காற்று, நீர், நிலம், நெருப்பு, போன்றே நவீன உலகின் இன்னொரு சக்தியாக திகழ்வது மின்சாரம் என்பது மிகையல்ல. மின்சாரம் மற்ற சக்திகளைப் போலல்லாமல் அதாவது அடிப்படை சேவை என்ற நிலையிலிருந்து,  வணிகப் பண்டமாக மாற்றி சந்தை (வணிகம்) மூலமாக பயன்பெறக் கூடியவை என்பது வேதனைக்குரியது என்றாலும், இவை எல்லா காலங்களிலும் தங்குதடையற்று கிடைப்பது அரிதாகிவிட்டது.

மின்வெட்டினால் தமிழகமெங்கும் தொழிற்சாலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு தொழில் உற்பத்தியும் வெகுவாக குறைந்து வருகிறது. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. இதனால், ஏற்கனவே இருந்த வேலையில்லா திண்டாட்டம் பன்மடங்காகி விட்டது. விசைத்தறி கூடங்கள் பல மூடப்பட்டுள்ளன. கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பஞ்சாலைகள் மற்றும் பவுண்டரிகள் கதவடைப்பு செய்யப்பட்டுள்ளன. நவம்பர் மாத முதல் வாரத்திலிருந்து சென்னையின் பெரிய தொழிற்பேட்டைகள் உள்ள அம்பத்தூர் மற்றும் கிண்டியில் பல சிறிய மற்றும் நடுத்தர தொழிற் நிறுவனங்களின் வெல்டிங் மற்றும் ட்ரில்லிங் இயந்திரங்கள் செயலிழந்துள்ளன. கோவையில், 2003 - 2007 வரை ஒரு மில்லியன் தொழிலாளர்களை கொண்டிருந்த கோவை நூற்பாலைகளில், பெரும்பான்மையான தொழிலாளர்கள் வேலையற்றவராயினர்.

Karunanidhiநகரங்களில் மின்சாரம் நிறுத்தப்படுவதனால் வாணிபம் பாதிக்கப்பட்டு வியாபாரிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர். சிறு தொழிற்சாலைகளில் மின்வெட்டினால் உற்பத்தி முடங்கி வருவதால் சிறு தொழில்களும் நசிந்து வருகின்றன. கிராமங்களில் பெரும்பாலும் இரவு நேரங்களில் இருண்டே கிடக்கின்றன.

இத்தனைக்கும் காரணமாய் செல்லப்படுவது சர்வதேச சந்தையில் மின் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் விலையேற்றம், மின் உற்பத்திக்கான மூலதனச் செலவுகள் அதிகரிக்கத் தொடங்கியது, மின்வெட்டை சமாளிக்க மின்சாரக் கட்டணத்தைக் கூட்டுவது என்றேல்லாம் நாள்தோரும் ஊடகங்களின் துணையோடு தொடர்மின் வெட்டிற்கான காரணங்களாக அரசு கூறுகிறது, மேலும் தமிழத்தில் தொடர்ந்து வரும் மின்வெட்டுக்கு, பருவமழை குறைந்து போனதுதான் காரணம் என்கின்றனர் அரசு தரப்பினர். ஆனால், தமிழகம் எப்போதும் பருவ மழையை சீராகப் பெறும் மாநிலமல்ல என்பதையும் அரசு தரப்பினரும் நன்கறிவர். பருவ மழை குறையும்போது மின்வெட்டு சிக்கல் மிகத்தீவிரமாகிவிடும் என்பதும் அவர்கள் அறிந்ததே. தமிழகத்தின் மின்சாரத் தேவைக்கேற்ப மின் உற்பத்தியை அதிகரிக்காததே தொடர் மின்வெட்டுக்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்று என்றாலும், வல்லாதிக்க சர்வதேச காரணிகளும் முக்கிய பங்கு வகிக்கிறது.

தமிழகத்தில், தற்போது ஒரு நாளைக்கு 8800 முதல் 9400 மெகாவாட் மின்சாரம் அத்தியாவசியத் தேவையாக உள்ளது. மின்சாரத் தேவைக்கு ஏற்றவாறு போதியளவு மின்உற்பத்தி நிலையங்கள் அமைக்க, தமிழக அரசு மறுத்து வருகிறது. காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 80 சதவீதமாக குறைந்துள்ளது. தமிழகத்திலுள்ள நீர் மின் நிலையங்களில் 7,835 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. நாளொன்றுக்கு மின்பற்றாக்குறை 1350 மெகாவாட் என்றளவில் உள்ளது.

