காலைநேர நடையின் போது வழக்கமாகச் சந்திக்கும் நண்பரொருவர்தான் செய்தியைச் சொன்னார்: ”மைக்கேல் ஜாக்ஸன் இறந்து விட்டான். என்.டி.டி.வி., சன் போன்ற தொலைக்காட்சிச் சேனல்கள் இறந்து போனவனின் வீடியோ நறுக்குகளையும் அவனைப் பற்றி மற்றவர்கள் கூறுவதையும் காட்டிக் காட்டிக் கூத்தடித்துக் கொண்டிருக்கின்றன. பிரபாகரன் இறந்தபோது ஏதோ ஒரு மிருகம் அடித்துக் கொல்லப்பட்டது போல இந்த ஊடகங்கள் பேசின”. இத்தனைக்கும் அவர் பிரபாகரனின்,விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் அல்லர்;மாறாக, இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவிக்க ராஜபக்ச அரசுக்கு உதவிய இந்திய அரசின் மீதும் இந்திய, தமிழக ஆளும் கட்சிகளின் மீதும் கட்டுக்கடங்காத. நியாமான கோபம் கொண்டிருப்பவர். எனினும்,அவர் மைக்கேல் ஜாக்ஸன், பிரபாகரன் ஆகியோரின் மரணங்களை ஒப்பிட்டிருக்க வேண்டியதில்லை, முன்னவர் மீதும்கூட சற்று அனுதாபம் காட்டியிருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது.

மின்னணு, அச்சு ஊடகங்கள் ‘மைக்கேல் ஜான்ஸனு’க்கு வைத்த பிலாக்கணங்கள் எத்தகையவையாக இருக்கும் என்பது எனக்கும் தெரிந்திருந்தது.இந்தியாவில், தமிழகத்தில் உள்ள இசைக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள் மத்தியில் உள்ள ‘பிரபலங்கள்’ ஜான்ஸனின் இசை,நடனம் பற்றிய தங்கள் கருத்துகள் எதனையும் கூறியதாகத் தெரியவில்லை. அவர்களது ஆச்சார, அனுட்டானங்கள் அந்தக் கறுப்புக் கூத்தாடியைப் பற்றிப் பேச அனுமதித்திருக்காது போலும்!.ஏ.ஆர்.ரகுமான் மட்டுமே இறந்து போனவர் தன் மீது ஏற்படுத்திய தாக்கத்தை உணர்ச்சியோடும் அறிவுபூர்வமாகவும் மதிப்பிட்டிருந்தார்.

ஜாக்ஸன் பற்றிய செய்திகள் என்று நான் கடைசியாகப் படித்தது 2006ஆம் ஆண்டில்தான்:அவர் மீது தொடுக்கப்பட்ட மிக அவமானகரமான வழக்குகளிலிருந்து (இது குறித்துப் பின்னர் காண்போம்) 2005இல் விடுதலை பெற்ற அவர் பஹ்ரெய்னுக்குச் சென்று, அந்த நாட்டு மன்னரின் மகன் ஷேக் அப்துல்லாவின் விருந்தோம்பலில் சில மாதங்களைச் செலவிட்டார்.அவர் முஸ்லிமாக மாறிவிட்டார் என்ற செய்தி கூட அடிபட்டது. எனினும் அவர் இஸ்லாமிய மார்க்கத்தைக் கடைப்பிடித்தற்கான புறச்சான்றுகள் ஏதும் வெளிப்படவில்லை. ஷேக் அப்துல்லா, பெரும் செல்வந்தர் மட்டுமல்ல. இசையிலும் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமும் அறிவுமுடையவர். அவரும் லிபியாவின் அதிபர் கடா•பியுன் மகனும் ஜாக்ஸனின் அபிமானிகள்.ஷேக் அப்துல்லாவும் ஜாக்ஸனும் சேர்ந்து, போரும் பேரழிவுகளும் நிரம்பி வழியும் உலகத்தில் உலக சமாதானத்தையும் உலக மக்களின் ஒற்றுமையையும் வலியுறுத்தும் ஜாக்ஸனின் இசை/ நடன வீடியோவைத் தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தனர். அதற்கு ‘வானத்தை சாம்பல் நிறமாக்குபவன்’ என்னும் தலைப்பையும் கொடுத்திருந்தனர்.

அதே வேளை, மைக்கேல் ஜாக்ஸனின் நெவெர்லாண்ட்டைக் (பண்ணை வீட்டை) கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் சில நிறுவனங்கள் ஈடுபட்டு வந்தன. ‘பாங்க் ஆ•ப் அமெரிக்கா’வுக்கு அவர் தரவேண்டியிருந்த கடன் தொகை 240 மில்லியன் டாலர்; நெவெர்லேண்ட்டில் பணியாற்றி வந்தவர்களில் 90 பேர் தங்களுக்கு ஜாக்ஸன் பல மாதங்களாக ஊதியம் ஏதும் தரவில்லை என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர். பாங்க் ஆ•ப் அமெரிக்கா, ஜாக்ஸனுக்குக் கொடுத்திருந்த கடன் தொகையை •போர்ட்ரெஸ் இன்வெஸ்ட்மென்ட் குரூப் என்னும் நிதி நிறுவனம் தனது பொறுப்பில் ஏற்றுக் கொண்டு,அவருக்கு 270 மில்லியன் டாலர் கடன் கொடுத்தது, ஒரு நிபந்தனையுடன்: ஜாக்ஸனின் மிகப் பெரும் சொத்தாக இருந்தவற்றில் தனக்கு ஒரு பங்கு தரப்பட வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை.

