கடந்த வருடம் ஈழத்தமிழ்த் தேசியம் எதிர்பார்த்திராத திருப்பத்தில் முடங்கிப்போய் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையீனத்துடன் கையறு நிலைக்குள்ளானது. தேசிய இன மொன்று சமஉரிமைக்காகப் போராடிய இறுதியில் நாடே தனது இறைமையை இழந்து போயிருந்தது. அதுபற்றிய சுரணையே இல்லாமல் பெருந்தேசிய  அகங்காரம் மேலும் சிதைவுகளுக்குள் மூழ்கியபடி. ஒருபக்கம் தோல்வியில் இருந்து கற்றுக் கொள்ளாத சிறு தேசிய இனம்; மறுபக்கம் இனங்களின் சமஉரிமையை மறுக்கப்போய் தனது சுயாதி பத்தியத்தைத் தன்னுணர்வில்லாமலே இழந்து கொண்டிருக்கும் பெரும்பான்மை இனம்.

ஈழத்தின் இந்த அனுபவங்களை மீளாய்வுக்குள்ளாக்கும் எத்தனம் தொடங்கப்படும் போதே தெலுங்கு மொழித் தேசியம் தகர்க்கப்படுவதற்கான தெலுங்கானாப் போராட்டம் எழுச்சி கொண்டது. தேசியமே அர்த்தமற்ற கற்பிதமா? தேசங்களின் இறைமை  சுயாதிபத்தியம் என்பவற்றுக்கு இனி இடமில்லையா?

இவைதொடர்பாக முன்னெடுக்கப்படும் விவாதங்களின் அடியொற்றி நமக்கான தேசியத்தின் தனித்துவ வேறுபாடு குறித்து அலச முயல்கிறது இக்கட்டுரை. வர்க்கச் சமூக ஐரோப்பா கண்டறிந்த மார்க்சியத்தை சாதியச் சமூகத்தில் பிரயோகிப்பதில் பிரத்தியேக வேறுபாடு உள்ளதா? வர்க்கப் பிளவுபட்ட ஐரோப்பாவின் தேசியத்திலிருந்து சாதிய பேதத்தால் ஏற்றத்தாழ்வைக் கொண்டு இயங்கும் நமது தேசியம் எத்தகைய வேறு பாட்டைப் பெற்றுள்ளது? சாதிப்பிளவுகளுடைய இந்தியா ஒரு தேசமாக முடிந்தது எப்படி? இனத் தேசியம் இன்று பிளவுற முயல்வது ஏன்? இவை குறித்த கருத்தாடலை ஈழத்தேசியப்போராட்டம், தெலுங்கானாப் போராட்டம் என்பவற்றை முன்னிறுத்தி அலசுவோம்.

அது ஒரு துன்பியல் சம்பவம் என்ற கூற்று தமிழர் மத்தியில் எத்தகைய கருத்தியல் சார்ந்தவர்களிடமும் ஏதோவொரு வேடிக்கைப்பொருள் தரும் ஒன்றாக புழக்கத்தில் வந்து விட்டது. இந்தியப் பெருந்தேச உணர்வுக்குச் சவால்விடும் வகையில் அதன் நம்பிக்கைக் குரிய எதிர்காலமாகத் திகழ்ந்த தலைவரைத் தனது தற்கொலைப்படைகொண்டு அவரது மண்ணிலேயே சாய்த்த பிரபாகரன் அதற்கான வருத்தத்தையும் முழுமையாகத் தெரிவிக்க மறுத்துக் கூறியது அந்த வாசகம்; எல்லோருக்கும் தெரிந்ததுதான். பலருக்கும் ஆத்தி ரத்தை ஏற்படுத்திய அதேவேளை, அவரைக் கொண்டாடியவர்களையும் தெளிய வைத்த வார்த்தைகள்!

இப்போது மீட்டுச் சொல்லப்படக் காரணமுண்டு. தீராநதி ஜனவரி இதழில் தமிழவன் எழுதும் மரபும் ஓயாத காற்றும் தொடரின் 9வது பகுதி அண்ணா,ஆண்டர்சன், தமிழ்த் தேசியம் எனும் தலைப்பில் வெளிவந்திருந்தது. இந்தியச் சூழலில் தமிழகத்தை மையமாகக்கொண்ட தமிழ்த் தேசியம் குறித்த சர்ச்சை அக்கட்டுரையின் அடிநாதம். அதற்கான படிப் பினை சார்ந்து ஈழத்தமிழ்த் தேசியமும் பேசுபொருளாகியுள் ளது. தேசியத்தைக் குறுகிய வட்டத்துக்குள் அணுகி முடக்கி விடாமல், சர்வதேச நோக்கில் பார்த்தாக வேண்டிய அவசி யத்தை வலியுறுத்தும் அவரது அக்கறை கவனிப்புக்குரியது. இத்தகைய சர்வதேசப் பார்வையைத் தமிழ்த் தேசியம் போதியளவு கைக்கொள்ளவில்லை; குறிப்பாக ஈழத் தமிழ்த்தேசியத்தின் தோல்விக்கு அதுவே அடிப்படையான காரணியாக ஆனது எனச் சொல்கிறபோது, இந்த சர்வதேசச் சிந்தனையின் பின்னடைவால்தான் ஈழப்போர் ஒரு துன்பியலாக முடிந்தது என்கிறார் தமிழவன்.

இப்படியாகத் துன்பியல்கள் தொடர்கதையாவதற்கு சர்வ தேச அணுகுமுறை இல்லாமற் போனதுதான் காரணமா? அப்படி யொன்று இருக்கப் போனதே காரண மாகும் என்பதுதான் துன்பியல்! இதனைத் தமிழவன் காணத் தவறுகி றார். ராஜீவ் படுகொலை வெறும் ஈழப்போர் எதிரடி மட்டுமல்ல, அதற்கு சர்வதேசப் பின்னணி உண்டு என்ற குரல் இந்திய அதிகாரத்  தரப் பால் முணகப்பட்டு மூடிக்கட்டப் பட்ட ஒன்று என்பதில் இரகசியம் ஏதுமில்லை; அது இந்தியாவின் சர்வதேச உறவும் எதிர்காலக் கனவும் சார்ந்த மூடுமந்திரம்.

இப்போது ஈழப்போரின் துன்பியல் முடிவுக்குக் காரணம் அதன் சர்வ தேச அணுகுமுறையேதான். பிரபாகரன் கடைசிவரை நோர்வே ஊடாக, அல்லது நேரடியாக அமெரிக்கா தம்மை இரட்சிக்க வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தவர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு ஊடாகச் சரணடைதல் என்பது குறித்து எடுத்த நடவடிக்கைகள் எப்படிக் கையாளப் பட்டது, சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டது எவ்வாறு என்பது எல்லாம் சர்வதேசம் உள்விவகாரங்களில் தமது நலன் பேண ஏற்ற பேரப்பேச்சுக்குரிய விடயங்களாக கையாளப் படுவதற்கு உரியனவாக உள்ளனவேயன்றி மக்களது உயிர்ப் பிரச்சனையாக அணுகப்படவில்லை.

ஓடிக்கொண்டிருந்த பிரபாகரன் கூடவே மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட மக்களைக் கேடயமாக எடுத்துச சென்றது சர்வ தேசம் வந்து காவந்து பண்ணும் என்ற நம்பிக்கையோடுதான். பண்ணவில்லை என்பதோடு, அதன் இறுதிக்காட்சியைத் தனக்கு ஏற்றதாக எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் அந்தச் சர்வதேசம் மிகக்கேவலமான முறையில் பேரம் பேசிக்கொண்டு இருக்கிறது என்பதில் ஈழத்தமிழ்த் தேசிய அக்கறையாளர்கள் கற்றுக்கொள்ள நிறைய உண்டு. கற்கவில்லை என்பது தொடரும் துன்பியல்.

அப்போது முள்ளிவாய்க்காலும் சரி இன்று இலங்கை பூராவி லும் சரி, சர்வதேச வலைப்பின்னலுக்குள்ளேயும் பிராந்திய மேலாதிக்கப் பிடிக்குள்ளேயும் சிக்கித் திணறும் கோரம் உணர்வுமட்டத்திலும் அறிவுத்தளத்திலும் கொண்டு வரப்படு தல் அவசியம். முள்ளிவாய்க்காலில் அரசு முன்னேறித் தாக்குதலில் தொடர்ந்து ஈடுபட்டபோது பிரபாகரன் தற்காப்பு நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டார். அந்தநிலையில் யுத்தம் நிறுத்தப்பட்டு இரத்தம் சிந்தாத யுத்தமான அரசியல் பேரப் பேச்சுத் தொடரப்பட்டிருப்பின் புலிகள் புத்துயிர்ப்புப் பெற் றிருக்க இடம் ஏற்பட்டிருக்கும். இந்தியப் பிராந்திய மேலா திக்கத்துக்கு அது இடைஞ்சல் என்பதனாலேயே ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப்படுவது குறித்துக் கவலை கொள்ளாமல் புலிகள் அழிக்கப்படும் இறுதி யுத்தத்தை இந்தியா  மிகமூர்க்கமாகவே நடாத்தி முடித்தது.

