நான்மறை என்று சொல்லப்படும் நான்கு வேதங்கள் தமிழர்க்குச் சொந்தமாக இருந்து அழிந்து விட்டன என்கிறார்கள். அதற்குச் சான்றுகள் உண்டா? 

      கல்லால மரத்தின் கீழ் தவமியற்றிய தென்திசைக் கடவுள் தன்னுடைய நான்கு மாணவர்களுக்கு விளக்கிய கோட்பாடுகளே நான்கு மறைகளாக விரிந்தன என்று அறிஞர் குணா தம் நூலில் விரிவாக ஆய்ந்துள்ளார். 

      ஆனால் தொல்காப்பியப் பாயிரத்தில் கூறப்படும் நான்மறை என்பது தமிழறிஞர்கள் நம்புகின்ற 4 மறைகள் அல்ல.  அப்படி தமிழ் நான்கு மறைகளில் வல்லவர் அதங்கோட்டாசான் என்றால் அவருக்கு மயக்கம் தராத மரபினையுடைய தமிழ் எழுத்து முறையைத் தொல்காப்பியர் காட்டினார் என்பது வரலாற்றுப் பிழையாகி விடும். மேலும் வடமொழி மரபில் வேதங்கள் நான்கு என்கின்ற மரபு மிகவும் பிற்காலத்தியதாகும். கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்ததாக நம்பப்படும் சாணக்கியரின் பொருள் நூலில் வேதங்கள் என்ற பொருளில் “திரையீ” என்று சுட்டப்பட்டுள்ளது. 

      கி.பி.14,15 ஆம் நூற்றாண்டில் விசயநகரப் பேரரசு காலத்தில் வாழ்ந்த மாதவ வித்யாரண்யர் எழுதிய சர்வதர்சன சங்கிரகத்தில் உலகாய்தனின் கூற்றாகச் சொல்லும் போது கூட, வேதங்களை மூன்றாகவே சுட்டியுள்ளார்.  எனவே ரிக் முதலான வடமொழி வேதங்களை நான்காக வரையறை செய்ததற்குத் தமிழில் உள்ள நான்கு மறைகளே காரணமாக இருந்திருக்கலாம்.  ஆனாலும் அக்கருத்து மேலும் ஆய்வுக்குரியது. 

வடமொழி வேதங்கள் தமிழ்நாட்டில்தான் தொகுக்கப்பட்டன என்று தாங்கள் கூறி வருகிறீர்கள். அதற்குச் சான்றுகள் யாவை? 

      இக்கருத்தை வெளியிட்டவர் பொதுவுடைமைச் சிந்தனையாளரும் சிறந்த வரலாற்றறிஞருமாகிய டி.டி.கோசாம்பி அவர்கள்தாம்.  கி.மு.14ஆம் நூற்றாண்டில் தென்னாட்டில்தான் வேதப் பாசுரங்கள் முதல் முதலாகத் தொகுக்கப்பட்டு எழுத்து வடிவிலும்; அவற்றைக் கொண்டுவந்து, குறிப்புரைகளும் எழுதியுள்ளனர்.  அப்படி எழுதி வைத்த முறை கிட்டத்தட்ட கி.மு.எட்டாம் நூற்றாண்டு வரை தொடர்ந்துள்ளது. அதன்பிறகே அந்த முறையைக் கைவிட்டு, அவற்றை வாய்மொழியாகவே வழங்கி வந்துள்ளனர். 