மூலச்சிறப்புள்ள நாலாயிரம் பாப் பாடல்களைப் பயன்படுத்திக் கொள்ளும் உரிமையை ஜாக்ஸன் விலைக்கு வாங்கியிருந்தார். இவற்றில் 200 பீட்டில்ஸ் பாடல்களும் அடங்கும். பெரும் போட்டா போட்டிக்கிடையில்தான் ஜாக்ஸன் இந்த உரிமையை வாங்கியிருந்தார். 1986இல் அவருடன் போட்டி போட்டவர்களிலொருவர் பீட்டில்ஸ் குழுவில் இருந்த போல் மெக்கார்ட்னி. இந்த நாலாயிரம் பாடல்களைப் பயன்படுத்தும் உரிமை, அவற்றின் மூலம் கிடைக்கக்கூடிய பணத்தின் அளவை விடப் பெரியது என்று ஜாக்ஸன் கருதியிருக்கக் கூடும்.ஏனெனில், அமெரிக்க,மேற்கத்திய ஊடகங்கள் ‘பீட்டில்ஸ்’ குழுவினரை ‘ஏசுவை விட உயர்ந்தவர்கள்’ என்று ஒரு முறை கணித்திருந்தன. எனவே ‘ஏசுவை விட உயர்ந்தவர்களை விட உயர்ந்தவராக’ இருக்க வேண்டும் என ஜாக்ஸன் ஆசைப்பட்டதில் தவறு இருந்திருக்க முடியாது!

எனது தலைமுறையைச் சேர்ந்த,மேற்கத்திய இசையில் இரசனையுள்ள,அதிலும் குறிப்பாக ஜாஸ் இசையில் பிரியம் கொண்டுள்ளவர்களின் மனத்தை -கிராம•போன் இசைத்தட்டுகள் மூலமாகவும் ஹாலிவுட் திரைப்படங்கள் மூலமாகவும் - கொள்ளை கொண்ட ஆ•ப்ரோ-அமெரிக்க இசைக் கலைஞர்களில் முதலில் நினைவுக்கு வருபவர் போல் ராப்ஸன்.பொதுவுடைமை இயக்கத்தோடு தொடர்பு கொண்டிருந்த, அதன் காரணமாக அமெரிக்க ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு ஆளாகியவர் என்பதலோ என்னவோ,போல் ராப்ஸன் எங்களது இலட்சியக் கலைஞர்களிலொருவராக இருந்தார்.லூயி ஆர்ம்ஸ்ட்ராங், மாபெரும் டிரம்ப்பெட் கலைஞர். அவரது டிரெம்பெட்டும் கரகரத்த குரலில் எழும் வாய்ப்பாட்டும் எங்கள் மனங்களைச் சுண்டியிழுக்கும் ஒரு புறம்; அவரை எப்போதும் எண்ணெய் வழியும் முகத்தவராகக் காட்டும் ஹாலிவுட் திரைப்படங்கள் எரிச்சலூட்டும் மறுபுறம். எனினும், St.Louis Blues,What a Beautiful World, Saints marching in the Street போன்ற அவரது நூற்றுக்கணக்கான பாடல்கள் இன்றும் புத்துணர்ச்சியூட்டக் கூடியவையாக நீடிக்கின்றன.

1950களின் பின் பகுதியிலிருந்து 1960கள் நெடுக, ட்யூக் எல்லிங்டனின் பியானோவும் மைல்ஸ் டேவிஸின் டிரம்பெட்டும், ஜான் கால்ட்ரோனின் ஸாக்ஸ•போனும் எங்கள் இசைச் செவிகளில் நிரந்தர இடம் பிடித்துக் கொண்டன. டேவிஸ¤ம் கால்ட்ரோனும் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் ‘குடிமை உரிமை இயக்கத்தில்’, கறுப்பின மக்களின் சுயமரியாதை உரிமைகளுக்கான போராட்டத்தில் தங்களை முழுமையாக இணைத்துக் கொண்டவர்கள். கால்ட்ரோனின் A Love Supreme பாடலைக் கேட்ட பிறகு, சிதார் இசைமேதை ரவிஷங்கர் கூறிய வார்த்தைகள் இவை:“அமெரிக்கக் கறுப்பின மக்களின் வேதனைப் பெருமூச்சுதான் கால்ட்ரோனின் ஸாக்ஸ•போனிலிருந்து வெளிவரும் இசைக் காற்று”.

ஹெர்பீ ஹன்காக், சார்லீ பார்க்கர்,செட் பார்க்கர் என எண்ணற்ற கறுப்பின ஜாஸ் இசைக் கலைஞர்களும் எங்களை வசீகரிக்கத் தொடங்கினர்.எனினும், நீண்ட நேரம் இசைக்கக்கூடிய LP இசைத் தட்டுகளும், பின்னர் ஒலி நாடாக்களும் வந்த பிறகே -அதாவது 1970களிலிருந்தே இந்தக் கலைஞர்களின் இசைப் படைப்புகள் பலவற்றை நுகரும் வாய்ப்புக் கிடைத்தது.பின்னர் குறுந்தகடுகளின் (CDs, VCDs,DVDs) வருகையும் ‘உலகமயமாக்க’லும், இணைய தளங்களிலிருந்து இசைப் படைப்புகளை இறக்கும் வசதியும் உலகின் பல்வேறு வகைக் கலைஞர்களின் இசைச் சாதனைகளை, பல்வேறு வகை இசைக் கருவிகளை எங்கள் செவிகளுக்கு வழங்கின. நான்காண்டுகளுக்கு முன்புதான் ஸ்டாக்ஹோமில் ஜான் கால்ட்ரோன் இசைத்த நான்கு பாடல்களையும் 1960களின் தொடக்கத்தில் மைல்ஸ் டேவிஸ் இசைத்த ஆறு பாடல்களையும் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. கால்ட்ரேனின் Spritual,மைல்ஸ் டேவிஸின் Circle ஆகியவற்றைக் கேட்டு இரசித்த செவிகள் பேறு பெற்றவை.