இலங்கை இராணுவம் நிறைவேற்றியது என்றில்லாமல் இதென்ன புது விண்ணாணம், இந்தியா முடித்தது என்பதாக? இலங்கை இராணுவத் துக்கு அதீத நாயக அந்தஸ்தைக் கொடுத்து ஒரு மாதத்துக்கு மேலாக சிங்களப் பேரினவாதத் தேசியத் தீயை வளர்த்துக் குளிர்காய்ந்த ஜனாதிபதி ராஜ பக்ஷவின் கூற்றுத்தான் யுத்தத்தை இந்தியாவே நடாத்தி முடித்தது என்ப தும்! முள்ளிவாய்க்காலில் ஒரு இடைத்தங்கலைச் சர்வதேசம்- அதாகப்பட்டது, அமெரிக்க மேலா திக்கம் விரும்பியது. அந்த விருப்புக் குரிய உள்ளுர் பிரதிநிதி என்பதா லேயே பிரபாகரன் நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பை வளர்த்து வந்தார்; தவிர்க்கவியலாத நெருக்கடியில் சரணடைவு என்ற இடைச் செருகல் மேற்கொள்ளப்பட்டு துன்பியலில் முடிந்தது. அதிகாரத்தரப்பின் துன்பியல் சம்பவ முன்னெடுப்புக்கள் பூனையோடு எலி கொள்ளும் உறவு என்பதை முள்ளிவாய்க் கால் போதிய வலுவோடு எடுத்துக்காட்டியுள்ளது. பிராந்திய மேலாதிக்கம் பூனை பாய்ச்சலில் முந்தியபோது உலக மேலாதிக்கப்பூனை நல்லப்பிள்ளைச்சாமி வேடம் போட முடிந்திருக்கிறது. ஈழத் தமிழ்த்தேசியம் இந்த நல்லப் பிள்ளை பூனைச்சாமிக்குப் பின்னால், இன்னமும். நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஈழத்தமிழ்த் தேசியம் அமெரிக்க மேலாதிக்கத்திற்கே வாக்களித்திருந்தது. அதை யும் மீறி பிராந்திய  மேலாதிக்கப் பிரதிநிதியான ராஜபக்ஷவே மீண்டும் ஜனாதிபதியாக முடிந்துள்ளது. அவர் மீள எடுத்துக் கொள்வதற்கு சிங்களப் பேரினவாத உணர்வை முழு அள வில் பிரயோகித்துக்கொண்டார். சிங்கள வாக்குகள் அங்கு குவியவும், மேலும் உக்கிரத்துடன் ஈழத்தமிழ்த் தேசியம் அமெரிக்க மேலாதிக்கப் பக்கம் சாயக் காரணமானது.

இப்போது ஜனாதிபதியின் வெற்றிமீது சந்தேகங்கள் கிளப்பப்படுகின்றன. எதிரணிக் கட்சிகள் இதனை முன்னெ டுத்த போதிலும் சிங்கள மக்களிடம் இந்த அதீதப் பெரும் பான்மையினாலான வெற்றி பற்றிச் சந்தேகங்கள் இருந்த போதிலும் எதிர்ப்பு வலுவான வெகுசன எழுச்சியாக வளர்ச்சி கொள்ள முடியவில்லை. அதற்கான பிரதான காரணி, எதிர்ப்பைத்  தூண்டும் எதிரணி அமெரிக்கச் சார்பா னது என்பதோடு அது ஈழத்தமிழ்த் தேசியத்துக்கு உயிர்ப்பூட் டும் என்ற அரசுதரப்பின் பிரச்சாரம் ஆகும்.

இப்படிச் சொல்வதால் சிங்கள மக்கள் அமெரிக்க மேலாதிக் கத்திற்கு எதிரான அரசியல் விழிப்புணர்வைக் கொண்டு இருக்கிறார்கள் என்பதோ, இந்தியச்சார்பை ஏற்றுக் கொள்கி றார்கள் என்பதோ அல்ல. இந்தியா கவனமாக நிலை மையைக் கையாள்கிறதேயன்றி, அதன் தலையீடு இருப் பதைக் கண்டால் சிங்கள இன உணர்வு அதற்கெதிராகவும் கெம்பியெழும். இந்தக் கெம்பியெழல் மேற்கோள் குறிக் குள் முடங்கக் காரணம் உண்டு. சுதந்தி ரத்தின் பின்னர் மூன்று தசாப்தங்கள் வரை ஏகாதிபத்திய எதிர்ப்புணர் வோடு இறைமையும் சுயாதிபத்திய முள்ள ஒரு நாட்டுக்கான முற்போக்கு குணாம்சமுள்ள மக்களாக சிங்கள மக்கள் திகழ்ந்திருக்கிறார்கள். கூடவே பேரினவாத அகங்காரமும் ஏனைய தேசிய இனங்களது சமஉரிமை மறுப் பும் வளர்ந்தநிலையில் பிந்திய மூன்று தசாப்தங்களாக அமெரிக்கச்சார்பு உட்பட சுயாதிபத்திய-இறைமை இழப்புகளைக் கண்டு கொள்ளாமல் மோசமான சிதைவுகள் அவர்களிடம் வளர்ந்துவிட்டன. இப்போதும் இன வாதமே எடுபடு பொருளாயுள்ளதால் பிராந்திய மேலாதிக்கத்துக்கு எதிரா கவோ, அமெரிக்க மேலாதிக்கத்துக்கு எதிராகவோ ஒரு துரும்பையும் போட முடியாதவர்களாகவே உள்ளார்கள்.

அத்தகைய பிற்போக்கு நிலைக்குரிய பௌத்த - சிங்களப் பேரினவாதத்துக்கு எதிரான ஈழத்தமிழ்த் தேசியப் போராட் டம் முற்போக்கானதுதானே? அவ்வாறு அமையாமல் போனதுதான் துன்பியல். பேரினவாதத்துக்கு எதிராகப் போராடவேண்டிய தேவைகள் வலுத்துவந்த போதிலும் அது ஆரம்பம் முதலாகவே முற்போக்குத்திசையிலன்றி பிற் போக்கு மார்க்கத்தையே வரித்துக்கொண்டது. ஈழத்தமிழ்த் தேசியத்தின் முதற்கோரிக்கையான ஐம்பதுக்கு ஐம்பதை முன்வைத்த ஜி.ஜி.பொன்னம்பலம் மலையக மக்களது பிரசாவுரிமையைப் பறித்த ஐ.தே.க. அரசில் அங்கம் வகித் தார்; அப்போதே கிழக்கைத் துண்டாடும் நோக்கோடு திட்ட மிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதைத் தடுக்க வக்கற்றவராக அந்தத் தமிழ்த்தலைவர் இருந்தார். அவரது தமிழ்த்தேசியம் ஏகாதிபத்திய நலன்களோடு உறவுடையது என்ற அதன் பிணைப்போடு தொடர்பானது அந்த பலவீனம். இந்தத் தவறான இணைப்பே முன்னேற்றத் துக்கான வலுவான தடை என்பதை உணராமலேதான் இன்று வரை ஈழத்தமிழ்த் தேசியம் முன்னெடுத்துவரப்பட்டுள்ளது.

ஜி.ஜி.க்கு எதிராக அடுத்தக்கட்டப் போராட்டத்தை சமஷ்டிக் கோரிக்கையுடன் முன்வைத்த செல்வநாயகத்தின் தலைமை யிலான அணி தேசிய முதலாளித்துவ உணர்வோடு ஒரு தசாப்தத்துக்காயினும் முற்போக்குப் பாத்திரத்தை வகித்திருந் தது. சிங்களத்தேசிய முதலாளித்துவ சக்தி பண்டாரநாயக்க தலைமையில் வெற்றி கொண்டபோது இதுவும் தமிழர் மத்தியில் எழுச்சிபெற்றது. பண்டாரநாயக்க தனிச்சிங்களச் சட்டத்தால் தனது வர்க்கத்தின் பலவீனத்தை வெளிப்படுத்தி னார் என்றால், இவர்கள் ஏகாதிபத்திய நலன்களை இங்கி ருந்து அகற்றவிடாமல் போராடும் தமது அற்பத்தனமான வர்க்கப் பலவீனத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் 1960ல் ஐ.தே.க. அரசு ஏற்படுவதை நிராகரித்ததில் அவர்களுக்கும் ஒரு முற்போக்குப் பாத் திரம் இருந்தது. ஸ்ரீமாவோ பண்டார நாயக்க அரசோடு பேரப்பேச்சில் இறங்கவும் உடன் செல்லவும் அது உதவியது. அந்த முற்போக்குக் குணாம்சம் வளர்த்தெடுக்கப்பட்டிருப் பின் நமது வரலாறு வேறுவகையாக முன்னேறியிருக்க முடியும். சிங்கள - தமிழ் தேசிய முதாலாளி வர்க்கங்களின் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து இயங்க முடியாமல் போன தற்கு 1960 - 1965 இல் இயங்கிய ஸ்ரீமாவோ அரசு இழைத்த தவறுகள் பற்றி நிறையவே பேசப்பட்டுள்ளன; அதுமட்டுமே காரணி அல்ல. தமிழ்த் தலைமை தனது நிலைப்பாட்டை பெருமுதலாளி வர்க்கச்சார்புக்கு மாற்றிக்கொண்டு முன்னர் எதிர்த்த ஐ.தே.க. எனும் சிங்களப் பெருமுத லாளித்துவக் கட்சியோடு கைகோர்த்தமையே பின்னடை வுக்குப் பிரதானக் காரணியாக அமைந்தது. குறைந்தபட்சத் தேசிய முதலாளித்துவ நலனைக் கொண்டிருந்த காலத்தி லேயே ஏகாதிபத்திய நலன்களை இந்த மண்ணில் தொடரக் குரல் கொடுத்த இந்தத் தலைமை, பெரு முதலாளித்துவ உள்ளடக்கத்தை வரித்த பின்னர் முற்றிலும் ஏகாதிபத்தியத் தின் நிழலாகவே தமிழ்த்தேசியப் போராட்டத்தை அடையாளப்படுத்தினர்.