      தென்னாட்டில்தான் வேதப்பாசுரங்கள் தொ குக்கப்பட்டன என்ற டி.டி.கோசாம்பியின் கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் அறிஞர் சுந்தர் ராஜ் கூற்று உள்ளது. ரிக் வேதத்தில் வருகின்ற வானியல் குறிப்பு களைப் பற்றிக் கூறும்  போது ரிக்வேதமே ஒரு வகைத் தமிழ்ப் பஞ்சாங்கம்தான் என்று சுந்தர்ராஜ் கூறுவார்.  தமிழ்ப் பஞ்சாங்கம் என்று கூறக் கூடிய அளவிற்குத் தமிழரின் அறிவு மரபு ரிக் வேதப் புலவர்களை ஈர்த்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இந்த உறவையும் நெருக்கத்தையும் காணுகின்றபோதுதான் அறிஞர் டி.டி.கோசாம்பியின் கூற்றை நாம் நம்ப வேண்டியவர்களாகிறோம் இல்லையா? 

நீங்கள் தொல்காப்பியம் ரிக் வேதத்திற்கு முந்தியது என்று கூறுகிறீர்கள். அதற்கு வலுவான சான்றுகள் உள்ளனவா? 

      தினமணி நாளிதழ் தொடங்கி வைத்த ஓர் அறிவார்ந்த விவாதத்தையே நீங்களும் வினாவாகக் கேட்கிறீர்கள். 

      தொல்காப்பியத்திற்குப் பாயிரம் எழுதிய பனம்பாரனார், தொல்காப்பியம் தோன்றுவதற்கான காரணத்தை விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் அறத்தைப் பரப்பும் இயல்பும் வேதப் புலமையும் கொண்ட அதங்கோட்டு ஆசானுக்கு மயக்கம் தராத - தெளிவான தமிழ் எழுத்து முறையினைக் காட்டினார் தொல்காப்பியர் என்று கூறுகிறார்.  வேதமோ வாய்மொழியாக வந்தது. வாய்மொழியாக வந்ததற்கான காரணம் வேத மொழிக்கு எழுத்துகள் இல்லாமையே ஆகும். 

      எனவே, வேதத்தை எழுத்து வடிவில் கொண்டு வருவதற்கான முயற்சியில் அதங்கோட்டாசான் தலைமையில் ஒரு முயற்சி நடந்த போது அவர்களுக்கு எழுத்து முறையைக் காட்டுவதற்காக தொல்காப்பியர் தொல்காப்பியத்தை இயற்றியுள்ளார் என்பது தெளிவாகிறது. இக்கருத்தைப் பனம்பாரனார் பாயிரத்திலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. 

      தொல்காப்பியர் வழங்கிய எழுத்து முறையைப் பின்பற்றி - அவர்கள் வேதத்தைத் தொகுத்ததால்தான் தொல்காப்பியர் குறிப்பிடும் 33 எழுத்துகளை 33 கடவுள்களாக ரிக் வேதத்தில் அவர்களால் உருவகப்படுத்த முடிந்தது. 

தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையும் வேதக் கடவுளரின் எண்ணிக்கையும் 

      வேதக் கடவுள்களின் எண்ணிக்கை 33 என்பதை ரிக் வேதம், அதர்வண வேதம் ஆகியவையும் அவற்றின் வழியாகத் தோன்றிய பிராமணங்களும் உறுதி செய்கின்றன.  அவை, 

ஆதித்தியர்கள் 12 

வசுக்கள்      8 

உருத்திரர்கள்  11 

வசத்காரர்     1 

பிரஜாபதி     1 

      என்பன. 33 என்ற எண்ணிக்கை வேத நூல்களில் வரையறுக்கப்பட்டதற்கான காரணத்தை ஆராயும் சுந்தர்ராஜ் அம்முப்பத்து மூன்றும் தொல்காப்பியர் குறிப்பிடும் 

