குளிரிரவுகளில் ஊர் ஏழுமணிக்கே அடங்கிவிடுகிறது. சுண்ணாம்பு பூசப்பட்ட காரைச்சுவர்களுக்கு வெளியே கசியும் மின்விளக்கொளி மௌன ரகசியமாய் இருளின் வெளியில் ததும்புகிறது.மேகாற்று வீசும் கூதற்காலத்தில் ஊரடிப் புளியமரங்களின் உச்சிக்கிளைகள் பேயாட்டம் போடுகையில் ஊரொட்டி கிழக்கே நீளும் இட்டேரித் தடத்தில் நடப்பவன் பொருத்தும் சிகரெட்டின் நுனி செங்கொழுந்தாய் தடத்தில் மின்னுகிறது. பொடி ஓடைக் கற்கள் நிறைந்த நீர் அரித்த இட்டேரி.எடுத்து வைக்கும் அடிக்கு பொடிக்கற்கள் நொறுங்கும் சப்தம் நடைக்கு வழித்துணை.மாதாசிங்கன் கோவிலடியில் அரை பர்லாங் தூரத்திற்கு இட்டேரி மணலாக விரிந்துகிடக்கிறது. பகலின் சூடு இறங்கிவிட்ட மணலில் அமர்ந்தபோது வெகு குளுமையாக இருந்தது.

தோட்டத்தில் மச்சான்கள் காத்திருக்கக்கூடும். உறைந்து வெகுகாலமாகிவிட்ட மச்சான்கள் மண்ணில் தமது கூட்டை கட்டிக்கொண்டார்கள். எல்லா விசாரிப்புகளை யும் பரிதாபப் பேச்சுகளையும் ஒலி எழும்பாத புன்சிரிப்பு கொண்டு விலக்குகிறார்கள்.அம்மணக்குண்டியாய் திரிந்த காலத்தில் தூக்கிவைத்துக் கொஞ்சிய பிரியம் இவன் நகரங்களுக்கிடையே ஓடத்துவங்கிவிட்ட பின்னும் சந்திக்கும் கணங்களில் மிச்சமிருக்கிறது.

வேலியடிகள் சரசரக்கின்றன.மாதாசிங்கன் கோவில் வேம்பிலிருந்து குருட்டாந்தை கத்துகிறது. கொறங்காடு களுக்குள்ளிருந்து மாடுகள் சாயங்காலம் கழித்துப்போன சாணத்தின் மெல்லிய வாசனையை நுகர்ந்தவன் சிகரெட்டை அணைத்துவிட்டு எழுந்து நடந்தான். வேலியோரம் கொத்துக்கொத்தாய் மின்மினிகள் மிதந்தன. பூமியில் பால்வீதியை சிருஷ்டிக்கும் மின்மினி களின் மினுக்கொளியில் கண்சிமிட்டும் கிரகங்களின் ஒளிப்பரப்பில் ப்பர்ரென்று வீசும் மேகாற்று கொறங்காடு களை மாயப்பிரதேசமாய் மாற்றிவிடுகிறது.மாசு படராத நிலம் விடும் மூச்சை ஆழ்ந்து சுவாசிக்க ஊருக்கு வரும் நாட்களில் தன் நுண்ணுணர்வுகளுக்குத் திரும்பிடும் உடலெங்கும் ரத்தம் துள்ளிசையின் தாளலயத்தில் ஓடு வதை உணரமுடிந்தது.இரவில் உறங்காது குலைக்கும் தூரத்துப்பட்டிகளின் நாய்கள் தமது குரலில் இரவின் ரகசியத்தை மீட்டுகின்றன.

கிழக்கே நீண்ட இட்டேரி வடக்கே திரும்பியது. இருளில் மரங்கள் தமது பறவைகளிடம்  கிசுகிசுத்துக் கொண்டிருந் தன. அனிச்சையாய் நடப்பவன் காலடியில் சரசர சப்தத் திற்கு உடல் விதிர்த்து இரண்டடி பின்னகர்ந்தான். ஆறடி நீளத்தில் வீம்சாய் அரவம் மேற்கே வேலிக்குள் போய் மறைந்தது. படபடப்பைக் குறைக்க சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டபோது எப்போதும் தலைவலியை கொடுக்கும் இட்டேரி வேலியில் படர்ந்திருக்கும் காட்டு மல்லியின் வீச்சம் தற்காலிகமாய் புலன்களிலிருந்து விடுபட்டிருந்தது.