70களின் பிற்கூறில் பிரிவினைக் கோரிக்கையுடன் எழுச்சி பெற்ற இளைஞர் இயக்கங்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பு ணர்வை வெளிப்படுத்தியதோடு, சோஷலிஸத் தமிழீழம் பற்றிய விவாதங்களையும் முன்னெடுத்தனர். இருப்பினும் அவர்கள் நாடிய சோவியத் யூனியனின் நட்புறவு ஆப்கானி ஸ்தானில் ஆக்கிரமிப்புப் படையாக சோவியத் இராணுவம் சமராடிக் கொண்டிருந்த வரலாற்றுக் கட்டத்துக்குரியது. அதைவிடவும், இந்திய அரசு அனுசரணையோடு அவர்கள் தமது இராணுவங்களைப் போஷித்தபோதே இந்தியப் பிராந்திய மேலாதிக்கத்தின் கருவியாகிவிட்டிருந்தனர். ஆக, அவர்களது ஏகாதிபத்திய எதிர்ப்பும் மார்க்ஸிய நாட்டமும் பொருளற்றனவாய் அமைந்தன. அப்பண்பு காரணமாக அவர் களால் சொந்த மக்களை அணிதிரட்ட முடியாமற் போனது; போகவும், அமெரிக்க மேலாதிக்கவாதப் பிரதிநிதிகளான புலிகளால் இலகுவில் களத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டனர்.

அந்தவகையில் முதற்கோணலோடு முற்றிலுங் கோணலா கவே முடிந்த ஈழத்தமிழ்த் தேசியம் குறித்த கற்றல் மார்க்சிய அணுகுமுறையில் இன்னும் ஆழமாக அணுகப்பட வேண்டி யதாகும். மார்க்சியர்கள் தேசியம் குறித்துப் போதிய அளவில் அக்கறை கொள்ளவில்லை என்ற குறைபாட்டைத்தான் தமிழவன் முன்வைத்திருந்தார். மொத்தத்தில் நல்ல சிந்தனையாளர்களும், அறிவாளிகளும்கூட தமிழ் பற்றிய விருப்புவெறுப்பற்று யோசிக்கவில்லை. அதன் தமிழ்த் தேசிய உட்கிடைகளை அறிவதில் தடுமாறுகிறார்கள். இதற் கான ஒரு காரணம் அகில உலகப் பேரறி வான மார்க்சியத்தைத் தமிழக இடதுசாரிக் கட்சிகள் கொச்சைப்படுத்தியிருப்பது தான் எனக்கூறும் தமிழவனும் தமிழ்த் தேசியம் குறித்த ஆய்வுக்கு மார்க்சி யத்தைப் பிரயோகிக்க முன்வரவில்லை. தமிழ்த் தேசியத்தைப் புரிந்து கொள்ளத் தனக்கு இயங்கியல் அணுகுமுறையை விட அமைப்பியலே சரியாகப்படுவதாக அவர் கூறுகிறார். இயங்கியல்ரீதியாக விளக்கமுடியும் என்பது குறித்த விவா தத்தை பின்போட்டுக் கொள்வோம்; இது வரை பேசிவந்த விடயம் தொடர்பில் அவரது ஒரு கருத்து இங்கு உடனடி அக்கறைக்குரியதாயுள்ளது.

இந்தியாவின் தமிழ்த் தேசிய உருவாக்கம் தொடர்பாக அவர் கவனங்கொள்ளச் சொல் கிற அம்சத்தை அவரது வார்த்தைகளில் காண்பது அவசிய மானதாகும். சமீபத்தில் ஒரு ஆங்கில நூல் படிப்பதற்குக் கிடைத்தது. அச்சும், நாட்டுப்புறவியலும், தேசியமும், காலனி ஆதிக்கத் தென்னிந்தியாவில் என்பது நூலின் நீண்ட பெயர். நூலின் ஆசிரியர் பல தமிழாய்வாளர்களுக்குப் பழக்கப்பட்டவரும் சில ஆண்டுகளுக்கு முன்புவரை லண்டன் எஸ்.ஓ.எ.எஸ். நிறுவனத்தில் தமிழ் கற்பித்து வந்த வருமான ஸ்டுவர்ட் பிளாக்பர்ன் அவர்கள். நாட்டுப்புறவிய லும், இலக்கியமும் முதன்முதலில் அதாவது 1800 வாக்கில் அச்சுக்கு உள்ளாக்கப்பட்டபோது தமிழ் மனோபாவத்தில் நடந்த மாற்றங்களை முன்வைக்கிறார். தமிழ்த்தேசியம் தமிழில் கட்டமைக்கப்பட்ட முக்கியமான காலகட்டம் இது என்கிறார். 18ம் நூற்றாண்டு இலக்கிய வரலாறு எழுதியவர் களால் இந்நோக்கு மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பல தமிழ் ஆசிரிய ஆய்வுகளைப் போலவே 18,19ம் நூற்றாண்டு ஆய்வுகள் தமிழில் தரமின்றியே உள்ளன. ஸ்டுவர்ட் பிளாக்பர்ன் அவர்கள் நாட்டுப்புறவியல் கதை களை முதன்முதலில் தொகுத்த தாண்டவராய முதலியாரை முக்கியப்படுத்துகிறார். இது சரியான பார்வை. நம்முடைய முதல் நாவல், பிரதாப முதலியார் சரித்திரம் - தாண்டவராய முதலியாரின் தொடர்ச்சி. பிளாக் பர்னிடம் இச்செய்தி இல்லை. ஆனால், தமிழ்மொழியின் பெருமை பற்றிய கருத்துக்கள் பிரதாபமுதலியார் சரித்திரத்தில் பல பக்கங் களுக்கு நீளுகின்றன. அதாவது நான் முன்வைக்க வருவது உரைநடையில் இலக்கியம் தோன்றுவதும் தமிழ்த் தேசியம் தோன்றுவதும் பின்னிப் பிணைந்தவையாகும் என்ற கருத்து. இது இதற்கு ஒரு நூற்றாண்டுக்குப் பிந்தி காஞ்சிபுரத்தில் பிறந்த தமிழனான அண்ணாத்துரைக்கு தமிழரசியல் தோற்ற மளித்ததோடு தொடர்புடையதாகும். தமிழ்பற்றிப் பேசினால் பாசிசம்தான் வரும் என்ற அரைகுறையான, பழைய, இப்போது மார்க்சியர்கள்கூட மறந்துபோன சூத்திரத்தை ஒதுக்கிவிட்டு, எதார்த்த அரசியல், பிராந்திய நிலவரம் போன்றவற்றை கணக்கில் எடுத்துப் பேசவேண்டும் என்பது தமிழவனின் விவாதம்.

தமிழ் பற்றிப் பேசினால் பாசிசம்தான் வரும் என்ற அரையுண்மையை இப்போது மார்க்சியர்கள் மறந்துபோனது, அது தவறு என்பதால் அல்ல; அது ஏற்கனவே நிறை வேறித் தொலைத்துவிட்டது என்பதனால்! ஈழத்தமிழ்த் தேசியம் புலிப்பாஸிஸத்தை தாராளமாய் அனுபவித்தது. அதன் துன்பி யல் முடிவுக்கும் அந்தப் புலிப்பாஸிஸம் ஒருவகையில் காரணமாய் அமைந்தது; அவர்கள் அரவணைத்த சர்வதேசமே அவர்களைத் தடைசெய்து, எவராலும் அங்கீகரிக்கப்படாமல் போனதாலேயே மிக வலுவான இராணுவமாய் வளர்ந்துங் கூட ஒன்றும் பண்ணமுடியாத கையறு நிலைக்குப் புலிகள் தள்ளப்பட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்வதில் சிரமம் உண்டா? முன்னரும் புலிகள் முன்னேறித் தாக்கியவேளைகளில் சிங்கள இராணுவத்தினருக்குள் கோடரிக்காம்புகளைத் தேர்ந்தெடுத்துக் காசுகொடுத்து ஓடவைத்துக்கொண்டு இருந்தார்களேயன்றி, புலிகளிடம் பெரும் வீரம் எதுவும் கிடையாது எனக்கூறும் பேரினவாத அடிவருடிகளை இங்கே காணமுடிந்தது. இத்தகையவர்களும் புலிப்பாஸிஸம் பற்றிப் பேசப் பின்னிற்பதில்லை. இத்தனை தீவிரமாகத் தமிழகத்தில் தமிழ்ப்பாஸிஸம் வெளிப்படா வகையில் இந்தியப் போலி ஜனநாயகம் செயற்பட்டபோதி லும், திராவிடர் இயக்கங்களின் கீழான நான்கு தசாப்தங்க ளின் தமிழகச் சமூகத்தின் பல சிதைவுகளுக்கு திராவிடர் இயக்கக் கட்சிகளது ஜனநாயகமயப்பட்ட பாஸிஸம் காரண மாக அமைந்தமை பற்றிப் பலரும் தமது எழுத்துக்களினூ டாக வெளிக்கொணர்ந்துள்ளனர்.

அந்த அரையுண்மை அரங்கேறி மக்கள் விடுதலை மார்க்கங் கள் முடங்கிப் போனதற்கு தமிழ்த்தேசியத்தின் மக்கள் நலன் சார்ந்த பக்கத்தைப் பார்க்கத் தவறிய மீதி உண்மை (அதுவும் பாதி தான்) பற்றிய அக்கறையை மார்க்சியர்கள் இப்போது கவனங்கொள்கிறார்கள். இதிலுள்ள துன்பியல், ஓடுகிற பஸ்ஸைத் துரத்தியோடி ஏற முயல்கிற நிலையில் மார்க்சியர்  இருப்பதுதான். மார்க்ஸ், லெனின் போன்றோரது வசனங் களினுள் முடங்கிப்போய் மார்க்சிய - லெனினிய சிந்தனை முறைமையின்படி இந்தியச் சமூக நியதியைப் பகுப்பாயவும் பாட்டாளிவர்க்க உலக நோக்கை ஸ்தூல நிலைமைக்கு அமைவாக பிரயோகிக்கத் தவறியதுமான குற்றம் இந்திய மார்க்சியர்களிடம் உள்ளது; உண்மையில் அர்ப்பணிப்பு, தியாகம், மார்க்சிய விசுவாசம் என்பவற்றில் இந்திய மார்க் சியர்கள் வேறெந்தவொரு நாட்டின் முன்னுதாரணத்துக்கும் குறைவானவர்களல்ல.

