ஏழைகளுக்குக் கல்வி எட்டாக் கனியாகிவிட்ட காலமிது. சமீபத்தில் வெளிவந்துள்ள பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில், அரசுப்பள்ளிகளில் படித்த குழந்தைகள், குறிப்பாக மாணவிகள், சிறப்பான தேர்ச்சி பெற்றுள்ளனர். ஏழை உழைப்பாளிகளின் குழந்தைகளும், குறிப்பாக தலித் மக்களின் குழந்தைகளும் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கின்றார்கள். தாங்கள் உயர்கல்வி பெற்றுச் சமுதாயத்தில் முன்னேற வேண்டும் என்ற தாகத்துடன் காணப்படுகிறார்கள். இந்த ஏழைக் குழந்தைகள் இதயத்தில் தேக்கி வைத்துள்ள ஏராளமான கனவுகளுக்கு எதிர்காலம் இருக்குமா?

ஏழை குழந்தைகளுக்கும் உயர்கல்வி:

சுயநிதிக்கல்லூரிகளுக்கு அரசு முடிவுசெய்துள்ள கல்விக் கட்டணங்களைக் கூடக் கட்டமுடியாத நிலையில்தான் பல லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் இருக்கிறார்கள். இதற்குமேல் கல்லூரிகள் வசூலிக்கும் கட்டாய நன்கொடைகளும் இருக்கிறது. திறமையும், ஆர்வமும் உள்ள மாணவச் சமுதாயத்தின் உயர்கல்விக்குத் தடையாக இருக்கும் இன்றையக் கல்விமுறையில் மாற்றம் தேவை. தமிழக அரசு அதிகமான கல்லூரிகளை உருவாக்க வேண்டும். புற்றீசல்போல் பெருகிவரும் தனியார் கல்வி நிறுவனங்களை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஜனநாயகக் குரல் வலுப்பெற்று வருகிறது.

ஈரோட்டில் முதல் கல்லூரி:

“சிக்கய்ய நாயக்கர் கல்லூரி’’ என்ற பெயரில் செயல்பட்டுவரும் கல்லூரி தனி நபருக்குச் சொந்தமானதல்ல. நாடு சுதந்திரம் பெற்றபோது, ஈரோட்டில் கல்லூரி எதுவும் இல்லை. அதே சமயம் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வந்தன. அவைகளில் ஒன்று மஹாஜன உயர்நிலைப்பள்ளி. இப்பள்ளியை நடத்தி வந்த பெரியவர்கள், ஈரோட்டில் மாணவச் சமுதாயத்திற்கு ஈரோட்டிலேயே உயர்கல்வி கிடைக்க வேண்டும் என்று விரும்பினார்கள், செயலில் இறங்கினார்கள். இவர்களின் செயலுக்கு ஆதரவு பெருகியது. பொதுமக்கள் பலரும் மனமுவந்து நன்கொடை தந்தார்கள். ஈரோட்டில் நகராட்சி ஒருலட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்தது. தமிழக அரசு 14 ஏக்கர் நிலத்தை நன்கொடையாகத் தந்தது. கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த கே.கே. ராமசாமி என்பவர் கோபிசெட்டிபாளையத்துக்கு அருகில் உள்ள புதுக்கரைப்புதூரில் தனக்குச் சொந்தமான 1.3 ஏக்கர் நிலத்தை சிக்கய்ய நாயக்கர் கல்லூரிக்கு தானமாகக் கொடுத்தார்.

தந்தை பெரியாரின் தலைமை:

இப்படி பலரின் நன்கொடையோடு அரசு உதவிபெரும் கல்லூரியாக 1954ஆம் ஆண்டு “மஹாஜன கல்லூரி’’ என்ற பெயரில் ஈரோட்டின் முதல் கல்லூரி கம்பீரமாக உதயமானது. 52 ஏக்கர், நிலப்பரப்பைச் சொந்தமாகக் கொண்டு, இரண்டு ஏக்கர் பரப்பில் கல்லூரிக் கட்டடங்கள் கட்டப்பட்டன. இப்படிப்பட்ட சீரிய முயற்சிகளை மேற்கொண்ட குழுவுக்கு தந்தை பெரியார் அவர்கள் சிலகாலம் தலைமையேற்று வழிநடத்திய பெருமையும் இந்தக் கல்லூரிக்கு உண்டு.

