4.02.2009

சென்னை

குற்றவியலறிஞர் எஸ்.தாமஸ் அவர்களுக்கு, வணக்கம். புதைமனங்களைப் பற்றிய உங்களுடைய ஆராய்ச்சிக்கு உதவுகிற வகையில் மேலும் மூன்று கடிதங்களை அனுப்பி யிருக்கிறேன். இக்கடிதங்களும் இறந்துபோன ஆனியினு டைய சேகரிப்பில் இருந்து எனக்குக் கிடைக்கப் பெற்றவை தான். 1.ஆனியினுடைய தங்கை பெனீட்டா எழுதிய கடிதம். 2.நீதிபதி கதிரேசன் நாட்குறிப்பு. 3.நீதிபதியின் மனைவி அதிதியின் கடைசிக் கடிதம். மூவாயிரத்துக்கும் மேற்பட்டோரின் கடைசிக் கடிதங்களை முன்பு அனுப்பிய போதே இவற்றையும் சேர்த்து அனுப்பியிருக்க வேண்டும். ஏனோ என் உள்மனம் உத்தரவு வழங்கவில்லை. ஏதாவது ஒருவகையில் உதவும் என்று உணர்த்தியது. ஆனால் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இவற்றால் ஒரு பயனும் இல்லை என்பதால் உங்களுக்குப் பயன்படும் என்று அனுப்பி வைக்கிறேன். குற்றமில்லாச் சமுதாயத்தை நினைவில் காணுகிற ஒன்றாய் உங்களுடைய ஆராய்ச்சி முடிவுகள் மாற்றும் என்பதை முழுதாய் நம்புகிறேன்.

அன்புடன்,

அ.சந்துரு

பின்குறிப்பு: மூன்று கடிதங்களையும் பற்றி நான் தெரிந்து கொண்ட தகவல்களையும், சந்தேகிப்பவற்றையும் தனித் தாளில் எழுதியிருக்கிறேன்.

இறப்புச் செய்தி - 1: நீதிபதி கதிரேசன் நாட்குறிப்பு

27.05.1988

சென்னை

பாவகரமானத் தீர்ப்பு. இருநூற்று இருபது பக்கங்கள். தண்ணீர் குடித்துக் குடித்துப் படிக்கிறேன். ஒவ்வொரு பக்கம் புரட்டும்போதும் கழுத்தில் கயிறு சுற்றுவதுபோல கண்களில் செவ்வரி படர மிரளுது குற்றவாளிக் கூண்டில் நிற்கும் பயங்கர மிருகம். தூக்குத்தண்டனை வழங்கலை ஆவலோடு எதிர்நோக்குகின்றன வாத, பிரதிவாதம் கவனித்த மற்ற பதுங்கும் மிருகங்கள்.

ஆறாம் அறிவால் மிருகங்களைக் கொன்றுகொண்டோம் என்கிறார்கள். போகிற சாலையெங்கும் ஒவ்வொருவராய் உற்றுப் பார்க்கிறேன். அணிந்திருக்கிற ஆடை; பயணிக்கிற வாகனம்; வசிக்கிற வீடு எல்லாம் என் பார்வையில் ஓடி ஒளிந்துவிடுகின்றன. கர்ஜிக்கும், உறுமும் முகங்களுக்குரி யவை சுதந்திரமாக வெளிவந்து நிற்கின்றன என் எதிரில்.

சிந்தித்தல் எனும் விதியால் சிறப்படைகிறோம் என்றார் எஸ்.நிகில் சக்ரவர்த்தி. யாராவது இப்படிச் சொல்கிறபோது வாய் வெடிக்கச் சிரிப்பது என் வழக்கம். 18.07.1985 - ஆவலுடன் எல்லோரும் தீர்ப்பை எதிர்பார்த்திருக்கும் இவ் வழக்கு என் முன் வந்த தேதி. என் சகங்கள் இருக்கைகள் உடைப்புத் தினம் வேறு அன்று அனுசரித்தன. சக்ரவர்த்தி யிடம் வெடித்தபடியே சொன்னேன்.‘குளவி,குருவிகள் முதலில் கூடு கட்டத் தொடங்கினவா? இல்லை முதலில் நீங்கள் வீடு கட்டத் தொடங்கினீர்களா? விமானத்தில் பறந் தது யாரால்? இதுபோன்று எந்தக் கண்டுபிடிப்பின் பின்புலச் சிந்தனையையும் கவனித்துப் பாருங்கள். மரத்திலிருந்து ஒரு ஆப்பிள் கீழே விழுந்திருப்பது, வெளவால் மீயொலி எழுப்பியிருப்பது என்று நீங்கள் வரிசையாய்க் கண்டு கொண்டே போகலாம். இயற்கையின் படைப்புகளிலிருந்து உங்களுக்கு ஏற்ற வகையில் எல்லாவற்றையும் மாற்றி பிரதி யெடுத்துக் கொண்டு, சிந்திக்கிறோம் எனச் சிறப்பு தகுதி எதிர்பார்க்கிறீர்கள். ஓர் உதாரணத்துக்கு ஏதேன் தோட்டத்து ஆப்பிளிலிருந்து கணக்கெடுக்கத் தொடங்கி நீங்கள் களவாடிய பட்டியலை ஒருவன் எழுதத் தொடங்கினால் அவன் ஆயுள் மட்டும்தான் முடியும்’ என்றேன்.

“பூனைகளும் நாய்களும் அதைப்போல் களவாட வேண்டி யதுதானே... ஏன் மீன் திருடவேண்டும்?’’ புன்முறுவலை நிறுத்திக்கொண்டு இறுக்கமான முகத்துடன் கேட்டார். “மிருகங்கள் சிந்திக்கின்றன என்பதன் அடையாளமாக அதைப் பார்க்கிறேன். இடைவிடாக் களவாடலின் முக்கால் வேளையின்போதுதான் கோடானுகோடி உயிர்களை இழந்து இயற்கைச் சீற்றங்கள் எதனால் ஏற்படுகிறது என் பதை உங்களால் உணரமுடிகிறது. மிருகங்கள் இதை முன்பே உணர்ந்திருக்கின்றன. அதனால்தான் அதனுடைய தோலோடே, அதனுடைய இயல்போடே உயிர்ப்பதை மட்டும் உண்டு வாழ்கின்றன. எச்சரிக்கும் கருவியெல்லாம் பொருத்தித்தான் வைத்திருக்கிறீர்கள். இருப்பினும் நில நடுக்கத்தாலும் எரிமலைக்குழம்புகளாலும் ஏற்படுகிற இழப்புகளை உங்களால் கட்டுப்படுத்த முடிகிறதா? எந்தக் கருவியின் துணையின்றி மிருகங்கள் மட்டும் எப்படி உணர்ந்து தப்பித்துக்கொள்கின்றன? இப்படி உணர்கிற ஆற்றல் மனிதன் என்று இறுமாப்பு கொள்ளாமல் நீங்கள் மிருகங்களாகவே இருந்தவரை உணர்ந்த ஒன்றுதானே...’’ என்றேன்.

உதடு துடிக்கத் தொடங்கிவிட்ட கோபத்தை மறைக்க முயற் சித்தவாறே, “”நாகரிக வரையறைகள் அவற்றிற்கேது?’’ என்றார்.

“வரையறைகளுக்குள் சிறைப்பட்டுக் கிடத்தலே மிருக நிலையிலிருந்து விடுவித்துக் கொள்ளல் என்றால் உயிர் வாழ்வதற்கென்று எல்லாவற்றிற்குமே சில வரையறைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஒரு செல் உயிரான அமீபா முதல் யானை வரையிலும் வரையறைகள் இல்லாமல் எதுவும் வாழ்வதில்லை’’ என்றேன்.

“ஒருவனுக்கு ஒருத்தி என்கிற வரையறையெல்லாம் அவற் றிற்கேது?’’ என்று வெடுக்கெனக் குரைத்தார். “இதுவும் சில பறவைகளிடமிருந்தும் சில மிருகங்களிடமிருந்தும் நீங்கள் களவாடிய ஒன்றுதான்’’ என்றேன்.