சாளையை நெருங்கும்போது படுத்துக்கிடந்த வேட்டை எழுந்து உலைத்தது. எட்டிப்பார்த்த சின்ன மச்சான் இவனை வரவேற்றுக்கொண்டே அதை அதட்டினான். அந்த அதட்டலிலிருந்து இவனுக்கும் அதற்குமான பிரி யத்தின் கண்ணி சிருஷ்டி கொண்டது. வாலைக் குழைத்து காலடியில் வந்து உராய்ந்ததைத் தடவிக்கொடுத்தான். வாசலில் கிடந்த தென்னைமட்டைகள் பச்சையாய் மணத்தன. வடபுறத்து கட்டித்தாரையில் காளைகளும் மாடுகளும் கட்டப்பட்டிருந்தன. அடுப்படியிலிருந்து எட்டிப்பார்த்த பெரிய மச்சான் புன்னகைக்கையில் வெந்த கோழியின் சுவைமணம் சாளையெங்கும் நிரம்பி வாசலில் படர்ந்தது. அனிச்சையாய் சுரந்த எச்சிலை விழுங்கிக்கொண்டு வாசற்திண்ணைக்கு வந்தவன் வயிற்றை எக்கி சொருகியிருந்த பாட்டில்களை எடுத்து திண்ணையில் வைத்தான்.மச்சான்கள் அதுவரை அவர் கள் அறிந்திராத பாட்டிலின் வடிவத்தை ஆச்சரியமாய் பார்த்தார்கள். திரவத்திற்குள் மீன்குஞ்சின் மென்செதில் களாய் அசைந்துகொண்டிருக்கின்றன ஆகாயத்திற்கு தூக்கிப்போகிற சிறகுகள்.

பெரிய மச்சானின் முகத்தில் முதுமையின் நிழல் படிந் திருக்கிறது.சொட்டை மண்டையும் ஒடிசல் தேகமும் தாவுவது போலிருக்கும் நடையும் அவனை கோமாளி யாகக் காட்டுகின்றன. இளமை இன்னும் மிச்சமிருக்கும் சின்ன மச்சானின் உடல் கருத்த பலகையை போல் விரிந்திருக்கிறது.பெரிய மச்சானை தோற்கடித்துவிட்ட ராசிக்கட்டங்கள் சின்னமச்சானை வைத்து விளையாடிக் கொண்டிருக்கின்றன.

விழிக்கும்வரை நீளும் பெண்வாசனை கலக்காத உறக்கங் களற்றவர்கள் தோட்டத்தின் மேகோட்டில் புதைக்கப்பட் டிருக்கும் அத்தை மாமன் கல்லறைகளில் நாள் தவறாமல் விளக்கேற்றுகிறார்கள். மகன்களின் தீராத் தனிமையை வெறிக்கும் இரு ஆன்மாக்களின் நான்கு கண்கள் வெறு மையின் முடிவின்மையில் உறைந்து விட்டிருக்கக்கூடும்.

பெரிய மச்சான் கறிவறுத்த வாணாச்சட்டி, சோற்றுக் குண்டா, வட்டில்களை கொண்டுவந்து திண்ணையில் வைக்க சின்ன மச்சான் சாளைக்குள்ளிருந்து சில்வர் டம்ளர்களை எடுத்துக்கொண்டுவந்தான். இவன் பாட்டிலின் மூடியை திருகி மூன்று டம்ளர்களிலும் ஊற்றி நீரைக் கலந்தவன் வட்டிலில் கறித்துண்டுகளை வைத்துக்கொண்டிருந்த பெரிய மச்சானிடம் ஒன்றை எடுத்து நீட்டினான். புன்னகையுடன் வாங்கிக்கொண்ட வன் ஒரே மிடறாக குடித்துவிட்டு கடைவாயை துடைத்துக்கொண்டான். அவனின் அவசரத்தை சின்ன மச்சானிடம் சொல்லியவாறே ஒரு மிடறை விழுங்கிய வன் கறித்துண்டை எடுத்துச்சப்பினான். பெரிய மச்சானின் கைப்பக்குவத்தில் கோழிக்கறியின் சுவை இதுவரை அவன் உண்ணாததாக இருந்தது.

கறி நன்றாக இருப்பதாக பெரிய மச்சானிடம் சைகை காட்டினான். கடைவாயோரப் புன்னகை. அவ்வளவு தான். அந்தக் கணத்தில் இவனுக்கு, பொக்கும் சலத்தின் முதல் பீறிடலைப்போல பெரிய மச்சானின் மீது பிரியம் சுரந்தது. பேசாத வாயோடும் கேளாத காதுகளோடும் என்னவிதமாக பெயர்களை அடையாளப்படுத்தி வைத்தி ருக்கிறான்?அவன் சமைத்ததிற்கு கோழிக்கறி என்று பெயரிருப்பது அவனுக்குத் தெரியுமா? வழமையான காரியங்களை எவ்விதமான நினைவுகளைக்கொண்டு அடையாளப்படுத்துகிறான்? அவனுக்குத் தன் பெயரும், தன் தம்பி பெயரும் இவன் பெயரும் தெரியாது. தம்பி, மாப்பிள்ளை என்கிற உறவுகளை என்னவிதமான நூலிழைகளால் பிரித்து வைத்திருக்கிறான்? சட்டென்று நீர் கட்டிய கண்களை இருவரும் உணராதவாறு துடைத்துக்கொண்டான்.

