அவர்கள்
ஆயுதங்கள் ஏந்தியது அறவழிலாகாது
தெரியும் எனக்கு.
அவர்களை ஆயுதங்கள் ஏந்த வைத்தவர்கள்
அவர்களை அப்படி ஆக்கியதை
என்னோடு சேர்ந்து
ஆயுதங்களும் இரத்தச் சிந்தல்களும்
மரணங்களும் காயங்களும் துயரங்களும்
வன்மையாகக் கண்டிக்கின்றன.

பல வண்ணங்களைக் காட்டும் ’கலைடாஸ்கோப்’ போல பல்வேறு நிகழ்வுகளையும் சூழல்களையும் சிந்திக்கத் தூண்டும் கவிஞர் தமிழன்பனின் மேற்கண்ட வரிகளோடு இந்நூல் மதிப்பீட்டைத் தொடங்கலாம்.

ஈழத்தமிழர்களிடமிருந்து ‘சுதந்திர உருப்படிகள் உடைத்தெறியப்பட்டபோது, அவர்களின் புல்லாங்குழல்களிலிருந்து புறப்பட்டன தோட்டாக்கள்’ என்று அவர்கள் ஆயுதம் தரித்த காரணத்தைக் கவித்துவத்தோடு தமிழன்பன் வருணிக்கிறார். புல்லாங்குழல்கள் துப்பாக்கிகளாய்ப் புகைந்த காலத்திற்கும் முன்னால் தந்தை செல்வாவின் தலைமையில் நடந்த அமைதிப் போராட்டங்களையும் தமிழன்பன் நினைவு கூர்கிறார். அமைதிப் புறாவின் சிறகுகளைத் துண்டிப்பது சிங்கள அரசின் வழிமுறையாகிய பின்னர், தமிழ் இளைஞர்கள் ஆயுதங்கள் ஏந்த வேண்டிய கட்டாயத்திற்குள்ளாயினர் என்பதுதான் வரலாறு.

1983 இல் இலங்கையில் மூண்ட கலவரங்களும், அதன் தொடர்ச்சியாக ஏராளமான தமிழர்கள் அகதிகளாக இந்தியாவுக்குப் புலம் பெயர்ந்ததும், இந்தியா, இலங்கை, அரசியலில் ஊடுருவுவதற்கான வாய்ப்பாக அமைந்தன. தென்கிழக்காசியாவில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தும் கனவிலிருந்தது. (இருந்து கொண்டிருக்கிறது) இந்தியா, அந்த சமயத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல், பாகிஸ்தான் ஆகியவற்றுடன் பலமான உறவு கொண்டிருந்தது இலங்கை. அப்போதைய இந்தியத் தலைமையச்சர் இந்திராகாந்தி, இருதட அரசியல் கொள்கை (TTwo Track Policy) ஒன்றை உருவாக்கினார். இலங்கை அரசுக்கும், அன்றைய முதன்மையான தமிழ் அரசியல் கட்சியாகிய தமிழர் இலக்கிய விடுதலை முன்னணிக்கும் (Tulf) மத்தியஸ்தம் செய்யும் ஒரு பாகத்தை வகிப்பது; இரண்டாவதாகத் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கு ஆயுதம் கொடுத்துப் பயிற்சி அளிப்பது (கலாநிதி ஆ. மனோகரன், இலங்கை தேசிய இன முரண்பாடுகளும் சமாதான முன்னெடுப்புகளும், பக். 395-396) போராளிக் குழுக்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் அளித்தது, தமிழீழ விடுதலைக்கு உதவும் நோக்கில் அன்று, இலங்கை அரசுக்கு ஒரு நெருக்கடியைத் தருவதற்கே. இது குறித்து இன்னும் விரிவாக விவாதிப்பதற்கு தமிழன்பன் ஓர் அரசில் புத்தகம் எழுதவில்லை. இது ஒரு கவிதைத் தொகுப்பு.

