சங்க இலக்கியத்தில் மலர்கள், காசுகள், வண்டுகள், தும்பிகள், விலங்குகள், பறவைகள், ஊனமுற்றோர், இயற்கை, செயற்கை என்பதான பொருண்மையில் சங்கப் பாடல்கள் குறித்து மிகுதியாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. சங்க இலக்கிய ஆய்வுகள் என்றவுடன் மேற்குறித்த ஆய்வுகளே பெரும்பாலும் நினைவுகொள்ளவும்படுகின்றன. தமிழைச் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பின்பு சங்க இலக்கியம் குறித்த ஆய்வுகள் நிகழ்த்தும் புதிய சூழலும் உருவாகிவருகின்றன. இவை மேற்குறித்த பொருண்மையில் இல்லாமல் புதிய பொருண்மையில் செய்யப்படின் பயனுள்ளதாக இருக்கும்.

சங்கப் பாடல்கள், கி.மு. 250 - கி.பி. 250 காலப்பரப்பில் பாடப்பட்டும் அவை, கி.பி. 500 - கி.பி. 600 காலப்பரப்பில் தொகுக்கப்பட்டும்

கி.பி. 1100 - கி.பி.    1700 காலப்பரப்பில் உரை எழுதியும் கி.பி. 1800 - பின் அச்சில் பதிப்பிக்கப்பட்டும் என்று தொடர்ச்சியான தமிழ்ப் புலமை மரபின் செயல்பாட்டுத் தளத்தில் இருந்து வருகின்றன.

தமிழ்ப் புலமை மரபில் இரண்டாயிரமாண்டு காலமாக வழக்கில் இருந்துவரும் சங்க இலக்கியம் பாடப்பட்டமை, தொகுக்கப்பட்டமை, பதிப்பிக்கப்பட்டமை குறித்தும் அப்பாடலின் அக, புற அமைப்புகள் குறித்தும் பரவலான ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இருந்தும் அவற்றிற்கு எழுந்த உரைகள் குறித்த விரிவான ஆய்வுகள் செய்யப்படவேயில்லை என்றே சொல்லவேண்டும். இலக்கண உரைகள் குறித்த விரிவான ஆய்வுகள் என்பது ஒரு சிலரால் செய்யப்பட்டுள்ளன.

கி.மு. 250 - கி.பி. 250 காலப்பரப்பில் பாடப்பட்ட பாடல்கள் குறித்து கி.பி. 1100 - கி.பி.1700 காலப்பரப்பில் எவ்வாறான வாசிப்பு முறைக்கு உட்படுத்தப்பட்டது என்பதான தகவல்களை அவற்றிற்கு அமைந்த உரைகளில் இருந்து மட்டுமே மீட்டெடுக்க முடியும். அதேவேளையில் தமிழ்ப் புலமை மரபில் இடைக்காலப் புலமை மரபின் செயல்பாட்டை உரைமரபில் இருந்து மட்டுமே பெறமுடிகிறது. இவ்வாறான முக்கியத்துவமிக்க உரைமரபு குறித்த ஆய்வுகள் என்பது, தமிழ்ச் சூழலில் ஒரு சிலரால் செய்யப்பட்டுள்ளன. ஆயினும் சங்க இலக்கிய உரைகள் குறித்த விரிவான ஆய்வுகள் இதுவரை செய்யப்படவில்லை என்பது கவனிக்கப்படவேண்டிய அம்சமாக இருக்கிறது. வியப்பாகவும் உள்ளது.

ஒரு குறிப்பிட்ட காலப் புலமையாளர்களின் செயல்பாட்டை பின்னாளைய புலமைச் சமூகம் எவ்வாறு மதிப்பீடு செய்தது என்பதை ஆராய்ந்து பார்க்கும் சூழலில்தான் உரைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அவை குறித்துச் செய்யப்படும் ஆய்வுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.

இவ்வாறான சூழலில் அ. சதீஷ் அவர்களின் ‘சங்க இலக்கிய உரைகள்’ என்னும் நூல் நம் கவனத்தை ஈர்க்கக் கூடியதாக உள்ளது. சென்னைப் பல்கலைக்கழக இலக்கியத் துறையில் முனைவர் பட்டத்திற்காகச் செய்யப்பட்ட ஆய்வேட்டின் திருத்த வடிவமே இந்நூல்.