சக்ரவர்த்திக்குள் இருக்கும் மிருகத்தை முழுதாய் வெளிப் படுத்தி பார்க்கவேண்டும் என்ற விருப்பம் பேச்சினிடையே எனக்குத் தோன்றியது. வழக்கமாய் என்னிடம் எழுப்பப் பட்டு நான் சொல்கிற பதில்கள்தான் என்பதால் பொறுமை யாகவே பதிலளித்து வந்தேன். அது இன்னும் சற்று அதிகமாக மிருகத்தை வெளிப்படுத்தும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். “சிரிக்கிறோமே... வேற எது சிரிக்குது’’ என்று அடுத்தத் தெருவில் உள்ளவைக்கும் அழைப்பு விடுப்பது போன்ற குரலில் இரண்டுமூன்று தடவை கேட்டுக் கேட்டுக் குரைத்தார்.

“அணுக்கதிர் வீச்சில்கூட பிழைத்துக்கொள்ளக் கூடிய வகையில் கரப்பான்பூச்சிக்குப் பாதுகாப்பு கவசமாக மேலோடு இருக்கிறது. நம்மிடம் அப்படி ஏதாவது கவசம் இருக்கிறதா? ஒவ்வோர் உயிருக்கும் ஒவ்வொரு சிறப்பு. சிரிப்பதைப் பெரிதாய்ச் சொல்கிறீர்களே... உதாரணத்துக்கு நீங்கள் ஆப்கனில் வாழ்கிறவராக இருந்து, உங்களிடம் ‘கரப்பான் பூச்சியின் பாதுகாப்பு கவசம் வேண்டுமா? சிரிப்பு வேண்டுமா?’ என்று யாராவது கேட்டால், சிரிப்பையா கேட்டுக்கொண்டிருப்பீர் கள்? மேலும் பறவைகள், மிருகங்கள் சிரிப்பதாகவும் ஒரு சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன’’ என்றதும், “அப்படியானால் என்னை யும்  மிருகம் என்று தான் சொல்வீர்களா?’’ முழுதாய் மாறியிருந்த அந்த மிருகம் கேட்டது.

“இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது? பயிற்சி பெற்ற மிருகங்கள் சாகசம் புரிவதுபோல வரையறைகளின் விதிகளால் நன்கு பழக்கப்படுத்தப் பட்ட மிருகம் நாம். நம்மைப் போன்றோரை நான் பதுங்கும் மிருகங்கள் என்றே அழைக்கிறேன். இப் போது மாறியிருக்கிறீர்களே அதைப் போன்றதொரு நாய் தனித்திருக்கும் குழந்தையை குற்றுயிராய் கடித்து எறிந்து விடுவது போல, மதம் பிடித்து பாகனைத் தூக்கிக் கீழே போட்டு மிதிக்கும் யானை போல வெளிப்படுத்தி விடு கிற குற்றவாளிகளை நான் பயங்கர மிருகம் என்று அழைக்கிறேன்’’என்று சொல்லி முடிப்பதற்குள், மேலே விழுந்து நாய் குதறத் தொடங்கியது. யார் யாரோ வந்து தடுத்தார்கள். பிரித்தார் கள். அதோடு முடிந்தது இருவருக்குமான உறவு. ஒரு மிருகம் அளிக்கிற தீர்ப்பா கவே இருக்கிறது நான் அளிக்கிற தீர்ப்புகள் என்று எல்லோரிடமும் என்னைப் பற்றி அது தொடர்ந்து குரைக்கத் தொடங்கியது.

இருபது நிமிடங்கள் அலுவலகத்திற்குக் காலதாமதமாக வந்ததற்காக எம்.சீனிவாசன் என்பவரை வேலையை விட்டே நீக்கிவிட்ட வழக்கு. கோபம் என் தலைமுடிகளை உதிர வைத்தது. ஒரு மிருகம் ஒரே இடத்தில் அடங்கிக் கிடப் பது என்பது எவ்வளவு பெரிய விஷயம்? தட்டச்சு செய்யும் ஆர்.மகிழந்தியைப் பார்த்து பலமுறை யோசித்திருக்கி றேன். எப்படி வாழ வேண்டிய பெண் மிருகம்? நாகரிகப் பெயரால் மூளையை ஓர் அரவை இயந்திரமாய் மாற்றிக் கொண்டு இப்படி உட்கார்ந்திருக்கிறதே என்று பரிதாபப் பட்டிருக்கிறேன். வேதனை சாட்சியாக இதனையே கொண்டு நிறுவன முதலாளி வீ.கரம் கேருக்குத் தண்டனை கொடுத்தேன். முதலில் இதுவும் ஒரு மிருகத்தின் செயல் தானே என்று எச்சரிக்கையோடு விட்டுவிட நினைத்தேன். உணராத மிருகமாக இருக்கிறதே என்று கொடுத்துவிட் டேன். சீனிவாசனை மீண்டும் வேலையில் சேர்த்து அவரது வீட்டிற்குத் தினமும் காலையில் மிகச்சரியாக 6.30 மணிக்கு கரம் கேர் செல்லவேண்டும். அங்கு கையெழுத்து இட வேண்டும். பின்னர் சீனிவாசனை அழைத்துக்கொண்டு 8.00 மணிக்குள்ளாக அவர்களுடைய அலுவலகத்திற்குப் போக வேண்டும்.இதைப்போல நான்குமாத காலத்திற்குத் தொடரவேண்டும் என்று கொடுத்தேன். வதை எண் ணம் கொண்ட முதலாளி மிரு கம் என்னைப் பார்த்து உறுமி யபடியே கூண்டிலி ருந்து வெளியேறி சென்றது. வித்தி யாசமான தீர்ப்பு சொல்வதாகச் சொல்லி வந்த என் சகங்கள் சக்ர வர்த்தியின் உபஊக்கத்தில் சட்டத்தை நான் மீறுவதாகக் குரைக்கத் தொடங்கி யது இந்த வழக்கிலிருந்து தான்.

ஈவ் டீசிங் வழக்கு. காயமுற்ற லெஸி என்கிற அந்தப் பெண் மிருகம் மீது எனக்கு வருத்தம்தான். காதலுற்ற அந்த மூன்று ஆண் மிருகங்களையும் பார்த் தேன். வேறொன்றும் எனக்குப் புதிதாய்த் தோன்றவில்லை. போகிற பசுவின் வால் பகுதியைக் கர்ப்பவாசத்திற்காக முகர்ந்து பார்க்கிற ஒரு காளையின் செயலாகத்தான் அதுபட்டது. விதிகளால் விலங்கிடப் பட்ட நான், பெண்கள் கல்லூரியின் வாயிற்பகுதியை ஒரு வருடத்துக்குப் பெருக்கவேண்டும் என்று மூன்று மிருகங் களுக்கும் தண்டனை கொடுத்தேன். இது சரியான தீர்ப்பு இல்லை என்று பலருக்கும் வருத் தம். மகளிர் அமைப்புகள் என் மேல் கோபத்தில் இருப்பதாக வேறு செய்திகள் வந்தன. தலைமை என்னை அழைத்து அறிவுரைத்து அனுப்பியது. விதிகள் தான் நம் இறைவன். அதற்குத் துரோகம் இழைக்காதீர்கள் என்றது. சக்ரவர்த்தி நெருக்கங்களின் ஊதலில் சொல்லப் பட்டதுதான் இதுவும் என்று எனக்குத் தெரியும்.

