கடவுள்-ஒரு பொய் நம்பிக்கை என்ற புத்தகம் 2006ல் வெளிவந்து, விற்பனையில் சாதனை படைத்து, தொடர்ந்து அறிஞர்கள் பலராலும் விவாதிக்கப்படுகின்ற புத்தகமாக உள்ளது.

ஒரு “கருத்தை’’ பிழையானது என்று மீண்டும் மீண்டும் மெய்ப்பித்த பிறகும், மீண்டும் அதன்மீது நம்பிக்கை வைப்பதையே “பொய் நம்பிக்கை’’ (DELUTION) என்று அழைக்கின்றார் ஆசிரியர். “ஒரு நபருக்கு பொய் நம்பிக்கை இருந்தால் அது மன பேதலிப்பு, பல மக்களுக்கு பொய் நம்பிக்கை இருந்தால் அது மதம்’’ என்று வாதாடுகின்றார்.

இப்புத்தகம், மதவேஷங்களையும் , கடவுள் என்னும் கருதுகோளையும் தோலுரித்துத் தொங்கவிடுவது. மட்டுமல்ல மதத்திற்குமேல் இயற்கை சக்தி, அதுவும் இல்லை, அதற்கு மேல் ஏதோ ஒரு சக்தி என்று தப்பித்து ஓடுபவர்களை இழுத்துப்பிடித்து நிற்கவைத்து அந்த மாயக்கருத்தைத் தவிடுபொடியாக்குகிறது.

நாத்திகத்தை முரட்டுத்தனமாகவும், கடுப்பூட்டும் வகையிலும் பேசாமல், அறிவுப்பூர்வமாகவும், வரலாற்றின் ஆதாரங்களிலிருந்தும்,உளவியல் ரீதியிலும், டார்வினின் உயிரியியல் கோட்பாடுகளிலிருந்தும் நளினமாகவும், ஏற்கும் வகையிலும் பேசப்படுகிறது. “பரிணாம வளர்ச்சிக்கும், படைப்பியத்திற்கு மட்டுமல்ல முரண்பாடு, உண்மையான முரண்பாடு பகுத்தறிவுக்கும் மூடநம்பிக்கைக்கும் இடைப்பட்டது. பகுத்தறிவின் ஒருவடிவம்தான் அறிவியல். மூடநம்பிக்கையின் பொதுவடிவமாக மதம் இருக்கிறது. படைப்பியம் இல்லாமல் மதம் இருக்கமுடியும். ஆனால் மதம் இல்லாமல் படைப்பியம் இருக்கமுடியாது” என்கிறார்.

படைப்பியம் பழையதாகிவிட்டது. புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் கடவுளுக்கான இடத்தை சுருக்கிவிட்டது. எனவே படைப்பியத்தை நிலைநிறுத்த கூரறிவு வடிவமைப்பை படைப்பியல் வாதிகள் கொண்டுவருகின்றனர். அமெரிக்காவில் கல்வி நிலையங்களில் பரிணாம வளர்ச்சித் தத்துவத்துடன், படைப்புக்கோட்பாட்டையும் கற்பிக்க வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை ஆளுகிறவர்களும், படைப்பியல்வாதிகளும் கொடுத்துவருகிறார்கள். இப்போரின் மையப்பிரச்சனைகளை இப்புத்தகம் அலசுகிறது.

மதச்சார்பற்ற அரசு என அறிவித்துக்கொண்ட அமெரிக்காவில் மதஉணர்வுகள் அதிகமாகவும், மதம்சார்ந்த நாடு என அறிவித்த இங்கிலாந்தில் மதஉணர்வு குறைவாகவும் இருப்பதற்கான காரணத்தை விளக்கி விடைகாணப்படுகின்றது.