உயிரும் உடம்புமாம் முப்பது முதலே 

சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே 

      எனும் நூற்பாவின் அடிப்படையில் உருவாக்கப் பட்டவை என்பதைத் தம் நூலில் விரிவாக விளக்கியுள்ளார். ஆதித்தியர்கள் 12 என்பது தமிழின் 12 உயிர் எழுத்துக்களே என உறுதி செய்யும் அவர், வசுக்கள் பற்றியும் தக்க சான்றுகளுடன் ஆராய்ந்துரைக்கிறார்.  ‘வழு’ என்னும் தமிழ்ச்சொல்லே ‘வசு’ என ஆகியதை அறிஞர்கள் எமனோ, பர்ரோ தொகுத்த ‘திராவிட வேர்ச்சொல் அகராதி’ யிலிருந்து (ஈஉஈ.4336) எடுத்துக்காட்டி நிறுவுவார். இந்த வசுக்கள் மொழிக்கு முதலில் வாரா தமிழ் மெய்யெழுத்துகள் என்பதும் இந்த எட்டும் தொல்காப்பியருக்குப் பிந்திய வழக்கு என்பதும் இங்கே எண்ணத்தகும். 

      தொல்காப்பியர் ‘என்மனார் புலவர்’, ‘என்ப’ என்று பல இடங்களில் குறிப்பிடுகின்றார். அதாவது அவருக்கு முன் இலக்கணம் யாத்த புலவர்கள் பலர் இருந்தனர். அவர்கள் கூறியதை எடுத்துச் சொல்கிறேன் என்று தொல்காப்பியர் கூறுகிறார்.  எனவே தொல் காப்பியத்திற்கு முந்தியிருந்த தமிழ்ப் புலவர்களின் இலக்கணத்தில் 33 தமிழ் எழுத்துகள் கூறப்பட்டதை - ரிக் வேதம் எடுத்துக் கொண்டிருக்கலாம் அல்லவா? அவ்வாறு இருந்தால் தொல்காப்பியத்திற்குப் பிந்தியது ரிக் வேதம் என்ற கருதுகோள் சரியாக இருக்காதே! 

      பனம்பாரனார் அதற்கு இடம் தராமல் தொல்காப்பியர்தான் அதங்கோட்டாசானுக்கு எழுத்து வடிவம் காட்டினார் என்று தெளிவாகச் சொல்லிவிடுகிறார்.  மேலும் தொல்காப்பியம் ஓர் இலக்கண நூல் மட்டுமன்று.  தருக்கவியல், மானிடவியல், மெய்யியல், சொல்லியல் ஆகிய அனைத்துத் துறைகளுக்குமான பொது நூல் அது. கி.மு. 8 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு வளர்ச்சியடைந்த இந்தியப் பொருள்முதல்கோட்பாட்டிற்கான மூல வடிவம் தொல்காப்பியம் ஆகும். இலக்கணம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிஞர்களின் நூல்களை எல்லாம் பழுதறக் கற்றவர் தொல்காப்பியர் என்னும் பொருளில் பனம்பாரனார் “முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணி புலந் தொகுத்தோராகப்” பாராட்டுகிறார். 

      வடநாட்டிலிருந்து பார்ப் பனர்கள் தமிழகத்திற்கு வந்ததற்கான தலையாய காரணங்களுள் ஒன்று, அவர்களுக்குத் தமிழ்க் கல்வி மீதிருந்த ஈர்ப்பே ஆகும்.  இதனைப் புத்த சமய சாதக நூல்கள் நன்கு பதிவு செய்துள்ளன. கி.மு. 7ஆம் நூற்றாண்டளவில் நாளந்தாவிற் கருகே ஒரு சிற்றூரி லிருந்து மாதவன் என்ற பார்ப்பனன் ஐந்திரம் கற்பதற்காகத் தென்னாட்டிற்கு வந்ததை அவதான சாதகம் பதிவு செய்துள்ளது.  இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டுதான் நாம் வடமொழி அறிஞரான அதங்கோட்டாசானுக்குத் தொல் காப்பியர் தமிழ் எழுத்து முறையைக் காட்டினார் என்ற முடிவுக்கு வருகிறோம். 

