உலக சிந்தனைப் போக்கையே புரட்டிப்போட்ட மாபெரும் சிந்தனையாளர் சார்லஸ் டார்வின் தனது சுயசரிதையை 1876ல் தொடங்கி, தான் உயிரிழந்த 1882 வரை தொடர்ந்து ஆவணப்படுத்தி எழுத்தில் வடித்தார். தன்னை ஏதோ கிறித்துவத்துக்கு எதிரானவன் என்று தவறாக சித்தரிக்கப்பட்டதற்கு பதில் சொல்லும் விதமாக எப்படி தான் ஒரு நேர்மையான விஞ்ஞானியாக இருந்தோம், உண்மையை உலகிற்கு சொன்னோம் என்பதை தன் விளக்கம் அளிக்கவல்லதாக தனது சுயசரிதை இருக்கும் என்று அவர் நம்பினார். பொது மேடைகளில் தன்னை எதிர்த்து வீசப்பட்ட எந்த விமர்சனத்திற்கும் டார்வின் நேரடியாக பதில் சொன்னதே கிடையாது. அனைத்திற்குமான பதிலாக சுயசரிதையை அவர் எழுதினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் இருக்கும் வரை அதுவெளிவரவே இல்லை.

அவரது புகழுக்கு நல்லதல்ல என அவரது குடும்பம் கருதிய பல விஷயங்களை நீக்கம் செய்து விட்டு அவர் இறந்து ஐந்தாண்டுகளுக்குப் பிறகு 1887ல் பாதியாக்கி அவரது குடும்பம் வெளியிட்டது. டார்வினின் நேர்மையான பல பதிவுகள் ஆச்சரியமூட்டுகின்றன. உதாரணமாக இந்த புத்தகத்தில் 69ம் பக்கம், தான் எட்டாண்டுகள் சிர்பீடியா உயிரினம் பற்றி ஆராய்ந்ததையும் புத்தகமாக எழுதியதையும் குறிப்பிடும் டார்வின் அவற்றில் ஒட்டும் சுரப்பிகள் பற்றி விவரிப்பதில் பயங்கர தவறு இழைத்து விட்டேன்’ என மனம் திறந்து ஒப்புக் கொள்கிறார். இதுமாதிரி பல விஷயங்களை வாசிக்க முடிந்த தமிழில் அழகாக மொழிபெயர்த்திருக்கும் முனைவர் அ. அப்துல் ரஹ்மான் குறித்து எதையும் குறிப்பிடாமல் வெளியிட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. அறிவியல் ஆர்வலர்கள் வாசிக்க இது ஒரு நல்ல புத்தகம்.

சார்லஸ் டார்வின் சுயசரிதம்

தமிழில்: அ. அப்துல் ரஹ்மான்

அகல், சென்னை - 14

பக்:96 ரூ-.50

 

மார்க்சிய தாகூர்

தாகூரின் 150வது பிறந்த ஆண்டு கொண்டாடப்படும் இன்றைய சூழலில் அவரை மார்க்சியப் பார்வையில் மறுவாசிப்பு செய்யும் விதமாக நோபல் பரிசுபெற்ற பொருளாதார நிபுணர் அமெர்தியாசென், ரவீந்திர சதவார்ஷிகீ பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளர் அருண் சௌத்ரி, தாகூரின் சாந்தி நிகேதனில் வரலாற்றுப் பேராசிரியராகப் பணி புரிந்து பின்நாட்களில் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராகவும் இருந்த பேராசிரியர் சப் யசாஷி பட்டாச்சார்யாவும் எழுதிய மூன்று பிரதான கட்டுரைகளை இந்தியமாணவர்சங்கம் மொழி பெயர்த்து தொகுத்து வழங்கி உள்ளது.

