வழக்கத்திலிருந்து சற்று மாறான அல்ல - நேர்மாறான கதை இது. சாகசம் புரியும் ஜேம்ஸ் பாண்டுகள் இதில் நகைச்சுவை கதாபாத்திரங்களாக மாறிப் போனார்கள். 50 ஆண்டுகளாக தொடர்ந்து தோல்வி, அடுக்கடுக்கான தோல்வி, மலை மலையாய் தோல்வி. சி.ஐ.ஏ வின் தலைமை அதிகாரிகள், ஊழியர்கள் என தோல்வியை தழுவியதற்காக வேலை நீக்கம் செய்யப்பட்டவர்களை கணக்கெடுத்தால் மிகப்பெரிய குடியிருப்பு பகுதியில் அவர்களை குடிவைக்கலாம்.

அமெரிக்காவில் வாழும் க்யூப அகதிகள் ஆயிரத்து ஐநூறு பேர் கொண்ட படை 1961ல் தெற்கு க்யூபாவுக்குள் நுழைந்தது. க்ரேஸ்போன் லின்ச், பேபெ சான் ரோமன், எர்னியோ ஓலிவா ஆகியோரின் தலைமையில் இந்தப் படை இயங்கியது. இந்தப் படைக்கான பயிற்சி, ஆயுதங்கள் என மொத்த நடவடிக்கையும் சி.ஐ.ஏ வால் உபயமாக வழங்கப்பட்டது. தகவல் அறிந்தவுடன் காஸ்ட்ரோ, சே குவேரா, அர்னல்டோ, ஓச்சோ சான்சான்சேச் ஆகியோரின் தலைமையிலான பெரும் படை ஏப்ரல் 15-19 க்குள் ஊடுருவியவர்களை அழித்தொழித்தது. 115 பேர் கொல்லப்பட்டனர், 1189 நபர்கள் கைது செய்யப்பட்டார்கள். க்யூப படையிலும் இந்த போர் ஆயிரம் வீரர்களை இழந்தது. ஜனாதிபதி கென்னடி தன் பதவி காலத்தில் இப்படி ஒரு அவமானத்தை சந்தித்ததே இல்லை. மௌனத்தில் உறைந்து பல நாட்கள் பத்திரிக்கையாளர்களை சந்திக்கவில்லை. அடுத்த சில தினங்களில் சிஐஏ வின் இயக்குனர் ஆலன் டலஸ் மற்றும் துணை இயக்குனர் சார்லஸ் கேபன் அமெரிக்க ஆளும் வர்க்கம் நிபந்தனையின் பேரில் ராஜினாமா செய்தனர். இந்த நடவடிக்கையைத் தான் Bay of Pigs Invasion என்பார்கள்.

சாகும் வரை கென்னடியின் ஆழ்மனதில் வடுவாய் தங்கிப்போன நிகழ்வு இது. இது போல் கடந்த ஐம்பது ஆண்டுகளில் சிஐஏ தொடர்ந்து தனது உலகளாவிய தோல்விகளை க்யூப மண்ணில் சந்தித்து வருகிறது. அமெரிக்காவின் நீண்ட நாளைய கனவு க்யூபாவில் உள்ள சோசலிச அரசை அப்புறப்படுத்துவது மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோவை கொல்வது.

இந்த நாவலின் ஒவ்வொரு பக்கமும் நகைச்சுவை நிறைந்தது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் 638 சந்தர்ப்பங்களில் உயிர் தப்பியுள்ளார் ஃபிடல். இதனை கணக்கு வைத்து விவரிக்கிறார் ஃபிடலின் பாதுகாப்பு அதிகாரி ஃபபியன் எஸ்கலன்தே. சமீபத்தில் பிரிட்டிஷ் தொலைக்காட்சி தயாரித்துள்ள ஆவணப்படம் இதை தெளிவாக விளக்குகிறது. அந்த படத்தின் பெயர் 'காஸ்ட்ரோவை கொல்வதற்கு 638 வழிகள்'.

காஸ்ட்ரோ விரும்பி புகைக்கும் சுருட்டு உலகப்புகழ் பெற்றது. சே மற்றும் காஸ்ட்ரோவின் அநேக புகைப்படங்களில் இந்த சிகாரை நீங்கள் காணலாம். இந்த சிகாரை புகைக்கும் பொழுது அது வெடித்து காஸ்ட்ரோவின் முகம் சிதறுவதாக திட்டம் தீட்டப்பட்டது. 1960 களில் சிஐஏ இப்படியான சிகாரை தயாரித்து விட்டதாக தகவல்கள் கசிந்தது. ஆனால் அந்த சிகார் எதுவும் காஸ்ட்ரோவை சென்றடையவில்லை. 1985 ல் காஸ்ட்ரோ புகைப்பதை நிறுத்திவிட்டதும், அமெரிக்காவின் இந்த திட்டமும் மூடு விழா கண்டது.

