இளைஞர் படை

- ஆ. பதேயிவ்

தமிழில்:

டி.ஆர். கணேசன்

பக்: 998 | ரூ. 475-

என்.சி.பி.எச்.

-சென்னை -_ -98

இந்த நாவலின் காலம் வரலாற்றில் மாபெரும் தேசபக்தப் போர் என்று பதிவு செய்யப்பட்டுள்ள இரண்டாம் உலகப்போர் காலம். இந்நாவலின் கதைக்களம் சோவியத் - உக்ரைன் எல்லைப் பகுதியில் டோனெட்ஸ் ஸ்டெப்பி புல்வெளிப் பிராந்தியத்தில் கிராஸ்னடோன் மாவட்டத் தலைநகரையட்டிய வரோஷிலாவ் கிராட் புறநகர் பகுதியில் உள்ள பர்வோமைன்ஸ்கி சுரங்கக் கிராமமும் அதன் மக்களும் ஆவர்.

கூட்டுப் பண்ணை விவசாயமும் சுரங்கத் தொழில் உற்பத்தியும் நடைபெற்ற புறநகர்ப் பகுதி அது. குன்றுகளும் ஆற்றுப் புல்வெளிகளும் கொண்ட மேடும் பள்ளமுமான நிலப்பகுதி. தொழில், விவசாயம் என அமைதியாக வாழ்க்கை நடத்தி வந்த ஆயிரம் பேருக்கு உட்பட்ட அக்கிராமத்தில் அந்தச் சூறாவளி நிகழ்கிறது.

‘உலகே என் காலடியில்’ என்று கொக்கரித்த படி ஐரோப்பியக் கண்டத்தை ஆறே வாரங்களில் விழுங்கிவிட்டு ஜெர்மனியின் நாஜி இட்லர் படைகளும், அவனின் கூட்டாளி இத்தாலி முசோலினிப் படைகளும், அவர்கள் வென்ற நாடுகளின் கூலிப்படைகளுமாக பிரம்மாண்டப் படை வலிமையுடனும் ஆயுத வலிமையுடனும் 1941 ஜுனில், உலகின் முதல் பாட்டாளிக் குடியரசான சோவியத் தேசத்தின் மேல் பாய்கின்றனர். 1942 இறுதி வாக்கில் அந்தத் தேசத்தின் பெரும் பகுதியை விழுங்கிவிட்டு தேசத் தலைநகர் மாஸ்கோ மற்றும் ஸ்டாலின் கிராட் நகரங்களைச் சுற்றி வளைக்கின்றனர். தொலைநோக்குப் பார்வையுடனான யுத்தத் தந்திரத்தோடு அக்கட்டம் வரை பின்வாங்கிய செம்படை, மார்சல் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் ராணுவத் தலைமையின் முடிவுப்படி ஒரு மாபெரும் எதிர்த்தாக்குதலை நடத்துகிறது. அதன் விளைவு தோல்வியே அறியாத இட்லரின் பாசிஸ்ட் ராணுவம் செம்படையிடம் படுதோல்வி அடைந்து பின்வாங்கி ஓடுகிறது. தோல்வியால் வெறிபிடித்த அந்த பாசிஸ்ட்டுகள் படை, எதிர்ப்படும் மக்களை எல்லாம் லட்சக்கணக்கில் கொன்றுகுவித்துப் பிணக்காடாக்கியபடி பின்வாங்குகிறது.

அது 1942 டிசம்பர் - 1943 ஜனவரி, பிப்ரவரி காலம். அந்த மிருகங்களை எதிர்கொள்கிறது பர்வோமைன்ஸ்கி கிராம இளைஞர் படை. இந்தப் படையில் 14 முதல் 17 வயதுக்குப் உட்பட்ட 55 பள்ளிச் சிறுவர் சிறுமிகள் இடம் பெற்றிருந்தனர்.

பாசிஸ்ட்டுகளை விரட்டி வரும் செம்படையோ தொலை தூரத்தில் வந்து கொண்டிருக்கிறது. ஸ்தல கட்சியோ தலை மறைவுச் செயல்பாட்டில் உள்ளது. அவர்கள் தொடர்பில் உள்ள கொரில்லாப் படைகளோ பகைவனின் பின்னணியில் அவர்களைச் சற்றும் உண்ண, உறங்க, சிந்திக்க விடாமல் திடீர்த் தாக்குதல்களை நடத்தியபடி உள்ளது. இங்கே கிராமத்திற்குள் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் ஜெர்மானியர்கள் ஆக்கிரமிப்பு. இளைஞர்படைக் குழுவின் தலைவர் ஒலெக்கின் வீட்டில்தான் ஜெர்மன் ஜெனரலே தங்கியிருக்கிறார், நோயாளிகள் எல்லாம் சுட்டுக் கொல்லப்பட்டு ஊர் மருத்துவமனை ஜெர்மன் ராணுவ முகாம் ஆகியுள்ளது, ஊர்ப் பள்ளியும் அவர்களின் ஆக்கிரமிப்பில், ஊர் சுரங்கங்கள் உற்பத்தித் தொழிற்சாலைகள் என ஊரே அவர்களின் காலடியில் நசுங்கிக் கிடக்கிறது.

