மனித வாழ்வில் சாதியப் பாகுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் காலந்தோறும் சூழ்நிலைக்கேற்ப இருந்து கொண்டுதான் உள்ளன. இப்பிரிவினைகளால் வாழ்க்கையில் பல்வேறு துன்பங்களை ஒடுக்கப்பட்ட மக்கள் சந்திக்கின்றனர். அப்படிப்பட்ட நிகழ்வுகளின் எதார்த்தங்களைப் படைப்புகள் வழியே எழுத்துரு கொடுக்கும் செயல் நடந்துள்ளது,நடக்கின்றன. அந்த அடிப்படையில் வட்டாரவாசம் வீசும் வாழ்க்கைச் சூழலில் வீட்டை விட்டு வெளியேறிய காதலர்களை மையப்படுத்தி இந் நாவல் முன்னெடுக்கப்பட்டுள்ளது,

வீட்டை விட்டு வந்த காதலர்களுக்கு ஒர் இரவு அடைக்கலம் கொடுக்கும் குடும்பச் சூழலையும் காதலர்களின் வீட்டுச்சூழல் மற்றும் ஊர்களையும் களமாகக் கொண்டு கதை நகர்கிறது. ஒரு நாள் இரவில் நடக்கும் நிகழ்வுகளைக் கொண்டு எழுதப்பட்ட இந்நாவல் புதுமைப்பித்தனின், "ஒரு நாள் கழிந்தது" அண்ணாவின் "ஓர் இரவு" போன்ற படைப்புகளின் வரிசையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்ச் சினிமா பாணியில் காதலர்களை மையப்படுத்திக் கொண்டு அதனைச் சுற்றி, எதார்த்த நிகழ்வுகள் பின்னப்பட்டுள்ளன. எதார்த்தங்களுக்கு, இடையே கற்பனைகளும் கலந்துள்ளன, சமகால வாழ்வில் நிகழும் எதார்த்தங்களை ஒரே வரியில் சுட்டிக் காட்டுகின்றார் இந்நூல் ஆசிரியர்.

"நாகரிகங் கூடக்கூட மனுசனுக்கு சோம்பேறித்தனம் அதிகமாகி அக்குருமம் பெருகுது" என்று கதாபாத்திரங்கள் வழி குறிப்பிட்டுச் சொல்கிறார், இது போன்று வாழ்க்கைச் சூழலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை நாவல் முழுக்க இழையோட விட்டுள்ளார். காதலர்களை முதன்மையாகக் கொண்டாலும் ஆசிரியர் தன்னுடைய கம்யூனிச சிந்தனைகளை "முருகவேல்" "குமார்" என்ற இரு பாத்திரங்கள் மூலம் நாவலின் பின்பாதியில் பதிவு செய்துள்ளார், சாதியப் பாகுபாடு காணப்படினும் ஒரு சாதிக்குள் ஏற்படும் வர்க்கப் போராட்டத்தையே நாவலின் மையக்கருத்தாக வலியுறுத்தியுள்ளார்.

நாவலில் காணப்படும் மொழி நடையோ மக்கள் பேசும் இயல்பு கெடாமல் எழுத்துருவம் பெற்றுள்ளது. இது ஆசிரியர் தனக்கானதொரு நடையாகக் கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது, மணிப்பிரவாள நடை போன்ற ஒர் தன்மையும் காணப்படுகின்றன. வட்டார வழக்காறுகளில் ஒன்றான பழமொழிகள் நாவலின் இறுதிவரை ஆங்காங்கே சூழலின் தன்மைக்கேற்ப பயன்படுத்தப்பட்டுள்ளது. பழமொழிகள் போன்று உவமைகளையும் கையாண்டுள்ளார். குடிசையின் கீற்றுகள் வழி நிலவொளி விழுவதை விண்ணில் காணப்படும் நட்சத்திரங்களுக்கு உவமையாக, "பொத்தல் விழுந்த கிடகு பந்தலைப் போல" ஆகிய வட்டார வழக்குச் சொற்களை ஆவணப்படுத்தும் ஒரு நோக்கமும் நாவலில் நிகழ்ந்துள்ளது.

ஓர் இரவு முழுதும் நடக்கும் நிகழ்வுகளைப் பின்னிப் புனைந்த இந்நாவல் பொழுது புலரும் போது முற்றுப் பெறாமலே முடிகிறது, இது நாவலின் முடிவை வாசகர்களின் சிந்தனைக்கே விட்டுச் செல்வதாக உள்ளது. படிப்பவர்களின் மனதை நாவலைச் சுற்றியே வட்டமிட வைக்கும் தன்மையாக நாவலில் சில இடங்களில் அமங்கலச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார், அவை வலிந்து சேர்க்கப்பட்டதாகவே காணப்படுகிறது.

முற்றாத இரவொன்றில், ம. காமுத்துரை, பாரதி புத்தகாலயம், சென்னை-18, பக்: 144 , ரு.60

Pin It