தினமும் 4-5 மணி நேரம் நீச்சலடித்து தனது அலுவலக அலுப்பை தீர்க்கும் பழக்கம் உள்ளவர் காஸ்ட்ரோ. அவருடன் ஐந்து - ஆறு மெய்க்காப்பாளர்கள் நீச்சல் அடிக்கும் காட்சி அவரைப் பற்றி வெளியான அனைத்து ஆவணப்படங்களிலும் இடம்பெறும். அதிலும் ஆழ்கடல் நீச்சல் (Scuba Diving) என்றால் அவருக்கு மிகவும் விருப்பம். சிஐஏ வின் திட்டம் வெடிமருந்துகளை வைக்க கூடிய அளவு பெரிய சிப்பியை கண்டெடுப்பது. காஸ்ட்ரோ அடிக்கடி நீச்சல் அடிக்கும் பகுதியில் அதை வைப்பது. அதில் கண்கவரும் வண்ணங்களைத் தீட்டுவது. காஸ்ட்ரோ ஆழ்கடல் நீச்சலில் ஈடுபடும் பொழுது இந்த சிப்பி அவரது கவனத்தை பெற்று, காஸ்ட்ரோ அதை நெருங்கி திறக்க முயற்சிக்கும் பொழுது வெடித்து காஸ்ட்ரோ கடலடியில் மரணத்தை தழுவுவார். இந்த திட்டம்தோல்வியடைந்ததை ஒப்புக் கொண்டது கிளிண்டன் அரசாங்கம். இருப்பினும் காஸ்ட்ரோ உபயோகிக்கும் நீச்சல் உடையில் அபாயகரமான கிருமிகளை வைப்பது. அதை அணிந்தவுடன் அவருக்கு தோல் நோய்கள் வந்து அவர் இறப்பது. 'புதிய யோசனைகள் - புதிய தோல்விகள்' என்று தான் சிஐஏ அலுவலக வாசல் பலகையில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

ஒரு முறை காஸ்ட்ரோவின் காதலியின் மூலம் அவரைக் கொல்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. அந்த பெண்மணியிடம் சிஐஏ விஷ மாத்திரைகளை கொடுத்தது. அந்த மாத்திரைகளை அவர் தனது முகப்பூச்சு களிம்புக்குள் மறைத்து வைத்திருந்தார். காஸ்ட்ரோ தூங்கும் பொழுது அவரது முகத்தில் இதை பூச வேண்டும் என்பது உத்தரவு. எப்படியோ இந்த பெண்ணின் நிழல் உறவுகள், திட்டங்கள் அறிந்த ஃபிடல், அவளிடம் தன் கை துப்பாக்கியை கொடுத்து "என்னை சுட்டுக் கொன்று விடு" என்றார். "என்னால் இது முடியாது" என அவர் துப்பாக்கியை காஸ்ட்ரோவிடம் கொடுத்து விட்டு சென்று விட்டார். அந்தப் பெண்தான் சிஐஏ வின் திட்டங்களை சுமந்து காஸ்ட்ரோவை நெருங்கிய முதல் மற்றும் கடைசி நபர். அந்த பெண்ணிடம் காஸட்ரோ குடிக்கும் காபியில் கலப்பதற்கான குச்சில்கொல்லி வில்லைகள் இருந்தன.

2000 த்தில் பனாமாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் ஃபிடல். இங்கு அவர் உரையாற்ற இருந்த மேடையின் கீழ் தளத்தில் 90 கிலோ வெடிமருந்து இருந்ததை கடைசி நேரத்தில் க்யூப படை கண்டெடுத்தது. இது தொடர்பாக பல கைக்கூலிகள் கைது செய்து அடைக்கப்பட்டனர். இதில் லூயிஸ் போசாபோவும் கைது செய்யப்பட்டார். இவர் க்யூப வம்சாவளியை சேர்ந்தவர். அமெரிக்காவில் வசிக்கிறார். க்யூபா மற்றும் வெனிசுலா அரசாங்கம் இவரை பல வழக்குகள் தொடர்பாக தேடி வருகிறது. 1976 ல் இவர்தான் க்யூப விமானத்தை சுட்டு வீழ்த்தினார். இது போல் உலகம் முழுவதிலும் லட்சக்கணக்கான வழக்குகளில் தேடப்படும் கிரிமினல்கள் அமெரிக்காவின் ஃப்ளாரிடாவில் எல்லா சௌகர்யங்களுடன் வசித்து வருகிறார்கள்.