Circle இல் டேவிஸ¤க்கு இணையாகவும் அவரது டிரம்பெட்டுக்கு பதில் சொல்வது போலவும் ஹெர்பி ஹன்காக்கின் பியானோ இசை நர்த்தனம் புரிகின்றது. மைல்ஸின் Time After Time, ‘கானன்பால் அட்டெர்லியுன் ‘Autumn Leaves ஆகியவற்றைப் பிரதியெடுத்து டஜன்கணக்கான நண்பர்களுக்கு வழங்கியிருக்கிறேன்.இறை மறுப்பாளனும் மத எதிர்ப்பாளனுமான எனக்கு மஹேலியா ஜாக்ஸன், அரேதா •பிராங்க்ளின் போன்றோரின் ‘காஸ்பெல்’ பாடல்களும் உவப்பானவைதான்.எனினும்,கலைப் படைப்புகளில் சமூக,அரசியல் உணர்வையும் கடப்பாட்டையும் எதிர்பார்க்கும் எனது முற்சாய்வு மறையவில்லை.அதனால்தான் 1960 முதல் இன்று வரை பாப் இசைப் பாடகர்களில் ஜான் லென்னான், பாப் டைலான் ,ஜோன் பேயஸ் (லென்னான் ஆங்கிலேயர்;டைலான் வெள்ளை அமெரிக்கர்; பேயஸ் அமெரிக்க யூதர்) நினா சிமோன், பாப் மார்லி போன்றோர் இன்னும் எனது நாயகர்களாக,நாயகிகளாகத் தொடர்ந்து நிலைத்து வருகிறார்கள்.

மைக்கேல் ஜாக்ஸனின் பாடல்களும் நடனமும் எனக்கு எப்போது அறிமுகமாயின என்பது நினைவுக்கு வரவில்லை.பொருளாதார உலகமயமாக்கலின் கலாச்சார உடனிகழ்வுகளாக மடோனாவும் மைக்கேல் ஜாக்ஸனும் இருந்ததால், அவர்களது பிம்பங்களும் பாடல்களும் உலகின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்றன. விண்வெளி வீரரைப் போன்ற உடுப்புடன் அவர் நடனமாடுவதை முதன் முதலில் பார்க்கையில், அவரது இடுப்பிலிருந்து உடலின் மேல் பகுதி கழன்று விழுந்துவிடுமோ என்னும் அச்சம் எனக்கு ஏற்பட்டது! சற்று பிரமிப்பை ஏற்படுத்திய அவரது நடனத்துடன் என்னால் ஒன்றிப் போக முடியவில்லை. எனது தலைமுறைக் காலக் கலைஞர்களான ஜீன் கெல்லி, டெப்பி ரெய்னால்ட்ஸ்,ஜேன் பவெல், ஹொவார்ட் கீல் போன்றவர்களின் நடனமும், பாலே நடனமும் மட்டுமே என்னால் இரசிக்கத் தக்கனவாக இருந்தன. மைக்கேல் ஜாக்ஸனின், அவரை நகல் செய்த பிறரின் நடனங்கள்,ஏதோ ஒரு உடல் வளைப்பு வித்தையையாகவே தோன்றின.உலகெங்குமுள்ள இலட்சக்கணக்கான ஜாக்ஸன் இரசிகர்களின் மனத்தைக் கவரும் அந்த ஆட்டத்தில் உள்ள இரகசியத்தை அறியும் தேடலில் ஈடுபடுகையில்தான், ‘தலைமுறை இடைவெளி’ என்னும் சாக்குப் போக்குக்கு இடம் தராத இரசனையுணர்வு என்னிடத்திலும் வளரத் தொடங்கியது.எனினும், முதலாளிய ஊடகங்கள் அவருக்குத் தந்து வந்த பூதாகரமான விளம்பரம், ‘அமெரிக்கக் கனவை’ நனவாக்க முயலும் ‘சாகச நாயகர்களில்’ ஒருவராக அவர் மாற்றப்பட்டமை, ஜாக்ஸன் மீது எனக்குப் பெரும் ஈடுபாட்டை வளர்க்கவில்லை.

ஆனால்,அவரை பாப் இசையின் இளவரசனாக முடிசூட்டிய அதே ஊடகங்கள், ஆறு ஆண்டுகளுக்கு முன்னால், குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரணை செய்யத் தொடங்கியபோதுதான், அவர் மீது எனக்கு அன்பும் அனுதாபமும் ஏற்பட்டன.அச்சு மற்றும் மின் ஊடகங்களால், அவரது பாலியல் உறவுகள் பற்றிய கிளுகிளுப்பூட்டும் ‘புலன்விசாரணைகள்’ செய்யப்பட்டன; அரைகுறை ஆடைகளுடன் தங்கள் உடற் கவர்ச்சிகளைக் காட்டும் சினிமா நடிகைகள், மாடல்கள் ஆகியோரின் படங்களையும் பாலியல் வக்கிரக் கதைகளையும் செய்திகளையும் பிரசுரித்துத் ‘தொழில்’ நடத்தும் அச்சு, மின்னணு ஊடகங்கள் ‘அறவொழுக்கக் காவல் துறையினராக’ செயல்பட்டன. கடைசியில் எல்லாருமாகச் சேர்ந்து ‘நீதி விசாரணையையும்’ செய்து முடித்து ஜாக்ஸன் குற்றவாளி எனத் தீர்ப்பும் கூறி தங்கள் ‘அதிகாரத்திற்கு’ ஏற்ற தண்டனைகளையும் வழங்கிவிட்டன.‘குற்றம் சாட்டப்பட்டவர், குற்றம் மெய்ப்பிக்கப்படும் வரை நிராபராதியாகவே கருதப்பட வேண்டும்’ என்னும் நெறிமுறை அந்த ஊடகங்களால் தூக்கி எறியப்பட்டது.