மறுபடியும் பெரிய மச்சானுக்கு ஊற்றப்போனான். கையை நீட்டித் தடுத்தவன் இருவரையும் குடிக்கும்படி சைகை செய்துவிட்டு,கறித்துண்டுகளை எடுத்து இருவ ரின் வட்டிலிலும் வைத்தான். சின்ன மச்சானும் குடித்து முடித்துவிட்டான். ஆபிஸ் பார்ட்டிகளில் கனவானுக் குரிய தோரணையில் குடித்துப்பழகி அவர்களின் வேகத் தில் இவனால் குடிக்க முடியவில்லை. மறுபடியும் இரு வருக்கும் ஊற்றிக்கொடுத்தான். இவன் முதலாவது டம்ளரை குடித்து முடிக்கும்போது அவர்கள் இரண்டா வதையும் முடித்திருந்தார்கள்.பெரிய மச்சானின் கண்கள் போதையில் மெலிதாய் சொருகுவதாக தோன்றியது. இவன் சரக்கு எப்படி என்பதுபோல் பெரிய மச்சானிடம் செய்த சைகை அவனுக்குப் புரியவில்லை.சின்ன மச்சான் வேறு சைகையில் அண்ணனிடம் சொன்னான். பூ விரிவது போல் சிரித்த பெரிய மச்சான் இவன் முதுகில் லேசாக தட்டி விட்டு நன்றாகயிருகிறது என்பதுபோல் சைகை செய்தான்.

சிகரெட்டை பற்றவைத்துக்கொண்டவன் பாக்கெட்டை அவர்களிடம் நீட்டினான். மறுத்த அவர்கள் ஆளுக்கொரு பத்தாம் நம்பர் பீடியை பற்றவைத்துக் கொண்டார்கள். பெரிய மச்சான் சூடு ஆறிவிட்டிருந்த ஒரு கறித்துண்டை எடுத்து வாசலோரத்தில் வைக்க வேட்டை அதை வேக மாகத் தின்றது.பெரிய மச்சான் மெதுவாக நாயை வருடிக்கொடுத்துவிட்டு தென்னைமட்டைகளை இழுத்துப்போட்டு தடுக்கு பின்ன ஆரம்பித்தான். அதற்கா கவே காத்திருந்ததுபோல் சின்ன மச்சான் வசதியாக திண்ணையில் சாய்ந்துகொண்டு பேச ஆரம்பித்தான்.

"அப்றம் மாப்ள...பெங்களூருல லைப் எல்லாம் எப்படிப் போகுது? இத்தன பணத்தைச் சம்பாதிச்சு மாப்ளக எல்லாம் எங்க கொண்டுபோய் மூட்டை கட்டி வைக்கப்போறீங்களோ?"

"அட ஏனுங்க மச்சா.. நீங்க வேறே..எல்லா அக்கரைக்கு இக்கரை பச்சதான்.. நல்லா மனசார செலவு பண்ணிக்க லாமுனு வைங்க..அப்றம்,புத்தி இருக்கறவன் கொஞ்சம் சேத்து வைப்பான். நம்மளதுதான் ஓட்டக்கை ஆச்சுங்களே மச்சா.."

"மாப்ளக எல்லா விவரமாத்தான் பேசறீங்க....வூட்ல கல்யாணங்கீது பாத்துகிட்டு இருக்காங்களா?"

"அது ஒரு பக்கம் போய்ட்டுத்தான் இருக்குதுங்க மச்சா..எல்லா அமையோனுமில்லீங்க.."

"அது வாஸ்தவமான பேச்சுத்தாங்க மாப்ள... நீங்களாவது எல்லாம் காலகாலத்துல பண்ணுங்க." சொன்ன மச்சா னின் மெலிதான புன்னகையின் அர்த்தம் இவனுக்கு விளங்கியது.பஞ்சு வரை வந்துவிட்ட சிகரெட் கையைச் சுட திண்ணையில் வைத்து அணைத்தெறிந்தான்.

"அப்ற மாப்ள..பெங்களூருல புள்ளக எல்லாம் அழகா இருக்குமா?" கேட்டவனின் ஆர்வத்தைப் பார்த்து இவனுக்குச் சிரிப்பாக வந்தது.

"அதுக்குத்தானுங்க மச்சான் சொல்றன்.. நீங்க ஒரு சனி ஞாயிறுல வாங்க.. வந்து உங்க கண்ணாலயே பாருங்க.. அங்க வந்தீங்கனா..இந்தியாவுல இருக்கற அத்தன ஊர்ப் புள்ளங்களையும் பாக்கலா..இங்க இருக்கற ஒடக்காய் களையே எத்தன நாளுதான் பாத்துக்கிட்டிருப்பீங்க?"