      எழுத்துகளின் பிறப்பிடம், அவற்றின் அளவு, வடிவம் ஆகிய இவற்றையெல்லாம், இவையறியாத வடமொழி வேத விற்பன்னராகிய அதங்கோட்டாசானுக்குக் காட்டி விளக்கப்படுத்தினார். அதனால் இயல்பாகவே ரிக் வேதத்திற்கு முந்தியது தொல்காப்பியம் என்பது வெளிப்படையாகிறது.  

      தொல்காப்பியத்திலிருந்து ரிக் வேதம் எவ்வாறெல்லாம் கடன் வாங்கியிருக்கிறது என்பதை விரிவாக எனது “தொல்காப்பியம்  காலமும் கருத்தும்” நூலில் காணலாம். 

மரபியலில் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்று தொல்காப்பியர் கூறுவது நால் வருணச் சாயல்தான் என்று ஒரு சாரார் கூறுகின்றனர். இந்த நால்வருணப் பிரிவு ரிக் வேதத்திற்கு முன்பே தமிழர் களிடம் இருந்ததா? 

      நால்வகைப் பிரிவின் சாயல் அல்ல. நால்வகைப் பிரிவும் அப்பட்டமாகவே சொல்லப் பட்டுள்ளது.  தொல்காப்பியப் பொருளதிகார மரபியல் தமிழரின் அறிவுக் கருவூலம். உயிர்களின் தோற்றம், வளர்ச்சி, ஆகிய திரிவாக்கக் (ஞுதிணிடூதtடிணிண) கோட்பாட்டி னையும் மரம் என்றால் என்ன, புல் என்றால் என்ன என்ற உயிரியல் பாகுபாட்டினையும் விளக்கிக் கொண்டு வரும் பகுதியில் திடீரென வருணம் பற்றிய செய்திகள், அவற்றிற்கான விளக்கங்கள் இடம் பெறுகின்றன.  பத்துப் பன்னிரண்டு நூற்பாக்களில் இந்த வருணம் பற்றிய செய்திகள் சொல்லப்பட்டு முடிந்து விடுகின்றன.  மீண்டும் அறிவு மரபின் தொடர்ச்சியான செய்திகள் முறையாகச் சொல்லப்படுகின்றன. 

      சாதி, வருணம் பற்றிய நூற் பாக்கள் இடம்பெறும் இடத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே சுவரில் மாட்டப்பட்டுள்ள படம் போல அது செயற்கையாக இடம் பெற்றுள்ளது தெரியும்.  இப்பகுதி இடைச் செருகல் என்பதை வெள்ளை வாரணனார் உள்ளிட்ட அறிஞர் பலரும் எடுத்துக் காட்டி விளக்கியுள்ளனர்.  ஒரு வேளை இந்த இடைச் செருகல் மட்டும் இல்லாது போயிருந்தால் தொல்காப்பியம் கூட இல்லாமல் போயிருக்கலாம். 

தொல்காப்பியர் ஆரியப் பார்ப்பனர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று தமிழறிஞர்கள் சிலர் கூறியுள்ளார்களே? 

      இன்றைய ஆய்வாளர் களுக்குக் கிடைக்கக் கூடிய தரவுகள், ஆய்வு நூல்கள், அவற்றைப் பெறு வதற்கான வாய்ப்புகள் 50,60 ஆண்டுகளுக்கு முன்னாலிருந்த அறிஞர்களுக்குக் கிடைக்க வாய்ப் பில்லை.  அந்தக் காலச் சூழலில் அவர்களுக்குக் கிடைத்த தரவுகள், செய்திகள் ஆகியவற்றைக் கொண்டு அவர்கள் சில முடிவுகளுக்கு வந்தனர். 