1948 இல் இந்திய மின்வழங்கல் சட்டத்தின்படி, மாநிலங்களில் மின்வாரியங்கள் அமைக்கப்பட்டன. தமிழ்நாடு மின்வாரிய உருவாக்கத்திற்கு முன் தமிழக மின் உற்பத்தி நிலையங்களின் நிறுவு திறன் 256 மெகாவாட் ஆக இருந்தது. ஆனால், அப்போதைய உச்சமின் தேவை வெறும் 172 மெகாவாட் மட்டுமே. 1957 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மின்சார வாரியம் தன் சொந்த மூலதனத்தில், மின் உற்பத்தி நிலையங்களாலும், மத்திய அரசிடமிருந்து பெற்ற மின்சாரத்தாலும் இத்தேவையை பூர்த்தி செய்தது. இக்காலகட்டத்தில், தொழில் வளர்ச்சியோடு விவசாயமும், தனிமனித நுகர்வும் கணிசமாக வளர்ந்தது. தமிழகத்தில், 1957 முதல் 1990 வரையிலும் மின்வளர்ச்சி சீராக இருந்தது. தமிழகம் உபரி மின்சக்தியைக் கொண்டிருக்கும் மாநிலமாக திகழ்ந்தது.

ஆனால், 90 களுக்குப் பின் நிலமை மோசமடையத் தொடங்கியதற்கான கரணங்களைப் பார்த்தோமானால் பன்னாட்டு கம்பெனிகளின் வருகையாலும் மற்றும் வல்லரசிய சந்தைக்கான மலிவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் விசைத்தறி, பனியன், உற்பத்தி தொழிற்சாலைகள் பல்கிப் பெருக ஆரம்பித்தன. சமீபகாலமாக வந்த சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஐ.டி நிறுவனங்கள் போன்றவற்றோடு, நவீன நுகர் பொருட்களின் மின்சாரப் பயன்பாடு அதிகரித்தது. இதன் விளைவாக, தமிழகத்தின் மின் நுகர்வு தீவிரமாக அதிகரிக்கத் தொடங்கியது.

தமிழகத்தின் மின்தேவையை மட்டும் பட்டியலிட்டு பார்த்தோமானால். 31.03.1951 இல் 110 மெகாவாட்டில் தொடங்கி

1951 - 1956 ---- 172 மெகாவாட்

1956 - 1961 ---- 301 மெகாவாட்

1961 - 1969 ---- 1370 மெகாவாட்

1969 - 1974 ---- 1470 மெகாவாட்

1974 - 1978 ---- 2254 மெகாவாட்

1978 - 1980 ---- 2424 மெகாவாட்

1980 - 1985 ---- 2719 மெகாவாட்

1985 - 1990 ---- 3344 மெகாவாட்

1990 - 1991 ---- 5470 மெகாவாட்

1991 - 1997 ---- 6019 மெகாவாட்

1997 - 2002 ---- 7924 மெகாவாட்

2002 - 2007 ---- 10098 மெகாவாட் என பெருகிக்கொண்டே செல்கிறது.

இப்பட்டியல் 80 களுக்குப் பிறகிலிருந்து, 2000 த்துக்குப் பிறகும் தமிழகத்தின் மின்தேவை பெருமளவு அதிகரித்து, 1990 - 2010 காலக்கட்டத்தில் 100 சதவீதம் மின்தேவை அதிகரித்துள்ளதை காணமுடிகிறது. இத்தகைய வளர்ச்சி தவிர்க்க முடியாதது. சமூகத்தின் பொருளியல் நிலைமைகளை ஒட்டி, குறிப்பாக உலகமயம்,தனியார்மயம், தாராளமயக் வல்லரசிய கொள்கைகளால் ஊக்கம் பெற்ற வளர்ச்சி என்று சொல்லலாம்.

இவ்வளர்ச்சி எதிர்பாராமல் நிகழ்ந்ததல்ல. அதேபோல சிக்கல் மின் தேவை அதிகரித்ததாலும் இல்லை. மாறாக, தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தி நடக்கவில்லை என்பதே உண்மை. 1997 ஆம் ஆண்டே 2010 வாக்கில் 19579 மெகாவாட் மின்சாரத் தேவை ஏற்படுமென மின்வாரியம் அறிக்கை அளித்தது. ஆனால் அதன்படி மின்உற்பத்தி செய்யப்படவில்லை என்பது இப்போதுள்ள மின் பற்றாக்குறை மிகத் துல்லியமாக தெளிவூட்டுகிறது. ஆகவே மின் வெட்டு தவிர்க்க முடியாததாகி விட்டது. இத்தேவைக்கு தமிழக அரசால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