எண்பத்தாறு பெண்களுடன் தொடர்புடைய வழக்கு. பத்தி ரிகைகள் எல்லாம் எழுதியதன்படி பார்த்தால் உலகத்துப் பெண்களை எல்லாம் இந்தவொரு பயங்கர மிருகம் மட்டுமே பலாத்காரம் செய்து அதில் பாதிப்பேரைக் கொன்றதைப் போன்ற மாயையை ஏற்படுத்திவிட்டது. பயங்கர மிருகத்துக்கு வயது நாற்பத்தேழு. சாட்சி சொல் லிய பெண்களில் இருபத்தேழு பேருக்கு வயது இருபது. பதினெட்டு வயதில் தாங்கள் காதலித்து பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் தற்போது திருமணமாகி கணவர் களோடு வாழ்வதாகவும் ரகசிய வாக்குமூலங்கள் கொடுத் தன. பதினெட்டு வயதில் நடந்தது என்றால் பயங்கர மிரு கத்துக்கு அப்போது நாற்பத்தைந்து வயது இருந்திருக்கும். பதினெட்டு வயதுக்கு நாற்பத்தைந்து வயது மிருகத்தின் மீது ஈர்ப்பு ஏற்படுவதற்கான சுவை என்ன? வயது பார்த்து, சுவை பார்த்து மிருகங்கள் சேர்வதில்லை என்றாலும்கூட ஒத்துழைப்பின்றி எந்தப் பெண்மிருகத்தையும் பலாத்கா ரம் செய்ய முடியாது. பலவந்தப்படுத்தி ஒருமுறை பலாத் காரம் செய்திருந்தாலும், அடிக்கடி பலாத்காரம் செய்வது என்பது இயலாத காரியம். ஒருமுறை கூடவா அந்த மிரு கத்தைப் புரட்டிப்போட்டு உதைத்து தப்பிக்க முடிய வில்லை. ஒரு சிலவை மிருகத்தின் உயிரணுக்கள் படிந்த கறைத்துணிகளை பல ஆண்டுகளுக்குப் பிறகும் எடுத்து வந்து கொடுத்திருந்தன. திட்டமிட்டுத்தானே அந்தக் கறைத் துணியை எடுத்து வைத்திருக்க வேண்டும். ஒன்றி ரண்டு பெண் மிருகங்களோடு உறவு வைத்திருக்கிற போதே சமாளிக்க முடியாமல் ஆண்மிருகங்கள் சில அலறு கின்றன. வெவ்வேறு காலங்கள், வெவ்வேறு இடங்கள் என்று இருந்தாலும் இத்தனை பெண்களை எவ்வளவு பெரிய பயங்கர மிருகமாக இருந்தாலும் சமாளித்திருக்க முடியாது. பிரிவு 155(4) இந்திய சாட்சிய சட்டத்தின்படி, ‘பாதிக்கப்பட்டதாகச் சொல்கிற பெண்கள் எல்லோரும் பாலியல் ஒழுக்கத்தை மீறியவர்களாக இருப்பதால் இந்தப் பெண்களுடைய வாதத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளும் படியான புனிதத்தன்மை கொண்டது என்று எடுத்துக் கொள்ள முடியாததால் குற்றம்சாட்டப்பட்ட ஜெ. பிரேமை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கிறேன்’ என்று தான் தீர்ப்பு அளித்திருக்க வேண்டும். இதுபோன்ற தீர்ப்பு கள் உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உதாரணத்தை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் என்னால் இந்த வழக்கில் இப்படித் தீர்ப்பளிக்க முடியவில்லை.

காவல்துறையினர் பல குற்றவாளிகளைத் தப்பிக்கவிட்டு, ஜெ.பிரேமை மட்டுமே முதன்மையாக்கிக் காட்டிவிட்ட னர். இந்த மிருகத்திற்குப் பின்னால் பல மிருகங்கள் இயங்கி இருக்கிறது. அந்த மிருகங்களின் வற்புறுத்தலின் பேரில்தான் பெண் மிருகங்களும் சாட்சியம் அளித்திருக்க வேண்டும். எனக்குக் கொடுக்கப்பட்ட நெருக்குதல் களுக்கு அவர்களும் ஒரு காரணமாக இருக்கலாம். அளிக்கப்பட்ட சாட்சியத்தையும் வழக்கறிஞரின் வாதத்தை யும் வைத்துப் பார்க்கிற போது ஜெ.பிரேமுக்குத் தண்டனை உறுதி என்பதாக மக்கள் மனநிலையை பத்திரிகைகள் வேறு மாற்றி அமைத்துவிட்டன. இதற்குமேல் எனக்கு வேறு வழி யில்லாததால் நெஞ்சடைத்துக் கொண்டே உயிர் போகிற வரை அந்தப் பயங்கர மிருகமான ஜெ.பிரேமைத் தூக்கி லிடத் தீர்ப்பு கொடுத்துவிட்டேன். இந்த வழக்கில் முள்ளை முறிக்கவில்லை. தொடர்ந்து ஒன்றையே செய்கிற போது அதற்கான உணர்ச்சியே இல்லாமல் போய்விடுகிறது.

இறப்புச் செய்தி - 2: பெனீட்டா கடிதம்

15.08.1988

சென்னை

அன்புள்ள அக்கா ஆனி,

இழவு வீட்டில் திருடுகிற வேலை செய்கிறேன் என்றால் உனக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.“சரித்திரத்தைப் புரட்டப் போறா என் பொண்ணு’ என்று பத்திரிகையில் நான் சேர்ந்த போது அம்மா சொன்னது இப்போது உன் நினைவுக்கு வரும் என்று நினைக்கிறேன். முதலில் என்னை சென்னை மாநகராட்சி, அரசு பொதுமருத்துவமனை, கே.எம்.சி. மருத் துவமனை மற்றும் ரயில்வே பகுதிகளில் செய்தி சேகரிக்கச் சொல்லியிருக்கிறார்கள். செய்தி சேகரிப்புக்கான அரிச் சுவடியைத் தெரிந்துகொள்கிற பகுதிகள் இவை என்பதில் ஆசிரியர் குழுவுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கி றது. அது தெரியாமல் என்னைத் தலைமைச் செயலகத்திற்கு அனுப்புங்கள் என்று ஆசிரியரிடம் நான் வேண்டுகோள் வைக்க, என்னை இங்கு கேலி செய்து சிரிக்காதவர்களே இல்லை. சிலர் அவர்களுடைய சொத்துக்களை நான் பறிக்கப் போவதுபோலக்கூட கோபப்பட்டார்கள். பள்ளிப் பாடம் இல்லாமல் கல்லூரிக்குப் போகவே முடியாது என் கிற அவர்கள் உறுதிக்குப் பிறகு இந்த இழவு பகுதிகளையே சுற்றிச்சுற்றி வருகிறேன். இதில் மாநகராட்சி பகுதியை மட்டும் இழவுப் பகுதியாக எடுத்துக் கொள்ள முடியாது. மன்றக் கூட்டங்கள் நடைபெறுகிறபோது வேண்டுமானால் அப்படி ஒருவேளை தோன்றலாமே ஒழிய, எப்போதும் அப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது.

காலை எட்டரை மணிக்கே விடுதியிலிருந்து கிளம்பிச் சென்றுவிடுகிறேன். கே.எம்.சி.யில் கிடைக்கக்கூடிய விஷேசங்கள் பெரும்பாலும் தீக்குளிப்பு செய்திகள்தான். விஷேசம் என்று சொல்வதற்காக என்னைத் தப்பாக எடுத்துக் கொள்ளாதே அக்கா. காவலர்களிடம் விசாரிக்கிற போது ‘என்ன விஷேசம்... என்ன விஷேசம்’ என்று கேட்கிற பழக்கத்தில் எழுதுகிறேன். கொலை, கொள்ளை என்பதை யெல்லாம் இங்கு விஷேசம் என்றே அழைக்கிறார்கள். யாருக்கு விஷேசம் என்பதில் பலவாறு எனக்குக் குழப்பம் இருக்கிறது. அந்த விஷேசமான எரிந்த உடல்களை நீ பார்த் தாயானால் மயக்கம் போட்டு விழுந்துவிடுவாய். பத்து பதினைந்து நாள்களுக்குச் சாப்பிடக்கூட மாட்டாய். குறிப் பாகப் பெண்கள்தான் அதிகம் கரியாகிறார்கள். பிழைத்துக் கொண்ட சில பெண்களோடு நான் பேசியிருக்கிறேன். செத்தப் பிறகுகூட ஒருவரால் பேசமுடியும் என்பதற்கு அவர் கள் எல்லாம் சாட்சிகள். அழுதுகொண்டு நிற்கிற பிள்ளை களுக்காக கணவனைக் காட்டிக்கொடுக்காத தாய்களையும் அங்கு பார்க்கலாம். முழுதாய் எரிந்து செத்துப் போகாததற் காக மருத்துவமனையிலேயே உதைக்கப் போகிற கணவனையும் பார்க்கலாம் .