2003இல் பாலியல் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்ட நாள் முதல் அமெரிக்காவில் கறுப்பின மக்களிடமிருந்து மட்டுமின்றி வெள்ளை இனத்தவரிடமிருந்தும்- குறிப்பாக இள வயதுடையோரிடமிருந்து- அவருக்கு ஆதரவும் அனுதாபமும் பெருகி வந்திருக்கின்றன.தீவிர வலதுசாரிப் பிற்போக்கு வெள்ளை அதிகாரச் சக்திகளுக்கும், சட்டத்தின் நடுநிலைத்தன்மையிலும் ஜனநாயக ஆட்சியிலும் நம்பிக்கை வைத்திருந்த அமெரிக்க வெகுமக்களுக்குமிடையான போராட்டமாகவே ஜாக்ஸன் மீதான வழக்கு விசாரணை தொடக்கத்திலிருந்தே பார்க்கப்பட்டது. அமெரிக்காவில் பிரபலமாக உள்ளவர்களின் பாலுறவு வாழ்க்கை பற்றிய ‘செய்திகளை’ச் சப்புக் கொட்டிக்கொண்டு வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ள ஊடகங்களில் பணியாற்றும் ‘வல்லுநர்கள்’ ஜாக்ஸன் மீதான வழக்கு குறித்துப் பல்வேறு கோணங்களிலிருந்து ‘அலசல்களை’ தொடர்ந்து வழங்கி வந்தனர். இராக்கில் தொடர்ந்து நடைபெற்று வந்த இரத்தக் களரிகள், வன்முறை, அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுவரும் சரிவுகள், வேலையில்லாத் திண்டாட்டம் முதலிய பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப ( இங்கு சிவகாசி ஜெயலட்சுமி, சங்கராச்சாரி விவகாரங்கள் போல்) ஜாக்ஸன் விவகாரம் இந்த ஊடகங்களுக்குப் பயன்பட்டன.

தன்னிடம் தகாத பாலுறவை மேற்கொள்ள முயற்சி செய்தார் என்னும் குற்றச்சாட்டைப் பதிவு செய்த 12-13 மூன்று வயதுச் சிறுவனின் (இவன் புற்று நோயாளி) தாய், செல்வந்தர்களை மிரட்டியோ அவதூறு செய்தோ பணம் பறிக்கும் வோலையில் முன்பு ஈடுபட்டவள் என்ற செய்தியும் வெளியாகியது. ஜாக்ஸன் தங்கள் வாழ்க்கையில் வந்து சேர்ந்தது கடவுளின் அருளே என்றும் அவர் தகாத நடத்தைகள் எதிலும் ஈடுபடுபவரல்லர் என்றும் அப் பெண்மணியே புகழ்ந்து தள்ளும் வார்த்தைகளடங்கிய ஒரு ஒலி நாடா இரண்டாண்டுகளுக்கு முன் அப் பெண்மணியாலேயே வெளியிடப்பட்டது.ஜாக்ஸன் மீது இந்த வழக்குத் தொடரப்பட்ட பின், அதுவரை அவருடன் பிணக்குக் கொண்டிருந்த அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவருக்கு ஆதரவாக ஒன்று திரண்டனர். காவல் துறையினர் தங்களது முக்கியமான சாட்சிகளிலொருவராகக் கருதிய ஜாக்ஸனின் முன்னாள் மனைவி , குற்றம் சொல்லப்படக்கூடிய நடத்தைகள் ஏதும் ஜாக்ஸனிடம் இருந்ததில்லை என நீதிமன்றத்தில் கூறிவிட்டார். அப்படியிருந்தும் ஜாக்ஸனை ஆபாசமாகச் சித்திரிக்கும் புகைப்படங்கள், பேட்டிகள், ஆதாரமற்ற வதந்திகள் ஆகியன ஊடகங்களில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்தன.

ஜாக்ஸனின் மீது இந்த வழக்கைத் தொடுத்தவர்கள் அப்பட்டமான வலதுசாரி வெள்ளை இன அதிகாரிகளாவர். சாண்ட்டா பார்பரா மாவட்ட (county) அரசு வழக்குரைஞர் ( attorney) டாம் ஸ்னெட்டன், ஜார்ஜ் புஷ்ஷின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர். புகழின் உச்சியில் இருந்த ஜாக்ஸனுக்குக் களங்கம் கற்பிக்கவும் பாப் இசைத் தொழிலிருந்து அவரை அப்புறப்படுத்தவும் 1993 ஆம் ஆண்டிலேயே சிறுவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக ஒரு வழக்கைத் தொடர்ந்திருந்தார். இந்தச் சிக்கலிலிருந்து மீள்வதற்காகவும், தேவையற்ற ஊடகக் கவனத்தைத் தவிர்ப்பதற்காகவும் ஜாக்ஸன், தன் மீது குற்றம் சாட்டியவர்களுக்குப் பெருந் தொகையொன்றைக் கொடுத்து நீதிமன்றத்துக்கு வெளியே ஒரு சமரசம் செய்துகொண்டார். தன்னை இந்த நெருக்கடியில் சிக்க வைத்த ஸ்னெட்டனைத் தனது எழுத்துகளிலும் பாடல்களிலும் மறைமுகமாகக் கண்டனம் செய்தார் ஜாக்ஸன்.