1993 க்குப்பிறகு புதிய காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் நிறுத்தப்பட்டு, 1996 க்குப்பிறகு அனல்மின் நிலையங்கள் அமைக்கும் முயற்சி கைவிடப்பட்டு, 1998 க்குப்பிறகு நீர் மின்நிலைய திட்டங்களை முற்றிலும் நிராகரிக்கப்பட்டு பல காலம் கடந்து 400 மெகாவாட் திறனுள்ள எரிவாயு மின் நிலையங்கள் அமைக்கப்பட்டன. மொத்தத்தில், தமிழக அரசு 1993 இல் இருந்தே மின் உற்பத்தியை அதிகரிக்கும் பொறுப்பை நிறைவேற்றவில்லை. குறைந்தபட்சம் 2000 மெகாவாட் மின்திறனுள்ள மின்னுற்பத்தி இயந்திரங்களை மின் கட்டமைப்பில் கூடுதலாக நிறுவியிருந்தால், அவை 75 சதவீதம் இயங்கு திறனோடிருந்தாலும் கூட இந்த கடுமையான மின்வெட்டை தவிர்த்திருக்க முடியும். ஆனால் தமிழக அரசு இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மின் உற்பத்தி நிலைய மேம்பாட்டிற்கான நிதியை, கடந்த ஐந்தாண்டு திட்டத்தில் ரூ.1000 கோடியிலிருந்து ரூ.800 கோடியாக குறைத்துவிட்டது.

வல்லாதிக்க சர்வதேச காரணிகள்

1991 இல் நரசிம்மராவ் அரசின் புதிய பொருளாதாரக் கொள்கையின் தொடர்ச்சியாக, மின்துறையை தனியார் மயமாக்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மின் திட்டங்களிலும், அடிப்படைக் கட்டுமானங்களிலும் தனியார் முதலீட்டை எதிர்நோக்கி தாராளமயமாக வரவேற்றனர். உலக வங்கியிலும், ஆசிய வங்கியிலும் கடன் பெற்றதால் வல்லரசுகளின் கட்டளைகளுக்கு பனியத் தொடங்கியது இந்திய அரசு. அதன் விளைவாக 100 சதவீத வெளிநாட்டு உடமை, 32 சதவீத இலாபம், ஏலம் இல்லாத நேரடி ஒப்பந்தம் போன்ற நிபந்தனைக்குள்ளாயினர். மூன்றாண்டுகளுக்குள் 90,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய 243 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. ஆனால், அக்டோபர் 2001 வரை 2700 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்பட்டது.

இன்று கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் வல்லரசிய நாடுகளில், உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிற்சாலைகள் தேக்கநிலை ஏற்பட்டுள்ளதின் விளைவாக வல்லாதிக்கம் தனது சொந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக, இந்தியா போன்ற பின்தங்கிய நாடுகளின் மீது அவர்களின் நெருக்கடியை சுமத்துகின்றனர். அதன் ஒரு பகுதியாக மின்சக்கித் துறை சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. எப்படியெனில் வல்லாதிக்க நாடுகளில் ஏற்கனவே போதுமான அளவிற்கு மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு விட்டதால், அங்கு தயாரிக்கப்படுகின்ற மின் கட்டுமான இயந்திரங்களுக்கு உள்நாட்டு சந்தை இல்லாமல் போனது. எனவே வல்லரசுகள் மின் கட்டுமான இயந்திரங்களை விற்பதற்கான சந்தையாக இந்தியாவை மாற்றி வருகின்றன. இதனால் மின் உற்பத்திக்கான மூலதன செலவுகள் அதிகரிக்கத் தொடங்கியது. மின் உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலையேற்றம் சர்வதேச சந்தையைச் சார்ந்து அமைகின்றது.

இந்தியாவில் வல்லாதிக்க நாடுகள் புதிய மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்குவதின் மூலம் பெரு மதலீட்டோடு அதிக இலாபத்தில் மின்சாரத்தை விற்பதற்கான சந்தையாகவும் மாற்றியுள்ளன. இதனடிப்படையில் தனியார்துறையின் கீழ் புதிய தனியார் மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பது. இரண்டாவதாக, இயங்கும் அரசு சார்ந்த நிறுவனங்களை குறிப்பாக மாநில மின்சார வாரியங்களை தனியார் மயமாக்குவது என்று இரண்டு வகையில் சீர்திருத்தங்களை இந்திய அரசு நடைமுறைப்படுத்தியது. மின்சாரத்தை மானியம் எதுவும்மின்றி சந்தையில் தாராளமாக விற்பனை செய்வதே இச்சீர்திருத்தத்தின் முக்கிய நோக்கமாகும்.