இவன் சொன்னதைக் கேட்டு சின்ன மச்சான் வாய்விட்டுச் சிரித்தான்."மாப்ளக எல்லா டவுனுப்பக்கம் போய் இங்க இருக்கறது எல்லா ஒடக்கா மாதிரி தெரியுது. சொல்றதைப் பாத்தா  நாளக்கி மாப்ள மாலையோடதா வந்து நிப்பீங்க போலருக்குது"

"அட ஏனுங்க மச்சா..  நம்மள மாதிரி தெல்லவேரிகள எல்லாம் மெரட்டி அடக்கி உக்கார வைக்க ஒடக்காய் மாதிரி இருக்கற புள்ளகளாலதா ஆகுங்க"

"ம்..ம்..மாப்ளக எல்லா வெவரமாத்தான் இருக்கறீங்க"

"அது கெடக்கட்டுங்க மச்சா.. நீங்க ஒரு ரெண்டு நாளு பெங்களூரு வாங்க. கிளைமேட்டு சும்மா குளுகுளுனு இருக்குது இப்ப.."

"எங்க மாப்ள,காலைல எந்திருச்சதுல இருந்து பொழுது வுழுகறவரைக்கு, அதத் தொட,இதத் தொட செரியாவே இருக்குது. அதுல இவனையும் வச்சிக்கிட்டு.. நானு இல்லீனாலும் ரெண்டு நாளக்கி எல்லாம் சமாளிச்சுப் போடுவானு வைங்க... இருந்தாலும் நமக்கு என்ன பண்ணிக்கிட்டிருக்கானோ ஏது பண்ணிக்கிட்டிருக்கானோன்னு மனசு தாங்காது. அதுனாலேயே எங்கப் போனாலும் பொழுதோட சாளைக்கு வந்திறது"

சின்ன மச்சான் இவனைத்தாண்டி வாசலில் தடுக்குப் பின்னிக் கொண்டிருந்த பெரிய மச்சானைக் கனிவாக பார்க்க இவனும் திரும்பினான். பாதி தடுக்குவரை பின்னிவிட்டிருந்த பெரிய மச்சானின் காலடியில் பச்சைச் சதுரங்கள் விளக்கொளியில் மின்னின. சட்டென்று தலை யுயர்த்திய பெரிய மச்சான் இவனைப் பார்த்துப் புன்ன கைத்து விட்டு எழுந்து கட்டித்தாரைக்குப் போனான். அவன் சோளத் தட்டை உதறி காளைகளுக்குப் போடுவது இங்கிருந்து தெரிந்தது.

"அவனுக்கு காளைகனா ரொம்பப் பிரியம் மாப்ள. சோடிக ரெண்டும் நா கிட்டப்போனா உஸ்சு உஸ்சுங்கு, ஆனா அவங்கிட்ட நாய்க்குட்டிக மாதிரி கெடக்கும். அட இந்தக் குக்கல பாருங்க மாப்ள, எம் பக்கத்துலகூட வராது.  அவன் சோறு போட்டத்தான் திங்கும். கருப்ப ராயன் அவனுக்கு வாயையும் காதையு புடுங்கிட்டு மத்த எல்லாத்தையுங் கொடுத்தட்டானு வைங்க.. நானும் அவனுக்கு எப்படியாவது ஒரு புள்ளய பாத்து..கூனோ குருடோ, கல்யாண பண்ணீரலாமுனுதா பாத்தன். ஆனா நடக்கற மாதிரி தெரீல.ஒரு கட்டத்தல என்னய கல்யா ணம் பண்ணிக்கச் சொல்லி ஆளப்போட்டு புடுங்க ஆரம் பிச்சிட்டான். அர மனசோடதான் செரீன்னேன். ஆனா நமக்கும் ஒண்ணு அமைய மாட்டங்கது"

"எல்லா டைமு வந்தா.. செட்டாயிருங்க மச்சா"

"பாப்போம் மாப்ள.. வம்சந் தழச்சிருனுமுன்னுதான் நானும் கருப்பராயன கும்புட்டுட்டு இருக்கறன்."

பெரிய மச்சான் வந்து மறுபடியும் தடுக்கு பின்ன உட்காருகையில் இவன் சின்ன மச்சானிடம் கேட் டான். "அப்றங் மச்சா.. ஊருக்குள்ள நிலவரமெல்லா எப்டி இருக்குது?"

"அட ஏன் மாப்ள..ஆரு சாவகாச மும் வேண்டாமுனுதான் இங்க காட்டுக்குள்ள வந்து உக்காந்தாச்சு... இருக்கறது அம்பது வூடு..அதுல ஒவ்வொருத்தனுக்கும் இன்னொருத் தன் மேல பொச்செரிச்சல், பொறாமை...