இந்தியப்பன்மை மரபிலிருந்து கிளர்ந்தெழுந்து தனது இலக்கியத்தின் மூலம் சர்வதேசப் பிரஜை ஆனவரான தாகூர் சிறந்த கல்வியாளரும்கூட. நோபல்பரிசுத் தொகையை முழுதுமாக கல்வி வளர்ச்சிக்கே செலவழித்ததோடு, 1919ல் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தபோது தனக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் வழங்கிய சர்பட்டத்தைத் துறந்து போராட்டத்தில் குதித்தவர். கவிதை மட்டுமின்றி, நம் பாரதியாரைப் போலவே நாவல், சிறுகதை, உரைநடை, இசைப்பாடல் ஓவியம் என எந்தத் துறையையும் மிச்சம் வைக்கவில்லை. இத்தொகுதி அவரை முழுமையாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. தாகூரை மார்க்சியப் பார்வையில் அμகும் அருண் சௌத்ரி தாகூரின் எழுத்துக்கள் லெனின் மீது செலுத்திய செல்வாக்கை அழகாக விவரிக்கிறார். இந்தியா தவிர வேறு இடங்களில் தாகூர் இருட்டடிப்பு செய்யப்படுவதை சென் விரிவாக அலசுகிறார். குழந்தைகளைச் சிறைவைக்காமல் அவர்களை விடுதலை செய்யும் தளமாக கல்வியை தாகூர் எங்கனம் அμகினார் என்பதை சப்ய சாஷி பட்டாச்சார்யா கோடிட்டுக் காட்டுகிறரர்.

உள்ளதிலேயே மனதைக் கவரும் நச்: ‘நானும் ரவீந்திரரின் ரசிகன் தான். ஆனால் அதற்காக அவரைக் கடவுளாக்கி வழிபடும் மனப்போக்கை நான் சற்றும் ஆதரிக்கவில்லை’ என்று அருண்சௌத்ரி குறிப்பிடும் இடம்.

வெளியீடு : சவுத் விஷன் | பக்: 164 | ரூ.60

கல்வி சிறந்த தமிழ்ச் சமூகம்

‘பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் கல்வி’ சேவியர் தனிநாயகம் அடிகளார் தமிழில் : ந. மனோகரன்

பக்: 88 | ரூ.50 மாற்று பதிப்பகம்

‘தமிழ் சமூகத்தில் கல்வி’ எனும் பொதுத் தலைப்பில், ஐந்து தொகுதிகளை மாற்று பதிப்பகம் கொண்டு வந்து தமிழ் கல்வி வரலாற்றைப் பதிவு செய்துள்ளது. பேராசிரியர் வீ. அரசு ஒருங்கிணைப்பாளராக இருந்து செய்துள்ள இப்பணியின் முதல் தொகுதி இது. 1950களில் தமிழ் கல்சர் இதழில் சங்ககாலத் தமிழர்களின் கல்வி குறித்து சேவியர் தனி நாயகம் அடிகளார் எழுதிய நான்கு கட்டுரைகளின் தமிழாக்கம்.

பழந்தமிழ் இலக்கியமும் பண்டைய இந்தியக் கல்வியும், பழந்தமிழ் சமூகத்தின் கல்வியாளர்கள், பழந்தமிழ்ப் புலவர் - கல்வியாளர்கள் மற்றும் பழந்தமிழகத்தில் சமண பௌத்த கல்வி ஆகிய நான்கு அருமையான கட்டுரைகளின் வழியே சங்ககால தமிழ்ச் சூழலில் கல்விக்குத் தரப்பட்ட முக்கியத்துவம் உலகளவில் கூட இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதை ஆழமாக விவரிக்கின்றார் ஆசிரியர். குறிப்பாக பாடல் புனையவும் அரசருக்கு ஆலோசனை வழங்கவும் புலவர்கள் இருந்ததும் மக்கள் எண்ணங்களைப் பிரதிபலிக்க பாணர்கள் இருந்ததையும் சுட்டிக்காட்டும் தனி நாயக அடிகள், கிமு 50க்கும் கிபி200க்கும் இடையேயான ஒரு பத்து தலைமுறை சார்ந்த புலமையை ஆய்ந்து, அவர்களில் பெண்பாற்புலவர்கள், அவர்தம் ஊர்கள், வேளாண்மை, வணிகம், கைவினையாளர், குறவர், எயினர் சமூகத்தவர், மருத்துவர் கணக்கியலார் வானூலார், மரத்தச்சர், கொல்லர், மண்பாண்டம் செய்வோர் கூட பாடல் இயற்றும் அளவுகல்வி கேள்விகளில் சிறந்திருந்ததை சுட்டுகிறார். கடைசிக்கட்டுரையான சமண பௌத்த கல்வி குறித்த கட்டுரை மிகவும் குறிப்பிடத்தக்க அருமையான விருந்து. கல்விப்புரட்சி!