தாராளமய, தனியார்மயக் கொள்கையின் பகுதியாக, மாநிலங்கள், தங்களுக்கு தேவையெனில் திருப்பி செலுத்தும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற வல்லாதிக்க நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்று மின்திட்டங்களை தொடங்கலாம் என்று அறிவித்தனர். ஒரிசா மாநிலம்தான், முதல்முறையாக இத்திட்டத்தின் அடிப்படையில் உலக வங்கியிடமிருந்து கடன் பெற்றது. இதன் பின் பல மாநிலங்கள் உலக வங்கியின் கடவுதவி பெற்று அதன் நிபந்தனைகளின் அடிப்படையில், மின்சக்தி துறை சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தின.

இக்காலக்கட்டத்தில், மின் உற்பத்தி நிலையங்களை தனியார் நிறுவனங்கள் நடத்துவது என்ற உலக வங்கியின் நிகழ்ச்சி நிரலை தமிழக அரசும் அரங்கேற்றத் துவங்கியது. தமிழக அரசு, மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் பொறுப்பை பல்வேறு சலுகைகளுடன் தனியார் மின்நிலையங்களிடம் அளித்தது. அவர்களிடமிருந்து மின்சாரத்தை அதிக விலைக்கு வாங்கும் ஒப்பந்தங்கள் போடபட்டடு, அதை செயல்படுத்த துவங்கின. தமிழக அரசு, தனியார் மின் உற்பத்தியாளர்களுடன் வணிக ஒப்பந்தங்களையும் போட்டுள்ளது. தேவையிருப்பினும், இல்லாதபோதும், ஒரு குறிப்பிட்ட அளவு மின்சக்தியை பெற்றுக் கொண்டதாக கணக்கிடப்பட்டு, அவர்கள் விதிக்கும் சந்தை விலையைத் தர வேண்டும் எனவும் ஒப்பந்தம் செய்துகொண்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, உற்பத்தி செய்கிற மின்சக்தியை 16 சதவீத இலாப உத்திரவாதத்துடன் சந்தைக்கு ஏற்றவாறு, உற்பத்தி செலவுகளுக்கு ஏற்ப விலை வைத்து, தனியார் மின்நிலையங்கள் தமிழக மின்வாரியத்திற்கு வழங்குகின்றன.

1993 ஆம் ஆண்டு முதல் காற்றாலை மின் உற்பத்தியில் 90 சதவீதம் மானியம், கடன் மற்றும் வரிச்சலுகையுடன் தனியார் மின் உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டது. மின்சார ஒழங்குமுறை ஆணையம்,1998 இல் உருவாக்கப்பட்டது. மைய, மாநில அளவில் முறைப்படுத்தப்பட்ட கமிசன்கள் தனியார் லைசன்ஸ் செயல்பாட்டை முறைப்படுத்த உருவாக்கப்பட்டன. 18 மாநிலங்கள் தனியார் மின்சார துறைக்கு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. மகாராஷ்டிரத்தில் என்ரான் உருவாக்கிய மின் உற்பத்தியானது மக்களை அதிகளவு சிக்கலில் ஆழ்த்தியது. ஒரிசா, ஆந்திரா, ஹரியானா, உத்திர பிரதேசம், இராஜஸ்தான் அகியவை இந்த சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தின.

இச்சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த மின்சார சட்டம், 2003 உருவாக்கப்பட்டது. இது தனியார் நிறுவனங்கள் மின் உற்பத்தி செய்ய சட்ட அங்கீகாரம் வழங்கியது. தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை விநியோகிப்பதற்கும் முழ உரிமை அளித்தது. 1910 மற்றும் 1948 மின்சார சட்டங்களால், நுகர்வோருக்கு வழங்கப்பட்ட பல சலுகைகளை இந்த சட்டம் ரத்து செய்தது. இச்சட்டம் மின்சாரத்தை வணிகமயமாக்கியது.

பல சலுகைகள் தந்தும் தனியார் மின்உற்பத்தி தமிழக தேவையை நிறைவேற்றும் அளவிற்கு அதிகரிக்கவில்லை. மொத்தம் 7700 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான திட்டங்களை ஒப்புக் கொண்ட தனியார் நிறுவனங்கள், கடந்த பத்தாண்டுகளில் வெறும் 1180 மெகாவாட் மின் உற்பத்திக்கான திட்டங்களையே நிறைவேற்றியுள்ளனர். உண்மையில் மக்களின் தேவையை பூர்த்திசெய்ய அரசு இத்திட்டங்களை நிறைவேற்றியிருக்குமேயானால், இன்று தமிழகத்தில் எவ்வித மின் பற்றாக்குறையும் மின் வெட்டும் இருந்திருக்காது. ஆனால் மின்சாரத்தை அடிப்படை சேவை என்ற நிலையிலிருந்து, வணிகப் பண்டமாக மாற்றிவிட்ட உலகமய - தாராளமயக் கொள்கைகள் இதை அனுமதிக்கவில்லை.

