தத்துவ ஆசான்களை முந்திக்கொண்டு உலகின் இருப்பை பறைசாற்றியவர்கள் கலைஞர்களும் படைப்புலக கர்த்தாக்களும்தான்’- ஜார்ஜ்லூயி போர்ஹெஸ்

முழுமனிதனைத் தேடித்தேடி தத்துவஞானிகள் தங்களது புனித வலைகளை வீசிக் களைத்த போது வரலாற்றின் இருண்ட திசைகளில் அலைந்து திரிந்து மனிதனை வெளியே வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர்கள் படைப்புலக வாதிகள்தான். உலகப் போர்கள், இனப்படுகொலைகள், கொடிய சிறை முகாம்கள், விஷவாயு மரணப்படுக்கைகள், பட்டினிச்சாவுகள், கொடிய அணுகுண்டு வீச்சு, நியாயமே இல்லாத ஊடுறுவல்கள், குழந்தைகளின் இரத்தம் குடிக்கும் சவக்குழிகள்..... எந்த ஆதாரமும் இல்லை என்று மிக சாமர்த்தியமாக எல்லா அடையாளங்களையும் நிதானமாக அழித்துவிட்டு இதோ உலகின் அமைதிப்பூங்கா என.. எல்லாம் கட்டுக்குள் இருக்கிறது.. என அதிகாரம் அறிவித்தபோதெல்லாம் கட்டுக்குள் என்ன இருக்கிறது என்று போட்டு உடைத்தவன் படைப்பாளிதான்.

‘இந்த அமைதி என்பது வெறும் தோற்றம்தான்’ என்று இத்தாலிய படைப்பாளி ஃபெடரிகோ ஃபெல்லினி தனது ஞிஷீவீநீமீ ஸ்வீtணீ நூலில் வரும் ஸ்டினர் பாத்திரத்தின் வழியே ரோம் நகரின் ரத்த வீதிகளை காட்டிக் கொடுப்பான். தனது ஒவ்வொரு கவிதையாலும் சிலியின் சில்லிடவைத்த கொடிய மரண அணிவகுப்புகளை ‘இதோ பார் தெருவெல்லாம் ரத்தம்’ என்று மனஎழுச்சியை ஒரு பாப்லோநெருடா விதைத்தானே. நிர்மூலமாகிவிட்ட போதெல்லாம் வாழ்வை கொடிய விஷ பிசாசுகளிடமிருந்து மீட்டெடுத்ததும் இன்னமும்கூட ‘மக்கள் மக்கள்’ என்று பதறியபடி மிச்சமிருக்கும் மானுட நேயமும் படைப்புலகின் சாதனை அல்லவா..

 மேற்கத்திய ஆராய்ச்சிக் கடல்களில் புதியவகை சந்தைப் பொருளாதாரத்தை பரிசோதிக்க ஓர் எலி போல மூன்றாம் உலக நாட்டு மனிதன் கண்காணிக்கப்படுகிறான்... ஊடகங்களின் வலையில் விழுந்து.. பொழுதுபோக்கு பொறியில் சிக்கிய இவனது நாட்களின் மீது ‘உலக மயமாதல்’ எனும் புதிய பாசிசம் தனது அட்டைப்பூச்சிகளை உலா வரவிடுகிறதே.. சத்தமில்லாமல் நடக்கும் ஓர் ஆக்கிரமிப்பு போர் இது. நமது ஆட்சியாளர்கள் மேலும் மேலும் அகலத்திறந்து மேற்கத்திய உலகின் வசதிக்காக விவசாயிகளின் விலா எலும்புகளை முறித்து பொருளாதார அழிவு சமன்செய்யப்படுவதையும்... தமிழ் படைப்பாளியே நீ கண்டும் காணாமல் இருப்பது ஏன்?... தண்ணீரிலிருந்து காற்று வரை நமது உயிர் ஆதாரங்கள் முற்றிலும் அழிக்கப்படும் கொடிய யதார்த்தத்தை வார்த்தைகளற்ற அப்பாவிகளான சாலையோர காய்கறிகார தாத்தாவும் மோர்கார பாட்டியும் ரிலையன்ஸ், பிர்லா போன்ற அங்காடிகளின் வாசலில் நின்று பசிக்கு பிச்சை எடுப்பதையும் பதிவு செய்யாத ஒரு பேனா எதற்கு? உனது இதய கற்பனைகள் இறந்து, உணர்வுகள் புதைக்கப்பட்ட சமாதிக்கு வழிநடத்தும் தளமா.