ஜாக்ஸனைப் பழி தீர்க்க மற்றொரு வாய்ப்புக்காகக் காத்திருந்த ஸ்னெட்டனுக்கு கான்ஸர் நோயாளியான சிறுவனிடமிருந்து பெற்ற புகார்க் கடிதம் அளவற்ற மகிழ்ச்சியைத் தந்தது. ஜாக்ஸனுக்குக் கைவிலங்கு பூட்டி நீதிமன்றத்திற்குக் கொண்டுவந்ததுடன் , அவரது பண்ணை வீட்டை (Neverland Ranch) சோதனை போடுவது என்னும் பெயரால் ஏராளமான ஆயுதமேந்திய காவல் துறையினரை அங்கு அனுப்பியும் ஊடகங்களுக்குப் பரபரப்பான பேட்டிகள் கொடுத்தும் ஜாக்ஸன் பற்றிய அவதூறு இயக்கத்தை முனைப்பாகச் செய்து வந்தார். சமுதாயம் முழுவதற்குமான அறவியல், பண்பாட்டு அளவுகோலாகச் செயல்படும் தகுதி தங்களுக்கு உள்ளது எனக் கருதும் வலதுசாரி கிறிஸ்துவ வெள்ளை இனத்தவர் அமெரிக்க சமுதாயத்தில் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். 1993ஆம் ஆண்டில் தொடுக்கப்பட்ட வழக்கிலேயே ஜாக்ஸன் குற்றவாளி என மெய்ப்பிக்கப்பட்டுத் தண்டனை பெறாமல் போனதில் ஏமாற்றமடைந்து தங்களது கோபத்தையும் ஆத்திரத்தையும் அடக்கி வைத்துக் கொண்டிருந்த இந்த சக்திகளுக்குத் தூபம் போடும் வேலையை ஸ்னெட்டன் தொடர்ந்து செய்து வந்தார்.

ஜாக்ஸனின் குடும்பப் பின்னணியையும் அவரது வாழ்க்கை அனுபவங்களையும் கருத்தில் கொள்ளும் எந்தவொரு மனிதநேய சமுதாயமும் அவர் மீது பரிவும் இரக்கமும் கொள்ளுமே தவிர வெறுப்பையும் கண்டனத்தையும் உமிழ்ந்து அவரைத் தண்டிக்காது.தொழிலாளிகள் மிகுதியாக வாழும் சிக்காகோ புறநகர்ப் பகுதியொன்றில் உருக்குத் தொழிற்சாலையொன்றில் கிரேன் ஆப்பரேட்டராகப் பணி புரிந்து வந்த தொழிலாளியொருவரின் மகனாக 1958 இல் பிறந்தவர். உடன் பிறப்புகள் எட்டு. ‘ ஜாக்ஸன் 5’ அவரும் அவரது சகோதர சகோதரிகளுமடங்கிய இசைக் குழு. அதில் தனது ஐந்தாவது வயதிலிருந்தே பாடத்தொடங்கினார். 1968 இல் அக் குழுவின் பாடல்களை இசைத் தட்டுகளில் பதிவு செய்யும் முதல் ஒப்பந்தம் ஒரு தனியார் நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்டது. அப்பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. 1970களின் பிற்பகுதியில் ஜாக்ஸன் தனியாகப் பாடத் தொடங்கியதிலிருந்தே உலகளவில் மிகப் பிரபல்யமான பாப் இசைப் பாடகர் என்னும் வரலாறு எழுதப்படத் தொடங்கியது. 1982 இல் வெளிவந்த ‘த்ரில்லர்’ என்னும் அவரது பாடல் தொகுப்பின் விற்பனை 5 கோடியைத் தாண்டி பாப் இசை வட்டாரத்தினரை வியப்பிலாழ்த்தியது.1984 இல் மட்டும் (பாப் இசைக்கான ) எட்டு கிராம்மி விருதுகளைத் தட்டிச் சென்றார் ஜாக்ஸன்.

உலகளாவிய புகழையும் கோடிக்கணக்கான டாலர் செல்வத்தையும் அவர் ஈட்டிய போதிலும், அவரது வாழ்க்கையில் மகிழ்ச்சி அரிதாகவே இருந்தது. கண்டிப்பும் கோபமும் நிறைந்த தனது தந்தையால் இளம் வயதில் அடித்துத் துன்புறுத்தப்பட்டதையும் கேலிக்கும் வசைகளுக்கும் உட்படுத்தப்பட்டதையும் அவரால் மறக்கமுடியவில்லை. 1993 இல் நடத்தப்பட்ட பேட்டியொன்றில், சோகமும் தனிமையுமே தனது வாழ்க்கையில் நிறைந்திருப்பதாகக் கூறினார்.அதனால்தானோ என்னவோ, அவர் தனது பண்ணை வீட்டிற்கு நெவெர்லேண்ட் (Neverland) என்னும் பெயரைச் சூட்டினார்.இது ஸ்காட்லந்து எழுத்தாளர் ஜேம் எம். பர்ரி (J.M.Barrie) என்பார் 1902இல் எழுதிய நாவலின் நாயகனான பீட்டர் பான் (Peter Pan) வசிக்கத் தேர்ந்தெடுத்துக் கொண்ட தீவின் பெயராகும். பீட்டர் பானும் சிறு வயதில் பெற்றோர்களால் கொடுமைப்படுத்தப்பட்டவன்தான். அவன் ஏழு வயதில் வீட்டை விட்டு ஓடி கென்ஸிங்டன் பூங்காவில் வசித்து வருகிறான்.பறவைகள் அவனுக்குப் பறக்கக் கற்றுக் கொடுக்கின்றன. ஒவ்வொரு இரவிலும் அவன் புல்லாங்குழல் வாசிப்பது வழக்கம்.கடைசியில் அவன் பாதி பறவையாகவும் பாதி மனிதானகவும் மாறுகிறான்.சில சமயம், அவன் தனது பெற்றோரின் வீட்டுக்கு வந்து, அங்கு தனது தாய் அழுது கொண்டிருப்பதைப் பார்ப்பது வழக்கம். அந்த வீட்டின் ஜன்னல் எப்போதும் திறந்திருக்கும்.அவனது தாய், அவனது பிரிவை எண்ணி அழுது கொண்டிருப்பதைப் பார்ப்பது அவனுக்கு மிகவும் பிடிக்கும்.

