுவும் வேண்டாம் என முடிவு செய்து, காங்கிரஸ் - திமுக கூட்டணியை வீழ்த்த முடிவு செய்யுமாறு வேண்டிக் கொள்கிறோம்.

இதில் காங்கிரசை வீழ்த்து வதில் யாருக்கும் தயக்கமிருக்காது. ஆனால் சிலர் திமுகவையுமா எனலாம். சிலருக்கு திமுகவையும் வீழ்த்த தயக்கமிருக்காது. ஆனால் பிற கூட்டணிக் கட்சிகளையுமா என்கிற கேள்விகள் எழலாம். எழும். எழட்டும். அவரவர் உணர்வு நிலை, மன நிலை, நியாய உணர்ச்சிக்கு ஏற்பட எப்படியும் முடிவு செய்து கொள்ளட்டும். ஆனால் பொது எதிரி, முதல் எதிரி காங்கிரசே என்பதில் மட்டும் உறுதியோடு இருந்து அதை வீழ்த்த முயலட்டும். வெற்றி பெறட்டும்.