காற்றாலை உற்பத்தியில் எனர்கன், சுஜ்லான், வெஸ்டாஸ் வின்டெக், வெஸ்டார் ஆர்.ஆர்.பி உட்பட்ட பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள், மின் உற்பத்தியை செய்து வருகின்றன. இக்காற்றாலை இயந்திரங்கள் ஜெர்மனி, நார்வே, சுவீடன் போன்ற நாடுகளில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழக அரசு 19 மெகாவாட் மின்சாரத்தை அளிக்கவல்ல காற்றாலைகளை மட்டுமே நிறுவியுள்ளது. ஏறத்தாழ 3899.74 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் காற்றாலைகள் தனியாரிடமே உள்ளன. 30 சதவீத மின்சாரத்தை தனியார் நிறுவனங்களிடமிருந்து, மின்வாரியம் விலைக்கு வாங்குகிறது. தமிழகத்தில் காற்றாலைகள் உற்பத்தி செய்யும் மின்சாரத்துக்கு விலை குறைவாக கொடுக்கப்படுவதால், காற்றாலை நிறுவனங்கள் தமிழகத்தில் உற்பத்தி செய்வதை விட வட மாநிலங்களை நோக்கி செல்கின்றன. மின்சாரம் சந்தைப் பொருளாக்கப்பட்டதையொட்டி, தனியார் மின் உற்பத்தியாளர்கள், தாங்கள் உற்பத்தி செய்த மின்சாரத்தை நாட்டின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் எடுத்து சென்று, அதிக இலாபத்துடன் விற்க தமிழக அரசு, அனைத்து உதவிகளும் செய்கிறது.

தனியார் நிறுவனங்கள், தமக்கு இலாபம் கிடைக்காது என்ற நிலையில் மின் உற்பத்திக்கான போதிய ஆர்வம் காட்டவில்லை. அரசு இத்துறையிலிருந்து விலகிக்கொண்டது, தனியார் நிறுவனங்கள் லாப நோக்கத்துக்காக புதிய திட்டங்களை நிறைவேற்றாததும் தான் தமிழக மின் வெட்டுக்கான காரணம். அதேபோல தமிழக அரசு, மின்சாரத்தை அனைவருக்கும் சரிசமமாக விநியோகிப்பதற்கு மறுக்கும் அதேவேளையில் பன்னாட்டு நிறுவனங்கள் (சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஐ.டி நிறுவனங்கள்), பெரும் தொழிற்சாலைகளுக்கு 70 சதவீதம் தடையற்ற மின்சாரம் வழங்குகிறது.

தனியார்மயம்

மைய - மாநில அரசுகளின் தவறான கொள்கையால் ஒருபுறம் மின்வெட்டும், மறுபுரம் மின்வாரியமே திவாலாகிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் 2008 - 2009 ஆம் ஆண்டு மின்நுகர்வு 63,038 மெகாவாட். இதில் தமிழ்நாடு மின்சார வாரியம் நீர் மற்றும் காற்று மின் உற்பத்தி வாயிலாக 6,309 மெகாவாட் மின்சக்தியையும், அனல் மற்றும் எரிவாயு மின்உற்பத்தி வாயிலாக 23,172 மெகாவாட் மின்சக்தியையும், மத்திய அரசிடமிருந்து தனது உரிமைப் பங்காக 19 சதவீதத்தையும், மீதம் தனியாரிடமிருந்து பெற்றுள்ளது. தமிழக மின்சார வாரியம் தனது சொந்த வருமானத்தில் ஏறத்தாழ 50 சதவீதத் தொகையை தனியாரிடமிருந்து மின்சாரம் பெருவதற்காக செலவழித்துள்ளது. 92 - 93 காலக்கட்டத்தில் ரூ.2575.30 கோடி வருவாயைப் பெற்ற தமிழக மின்வாரியம், தனியாருக்கு மின்வாரியத்தை கொடுத்தபின்னர், தற்பொது நட்டத்தில் இயங்குகிறது.