ஒரு நாள் அவன் அந்த வீட்டிற்குச் சென்ற போது ஜன்னல் கதவுகள் மூடியிருந்தன. தன்னை வரவேற்பதற்குத் தனது தாய் ஆவலாக இருப்பாள் என்று எண்ணியவனுக்கு ஏமாற்றம். ஜன்னல் கண்ணாடி வழியாகப் பார்க்கிறான்.தாயோ வேறொரு குழந்தையை அணைத்தவாறு தூங்கிக் கொண்டிருக்கிறாள். மனமுடைந்த அவன் நெவெர்லாண்ட் தீவுக்குச் செல்கிறான். அத் தீவிற்கு பாலக-அரசனாகிறான். பெற்றோர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் சாகசங்களையும் காணத் துடிக்கும் பல சிறுவர்களை அந்தத் தீவுக்குக் கொண்டு வருகிறான். அந்தத் தீவில் இளம் பிராயத்தைக் கடந்த, வயது வந்த ஆண்கள் கேப்டன் ஹ¥க் என்பவனும் அவனது கூட்டாளிகளான கடற் கொள்ளையரும் மட்டுமே. “நான்தான் இளமை, நான்தான் மகிழ்ச்சி” என கேப்டன் ஹ¤க்கிடம் கூறும் பீட்டர் பான், நயவஞ்சகனான ஹ¥க்கைத் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொன்று விடுகிறான்.

பீட்டர் பானும் அவனால் அங்கு கொண்டு வரப்பட்ட பிற சிறுவர்களும் ‘சிறுவர்களாகவே’ இருக்கிறார்கள்.அவர்களுக்கு வயது கூடுவதில்லை.ஆனால் அந்தத் தீவுக்கு அவனால் கொண்டு வரப்பட்ட பெண் வெண்டி சிறுமியாகவே இருப்பதை விரும்புவதில்லை. அவள் மீண்டும் தனது பெற்றோரிடமே சென்று விடுகிறாள். ஆனல் அவள் நெவெர்லாண்ட் தீவில் இருந்தவரை பீட்டர் பான், யாருடைய பெற்றோரைப் பற்றியும் பேச்சு எடுப்பதில்லை. ‘தாய்கள் நம்பத்தகாதவர்கள்’ என்று அவளிடம் சொல்வது வழக்கம்.ஆனால், மைக்கேல் ஜாக்ஸனோ, தன்னை மற்றொரு பீட்டர் பானாகக் கருதிக் கொண்ட போதிலும் தனது தாயான கேத்தரினை அப்படி ஒரேயடியாக நிராகரிக்கவில்லை: “நான் கேத்தரினைத் தவிர வேறு யாரையும் நம்புவதில்லை. ஆனால் சில சமயம் அவளையும் முழுமையாக என்னால் நம்ப முடியவில்லை”.இது ஒருபுறமிருக்க, ‘பீட்டர் பான்’ கதாபாத்திரத்தைப் படைத்த ஜே.எம்.பார்ரி, சிறுவர்கள் மீது பாலியல் வேட்கை கொண்டிருந்தவர் என்பது அண்மைக்காலத்தில் கண்டறியப்பட்டுள்ளது ஒரு வரலாற்று முரண்!

கறுப்பினத்தவரைச் சேர்ந்த ஜாக்ஸன் தனது முகத் தோற்றத்தையும் சருமத்தின் நிறத்தையும் மாற்றிக்கொள்வதற்காகச் செய்து கொண்ட ஏராளமான அறுவை சிகிச்சைகளும் உட்கொண்ட மருந்துகளும் அவரது உடல் நலத்தைப் பெரிதும் பாதித்தன. தோல் புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். அமெரிக்காவின் ஆதிக்க வெள்ளை இனக் கலாச்சாரத்தின் நிர்ப்பந்தங்களுக்கும் கோரிக்கைகளுக்கும் சந்தையின் தேவைகளுக்கும் அவர் இப்படித் தன்னைப் பலி கொடுத்துக் கொண்டார்.அமெரிக்காவில் இதுவரை வேறு எந்தக் கறுப்பினக் கலைஞரோ பெறாத புகழையும் செல்வத்தையும் அடைந்தவரும் அமெரிக்க வெள்ளை இன சந்தைக் கலாச்சாரத்தின் மாயத் தோற்றங்களுக்கு மயங்கியவரும் ‘ ன்றும் மாறாத இளமை’ பற்றிய அமெரிக்கக் கனவுகளைப் பகிர்ந்து கொண்டவருமான ஜாக்ஸனின் அடிமனத்தில் இளவயதில் குடும்பத்தில் அனுபவித்த கொடுமைகள் மட்டுமல்லாது, புகழையும் செல்வத்தையும் பெறுவதற்காகத் தனது சொந்த கறுப்பின அடையாளத்தையே புதைக்கவேண்டியிருந்ததும் பெரும் உறுத்தல்களாக இருந்திருக்க வேண்டும்.

