நூல் விமர்சனம்:
கண்ணகி,
சு.தமிழ்ச்செல்வி,
வெளியீடு: உயிர்மை, சென்னை-18
பக்கம் – 208; ரூ.120/

இரண்டாயிரத்துக்குப் பிறகு (2002 முதல்) மிகக் குறுகிய காலத்தில் ஆறு நாவல்களையும் ‘சாமுண்டி’ எனும் சிறுகதைத் தொகுப்பையும் எழுதியவர் ச. தமிழ்ச்செல்வி. இவரது எழுத்துகள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பின்புலத்தில், கிராமத்துப் பெண்களின் வலிகளையும் பாடுகளையும் எவ்விதக் கோட்பாடுகளுக்குள்ளும் புகுந்து கொள்ளாமல் இயல்பாக சொல்கிறது. ‘அளம்’ நாவலில் பலாப்பழம் பறிக்கப்போகும் சுந்தராம்பாளின் கண்களில் எறும்புகள் விழுந்து கடிக்கும் வலியும், ‘கற்றாழை’ நாவலில் அதிகாரமிக்க ஆண்களின் எதிர்ப்பை மீறி ஆற்றைக் கடக்கும் பெண்மையின் சக்தியும் வாசித்து இரண்டாண்டுகள் கழித்தும் தமிழ்ச்செல்வியின் அடையாளமாக நம் முன் நிற்கிறது.

தமிழ்ச்செல்வியின் ஆறாவது நாவல் கண்ணகி. இந்நாவலில் விருத்தாசலத்திலிருக்கும் தலித் சமூகத்தின் பின்னணியில் கண்ணகியின் வாழ்வை புனைந்திருக்கிறார். குடும்பத்தாரால் மிகுந்த பாசத்துடன் வளர்க்கப்படும் கண்ணகி, அறியா வயதில் ஆசைத்தம்பியுடன் வீட்டைவிட்டு வெளியேறுகிறாள். ஆசைத்தம்பி மேலும் இரு பெண்களைத் திருமணம் செய்து கொள்கிறான். கண்ணகி தனது மாமியார் குடும்பத்தை உழைத்துக் காப்பாற்றுவதிலேயே வாழ்க்கையை நகர்த்துகிறாள். இதற்கிடையில் கண்ணகிக்கு இரண்டு குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன. ஆசைத்தம்பியின் அட்டூழியம் தாளாமல் வீட்டைவிட்டு வெளியேறி, எங்கெங்கோ சுற்றித் திரிந்தும் மனஉறுதியை விடாமல் வாழ்கிறாள்; பிறரையும் வாழ வைக்கிறாள். பெரும் துன்பத்திற்கு இடையிலும் உறுதியாய் வாழும் பெண்மையின் குறியீடாய் கண்ணகி இருக்கிறாள்.

இந்நாவல் கதைசொல்லும் போக்கிலேயே பலநுட்பமான விடயங்களைப் பதிவு செய்கிறது. குறிப்பாக, கண்ணகியின் குழந்தைப் பருவ வாழ்க்கை குழந்தைகளின் உளவியலுடனும் உலகுடனும் புனையப்பட்டுள்ளது. உயர்சாதியினர் தலித்துகள் மீது செலுத்தும் தீண்டாமையும் பொருளாதாரச் சுரண்டலும் கதையின் போக்கோடு அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘எட்டு கூட்டாளியும்’ சின்னவெடையும் தீண்டாமைக்கும் சுரண்டலுக்கும் எதிரான குறியீடாக உள்ளனர். மேலும் மனித உறவுகளுக்குள்ளான பல்வகையான ஊடாட்டங்களும் மிக நுட்பமாக பதிவுசெய்யப்பட்டுள்ளன. உதாரணமாக, ஆசைத்தம்பியின் இரண்டாவது மனைவியான சூடாமணிக்கும் கண்ணகிக்கும் வாக்குவாதம் முற்றுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசைத்தம்பி கண்ணகியை அடிக்கிறான். அப்பொழுது சூடாமணி, ‘அய்யோ தெய்வமே புள்ளத்தச்சி பொண்ண கொல்லுறானே’ என குறுக்கே விழுந்து மறைக்கிறாள். மற்றொருபுறம் தனக்குக்கீழ் வேலைசெய்யும் கண்ணகிமீது அதிகப்படியான பாசம் வைத்திருக்கும் மரியபுஷ்பம் அவளை வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை. இவ்வாறு நாவல் முழுக்க மனித உறவுகளுக்குள்ளான ஊடாட்டங்களும் மனித உணர்வின் நுட்பமான தருணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கண்ணகி தனக்கு இரு குழந்தைகள் இறந்தே பிறந்த பின்னும் அதுபற்றி எவ்வித உணர்வும் அற்றவளாக இருக்கிறாள். இது தமிழ்ச்சமூகம் ‘தாய்மை’ குறித்து கற்பித்துவரும் விழுமியங்களை உள்வாங்கிய வாசகருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தவே செய்யும். நாவலின் இறுதிதான் இதற்கான காரணத்தை உணர வைக்கிறது. தனக்கு தாளமுடியாத துரோகங்களை எல்லாம் செய்துவிட்டு இறக்கும் தருவாயில் ‘நீ பத்தினியா வாழனும்னு’ சத்தியம் வாங்கிய கணவன் கண்ணகிக்கு முக்கியமாகப்படவில்லை. எவ்வளவோ பாசம் காட்டியும் உதவிகள் செய்தும் கூட தன்னைப் புரிந்து கொள்ளாமல், தனது சொத்துக்களை மட்டும் அனுபவிக்கும் மகனும் கூட கண்ணகிக்குப் பெரிதாகத் தெரியவில்லை. தாலிகட்டாமல் இருந்தாலும் தன்னுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு, தன்னை சகமனுஷியாக நடத்திய அன்சாருக்காக அத்தனை உறவுகளையும் அதன் கட்டுபாடுகளையும் மீறுகிறாள் கண்ணகி. தமிழ்ச்சமூகத்தின் நாட்டார் கதை மரபிலும் செவ்விலக்கிய மரபிலும் மிக முக்கியமான குறியீடு கண்ணகி. பெண் வலிமையின் குறியீடான கண்ணகியை தமிழ்ச்சமூகம் இதுவரையிலும் ‘கற்புக்கரசி’யாகவே கற்பித்து வந்தது. இதனை கண்ணகி நாவல் மூலம் உடைக்கிறார் தமிழ்ச்செல்வி. நாவலின் இறுதி வாசகனுக்குப் பலவிதமான கேள்விகளையும் அனுமானங்களையும் எழுப்புவது நாவலின் வெற்றி.

இது வரையிலும் கீழ்த்தஞ்சையையே தனது கதை நிகழும் களனாகக் கொண்டிருந்த தமிழ்ச்செல்வி, இந்நாவலில் கடலூர், விருதாசலம் பகுதிகளைக் களனாகக் கொண்டுள்ளார். ஆனாலும் கீழ்த்தஞ்சையினுடைய மொழிநடை சில இடங்களில் தென்படுகிறது. பெருமளவு உரையாடலையும், நாட்டார் கதைகளையும் பயன்படுத்தி நாவலை நகர்த்தும் இவரது உத்தி இந்நாவலிலும் வெற்றி பெற்றுள்ளது.