தமிழக மின்வாரியம் தனியார் மின் உற்பத்தியாளர்களிடம் போட்டுள்ள ஒப்பந்தங்களை ரத்துசெய்து, அரசே ஏற்று நடத்தினால் ஆண்டுக்கு 1500 - 2000 கோடி வரை இலாபம் பெறும். இதன் மூலம் புதிய மின்கட்டமைப்புகளை உருவாக்க முடியும். இதற்கு ஆளும் வர்க்கம் தயாராக இல்லை. உண்மையில் மின்வாரியத்தின் நலிவுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று, தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவது. இதையே காரணங்காட்டி மின்வாரியம் மூடப்பட்டு, தனியார் வசம் ஒப்படைக்கும் திட்டமும் நடைப்பெற்று கொண்டிருக்கிறது. கடுமையான மின் தட்டுப்பாட்டை தீர்ப்பதற்கு மாறாக, தி.மு.க அரசு மேலும்மேலும் தனியாரிடம் மின் திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் செய்துகொண்டிருக்கிறது. 40,000 மெகாவாட் தனியார் மின் உற்பத்திக்கான ஒப்பந்தத்தை சமீபத்தில் தமிழக அரசு போட்டுள்ளது.

இன்று மின்சாரம் சந்தையில் வணிகப் பொருளாக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு கம்பெனிகள், வணிக உற்பத்தியாளர்கள் அவர்கள் உற்பத்தி செய்யும், மின் சாரத்தை நாட்டின் எந்த மூலைக்கும் எடுத்துச் சென்று, மிக இலாபத்துடன் விற்க வழிவகுக்கும் திட்டங்கள்தான் தமிழக அரசின் இந்த உலகமயமாக்கல் - தாராளமயமாக்கல் - தனியார்மயமாக்கல் கொள்கைகள். இக்கொள்கைகளை தமிழக அரசு வெகுவாக அரங்கேற்றுவதன் விளைவுதான் இந்த நீண்ட கால மின்வெட்டு.

மேலைநாடுகளின் மின்திட்டம்

நார்வே, கனடா (அல்பர்டா), அமெரிக்கா (கலிபோர்னியா) சந்தையில் சிறிய குழுக்கள் சந்தையை தீர்மானித்ததனால், மின் கட்டணம் அதிகரித்தது. அதேசமயம் மின்திறனும் மிக குறைந்த அளவே இருந்தது. 2000 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் ஒரு சிறிய குழு மின் உற்பத்தியில் ஈடுபட்டதனால், ஏற்பட்ட மின்சார நெருக்கடி கடுமையான விலையேற்றத்திற்கும் நாடே இருளில் மூழ்கும் நிலைக்கும் இட்டு சென்றது. இதன் விளைவாக அமெரிக்காவிலுள்ள பல கம்பெனிகள் அவர்களின் திட்டங்களை மறு கட்டமைக்க இயலவில்லை. அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியிலும் இருட்டடிப்பு நடைபெற்றது. 2003 ஆம் ஆண்டு இத்தாலியிலும் ஏனைய இடங்களிலும் மின்சாரம் வணிகமயமாக்கப்பட்டதனால், வணிகத்தில் ஈடுபட்டுள்ள நாடுகளின் வணிக நலன்களுக்கும் பாதுகாப்பான நம்பிக்கைக்குரிய வலைப்பின்னலுக்கு மிடையேயான முரண்பாடு தொடர்ந்தது.

பிலிப்பைன்சில், மின்துறையில் தவறான ஊகங்களினால் தனியார் முறையில் சரியான மாற்று திட்டங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமலிருந்ததனால், பிலிப்பைன்ஸ் இருளில் மூழ்கியது. காமரோனில் மின்சாரத் துறையின் வளர்ச்சியானது, அரசினால் நடத்தும் பொழுது வரும் வரலாற்று சிறப்புமிக்க அனுபவங்களை கணக்கில் கொள்ளாமல், ஐ.எம்.எப் -பும் உலக வங்கியும் விதித்த நிபந்தனைகளானது ஏகபோக உற்பத்தி, விநியோகம் நடைமுறைப்படுத்தப்பட்டதனால், கடுமையான நெருக்கடிக்கு இரையானது. பாகிஸ்தானில், தனியார் முதலீட்டாளர்களால் திட்டங்கள் வெற்றியடைந்தன, ஆனால் பொருளாதாரம் மற்றும் சுற்றுபுற சூழல் மீது மிகவும் பாதகமான தாக்கங்கள் ஏற்படுத்தப்பட்டது.

