கேப்டன் லட்சுமி சேகலின் சுயசரிதையான ‘புரட்சியின் நாட்களில் ஓர் அரசியல் போராளியின் நினைவலைகள்’ இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களை நமக்கு எடுத்துரைக்கிறது. இந்திய வரலாற்றில், இந்திய தேசிய இராணுவம் பற்றி, பள்ளிக்கூடங்களிலோ கல்லூரிகளிலோ நாம் அதிகம் கற்றதில்லை. இந்தியாவிற்கு வெளியிலிருந்து, இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்களின் வீர வாழ்க்கையை எடுத்துரைக்கிறது இந்த சுயசரிதை.

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்று இருந்த காலகட்டத்திலேயே பெண்களின் கையில் ஆயுதம் கொடுத்து இராணுவப் பயிற்சியளித்தார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அவர் தலைமையில் இயங்கிய இந்திய தேசிய இராணுவத்தின், பெண்கள் பிரிவான, ஜான்சி ராணி படைப்பிரிவின் தலைமைப் பொறுப்பேற்றவர்தான் கேப்டன் லட்சுமி சேகல். தமிழில் 128 பக்கங்களில் அச்சிடப்பட்டுள்ள இவரது நினைவலைகள், ஒரு பெண்மணியின் சுயசரிதையாக மட்டும் அல்லாமல், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களை நமக்கு எடுத்துரைக்கும் இரத்தமும் சதையும் கலந்த சரித்திரமாகவும் விளங்குகிறது, பெரும்பாலும் சுயசரிதைகள் பல்வேறு நிகழ்ச்சிகளைப் பட்டியலிட்டுத்தரும் அட்டவணையாகத்தான் இருக்கும்.

பிறந்த வருடம், படித்த வருடம், வேலைக்குச் சென்ற வருடம், வாழ்நாளின் முக்கிய நிகழ்வுகளின் பட்டியல், இறுதி நாட்கள் என்று ஒரு வரையறுக்கப்பட்ட சூத்திரத்தில்தான் எழுதப்பட்டிருக்கும். ஆனால் இந்த நூலில் இவையனைத்தும் ‘வாழ்க்கை நிகழ்ச்சிகள்’ என்று முதல் பக்கத்திலேயே பட்டியலிடப்பட்டுள்ளன. லட்சுமி சேகல் யார் என்று கேட்பவர்களுக்கு இந்த ஒரு பக்கமே போதும்.

இந்திய தேசிய இராணுவத்தின் ஜான்சிராணி படைப்பிரிவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்; நேதாஜியின் ‘ஆசாத் ஹிந்த் அரசின் ஒரே பெண் அமைச்சர்; அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத்தலைவராக பதவி வகித்தவர்; இவருடைய மகள் சுபாஷினி அலி சி.பி.எம்.மின் மத்தியக் குழு உறுப்பினர்; குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல்கலாமை எதிர்த்துப் போட்டியிட்டவர்; இந்திய அரசு பத்மபூஷண் விருது கொடுத்து இவரைக் கௌரவித்துள்ளது’ என்ற தகவல்கள் எல்லாம் முதல் பக்கத்திலேயே வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் ஒளிந்துகொண்டுள்ள, ஒரு வீராங்கனையின் துடிதுடிப்பான வாழ்க்கைப் போராட்டம் எஞ்சியுள்ள பக்கங்களில் வாசகரை வரவேற்கிறது.

புரட்சியாளர்கள் பிறப்பதில்லை, அவர்கள் உருவாகிறார்கள். ஒவ்வொரு புரட்சியாளரும் பல்வேறு கருத்தியலை உள்வாங்கிக்கொண்டு, எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது என்று ஆராய்ந்துதான் பரிணமிக்கிறார். ஒவ்வொரு புரட்சியாளரும் சிந்தனை ரீதியாக பரிணாம வளர்ச்சி பெற்றுதான் சமூகக் களத்தில் இறங்குகிறார். லட்சுமி என்ற இளம் பெண் மருத்துவராகி, காங்கிரஸ் கட்சியின் அனுதாபியாகி, பின்னர் கேப்டன் லட்சுமியாக ஆயுதமேந்தி, இறுதி நாட்களில் தோழர் லட்சுமியாக மார்க்சிய பரிணாமம் அடைவதை, அவரது சிந்தனை ஊட்டங்களுடன் இந்நூல் உரைக்கிறது. இந்தப் பரிணாம வளர்ச்சிக்கு பின் இருந்த சிந்தனை தெளிவுகளும் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.

