கிராமங்களில் குழந்தைகள் திருவிழாவை எதிர்பார்த்துக் காத்திருப்பதுபோல, புத்தகக் கண்காட்சிக்கான ஆர்வக்குறுகுறுப்புடன் கூடிய எதிர்பார்ப்பு இப்போதிருந்தே ஆரம்பித்துவிட்டது. முன்னாரவாரங் களான புத்தக வெளியீட்டு விழாக்கள் நடந்தேறியது. அவற்றுள் ‘மலைகள் சப்தமிடுவதில்லை’என்ற கட்டுரைகளின் தொகுப்பை முதலில் வாசிக்கத் தேர்ந்தேன். எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகள் பெரும்பாலும் கதைத்தன்மை கொண்டவை. புனைவும் அ புனைவும் கலந்த ஒருவித வசீகரம் அவற்றில் இருக்கும். குறிப்பிட்ட துறைசார் ஆர்வமுடையவர்களாலன்றி ஏனையோரால் உட்செல்ல முடியாதிருந்த வறண்ட தன்மைகளிலிருந்து கட்டுரை வடிவத்தை ஈரலிப்பான வெகுஜன வடிவமாக்கியதில் அவருக்கும் பங்குண்டு. ‘மலைகள் சப்தமிடுவதில்லை’யில் தொகுக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான கட்டுரைகள் அவருடைய இணையதள வாசகர்களுக்காக எழுதப்பட்டவை. அவற்றில் பலவற்றை இணையம்வழி ஏற்கெனவே வாசித்திருந்தபோதிலும், தொகுப்பாக வாசிக்கும்போது கோர்வையான அனுபவத்தை அடையமுடிந்தது.

s ramakrishnanஎழுத்து ஆளுமைகள், அனுபவம் - அக்கறைகள் என்ற இரண்டு பகுதிகளாக ‘மலைகள் சப்தமிடுவதில்லை’ வகைபிரித்துத் தொகுக்கப்பட்டிருக்கிறது. ‘தஸ்தாயெவ்ஸ்கி யோடு அலைந்த நாட்கள்’என்ற கட்டுரை மூலமாக, அந்த மகத்தான எழுத்துக் கலைஞனின் முகத்தை ஓரளவாவது தரிசிக்கவும், அவரது எழுத்து நோக்கிய தேடலுக்கும் தூண்டுகிறார் எஸ்.ரா. ஒரு வாசிப்பானது குறிப்பிட்ட பிரதியினுள்ளேயோ அன்றேல் வெளியிலேயோ. மேலதிக வாசிப்பை நோக்கிச் செலுத்தவேண்டும் என்பதன் அடிப்படையில் எஸ்.ரா.வின் எழுத்துகள் என்னைப்போல புதிதாக எழுத்துலகில் பிரவேசிப்பவர்களுக்கு உந்துதலளிக்

கக்கூடியதொன்று. “அவருடைய எழுத்தில் அடிக்கடி வெயில் ஊர்கிறது, அடிக்கடி அவர் வெறுமையான சாலையைப் பார்த்துக்கொண்டு ஏதேதோ நினைவுகள் பொங்க நிற்கிறார்.”என்று எனது நண்பர்களில் ஒருவர் சொன்னார். “வெயில் ஒரே இடத்தில் ஒரே பொருளில் ஊரவில்லை. மேலும், காலந்தப்பிய காலத்தினுள் வேறு வேறு சாலைகளில் அவர் நின்று கொண்டிருக்கிறார் இடங்கள் மாறுகின்றபோது வாசிப்பவனின் அனுபவமும் மாறுகிறதுதானே”என்றும் பதிலளித்தேன்.

வாசகர்களுக்கும் புதிதாக எழுத வந்திருப்பவர்களுக்கும் முன் எழுந்துநிற்கும் பூதாகரமான கேள்வி ‘வாசிப்பினை எங்கிருந்து ஆரம்பிப்பது?’என்பதுதான். நான்குவழிச் சந்திப்பொன்றில் வழியைத் தேரமுடியாத மனதின் மலைப்பினையத்தது அது. ‘எப்படி வாசிக்கிறீர்கள்?’ என்ற கட்டுரையில், ‘கடந்த பத்தாண்டுக் காலமாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு துறை சார்ந்து வாசிப்பது என்று முடிவு செய்து அதன்படி வாசித்து வருகிறேன்’ என்று எஸ்.ரா. குறிப்பிட்டிருக்கிறார். அவ்வாறான ஒழுங்கமைப்பை வாசிப்பில் செயற்படுத்த முடியுமா என்று வியப்பாக இருந்தது.

‘எழுத நினைத்த நாவல்’என்ற கட்டுரையில், நாவல் எழுதும் நோக்கத்துடன் காடொன்றில் போய்த் தங்கிவிட்டு எழுதமுடியாமல் திரும்பிவந்ததைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். புதிய இடங்கள் பார்ப்பதற்கேயன்றி, படைப்பதற்கல்ல என்பதை அவர் சொல்லிச்செல்லும்போது இடையிடையே காடு காட்டும் முகம் அழகாக இருக்கிறது. எழுதப்படாத நாவலைப் பற்றி எழுதுவதற்குக் கூட தமிழில் ஒரு தளம் இருக்கிறது. அடையாளப்படுத்தலின் வெளிச்சம் விழாமையினால் எழுதப்பட்ட நாவல்கள்கூட பதிப்பகங்களில் தேங்கிக் கிடப்பதும் இச்சூழலில்தான் சாத்தியப்பட்டிருக்கிறது.

இக்கட்டுரைகளில் கடைசி வாக்கியங்கள் முக்கியமானவை. இனந்தெரியாத துயரத்தை, ஏக்கத்தை, பரிதவிப்பை அவை கிளறிவிட்டுவிடுகின்றன. ‘மலைகள் சப்தமிடுவதில்லை’யில் இடம்பெற்றிருக்கும் ‘பதிலற்ற மின்னஞ்சல்கள்’என்றொரு கட்டுரையை ஈழப்போர் அன்றேல் ஈழத்துக்கான போர் ‘முடிந்த’ பிற்பாடு எழுதியிருக்கிறார். அதில் கீழ்க்கண்டவாறு குமுறியிருக்கிறார். “ஆயிரமாயிரம் மக்கள் கொட்டடிகளில் நிராதரவாக அடைக்கப்பட்டிருக்கிறார்கள். வதைமுகாம் போல அகதிமுகாம்கள் உள்ளன என்ற கண்கூடான உண்மைகள் வெளிவந்த பிறகும் அதைப் பற்றிய எந்தவிதமான கலக்கமும் இன்றி, இனி ஈழம் செய்யவேண்டியது என்னவென்று இலவசப் புத்திமதிகளை ஈழத்திற்கு வாரிவழங்கும் அறிவுவேசைத்தனம் வன்முறையில்லையா?”

எஸ்.ரா. வின் அறச்சீற்றம் பொருந்திய ஒவ்வொரு சொல்லோடும் உடன்படுகிறேன். இப்போது பேசுவது மட்டுமில்லை அப்போது பேசாமலிருந்ததும் வன்முறைதான். அந்த வன்முறையைக் கட்டுரையாளர் உட்பட பெரும்பாலானோர் இழைத்திருக்கிறார்கள் என்பதுதான் வருத்தத்திற்குரியது.

- தமிழ் நதி 

Pin It