தமிழ்த் தேசியம் பாஸிஸ வடிவங்கொள்ளும் என்ற எதிர்வு கூறலை முன்மொழிந்த மார்க்சியர்கள் அதற்கான அடிப் படைக்  காரணியையும் காட்டத் தவறவில்லை. மேலே தமிழ வன் காட்டுகிற தமிழ்த்தேசியத்தின் ஊற்றுமூலம் குறித்து கைலாசபதி போன்ற தமிழியல் துறையில் இயங்கிய மார்க்சியர்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி யிருக்கிறார்கள். குறிப்பாக, கோ.கேசவனின் மண்ணும் மனித உறவுகளும் நூலுக்கான கைலாசபதியின் முன்னுரை இதுதொடர்பில் மிகுந்த கவனிப்புக்குரியதாகும். அங்கே தமிழ்த்தேசியத்தின் முதற்கோணல் எது என்பதை அவர் தெளிவுபடுத்தியிருந்தார். இயல்பாக தமிழ்த்தேசியத்துக்கான தேவை ஒருபக்கம் இருக்க, பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சதிக்கு ஏதுவாக திராவிட மேன்மைபற்றி ஐரோப்பிய சிந்தனையாளர்கள் செயற்பட்டவாறினைக் கைலாசபதி மிகத்தெளிவாகவே காட்டியிருந்தார்.

ஏகாதிபத்தியத்தின் இந்தக் கையாளல் மிகுந்த கவனிப்புக்குரி யது. தமிழவனின் நீண்ட மேற்கோளை  காட்டியிருப்பதற் கான பிரதான காரணம், இந்த அம்சமும் செயற்பட்டது என் பதை அவர் எங்காவது சொல்லியுள்ளாரா எனத் தேடிப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே. அக்கட்டுரை முழுமை யிலும் எங்குமே இதனை அவர் காட்டவில்லை. கைலாசபதி யின் மேலே குறிப்பிட்ட முன்னுரையைப் பார்க்கிற ஒருவர், தமிழ்த்தேசியத்தின் அவசியமான பங்களிப்பாக கால்ட் வெல் போன்றோரது திராவிடமொழி ஆராய்ச்சி அமைந்த மையைச் சொல்லித்தான், பிரதான அம்சமாக இதனை வலி யுறுத்தினார் என்பதனைக் காணமுடியும். மாறாக, மார்க்சியர்  மீது குற்றம் சுமத்துகின்ற தமிழவன் தனக்கான ஒரு அம்சத்தை வளர்த்துச் செல்கிறாரேயன்றி, வரலாற்றுச் செல் நெறியில் பிரதான அம்சமாக அமைந்த மறு பக்கத்தைக் குறிப் பிடவேயில்லை. ஒருபக்கக் கட்டுரையேயாயினும் எந்த வொரு விடயத்தினதும் இரு அம்சங்களையும் குறிப்பிட்டாக வேண்டும் என மாஓ வலியுறுத்தியிருந்த விடயத்தை மார்க்சியர் பெரும்பாலும் பின்பற்றத் தவறியதில்லை.

இருப்பினும் தமிழ்த்தேசியத்தில் ஏகாதிபத்தியச் சதிக்கு ஆட் படும் பக்கத்தை வலியுறுத்திய அதேவேளை, அதன் சரியான அம்சம் சார்ந்து மக்கள் மத்தியில் மார்க்சியர்கள் இயங்காமற் போனதால் தவறு வலுவாய்த் தாக்கியுள்ளது என்ற விமர்சனத்தை இன்று மார்க்சியர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாக உள்ளனர். தேசியப்பிரச்சனையின் பன்மைப்பரிமாணங்கள் குறித்த தீர்க்கமான தேடலும் அவை சார்ந்த கொள்கை வகுப்பும் இன்னமும் சரியான திசைப் படவில்லை என்பது மெய். நமது சமூகமுறைமை சார்ந்த புரட்சியின் வடிவம் இனங்காணப்படாமல் வெறும் புத்தக வாத வாய்ச்சவடால்கள் மேலோங்கியிருப்பதும் உண்மை.

இதுதொடர்பில் அக்- 2009 புதிய புத்தகம் பேசுது இதழில் வெளியான யி.ஙி.றி. மொரேயின் நேர்காணல் கவனிப்புக்குரி யது. ஜஸ்வந்சிங்கின் ஜின்னாவைத்  தேசியவாதி என்று எழு திய சர்ச்சைக்குரிய புத்தகம் தொடர்பானது அந்த நேர்காணல். இன்று பொறுப்பற்ற முறையில் ஜஸ்வந்சிங் இந்தியாவின் பிரிவினையின்போது பிரிட்டிஷாரின் பங்கைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் ஜின்னா ஒரு தேசியவாதி என்று சொல் கிறார் என மொரே கூறும் போது தமிழவனைப் போலன்றி, முஸ்லிம் தேசியவாதத்தைத் தூண்டிப் பிரிவினைவரை வளர்த்ததில் பிரிட்டிஷாருக்குள்ள வலுவான பாத்திரத்தை உணர்த்துகிறார். உண்மையில் பிரிவினையை முஸ்லிம் தேசி யத்துக்கு முன்னரே பெரியாரின் திராவிடரியக்கம் முன் வைத்துவிட்டது என்பதையும் மொரே எடுத்துக் காட்டியுள் ளார். இங்கே, தமிழவனைப் போலவே திராவிடத் தேசியத் தின் அவசியத்தை மொரே ஏற்றுக்கொள்கிறார் (தமிழ்த்தேசி யம் திராவிடத் தேசியத்திலிருந்து பல வேறுபாடுகளைக் கொண்டிருந்த போதிலும் இரண்டுக்குமான இரத்தபந்த உறவு வலுவானது என்ற வகையில் இங்கு இணக்கமாக நோக்கப் பட்டுள்ளது). இந்தத் திராவிடத் தேசியத்தை மொரே எங்குமே வகுப்புவாதம் எனக் கொச்சைப் படுத்தியதில்லை. மாறாக, முஸ்லிம் தேசியத்தை அவரால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அகில இந்திய முஸ்லிம்லீக் என்பது ஒரு வகுப்புவாத கட்சி.  ஏனெனில் அந்தக்கட்சியில் முஸ்லிம்கள் மட்டுமே உறுப்பினராக முடியும். இந்த வகுப்புவாத கட்சி யின் தலைவர் ஜின்னா எனக் கூறி, 25 வீதமான முஸ்லிம் மக்களுக்கு மட்டும் உரியதாக உள்ள வகுப்புவாதக் கட்சியின் தலைவரைத் தேசியவாதி எனக் கூறமுடியாது என்கிறார்.

ஒரு வகுப்புவாத கட்சியின் தலைவர், இந்தியாவின் ஒற்று மைக்காக ஒருவேளை பேசி இருந்தாலும், ஜின்னாவை வகுப்புவாத தேசியவாதி என்றே அழைக்கமுடியும் என்று நினைக்கின்றேன். அவரை நிச்சயமாக ஒரு தேசியவாதி என்று சொல்லமுடியாது. ஒரு மதத்தையோ, ஜாதியையோ சார்ந்து செயல்படும் எந்த ஒரு நபரையும் தேசியவாதியாகக் கூற முடியாது என்கிறார் மொரே. பெரியாரது திராவிடரியக் கம் திராவிடர் அல்லாதார் அங்கம் பெறாதவகையில் கட்ட மைக்கப்பட்டபோதிலும் அதை வகுப்புவாத அமைப்பாக மொரே கருதவில்லை. அக்காலத்தில் பல மார்க்சியர்கள் திராவிடர் கழகத்தையும் அதன் வழித்தோன்றல்களையும் வகுப்புவாத அமைப்புகளாகவே பார்த்தனர் என்பது கவனிப்புக் குரியது.  ஒருவர் தமிழ்த் தேசியராயும் இந்தியத் தேசியராயும் இருக்க முடியும் என்பதை ஏற்பதில் சிரமம் இல்லை. பாரதியிடம் இத்தகைய இனத்தேசியமும் நாட்டுத்தேசியமும் சார்ந்த பண்புகள் விரவிக் காணப்பட்டன.

பல்வேறு தேசிய இனங்களின் மத்தியிலும் இயங்கிய இந்தியத் தேசியக் கவிஞர்களும் இத்தகைய பண்புகளைக் கொண்டவர்களே. இரவீந்திரநாத் தாகூர் வங்காளத்தேசியத்தையும் இந்தியத் தேசியத்தையும் அற்புதமாய்க் கவித்துவமாக்கியவர். இந்தியத் தேசியகீதம் மட்டுமல்ல, இஸ்லாமிய நாடான பங்களாதேஷின் தேசிய கீதமும் இரவீந்திரருடையது என்பது கவனிப்புக்குரியது. மகாகவி இக்பால் இஸ்லாமியத் தேசிய உணர்வுக்கும் இந்தியத் தேசிய உணர்வுக்கும் தலைசிறந்த உதாரணமாகத் திகழ்ந்தவர். அந்தவகையில் மொரே கருதவதுபோல தேசியத்துக்கு உட்படமுடியாததாக இனத்தேசியத்தை விலக்க முடியாது. மதம் தேசிய வடிவத்தைப் பெற முடிந்தது ஏகாதிபத்தியத் துக்கு ஆட்பட்டிருந்த எமது வரலாற்று நிர்ப்பந்தத்தால் ஏற் பட்ட ஒன்று என்பதை ஏற்றாக வேண்டும். இதுதொடர்பில் வரலாற்றுத்துறை போராசிரியர் சி.அரசரத்தினத்தின் கூற்று கவனிப்புக்குரியது; நாம் எடுத்துக்கொண்ட ஆசிய நாடுகளில் தேசிய இயக்கங்கள் கிறிஸ்தவ வல்லரசுகளை எதிர்த்து நின்றன. அத்துடன், இவ்வியக்கங்கள் பல, சமயம் ஒன்றுதான் மேலானதெனக் கோருவதை எதிர்த்து, தங்கள் சமயங்களுக்கும் கலாச்சாரங்களுக்கும் நன்னப்பிக்கையூட்டு வதை நாடி நிற்கின்றன. அதன் விளைவாக தேசியவாத மானது எப்படி அரசியலுரிமைகளைப் பெற இயங்கும் ஓரியக்கமாயிற்றோ, அதேபோலக் கலாச்சார சமய மறு மலர்ச்சி இயக்கமாயிற்று. ஆகையால் இந்நாடுகளில் தேசிய வாதம் தோன்றிய காலத்திலேயே, அங்கு பெரும்பாலும் பரவியிருக்கும் சமயங்களாகிய இந்து, பௌத்த, இஸ்லாமிய சமயங்களின் மறுமலர்ச்சியும் ஏற்பட்டதை தற்செயலாக ஒரே காலத்தில் நடந்த இரு சம்பவங்களெனக் கொள்ளலா காது.