இவருடைய தந்தை டாக்டர்.எஸ்.சுவாமிநாதன் அந்தக் காலத்திலேயே மதக் கட்டுபாடுகளை எதிர்த்து, வெளிநாடு சென்று கல்வி கற்று வழக்கறிஞரானவர். தாய் அம்மு சுவாமிநாதன் காங்கிரஸ் தொண்டராக இருந்து, பிற்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினரானவர். குழந்தைப் பருவத்தில் மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டதால், வெளிநாட்டுக் கல்வியைத் துறந்துள்ளார் லட்சுமி. காந்தியின் அகிம்சை வழியைத்தான் முதலில் ஆதரித்திருக்கிறார். ‘மகாத்மா காந்தியை நாங்கள் இரட்சகனாகப் பார்த்தோம். சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கடுமையான லத்திகளை எதிர்கொள்ளும்பொழுது அகிம்சையைக் காப்பாற்றியபடி நிற்பது எவ்வளவு சிரமமான காரியமாக இருந்தது என்பதை நான் இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன்’ என்று கூறும் லட்சுமி, பின்னாளில் துப்பாக்கி ஏந்தி போராடியதுதான் சரித்திரம் ஏற்படுத்திய மாறுதல்.

கவிக்குயில் சரோஜினி நாயுடுவைத்தான் பள்ளிக்கூட வரலாறு நமக்குக் கற்பித்துள்ளது. ஆனால் அவருடைய சகோதரியான சுபாசினியை நாம் அறியோம். சுபாசினிதான் லட்சுமிக்கு உலக விவகாரங்களையும், இரண்டாம் உலகப்போர் பற்றியும், கம்யூனிசம் பற்றியும் அறிமுகப்படுத்தியுள்ளார். ‘ஹிட்லரின் பாசிசத்திற்கு முதலில் இரையானவர்கள் கம்யூனிஸ்டுகள்தான். ஆனால் அவர்களுடைய தியாகம் போதிய அளவு கவனம் செலுத்தப்படாமல் போய்விட்டது’ என்று கூறிய சுபாசினி இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சியுடன் தொடர்பு கொண்டவர்.

1940ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு மருத்துவ பணிக்காக சென்ற லட்சுமி, 1943ஆம் ஆண்டு இந்திய தேசிய இராணுவத்தில் இணைகிறார். அன்றைய சிங்கப்பூரின் நிலை, சிங்கப்பூருக்கு உழைக்கச் சென்ற சீன, மலேய, தமிழ் மக்களின் வாழ்க்கை, ஜப்பான் தாக்குதல், தென்கிழக்கு ஆசியாவின் அரசியல் மாற்றங்கள் குறித்த பல்வேறு தகவல்களைத் தருகிறார் லட்சுமி.

இந்திய தேசிய இராணுவத்தின் போர்க்களத்தைப் படம் பிடித்துக்காட்டுகிறது இந்நூல். இந்தப் போர்க்களத்திற்கு இடம் பிடித்தது, ஆயுதம் சேகரித்தது, ஆட்களைக் கண்டறிந்தது, பயிற்சி, தலைமை, கொள்கை, போர், காயங்கள், சிக்கல்கள், அங்கீகார மறுப்பு, இவர்கள் பெயரை வைத்து ஓட்டு வாங்கிய சந்தர்ப்பவாதிகள் என இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பல்வேறு பக்கங்களை எடுத்துரைக்கிறார் லட்சுமி.