கே.எம்.சி.யைவிட அதிக விஷேசங்கள் கிடைக்கும் பகுதி அரசு பொதுமருத்துவமனை. உள்ளேயே காவல் நிலையம் இருக்கிறது. விசாரித்தால் அவர்களுக்குச் சொல்ல வேண்டி யதாக இருக்கக்கூடிய விசேஷங்களை மட்டும் சொல்லு வார்கள். முழுமையான செய்தியை அவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. அமரர் அறை கதவைத் தட்டினால் தான் சரியானத் தகவல் கிடைக்கும். சென்ட்ரல் ரயில் நிலை யத்தில் இருந்து வெளிவரும் வெளிமாநிலத்தவரை முதலில் வரவேற்பதே பொதுமருத்துவமனையும் மத்திய சிறைச்சாலையாகவும் இருப்பதுபோல, எனது விடியலும் பிணங்களோடே இருக்கிறதே என்ற வருத்தம் அமரர் அறைக்குச் சென்ற ஆரம்பப் பத்துநாள்கள் இருந்தன. அதற்குப் பிறகான நாட்களில் அப்படி நினைத்ததுகூட மறந்துபோய்விட்டது. கொலையுண்ட உடல், தற்கொலை செய்துகொண்ட உடல், விபத்தில் இறந்த உடல், சில நேரங் களில் இராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைய ளிக்க முடியாமல் இங்கு திருப்பிவிடப்பட்டு இறந்து போன உடல்கள் என எல்லாவற்றையும் இங்கு பிடித்துவிடலாம். ராகேஷ் என்றோர் அதிகாரி இருக்கிறார். தகவல்கள் சொல் வார். ஆனால் முழுமையானத் தகவல்களை அரசுப் பொது மருத்துவமனை பகுதியில் மட்டுமே செய்திகள் சேகரித்து வரும் வேறொரு பத்திரிகையின் மூத்த செய்தியாளர் முத்து வுக்கு மட்டுமே சொல்வார். இருவருக்கும் பிணங்களால் நாற்பதுவருட நெருக்கம். பிணத்தைக்கூட எழுப்பி விசா ரித்து வந்துவிடுவார் முத்து என்று எல்லோரும் அவரை பெருமையாகச் சொல்வோம். சிரித்து அங்கீகரித்துக் கொள் வார். ஒருமுறை மேயரிடம் முத்துவால் அவமானகரமானப் பேச்சு வாங்கினோம் அக்கா. இந்நாள்வரை அப்படியொரு பேச்சு மேயரிடம் வாங்கினோம் என்பதுகூட அவருக்குத் தெரியாது. ஒருவகையில் தனிப்பட்ட முறையில் முத் துவை மட்டுமே குறிப்பிட்டு மேயர் ஏசினார் என் றாலும் அது எங்களையும் உறுத்தவே செய்தது.

மன்றக்கூட்டம் முடிந்து செய்தியாளர் அறைக்கு வந்து எங்களோடு பேசிக்கொண்டிருந்தார் மேயர். குப்பைகள் வாராதது பற்றிய பிரச்சி னைக்காக மன்ற உறுப்பினர்கள் அன்று குப்பையால் அடித்துக்கொண்டார்கள். மேயர் என்றுகூட அழைக்காமல் அவர் பெயரை வலிந்து இழுத்து, நாற் காலியில் கிட்டத்தட்ட படுத்த படியே, ‘மன்றக்கூட்டம் நீங்க நடத்துற முறையே சரியில்லை... ‘ஏற்போர் ஆம் என்க’... ‘மறுப்போர் இல்லை என்க’ என்று கேட்டு, உங்கள் உறுப்பினர்களையே ‘ஆம்... ஆம்’ என்று சொல்லவைத்து கூட்டத்தை முடித்துவிட்டால் போதுமா’ என்றார் திடுக்கென முத்து. கோபத்தில் மேயர் கன்னம் துடித்தது. சுற்றி நிற்கிற பத்திரிகையாளர்கள் முன் னால் அநாகரிகமாகப் பேசிவிடக்கூடாது என்பதற்காகவும், எங்களிடம் இறங்கி வந்து பேசியதே தப்பு என்பது போல வும் மேயர் அறையைவிட்டு வெளியேறினார். ஐந்தாறு செய்தியாளர்கள் பின்னால் சென்று அவரைச் சமாதானப் படுத்தினோம். பிணங்கள் பின்னாலும், சென்ட்ரல் ரயில் நிலையக் காவலர்கள் பிடிக்கிற திருட்டு வழக்குகள் பின்னா லும் வெயிலில் ஓடிவிட்டு சற்று அமர்ந்து ஓய்வெடுக்கக் கூடிய வகையில் செய்தியாளர் அறை இருக்கிறது. இதையும் கோபத்தில் பிடுங்கிக் கொண்டால் என்ன செய்வது என்கிற எண்ணமே எல்லோர் மனதிலும் ஓடியது. “பொணச் செய்தி எடுக்கிற நாய், எனக்குப் புத்திமதி சொல்லுறதா’ என்று மேயர் திட்டிவிட்டு கதவை அறைந்துகொண்டு உள்ளே போய்விட்டார். மாநகராட்சியையும் சேர்த்து பார்ப்பதால் அது எங்களுக்கான பேச்சு இல்லை என்பதாக எடுத்துக் கொண்டாலும் பலநாட்கள் வலித்தது. மேயர் திட்டியதைப் பற்றிச் சொல்லாமல், “இப்படிப் பேசலாமா’ என்று முத்து விடம் சிலர் கேட்டார்கள். “இவன் என்ன சின்னப்பையன். முதல்வரையே நான் மடக்கினவன் தெரியுமா?’ என்று ஏதோ அவருடைய பழைய கதையைச் சொல்லத் தொடங்கி விட்டார்.

செய்தி சேகரிப்புக்காக முத்து, ராகேஷ் கூட்ட ணியில் சேர பல்வேறு முயற்சிகள் எடுத்தேன் அக்கா. அனைத்தும் தோல்வியிலேயே முடிய பிறகு பிண அறையிலேயே பணி புரிகிற கதிரோடு புதிய அணி அமைத்துக்கொண்டேன். கதிர் என்றதுமே என் நினைவுக்கு வருகிற ஒன்றைச் சொல்லி விடுகிறேன். உனக்குப் பேரதிர்ச்சியாக இருக்கும். பெண் பிணங்களைப் புணர்கிறவனாம் அவன். நானாக இதைச் சொல்லவில்லை. முத்து என்னிடம் திணித்த ஒன்று. புணர் வதைப் பற்றியெல்லாம் ஆண்களோடு அமர்ந்து பேசுகி றேன் என்று உனக்குக் கோபம் வரும். நாம் இருவரும் ஒரே வளர்ப்பு என்பதை மறவாதே. செய்தியாளர் அறையில் நான் நுழைகிறபோது காதில் விழுந்தது இது. என்னைக் கண்டதும் ஆண் செய்தியாளர்களிடம் சத்தத்தைக் குறைத்து கிசுகிசுத்தார் முத்து. கேளாமைக்காரரின் கிசுகிசுப்பு எப்படி இருக்கும்? முத்து சொல்லிக் கொண்டிருந்ததை அப்படியே சொல்லவேண் டும் என்றால், தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டாரே ஒரு பிரபல கவர்ச்சி நடிகை, அவரைப் புணர்ந்ததாக கதிர் முத்து விடம் சொன்னானாம். போதையில் இருப் பதைத் தவிர அவனிடம் எவ்வித தவறான நோக்கமும் நான் கண்டதில்லை. பாம்புக் கடியில் செத்தவர் செய்தியைக்கூட அவன் எனக்கு சொல்லாமல் விட்டதில்லை. எந்தப் பத்திரிகையிலும் வராத இழவுச்செய்தி என் பத்திரிகையில் வருவதற்கு அவனுடைய பங்களிப்பும் இருக்கிறது.