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய இரு தொகைநூல்களுக்கும் 11 உரையாசியர்கள் எழுதிய உரைகள் இன்று கிடைக்கப்பெறுகின்றன. எட்டுத்தொகையில் அடங்கும் நற்றிணை, குறுந்தொகை ஆகிய இரு நூல்களுள் குறுந்தொகைக்குப் பழைய உரை இருந்தது என்றும் நற்றிணைக்குப் பழைய உரையே இல்லை என்பதுமான கருத்துகள் நிலவுகின்றன. இந்த இரு நூல்களைத் தவிர்த்த பிற சங்க நூல்களுக்கே மேற்குறித்த 11 உரைகளாகும்.

பதினொரு உரைகளுள் பத்துப்பாட்டு முழுமைக்கும் உரை எழுதிய நச்சினார்க்கினியர் உரையுடன் திருமுருகாற்றுப் படைக்கு மாத்திரம் ஐவர் எழுதிய உரைகள் இன்று கிடைக்கப்பெறுகின்றன.

எட்டுத்தொகை நூல்களான பரிபாடலுக்குப் பரிமேலழகர் உரையும், கலித்தொகைக்கு நச்சினார்க்கினியர் உரையும் முழுமையாகக் கிடைக்கப்பெறுகின்றன. ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து நூல்களுக்கு ஆசிரியர் பெயர் தெரியாத உரைகளும் அகநானூறு, புறநானூறு ஆகிய இரண்டிற்கும் முழுமையற்றதாகவும் ஆசிரியர் பெயர் தெரியாத உரைகளாகவும் உள்ளன.

ஆக மேற்குறித்த சங்க இலக்கிய உரைகள் 11 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டுகளின் காலப்பரப்பில் எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவற்றைச் சங்க இலக்கிய உரைகள் என்னும் இந்நூல் ஐந்து பகுதிகளில் விரிவான தரவுகளின் மூலமாக விளக்கிச் செல்கிறது.

இடைக்காலத்தில் வடமொழியின் தாக்கத்தால் தமிழ்மொழியின் இலக்கிய உருவாக்கம் தடைபட்டதாகவும் சில புலமையாளர்கள் இந்நிலைக்கு வருத்தமுற்றுத் தமிழ்மொழியைப் பொதுமக்கள் கற்கும்படியான நிலையை உருவாக்கப் பழைய நூல்களுக்கு உரைகள் எழுதத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறான உரை உருவாக்க சூழல் குறித்தும், உரை என்பது என்ன? உரை என்ற சொல்லாடல் குறித்தும் நூலில் விவாதிக்கப்பட்டுள்ளது. உரை உருவாக்கச் சூழல் குறித்த விவாதங்களை மேலும் செய்திருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது.

தொல்காப்பியம், கலித்தொகை, பத்துப்பாட்டு, சீவகசிந்தாமணி, ஆசாரக்கோவை முதலான பல பழந்தமிழ் நூல்களுக்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரை மட்டுமே முழுமையாக நமக்குக் கிடைக்கப்பெறுகிறது. இவற்றின் அடிப்படையில் நச்சினார்க்கினியர் என்னும் புலமையாளரின் மதிப்பீடு தமிழ்ச்சமூகத்தில் எவ்வாறு கட்டமைக்கப்பட்டு வருகிறது என்பதை நூலின் இரண்டாம் பகுதியில் விவாதிக்கப்படுகிறது.

 உரையாசியர்களுள் பெரும் புலமையாளராக அடையாளப்படுத்தப்படுபவர் நச்சினார்க்கினியர். அதே அளவில் அவர்மீது பல எதிர்நிலைப்பட்ட விமர்சனங்களும் கூறப்பட்டு வருகின்றன. தமிழ் மரபிற்கு எதிரான உரை எழுதினார் என்பது அவர்மீது கூறப்பட்டுவரும் முக்கிய குற்றச்சாட்டாகும். மாட்டு என்னும் உத்தியின் மூலமாக பத்துப்பாட்டிற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரைகுறித்து 1903 இல் மறைமலையடிகள் முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை என்னும் நூலின்வழி கடுமையான விமர்சனங்களைப் பதிவுசெய்கிறார். பின்னர் இது 1943 இல் எஸ். வையாபுரிப்பிள்ளையும் பின்னாளில் மேலும் ஒரு சிலராலும் மாட்டு இலக்கிய பொருள்கோடல் என்னும் உத்தியின்வழி நச்சினார்க்கினியர் எழுதிய உரைகுறித்த தமது விமர்சனங்களைப் பதிவுசெய்துள்ளனர்.