சமயத்திற்களித்த இம்முக்கியத்துவம் தேசியவாதத் திற்கு சாதகமாகவும் பாதகமாகவும் முடிந்தது. அது தேசிய வாதத்தினை ஒரு விரிவான அடிப்படையுள்ளதாகச் செய் வதற்கு முனைந்தது. அத்துடன் தனி அரசியல் இயக்கம் எதுவுக்கும் கிடைத்திருக்க முடியாத பொது ஆதரவைத் தேசியவாதம் பெறுவதற்கு உதவியது. உதாரணமாக இந்தியா விலே காந்தியொருவர் முன்வந்து இந்தியத் தேசியவாதத் தினை இந்துக் கலாச்சாரத்தின் உயிர்நாடியோடு இணைக்கும் வரை இந்தியத் தேசியவாதம் பெரும்பாலும் ஒரு மத்திய வகுப்பினரின் இயக்கமாகவே இருந்தது. காந்தி அவ் வண்ணஞ் செய்தபோதுதான் இந்தியாவின் நாட்டுமக்களுள் மிஸீபீவீணீஸீ றிமீணீணீஸீக்ஷீஹ் பெரும்பகுதியினர் தேசியவாதத்தில் ஊக்கங் கொண்டனர். மற்றநாடுகளிலும் பற்பல அளவுகளில் இப்படியான போக்கு ஏற்பட்டது. தூங்கிக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தினைத் தட்டி எழுப்புவதற்குச் சமயத்திற்க ளித்த முக்கியத்துவம் சரியானதாகவிருந்தது. ஆனால் பல மதங்கள் உள்ள நாடுகளிலே அது பல விபரீதவிளைவுகளை உண்டுபண்ணக் கூடியதாகும். இதனை இந்தியாவில் நடைபெற்ற சோக சம்பவங்கள் நன்கு எடுத்துக்காட்டுகின் றது. அங்கு முஸ்லிம் மக்களுடைய தேசியவாதமானது, இந்திய ஒற்றுமையின்மீது கொண்ட விசுவாசத்திற்கும் மேலாகச் சமயத்திலே கூடிய ஆர்வங்கொண்டு, இந்திய முஸ்லிம்களின் தேசியநோக்கங்கள் ஒரு தனி இஸ்லாமிய நாடு அமைப்பதாலேயே சாத்தியப்படுமென்ற முடிவுக்கு வந் தது.

இந்திய தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்ட  இந்தியத் தேசிய காங்கிரசாலும் இத்தகைய பிளவினைச் சமா ளிக்க முடியவில்லை. ஆகவே தென்கிழக்காசிய நாடுகளின் தேசியவாதத்தினை உருவாக்கி நின்ற பல்வேறு அம்சங் களும் ஒரே இயக்கத்திலே ஒன்று கூடியிருக்க முடியாத அளவிற்குத் தங்களுக்குள் முரண்பட்ட கோரிக்கைகளை உடையனவாக அமைந்தன (அரசரத்தினம்.சி, ஆசியாவில் தேசியவாதத்தின் மூலங்கள். பார்க்க: கூடம், ஏப்பிரல் - ஜூலை 2009.ப.45). இது 1960களில் எழுதப்பட்டது. இன்று இன்னும் விரிவாக நமது தேசிய இயக்கங்களில் மதம் வகித்த பாத்திரம் குறித்தது பேசப்பட்டுள்ளது. இருப்பினும் இந்துத்தேசியத்தால் ஒடுக்கப்பட்டபோது இயல்பாக உருவாகத்தக்க இஸ்லாமியத் தேசிய உணர்வை வகுப்புவாதமாகக் காணும் தவறு, பல அம்சங்களில் மிகுந்த முக்கியத்துவமிக்க விடயங் களை வலியுறுத்துகிற ஒருவரிடமும் ஏற்பட்டுவிடுகிறது என்பதையே புதிய புத்தகம் பேசுது நேர்காணலில் மொரே வாயிலாக வெளிப்படக் காண்கின்றோம். அவர் மதத்தையோ சாதியையோ சார்ந்து செயல்படும் ஒருவரை தேசியவாதி யாகக் கூறமுடியாது எனக்கூறியிருந்ததையும் கண்டோம். இங்கு பெரியார் வேண்டப்படுகிறார்; 1925 இல் பெரியார் காங்கிரசைவிட்டு வெளியேறியபோது தமிழகக் காங்கிரஸில் பிராமண ஆதிக்கம் மேலோங்கி இருப்பதாகக் கூறி பிராமண ரல்லாதார் சாதி நோக்கைத்தானே முன்வைத்தார்! ஜோதிராவ் புலேயும் இந்தியக் காங்கிரஸ் பிராமணத் தேசியத்தை முன்னெடுப்பதாகக் கூறித்தானே அதனை எதிர்த்தார்! பிராம ணரல்லாதாருக்குள்ள ஏதாயினும் ஒரு சாதி மேலாண்மை சாத்தியப்பட்டால், ஒடுக்கப்பட்ட ஒரு சாதிப் பிரிவு தனது தேசியத்தை முன்வைக்கக்கூடாதா, இஸ்லா மியத் தேசியம் மேலெழுந்தது போல?

( 2 )

மார்க்சியர்கள் ஒரு கோட்பாட்டு வரையறைக்குள் நிற்பத னால் புதிய விடயங்களைக் காணத்தவறுகிறார்கள் எனக் கூறும், மார்க்சியத்தைக் கடந்து சிந்திப்பவர்களான அமைப் பியல்வாதிகள் பின்நவீனத்துவவாதிகள் கூட சாதித் தேசியத் தின் சாத்தியத்தை ஏற்க முடியாதவர்களாகவே உள்ளனர். எவரது விருப்பு வெறுப்புக்கும் அப்பால் யதார்த்தம் தன் பாட்டுக்கு இயங்கிக்கொண்டு இருக்கும். மக்கள் விடுதலைக் கான திசை மார்க்கத்தில் அதனைச் சரியாக அணுகிக் கோட்பாட்டு உருவாக்கம் செய்து இயக்க வடிவப்படுத்து வதற்குத் தவறும்போது, ஆதிக்கசக்திகள் மக்களைப் பிளவு படுத்துவதற்கு அவற்றைக் கையாண்டு தாறுமாறானதாக ஆக்கிவிடுவார்கள் - பாகிஸ்தான் பிளவுபட்டதைப் போல.

தான் செய்த மிகப்பெருந்தவறு பாகிஸ்தானை உருவாக்கி யமை என ஜின்னா தனது இறுதிக்காலத்தில் வருத்தப்பட்ட தாக அறிய முடிகிறது. உண்மையில் தெற்காசியப் பிராந்தியத் துக்கு கேடாக அமைந்த அதேவேளை, முஸ்லிம் மக்க ளையே பிளவுபடுத்திப் பலவீனப்படுத்தியதாகவுமே பாகிஸ் தான் உருவாக்கம் அமைந்தது. இதுகுறித்து மேற்படி நேர் காணலில் மொரே கூறியுள்ளார். எல்லா இடங்களிலுமுள்ள இஸ்லாமியர் நலன்களைப் பாதுகாப்பதே ஜின்னாவின் நோக்கமாக இருந்தது. ஜின்னாவின் சாதனை என்பது முஸ் லிம்களை பிரித்ததுதான். முஸ்லிம்களை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பிரித்துக் கொடுத்தார். ஆனாலும் இந்தியா ஏறக்குறைய காப்பற்றப்பட்டது. ஏனெனில் பலுசிஸ்தான் மற்றும் வடமேற்கு மாகாணங்கள் இந்தியாவின் பகுதிகளாக இருந்ததில்லை. 19ம் நூற்றாண்டின் இறுதியில்தான் இந்தப் பகுதிகளை பிரிட்டிஷார் இந்தியாவோடு இணைத்தனர். இந்துக்கள் சற்றே இழந்தார்கள். இஸ்லாமியர்கள் நிறைய இழந்தார்கள் என்பது மொரேயின் கருத்து.

பிரதேச அளவில் இந்துக்கள் இழந்தது குறைவு எனக்கூற முடிந்தாலும், இன்றுவரை வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழப்பதற்கான ஒரு காரணியாய் இப்பிரி வினை அமைந்திருப்பதை மறுத்துவிடமுடியாது. சுதந்திரம் பிளவுபடாதது. இஸ்லாமியர்களின் உரிமை மறுக்கப்படுகிற போது இந்துக்களுக்கு மட்டும் சுபீட்சமான வாழ்வு சாத்தியப் படப் போவதில்லை. மறுதலையாக சொன்னால், அதிகாரத் துவத் தரப்பு மிகப் பெரும்பான்மையினரான இந்துக்களை ஒடுக்கிச் சுரண்டி சுபிட்சமற்ற வாழ்வுக்கு நிர்ப்பந்திப்பதை மறைக்கவே, இஸ்லாமியர்மீதான வெளிப்படையான ஒடுக்குமுறையைக் காட்டிக் கொள்கின்றது என்பது இன் றைய இந்திய நிதர்சனம்; முஸ்லிம்களது சுதந்திரம் மறுக்கப் படுகிறபோது அங்கு இந்துக்களின் சுதந்திரம் இழக்கப்பட்டி ருக்கிறது என்பதே பொருள். இலங்கையில் சிங்களப் பேரின வாத  அரசுகள் சிங்கள மக்களது உரிமைகளையும் வாழ்வாதா ரங்களையும் பறித்து மறுப்பதை மறைக்கவே ஏனைய தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறை.