இதில் பொறாமை கொண்ட சிலர் அவனும் நானும் காதலிப்பதாகக் கதை கட்டுகிறார்கள். அதை நான் பொருட் டாகவே எடுத்துக் கொள்வதில்லை. அவர்களுடைய பொறாமைக்கு வேறொரு காரணமும் இருக்கிறது. மற்ற எல்லோரும் மருத்துவமனையில் மட்டும் செய்தியைச் சேகரித்துக் கொடுத்துவிடுவார்கள். நான் அப்படியில்லை. கொலை உட்பட எந்த இழவுச்செய்தியாக இருந்தாலும் புகைப்படம் இல்லாமல் கொடுப்பதில்லை. புகைப்படத்து டன் வரவேண்டும் என்பது எங்கள் ஆசிரியரின் கட்டளை. மற்ற பத்திரிகைகளிலிருந்து இது தனித்துக் காட்டும் என்று நினைக்கிறார்.

கட்டளையோடு நின்றுவிடுகிறது அவரது பணி. புகைப் படத்தைத் திருடுவதற்குள் நான் படுகிற பாடு இருக்கிறதே கேவலத்துடன் கூடிய பெரும் கஷ்டம். புகைப்படக்கலை ஞர்களை அழைத்து செல்லவேண்டியதுதானே என்று கேட் கலாம். உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருக்கிற இறந்தோர் வீட்டில் புகைப்படக்கருவியை எடுத்ததுமே உடைபட்டு விடும். போகிற வீடுகள் எல்லாமே ஏதாவது வில்லங்கம் நிறைந்த வீடுகள் என்பதால் திருடுவதைத் தவிர வேறு வழி யில்லை. உறவினர்களைப் போல கூட்டத்தோடு கூட்டமாக நின்று புகைப்பட ஆல்பங்களைத் தேடி மறைத்து வைத்துக் கொண்டு வந்துவிடுவேன். ஒரு சிலர் ஒன்றிரண்டு புகைப் படங்கள்தான் எடுத்து வைத்திருப்பார்கள். அது தெரியாமல் எடுத்து வர நேர்ந்திருக்கும். பத்திரிகையைப் பார்த்துவிட்டு வந்து, ‘வேற போட்டோஇல்ல...கொடுங்க... கொடுங்க’ வாயிலிலேயே நின்று கொண்டு இறந்தவரின் அப்பாவோ, அம்மாவோ அழுகிறபோது நான் பலமுறை ஒரு கொடூரமா னவளாக உணரப்பட்டிருக்கிறேன் அக்கா. கொடூரமானவ ளாகவே இருந்துவிடலாம்போல. உணரப்படுதல் மோச மான வலியாக இருக்கிறது. பூட்டிக் கிடக்கிற வீடுகளின் கதவுகளைக் கூட உடைத்து நுழைய வேண்டியிருக்கும். ஒரு முறை கதவை உடைத்து பீரோவை உடைத்துத் தேடிக் கொண்டிருக்கிறபோது மாட்டிக் கொண்டேன். அது ஒரு ரவுடியினுடைய வீடு. குண்டாந்தடியாக இருந்த அவன் மனைவியோடு சிலர் சூழ்ந்துகொண்டார்கள். பெண் காவலர் என்று என்னுடைய பத்திரிகை அடையாள அட் டையைக் காட்டிவிட்டே வந்துவிட்டேன். அவர்களுக்குப் படிக்கத் தெரிந்திருந்தால் என் செய்தியை அன்று முத்து எடுத்திருப்பார். கொஞ்சம் திருடுவதில் பயம் விட்டுப் போனப் பிறகு, இறந்து போனோர் எழுதிய நாட்குறிப் பேடு, கடைசிக்கடிதங்களைச் சேர்த்து திருடத் தொடங்கி னேன். கிடைத்த பல கடிதங்களை ஆய்வாளர் ரமேஷுக்குக் கொடுத்திருக்கிறேன். காவல்துறையில் நடக்கக்கூடிய சில ரகசியத் தகவல்களை எனக்கு அவர் சொல்லியிருக்கிறார். அதைப்போல எங்கு கொலை நடந்தாலும் எனக்கு முதல் தகவலாகச் சொல்லியிருக்கிறார். அதற்குப் பிரதிபலனாகத் தான் கிடைக்கிற தகவல்களை, கடிதங்களைக் கொடுப்ப தும். எனக்கு இப்போது இதுவே எதிராக அமைந்துவிட் டது. அப்படி அமைந்தது நான் உனக்குத் துரோகம் இழைத்த தால்கூட இருக்கலாம் என்று பயத்திலிருக்கும் என் மனசு ஆலோசிக்கிறது.

இறந்தோர் எழுதிய கடைசிக் கடிதங்களை எல்லாம் நீ சேகரித்து ஆய்வு செய்து வருகிறாய், அதில்தான் உண்மை இருக்கிறது என்று திடமாய் நம்புகிறாய் என்றும் நான் அறி வேன். ஆனால் உனக்கு உதவுகிற வகையில் நான் திருடிய தில் ஒரு கடிதம்கூட அனுப்பியதில்லை. நீதிபதி கதிரேசன், அவர் மனைவி அதிதி பற்றிய நெஞ்சை உறைய வைக்கும் பரபரப்பு செய்தியை அறியாமல் இருக்கமாட்டாய் என்று தெரியும். ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அதிதியோடு பேசினேன். காவலர்களிடம்கூட வாய் திறக்கா தவர் என்னிடம் எல்லாவற்றையும் தெளிவாகப் பேசினார். காவல்துறை ஆணையருக்குக் கொடுக்கச் சொல்லி என்னி டம் கடிதம் ஒன்றும் கொடுத்தார். கடிதம் வாங்கிய விவரத் தையும் அவர்களது வீட்டில் நீதிபதியினுடைய ஒரு நாட் குறிப்பேடு ஒன்றைத் திருடிய விவரத்தையும் ரமேஷிடம் தொலைபேசியில் தெரிவித்தேன். அடுத்த ஒரு மணிநேரம் கழித்து யார்யாரோ என்னை விடுதி தொலைபேசியில் அழைத்து மிரட்டத் தொடங்கியிருக்கிறார்கள். எல்லா வழக் குகளையும் போல் இதையும் சாதாரண வழக்கு என்றே நினைத்திருந்தேன். மிரட்டல் வந்தபிறகுதான் இதன் பின்னே மிகப்பெரிய சதி இருக்குமோ என்கிற சந்தேகம் ஏற் பட்டிருக்கிறது. அவர்கள் எதை மறைக்கப் பார்க்கிறார்கள்? யாரைக் காப்பாற்றப் பார்க்கிறார்கள்? கேட்பது நாட்குறிப்பு பக்கங்களையா? அதிதி வாக்குமூலத்தையா? வழக்கை எப்படித் திசை திருப்பப் போகிறார்கள்?

உடல் நலம் தேறிவிட்டதாகச் சொல்லி நன்றாகப் பேசிக் கொண்டிருந்த அதிதி எப்படி மருத்துவமனையிலேயே இறந்து போனார்? பின்னணியில் இருப்பது யார்? என்று எனக்கு எதுவுமே புரியவில்லை. அதிதியுடைய வாக்கு மூலத்தையும் நீதிபதியின் நாட்குறிப்பிலிருந்து ஒரு முக்கிய மான பகுதியையும் கிழித்து இத்தோடு அனுப்பியிருக்கி றேன். அதிதி சொல்லியிருப்பதைப் பெரும்பாலும் படிப் பதற்குத் தவிர்க்கப் பார். ஒருவேளை படிப்பதாக இருந்தால் மனதைத் தைரியப்படுத்திக் கொண்டு படி. உன் பழைய வாழ்க்கையை இத்தோடு ஒப்பிட்டு குழப்பிக் கொள்ளாதே. கடிதமோ, நாட்குறிப்பேடோ என்னிடம் இல்லை... விளையாட்டுக்குச் சொன்னேன் என்று ரமேஷிடம் அடித்துச் சொல்லத் தொடங்கியிருக்கிறேன். இதை ரமேஷ் நம்புவதாகத் தெரியவில்லை. நாட்குறிப்பின் மற்ற சில முக்கிய பக்கங்களை கன்னிமாரா நூலகத்தின் ஹிந்திப் பிரிவு அலமாரியில் கறுப்பு மை அடையாளமிட்டு ஒரு புத்தகத்தில் பதுக்கி வைத்திருக்கிறேன். ரமேஷ் அதிகம் வலி யுறுத்தினால் அவரை இன்னும் நான் நம்புவதுபோல் காட்டிக் கொண்டு நூலகத்திற்கு அழைத்துச் சென்று மறைத்து வைத்துள்ள பக்கங்களை எடுத்துக் கொடுக்கப் போகிறேன். உனக்கு அனுப்பியுள்ள இரண்டையும் பத்திர மாக எங்காவது பதுக்கி வை. எனக்கு இரண்டும் அவசியம் தேவைப்படக்கூடியவை.பத்திரிகை முதலாளியிடம் சொல் வது வீண். கச்சிதமாக வாங்கி அவர்களிடமே கொடுத்து விடுவார்கள் என்பதை அனுபவத்தில் கற்றிருக்கிறேன். அம் மாவிடம் இந்தத் தகவல்களைத் தயவு செய்து சொல்லாதே. இது என் கடைசிக் கடிதமாக இருக்காது என்று நம்புகி றேன். ஒருவேளை அப்படியிருந்துவிட்டால் என்ன ஆவது என்றுதான் விரிவாக எழுதியிருக்கிறேன். இது உனக்கு என் இறுதிப் பரிசுடன் கூடிய சாட்சியமாகவும் இருக்கலாம்.