மாயயதார்த்தம் நிரம்பிய பின்-நவீனத்துவ உலகிற்கு ஏற்ற ஒரு கதாநாயகனாக விளங்கவே அவர் ஆசைப்பட்டிருக்கிறார். எனினும் தனது அடையாளத்துக்கான தேடலில் குழப்பம் மிக்கவராகவே இருந்திருக்கிறார். அதன் காரணமாகவே முகத் தோற்றத்தையும் தோலின் நிறத்தையும் மாற்றிக்கொள்வதற்கான பல்வேறு அறுவைச் சி கிச்சைகளையும் மருத்துவச் சிகிச்சைகளையும் மேற்கொண்டார்.அடையாளச் சிக்கல், பாலியல் தொடர்பாக அமெரிக்க புரோடெஸ்டெண்ட் கிறிஸ்துவ வலதுசாரிச் சக்திகள் வகுத்திருக்கும் விழுமியங்களுக்கு உகந்த வகையில் தனது நடத்தைமுறைகள் இருப்பதை உறுதிசெய்வதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் (எடுத்துக்காட்டாக அவரது மூன்றாவது குழந்தைக்கு ஒரு பதிலித் தாயை அவர் ஏற்பாடு செய்தமை, நல்ல குடும்பஸ்தன் என்ற பெயர் எடுக்க விரும்பியது,தான் ஒரினச்சேர்க்கையாளன் அல்ல என்பதை மெய்ப்பிப்பது) ஆகியன அவரது எந்தவொரு ஆசையையும் தேவையயும் நிறைவு செய்யக் கூடிய பெருஞ்செல்வம்,அவரை எப்போதும் சுற்றியிருக்கும் பெருங்கூட்டம் ஆகியவற்றின் இருப்போடு கூர்மையாக முரண்பட்டன.யதார்த்த வாழ்வின் சோகங்களுக்கான இழப்பீடாக அவர் கருதியது அவரது ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளுக்கான மேடைகள் என்னும் மாய யதார்த்தைத்தான். இதனுடைய நீட்சியாகவே அவர் தன்னையும் ஒரு குழந்தையாகவே பாவித்துக் கொண்டதும், குழந்தைகளின் உலகத்திலேயே தனது வாழ்க்கையை வாழ நினைத்ததுமாக இருந்திருக்கக்கூடும். இதுதான் அவரை இருமுறை நீதிமன்றத்திற்கு இழுத்து வந்திருக்கிறது.

குழந்தைப் பருவத்திலிருந்தே பாடலிலும் ஆடலிலும் அசாதரணமான திறமை வாய்க்கப் பெற்றிருந்த ஜாக்ஸன், அமெரிக்கப் பாப் இசைத் துறையில் தன் தடம் பதிக்கத் தொடங்கிய காலகட்டம் குறிப்பிடத்தக்கது. ரொனால்ட் ரீகனின் தீவிர வலதுசாரிப் பிற்போக்கு ஆட்சி நிலவிய 1970 களில், வியத்நாமில் அமெரிக்க நடத்திய ஆக்கிரமிப்புப் போருக்கு எதிராக 1960 களில் எழுந்த போர் எதிர்ப்பு இயக்கங்கள், கறுப்பின மக்களின் புரட்சிகர இயக்கங்கங்கள் முதலியன மங்கி மறைந்து கொண்டிருந்தன. சுயநலம், தனி நபர்வாதம், கேளிக்கை நாட்டம், பேராசை முதலியன மேலோங்கியிருந்தன. இருப்பினும் மெர்வி கேயி (Mervin Gaye), ஸ்டீவி வொண்டெர் (Steve Wonder), கர்ட்டிஸ் மே•பீல்ட் (Curtis Mayfield) போன்ற கறுப்பினப் பாடகர்கள் போரை எதிர்த்தும் நிக்ஸன் போன்ற பிற்போக்கு அரசியல்வாதிகளை விமர்சித்தும் பாடல்கள் பாடிக்கொண்டுதான் இருந்தனர். ஆனால், அமெரிக்காவின் அன்றைய மனோநிலைக்கு ஏற்ற, மிகக் கவர்ச்சிகரமான, மனத்தை சுண்டியிழுக்கக்கூடிய பாடல்களை மட்டுமே பாடினார் ஜாக்ஸன். எனினும் அவர் எழுதிப் பாடியுள்ள பாடல்களில் பொருள் செறிவு உள்ளவை ஏதும் இல்லை என்று கூற முடியாது.சிஐஏ உளவாளியாக இருந்த டாம் ஷெல்டன் என்பவனைக் கடுமையாகத் தாக்கும் உணர்ச்சிகரமான பாடலை எழுதிப் படியிருக்கிறார்.History என்னும் தலைப்புடன் வெளிவந்துள்ள அவரது வீடியோ/ஆடியோ சிடி, கறுப்பின மக்களின் நிரந்தர விரோதிகளுக்கு எதிரான பாடல்களை உள்ளடக்கியுள்ளது.எனினும், அவரது சமூக அக்கறை முழுமையாகவும் பொருள் செறிவு மிக்க வகையிலும் வெளிப்பட்டுள்ளது ‘The Earth Song’ என்னும் வீடியோ பாடலில்தான். நாம் வாழும் பூமியை, இயற்கையை, உலக மக்களை அழித்தொழிக்கும் வல்லரசுகளைக் கண்டனச் செய்யும் பாடல் இது.