இத்தகைய உரிமை மறுப்புகள் இனரீதியாக மட்டுமே நிகழும் என்றில்லை. அதிகாரத்தரப்பு தனக்கு சாதகமான அடையாளம் ஒன்றை வலுவான தளமாக வைத்துக் கொண்டு, ஏனைய அடையாளங்களுக்குரிய மக்கள் பிரிவி னர் மீதான ஒடுக்குமுறைகளைக் கையாண்டு அவர்களது உரிமைப் பறிப்புகளே முந்திய தமக்கான அடையாளப் பிரி வினரது மீட்சிக்கு வாய்ப்பு எனக் காட்ட உள்ள சந்தர்ப்பங் களைத் தவறவிடுவதில்லை. அதற்கேற்ற மற்றும் ஒரு பேர டையாளமாக சாதி திகழ்கின்றது. அதிகாரத்தரப்பு ஏதாயின மொரு சாதியின் நலன் சார்ந்து செயற்படுகிறபோது, புறக் கணிக்கப்படுவதாக உணரும் மற்றொரு பேரடையாளத்துக்கு வாய்ப்பான சாதி தாம் பெரும்பான்மையாக உள்ள பிரதேசத் தில் தமது நலன்கள் முன்னுரிமை பெறுவதற்கு ஏற்ற பிரிவி னைக்கான சாதகத்தைப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக் கும். மொழிசார்ந்து கட்டமைக்கப்பட்டிருக்கும் பெரிதான பேரடையாளத்தைப் பிளவுபடுத்துவது தவிர்க்க முடியாது எனக் கருதினால் இத்தகைய சாதியடையாளம் அதற்கான போராட்டத்தை முன்னெடுப்பது தவிர்க்கவியலாததாகும்.

இந்தச் சந்தர்ப்பத்தில் - தமிழடையாளம் ஒன்று அரசியல்ரீதி யாகக் கட்டமைக்கப்பட வேண்டிய தருணத்தில் டெல்லி மத்திய அரசாங்கத்தை வலிமைப்படுத்தும் தவறான அதிர்ச்சி தரத்தக்க சிந்தனையை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராம தாஸ் (தமிழகத்தை இரண்டாகப் பிரிக்கவேண்டும்) முன் வைக்கின்றார் எனக் குறைபட்டுக் கொள்கிறார் தமிழவன் (மேலே குறித்த ஜனவரி தீராநதி சஞ்சிகையிலான கட்டுரை) நீண்டகாலமாக மருத்துவர் ராமதாஸ் இந்தக் கோரிக்கையை முன்வைத்து வருகிறார். இருப்பினும் இதனை வென்றெடுப் பதற்கான செயற்பாட்டுக் களத்தில் அவர் இறங்கவில்லை. அதற்கு ஏற்ற அளவில் வடதமிழகத்தில் பெரும்பான்மையின ராக உள்ள மருத்துவர் ராமதாஸ் பிரதிநிதித்துவப்படுத்தும் சாதிப்பிரிவினர் புறக்கணிப்பை உணரும்பட்சத்தில் பிரி வினைக் கோரிக்கை செயற்பாட்டுக்கான இயக்கமாக வளர இடமுண்டு. வட தமிழகத்துக்கு உட்பட்டே தமிழகத்தின் தலைமையகமாய் சென்னை இருப்பதோடு பல்வேறு வாய்ப்புகள் இப்பிரதேசத்துக்கே அதிகம் உள்ளமையால் பிரிவினை நாட்டம் வலுப்பெறவில்லை. இவர்களுக்கு உள்ள முணுமுணுப்புக்கான அடிப்படை தமிழகத்தின் அரசியல் ஆதிக்கம் தென் தமிழகத்தின் பெரும்பான்மை யாகவுள்ள ஒரு சாதிப்பிரிவினரிடம் போயிருக்கிறது என் பதுதான். இவர்களைவிடவும் அந்தத் தென்தமிழக சாதிப் பிரிவினரினர் கூடுதல் பெரும்பான்மை பெற்றுள்ளமை யால், அதற்கான சட்டமன்ற உறுப்பினர்களே அதிகம் என்ப தால், அரசியல் ஆதிக்கப் பிரச்சனை வந்து தொலைக்கிறது.

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்பது இந்திய அளவுக்கு மட்டுமன்றித் தமிழக அளவிலும் சொல்லப்படு கிற ஒன்றாகவே உள்ளது. அரசியல் ஆதிக்கப்போட்டி காரண மாக வடதமிழகம் பிரிவினையை விரும்புகிறது என்றால், பிரதேசப் புறக்கணிப்பை முன்வைத்து தென்தமிழகத்தில் பிரிவினை நாட்டம் எழுவதுண்டு. எல்லாவற்றுக்கும் சென்னைக்கா வரவேண்டும், தென்தமிழகத்தில் அதிகாரப் பகிர்வோடு கூடிய அதிகாரமையம் வேண்டாமா என்ற கோரிக்கை அவ்வப்போது தென்தமிழகத்திலும் எழுவ துண்டு. குறிப்பாக உச்சநீதிமன்றம் தொடர்பாக இத்தகைய கோரிக்கை வலுத்தபோது சிலவருடங்களின் முன்னர் மதுரையில் பல அதிகாரங் களுடன் உச்சநீதிமன்றப் பிரிவு உரு வாக்கப்பட்டதை அறிவோம். இவ் வகையில் மேற்கொள்ளப்படும் அர வணைப்பு என்பதோடு தமிழகம் பூராவுமான அரசியல் ஆதிக்க வாய்ப் பும் காரணமாக தென்தமிழகப் பிரிவினை அங்கே செயற்பாட்டுக் கான வளர்ச்சி பெறாது உள்ளது. இன்னொரு வலுவான காரணியும் தமிழகத்தில் பிரிவினைக்கோரிக்கை வெகுசனமயப்படுவதற்கு தடையை  ஏற்படுத்துவதாக அமைந் துள்ளது. இதனை அ.மார்க்ஸ் எடுத்துக்காட்டியுள்ளார். அதே  ஜனவரி தீராநதி இதழில் அவர் எழுதிவரும் தொடரான    பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன் என்பது, தெலுங்கானா கோரிக்கையும் திணைநிலை உருவாக்கங்களும் என்ற தலைப்போடு வெளி வந்தது. தமிழகப்  பிரிவினை சாதியடையாளத்தோடு முன் வைக்கப்படுவதனைக் கூறி ஒன்றுபட்ட தமிழகத்துக்கான வாய்ப்புக் குறித்து அவர் தெரிவிக்கும் கருத்தை காண்பது அவசியமானதாகும்.

சந்தடிசாக்கில் தமிழ்நாட்டையும் வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை இங்கு சிலர் எழுப்பினர். இந்தக் கோரிக்கையை எழுப்பியவர் கள் பெரும்பாலும் சாதிரீதியான பின்புலம் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டைப் பிரிப்பதற்கு வரலாற்று ரீதியாகவோ, பொருளியல் ரீதியாகவோ ஏதும் நியாயமில்லை. தமிழ்நாடும் கூட இன்றிருக்கும் வடிவத்தில் இணைக்கப்பட்டது சமீபத்தில்தான் என்றபோதிலும் வடக்கே வேங்கடம் முதல் தெற்கே குமரிமுனை வரை தமிழ்கூறும் நல்லுலகம் என்கிற அடையாளம் கட்டமைக்கப் பட்டது சமீபத்தில் அல்ல. அதற்கு ஒரு 2000 ஆண்டு காலப் பாரம்பரியமுண்டு. தவிரவம் இத்தகைய ஒரு பேரடையா ளத்தைக் கற்பித்துக் கொண்டவர்களாயினும் புவியியல் அமைப்பு, பண்பாடு, உணவு, உற்பத்திமுறை என எல்லா வற்றிலும் வேறுபட்ட ஐந்துதிணை நிலைகளை உள்ளடக் கிய பாரம்பரியம் நம்முடையது. இந்த உள்ளடக்கும் பாரம் பரியத்தை (மிஸீநீறீவீஸ்மீ ஜிக்ஷீணீபீவீவீஷீஸீ) காப்பாற்றுவோம் என்பது அ.மார்க்ஸ் கருத்து.  இந்தளவுக்கு இல்லையெனினும் தெலுங்குமொழி சார்ந்து ஆந்திரா முழுமையையும் ஒன்றிணைக்கும் உள்ளடக்கும் பாரம்பரியம் அவர்களுக்கும் உரியதுதான். இருபகுதியின ரது தெலுங்கு மொழிப்பிரயோகம் - உச்சரிப்பு என்பவற்றில் பாரிய  வேறுபாடு இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தி லும் நான்கு திசைகளது தமிழ் உச்சரிப்புகள் - பிரயோகங்களி டையே வேறுபாடு நிலவத்தான் செய்கிறது. அதைவிட ஆந்திரா ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது, தெலுங்கானா மன்னராட்சிக்கு உட்பட்டு நீண்ட காலம் இருந்தது எனும் ஆழமான வேறுபாடு உள்ளது. தமிழகத்திலும் நாயக்கர், மராட்டியர் ஆட்சியென வேறுபாடுகள் இருந்தபோதிலும் வெள்ளையராட்சிக்குள் கணிசமான காலம் ஒன்றுபடுத்தப்பட்டிருந்தது தமிழகம். இங்கும் பிரெஞ்சு ஆட் சிக்கு உட்பட்டிருந்த பாண்டிச்சேரி தனி யூனியனாக இயங்க முடிகிறது. அதைவிட, ஈழத்தமிழ் பலவகை களில் தமிழகத்தோடு இரத்த உறவை யுடையதாயினும் வேறு நாட்டுக்குரி யதாய் மிக அருகிலேயே இருக்க முடிகிறது.