இந்த நிலையில் ஊர் மக்களைக் காக்கப் பகைவரை அழித்திட சுடு ரத்தம் பொங்கும் அந்த இளைஞர் படை ஆர்த்தெழுகிறது. தலைமறைவுக் கட்சியோடு தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு அதன் வழிகாட்டுதல் களைப் பெற்றபடி அந்தப் படையினர் செய்யும் சாகசச் செயல்கள் பிரமிக்கத்தக்கவை.

இளம் சோவியத் ராணுவ வீரன் சர்ஜி, இளைஞர் படைத் தலைவன் ஒலெக், மற்றும் வான்யா, செம்னுகோவ், அனடொலி, விளாடிமிர், உல்யா, லியூபா, நீனா, ஸாஷா, மாயா, டோனியா என 55 வீர இளைஞர்களில் ஒவ்வொருவரும் அவர்களுக்கே உரிய வலிமையோடும் ஆற்றலோடும் நிகழ்த்தும் காரியங்கள் மிகுந்த பரபரப்பும் பதற்றமும் கொண்டவை.

ஜெர்மன் ராணுவ முகாமை வெறும் பாட்டில் குண்டுகளைக் கொண்டே தகர்த்து எறிவது, பாஸிஸ்ட்டுகளுக்கு உண்ண உணவு கிடைக்கவிடாமல் அழிப்பது, ஆள் காட்டித் துரோகிக்கு நட்ட நடுத் தெருவில் தூக்குத் தண்டனை தந்து நிறைவேற்றுவது, தீப்பொறி போன்ற பிரசுரங்களை மக்களிடம் பரவவிடுவது, தொழிற் சாலைகளைப் பாசிஸ்ட்டுகளுக்காகச் செயல்படவிடாமல் ரகசியமாக முடக்குவது, நோயாளிகளுக்கு ரகசிய சிகிச்சைகள் செய்வது என அவர்கள் எல்லா விதங்களிலும் செயல்படுகிறார்கள்.

எதிர்பாராமல் ஜெர்மானியப் பாசிஸ்ட் உளவாளிகள் இவர்களை மோப்பம் பிடித்து விடுகிறார்கள். இவர்களின் தொடர்பாளர்களைக் கைது செய்து, சித்ரவதை செய்து இவர்கள் பெயர்களை அடையாளம் கண்டு ஒவ்வொருவராகக் கைது செய்கிறார்கள். இவர்களுக்கு வழிகாட்டிய கம்யூனிஸ்ட்டுகளும் கைதாகிறார்கள். அடுத்து ஆரம்பமாகிறது சிறைக்குள் ஒரு போராட்டம். படிக்கும் வாசகனின் நெஞ்சம் கதி கலங்கிடும் சம்பவங்கள் அவை.

ஆயுதம் தாங்கிய பாசிஸ்ட்டுகளின் பிடியில் சிக்கிய அந்த வீர இளைஞர்கள், உடலெல்லாம் சிதைக்கப்பட்டு, கை கால்கள் துண்டு துண்டாக்கப்பட்டு, உயிர் ஊசலாடும் வரை கொத்திக் குதறப்பட்டும், ஒரே ஒரு இளம் கம்யூனிஸ்ட்டிடம் இருந்தும் கூட அவர்களுக்கு ஒரு தகவலும் கிடைப்பதில்லை. மறுபக்கம், சிறைபட்ட கம்யூனிஸ்ட் தோழர்களோ தங்களைத் தாக்கிய ஜெர்மானியர்க ளோடு ஒரு நேரடி மோதலை நடத்திப் பலரைப் படுகாயப்படுத்திவிட்டுத் தாங்களும் மடிகிறார்கள்.

இறுதியில் அந்த 55 இளைஞர் படையினரும் அவர்களின் சுரங்கத்தின் குழியில் உயிரோடு புதைக்கப் படும்போது படிக்கும் வாசகனின் நெஞ்சம் பதறுகிறது. ‘எங்கே அப்பனே! உங்கள் தேசத்தில் நீங்களும் பிற்போக்குவாதிகளை எதிர்த்து நடத்துங்கள் உங்கள் செயல்பாடுகளை’, ‘நடத்துங்கள் உங்கள் மக்கள் சேவைகளை எங்கள் மனம் குளிர’ என அந்த இளைஞர் படை நம்மைக் கம்பீரமாக அழைத்துச் சொல்வது போல ஒரு அசரீரி ஒலிக்கிறது.

வாசகர்களுக்குள் இத்தகைய கிளர்ச்சியை ஏற்படுத்தும் வரலாற்றுப் படைப்புகள் வெகுசிலவே. மக்கள் சேவைகளில் மனம் உவக்கும் வீரர் எல்லாம், தோழர்கள் எல்லாம் அவசியம் கற்றறிய வேண்டிய அற்புத வரலாற்று நாவல் இது.

அச்சிட்டு வெளியிட்ட நியூ செஞ்சுரி நிறுவனத்தார் மனமார்ந்த பாராட்டுக்குரியவர்கள்
-ஆ.பதேயிவ்
Pin It