      தமிழ் மரபில் வாலறிவராகப் போற்றப்படும் அகத்தியரைக் கூட ஆரியப் பார்ப்பனர் என்று நம்பிய துண்டு. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கூட “அகத்தியன் விட்ட புதுக் கரடி” என்று ஒரு கவிதை பாடினார்.  அப்படிப்பட்ட சூழலில் தான் தொல்காப்பியரையும் அகத்தி யரின் மாணவராக - பார்ப்பன இனத்தைச் சேர்ந்தவராக தவறாக அனுமானித்துக் கொண்டனர்.  அதில் உண்மை இல்லை.  பனம்பாரனார் கூற்றுப் படி தொல்காப்பியர்; தமிழ்கூறும் நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆராய்ந்த பேரறிஞர் ஆவார். குறிஞ்சித் திணைக்குரிய விளக்கங்கள் யாவும் மானிடவியல் அடிப்படையில் விளக்கப்பட் டுள்ளன. அந்த மக்களோடு மக்களாக வாழ்ந்தாலன்றி அவர் களின் வாழ்வியலை விளக்கி யிருக்க முடியாது. 

      தொல்காப்பியர் ஒரு பார்ப்பனராக இருந்திருந்தால் இப்படியெல்லாம் சொல்லியிருக்க முடியாது.  வள்ளுவர், அதியமான், கபிலர், அவ்வை முதலானவர்கள் பார்ப்பனனுக்கும் பறைப் பெண் ணுக்கும் பிறந்தவர்கள் என்று சொன்னது எத்தகைய வரலாற்றுப் பிழையோ அத்தகைய வரலாற்றுப் பிழையே தொல்காப்பியரை பார்ப் பனர் என்று சொல்வது ஆகும். 

பேரா. சிவத்தம்பி ஜனசக்தி நாளிதழில் (14,15.7.2010) சங்கம் என்ற சொல் சங்க இலக்கியத்தில் இல்லை.  அது சங்கம் இருந்த தாகக் கூறப்பட்ட பிற்காலக் கருத்து என்று கூறுகிறார்.  சங்கம் என்ற ஒன்று இருக்கவில்லை என்று மறுக்கிறார்.  அது சரியா? 

      இதற்கான விடையை எப்படியும் சொல்லலாம். சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நடந்த கருத்தரங்கொன்றில் சங்ககாலத் தமிழர் சமூகத்தில் குடும்பம் என்ற ஓர் அமைப்பே இல்லை; அதனால்தான் தாத்தா, பாட்டி, சிற்றப்பா, பெரியப்பா, அத்தை முதலான உறவு முறைச் சொற்கள் சங்க இலக்கியங்களில் இல்லை என்று ஒருவர் “ஆழ்ந்த ஆராய்ச்சியோடு” கட்டுரை படித்தார். அது எத்தனை பெரிய அபத்தமோ அத்தனை பெரிய அபத்தமே பேரா. சிவத்தம்பி கூற்றிலும் வெளிப் படுகிறது. 