இவ்வாறு பல்வேறு காரணங்களால் தெலுங்கானா பிரிவதற் கான வாய்ப்புகளை அதிகமாகவே கொண்டிருப்பதைக் காணமுடியும். பிராந்திய புறக்கணிப்பு, ஒடுக்குமுறை ஆகி யன முற்றாக தவிர்க்கப்படும் வாய்ப்பை வெளிப்படுத்தி இணைப்பை நீடிக்க முடியுமேயன்றி அதிகாரப் பிரயோகங் களால் தமது சுயநிர்ணயத்துக்காக போராடும் தெலுங்கா னாவை முற்றாக ஒடுக்கிவிட முடியாது. இது ஒரே மொழி பேசும், நிலத்தொடர்பு இணைப்புடைய பிராந்தியம் (திணை) ஒன்று கோருகின்ற சுயநிர்ணயக் கோரிக்கை. இங்கு தேசியம் புதிய வடிவில் வீரியம் கொள்கிறதேயல்லாமல், தேசியமே வலுவிழக்கிறது என்பதில்லை.

இங்கு எமது அக்கறைக்குரிய விடயம் தெலுங்கானா தேசி யத்தை இயக்குவதில் சாதித் தேசியத்துக்கு ஏதும் இடமுள் ளதா என்பதுதான். இது குறித்து அ.மார்க்ஸிடம் தகவல் ஏது மில்லை; அவர் சாதித் தேசியத்துக்கான வாய்ப்புக் குறித்த தேடலில் இறங்க விருப்பமற்று இருப்பதால் காண முடியாமலும் இருக்கலாம். ஆயினும் அதற்கான வாய்ப்பு - சாதி சார்ந்து தேசிய உணர்வு வலுப்பெற ஏற்ற நிதர்சனம் குறித்த அருட்டுணர்வு அவரிடம் உண்டு, சாதி மற்றும் பழங் குடி அடிப்படையிலான அடையாளங்களும் இன்று தம்மை உறுதி செய்யத் தொடங்கியுள்ளன. இந்த வேட்கைகளை இன்று இனம், மொழி ஆகிய மேலிருந்து கட்டப்படும் பேரடையாளங்களால் நசுக்கிவிட இயலவில்லை என அ.மார்க்ஸ் கூறுவதில் இதனைக் கண்டுகொள்ள முடியும். பின்நவீனத்துவப் பேரடையாளக் கதையாடலில் மெனக் கெடுவதால் மார்க்ஸிய அடிப்படையிலான தேசியப் பிரச்சனையின் இன்னொருவடிவமாக இதனை அவரால் காண முடியாதுள்ளது.

வட தமிழகம் - தென் தமிழகம் எனும் உணர்வுகளில் இரு பகுதிகளிலுமுள்ள ஒவ்வொரு அறுதிப் பெரும்பான்மையாக வுள்ள ஆதிக்க வாய்ப்புள்ள சாதிகளுக்கான தேசிய நலன் போல, தெலுங்கானாவின் தனிச்சாதித் தலைமை சாத்திய மில்லாமல் இருக்கக்கூடும். ஆந்திராவுக்கான ஆதிக்கச் சாதி களான ரெட்டி, நாயுடு ஆகிய சாதிகளது தெலுங்கானாவி லான செறிவு எத்தகையது? அங்கு மிகமிகச் சிறுபான்மை யாக இருந்தபடி இவர்களது பொருளாதார - அதிகார உத்தி யோக அபகரிப்பைக் கொண்டிருக்கிறார்களா? இவற்றுக்கு எதிரான ஏனைய சாதிகளது அணிசேர்க்கை தெலுங்கானா வில் ஏற்பட்டுள்ளதா? இவை குறித்த தகவல்கள் இல்லை. இவை எல்லாம்விட ரெட்டி, நாயுடுகளின் ஜாதிக் கொழுப் பும் இதனை பசைபோல் பற்றியுள்ளதை எத்தனை காலம் தான் மக்கள் பார்க்காதது போலவே நடிப்பார்கள் என்ற அ.முத்துக்கிருஷ்ணன் கேள்வியில் தொக்கிநிற்கும் சமூக வியல் யதார்த்தம் இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை (அ.முத்துக்கிருஷ்ணன். தெலுங்;கானா - நிராகரிப்பின் துர்வாசனை. உயிர்மை, ஜனவரி.2010).

இங்கு எமது கவனத்துக்குரிய அம்சம் புறக்கணிப்புக்குள்ளா கும் சாதி அல்லது சாதிகள் தேசிய நலனுக்குட்பட்ட வடிவங்கொள்ள இடமுண்டு என்பதுதான். ஆதிக்கம் செய்யும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சாதிகள் பிர யோகிக்கும் மேலாண்மைக்கு எதிராக புறக்கணிக்கப்படும் சாதிகளில் வலுவோடுள்ள சாதி ஏனையவற்றை அணி திரட்டித் தேசிய வடிவமுள்ள கோரிக்கைகளை முன் வைப்பது ஏற்கனவே வரலாற்று அரங்கில் நிதர்சனமாகத் தொடங்கிவிட்டது; அதற்கு வடிவங்கொடுக்கும் சாதி நிலைப்பட்ட கட்சி உருவாக்கமும் இனங்காணப்பட்டுள் ளது. முதலாளி வர்க்கம் தேசிய உருவாக்கத்தில் ஏனைய வர்க்கங்களை அணிதிரட்டித் தலைமை தாங்குவதைப் போலவே பிராந்திய (திணை) பிரிவினைக் கோரிக்கையில் சாத்தியமுள்ள ஒரு சாதி ஏனைய சாதியினரை ஐக்கியப் படுத்தி சுயநிர்ணயக் கோரிக்கையை முன்வைத்க ஏற்றதான வாய்ப்பைக் கண்டுகொள்ள விரும்பாமல் மணலுக்குள் முகம் புதைத்துப் பயனில்லை. எமக்கான ஏற்றத்தாழ்வான சமூக உருவாக்கம் ஆதிக்கச் சாதி யாக கட்டமைத்துக்கொண்ட இனக்குழு, வெறும் ஒன்றிரண் டுடன் கூட்டமைத்து தமது திணையின் மேலாண்மையில் ஏனைய திணைகளுக்குட்பட்ட இனக்குழுக்களை சாதி களாக்கிக்கொண்டு ஒடுக்குவதன் வாயிலாக நிறைவேறிய ஒன்றாகும். இப்போது புறக்கணிக்கப்படும் பிராந்தியம் (திணை) மேலாதிக்கம் செலுத்தும் சாதிய அதிகாரங்களுக்கு எதிராக சுயாட்சி கேட்பது தவிர்க்கவியலாத ஒரு அவசியம்.

வர்க்கப்பிளவுபட்ட ஐரோப்பியச் சிந்தனைமுறையில் இயங் கியமையால் கோட்பாட்டு உருவாக்கம் செய்து இதற்குரிய நடைமுறைப்பிரயோகம் இதுவரை மேற்கொள்ளப்பட வில்லை; இப்போது தன்னெழுச்சியாக உருவாகியிருக்கும் இப்பிரச்சனையைப் புரிந்துகொள்ளவாயினும், சாதிமுறை யென்பது தனிவகைப்பட்ட சமூக உருவாக்கம் என்ற உண்மையின்பால் கவனஞ் செலுத்தியாக வேண்டும். திணை மேலாண்மையிலான சமூக ஏற்றத்தாழ்வையுடைய சாதியச் சமூக உருவாக்கம் குறித்த ஆய்வுகள் வெளிப்பட்டுள்ளன; அதன் தனித்தன்மைமிக்க பண்பு வேறுபாடுகளின் பரிமா ணங்கள் சரியாக இனங்காணப்படவில்லை. இத்தகைய சமூக முறைக்கான சமூக மாற்றப் புரட்சிகளுக்கான வடிவ வேறு பாடு குறித்துப் பேசப்பட்டுள்ளது. அந்தவகையில் விரிவாக இங்கு அவைகுறித்து விவாதிப்பதைத் தவிர்த்து சாதியிருப்புக் கொள்ளும் தேசியவடிவம் குறித்து அலசுவது அவசியம்.

பாகிஸ்தான் உருவாக்கம் யதார்த்தம் ஆக்கிய பிரதான அம்சம், தேசம்  மொழியை மையமாக்கியது என்பதைக் கடந்து மதம் தேசியத்துக்கான அடிப்படையாக முடிந்தது என்பதாகும். இவ்வகையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரண மாக புறக்கணிப்பையும் ஒடுக்குமுறைமையும் உணரும் எவ் வகையிலுமான பிரிவினர் தேசிய வடிவம் கொள்ள முடியும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சாதிகள் தேசியப் பண்புமிக்கவை என அம்பேத்கர் வலியுறுத்தியதை இங்கு பொருத்திப் பார்ப்பது அவசியம். அம்பேத்கரது இக்கருத் தினை எடுத்துக்காட்டுகிறவர்களுங்கூட மேலே நாம் பார்த்து வந்தவாறான சாதித்தேசியம் என்பதோடு தொடர்புறுத்திப் பார்ப்பதில்லை. ஒவ்வொரு விடயத்தையும் அதது சார்ந்த தாகக் குறுக்கிப் பார்த்துப் பகுதிபகுதியாகவே செயற்பட்டுத் தொலைப்பதே நமது பல பின்னடைவுகளுக்கும் காரணங் களாகின்றன. பகுதி விடயத்துக்கான இயங்காற்றலையும் முழுமை சார்ந்த தொடர்பாடல்கள் - உறவுப் பரிமாற்றங்கள் - செல்நெறியின் தாக்குறவில் ஏற்படத்தக்க புதிய போக்குகள் என்பன கவனங் கொள்ளப்படுவதில்லை. இவை ஒன்றோ டொன்றான சார்புநிலைகளில் நமக்குரியதான சமூக விடயங்களைக் கவனத்திலெடுத்து சாதிச் சமூகத்துக்குரிய தான கோட்பாட்டுருவாக்கம் செய்யப்படாமையினால் நமது புரட்சியின் கோரிக்கையை அறியாதுள்ளோம். சாதியப் பிரச்சனைகள் குறித்த செயற்பாடுகளில் பற்றார்வத்துடன் மார்க்சிய அமைப்புக்கள் இன்று ஈடுபடுடத் தொடங்கியுள் ளமையினால் எதிர்காலத்தில் சரியான கோட்பாட்டுரு வாக்கமும் நடைமுறைப் பிரயோகமும் சாத்தியமாகும்.