ஏசுநாதர், தனது தெய்வீக நிலைக்காக உரிமை கொண்டாடியதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் இன்றைய ‘தொலைக்காட்சி மதபோதகர்கள்’ அமெரிக்காவில் மக்களிடம் பணம் வசூலித்து சொத்து சேர்க்க, அரசிடம் வரிவிலக்குப்பெற்றுள்ளனர். இந்த பிரச்சாரகர்களுக்கு “சோப்புக்கட்டிகளை விற்க எது உதவுகின்றதோ, அதுவே கடவுளுக்கும் உதவுகிறது’’.

கூரறிவு வடிவமைப்புக் கோட்பாட்டாளர்கள் டார்வினிய பரிணாம வளர்ச்சிக்குச் சவால் விடுகின்றனர். கண், இறக்கை, வீசல் என்கிற தவளையின் முட்டி என்ற உயிரினங்களை எடுத்துக்காட்டாகக் கூறுகின்றார். இதேபோன்று கடற்பஞ்சுவின் வடிவமைப்பு பரிணாமத்தால் சாத்தியமா என்று சவால்விடுகின்றனர். இவை அனைத்தும் வெற்றுச்சவால்கள் என ஆசிரியர் புட்டுப்புட்டு வைக்கின்றார்.

மதம் பற்றிய, உலகின் பிரபலமான தலைவர்கள் தாமஸ்ஜெபர்சன் முதல் காந்தி, நேருவரை பலரின் கருத்துகளைக் கவனத்திற்குக் கொண்டுவருகிறார். வின்சன்ட் சர்ச்சிலின் மகன் யுத்தகளத்தில் பைபிள் பழைய ஏற்பாட்டை படித்துவிட்டு சொல்லும் கருத்துகள் புதியவை.இதுபோன்ற பல புதிய தகவல்கள் உள்ளடங்கியுள்ளது.

“கிட்டத்தட்ட எப்பொழுதும் குருட்டு நம்பிக்கை, பிற்போக்குத்தன்மை, வறட்டுக்கொள்கை, மதவெறி, மூடநம்பிக்கை, சுரண்டல் நிலைத்துவிட்ட தன்னலத்தைக் காத்துக்கொள்ளுதல் ஆகியவற்றிற்கு சார்பாகவே மதம் இருப்பதாகத் தோன்றுகிறது’’, என்று நேரு மதத்தை பற்றிய கருத்தைக் கொண்டிருந்தார். ’’ பல நம்பிக்கை களையும், மதங்களையும் கொண்ட ஒருநாட்டில் மதச்சார்பின்மை என்ற அடிப்படையில் இல்லாமல் உண்மையான தேசியத்தைக் கட்டி அமைக்கமுடியாது’’ என்று கருதியதை புத்தகத்தில் பதியவைத்துள்ளார் டாகின்ஸ்.

மறுபுறத்தில் ஹிட்லர் போன்றவர்களின் (ஸ்டாலினையும் சேர்த்துள்ளார்) கொடூர நடவடிக்கை களுக்கு அவர்களின் நாத்திகக் கொள்கைதான் காரணம் என்று கூறப்படுவதை வலுவான வரலாற்று ஆதாரங் களுடன் மறுத்துள்ளார்.“பொதுமக்களை அமைதியாக வைத்திருக்க மதம் அருமையாக உதவுகிறது“என்று நெப்போலியன் கூறினான்.“மக்களுக்கு மதநம்பிக்கை தேவைப்படுகிறது.எனவே நாத்திகத்திற்கு எதிரான போரில் ஈடுபட்டோம் “ என்று ஹிட்லர் கூறினான். யேசுவை சிலுவையில் அறைந்த யூதர்களை ஒழிப்பேன் என்ற ஹிட்லர், யேசுவை யூதராகப் பார்க்காத ஹிட்லர் கிறிஸ்துவத்தை நிறுவிய புனித பால் மற்றும் காரல் மார்க்சையும் யூதர்களாக முத்திரை குத்தினான். மதத்தைத்தான் தனது கொடூரத்தன்மைக்கு பயன்படுத்தினான்) ஹிட்லர் நெப்போலியன் மட்டுமல்ல 21ம் நூற்றாண்டு ஜார்ஜ்புஷ் ஈராக்மீது படையெடுக்க வேண்டும் என்று கடவுள் தன்னிடம் கூறியதாக அறிவித்துதான் படையெடுத்தான்.