திருப்பூரு போய் நாலு காசு பாத்தவ னுக. ரோட்ல நம்மளக் கண்டா நின்னுகூட பேசறதில்ல. எவனா வது பொழைக்கறமாதிரி இருந்துனா இவனுகளுக்கு தூக்கம் வராது. ஊரு ஊரா இருந்ததெல்லாம் இருவது வருசத்துக்கு முன்னாடி மாப்ள.. அதுலயும் இந்தக் கெணத்துக்காட்டு கூள இருக்கறான் பாரு..."குட்டக் கலப்பக் காட்டக் கெடுக்கு, கூள ஊரக் கெடுப்பானு" உடம்பெல்லாம் வெச மாப்ள அவ னுக்கு. எனக்கு ஒரு சாதகம் செட்டாகற மாதிரி இருந் தது.இவன் புள்ள வூட்டுக்கே போய் அதையு இதையுஞ் சொல்லி அவிய மனசக் கலைச்சுப்போட்டான். பாத் துரலா மாப்ள. எங்க போயிரப்போறான். சின்ன மச்சான் இவனுக்குத் தெரிந்த தெரியாத எல்லா கெட்ட வார்த்தை களையும் எச்சில் சிதற சொல்லிக் கொண்டிருந்தான்.

சின்ன மச்சான் மறுபடியும் அவனாகவே ஒரு டம்ளரை ஊற்றிக்கொண்டு வேகமாக குடித்தவன் திடீரென்று ஒரு சினிமா பாட்டை முனகிக்கொண்டு ஒண்ணுக்கிருக்கப் போனான். நிமிர்ந்த பார்த்த பெரிய மச்சானிடம் இவன் பாட்டிலைக் காட்ட அவன் போதுமென்பது போல் சைகை செய்தான். ஒண்ணுக்கிருந்துவிட்டு வந்த சின்ன மச்சான் திடீரென்று துண்டை உருமாலையாக கட்டிக் கொண்டு வாசலில் ஆட ஆரம்பித்தான்.

அவன் தொங்கு தொங்கென்று குதிப்பதைப் பார்க்கை யில் இவனுக்கு சிரிப்பாக இருந்தது.தடுக்கின் மேல் குத்தவைத்துக்கொண்டிருந்த பெரிய மச்சானும் சிரித் தான். ஆடிச்சலித்த சின்ன மச்சான் கெஸ்கெஸ்சென்று மூச்சு வாங்கிக்கொண்டு வந்து உட்கார்ந்தான் முகத்தில் சின்னச் சின்னதாய் வியர்வைத்துளிகள்.

"என்னங் மச்சா..டான்சு எல்லா பலமா இருக்குது?"

"என்ன பண்றது மாப்ள.. நீ வாங்கீட்டு வந்த சரக்கப் போட்டதும் உடம்பெல்லா சும்மா கும்முனு ஆயிருச்சு.. பகலா இருந்திருந்தா மம்பட்டிய தூக்கிட்டுப் போய் ஒரு ஏக்கர களை வெட்டிருப்பன்..அதுக்கு வழியில்லாமத் தான் ஒரு ஆட்டம் போடவேண்டியதா போச்சு" சொல்லி விட்டு பெரிய மச்சானைப் பார்த்துச் சிரித்தான்.

"இப்ப என்னுங் மச்சா..தோட்டத்துல சோளம் போட்டுருக்குதா?"

"ஆமா மாப்ள.. பண்டம்பாடிக ஜாஸ்தி இருக்கறதால தட்டுக்கு பஞ்சம் வராம பாத்துக்க வேண்டியதாருக்குது. வடவரமா சின்ன வெங்காயம் ஒரு ஏக்கரு போட்டுருக் குது. அப்றம் அதுபோக தண்ணீ தென்ன மரத்துக்குத்தான் செரியா இருக்குது" மச்சான் சொல்லிக்கொண்டிருக்கும் போது குக்கல் விடாமல் உலைத்தது.திரும்பிப் பார்க்க தோட்டத்தின் கிழக்கு வேலியில் வெகு பிரகாசமாய் ஒளிர்ந்த டார்ச்லைட் வெளிச்சம் நேராக சாலையை  நோக்கி வந்தது.

"ஆருங்க மச்சான்..இன்னேரத்துக்கு பேட்டரி போட்டுட்டு வாரது? என்னப் பாத்துப்போட்டு எவனாவது பரப்பி வுட்றப்போறானுக..."

"அட இன்னேரத்துக்கு நம்ம ஊருக்குக்காரனுக ஆரு வரப் போறா மாப்ள. யாராவது வேட்டக்காரனுகளா இருக்கு". மூவரும் அசைந்தசைந்து வரும் டார்ச் லைட்டையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். நாய் உலைத்தவாறு கிழக்கே ஓடியது."உடெய்,உடெய்" என்று நாயை அதட்டியவாறு வாசலுக்கு வந்த உருவத்தைப் பார்த்து பெரிய மச்சான் பரிச்சயமாய் புன்னகைத்தான்.

"அட ராமசாமி..என்ன சனிக்கெழம நைட்டு பஸ்ஸேறி வந்து வேட்டைய ஆரம்பிச்சாச்சா?"

"என்ன சின்னக்கவுண்டரே.. நல்லாருக்கீங்களா? நல்ல சமயம் பாத்து வந்துட்டன் போலருக்குது."