அன்புடன்,

பெனீட்டா

இறப்புச் செய்தி - 3 : அதிதியின் கடைசிக் கடிதம்

உயர்திரு. காவல்துறை ஆணையர் அவர்கள்,

சென்னை.

 

வணக்கம்.

நீதிபதி கதிரேசன் மனைவி அதிதி எழுதுகிற கடிதம். என்னு டைய சுயநினைவோடே இக்கடிதத்தை எழுதுகிறேன். பெற்றோர் உறவை முறித்துக்கொண்டு நானாக விரும்பித் தேர்ந்தெடுத்துக்கொண்ட வாழ்க்கை இது. மனைவி என்கிற உரிமையை அன்பு செலுத்துகிற கணவன் கொடுத்தால் மட்டும் போதும், வைப்பாட்டி, குடும்பம் கெடுத்தவள் என்று சமூகம் எப்படியாவது அழைத்துவிட்டுப் போகிறது என்றுதான் என்னை அவரிடம் ஒப்படைத்தேன். ஆனால் சமூகத்தில் உள்ளவர்களால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. என்னுடைய முகத்துக்கு நேராக யாரும் இதுவரை எதுவும் சொன்னதில்லை. ஒருவேளை எனக்குப் பின்னால் சொல்வார்களோ எனக்குத் தெரியாது. ஆனால் கதிரேசன் எனக்குச் செய்தவை; கொடுமைகளுக்கே அடுக்காதவை. வைப்பாட்டியாகவும் வைத்துக்கொள்ளாமல் அதற்கும் கீழாகத்தான் என்னை நடத்தினார். அவர் வழக்கத்தில் சொல்வதானால் மிருகமாய்.

போதைப்பொருளைப் பயன்படுத்துவதுபோல நினைக்கிற போதெல்லாம் அவருக்கு நான் வேண்டும். அது மாத விலக்கான நாளாக இருந்தாலும் சரி. மனப்பதற்றத்திலும், வலியோடுகூடிய தொடர் இரத்தப்போக்கிலும் முடியாமல் தவிக்கிறபோதுதான் அவர் அதிகம் தொந்தரவு செய்வார். இரத்தவாடை கிளர்ச்சியை அதிகப்படுத்துகிறது என்பார். அருவருப்பில் நானே நெளிந்துகொண்டிருக்கையில் எப்படித்தான் அவருக்குக் கிளர்ச்சியடைகிற புத்தி வருமோ எனக்குத் தெரியவில்லை.

விருப்பத்திற்கு இணங்காமல் இருக்கமுடியாது. மறுத்தால் உயிர் போகிற அடி விழும். அந்த நேரத்தில் அழவும்கூடாது. அப்படி அழுதாலும் வெளியில் கேட்காமல் அழவேண்டும். அதிகம் கேட்டுவிட்டால் அதற்கு விதவிதமான சித்திரவதை களை அனுபவிக்க வேண்டியிருக்கும். ‘சல்லாபிக்க மட் டுமே படைக்கப்பட்ட பெண் மிருகம் நான். அதைத் தாங்கு வதற்கான வலிமை இயற்கையாகவே உண்டு. அதனால் அழைக்கிற போதெல்லாம் இணங்க வேண்டும்’ என்று அடிக்கடி சொல்வார். இதையெல்லாம் நாகரீக வார்த்தை களால் சொல்கிறேன். துணிவாக எல்லாவற்றையும் எழுது கிற மனநிலைக்கு நான் வந்துவிட்டாலும்கூட அவர் பயன் படுத்துகிற கொச்சை வார்த்தைகளை அப்படியே பயன் படுத்தி எழுதுவதற்கு கூச்சமாக இருக்கிறது. கல்லூரியில் தத்துவவியல் படித்துக்கொண்டிருந்த காலமாக இருந்திருந் தால் இந்தளவுக்குக்கூட எழுதுவதற்குத் துணிந்திருக்கமாட் டேன். எனக்கேற்பட்ட தனிப்பட்ட வதைகளைக் காட்டி லும் அவருக்கு உடந்தையாக நான் செய்த பாவங்கள்தான் இந்தத் துணிவைக் கொடுத்திருக்கும் என நினைக்கிறேன்.

இதுவரை அவருக்காக ஏழு பிள்ளைகளைக் கொன்றிருக்கி றேன். கருவைக் கலைப்பதை அவர் வேண்டுமானால் கொலையாகப் பார்க்காமல் இருக்கலாம். கருக்கொண்ட துமே அந்தக்கருவுக்கு ஆண்பிள்ளையோ பெண்பிள் ளையோ ஒரு உருவம் கொடுத்து, உணர்வு கொடுத்து, அதற்குச் சோறு ஊட்டி, அதோடு விளையாடி, பள்ளிக்குக் கொண்டு போய்விட்டு,வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுத்து அடம் பிடிக்கிறபோது குழந்தையிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டு... என்று வயிற்றைத் தடவிக் கொண்டே கற்பனையில் முழு தாயாக மாறிவிடுகிற உணர்ச்சி சுரக்கப் பெற்ற என்னால் அப்படிச் சொல்ல முடியாது. முதல் கருவைக் கலைத்துவிட அவர் சொன்னபோது முதலில் நான் ஒத்துக்கொள்ளவே இல்லை. ஒரு சில நாட்களுக்குப் பிறகு அவர் மேலிருந்த ஈர்ப்பால் அவர் சொல்வதற்குக் கட்டுப்பட வேண்டுமே என்பதற்காக ஒத்துக் கொண்டேன். அப்போது நானும் கொஞ்சம் காலம் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் சந்தோஷமாக இருக்கலாம் என்கிற தவறான திணிப்பில் ஊறிப் போயிருந்தேன் என்பது உண்மைதான். அதற்காக ஏழு பிள்ளைகளையும் நான் பறி கொடுப்பேன் என்று நினைக்கவில்லை. ஒவ்வொரு முறையும் தாய்மை யோடு திளைப்பதும், பறிகொடுப்பதுமாகவே கதறியிருக்கி றேன். என்னுடைய வயிறு சவப்பெட்டியாகவே மாறிவிட் டது போன்ற நினைப்பே அடிக்கடி வருகிறது. ஏழு பிள்ளை களையும் பறிகொடுக்காமல் அவர் வீட்டை விட்டே வெளி யேறி வந்திருக்கலாம். மனம் மாறிவிடுவார் என்கிற நப்பா சையிலேயே அனைத்தையும் இழந்துவிட்டேன். பெற்றோ ரையும் உதறிவிட்டு வந்தபிறகு எங்கு போவதென்று தெரியவில்லை.