இங்கேதான் மார்க்சிய நிலைப்பட்ட வர்க்கப் பார்வை அவசியமானதாகிறது. சாதிச்சமூக இருப்பை மார்க்சியர்கள் கவனத்திற்கொள்ளாத நிலையில் சாதியக் கட்சிகள் இப்பிரச்சனைகளைக் கையில் எடுத்துக் கொண்டன. அவர்களது சாதிய நோக்கு அடிப்படையில் முன்னேற முடி யாத இடர்ப்பாடுகளை இன்று சந்தித்துள்ளனர். பிரதான எதிரியை இனங்கண்டு, அதற்கு எதிராக சாதிபேதங்களைக் கடந்த பரந்துபட்ட ஐக்கிய முன்னணிக்கான சாத்தியம்பற்றி கோட்பாட்டுத் தெளிவின்மையினால் அவ்வப்போதைக் கான சந்தர்ப்பவாதக் கூட்டுக்களையே அவர்களால் ஏற் படுத்த முடிந்தது;அதுவே  அவர்களது அடிப்படைத்தளமான சமூக சக்திகளை நட்டாற்றில் தத்தளிக்கவிடுவதற்கும் வழி கோலியது. குறிப்பாக அத்தகைய கட்சிகளை நம்பி அரசியல் அநாதைகளான தலித் மக்கள் இன்று மீண்டும் மார்க்சியத்தின் பால் கவனஞ் செலுத்த முன்வந்துள்ளனர்.

சாதி வாழ்முறைகளுக்குள் இருக்கும் வர்க்க அமைவின் பிரச் சனையை சாதிய நோக்கிலான ஒரு அரசியல் அக்கறையாளர் எவ்வாறு முகங்கொண்டு அதிர்வுக்கு உள்ளாகிறார் என்பதற்கு நேர்காணல் ஒன்றில் சிவகாமி வழங்கிய பதில் சிறந்த எடுத்துக்காட்டாகும். பல்வேறு சமூகத்தினர் எனும் போது சாதியடையாளத்தை அழித்து வருவது அல்லது அதே அடையாளத்தோடு வருவது என்பவை இருக்கும் இல் லையா? ஸ்டாலின் ராஜாங்கம் முன்வைத்த கேள்வி இது. இதற் கான சிவகாமியின் பதில் இவ்வாறு அமைந்தது; அண்மையில் திருச் செந்தூர் போயிருந்தபோது அக்கிர ஹாரத்தில் இருப்பவர்கள் திரண்டு வரவேற்றார்கள். நாங்கள் சாதி வித்தியாசம் பார்ப்பதில்லை பிராம ணாளக் காப்பாத்துங்கோ என்றார் கள். இது எனக்குப் புது அனுபவ மாகவும் நகைச்சுவையாகவும் இருந்தது. அவர்களை எது துரத்துகி றது என்று பார்த்தால் கோயிலை நம்பித்தான் அவர்கள் வாழ்கி றார்கள். ஏழைகளாய் நிறுத்தப்பட்ட வர்களை மீட்பதற்குக் குறைந்தபட்சத் திட்டத்தை நாம் பேசுகிறோம். (எழுத்தாளர்களால் அரசியலை மாற்ற முடியுமா? காலச்சுவடு 112.ஏப்ரல் 2009.ப.30) முற்றுமுழுதான ஏற்றத்தாழ்வுகளைத் தகர்க்கும் மார்க்கத்துக் கான நீண்டகால மூலோபாயங்களையும் குறுகியகாலத் தந்திரோபாயங்களையும் வகுத்துச் செயற்படும் மார்க்சியர் கள் இத்தகைய சமூக யதார்த்தங்களை உள்வாங்கி இயங்குப வர்கள் என்கிற வகையில் அவர்களை இத்தகைய நிலை அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதில்லை. தவிர, தலித் மக்களது விடு தலை சாத்தியப்படாதபோது பிராமணருக்கான விடுதலையும் பெறப்படவியலாதது எனும் தெளிவும் உள்ளது.

சாதிகளின் தேசியப்பண்பு நிதர்சனத்தை ஏற்பதால் ஒன்றோ டொன்றான மோதல்களை ஏற்க அவசியமில்லை. பொது எதிரிக்கு எதிராக பல்வேறு சக்திகளை ஐக்கியப்படுத்துவதை சாத்தியமாக்குவதற்கு அமைவான கோட்பாட்டு உருவாக்க லுக்காகவே இந்த ஆய்வில் மார்க்சியர்கள் இறங்க நிர்ப்பந் திக்கப்படுகின்றனர். ஒடுக்குமுறையின் தன்மை, சுயாட்சி கோரும் சக்தியின் சுயநிர்ணயத்துக்கான அவசியம், மக்கள் விடுதலைச் செல்நெறியுடனான தாக்குறவு என்பவற்றைக் கொண்டு பிரிவினைக்கான ஆதரவையோ, ஈடுபாட் டையோ, எதிர்ப்பையோ மார்க்சிய அணி தீர்மானிக்கும்.

இது தொடர்பில் மேற்குறிப்பிட்ட கட்டுரையில் அ.மார்க்ஸ் குறிப்பிட்டிருக்கும் அம்சம் கவனிப்புக்குரியது: தனி மாநிலக் கோரிக்கைகளை நாம் பொதுவாக ஆதரிப்பதா இல்லையா? புகழ்பெற்ற லத்தீன் அமெரிக்க மார்க்சிய அறிஞர் ஜேம்ஸ் பெட்ராஸ் சமீபத்தில் கூறியுள்ளதுபோல இம்மாதிரிப் பிரிவினைக் கோரிக்கைகளை, அவை பிரி வினைக் கோரிக்கைகள் என்பதற்காகவே ஆதரித்துவிடவோ அல்லது எதிர்த்துவிடவோ இயலாது. அந்தக் கோரிக்கை களை யார் வைக்கின்றனர், அப்பகுதி மக்களின் பூரண ஒப்பு தல் அதற்குள்ளதா, இந்தக் கோரிக்கைகளுக்குப் பின்புலமாக ஏதும் சக்திகள் செயல்படுகின்றனவா, அவற்றின் நோக்கம் என்ன, பிரிவினை தவிர்த்த வேறு என்ன சாத்தியங்கள் உள் ளன என்கிற கேள்விகளுக்கான பதிலை ஒட்டியே இப் போராட்டத்தை நாம் ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ இயலும்.

அந்தவகையில் பிரிவினைக்கான கோரிக்கைகள் வலுப்பதாலேயே தேசியப்பேரடையாளம் தகர்ந்துவிடும் எனக் கருதவேண்டி யதில்லை. வெறும் தேசம், இனம், மொழி, ஒருமைப்பாடு முதலான பேரடையாள முழக்கங்களின் மூலம், உள்வேறுபாடுகளைப் புறக்கணித்து ஒரு ஒற்றுமையைக் கட்டி விடமுடியும் என்கிற மமதையை நமது தேசியவாதிகள் விட்டுத் தொலைக்க வேண்டும்  என அ.மார்க்ஸ் வலியுறுத்தும்போது மேலே காட்டப்பட்டவாறு அவசியமற்ற பிரிவினையை மக்கள் விடுதலை நலன் அடிப்படையில் மறுக்கவும் உள்ள நியாயங்களை ஏற்கிறார் என்பதே பிரதானமாகும். அனைத்துப் பிரிவினரது சுய நிர்ணய உரிமையின் அங்கீகரிப்பே முக்கியம். தேசம் என்ற வடிவம் சாதிஅலகு வரைக்கும் நெகிழ்வுள்ளதாயினும், அனைத்தும் பிரிய அவசியமற்றவை; தேசியம் என்பது வெறும் பேரடையாளம் அல்லது குறித்த சூழல் ஒன்றில் வாழும் மக்கள் தமது சுய நிர்ணயத்தை வரையறுப்பதற்கான அரசியல் வடிவம்; அதற்கு பங்கம் ஏற்படுவதனை உணரும் பிரிவினர் தமக்கான சுயாட்சிக்காகப் போராடவும், ஏற்ற வடி வங்களில் சுயநிர்ணயத்தை வரையறுத்து வென்றெடுக்கவும் இயலுமானவர்களாய் இருப்பர். இவ்வாறு காணும்போது பிராந்தியம் (திணை) சார்ந்த தேசியத்திலிருந்து சாதித் தேசி யத்துக்கு அடிப்படையான சில வேறுபாடுகள் உள்ளமை யையும் கவனத்தில் கொள்வது அவசியம். அந்த வகையில் சாதித் தேசியத்தின் சுயநிர்ணயத்துக்கான வரையறைகள் குறித்து எதிர்காலச் சந்திப்பொன்றில் அலசுவோம்.

- ந.ரவீந்திரன்