பெயர் மாற்றம்:

மஹாஜன கல்லூரி என்ற பெயரில் துவக்கப்பட்ட இந்தக் கல்லூரியின் பெயர், சில ஆண்டுகளுக்குள்ளாக சிக்கய்ய நாயக்கர் மஹாஜன கல்லூரி என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தக் கல்லூரியை நிர்வகிப்பதற்காக 1972ஆம் ஆண்டில் அறக்கட்டளை ஒன்று துவக்கப்பட்டது. இது ஈரோடு மாவட்டப் பதிவாளர் அலுவலத்தில் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சிக்கய்ய நாயக்கர் கல்லூரி என்ற தற்போதைய பெயர் சூட்டப்பட்டது. ஆரம்பிக்கப்பட்ட 20 ஆண்டு காலத்திற்குள் இந்தக் கல்லூரி இவ்வாறு படிப்படியாகப் பெயர் மாற்றம் பெற்றது.

நிர்வாக சீர்குலைப்பு

1972ஆம் ஆண்டு துவக்கப்பட்ட அறக்கட்டளை, ஒவ்வொரு ஆண்டும் வரவு செலவுக் கணக்குகளை முடித்து, மாவட்ட பதிவாளருக்கு அனுப்பி வைக்கவேண்டும். அப்படிச் செய்தால்தான் ஒவ்வொரு ஆண்டும் அறக்கட்டளை புதுப்பிக்கப்படும். ஆனால் அறக்கட்டளையின் ஆண்டு வரவு செலவு கணக்குகளை 1990ஆம் ஆண்டு முதல் அறக்கட்டளை நிர்வாகிகள் மாவட்ட பதிவாளருக்கு அனுப்புவதில்லை. அதேபோல் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை அறக்கட்டளையின் பொதுக் குழு கூடி கல்லூரியை நிர்வகிப்பதற்காக “கல்வி முகமையை’’ (ணிபீuநீணீtவீஷீஸீ கிரீமீஸீt) தேர்வு செய்து, அரசுக்கு அறிக்கை கொடுக்க வேண்டும். இந்தக் கல்வி முகமைதான் “செயலாளர்’’ அல்லது “தாளாளர்’’ என்று அழைக்கப்படுகிறார். மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறவேண்டிய கல்வி முகமைக்கான தேர்வும் சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் நடைபெறவில்லை. இவ்வாறு தேர்வு நடைபெறவில்லையானால் அரசு தானாகவே கல்லூரியைக் கையகப்படுத்திக் கொள்ளலாம். இந்த பின்னணியில் கடுமையான நிர்வாகச் சீர்கேடு வளர்ந்து கொண்டிருந்தது. கல்லூரியின் முதல்வருக்குச் சம்பளம் நிர்ணயம் செய்யப்படவில்லை. ஓய்வுபெற்ற பேராசிரியர்களுக்குக் கிடைக்க வேண்டிய ஓய்வூதியம் பற்றிய பிரச்சினை கிடப்பில் போடப்பட்டது. கல்லூரிக்குச் சொந்தமான இடத்தில், தனியார் பெட்ரோல் பங்க் வைப்பதற்குச் சட்டவிரோதமாக நிலம் விற்பனை செய்யப்பட்டது.

கல்லூரியை அரசு ஏற்றது, நீதிமன்றம் அங்கீகரித்தது:

இந்தச் சூழ்நிலையில் 1998ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. கல்லூரிக் கல்வி இயக்குநர் (கோவை) அவர்களைக் காப்பாளராக நியமித்துக் கல்லூரியைத் தொடர்ச்சியாகச் செயல்படுத்தியது. இதனை எதிர்த்து ஈரோடு நீதிமன்றத்திலும், பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்திலும் சிலர் வழக்குத் தொடர்ந்தனர். இக்கல்லூரி தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடினர். இந்த வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. கல்லூரியின் சொத்துக்கள் அனைத்தும் தமிழக அரசின் சொத்துக்களாகும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துவிட்டது. இவ்வாறு அரசு உதவிபெறும் கல்லூரியாக இருந்த சிக்கய்ய நாயக்கர் கல்லூரி “அரசு ஏற்றுநடத்தும் கல்லூரி’’யாக மாற்றம் பெற்றது.

“அரசு ஏற்று நடத்தும் கல்லூரி’’ சந்திக்கும் நடைமுறைச் சிரமங்கள்:

தமிழகத்தில் அரசு கல்லூரிகள் இருக்கின்றன. அதுபோலவே அரசு உதவிபெறும் கல்லூரிகளும் இருக்கின்றன. பேராசிரியர், அலுவலர் காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட எல்லாத் தேவைகளுக்கும் அரசின் ஒரே உத்தரவின் மூலம் எல்லா அரசுக் கல்லூரிகளும் தேவையை நிறைவு செய்து கொள்ளலாம். அதேபோல், ஒரே உத்தரவின் மூலம் அரசு உதவிபெறும் எல்லாக் கல்லூரிகளும் தங்கள் தேவையை நிறைவுசெய்து கொள்ளலாம்.
அரசுக் கல்லூரிகளுக்காகப் போடப்படும் அரசின் உத்தரவும், அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்காகப் போடப்படும் அரசின் உத்தரவும் அரசு ஏற்று நடத்தும் கல்லூரிக்குப் பொருந்தாது. எனவே, இதற்கென்று ஒவ்வொரு தேவைக்கும் தனித் தனியாக அரசாணை பிறப்பிக்க வேண்டும். இப்படிப்பட்ட சிக்கல் காரணமாக சிக்கய்ய நாயக்கர் கல்லூரி ஏராளமான பிரச்சனைகளையும், சிரமங்களையும் எதிர்கொண்டு நிற்கிறது.