"அதுக்கென்ன ராமசாமி.. நீயும் உக்காந்து ஒரு ரவுண்டு போடு, மாப்ள பெங்களூரூல இருந்து வாங்கீட்டு வந்திருக்காரு"

"அய்யயோ வேண்டாங்க கவுண்டரே.. இன்னு பத்துக் காடு சுத்தோனு. ஒரு மொசலுங்கூட மாட்ல.. கோழியாட்ட இருக்குதுங்க?" பரப்பி வைத்திருந்தவை களை பார்த்தவாறு ராமசாமி கேட்டான். எழுந்து வந்த பெரிய மச்சான் ஒரு தட்டத்தில் கொஞ்சம் சோறும், நிறையக் கறியும் அள்ளிவைத்துக்கொடுத்தான். மறுக்காமல் வாங்கிக்கொண்ட ராமசாமி,தோளிலிருந்த பையை கீழே இறக்கி வைத்துவிட்டு சம்மணங்கால் போட்டு உண்ண ஆரம்பித்தான்.இரண்டு கவளம் உண்ட வன் பெரிய மச்சானைப் பார்த்து கறி நன்றாக இருப் பதைப் போல் சைகை செய்துவிட்டு சின்ன மச்சானிடம் சொன்னான்."பெரிய சின்னக் கவுண்டர் கைப்பக்குவம் பிரமாதம் போங்க"

"அதெல்லாம் அவியளுக்கு சொல்லவா வேணும்?"

பேச்சுக்குள் புது ஆள் வந்துவிட்டதால் இவன் மௌனமா னான். சின்ன மச்சான் ராமசாமியிடம் கேட்டான்."என்ன ராமசாமி,ஒரு மொசலுங்கூடவா கெடக்கல?" தட்டைக் கழுவி திண்ணையில் வைத்துவிட்டு பெரிய ஏப்பத்தை விட்ட ராமசாமி,சின்ன மச்சானின் பீடிக்கட்டிலிருந்து ஒன்றை உருவிக்கொண்டு பற்ற வைத்துக்கொண்டான்.

"எங்கீங்க கவுண்டரே..எல்லா காட்டுலயும் மேவு மூஞ்சு போச்சு..ஒரு மொசலும் சிக்க மாட்டீங்கது. உனி மழ பெய்யாத வரைக்கும் இந்தப் பக்க வாரதா  இல்லீங்க"  சொன்னவன் பையையும் டார்ச் லைட்டை யும் எடுத்துக் கொண்டான்.

"அட ஏன் ராமசாமி இப்டிப் பறக்கற.. உக்காரு, கொஞ்ச நேரம் பேசிட்டுப்போலாம்"

"இல்லீங்க சின்னக்கவுண்டரே.. உக்காந்தா சலுப்பாயி ரும். மொடையாயிருச்சுனா காடு காடா சுத்த முடியாது. வேட்டைக்கு வரலீனாலும் உங்கள பாக்கரதுக்காவது கொஞ்ச நா கழிச்சு வாரனுங்க"

"செரிப் போயிட்டு வா.."ராமசாமி பெரிய மச்சானிடம் சைகை காமித்துவிட்டு தெற்கே நடக்க ஆரம்பித்தான்.

"யாருங்க மச்சா இது?"

"ராமசாமி, தாளக்கரை பள்ளரு மாப்ள. நம்ம ஏரியாவுல தான் மொசலு ஜாஸ்தில.சனிக்கெழம ஆனா மொசப் புடிக்கறதுக்கு ஆளு தாராவரத்திலுருந்து பஸ் ஏறி வந்துரு வாப்ல". மச்சான் சொன்னதைக் கேட்டவுடன் இவனுக் கும் மொசப் புடிக்க போக வேண்டுமென்று ஆசை வந்தது.

பாட்டிலைப் பார்த்தான்.மூவருக்கும் ஒரு பெக் வரும் போல் தெரிந்தது.சின்ன மச்சானிடம் சொன்னான். "மச்சா, மூணுபேரு ஆரம்பிச்ச மாதிரியே மூணு பேரு முடிக்கோணும்..பெரிய மச்சானையுங் கூப்பிடுங்க" மறுத்த பெரிய மச்சானிடம் சின்ன மச்சான் டம்ளரை கையில் திணித்தான்.தயங்கியபடியே வாங்கி திண்ணை யோரத்தில் வைத்த பெரிய மச்சான்,பின்னி முடித்திருந்த இரண்டு தடுக்குகளை வாசலோரத்தில் வைத்தான். குடித்து முடித்துவிட்ட இவனுக்கு இப்போது உடம்பு நிஜமாக அந்தரத்தில் பறப்பது போலிருந்தது.கிழக்கே எழுந்துவிட்ட பனையுயர நிலவும் குளிர்ந்தகாற்றும் இவனைத் தொட்டிலில் போட்டு ஆட்டிவிடுவது போலிருந்தது.எப்போதும் புகைக்கும் கிங் சைஸ் சிகரெட் வேறொரு விதமான வஸ்துவாகி நுரையீரலெங்கும் வெம்மைச்சிறகுகள் கொண்டு வருடியது.இவன் பார்த்துக்கொண்டேயிருக்க ஒரே மடக்கில் குடித்த பெரிய மச்சான் ஒரு பீடியை பற்ற வைத்துக்கொண்டு மெதுவாக வாசலிருந்து நகர்ந்தான்.