விஞ்ஞானிகள் கடவுள் நம்பிக்கை உள்ளவர் களா?நாத்திகர்களா?என்ற கேள்விக்கு படைப்பியல் வாதிகள் அவர்களை மதநம்பிக்கையாளர் களாக முன்னிறுத்துகின்றனர். ஆனால் இப்புத்தகத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் உயர்மட்ட விஞ்ஞானிகள் உட்பட ஆய்வு செய்து 7 சதம் மட்டுமே மத நம்பிக்கையாளர் என்று நிருபித்துள்ளார்.

மற்றொரு அற்புதமான ஆனால் வேடிக்கையான ஆய்வுத்தகவல் பிரார்த்தனை பரிசோதனை பற்றியது. நோயாளிகளுக்காக செய்யும் பிரார்த்தனைகளில் என்ன பயன் என்பது பரிசோதனை மூலம் விளக்கப்படுகிறது, எந்த மதப்பிரிவை (கிறிஸ்துவப் பிரிவுகள்) சேர்ந்தவர்கள் அதிகமாக சொர்க்கத்தில் இருக்கிறார்கள் என்று நடக்கிற ஆய்வு முடிவுகள் தொழில்போட்டியைத் துரிதப்படுத்தியுள்ளதை அம்பலப்படுத்துகின்றார்.

ஒழுக்கம் என்பது மதம்சார்ந்து இருப்பதால்தான் இருக்கிறதா? அமைதி என்பது மதம்சார்ந்து மக்கள் இருப்பதால் இருக்கிறதா? என்ற கேள்விக்கு உளவியல் பூர்வமான விளக்கமளிப்பதுடன், வரலாற்று நிகழ்வுகளையும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இங்கே மதமற்ற ஒரு உலகை கற்பனை செய்தால் என்ற கேள்வியுடன் மதத்தின் பெயரால் நடந்த , நடந்துவருகிற போர், குண்டு வெடிப்பு படுகொலைகள் என்ற பட்டியல் படிக்கப்படிக்க, மதமற்ற உலகம் தோன்றாதா என்ற ஏக்கம் பிறக்கிறது.

இப்புத்தகம் மதமின்றி, கடவுள் நம்பிக்கையின்றி வாழமுடியும் என்கிறது. குழந்தைகளுக்கு மதஉணர்வு இல்லை, அது உருவாக்கப்படுகிறது என்கிறது. டார்வினியத்தை இன்று உலக உதாரணத்துடன் நிலைநிறுத்துகின்றது. கூரறிவு வடிவமைப்பை மழுங்கடித்து மண்டியிடச்செய்கிறது.

இப்புத்தகத்தை எழுதிய ரிச்சர்ட் டாகின்ஸ் இதற்கு முன் எட்டுக்கும் மேற்பட்ட விஞ்ஞானப் புத்தகங்களை எழுதிப் புகழ் பெற்றவர். இந்த நூலிற்குப் பிறகு 2009ல் பரிணாம வளர்ச்சியின் ஆதாரங்களை மையப்படுத்தி ஒரு புத்தகத்தை(Greatest show of earth) வெளியிட்டுள்ளார்.

சிறந்த இந்தப் புத்தகத்தைத் திராவிடர் கழகம் தமிழில் வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. வாசிப்பு தடையின்றிச் செல்லவும், அதே நேரத்தில் அதன் பொருளை முழுமையாகப் புரிந்துகொள்ளும் விதத்திலும், தேவையான இடங்களில் விளக்கமளித்தும் இப்புத்தகத்தை மொழியாக்கம் செய்துள்ள பெரியார் பேருரையாளர் கு.வெ.கி. ஆசான் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

Pin It