காலம் காலமாகத் தங்களின் அலறல்கள் கூட வெளியில் கேட்கா வண்ணம் அடிமைத்தளை எனும் கொடுஞ்சிறையில் வாசம்செய்தவர்களாக இந்த நாட்டின் மூன்றாம் தரப் பிரஜைகளாகப் பெண்கள் இருந்தனர். பட்டங்கள் சட்டங்கள் பாரினில் பெண்கள் நடத்த வரட்டும் எனப் போராட்டங்கள் இந்திய மண்ணில் ஏராளம். ‘வேலைக்குப் போகும் பெண்கள் எல்லாம் விபசாரிகள்தான்’ என்று 1960 களில் மத்தியதரவர்க்கப் பெண் பொருளாதாரக் கட்டாயங்களால் வெளியே வந்தபோது மாமுனிவர் என்று கும்பிடப்படும் காஞ்சி சங்கராசாரியார் உமிழ்ந்த விஷம் இன்று ஏற்படுத்தும் அர்த்தம் என்ன? பேச்சு வார்த்தை மற்றும் பரஸ்பரம் விட்டுக்கொடுத்தல் மூலம் பொருளாதார அங்கீகாரம், வாழ்க்கை மேம்பாடு என்பது, இலவசத் திட்டங்கள் மூலம் இன்று பாமரனுக்கு பிச்சையாகப் போடப்படுகிறதே அதன் எத்தனை சதம் பெண்ணையும் அவளது வாழ்நிலையையும் கருத்தில் கொண்டு அமுலாகிறது? மிகப்பெரிய மக்கள் எழுச்சிப் போராட்டங்களே நலவாரியங்களையும் அரசு உதவிகளையும் பெருமக்கள் திரளிடம் கொண்டு வந்து சேர்ப்பிக்கிறது என்பதைப் பார்க்கிறோம்.

‘வீதிக்குச் செல்வோம்’ என்று கேப்டன் லட்சுமி உட்பட பலர் குரல் கொடுத்ததன் காரணமாக விடுதலை சாசனம் இந்தியப் பெண்ணிற்கு ஓட்டுப் போடும் உரிமைகளைப் பெற்றுத் தந்தது. இந்திய ராணுவத்தில் ஆணுக்கு நிகராக அந்தஸ்தைப் பெண் பெறுவதற்கு சட்ட ரீதியில் அறுபது வருடம் போராடி இருப்பது எவ்வளவு வெட்கக்கேடானது. நியாயமாக ஐம்பது சதவிகித இட ஒதுக்கீட்டைப் பெறவேண்டிய பெண் ஒரு முப்பத்து மூன்று சதவிகித உரிமைப்பலனைப் பெற இன்னும் எத்தனைக் காலம் காத்திருக்க நேருமோ எனும் அவலத்தையும் அந்தக் கொடிய யதார்த்தத்தைக் கூட கேலிச் சித்திரமாக பத்திரிகைகள் குறிப்பாக, பெரிய முதலாளிய இதழ்கள் சித்திரிப்பதையும் பார்க்கிறோம். இந்த மசோதாவை எதிர்க்கும் லல்லுபிரசாத் யாதவ், முலாயம்சிங் யாதவ், மாயாவதி போன்றவர்களும் அதை எதிர்ப்பதும், சுற்று முறையில் இந்தியாவின் எல்லாப் பாராளுமன்றத் தொகுதிகளிலுமே பெண் வேட்பாளர், பெண் எம்.பி. ஏதாவது ஒரு ஐந்தாண்டு இருந்தே தீரவேண்டியதைக் கட்டாயப்படுத்தும் ஷரத்திற்காகக் குலை நடுங்கிப்போய் பதறுவதையும் பார்க்கிறோம். நமது ஜனநாயகத்தின் பலவீனமான தனிநபர் துதியை இந்த மசோதா தவிடு பொடியாக்கிவிடும் என்பதற்காக இடதுசாரிகள் அதை ஆதரிப்பதும் அதே காரணத்திற்காக அதை எதிர்ப்பதும் நமக்கு அரசியலின் இரண்டு எதிர்அணிகளைத் தெளிவாக வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

இந்த இடஒதுக்கீடே மகளிர் விடுதலையின் முடிவான படிநிலை அல்ல என்பதும் நமக்குத் தெரியும். பெண்ணிற்கான சொத்துரிமையும், வழக்கு மன்றம் சென்று வாதிட வக்கீலை வைக்க வேண்டிய அவசியமில்லை எனும் உரிமையும் இந்த நாட்டில் இடதுசாரிகள் நடத்திய தொடர் போராட்ட விளைவு என்பதை வரலாறு அறியும். அதேபோல மகளிர் மசோதா என்பதும் ஒரு நிலை. அதைப் போராடி அரசு மீது நிர்ப்பந்தமாகத் திணித்த நமக்கு இந்தக் களத்தில் இன்னும் நிறைய வேலை இருக்கிறது.

-பாரதியார்