ஆனால் இன்று சுட்டத்தகுந்த ஒரு பிரச்சினையின் வித்து, முளைவிடத் தொடங்கிய ஒரு காலம் அது. புலிகள் இயக்கத்தைப் ‘பயங்கரவாத இயக்கம்’ என்று வசைபாடும் காங்கிரசு, இந்தப் பயங்கரவாதத்துக்கு யார் கால்கோள் செய்தது என்கிற சுடுகிற உண்மையை எதிர்கொள்ள வேண்டிய நேரம் இது. ஆயுதந் தாங்கிய போராளிகள் உருவானதற்கு இலங்கை அரசின் பேரினவாத ஒடுக்குமுறை மட்டுமன்று. இந்தியாவின் வல்லாதிக்கக் கனவும் பங்களிப்புச் செய்தது என்பதை இனியும் மறைத்துப் பேச வேண்டியதில்லை.

ஆயுதங்கள்
எப்போதும் அன்பை உச்சரிப்பதில்லை
அவற்றின் மொழியில்
மரணங்கள் பெற்றெடுத்த சொற்களே அதிகம்.

இந்த வழிகளும், ஒருவகையில் அரசின் ஆயுதப் பயன்பாட்டின்மீது மட்டுமில்லாது, போராளிகளின், குறிப்பாகப் புலிகளின் மீதான விமர்சனமாகவும் கொள்ளத்தக்கவை. உண்மையைத் தேடும் நோக்கிலான இத்தகைய விமர்சனப் பொறிகள் கண்டு நாம் துணுக்குற வேண்டியதில்லை. அண்மையில் பேராசிரியர்கள் சிலரோடு உரையாடும் போது, அவர்கள் புலிகள் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்கள். பிற இயக்கத்தவர்களைத் தலைவர்களைக் கொன்றொழித்தார்கள் புலிகள் என்றனர். நான் அதை மறுக்கவில்லை. பிறகு அமைதியாக அவர்களைக் கேட்டேன். “பிற இயக்கத்தினரால் கொன்றொழிக்கப்பட்ட புலிகள் குறித்தும் நீங்கள் பேசுவீர்களா?’’ அவர்களிடம் பதிலில்லை. புலிகள் உட்பட எல்லா இயக்கங்களும் இப்படி ஆயுத மோதல்களில் கலந்தவர்கள்தாம். இந்த மோதல்களின் பின்னணியாக இந்திய உளவுத்துறையே செயல்பட்டது என்பது இந்தியத் துணைக் கண்டத்து மக்களுக்கு முழுமையாகச் சொல்லப்படாத செய்தி. துக்ளக், ஹிந்து போன்ற இதழ்கள் மூடி மறைத்த உண்மை.

ஈரோடு தமிழன்பனின் பார்வை, சிங்கள இனவாத ஆசை மட்டுமல்லாது, ‘இது இலங்க¬யின் உள்நாட்டுப் பிரச்சினை’ என்று பாவனை செய்த இந்திய அரசையும் அம்பலப்படுத்தத் தவறவில்லை

ஆதிக்க வல்லாண்மைகள்
இரத்த தாகமுள்ள வரலாற்றின் பக்கங்களில்
உள்நாட்டுப் பிரச்சினை
இதுவென்று
தமிழினப் படுகொலைகளைச்
சலனமற்ற எழுத்துகளால் முடித்துவிடத்
தீர்மானிக்கின்றன.
கைபிசைந்து
தாயகத்தமிழன் கலங்குவதைப்
பூமி அறியும் வானம் அறியும்
புதுதில்லி அறியவில்லையே!

புதுதில்லி அறிந்தும் அறியாதது போலிருந்தது. அதற்கு ஆம் போட்டது தமிழக அரசு. நம் கண்முன் நடந்த ஓர் இனப் படுகொலையைத் தடுக்க முன்வராதது மட்டுமன்று - இந்த இனப்படுகொலைக்குத் துணை போன தவற்றையும் சரியாகச் சொன்னால் துரோகத்தையும் செய்தது இந்திய அரசு. அதற்குத் துணை போனது தமிழக அரசு.

உலக அளவில், இந்தப் படுகொலைகளைக் கண்டனம் செய்யாத ஒரு மௌனத்தை உருவாக்கியதிலும் இந்திய அரசின் கைங்கர்யத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. எந்த ஒரு போராட்டக் கவிஞனைப் போலவும், தமிழன்பனும், தன் முன்னோடிக் கவிஞர்களையும் புரட்சியாளர்களையும் தான் ஆதரிக்கும் போராட்டத்துக்கு சாட்சியமாக்குகிறார்.