"ஒரு சிகரெட் குடு மாப்ள..அதயுந்தா குடிச்சுப் பாத்தாப் போவுது" என்ற சின்ன மச்சானிடம் பாக்கெட்டை நீட்டி னான். பற்ற வைத்துக்கொண்டு நாலு இழுப்பு இழுத்த வன் சொன்னான்." நீ என்னதாஞ் சொல்லு மாப்ள.. பத்தாம் நெம்பர் பீடி மாதிரி வராது"

"ஆமாங்க மச்சா.. உங்களுக்கு அதுதான் பழகியிருக்குது"

"ஆனா மாப்ள..இதக் கையில புடிச்சாவே ஒரு ஸ்டைலு வந்த மாதிரி இருக்குது போ.. நீ என்னனுன்னு நெனக்கற. நம்மூருல பொடியானுக எல்லாம் குருவி கூடுகட்டற துக்கு முன்னாடியே பீடி குடிக்க ஆரம்பிச்சாறானுக"

இவன் சிரித்துவிட்டுக் கேட்டான்."எங்கீங்க மச்சா..பெரிய மச்சான ரெம்ப நேரமா காணம்?"

"எங்காவது வெளிக்கி கிளிக்குப் போயிருப்பான்.பசியா இருந்துதனா நீ சாப்பாடு போட்டுச் சாப்புடு மாப்ள.."

"பரவாலீங்க மச்சா..பெரிய மச்சானும் வந்துருட்டு..அப்ற சாப்ட்டா போவுது."

சின்ன மச்சான் போய் ஓண்ணுக்கிருந்துவிட்டு வந்தான்.ஒரு பத்து நிமிடம் பேசுவதற்கு ஒன்றுமே யில்லை என்பது போல் புகைத்தவாறே மௌனமாக இருந்தார்கள். சாளைச்சுவற்றில் மோதிய காற்று பெரிய சப்தத்தோடு விலகிப்போனது. நிலவிற்கு கீழிருந்த மேகக் கொத்தில் மெல்லிய மஞ்சள் வரியோடியிருந்தது. திடீரென்று சின்ன மச்சான் தென்னந்தோப்புக்குள் மேற்கே வெக்குவெக்கென்று வேகமாக நடக்க ஆரம்பித் தான். இவன் கூப்பிட்டதுகூட அவன் காதில் விழ வில்லை. தென்னையிந் நிழல்கள் நிலவொளிக்கு குட்டுக் குட்டாய் அசைந்து கொண்டிருந்தன.தென்னந்தோப்பின் மேகோட்டில் சமீபத்தில் சுண்ணாம்பு பூசப்பட்ட விளக் கேற்றும் பிறை வைத்துக் கட்டப்பட்ட இரண்டு கல்லறைகள் பக்கம் பக்கமாய் இருந்தன.இரண்டுக்கும் நடுவில் கீழே வெறுந்தரையில் பெரிய மச்சான் படுத்துக் கிடந்தவாறே சொல் எழும்பாத நாவிலிருந்து அவல ஒலி யாய் அழுதுகொண்டிருந்ததை பார்த்தவனுக்கு முகத்தில் சத்தென்று முள்கொத்து அடித்தது போலிருந்தது.இவன் பக்கத்திலிருந்த தென்னை மரத்தில் சாய்ந்து நின்று கொண்டான்.இவர்களைப் பார்த்த பெரிய மச்சான் கண் ணீர் விட்டவாறு இரண்டு கல்லறைகளிலும் கைகளை பரத்திக்கொண்டு புரியாத ஒலியில் குரல் எழுப்பினான். சின்ன மச்சான் அவன் கையைப் பிடித்து இழுக்க அவனோ திமிறினான். கடைசியில் சின்ன மச்சான் அவன் கன்னத்தில் ஒரு அறை விட்டான். மௌனமாக ஒரு கணம் சின்ன மச்சானைப் பார்த்தவன் எழுந்து லுங்கியைக் கட்டிக்கொண்டு சாளையை நோக்கி தாவித்தாவி நடந்துபோனான்.

"குடிச்சான்னா இதே பொழப்பா போயிருது. இவனும் போய்ச் சேர்ந்திருந்தா நானாவது நிம்மதியா இருந்திருப் பன். சனியன் புடிச்ச நாயி நாயி" சத்தம் போட்டுக் கொண்டே சின்ன மச்சான் சாளையை நோக்கி நடந்தான். அதிர்விலிருந்து மீளாத இவனுக்கு வாந்தி வருவது போலிருந்தது.

இவர்கள் சாளையை அடையும்போது திண்ணையில் அமைதியாக உட்கார்ந்திருந்த பெரிய மச்சான்,இவனைப் பார்த்து சோகையாய் புன்னகைத்தான்.திண்ணையில் ஏறி அமர்ந்த சின்ன மச்சான் ஒரு பீடியை பற்ற வைத்துக் கொண்டு வாசலை வெறிக்கத்துவங்கியவன் திடீரென்று சொன்னான்.