      ஒரு சொல் இல்லை என்ற காரணத்திற்காகவே அந்த அமைப்பே இல்லை என்று சொல்வது ஒரு வரலாற்றுப் பிழையாகும். “சங்கம்” என்ற சொல் சிந்தனைப் பள்ளி என்ற பொருளில் பயிலப்பட்டு வந்துள் ளதை ‘அருங்கலச் செப்பு’ என்ற தமிழ் நூல் விளக்குகின்றது.  அந்நூல் விளக்கும் சங்கங்கள் யாவும் கி.மு. ஆறாம் நூற்றாண்டிற்கு முந்தியவை ஆகும். கி.மு. எட்டாம் நூற்றாண் டளவில் வைதிகம் பெற்ற செல் வாக்கின் காரணமாக சமூகத்தின் ஒற்றுமை குலையத் தொடங்கியது. கல்விப் பரவலுக்குக் குந்தகம் ஏற்பட்டது. அறிவுக்கான தடைகள் மெல்ல மெல்ல விரிவடைந்தன. இச் சூழலில் வைதிகத்தின் செல் வாக்கைத் தடுத்து நிறுத்த நாடெங்கிலும் இருந்த அறிஞர்கள் - ஒத்த கருத்துடையவர்கள் ஒன்றி ணைந்து சங்கங்களாகச் செயல் பட்டனர்.  புத்தர் காலத்தில் இந்தியா முழுமையிலும் செல்வாக்குப் பெற்றிருந்த சங்கங்கள் ஏறத்தாழ 300 க்கு மேல் இருந்தன.  அவற்றுள் தலைசிறந்தவையாகக் கருதப் படுபவை 7 ஆகும்.  அந்த ஏழு சங்கங்களில் 4 சங்கங்களின் தலை வர்கள் சங்கப் புலவர்களாக இருந் தார்கள்.  வயதாலும் அனுபவத் தாலும் புத்தரை விட மூத்தவர்கள் அவர்கள்.  அத்தகைய சங்கங்களில் ஒன்றுதான் புத்தரின் பௌத்த சங்கமும் ஆகும்.  இச்சங்கங்களைச் சார்ந்தவர்கள் சிறந்த துறவியர் களாகவும் தவ ஒழுக்கம் மிக்கவர் களாகவும் பேரறிஞர்களாகவும் பார்ப்பனரல்லாதவராகவும் இருந் தவர்கள். இவர்களை அமணர்கள் என்று அழைத்தனர். 

      பாலி பாகத மொழிகளில் அமணர் என்ற தமிழ்ச் சொல் - சமணர், ஸ்ரமணர் என்றாகும்.  அதனால் அந்த சங்கங்கள் யாவும் ஸ்ரமண சங்கம் என்று அழைக்கப் பட்டன. 

      புத்தர் பிறப்பதற்கு முன்பே இத்தகைய சங்கங்கள் தோன்றி விட்டதாலும், இச்சங்கங்களில் பெரும்பாலோர் தமிழ்ப் புலவர் களாக இருந்துள்ளதாலும் சங்கம் என்ற அமைப்பே தமிழிலிருந்துதான் வடபுலத்திற்குப் போயிருக்க வேண்டும்.  சங்கம் என்ற அமைப் பில் கடைசியாக வந்ததுதான் பௌத்த சங்கம்.  ஆனால் அதைப் பார்த்து தான் தமிழில் சங்கம் என்ற அமைப்பு வந்தது என்பது தாத்தா வுக்கு முந்தியவன் பேரன் என்பது போல் ஆகும். தமிழர்கள் சங்கம் என்ற அமைப்பைக் கற்பித்துக் கொண்டு கூறவில்லை.  இருந்ததைத் தான் சொன்னார்கள்.  அதுவும் திடீரென்று தோன்ற முடியா தல்லவா? 

ஜனசக்தி நாளிதழ் நேர் காணலில் ஓரில் பிச்சையார் என்ற புலவரின் சங்கப் பாடல் பௌத்த சந்நியாசி பற்றியது என்று சிவத்தம்பி கூறுகிறாரே? 

      சிவத்தம்பியின் கூற்று ஒரு வரலாற்றுப் பிழையாகும்.  பௌத்தம் பற்றியும் தெரியாமல் தமிழ் மரபு பற்றியும் தெரியாமல் வந்த விளக்கமாக அது உள்ளது.  அப்பாடலில் வரும் ஓரில் பிச்சையார் என்பவர் ஒரு கணியர்.  மூன்று காலங்களையும் அறிந்துரைக்கும் ஆற்றல் மிக்க துறவி.  “கார் காலத்தில் திரும்பி வருவேன் என்று சொல்லிச் சென்ற தலைவன் எப்போது திரும்பி வருவான் என்று கூறுங்கள், உங்களுக்கு நான் சிறந்த உணவு படைப்பதுடன் பனிக்காலத்திற்கு உதவக் கூடிய வகையில் சேமச் செப்பில் வெந்நீரும் தருவேன்” என்று தலைவி சொல்கிறாள். இந்தியச் சமயங் களிலேயே காலத்தைக் கணித்து, வருவது உரைக்கும் இயல்பினைக் கொண்டவர்கள் ஆசீவகர்கள் மட்டுமே.  ஆசீவகத்தின் இந்த அடிப்படை நடைமுறையைக் கண்டித்ததுடன் தடையும் விதித்தவை ஜைனமும் பௌத்தமும். எனவே, பௌத்தம் கண்டித்த ஒரு வழக் காற்றினை அந்த சமயத்திற்குரிய கருத்தாகப் பேரா.சிவத்தம்பி கூறுவது வியப்பாக உள்ளது.  அதில் உண்மையில்லை. 