இவ்வாறான விமர்சனம் குறித்து ‘மிகத் தொன்மையான ஒரு பொருள்கோடல் முறையைப் பின்பற்றி நச்சினார்க்கினியர் உரை கூற, பிற்கால அறிஞர்கள் அதைக் குற்றமாகக் கருதுவதேன்’(ப.41). என்று இந்நூலாசிரியர் கேள்வி எழுப்பி, அதற்கு ‘மாட்டு என்பதை ஒரு நீக்கல் உத்தியாகக் கொள்கிறார் நச்சினார்க்கினியர். அதாவது ஒவ்வொரு தவறான பொருள்கோடல் சாத்தியங்களிலிருந்து பிரதியை மீட்டெடுக் கவும் அல்லது பிரதி உருவாக்கம் தவறான அர்த்தங்களை நீக்கவும் ஓர் உபாயமாகக் கருதுகிறார் (ப. மேலது). என்ற பதிலையும் தருகிறார். நச்சினார்க்கினியர் குறித்த இருபதாம் நூற்றாண்டு ஆய்வாளர்களின் கருத்துகளை மீளாய்வுசெய்து நச்சினார்க்கினியர் உரைவழியே அவரை மீள்கட்டமைப்பு செய்கிறார் நூலாசிரியர்.

முல்லைப்பாட்டு உரையில் ‘தொல்காப்பியனார் கருத்திற்கேற்பவே நப்பூதனார் செய்யுள் செய்தா ரென்றுணர்க. இவ்வாறன்றி ஏனையோர் கூறும்பொருள்கள் இலக்கணத்தோடு பொருந்தாமையுணர்க’ (காண்க: பத்துப்பாட்டு உ.வே.சா. பதிப்பு, 1986,ப.287) என்று நச்சினார்க்கினியர் கூறுவதன்வழி அவரின் சமகாலத்தோ அல்லது முன்னரோ பத்துப்பாட்டிற்கு உரை ஒன்று இருந்திருக்கவேண்டும். அந்த உரையை மறுத்து எழுதும் சூழலில்தான் ‘மாட்டு’ போன்ற பொருள்கோடல் உத்திகளை நச்சினார்க்கினியர் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்பதும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது

சங்கப்பாடல்களில் வெளிப்படையான சமய அடையாளம் கொண்டப் பாடல்கள் பரிபாடலும் திருமுருகாற்றுப் படையுமாகும். வெவ்வேறு சமயங்களான சைவ,வைணவ சமயங்களின் அடையாளங்களைக்கொண்ட இவ்விரு நூலிற்கும் வைணவராக அடையாளப்படுத்தப்படும் பரிமேலழகர் உரை எழுதியிருப்பது கவனிக்க வேண்டிய அம்சமாகும். மேலும் திருமுருகாற்றுப்படைக்கு கவிப்பெருமாள், பரிதியார் என்னும் இருவரும் உரையெழுதியுள்ளனர். பெயர் தெரியாத உரையாசிரியரின் உரையன்றும் திருமுருகாற்றுப்படைக்கு உள்ளது. மேற்கண்ட இந்த ஐவரின் உரைத் திறனையும் உரைவழி அவர்களின் புலமைச் செயல்பாடுகளையும் அதன்வழி அவர்களின் நிறுவனம் சார்ந்த அடையாளங்களும் மூன்றாம் இயலில் விளக்கப்பட்டுள்ளது.

சங்கப் பாடல்களில் திருமுருகாற்றுப்படைக்கு மாத்திரம் ஐவர் எழுதிய உரைகள் கிடைக்கப்பெறுகின்றன. தொகைநூல்களில் உள்ள ஒரு நூலிற்கு மாத்திரம் ஏன் இத்தனை உரைகள் எழுந்தன. சைவ சமய அடையாளம் காரணமா?. திருமுறைகளுக்கு உரை எழுதும் மரபு தமிழில் இல்லை (ப.67)ஆனால் திருமுறைகளில் ஒன்றாக வைக்கப்பட்டிருக்கும் திருமுருகாற்றுப் படைக்கு எப்படி இத்தனை உரைகள் எழுந்தன.

குறைந்த பாடல்களைக்கொண்ட (3,776) நாலாயிர திவ்விய பிரபந்தத்தை வைணவன் ஒருவனால் முற்றாக ஓதிவிடமுடியும். ஆனால் பிரபந்தத்தைக் காட்டிலும் ஐந்து மடங்கு பாடல்களைக் கொண்ட(18,000) திருமுறைகளை சைவனொருவனால் முற்றாக ஓதுவதென்பது கடினமான ஒன்று. இதன் காரணமாக திருமுறைகளின் சாரம்சங்களை மட்டும் கொண்ட சுருக்கமான சாத்திரநூல்கள் தோன்றின. திருமுறைகளுள் ஒன்றாகவுள்ள திருமுருகாற்றுப்படை மொழிநிலையில் சிக்கலாக இருந்ததனால் சுருக்கி எழுத முடியாமல் அவற்றிற்கு மாத்திரம் தனியாக உரை எழுதியிருப்பார்கள் (ப.67,68). என்பது இந்நூலாசிரியன் ஐயப்பாடான கருத்து.