"வம்சம் அழிஞ்சு போயிருமாட்ட இருக்குது மாப்ள. என்ன சாபம்னெ தெரில. நமக்கும் ஒண்ணும் நல்லது நடக்க மாட்டங்கது.கெழவனும் கெழவியு இருந்திருந்தா இப்டி ரெண்டுபேரும் அனாதையா நிக்கற நெலம வந்திருக்காது பாரு..."

மச்சானுக்கு ஆறுதலாய் சில வார்த்தைகள் சொல்ல நினைத்தாலும் ஏனென்று தெரியாமல் மௌனமாகவே இருந்துவிட்டான். ஊருக்குள் அழிந்து குட்டிச்சுவராகி விட்ட மச்சான்களின் வீடு ஞாபகத்தில் வந்தது. அது ஒளி நிறைந்திருந்த காலத்தில் அதனுள் ஓடி விளையாடியது இன்னும் மங்கலான சித்திரமாக இருக்கிறது.எழவே முடியாத வீழ்ச்சிக்குள் வீழும்போது மீந்திருக்கும் சுக ஞாபகங்கள் அணையாத நெருப்பாய் எரிகிறது.

இவன் குடித்ததின் மனநிலையை இழந்திருந்தான்.இந்த இடத்தை விட்டு நகர்ந்தால்தான் சுவாசிக்க முடியும் போல் வெட்டவெளி  ஒரு குறுகிய சிறையாக தோன்றி யது. மெதுவாக எழுந்தவன் வாசலில் உலாத்த ஆரம்பித் தான்.தென்னைகளிடையே ஊறிய குளிர்காற்று உடலை நனைத்து சற்றே ஆசுவாசப்படுத்தியது. சின்ன மச்சானோடு மட்டும் தனியாக குடித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமென்று தோன்றியது.

ஏதோவொரு உள்ளுணர்வில் இவன் திரும்பிப் பார்க்கை யில் "தோசி புடிச்ச நாயி" என்று கத்திக்கொண்டே சின்ன மச்சான், பெரிய மச்சான் மேல் பாய்ந்து அவனை வாசலில் இழுத்துப்போட்டு காலால் மிதிக்க ஆரம்பித்தான். ஒடிப்போய் சின்ன மச்சானின் கைகளைப் பிடித்து இழுத்து விலக்கியவனை வுடு மாப்ள என்றவாறு அவன் திமிறி உதறியதில் பிடிப்பிழந்து பின்னால் போய் விழுந்தான். ஒரு கணம் எல்லாம் இருண்டது. சின்ன மச்சான் இன்னும் பெரிய மச்சானின் முகத்தில் குத்திக் கொண்டிருந்தான். சுதாரித்தவன் எழுந்து ஒடிப்போய் சின்ன மச்சானை வலுவாக பிடித்திழுத்து திண்ணையில் உட்கார வைத்தான். அவிழ்ந்த லுங்கியை இடுப்பில் சுற்றிக்கொண்டு வசவுகளை குழறினான் அவன். பெரிய மச்சான் விழுந்துகிடந்த இடத்திலிருந்து மெதுவாக எழுந்து உட்கார்ந்தான்.

அவன் மூக்கிலிருந்து இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது. திண்ணையில் கிடந்த துண்டை எடுத்து வாசலோர பக்கெட்டில் இருந்த தண்ணீரில் நனைத்து அவன் முகத்தை துடைத்துவிட்டான்.பெரிய மச்சான் இவனி டமிருந்து ஈரத்துண்டை வாங்கி மூக்கில் பொத்திக் கொண்டான். இவன் திரும்பிப்பார்க்க திண்னையில் குப்புறப்படுத்தவாறே சின்ன மச்சான் கேவிக்கேவி அழுதுகொண்டிருந்தான்.அவன் வாயிலிருந்து எச்சில் நூலாக வழிந்து கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்தில் அவன் கேவல் நின்று மெலிதாக குறட்டைவிடத் துவங்கினான்.

பெரிய மச்சானைப் பார்த்தவன்,செருப்பைப் போட்டுக்கொண்டு கிளம்புவதாக சைகை செய்தான். சோற்றுக்குண்டாவை காட்டி சாப்பிடுமாறு சைகை செய் தவனிடம் வேண்டாமென்பது போல் சைகை செய்தான். மெல்ல எழுந்த பெரிய மச்சான் இவனுடன் இட்டேரி வரை வந்தான்.இட்டேரி மேற்கே திரும்பும் வரை இவன் திரும்பித்திரும்பிப் பார்க்க பெரிய மச்சான் அதே இடத்தில் அசையாமல் நின்றுகொண்டிருந்தான்.

வீடுதிரும்பும் வரை வழியெங்கும் இட்டேரியின் வேலியடி இருண்டே கிடந்தது.

Pin It