ஜாக்ஸன் பற்றிய அமெரிக்க மதிப்பீடுகளில்,அவரது திறமை பற்றிய கருத்துகளைக் காட்டிலும் அவரது குறுந்தகடுகளின் விற்பனை, அவர் ஈட்டிய வருவாய் ஆகியன பற்றி வியப்புத் தெரிவிக்கும் கருத்துகளே அதிகம் இருப்பதைக் காணலாம். 1970களின் பிற்பகுதியிலும் 1980களிலும் ஜார்ஜ் லூகாஸ், ஸ்டீ•பன் ஸ்பீல்பர்க் போன்றோர் மின்னணு சாதனங்களின் துணை கொண்டு உருவாக்கிய நவீன மாயாஜாலத் திரைப்படங்கள் அமெரிக்க மக்களின் இரசனையை வடிவமைப்பதில் பெரும் தாக்கம் ஏற்படுத்தின. அத்தைகைய தாக்கத்திற்கு ஏற்பவே ஜாக்ஸனின் பெரும்பாலான பாடல்களும் ஆடல்களும் அமைந்தன. அதாவது, ஆதிக்க, சுரண்டல் நிறுவனங்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கிய பல்வேறு கறுப்பினக் கலைஞர்களுக்கு மாறாக, ஜாக்ஸன் ‘ஆபத்தில்லாத’ ‘அச்சுறுத்தாத’ கலைஞராகவே விளங்க வேண்டும் என்பதைத்தான் அமெரிக்கா விரும்பியது.

அவரது தனிப்பட்ட நடத்தை முறைகளிலுள்ள விசித்திரங்களை இலாபகரமாகப் பயன்படுத்தி வந்த அமெரிக்கக் கலாச்சாரத் தொழிலுற்பத்தித் துறையைப் பொறுத்தவரை அவரைப் பற்றிய கிளுகிளுப்பூட்டும் வதந்திகளாகப் பரப்பிவந்ததும்கூட இலாபகரமான தொழில் முயற்சிதான். ஜாக்ஸனின் வழக்கு விசாரணையையொட்டி பத்திரிகைகளின் விற்பனை பெருகியது. தொலைக்காட்சி நிகழ்ச்சிப் பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடியது. தொலைக்காட்சிகளும் விளம்பரங்கள் மூலம் பெறும் வருவாயைப் பெருக்கிக் கொண்டன. இந்த முறை ஜாக்ஸன் கட்டாயம் குற்றவாளி என மெய்ப்பிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்படுவார் என்று ஆரூடம் கூறி வந்த மீடியா பண்டிதர்களால் (குறிப்பாக CNN, Fox) அவரது வழக்கை விசாரணை செய்த நீதிபதியுடன் 12 நடுவர்களும் (Juries) சேர்ந்து, அவர் மீது சுமத்தப்பட்ட பத்துக் குற்றங்கள் ஒன்றைக்கூட காவல் துறையினர் ஐயந்திரிபுற மெய்ப்பிக்கவில்லை என ஒருமனதாகத் தீர்ப்புக் கூறியதைச் செரிக்க முடியாமல் அந்த நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டனம் செய்யத் தொடங்கினர். ஜாக்ஸன் நிரபராதி எனக் கூறிய நடுவர்கள் சட்ட அறிவும் விவேகமும் அற்றவர்கள் என விமர்சித்தனர்ர். இந்த வழக்குடன் தொடர்புள்ள குற்றங்களை ஜாக்ஸன் செய்ததாகச் சொல்வதற்கு ஆதாரங்கள் இல்லை என்னும் போதிலும் கடந்த காலத்தில் அவர் சிறுவர்களுடன் தகாத உறவு கொண்டிருக்கக்கூடும் என்று அந்த நடுவர்களில் ஒருவர் கூறியதை, அக்கூற்றின் சூழமைவிலிருந்து பிரித்தெடுத்து ஊதிப் பெருக்கிக் காட்டி வந்தனர். தங்களுக்கு நேர்ந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கான வாய்ப்பாக ஜாக்ஸனின் மரணத்தைப் பயன்படுத்திக் கொண்ட •பாக்ஸ்,சிஎன்என் ஆகியன நான்கு ஆண்டுகளுக்கு முன்பே நடந்து முடிந்துவிட்ட விசாரணையிலிருந்த சில ‘கிளுகிளுப்பூட்டும்’ அம்சங்களை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பின.

மற்றொரு புறம், அவருக்கு ‘அனுதாபம்’ தெரிவித்த ஊடகங்களும் ஊடக நபர்களும் செலுத்தி வரும் புகழஞ்சலிகள் எல்லாமே,அவர் விட்டுச் சென்ற கலைச் செல்வங்கள் எத்தனை கோடி டாலர் பெறுமானம் உள்ளவை என்பதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளன.காலஞ்சென்ற திரைப்படத் தயாரிப்பாளரும் கலகக் கலைஞருமான ஆண்டி வோர்ரோல் (Andy Worhol) புகழ் பெற்ற வாசகமொன்றைக் கூறினார்: In America anybody can be famous for fifteen minutes! விளம்பரம், புகழ் ஆகியவற்றையே தனது இலட்சியக் கனவுகளாகக் கொண்டிருக்கும் அமெரிக்க மனத்தின் உருவாக்கமாகவும் அதற்குக் கொடுக்கப்பட்ட நிவேதனமாகவும் இருந்தார் மைக்கேல் ஜாக்ஸன்.