அவ்வாறாயின் அது 11 ஆம் நூற்றாண்டு முதல்(கவிப்பெருமாள் முதல்) 16 ஆம் நூற்றாண்டு வரை (நச்சினார்க்கினியர் வரை) சுமார் ஐந்து நூற்றாண்டு காலம் ஒரே தன்மையிலான செயல்பாடுகளைச் செய்ய வாய்ப்புள்ளதா என்று நாம் ஐயப்படவேண்டியுள்ளது. இது மேலும் ஆய்வுக்குரிய ஒன்றாகவே கருத வேண்டியிருக்கிறது.

 பரிபாடலுக்கு உரை எழுதிய பரிமேலழகர் குறித்து விரிவான நிலையிலும், திருமுருகாற்றுப்படைக்கு உரை எழுதிய மூன்று உரையாசிரியர்கள் குறித்து ஓரிரு பக்கங்களிலும் விளக்கிச் செல்கிறார். ஏனைய உரையாசிரியர்களின் காலம், சமயம் குறித்து விவாதிக்கும் நூலாசிரியர் திருமுருகாற்றுப்படைக்கு உரையெழுதியுள்ள உரையாசிரியர், கவிப்பெருமாள், பரிதியார் ஆகிய மூவரைப் பற்றியும் விரிந்த நிலையில் விவாதிக்கவில்லை. இங்கே கவனிக்க வேண்டிய அம்சம் திருமுருகாற்றுப்படைக்கு உரையெழுதியுள்ள உரையாசிரியரின் காலத்தை வையாபுரிப்பிள்ளை 15 ஆம் நூற்றாண்டு என்பர். திருமுருகாற்றுப்படைக்கு பரிமேலழகர் உரை இல்லை என்ற கருத்து பத்துப்பாட்டு மூன்றாம் பதிப்புவரை உ.வே.சா.விற்கு இருந்துள்ளது. ‘வேறுரை’ என்று சுட்டுவதன்வழி அதை புரிந்துகொள்ளமுடிகிறது.(1943,ப.24)

ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய நான்கு நூல்களுக்கும் பெயர் அறியப்படாத உரையாசிரியர்களின் உரைகள் உள்ளன. இந்தச் பெயர் அறியப்படாத உரைகளை ‘பழைய உரை’ என்று பெயர் சொல்லி அழைக்கும் வழக்கம் தமிழ்ச்சூழலில் இருந்துவருகிறது. முதன்முதலாக, பெரும்பான்மையான சங்க நூல்களைப் பதிப்பித்த உ.வே.சா. பெயர் அறியப்பாடாத உரைகளை ‘பழைய உரை’ என்று அடையாளப்படுத்துகிறார்.(ப.106) பெயர் அறியப்படாத உரைகளை ‘பெயர் அறியப்படாத உரைகள்’ என்று சொல்லாமல் ‘பழைய உரை’ என்று அடையாளப்படுத்த வேண்டிய தேவை என்ன?. ஒரு பதிப்பாசிரியர் உரையா சிரியராக மாற நினைத்ததன் விளைவு பெயரறியப்படாத உரை பழைய உரையாக மாறியது(ப.108). ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய நூல்களுக்குத் தாம் எழுதிய குறிப்புரைகளை ‘புதிய உரை’, என்று கருதிய உ.வே.சா. பெயர் அறியப்படாத உரையை ‘பழைய உரை’ என்ற பெயருடன் பதிப்பிக்கிறார்.(ப.மேலது). இவ்வாறான பெயர் அறியப்படாத உரையாசிரியர்கள் குறித்தும் அவர்களின் உரைத்திறன் குறித்தும் நான்காம் பகுதியில் விவாதிக்கப்பட்டுள்ளது.

 அகநானூற்றிற்கு பெயர் அறியப்படாத இரண்டு உரைகள் உள்ளன. இரண்டு உரைகளுமே நூலின் முழுமைக்கும் இல்லாமல் முதல் தொண்ணூறு பாடல்களுக்கு ஓருரையும் இடையிடையே 52 பாடல்களுக்கு ஓருரையும் முழுமையற்ற உரைகளாகவே உள்ளன. இவற்றைப் பதிப்பித்த இராஜகோபாலாரியன் முதல் உரையை ‘குறிப்புரை’ என்றும் 52 பாடல்களுக்கு அமைந்த உரையை ‘வேறுரை’ என்றும் பயன்படுத்துகிறார்(ப. 140).

