பொதுவாக ஒரு சமூகத்தின் கூட்டு வாழ்க்கை, கூட்டு உழைப்பு, குழுபங்கேற்பு என்று கூட்டுச் சக்தியை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்படும் கலை வடிவங்களே நாட்டார் வழக்காறுகள். குறிப்பிட்ட மக்களுடைய சமூகப் பண்பாட்டு வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாகத் திகழும் அம்மரபுகளைத் தொகுப்பாளர்களும், ஆய்வாளர்களும் தத்தம் ஆய்வுப் பார்வையின் அடிப்படையில், வாய்மொழி வழக்காற்று வடிவங்கள், நடத்தை சார்ந்தவை, பருப்பொருள் வடிவங்கள், நிகழ்த்துதல் கலைகள் என்று வகைமைப்படுத்தியுள்ளனர். இவற்றுள், வாய் மொழி வழக்காறுகளும் நிகழ்த்துக் கலைகளும் ‘ நிகழ்த்துதல்’

(Performance)  என்றும் கலைச் செயற்பாட்டைத் தத்தமது தளமாகக் கொண்டு தத்தம் இருப்பை வெளிப்படுத்திக் கொள்பவை. நிகழ்த்துதல் என்பது கலைச்  செயற்பாட்டின் இரண்டு வகையான பொருளை வெளிப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்பட்டது. 1. மக்கள் வழக்காற்றுச் செயற்பாடு (doing of folkore)

2. கலைத் திறன் நிகழ்வு (Artistic event) இவை, முறையே குறிப்பிட்ட வழக்காறு பயன்படுத் தப்பட்டு, அது வடிவங்கொள்ளுதலையும், நிகழ்த்துதலில் பங்கேற்றும் முதல் நிலை, இரண்டாம் நிலைக் கலைஞர்கள், கலைவடிவம், பார்வையாளர், விழா முதலிய நிகழ்ச்சிகள் நடைபெறும் பின்னணி ஆகியவற்றை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கும் நிகழ்த்துதல் தருணத்தையும் குறிக்கின்றன. மக்கள் வழக்காற்று வடிவங்களை அணுகும் நிகழ்த்துதல் ஆய்வுக்கு மேற்குறிப்பிட்ட இரண்டும் மிகவும் அடிப்படையானவை.

கடந்த ஒரு தலைமுறைக் காலத்தில் மேலாகத் தமிழகத்தில், நிகழ்த்துதல் கலை வடிவங்களை ஆய்வுப் பொருளாக எடுத்துக்கொண்டு, எழுதப்பட்ட ஆய்வேடுகள், நூல்கள், கட்டுரைகள் என்பனவற்றின் வாயிலாகக் கவனிக்கத்தக்க வகையில், நிகழ்த்துதல்  ஆய்வுமரபு தமிழகத்தில் வேர்கொண்டுள்ளது. இம் மரபின் ஒரு தொடர்ச்சியாக நண்பர் முனைவர் கே. கட்டளை கைலாசம் எழுதியுள்ள ‘கழியலாட்டக் கலை’ என்னும் நூல் அமைந்துள்ளது.  இந்து, முஸ்லிம், கிறித்துவச் சமயங்களைச் சேர்ந்த மக்களிடையே  வெவ்வேறு சமூக, சமய விழாக்களில் இன்றளவும் நிகழ்த்தப்பட்டு வரும் தமிழர்க் கலைவடிவமாகத் திகழ்வது கழியலாட்டம். சாத்தான்குளம் வட்டாரத்தில் மிகவும் உயிரோட்டத்துடன் நிகழ்த்தப்பட்டுவரும் இக்கலைவடிவத்தினையே தமது முனைவர் பட்ட ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொண்டு முறையான களப்பணி மூலம் இருவேறு சூழல்களில் உற்று நோக்கித் தரவுகள் சேகரித்து நிகழ்த்துதலாய்வு செய்துள்ளார். அதுவே நூல்வடிவம் பெற்றுள்ளது.

