கொள்ளித் தீயாய் எரிகின்ற 

கோடை விடுமுறை போயிற்று 

பள்ளிக் கூடக் கிளைநோக்கிப் 

பைங்கிளிகள் வர லாயிற்று 

தாய்மொழி என்னும் அமுதூறித் 

தழைத்த பள்ளிகள் அக்காலம் 

வாய்மொழி யாவும் பொய்யாக 

வணிகக் கொள்ளைக்(கு) இக்காலம் 

தன்சா திக்கு, மதத்துக்குத் 

தனித்தனி ஏலம் கோருகிறான் 

கஞ்சா, பட்டை காய்ச்சியவன் 

கல்வி வள்ளலாய் மாறுகிறான் 

மேனா மினுக்குப் பள்ளிகளில் 

போலிப் பகட்டு முரசார்க்கும் 

மாநக ராட்சிப் பள்ளிகளில் 

மாட்டுத் தொழுவம் வரவேற்கும் 

சட்டத் தையும்இவன் விலைபேசிச் 

சன்மா னத்தால்வாங்குகிறான் 

பட்டங் களுக்கும் விலைவைத்துப் 

பணக்கொள் ளையிலே வீங்குகிறான் 

கட்சித் தலைவர்கள் பலபேர்க்கும் 

கல்விக் கடைகளில் வருமானம் 

மெச்சும் படியாய் ஊர்ஏய்க்க 

மேடையில் மட்டும் தமிழ்மானம் 

எம் மொழியும்இங்(கு) அரசாள 

ஏவல் மொழியாய்த் தமிழ்தாழும் 

செம்மொழி கொண்டான் ஆட்சியிலே 

சேரியில் மட்டும் தமிழ்வாழும் 

இந்நிலை மாற்றும் பெருங்கிளர்ச்சி 

எல்லாத் திசையிலும் மீளட்டும் 

தன்னியல் பான பேரெழுச்சி 

தமிழர் மனங்களை ஆளட்டும்!