நேதாஜி வருகை என்ற அத்தியாயத்தில், இந்திய வரலாறு மறைத்த நேதாஜியின் உண்மை குணம், தோழமை, பெண்ணுரிமைச் சிந்தனை, தலைமைப் பண்பு, சர்வதேச அறிவு மற்ற நாடுகளின் சுதந்திரப் போராட்டங்கள் பற்றிய ஆழமான அறிவு, இராஜதந்திரம், அவரை பிரிட்டிஷார் கைது செய்தது, கைதுக்குப்பின் அவர் கடை பிடித்த சாகும் வரை உண்ணாவிரதம், சிறையில் அவர் இறக்க நேர்ந்தால் வங்காளத்தில் வெடிக்கக்கூடிய போராட்டங்கள் குறித்து பீதியடைந்த பிரிட்டிஷார் நேதாஜியை வீட்டுக்காவலில் வைத்தது, காவல்துறை ஒற்றர்களின் பார்வையில் படாமல் அங்கிருந்து தப்பிச்சென்றது, கல்கத்தாவிலிருந்து பெர்லினுக்கு தரைவழியாக ஆபத்தான பயணம் மேற்கொண்டது, இந்தியச் சுதந்திரத்திற்காக அவர் ஜெர்மனி, ஜப்பான், பர்மா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் அலைந்து திரிந்து பட்ட பாடு, ஆகியவற்றை தன் அனுபவங்களின் மூலம் உரைக்கிறார்.

இந்திய தேசிய இராணுவம் என்றால் நேதாஜி என்று மட்டும் சரித்திரம் படித்தவர்களுக்கு ஓரளவு தெரிந்திருக்கும். ஆனால் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து இந்தியன் இன்டிபெண்டன்ஸ் லீக் என்ற அமைப்பையும், அந்த அமைப்பின் இராணுவமாக இந்திய தேசிய இராணுவத்தையும் தோற்றுவித்தவர்களான ஜெனரல் மோகன்சிங், ராஷ் பிகாரி கோஷ் ஆகியோர்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இந்திய தேசிய இராணுவத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு இவர்கள்தான் நேதாஜிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த அத்தியாயத்தைப் படிக்கும் யாவர்க்கும், இந்திய சுதந்திரத்திற்காக, வெளிநாடுகளில் இருந்த இந்தியர்கள் அனைவரையும் அணிதிரட்டி, போர்ப்படை அமைத்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிட வைத்த இந்திய தேசிய இராணுவம் பற்றியும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றியும் மேலும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எழுவது திண்ணம்.

இந்திய வரலாறு மறந்த, இந்தியாவிற்காகப் போராடி இன்னுயிர் நீத்த தியாகிகள் பலரைப் பற்றி இந்நூல் தகவல் அளிக்கிறது. எல்லப்பா(படைச் செலவிற்காக ஆசாத் ஹிந்த் வங்கி தொடங்கிய தமிழர்), கே.பி.கேசவமேனன், உன்னி நாயர் (போர் விமர்சனக் கட்டுரையாளர், பின்னாளில் கொரியாவில் வைத்து கொல்லப்பட்டவர்), ஜான் சோம சுந்தரம், திருமதி தேவர், ஜானகி, பாப்பாத்தி ஆகியோர் உள்ளிட்ட பலரின் தியாகங்களை இந்நூல் நினைவுகூர்ந்துள்ளது.

இந்தியாவில் இருந்த நேதாஜியின் எதிரிகள் அவரை பாசிஸ்டுகள் என்று குற்றம்சாட்டினர். அவர்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக, நேதாஜி பற்றி ஜெர்மன் அயல்நாட்டுத் தூதரக அலுவலகத்தில் இருந்த அறிக்கை ஒன்றையும் சுட்டிக்காட்டியுள்ளார் லட்சுமி. ‘ஜப்பானியர்களுடைய உதவியை ஐ.என்.ஏ. ஏற்றுக்கொண்டாலும் அது ஒரு சுதந்திரப் படையாகவே செயல்பட வேண்டும்’ என்ற உறுதியில் நேதாஜி இருந்ததைதையும் ஜெர்மனி பற்றியும் ரஷ்யா பற்றியும் அவருக்கிருந்த கருத்து பற்றியும் இந்த அறிக்கை மூலம் அறியலாம்.