இந்த நூலில் கழியல் ஆட்டத்தைப் பற்றிய அறிமுகத்திற்கு, நேரடியாக வந்துவிடாமல், உலக அளவில் பல்வேறு சமூகங்களில் நிகழ்த்தப்பட்டு வரும் ஆட்டக்கலை வடிவங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டித் தந்து, அதன் பின்னணியில், கம்பைக் கொண்டு ஆடும் ஆட்டங்கள் பலவற்றை அறிமுகப்படுத்துகிறார். இக்கம்பு ஆட்டங்களுள், கழியல் ஆட்டத்தைத் தனித்து எடுத்துக் கொண்டு, அதன் வடிவம், நிகழ்த்தும் கலைஞர்கள், பயன்படுத்தப்படும் இசைக் கருவிகள், பாடப்படும்  பாடல்கள், நிகழ்த்துமுறை, அது நிகழ்த்தப்படும் சமூகப்  பண்பாட்டுச்சூழல் ஆகியவை இயல்பாக விளக்கப்பட்டுள்ளன.

கழியாட்டம் குறித்து, இந்நூலாசியர் ஆய்வில் ஈடுபடுவதற்கு முன்னதாக வேறு சில ஆய்வாளர்களும் எம்ஃபில், முனைவர் பட்டங்களுக்காக ஆய்வு செய்துள்ளனர். கட்டுரைகள் எழுதியுள்ளார்.  இக்கலையை மட்டுமே பிரதானமாக எடுத்துக் கொள்ளாமல், இந்து, முஸ்லிம், கிறித்துவம் என்று மும்மதக் கருத்துகளைப் பிரதிபலிக்கும் கழியலாட்டப் பாடல்களை மட்டுமே முதன்மைப்பொருளாக எடுத்துக் கொண்டு ஆய்வில் ஈடுபட்டவர்களும் உண்டு.  இம்முந்தைய ஆய்வுப் படைப்புகளைப் பற்றி, அறிந்து கொள்ளும் நிலையில் முனைவர் கட்டளை கைலாசம் அவர்களுடைய ‘‘கழியலாட்டக் கலை’’ என்னும் இந்நூலைப் படிக்கும் போது, இதன் தனித்தன்மைகளை  அறிந்து கொள்ள முடிகிறது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டாரத்தைச் சேர்ந்த நாடார், ஆதிதிராவிடர் முதலிய சமூக மக்களிடம் வழங்கும் கழியலாட்டத்தினை நிகழ்த்தும் குழுக்களையும் அவற்றை இயக்கும் பல அண்ணாவிகளையும் தகவலாளி களாகக் கொண்டு இயற்கையான, செயற்கையான சூழல் களில் சுமார் பன்னிரண்டு நிகழ்ச்சிகளை உற்றுநோக்கித் தரவுகளை எழுத்து, புகைப்படம், வரைபடம் என்பன வற்றின் மூலம் பதிவு செய்து, மிகவும் அக்கறையுடன் எழுதப்பட்ட நூல் இது.