‘பேனா வடிவிலான விஷ ஊசி’ என இது போல் அமெரிக்க மூளைகள் புதிய வடிவங்களை, நுட்பங்களை சிந்தித்தவண்ணம் கடந்த ஐம்பது ஆண்டுகளை கழித்துள்ளது. நந்தவனத்தில் ஓர் ஆண்டி..............

அபாயகரமான சூழ்நிலைகள், அச்சுறுத்தல்களால் ஃபிடலின் வாழ்க்கை சதா உருமாறிக்கொண்டேயிருந்தது. ஆட்சி பொறுப்பேற்று பல வருடங்கள் அலுவலக வேலைகளை முடித்துவிட்டு காலார நடப்பது, ஃபிடலின் வாடிக்கையாக இருந்தது. காலார நடப்பது, மக்களுடன் உரையாடுவது, நலம் விசாரிப்பது என உலகம் வியக்கும் அதிபராக தன் நாட்டு ஜனங்களின் ஆதர்சம் பெற்றவராக திகழ்ந்தார். அவருடைய மனவிருப்பத்திற்கு பாதுகாப்பு அதிகாரிகள் தடை விதித்தனர். ஃபிடலை போல உருவம் உள்ள பலரை உதவியாகப் பயன்படுத்தினார்கள். ஃபிடலுக்கு ஹவானா நகரத்தில் 20 வசிப்பிடங்கள் இருந்தன. அவர் எங்கு வசிக்கிறார் என்பது சிதம்பர ரகசியம்.

நம் சூழலுடன் பொறுத்தி பார்த்தால் வேடிக்கையாக உள்ளது. உப்பு பெறாத அமைச்சருக்கு கூட பெண்டாட்டிகள், வைப்பாட்டிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து வீடுகள். எல்லா வீடுகளுக்கும் என சகல பாதுகாப்பு, பூனைப்படைகள் வேறு. சோதனை வேதனை எல்லாம் மனதில் தைக்கிறது.

கடந்த சில வாரங்களாக குடலில் ஏற்பட்ட ரத்தக் கசிவால் அறுவைசிகிச்சைக்கு பிறகு ஓய்வு எடுத்து வருகிறார் ஃபிடல். தற்காலிகமாக துணை ஜனாதிபதி ராவுல் காஸ்ட்ரோவிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்துள்ளார். ராவுல், ஃபிடல், சே இந்த மூவரும் தான் ஃபாடிஸ்டா அரசை வீழ்த்தி அங்கு சோசலிச கட்டுமானத்தை க்யூப மண்ணில் ஏற்படுத்தியவர்கள்.

க்யூப புரட்சிகர யுத்தம் துவங்கி களத்தின் முன்னணியில் இருந்து வருபவர் ராவுல். ஆனால் அவரது பணிகளை பின்னுக்கு தள்ளி அவரை ஃபிடலின் தம்பி என வாரிசு அரசியல் அளவுக்கு அமெரிக்க ஊடகங்கள் சித்தரித்து வருகிறது.

மறுபுறம் க்யூப கடல் எல்லைக்குள் ஏராளமான எண்ணெய் வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த எண்ணெய் வளங்களை அபகரிக்க அமெரிக்க நிறுவனங்கள் எச்சில் ஒழுக காத்து நிற்கிறது. ஆனால் அமெரிக்க அரசாங்கத்தின் வர்த்தக தடைகள் அவர்களது கைகளை கட்டியுள்ளது. ஒரு வேளை ராவுல் ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் வர்த்தக தடைகளை தளர்த்தி - எங்களுக்கு ஃபிடல் ஆகாதவர், ராவுல் வந்தது உலக மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தி, இனி பொருளாதார தடைகள் இல்லை எனக் கூறி அமெரிக்க நிறுவனங்கள் க்யூப கடலில் நீந்தலாம். அந்த கதையை நாம் நேரடி ஒளிபரப்பாக பார்க்கலாம்.

மருத்துவமனையில் இருக்கும் ஃபிடலுக்கு பரிசு பொருட்கள், வாழ்த்துச் செய்திகள் குவிந்த வண்ணம் உள்ளது. காஸ்ட்ரோவை கொல்ல இதில் கூட பல மறைகருவிகள் இருக்கலாம். பாதுகாப்பு அதிகாரிகளின் பெரும்படை பொருட்களை சோதனையிட்டு வருகிறது. உலகம் முழுவதிலும் மக்களின் வாழ்த்துக்கள், பிராத்தனைகள் ஃபிடலை சென்றடைந்து கொண்டேயிருக்கிறது. குடிமைச் சமூக பொது புத்தியின் ஆதர்ச நாயகர் ஃபிடல் மீண்டும் நம்மிடையே உரையாற்ற வந்து கொண்டிருக்கிறார்.

ஆதாரம் : 638 ways to kill Fidel Castro - Duncan Campbell - (Guardian Newspaper)

Pin It