ஆக, சுவடியில் இருந்து சங்க நூல்களைப் பதிப்பித்த பதிப்பாசிரியர்கள் பெயர் அறியப்படாத உரைகளை ஓர் அடையாளப்படுத்தலுக்காகவே ‘பழைய உரை’ ,‘வேறுரை’ என்ற சொல்லாடலைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதை நினைவில் கொள்ளவேண்டியுள்ளது.

 ஓர் உரையாசிரியன் உரை என்பது அவன் கருத்தியல் சார்ந்தே இருக்கும். அது இயல்பான ஒன்று. தன் கருத்தியலுக்கு ஆதாரம் தேடும்முயற்சியாக பல்வேறு உதாரணங்களை உரையாசிரியன் அடுக்கிச்செல்வதும் அது குறித்து விவாதிப்பதும் உரை மரபில் இருந்து வரும் வழக்கம். இவற்றுள் இலக்கிய நூலைக் காட்டிலும் இலக்கண நூல்களுக்கு உரை எழுதும் உரையாசிரியனே மிகுதியான உதாரணங்களை காட்டிச் செல்கிறான். அவ்வாறு உதாரணங்காட்டுவதன்வழி, சங்கங்கள் இருந்த வரலாற்றையும் எண்ணற்ற மறைந்து போன இலக்கண இலக்கிய நூல்களின் விவரங்களையும் நம்மால் பெறமுடிந்தது.

அவ்வாறு உரையாசிரியர்கள் காட்டும் உதாரணங்களில் பல சங்கப் பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டு விளக்கப் பட்டுள்ளன. உரையாசியர்களால் மேற்கோள் காட்டி விளக்கப்பட்டுள்ள சங்கப்பாடல்களின் உரைகளின் தன்மையை நூலின் ஐந்தாம் பகுதியில் விவாதிக்கப் பட்டுள்ளது.

இளம்பூரணர், பேராசிரியர், இறையனார் களவியல் உரைகாரர், யாப்பருங்கல விருத்தியுரைகாரர், அடியார்க்கு நல்லார், பரிமேழகர் முதலான உரையாசிரியர்களின் உரைகளில் மேற்கோளாகக் காட்டப்பட்டு விளக்கப் பட்டுள்ள சங்கப் பாடல்களின் உரைத் தன்மையை விவாதித்துச் செல்லும் ஐந்தாம் பகுதி தமிழில் புதிய முயற்சியாகும்.

மேலும், பின்னிணைப்பு குறிப்புகளும் நூலின் இடையிடையே காட்டப்பட்டுள்ள சங்க இலக்கிய நூல்களின் முதற்பதிப்பின் முகப்புப் பக்க குறிப்புகளுமாக சங்க இலக்கிய உரைகள் குறித்தான தகவல்களை இந்நூல் கனமாகத் தாங்கிநிற்கின்றன.

நவீன ஆய்வுகளின் போக்கு என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்ககால ஆய்வாளர்களின் கருத்தியலோடு முரண்படுவதாகவே உள்ளது. முரண்படுதல் என்பது காலத்தின்/ சூழலினால் ஏற்படுவது இயல்பு. அவ்வாறான முரண்பாடுகளால் புதிய பல ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளும் நடந்துள்ளன. அவ்வாறான ஒன்றாகவே இந்நூலினை வைத்துப் பார்க்கத்தோன்றுகிறது.

சில இடங்களில் நூலாசிரியர் கூறும் கருத்துகள் ‘பழைய கள் புதிய மொந்தையில்’ என்பது போலப் பழைய செய்தியை நவீன நடையில் கூறுவதுபோன்ற உணர்வையும் ஏற்படுகிறது. சங்க இலக்கிய உரைகள் குறித்த விரிவான ஆய்வுகளை மேலும் தொடர்வதற்கான ஆய்வுக்களங்களையும் சில இடங்களில் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் காட்டிச் செல்வது மிக்க பயனுடையதாக உள்ளது.

இன்னொரு முக்கியமான அம்சம் தமிழ் ஆய்வுநூல்களுக்கே உரிய தொகுப்புரை, கருத்துரை, முடிவுரை என்ற சடங்குமாதிரியான ஆய்வாக இல்லாமல் பொதுவான வாசகன் புரிந்துகொள்ளும் அளவிலும் எழுதப் பட்டுள்ளது.