ஐ.என். ஏ. வீரர்கள் பிடிபட்டால், இராணுவ நீதிமன்றங்களை அணுகவேண்டுமேயன்றி, தற்கொலை செய்துகொள்ளக் கூடாது, அப்பொழுதுதான் ஐ.என்.ஏ.வைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்வார்கள் என்று நேதாஜி வலியுறுத்தியிருந்தார். பர்மா எல்லையில் இந்திய தேசிய இராணுவம் பிரிட்டிஷாரிடம் தோற்றபொழுது, ஐ.என்.ஏ. அதிகாரிகளான கர்னல் பி.கே.சேகல், தில்லான், ஷாநவாஸ் ஆகியோரை தில்லி செங்கோட்டையில் வைத்து விசாரித்தபோது, நாடெங்கும், குறிப்பாக கல்கத்தாவிலும் பம்பாயிலும் போராட்டங்கள் வெடித்தன. இந்திய மக்களிடம் இந்திய தேசிய இராணுவம் பற்றிய மதிப்பு அதிகரித்து வந்தது.

இந்திய தேசிய இராணுவத்தில் போராடி இன்னுயிர் ஈந்தவர்களின் எலும்புக்கூடுகள் இப்பொழுதும் இந்தோ பர்மா எல்லையில் எங்கோ இறைந்து புதைந்து கிடக்கின்றன. சுதந்திர இந்தியா அவர்களை எந்தவிதத்திலும் அங்கீகரிக்கவில்லை. அவர்களில் பலருக்கு ஓய்வூதியம் கூட மறுக்கப்பட்டுள்ளது என்ற தகவலைப் படிக்கையில், ஒவ்வொரு வாசகரின் மனதிலும் குற்ற உணர்வு எழுகிறது.

சுதந்திர இந்தியாவில் தான் சந்தித்த ஆட்சியாளர்களுள், தனக்கு திருப்தியளிக்குமாறு நாட்டுப் பற்றுடன் ஆட்சி செய்பவர்கள் கம்யூனிஸ்டுகள்தான் என்ற முடிவிற்கு வந்த கேப்டன் லட்சுமி, ஜோதிபாசுவுடன் பங்களாதேஷ் போரின் போது இணைந்து அகதிகளுக்கு சேவையாற்றியதை பெருமிதமாக உணர்கிறார். அதன் பின்னர், ஜனநாயக மாதர் சங்கத்தில் இணைந்து தோழர் லட்சுமியாக, அடுத்த பரிமாணத்தில் தன் சமூக சேவையைத் தொடர்கிறார்.

‘நம்முடைய நிலைக்குப் பொருத்தமான ஒரு சோசலிசம் மட்டுமே நம்முடைய பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் என்பதுதான் அன்றும் இன்றும் என்றும் என் நம்பிக்கை’ என்கிறார் கேப்டன் லட்சுமி சேகல். இந்நூலைப் படித்து முடிக்கையில் கல்லூ£ரி நாட்களில் தொடங்கி இன்று வரை, அரசியல் மூலமாகவோ, மருத்துவம் மூலமாகவோ, போராட்டம் மூலமாகவோ சமூகப்பணியாற்றி மனித குலத்திற்கான சேவைக்காக தன் வாழ்நாளின் ஒவ்வொரு நிமிடங்களையும் செலவழித்துள்ளார் கேப்டன் லட்சுமி என்பது விளங்கும்.

இந்நூலை சுயசரித்திரம் என்று கூறுவது பொருந்தும். வரலாற்றை மொழிபெயர்க்கும் சிரமமான காரியத்தை செவ்வனே செய்து, சீரான மொழிபெயர்ப்பைத் தந்திருக்கும் மு.ந.புகழேந்தி அவர்களை வாசகர்கள் அவசியம் பாராட்ட வேண்டும். ஒவ்வொரு வரியிலும் அவரது உழைப்பு தெரிகிறது. இந்திய சுதந்திரம் ‘கத்தியின்றி இரத்தமின்றி’ வாங்கிய சுதந்திரம் அல்ல, என்பதை இந்நூலைப் படித்தால் வாசகர்கள் உணர்ந்து கொள்ள முடியும். இந்நூல் ஒவ்வொரு இந்தியரும் படிக்க வேண்டிய வரலாற்று ஆவணம்.