சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் முனைவர் ய. மணிகண்டன் அவர்களுக்குச் செம்மொழித் தமிழாய்வுப் பங்களிப்பிற்காக 2005-2006 ஆம் ஆண்டின் மேதகு குடியரசுத் தலைவர் அவர்களின் “இளம் அறிஞர்’’ விருதும் ஓரிலக்கம் ரூபாய் விருதுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ய. மணிகண்டன் தஞ்சைச் சரசுவதி மகால் நூலகத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்து சுவடியியல் ஆய்வுகளிலும், சுவடிப் பதிப்புப் பணியிலும் தனித்த பங்களிப்பை வழங்கியவர். அந்நூலகத்தின் வாயிலாக ஆண்டுதோறும் சுவடிப் பயிற்சி வகுப்புகள் நடைபெற முக்கியமான காரணகர்த்தாவாக விளங்கியவர். அந்நூலகத்தின் வாயிலாக அரிச்சந்திரன் அம்மானை, நீதி வெண்பா, குமரேச சதகம், யாப்பருங்கல மூலம், சிதம்பரச் செய்யுட்கோவை, சிதம்பரப் பாட்டியல், மரியாதை இராமன் கதைகள், இராயர் அப்பாச்சிக் கதைகள் முதலிய நூல்களைச் சுவடிகளிலிருந்து ஆராய்ச்சிப் பதிப்புகளாகப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.

கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாகச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையில் பணியாற்றி வரும் இவர் இலக்கணத்துறையில் வளர்ந்துவரும் முதன்மையான அறிஞர்களுள் ஒருவராக மூத்த தமிழறிஞர்களால் மதிக்கப்படுபவர். இலக்கணக் கல்வி, இலக்கண ஆய்வு ஆகியவற்றை முன்னெடுக்கின்ற இளம் பேராசிரியராக இவர் உள்ளார். குறிப்பாகத் தமிழ் யாப்பிலக்கணத்துறையில் இவரது பங்களிப்புகள் உலகளாவிய நிலையில் கவனம் பெறுபவையாக உள்ளன. இவரது ‘தமிழில் யாப்பிலக்கண வளர்ச்சி’ என்னும் நூல் அவ்வகையில் சிறப்பான ஒன்றாகும். இந்நூலின் சிறப்பினைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் பேராசிரியர் வ.ஐ. சுப்பிரமணியம் அவர்கள் “இந்நூலினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் தமிழுக்கு ஏற்றம் தரும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். முதபெரும் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் தமது ‘தமிழின் கவிதையியல்’ நூலில் இவரைப் பற்றிக் குறிப்பிடும்போது யாப்பியலில் இளம் அறிஞர் எனக் கூறியுள்ளார். யாப்பியல் அடிப்படையில் சிறந்த கவிதைத் தொகை நூலாக நேரிசை வெண்பா இலக்கியக் களஞ்சியம் என்னும் நூலினையும் இவர் உருவாக்கியுள்ளார். பாரதிதாசன் யாப்பியல் என்னும் நூலும் இவரது குறிப்பிடத்தக்க நூல்களுள் ஒன்றாகும்.

இவரது ‘ஒளிந்திருக்கும் சிற்பங்கள்’ என்னும் நூல் குறள் வெண்பாக்களால் அமைந்த சிறந்த படைப்பாகும். இந்நூல் திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் சிறந்த கவிதை நூலுக்கான விருதினைப் பெற்றுள்ளது. மேலும் முகம் இதழும் பாவேந்தர் பாசறை அமைப்பும் இணைந்து இவரது கவிதைப் பணிகளுக்காகவும் தமிழ்ப் பணிகளுக்காகவும் ‘பாவேந்தர் மரபுப் பாவலர்’ என்னும் விருதினை வழங்கி உள்ளன.

பாரதிதாசன் கவிதைகளை அரும்பாடுபட்டு ஆராய்ச்சிப் பதிப்புகளாக உருவாக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் இவர், பாரதிதாசன் அரிய படைப்புகள், பாரதிதாசன் அறியப்படாத படைப்புகள், பாரதிதாசனும் சக்தி இதழும், பாரதிதாசன் கவிதை இலக்கியங்கள் _ இறைமை இந்திய விடுதலை இயக்கம், பாரதிதாசன் கவிதை இலக்கியங்கள் _ சுயமரியாதை, சமத்துவம், பாரதிதாசன் கவிதைகளில் பாரதியார் முதலிய நூல்களை உருவாக்கியுள்ளார்.

நடுவண் அரசின் செம்மொழித் தமிழுக்கான பழந்தமிழ் இலக்கண, இலக்கியச் செம்பதிப்புத் திட்டத்தின்கீழ் பதிப்பு வல்லுநராகத் தெரிவு செய்யப்பட்டு ‘முத்தொள்ளாயிரம்’ என்னும் பழந்தமிழ் இலக்கியத்தைப் பதிப்பித்து அளித்துள்ளார் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நூற்றுக்கு மேற்பட்ட கருத்தரங்குகளிலும் ஆய்வரங்குகளிலும் சிறந்த உரைகளை வழங்கியிருக்கின்றார். பழந்தமிழ் இலக்கண, இலக்கியங்கள் தொடங்கிப் பாரதி, பாரதிதாசன் இலக்கியங்கள் வரை ஆழமான பயிற்சியும் ஆராய்ச்சிப் பார்வையும் உடைய இவர் தமிழ் யாப்பிலக்கணம், சுவடிப்பதிப்பியல், பாரதிதாசன் இலக்கியம் ஆகிய களங்களில் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளார். இவரது இலக்கணப் பங்களிப்பைக் கருத்தில் கொண்டு இந்த விருது வழங்கப்பட்டிருக்கின்றது.