தாய்லாந்து, பின்லாந்து, தென் கொரியா, மெக்சிகோ, பிரேசில் ஆகிய நாடுகளின் அனுபவங்களை தொகுத்துப் பார்த்து, பல வளர்ந்து வரும் நாடுகள் மின்சாரத்தை தனியார் மயமாக்கும், தாராளமயமாக்கும் திட்டங்களை கைவிட்டுவிட்டன. மெக்சிகோவில் மின்சாரம் அரசு வசம் இருக்க வேண்டும் என்று அரசியல் அமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளதனால், இத்திட்டத்தை அங்கு நடைமுறைப்படுத்தும் திட்டம் கைவிடப்பட்டது. தாய்லாந்தில் பல சுய மின் உற்பத்தி மையங்கள், 1990 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டன. ஆனால் 2001 க்கு பிறகு, மேலும் தாராளமாக்கப்படும் திட்டங்கள் கைவிடப்பட்டன. விலையேற்றமம், சுற்றுபுறசூழல் பாதிக்கப்பட்டதை எதிர்த்தும் தொழிலாளர்கள் திரண்டெழுந்தனர். தனியார் மயமாக்கலை எதிர்த்தும், வெளிநாட்டு பங்குகள் வாங்கப்படுவதை எதிர்த்தும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்தனர். இதன் விளைவாக 2004 ஆம் ஆண்டு , அரசு தனியார் திட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தது.

வளர்ச்சியடைந்த நாடுகளில், உலகம் முழுவதும் மின்சாரக் கட்டமைப்பிற்கான தனியார் மூலதனம் வெகுவாக குறைந்துவருகிறது. இழப்புகள், நிலையற்றத் தன்மையினால் பல பன்னாட்டு கம்பெனிகள் திரும்பப்பெற்றுள்ளன என்று உலக வங்கி ஒப்புக்கொண்டுள்ளது. பல்வேறு காரணங்களினால் மின்சாரம் தாராளமயமாக்கல் தோல்வியடைந்துள்ளது என்பதை பல ஆய்வுகள் நிரூபிக்கின்றன.

ஆதாரம் : Experience with liberalisation and privatisation of eletricity by David Hall

இந்தியாவின் மின்திட்டம்

மின்சாரம் தாராளமயமாக்கப்படுவது மற்றும் தனியார்மயமாக்கப்படுவதை ஒட்டி முந்தைய பல கசப்பான அனுபவங்கள் இந்தியாவில் உள்ளன. தனியார் மின் உற்பத்தியில், பொதுத்துறை அதிகாரிகள் நீண்டகால இலாபத்தை நிர்ணயிக்கும் வகையில் மின்சாரம் வாங்கும் ஒப்பந்தங்களின் படி, மின்சாரத்தை வாங்குவது என்பது நடைமுறையில் சத்தியமில்லை. மகாராஷ்டிராவில் பத்து அண்டுகளுக்கு முன்பு என்ரான் அமைக்கப்பட்டபோது இந்நிலை ஏற்பட்டன. என்ரான் சுற்றுபுற சூழல் மற்றும் சமூக அழிவுகளை உருவாக்கியதனால், மக்களால் துரத்தியடிக்கப்பட்டது. ஒரிசாவில் மின்துறை தாராளமயமாக்கப்பட்டபோது, அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ஏ.இ.எஸ் -க்கு போதுமான இலாபமடைய முடியாமல் கம்பெனியை இழுத்து மூடிவிட்டு சென்றது.

ரிலையன்ஸ் மின்சார நிறுவனம், 2005 இல் மும்பையை ஒட்டிய புறநகர் பகுதிகளில் வெள்ளக் காலங்களில் ஒரு வாரத்திற்கு மேல் மின்சாரம் கொடுக்க இயலவில்லை. மின்விநியோகம் செய்யவும் இயலாமல் தத்தளித்தது. ராஜஸ்தான் மற்றும் ஒரிசாவிலுள்ள விவசாயிகளும் தொழில் நிபுணர்களும் தனியார் மின் விநியோகத்தினால் அடிக்கடி மின்வெட்டு, மின் கட்டண உயர்வு போன்ற பல அவதிகளுக்கு இரையாயினர். இந்தியாவில் மின்துறையை தனியார் மயமாக்குவதை மிக முக்கியமாக உலக வங்கி கருதியது. 2004 ஆம் ஆண்டு, உலக வங்கி, ஆந்திரத்திலும், ஒரிசாவிலும் மின் சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கு அனைத்து விதமான நிதி உதவியையும் அளிப்பதாக அறிவித்தது. 2005 ஆம் ஆண்டு உலக வங்கியின் உதவியுடன் ஆதம்ஸ்மித் இண்டர்நேஷ்னல், ஆந்திரத்தில் சுயஉற்பத்தி மையங்களை நிறுவ முயற்சித்தது. போராடும் மக்கள் மீது துப்பாக்கி சூடு, தடியடி என்று கொடூரத் தாக்குதலை தொடுத்தது. இப்போராட்டங்களில் ஒரு சிலர் கொல்லப்பட்டனர்.