என் மூலமாக அவருக்கு வருகிற இன்னொரு குழந்தையை, உண்மையாகவே அவர் விரும்பவில்லை என்பதை உணர்ந்த பிறகு ஒருகட்டத்தில் நான் இறங்கியும் வந்தேன். குழந்தை வேண்டாம் என்றால் கருத்தடை சாதனங்களை உபயோகிக்கலாம் என்று கூறினேன். என் வகைக்கும் ஒத்துக்கொள்ளவில்லை. அவர் வகைக்கும் ஒத்துக்கொள்ள வில்லை. இயற்கைக்குத் தடை போடக்கூடாது என்று சொல்லிவிட்டு, மாதவிலக்குக்கு முன் பத்து நாள் பின் பத்து நாள்களில் கருவாகாது என கணக்கு சொல்வார், கணக்கைச் சரியாய்க் கடைப்பிடிப்பவர் போல. கலைப்பது இயற் கைக்குத் தடையில்லையா என்று ஒருமுறை கேட்டேன். அதற்கு நான் அனுபவித்த சித்திரவதையை வேறு யாருமே அனுபவித்திருக்க முடியாது.

இந்தச் சித்திரவதைகளுக்கெல்லாம் பழிவாங்குகிற வகை யில்தான் உயிர் போகிறவரை அவரைக் குத்திக் கொன்று விட்டேன். திங்கள்கிழமை காலை என் ஏழாவது பிள் ளையைக் கலைப்பதற்குப் போனபோதுகூட அவரைக் கொல்லுகிற எண்ணம் எனக்கு இல்லை. இரண்டு முறை களுக்கு மேல் எந்த மருத்துவரும் கரு கலைப்பு செய்வ தில்லை. ஏதாவது ஒரு பொய்யைச் சொல்லித்தான் செய்து வந்திருக்கிறேன். இந்த முறை ஓரிடத்திற்குச் சென்றபோது, அதிக முறை கலைத்திருப்பதை அறிந்த மருத்துவர் ஒருவர் திட்டி விரட்டிவிட்டார். கலைப்பதற்காக வந்த பெண்கள் தான் அங்கு நிரம்பியிருந்தாலும் அந்த அவமானத்தை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இறந்துவிட வேண்டும்போல இருந்தது. அழுதுகொண்டே வெளியே வந்துவிட்டேன். பிறகு வேறொரு இடத்திற்குச் சென்று அழுது கெஞ்சி அதிக பணம் கொடுத்து சம்மதிக்க வைத் தேன். அந்த மருத்துவரும் இதுதான் கடைசியாக இருக்க வேண்டும் என்றும் இதற்கு மேல் செய்தால் உன் உடம்பு தாங்காது என்றும் சொன்னார்.

சின்ன கருவாக இருப்பதால் மாத்திரையிலேயே கரைக்க முடிவெடுத்தார். முத்தின கரு வாகிற வரை நாள் கடத்தாமல் சின்ன கருவாக இருக்கிற போதே கலைக்க அனுப்புகிற கரிசனம் அவருக்கு உண்டு. வழக்கமாக வீட்டிற்கு வந்து மாத்திரை போட்ட சிறிது நேரத்துக்குப் பிறகு கரு கலைந்து இரத்தப்போக்கு அதிக ரித்து சதை கட்டிக்கட்டியாக வெளியேறும். இந்த முறை மாத்திரை போட்டு இரண்டு நாள்கள் கடந்தும் இரத்தப் போக்கு இல்லை. எனக்கு பயம் அதிகமாகிவிட்டது. என்ன செய்வதென தெரியாமல் குழப்பத்திலேயே கிடந்தேன். அவரிடம் சொன்னபோது கரு முத்தியிருக்கும் மருத்துவரி டம் போ என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு வேறு வேலையில் மூழ்கிவிட்டார். புதன்கிழமை காலை பேருந் தில் ஏறி உட்கார்ந்தேன். அலுவலக நேரம் என்பதால் பேருந் தில் ஒரே கூட்டம். யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக காரில்கூட அவர் அனுப்புவது கிடையாது. துணைக்கு யாரையும் அழைத்துக் கொள்ளாமல், யாரோபோல் போக வேண்டும். யாருக்கும் தெரியாமல் கலைத்துவிட்டு வர வேண்டும்.

இரண்டு நிறுத்தங்கள் பேருந்து கடந்திருக்கும். திடீரென எனக்கு இரத்தப்போக்கு ஏற்பட்டது. பதற்றம் அதிகரித்து உடம்பெல்லாம் நடுங்கத் தொடங்கிவிட்டது. நாப்கின் வைத்திருந்தேன். இருந்தாலும் அது தாங்காது. அடுத்து சதை கட்டிக்கட்டியாக வெளியேறத் தொடங்கும். இரத்தம் கொட்டும். புடவையெல்லாம் இரத்தமாகிவிடும். பேருந்தில் எல்லோர் முன்னும் அசிங்கம்பட வேண்டியிருக் கும் என்று நினைத்து விறுவிறுவென எழுந்து அடுத்த நிறுத்தம் வருவதற்குள் இறங்கவேண்டும் என்று பின் படிக் கட்டு பக்கம் போனேன். வெடுக்கென வயிற்றிலிருந்து சதைத்துண்டு கழன்று விழுந்து இரத்தம் கொட்டத் தொடங்கிவிட்டது. இரண்டு கால்களிலும் இரத்தம் ஓடியது. பாவாடை ஊறி மயக்கம் கண்ணை மறைக்கிறது. பேருந்தை நிறுத்த சொல்லி அடிவயிற்றில் இருந்து சத்தம் போட்டேன். அந்த நேரத்தில் என்னைப்போலவே பலரும் நிறுத்தச் சொல்லி கத்தியது மட்டுமே நினைவு இருக்கிறது. பேருந்து நின்றதா அல்லது ஓடிய பேருந்திலிருந்து குதித்தேனா தெரியவில்லை. சாலையின் குறுக்கே ஓடி ஒரு ஆட்டோ வில் ஏறி, கையிலொரு துணி இருந்தது அதைப் போட்டு உட்கார்ந்து கொண்டேன். ஆட்டோக்காரர் என்ன புரிந்து கொண்டார் என்று தெரியவில்லை. என்னை எதுவும் கேட்க வில்லை. அழுதுகொண்டே முகவரியை மட்டும் சொல்லி விட்டு அங்கு தலைகுனிந்து உட்கார்ந்து கொண்டேன். நிமிர்ந்து பார்க்கவேயில்லை. வீட்டு வாசலுக்கு வந்ததும் கையிலிருந்த பணத்தை அப்படியே எடுத்து ஆட்டோக் காரரிடம் கொடுத்துவிட்டு, எதுவும் சொல்லாமல் வாசல் கதவைத் திறந்துகொண்டு வீட்டிற்குள் ஓடிவந்துவிட்டேன். உட்கார்ந்த இடத்தைச் சுற்றி இரத்தம் ஓடிக் கிடந்தது.

பாவம், என்னைப் பார்த்ததும் வேலைக்காரச் சிறுமி அலறி விட்டாள். ‘என்னக்கா.. என்னக்கா..இரத்தம்’ என்று பதறி யடித்துக் கொண்டு வந்தாள். அவளைத் தள்ளிவிட்டு எனது அறைக்குள் ஓடி, கதவைச் சாத்திவிட்டு எல்லாவற்றையும் அவிழ்த்துப்போட்டேன். உடம்பெல்லாம் ஒரே அருவருப் பாக இருந்தது. சதைத்துண்டுகளை கழிப்பறையில் போட்டு தண்ணீரைக் கொட்ட வைத்தேன். குமட்டிக்கொண்டு வாந்தி வந்தது. விடாமல் நெஞ்சு வலித்துக்கொண்டே இருந்தது. நாலுமுறை இதைப்போல இரத்தத்தோடு சதைத் துண்டுகள் வெளிவந்தது. உடைகளை மாற்றுவதும் குளிப்ப தும் மயங்கிக் கிடப்பதுமாகவே இருந்தேன். இரத்தப் போக்கு நிற்காமலேயே இருந்தது. சிறுசதைப் பிசுறு வேறு வெளியில் வராமல் அடைத்துக் கொண்டிருந்தது. அதை எடுப்பதற்கு மீண்டும் மருத்துவமனைக்குத்தான் போக வேண்டும். கொறடா போன்ற ஒன்றை வைத்து முன்பொரு முறை சுரண்டி எடுத்திருக்கிறார்கள். அதைப்போல் தான் இதையும் எடுக்க வேண்டியிருக்கும். என்ன பாடுபட போகி றேனோ என்று நினைத்தபடியே அன்று முழுதும் கிடந் தேன். இரவு வந்தவர், இதையெல்லாம் தாங்கிக் கொள் வாய் என்று சிரித்தபடியே நெருங்கி வந்தார். எனக்கு எப்படி ஆவேசம் வந்தது என்றே தெரியவில்லை. வெறி பிடித்தவள் போல அறைக்குள் அங்கும் இங்கும் ஓடினேன். கத்தி ஒன்று கையில் கிடைத்தது. எடுத்து அவரை விரட்டி விரட்டிக் குத்திக் கொன்றேன். இறந்துகிடந்தவரை பார்க்கப் பார்க்க பயம் அதிகரித்து விட்டது. என்ன செய்வதென்றே தெரிய வில்லை. வயிற்றில் கத்தியால் குத்திக் கொண்டேன். மயங்கி விழுந்துவிட்டேன்.