பொதுவாக நாட்டார் கலைமரபுகளைச் செவ்வியல் மரபுகளோடு ஒப்பிட்டுப் பேசும்போது, முன்னவை நெகிழ்ச்சியானவை, முறைசாராதவை, இலக்கணமற்றவை, ஒரே மாதிரியான போக்குடையவை என்றெல்லாம் மேலோட்டமாகச் சொல்வார்கள். இது ஒரு தவறான பார்வை. நாட்டார் கலைவடிவங்களுக்கென்று, நீண்ட  முறையான பயிற்சி, வடிவம், அமைப்பு, ஒவ்வொன்றும், பிரத்தியேகமான சூழல் எனப் பல அம்சங்கள் உண்டு. நூலாசிரியரின் ‘‘கழியலாட்டம் நிகழ்த்துதலின் அமைப்பு முறை’’ என்ற இயலைப் படிக்கும்போது இவ்வுண்மை புலப்படும். கழியலாட்ட நிகழ்த்துதலுக்கு ஒன்று ஓர் அமைப்பு செயல்படுவதை உற்று நோக்கி வெளிப்படுத் தியுள்ளார். அண்ணாவி வருகை, அவரிடமிருந்து கம்பு வாங்குதல், வட்டமாக நிற்றல், கலைஞர்கள் ‘ திகிர்தாம் தை/சரி’ எனச் சொல்லித் தொடக்க அடி அடித்தல், அண்ணாவி விருத்தம், பாடுதல், நிகழ்ச்சி சூழல் பாடல்கள் (பலவகை ஆட்டமுறைகள்), மங்களம் பாடுதல், ‘தித்தோம் தரிகிட தித்தமி தோமனதை’ என நிறைவு செய்தல் என்று  ஒன்பது வகையான அமைப்புக் கூறுகள் நிகழ்த்துதலில் இடம் பெறுகின்றன.

கழியலாட்டத்தில் அடிப்படைக் கூறாக விளங்கும் கம்பு முறையைச் சேர்வுகள் (Combinations) என்னும் கணித முறையைப் பயன்படுத்தி, எளிமையாகக் கணக்கிடும் முறையைக் தமது ஆய்வில் கையாண்டுள்ளார். தமிழக நாட்டார் கலைகள் பற்றி நடத்தப்பட்ட ஆய்வுகளில் இது வித்தியாசமானது. கழியலாட்டக் கலைஞர்களுடைய கைகளில் இயக்க நிலைகள்,கால் வைப்பு முறைகள், உடலசைவுகள், அவர்கள் எதிர் எதிர்த்திசையில் சுழன்று நகர்தல் என்று ஆட்டக்கலை நிகழ்த்துதலின்  ஒவ்வொரு கட்டமும் உரிய வரைபடங்கள் வாயிலாகச் செறிவாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. கழியலாட்டப் பாடல்களில் வகைகளும், அவற்றின் சந்தக் கட்டுகளும் ஒருங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

கழியலாட்டக் கலையில் அண்ணாவி பெறும் முக்கியத்துவத்தை, நிகழ்த்துதல், பயிற்சியளித்தல் ஆகிய தருணங்களில் உற்றுநோக்கியது கொண்டும், நேர்காணல்கள் வாயிலாகத் திரட்டிய தரவுகளைக் கொண்டும் நூலாசிரியர் அடையாளம் காட்டுகிறார். பின்னணிக் கலைஞர்களுடைய பங்கு இத்தகைய ஆட்டக்கலைகளில் எத்தகையது என்பது பொதுவாக உணரப்படாமல் போய்விடுவதுண்டு. அவர்களின் பங்கினைத் தமது ஆய்வில் கோடிட்டுக் காட்டுகிறார்.

நிகழ்த்துநர்கள் நிகழ்த்துதலில் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பார்வையாளர்கள், கழியலாட்டப் பாடல்களைத் தாமும் பாடுதல், ஆட்டத்தில் பங்கேற்றல் என்பனவற்றின் மூலம் பார்வையாளர்கள் கழியலாட்டத்தில் காட்டும் ஆர்வம் நமக்கு வியப்பூட்டுவது. பொதுவாகக் தமிழக ஆட்டக் கலைகள் குறித்து மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே நிகழ்த்துதலாய்வு செய்யப்பட்டுள்ள நிலையில், முனைவர் வே. கட்டளை கைலாசம் அவர்கள், இக்கலையின் நுட்பங்கள் அனைத்தையும் உள்வாங்கி எழுதியுள்ள இவ்வாய்வு நூல், நாட்டார்கலைகளில் ஆர்வமுள்ளோர், ஆய்வாளர் அனைவருக்கும் பயன் நல்கக்கூடியது எனில் அது மிகையாகாது.

- ஆ.தனஞ்செயன்

Pin It