      சமயங்களுக்கென்று உள்ள பொது வழக்காறுகளில் ஒன்றுதான் ஓரில் பிச்சை என்பது. (ஒரு துறவி குறிப்பிட்ட ஒரு வீட்டில் மட்டுமே தொடர்ந்து பிச்சை பெற்று உண்டு வாழும் முறை ஓர் இல் பிச்சை எனப்படும்)  அது ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு மட்டும் உரியதன்று.  சங்க இலக்கியத்தில் பௌத்த சமயம் பற்றி வரக் கூடிய குறிப்புகள் மிகமிகக் குறைவு என்பதே உண்மை. 

பேரா. சிவத்தம்பி தமிழில் பிறமொழிச் சொற்கள் கலப்பது தவிர்க்க முடியாதது என்றும் மறைமலை அடிகளின் தனித் தமிழ்க் கொள்கை தோல்வி அடைந்து விட்டது என்றும் அதே நேர்காணலில் கூறு கிறார்.  அது பற்றி உங்கள் கருத்தென்ன? 

      மறைமலை அடிகளின் தனித்தமிழ் இயக்கம் எந்தத் தேர்தலிலும் நின்று வெற்றி வாய்ப்பை இழந்துவிடவில்லை. அந்த இயக்கத்தினுடைய வீச்சுதான் இன்றைக்கும் தமிழ் மொழியைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்ச்சிக்கு அடியூற்றாக இருந்து கொண்டுள்ளது.  மொழிக் கலப்பைத் தவிர்க்க வேண்டும் என்ற எண்ணம் இன்றும் உயிர்ப்புடன் இருப்பதற்குக் காரணமே அடிகளாரின் தனித்தமிழ்க் கொள்கைதான். இன்று கடந்த காலத்தை விடக் கூடுதலாக தூய தமிழில் எழுதும் முறை வளர்ச்சி பெற்று வருவது அடிகளாரின் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி யைக் குறிக்கிறது. 

      தமிழில் பிற மொழிக் கலப்பை அதிகமாகப் பயன்படுத்தி தமிழைச் சிதைத்தவர்கள் ஜைனர்கள். அவர்களைப் பின்பற்றித் தான் வைணவ இலக்கியங்களில் மணிப் பிரவாள நடை கையாளப்பட்டது.  ஆனால் காலப் போக்கில் அது தன் செல்வாக்கை இழந்தது.  

      அன்றைக்கு தமிழோடு வட மொழியைக் கலந்தனர். இன் றைக்குத் தமிழோடு ஆங்கிலம் கலந்து தமிங்கிலம் என்ற புதுமொழி உருவாக்கி வருகின்றனர்.  தொலைக் காட்சிகள் தமிங்கில நடையைத் திட்டமிட்டு செயல்படுத்துகின்றன.  இச் சூழலில் மறை மலை அடிகளாரின் தனித்தமிழ் இயக்கம் மிகமிகத் தேவைப் படுகிறது.  இளைஞர்கள் அவ்வியக்கத்தை வழிநடத்துகின்ற நாள் வரும் போது தமிழ் தன் பழைய பொலிவினை மீண்டும் பெறும் என்பது என் நம்பிக்கை.

Pin It