ஏ.சி அறைக்குள் புதையுண்ட கணினி வழி இதழ்கள், கவிதைக்கு 1000 கதைக்கு 2000 அனுப்பும். நடிகை உடல் பற்றிய வணிக இதழ்கள், இன உட்பிரிவு அதன் அடுத்த பிரிவு அறிந்து ஜாதக பரிவர்த்தனைக்கு உதவும் சாதிய இதழ்கள், தனது நாயகனை ரத்தத்தால் வரைந்து ‘வருங்கால முதல்வர்’ என ‘புரட்சி’ படங்களுக்கு வருமானத்தை உருவாக்க நாயாய் உழைக்கும் ‘சினிமா’ இதழ்கள், இவற்றை கடந்து வீதிக்கு வந்து நில்.. கண்களைத் திறந்து பார்.. சோற்றுக்கும் கஞ்சிக்கும் ஓடாய் தேயும் தறி நெசவாளியும் புழுதியில் புரண்டு நகர வீதியில் தினக்கூலிக்கு வந்த விவசாயியும்... அவர்களைப் போன்ற இந்நாட்டு அழுக்கு மனிதர்களின் அன்றாட வாழ்வு உணர்த்தும் செய்தி என்ன? உன்னை எரித்து உன் சாம்பலிலிருந்து உன்னை உயிர்த்தெழ வைக்கும் பேராற்றல் அந்தப் போராட்டத்திற்கு இருக்கிறது.... அந்தப் படைப்புலகம் மக்களுக்கானது.. அங்கே உன் படைப்புகள் வார்த்தைகளுக்குள் சமாதி அடையாது. எரி கொம்புகளாகவும்...வான்தீச்சுடர்களாகவும் அவை மாறி மனித இன விடுதலைப் போராட்டத்திற்கு வழிகாட்டும். அப்போது உனக்குள் ஒரு பாப்லோ நெருடா புகுந்திருப்பதை நீ பார்க்கலாம்.

தமிழ் படைப்பாளிகளே நமக்கு இன்னும் ஓயாத பணிகள் ஏராளம், ஏராளம்!!!. 

தொடர் ஓட்டம்

‘புதிய புத்தகம் பேசுது’ இதழ் ஆண்டுதோறும் உலகப் புத்தக தினத்தை அறிவார்ந்த தளத்தில் கொண்டாடி வருகிறது. கடந்த ஆண்டு தமிழில் உள்ள முதன்மையான நூல்கள் குறித்து விவரணைகளும் சில முக்கியமான நூல்கள் தமிழ்ச் சமூகத்தில் எவ்வாறு வாசிக்கப்பட்டன என்பது குறித்தும் ஒரு சிறப்பு மலரை வெளியிட்டது. சமகால வரலாற்றுக்கான முக்கியமான ஆவணமாக அம்மலர் சிறக்கிறது. அதனுடைய தொடர்ச்சியாகவே ‘தமிழ்ப் புத்தகஉலகம் 1800-2009’ என்னும் இம்மலர். . . புதிதாக உருவாகிவந்த தொழில் நுட்பத்திற்கு ஈடு கொடுத்து ஒரு சமூகம் வளர்ந்த தன்மையை இப்புத்தக உருவாக்கத்திலிருந்து பெறமுடியும். புத்தக உருவாக்கத்தில் ஈடுபட்ட தனிநபர்கள், நிறுவனங்கள் ஆகியன குறித்தும், அதற்குப் பின்னால் இயக்கம் கொண்டுள்ள சமூக அசைவியக்கம் குறித்தும் கட்டுரைகள் உள்ளன. 

வெளியிடுவதற்காக நூல்களைத் தேர்வு செய்யும் முறைகள், தன்மைகள், நூலாசிரியர்-பதிப்பாசிரியர்-வெளியீட்டு நிறுவனங்களுக்கும் உள்ள உறவுகள், எத்தகைய வாசகரை மையம் கொண்டு நூல்கள் உருவாக்கப்பட்டன என்ற தகவல்கள், நூலாசிரியர்/பதிப்பாசிரியர்களுக்குச் சமூகம் அளித்த முக்கியத்துவம், வெளியான நூல்கள் ஏற்படுத்திய சமூக விளைவுகள், வெளியான நூல்களின் மீதான சமூக அறவியல் பார்வைகள் ஆகியன பற்றியெல்லாம் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. தனிநபர் சார்ந்த பதிப்புகள் குறித்தும், துறைவாரியான பதிப்புகள் குறித்தும், காலவரிசையில் அதன் வளர்ச்சி குறித்தும் இதிலுள்ள கட்டுரைகள் விவாதிக்கின்றன. இதிலுள்ள கட்டுரைகளில் சில ஆவண ஆய்வாகவும், சில விவரண ஆய்வாகவும், சில விமர்சன ஆய்வாகவும், சில அறிமுக ஆய்வாகவும் அமைந்திருக்கின்றன. இது தொடர் ஓட்டம்

( உயிரோசை இணைய இதழில் வெளிவந்த “பதிப்புலகம் 1800- சிறப்பு மலர் அறிமுகத்திலிருந்து)