பாப்லோநெருதாவின் பாடல்கள்
ஆயுதக் கைகளால் அள்ளிக் கொள்கின்றன
பெருமூச்சோடும் பெருஞ்சினத்தோடும்
சேகுவேராவின்
சிவப்புக் கனத்த கண்கள்
திருப்புகின்றன ஈழத்தின்பக்கமாய்

இப்படித் தொடரும் தமிழன்பனின் நம்பிக்கைகள் நம் அனைவரின் நம்பிக்கைகள் சிதைந்து போயின என்பதுதான் இன்றைய வரலாறு.

இலங்கையின் கடந்த கால நிகழ்கால வரலாற்றிலிருந்தும், புனைவுகளிலிருந்தும் இனவெறி அரசியலை ஒரு வரலாற்று அமைதியோடு பார்த்துச் செல்லும் தமிழன்பன் ‘என் அருமை ஈழமே,’ நம் காலத்தின் கண்ணீருக்கும் கவிதைக்கும் ஓர் எழுத்துச் சாட்சியமாக இருக்கும். நம் மேன்மைகளுக்கு மட்டுமன்று நம் வீழ்ச்சிகளுக்கும் கூட. இதில் ஊடாடும் வரலாறு ஓர் ஒழுங்குபடப் பேசப்படவில்லை. அப்படிப் பேசப்பட்டிருந்தால் இது ஒரு வரலாற்றுப் பாடப்புத்தகமாக ஆகி இருக்கும். நிகழ்கால போராட்டத்தின் முன்னும் பின்னுமாக வரலாறு ஊடுபாவுவது, பல காட்சி விரிப்புகளை வழங்கிச் செல்கிறது.

‘இலங்கை
தனது முதல் பகலில் கண்டமுகம்
தமிழ்முகம்,
இலங்கை
தனது முதல் இரவில் கேட்ட பாடல்
தமிழ்ப்பாடல்’

என்று தொடங்கும் கவிதையே, கவித்துவத்தின் வெளிச்சத்தில் போராட்ட வரலாற்றை உணரும் மன உணர்வுக்கு வழி அமைத்துவிடுகிறது.

இந்த இனப் போராட்டத்தை ‘இரத்தினச்’ சுருக்கமாக இப்படிச் சொல்கிறார்.

எல்லாள மன்னன் மரணம்
திரும்பத் திரும்ப
நிகழ்கிறது - வேறு பெயர்களில்
அவர்கள்
புலிகளின் ஆதரவாளர்கள் அல்ல; ஆனால்
புலிகளைத் தவிர
வேறு ஆதரவும் அவர்களுக்கு இல்லை.

என்ற வரிகள் என்னுள் ஆழ்ந்த துயர அலை ஏற்படுத்துகின்றன. இன்று புலிகளற்ற ஈழத்தமிழர் என்பதை எப்படி எதிர்கொள்வது? பலர் வரலாம். தம்மை விரைந்து விற்றுக் கொள்வதுதான் அவர்களின் கடந்த காலமாக இருக்கிறது. இந்தியாவின் அரசியல் தலைமை புலிகளின் வீழ்ச்சியில் பழிதீர்த்துக் கொண்ட நிறைவை அடையலாம். ஈழப் பிரச்சினை ஒருவகையாகத் தீர்ந்தது என்று தமிழினத் தலைவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடலாம். ஆனால், தமிழீழ மண் தன் காயங்களையே கல்லறைகளாக எண்ணித் துளிர்ப்பதை மறக்குமோ? அதன் மக்களின் நினைவுகளில் இந்தக் கொடுங்கனவு திரும்பி எழமுடியாத ஒரு பேரச்சத்தை விதைக்குமோ? தமிழன்பன் நம்பிக்கை ஊட்டுகிறார்.

இனவெறிப் போரின் முடிவில்
இவர்கள் எல்லோருமே அங்காந்த
சாவுப் பள்ளத்தாக்கின் வாயில்
கொட்டிக் குவிக்கப்படலாம்.
ஆயின்
தனது மண்ணிலிருந்தும் கல்லிலிருந்தும்
மலைகள் காடுகளிலிருந்தும்
ஈழத்தாய்
இரத்தமும் சதையும் எலும்பும் நரம்பும்
சாகாச் சுதந்தர மூசசும் கொண்டவர்களாய்
அவர்களை
மறுஉற்பத்தி செய்வாள்
இது சத்தியம்.
வாழ்க்கைக்கு வழிகாட்டி