12.08.1988 உண்மையுடன்,

இரவு:12.30 அதிதி

 

என் குறிப்புகள் :

(I) மூன்றுபேரிடம் கடிதங்களைப் படிக்கக் கொடுத்திருந்தேன். மிருக எண்ணம் கொண்டவராக ஒரு நீதிபதி இருப்பார் என் பதை அவர்கள் நம்ப மறுத்தார்கள். அதேசமயம் பீஹாரைச் சேர்ந்த நீதிபதியாக இருந்தால் நம்பலாம் என்கிறார்கள். பணத்தைப் பெற்றுக்கொண்டு பதவியிலிருந்த குடியரசுத் தலைவர், பிரதமர் போன்றோருக்கே பிடிவாரண்ட் பிறப்பித்தவர்களாம்.

(II) நாட்குறிப்பை இவ்வளவு விரிவாக யாராவது எழுதுவார் களா? என்றார் ஒருவர். உணர்ச்சிவசப்பட்ட நேரத்தில்தான் சிலர் நாட்குறிப்பே எழுதுவார்கள். அது மூன்று மாதத்துக்கு ஒருமுறையாகவும் இருக்கலாம். ஐந்து மாதத்துக்கு ஒருமுறை யாகவும் இருக்கலாம். நிகழ்வைப் பொறுத்து விரிவாகவும் எழுதுவார்கள் என்றார் மற்றொருவர்.

(III) எனக்குத் தெரிந்து பிரிவு 155(4) இந்திய சாட்சிய சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்ட வழக்கு: நிகழ்ந்தது 1972-ம் வருடம், மகாராஷ்டிரா சந்திரபூர் மாவட்டத்தில், மாதுரா என்ற இளம்பெண் துகாராம் மற்றும் கண்பத் என்ற இரு காவலர் களால் வன்புணர்ச்சிக்கு உள்ளானாள். அங்குள்ள செஷன்ஸ் நீதி மன்றம் 1974-வருடம் வழக்கை விசாரித்து, மாதுரா நடத்தை கெட்டவள், அவள் சொல்வதை நம்ப முடியாமல் இருக்கிறது என்று காவலர்களை விடுவித்தது. பிறகு மும்பை நீதிமன்றத் துக்கு வழக்குப் போனது. அங்கு காவலர்களுக்குக் கடுங்காவல் தண்டனை அளித்தது. உடனே காவலர்கள் மேல் முறையீட் டிற்கு உச்சநீதிமன்றத்துக்குப் போனார்கள். அங்கு குற்றவாளி கள் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கச் சொல்லப்பட்ட காரணங்களுள் ஒன்று: மாதுரா உடலில் வெளிக்காயங்கள் ஏதும் இல்லை.

(iv) வன்புணர்ச்சி குற்றத்தை நிரூபிக்க பெண் கூச்சலிட்டிருக்க வேண்டும், காயங்கள் இருக்கவேண்டும், நேரடி சாட்சியங்கள் இருக்கவேண்டும் என்று கூறுவதெல்லாம் சட்டம் ஆண்கள் பாதுகாப்பில் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது என்று அபிலாஷ் என்கிற நண்பர் ஒருவர் கூறுகிறார்.

(v)விருப்பத்தின் காரணமாக நீதிபதி கதிரேசன் கொலை வழக்கு வந்த செய்திகளைத் தெரிந்துகொள்ள வேண்டுமென பழைய பத்திரிகைகளில் தேடினேன். அப்போது 19.08.1988 அன்று பத்திரிகைகளில் வந்திருந்த செய்தி என்னைத் திடுக்கிட வைத்தது. ‘காதல் தோல்வியால்; இளம்பெண் தற்கொலை’ என்ற தலைப்பில் விடுதியில் பெனீட்டா தூக்குபோட்டு இறந்த செய்தியைப் பதிவு செய்திருக்கிறது. கதிரோடு இருந்த காதலை அவரது பெற்றோர் விரும்பவில்லையாம்.

vi)பெனீட்டா இறப்பு செய்தியைப் படித்தபிறகு ஆனி மீது தான் எனக்கு முதலில் கோபம் வந்தது. கடிதம் கிடைக்கப் பெற்றதும் ஆனி நடவடிக்கை எடுத்திருந்தால் பெனீட் டாவைக் காப்பாற்றியிருக்க முடியும். நடவடிக்கை எடுக்க முடி யாதளவுக்கு அப்படி என்ன சூழல் என்றுதான் தெரியவில்லை. சூழல்தானே எல்லாக் குற்றத்துக்கும் காரணியாக இருக்கிறது. (அதிதி கடிதத்தையாவது காவல்துறை ஆணையரிடம் கொடுத் திருக்கலாம். இருவருமே அதற்கு ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை என்பதுதான் புரியவில்லை.)

(vii)கன்னிமாரா நூலகத்திற்குப் போனபோது கறுப்புமை யிட்ட புத்தகம் ஏதாவது இருக்கிறதா என்று ஹிந்திப் பிரிவில் தேடிப் பார்த்தேன். ஒரு புத்தகம் இருந்தது. ஆனால் அது 2004ல் பிரசுரிக்கப்பட்ட புத்தகம்.

(viii) அதிதி கடிதத்தின் எழுத்து நடையைப் பார்க்கிறபோது, மருத்துவமனையில் அவர் சொல்லியதையெல்லாம் பெனீட்டா எழுதி கையெழுத்து வாங்கியிருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. குறிப்பாக இந்த வரிகளைப் படிக்கிறபோது: /ஒவ்வொரு முறையும் தாய்மையோடு திளைப்பதும், பறிகொடுப்பதுமாகவே கதறியிருக்கிறேன். என்னுடைய வயிறு சவப்பெட்டியாகவே மாறிவிட்டது./

(ix) கருக்கொள்ளாமல் இருப்பதற்கும் ஒரு மாத்திரை இருக்கி றது, அதைப் பயன்படுத்திருக்கலாமே என்றொரு சந்தேகம் வந்தது. ஒரு மருத்துவரிடம் கேட்டபோது, அது தவறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்றார்.

x) நாளமில்லாச் சுரபிகள் சமச்சீரற்ற தன்மையாய் இருக்கிற போது ஒருவர் குற்றமிழைப்பதற்கு அதிகம் வாய்ப்பு இருக் கிறது. மாதவிலக்கு காலங்களில் பெண்கள் அதிகம் கோபப் படுவதைக் காணலாம். இரத்தத்திலேயே புரண்டுக் கொண்டி ருந்த அதிதிக்கு கொலை செய்கிறளவுக்கு ஆவேசம் வருவதற்கு அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

(xi) எல்லாவற்றிலும் அடிநிலையில் உள்ளவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கார் ஓட்டுநர் பூபதியும் வேலைக்காரச் சிறுமி கோகிலாவும் காவலர்களால் படாதபாடுபடுத்தப்பட்டிருப்பார்கள் போலத் தெரிகிறது. ‘அந்த அக்கா இரத்தத்தோடு ஓடி வந்ததைப் பார்த்தேன். வேறொண்ணும் எனக்குத் தெரியாது. இரவில் அவர்கள் வீட்டில் தங்குவதில்லை’ என்று மட்டும் சொல்லியிருக்கிறாள் அந்தச் சிறுமி.

(xii) அதிதியினுடைய உடலை யாருமே வாங்க முன்வராமல், அனாதை பிணமாகவே அது எரிக்கப்பட்டிருக்கிறது.