கல்லூரியைப் பாதுகாக்கக் கோரிக்கை:

கடந்த 2008ஆம் ஆண்டு துவக்கத்தில் 47 பேராசிரியர் பணியிடங்களும், அது தவிர ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் காலியாக இருந்தன. அவ்வப்போது, காலியிடங்களை நிரப்பாததால், கல்லூரியின் சில துறைகளை இழுத்து மூட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் காலியாக இருப்பதால், யாருக்கும் பதவி உயர்வும் கிடைக்கவில்லை. கல்லூரியைப் பாதுகாக்க காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று கல்லூரியின் பேராசிரியர்கள் தொடர்ச்சியாக வற்புறுத்தி வந்தார்கள். இதன் விளைவாகக் கடந்த 2008 மார்ச் மாதம் 3ஆம் தேதி 29 பேராசிரியர்கள் தேர்வு செய்வதற்குக் கல்லூரி கல்வி இயக்குநர் (கோவை) அவர்களுக்கு அரசு அனுமதி அளித்தது. அரசு விதிமுறைகளின்படி நேர்முகத் தேர்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், மாண்புமிகு. உயர் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வாய்மொழி உத்தரவு காரணமாக அன்றைய தினமே நேர்காணல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நியாயமற்ற செயலைப் பேராசிரியர்கள் அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். அப்போது நடைபெற்ற தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில் பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே. மகேந்திரன் அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பால் இந்தப் பிரச்சனையை சட்டமன்றத்தில் விளக்கிப் பேசினார்.

ஈரோட்டில் செயல்பட்டுவருகிற பல்வேறு அமைப்புகளும் ஒன்றிணைந்து “சிக்கய்ய நாயக்கர் கல்லூரி பாதுகாப்புக்குழு’’ அமைக்கப்பட்டது. இந்தக் குழு கல்லூரியைப் பாதுகாக்கத் தொடர்ச்சியாக இயக்கங்களை நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்தது.

ஈரோடு மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் சுமைப்பணி தொழிலாளர்கள் சுமார் 7000 பேர் ஒன்றுகூடி 09.06.2008 அன்று பொது வேலைநிறுத்தமும் கதவடைப்புப் போராட்டமும் நடத்தி, பேரணியாகச் சென்று சிக்கய்யநாயக்கர் கல்லூரியைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாகத் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். சமூக நலனில் அக்கறைகொண்ட ஈரோடு மாவட்ட வணிகப் பெருமக்களும் லாரி உரிமையாளர்களும் இந்த நியாயமான போராட்டத்திற்கு ஒத்துழைப்புக் கொடுத்தார்கள்.

இதைத் தொடர்ந்து தமிழக அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாகச் சில பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இது வரவேற்க வேண்டிய சிறிய முன்னேற்றம். அபாய கட்டத்தில் இருந்து கல்லூரி தப்பிப் பிழைத்திருக்கிறது. ஆனால் இப்போதும் 23 பேராசிரியர் பணியிடங்களும், 26 பேராசிரியர் அல்லாத பணியிடங்களும் காலியாக இருக்கின்றன. இவைகளை உடனடியாக நிரப்புவது அவசர அவசியத் தேவை ஆகும்.

கல்லூரியில் நிலவும் இதரகுறைகள்:

கடந்த 20 ஆண்டுகளாக சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் புதிய வகுப்புகள் எதுவும் துவக்கப்படவில்லை. சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் வசதி இல்லை. ஆண், பெண் இருபால் மாணவர்கள் படிக்கும் கல்லூரியாக மாற்றப்பட்டிருப்பதால், இருக்கிற கழிப்பறை வசதிகளை மேம்படுத்த வேண்டும். அதற்குத் தேவைப்படுகிற துப்புரவுப் பணியாளர்கள் இல்லை. 52 ஏக்கர் பரப்பளவுள்ள இக்கல்லூரிக்குச் சுற்றுச் சுவர் கிடையாது. 55 ஆண்டுகளாகவே இதுதான் நிலை. இப்படிப்பட்ட கல்லூரிக்கு ஒரே ஒரு இரவுக் காவலர்தான் இருக்கிறார். மற்ற கல்லூரிகளைப் போல், முழுமையாக கணினி சோதனைக்கூடம் (சிஷீனீஜீutமீக்ஷீ லிணீதீ) இல்லை. மாணவர்களுக்கு இண்டர்நெட் வசதி இல்லை. கால் நூற்றாண்டுக்கும் மேலாக புதிய வகுப்பறைகள் எதுவும் கட்டப்படவில்லை. இதனால் மாணவர்களுக்குப் போதுமான வகுப்பறைகள் இல்லை. கல்லூரி வளாகத்திலேயே மாணவர் விடுதி உள்ளது. துவக்க காலத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வந்த இந்த மாணவர் விடுதி தற்போது பாழ்பட்டுப் பயனற்றுக் கிடக்கிறது. இதைச் சீர்செய்து மேம்படுத்தினால் 500 மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். தற்போது 1500 மாணவ மாணவிகள் படிக்கும் இந்தக் கல்லூரி, அரசுக் கல்லூரியாக ஆக்கப்பட்டால் மேலும் 1500 மாணவர்கள் படிப்பதற்கான வாய்ப்பை உடனடியாக உருவாக்கமுடியும்.

சிக்கய்ய நாயக்கர் கல்லூரியின் சிறப்பம்சங்கள்:

ஈரோடு மாவட்டத்தில், அரசு உதவிபெறும் கல்லூரிகள் ஐந்து இருக்கின்றன. இந்தக் கல்லூரிகள் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, அரசு தீர்மானித்துள்ள கட்டணத்தை விடக் கூடுதலான தொகையை மாணவர்களிடம் கட்டாயமாக வசூலித்து வருகின்றன. ஆனால், கல்லூரி துவங்கிய காலம் முதல் இன்று வரை, அரசு தீர்மானித்த கட்டணத்துக்கு மேல் ஒரு காசுகூட வாங்காமல், மாணவர்களுக்குக் கல்வி புகட்டிவருகிற ஒரே கல்லூரி சிக்கய்ய நாயக்கர் கல்லூரிதான். ஒப்பு நோக்கும்போது, மிகவும் ஏழை மாணவர்களைச் சேர்த்துக் கொள்கிற கல்லூரி சிக்கய்ய நாயக்கர் கல்லூரிதான். அதிலும் குறிப்பாக, அதிகமான தலித் மாணவர்களைச் சேர்த்துக் கொண்டு கல்விகொடுக்கும் கல்லூரி சிக்கய்ய நாயக்கர் கல்லூரிதான். இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாமல் பக்கத்து மாவட்டங்களில் இருந்து வருகிற ஏழை மாணவர்களும் இங்கு ஏராளமானோர் கல்வி கற்று வருகிறார்கள். இங்கு பயிலும் 1500 மாணவர்களில் சரிபாதி பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு கல்லூரியாக ஆக்க வேண்டும்:

ஈரோடு மாநகரின் மத்தியில் 52 ஏக்கர் நிலம் கொண்டதாக சிக்கய்ய நாயக்கர் கல்லூரி இருக்கிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் விலை கோடிகளில் பேசப்படுகிறது. இவ்வளவு மதிப்புயர்ந்த நிலம், ஏழை மாணவர்களின் கல்விக்காக அரசுக்குக் கிடைக்கும். அரசு கலைக்கல்லூரி, அரசு மகளிர் பாலிடெக்னிக், அரசு பொறியியல் கல்லூரி போன்ற பல்வேறு பிரிவுகளை அரசு நடத்துவதற்கான ஏராளமான இடவசதி உள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 67 அரசுக் கலைக் கல்லூரிகள் இருக்கின்றன. ஆனால் ஈரோடு மாவட்டத்தில் ஒன்றுகூட இல்லை. தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு, மற்ற பல மாவட்டங்களிலும், பின்தங்கிய பகுதிகளிலும் அரசு கலைக்கல்லூரிகளை துவக்க ஆர்வம் காட்டிவருகிறது. ஈரோடு மாணவர்களுக்கு உயர்கல்வி என்று தந்தை பெரியார் அவர்கள் கண்ட கனவை நனவாக்கத் தமிழக அரசு முன்வரவேண்டும்.

இதன் மூலம் உடனடியாக மேலும் 1500 மாணவர்களுக்கு உயர்கல்வி கொடுக்க முடியும். சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை பார்வையிட சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு இந்தக் கல்லூரியை அரசு கல்லூரியாக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறது. ஆகவே, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அரசு ஏற்று நடத்தி வருகிற சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசு கல்லூரியாக ஆக்க வேண்டும்; ஈரோடு நகரில் இக்கல்லூரி மிகச் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பது ஈரோடு மக்களின் பேரவா.

(இக்கட்டுரையாளர் சிக்கய்யநாயக்கர் கல்லூரியின் முன்னாள் மாணவர்.)