மின்சாரம் என்பது மக்களின் அடிப்படைத் தேவை. அது இலாபம் சம்பாதிக்கும் சரக்கல்ல. ஆனால் வல்லாதிக்கங்கள் சுரண்டிக் கொழுக்க, அவர்களுக்கு கையாளாய் பணிபுரியும் கருணாநிதி அரசு, மின்சாரத்தை சந்தைப் பொருளாக்கிவிட்டது. கருணாநிதியின் தாராளமய - தனியார்மய கொள்கையினால் தமிழகத்தில் மின்சாரம் வணிகமயமாக்கப்பட்டுள்ளது. மக்களின் அடிப்படைத் தேவையான மின்சாரம் சந்தையில் விற்கப்படுகிறது. தமிழக அரசின், இந்த உலகமய - தனியார்மய - தாராளமயக் கொள்கைகளினால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு இரையாகின்றனர். மின்சார வாரியம் தனியார்மயமாக்கப்படுவதனால், பலர் விருப்ப ஓய்வு மற்றும் கட்டாய ஓய்வின் அடிப்படையில் வேலையிலிருந்து நீக்கப்படுகின்றனர். மின்வாரியத்தில், ஆட்குறைப்பு என்பது தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக மின்வாரியத்தில் 2000 -2001 இல் 93,721 ஆக இருந்த வாரியத் தொழிலாளர்களின் எண்ணிக்கையானது, 2006 - 2007 இல் 72,723 ஆக குறைந்துள்ளது. மிக குறைந்த கூலிக்கு ஒப்பந்தத் தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளர். மின்சாரம் வணிகமயமாக்கப்படுவதனால் விவசாயிகளும், சிறு முதலாளிகளும் மின் நுகர்விலிருந்து விலகும் நிலை உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அதிகரித்துக் கொண்டேயிருக்கும் மின் கட்டணத்தை எதிர்கொள்ள இயலாமல், நடுத்தர வர்க்கம் பாதிப்பிற்குள்ளாகிறது.

இச்சூழலில், ரிலையன்ஸ், மிட்டால் போன்ற இந்திய பெரு முதலாளிகளும், பன்னாட்டு கம்பெனிகளும் பல கோடி இலாபத்துடன் மின் உற்பத்தி செய்ய தமிழக அரசுடன் ஒப்பந்தங்களை போட்டுள்ளன. மகாராஷ்டிர மக்களை கடும் துயரத்திற்கு தள்ளிய, ரிலையன்ஸ் நிறுவனம் தமிழக மக்களையும் மீளாத் துயரத்திற்கு தள்ள முட்டி மோதிக் கொண்டு வந்துள்ளது. மிட்டால் போன்ற பன்னாட்டு கம்பெனிகள் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் மின்சாரத்தை வணிகமயமாக்கியதன் விளைவாக ஏற்பட்ட விலைவாசி உயர்வு, சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவைகளினால் நாடுகள் இருளில் மூழ்கின. இதனால் பல நாடுகளில் தொழிலாளர்களின், மக்களின் வீரஞ்செறிந்தப் போராட்டங்களால் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் விரட்டியடிக்கப்பட்டன. 2005 ஆம் ஆண்டு, ஆந்திரத்தில் பொங்கி எழுந்த மக்களின், கோபக்கனல்களுக்கு முன் பன்னாட்டு கம்பெனிகள் நிற்க முடியாமல், துவக்கத்திலேயே அவர்களின் திட்டங்களை கைவிட்டு சென்றனர்.

அன்றாடம் மின்வெட்டினால் தவித்துவரும் பல்வேறு தரப்பட்ட தமிழக மக்களும் போர்க்குணமிக்கப் போராட்டங்களில் அணிவகுத்து வருகின்றனர். தமிழகமே இருளில் மூழ்கிவரும், இந்த சூழலில் அரசு மின் விலையேற்றும் திட்டத்திற்காக அடித்தளமிடுகிறது. தமிழக அரசின் தாராளமய - தனியார்மய - உலகமயக் கொள்கையின் விளைவேயன்றி வேறேதுவுமில்லை. தமிழக அரசின் மின்வெட்டு, விலைவாசி உயர்வு ஆகியவற்றின் பின்னணிக்கும், ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கு முள்ள தொடர்பை, அரசியல் ரீதியாக புரிந்துக் கொள்வது மிகமுக்கியமானது.

-இரா.பாலன்(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It