முதல் பிரவேசம்

முதல் என்னும் சொல் முக்கியத்துவமும் அழுத்தமும் கூடியது. முதல் நிகழ்வுகள் வாழ்க்கையில் மறக்கவியலாததாக பல சந்தர்ப்பங்களில் நினைவைத் தூண்டும். தனிமனிதரை உயர்த்துவது வீழ்த்துவது எனும் இரு துருவங்களையும் நிகழ்த்துவது. அதிலிருந்து பெற்ற அனுபவம் அதன் பின்னான செயல்பாடுகளில் முக்கிய வினையாற்றுகிறது.

சுனைகள் மெல்லிய நீர்க்கசிவைக் கொண்டிருப்பது போல மனதில் பிசுபிசுத்தபடி நீரோட்டமான அனுபவங்களும், சின்ன துரும்பு குத்தியதன் வலி உடலை வாட்டுவது போன்ற வலியும், மூடிவைத்தாலும் திமிறி வழியும் உலை கொதிப்பதைப் போல சுமக்கவியலாமல் இறக்கிவைக்க வேண்டிய தேவையை உருவாக்குகிறது. புறச்சூழல்கள் அகத்தூண்டலில் வார்த்தையாகிக் கிளர்த்தும் கவிதையாகிறது. கவிதை என்னிடையே பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

கவிஞர் என நானறிந்தவர்களுள் சிலர் கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருந்தனர். தொடர்ந்து கவிதைகளை எழுதி வந்தாலும் இன்றுவரை தொகுப்பு கொண்டு வராதவர்களையும் சந்தித்திருக்கிறேன். கவிதை நுட்பம் கொண்டவர்களாக, சிறந்த கவிஞர்களாக அறிந்திருந்தும் இதுவரை தொகுப்பு வெளியிடாதவர்களை நினைக்கும்பொழுது தொகுப்பு கொண்டு வரும் என் ஆவல் நீர்க்குமிழிபோல மறைந்து விடும்.

ஏனெனில் நாவல் சிறுகதைகளைப் படைப்போரைவிட கவிஞர்கள் அதிகம். பிற வடிவங்களில் எழுத சில எழுத்தாளர்களே உள்ள நிலையில் கவிதையில் மட்டுமான பெருக்கம். இக்குறிப்பிட்ட இலக்கிய வடிவம் மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இழுத்து வருவதைப் பார்க்கிறோம். எண்ணிக்கை அளவில் கவிஞர்கள் அதிகமாயினும் பதிப்பகங்கள் கவிதைத் தொகுப்பை பிரசுரிக்கத் தயங்குகின்றன. கட்டுரைத் தொகுப்பு, சிறுகதை, நாவல் எனின் உடனே ஒப்புக் கொள்கின்றனர். காரணம் கவிதை நூல்களுக்கு நூலக ஆணை கிடைப்பதில்லை. கவிதைப் புத்தகம் போட்டால் இலாபம் இல்லை என்ற வணிகப் பதிப்பகப் போக்கு பொருளிலார்க்கு இலக்கியம் இல்லை என் மறைமுகமாக உணர்த்துகிறது. படைப்பிலக்கியத்தை வளர்க்க வேண்டிய அரசாங்கம் அரசுக் கல்லூரிகளுக்கான பேராசிரியர் நியமனத்தில்

கூட படைப்பிலக்கியத்திற்கு, குறிப்பாக கவிதைத் தொகுப்புக்கு மதிப்பெண் இல்லை என்ற விதியை சமீபகாலமாக கடைபிடித்து வருவதும் கவலையளிக்கிறது. மொழியின் மீது காதலை உண்டாக்கும் படைப்பிலக்கியம் முக்கியத்துவம் பெறாமல் போனால் செம்மொழி எனக் கூறி பெருமை பேசுவது மட்டுமே எஞ்சி நிற்குமோ எனும் ஐயத்தையும் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது.

2005 ஆம் ஆண்டு மே மாதத்தில் தொகுப்புகளைக் கொண்டுவருவோம் என்று தோழர் யாழினி முனுசாமி, தோழி பரமேசுவரி இருவரும் பேசினர். என் வீட்டில் மூவரின் கவிதைகளையும் வைத்து வாசித்துப் பார்த்தோம். தொகுப்பைக் கொண்டுவந்து விடலாம் என முடிவு செய்தவுடன் அணிந்துரையை யாரிடம் வாங்குவது? உடனடியாகக் கிடைக்குமா? என யோசித்தேன். நானும் நண்பர் கனகராசுவும் அனுபவங்களையும் சமகால நிகழ்வுகளையும் பேசிக் கொள்பவர்கள். எனவே கவிதையைத் தொகுக்க நினைத்த பொழுதே அவரிடம் முன்னுரை வாங்க வேண்டும் என நினைத்தேனே தவிர முன்னகர்த்துவதற்கு நேரமற்று விட்டுவிட்டேன்.

2006 ஆம் ஆண்டின் திருப்பூர் தமிழ்ச்சங்க விருதுகளுக்கான நடுவர் குழுவில் இருந்ததால் நானும் தோழி சுமதியும் (தமிழச்சி தங்கபாண்டியன்) அடிக்கடி பேசிக் கொண்டிருந்தோம். தொகுப்பு கொண்டு வரலியா விஜி? என ஒருசமயம் கேட்டார். எனக்கிருந்த தயக்கத்தைக் கூறினேன். நூலுக்கான அணிந்துரையை நீங்கள் தந்துவிடுங்கள் உடனே தொகுப்பைக் கொண்டுவந்து விடுகிறேன் என 2007 நவம்பர் மாத இறுதியில் கூறினேன். கனகராசுவிடமும் கேட்டேன்.

முரண்களரி அமைப்பிலிருந்து ஏற்கனவே நூல் ஒன்று வெளியிட்டிருந்தோம். எனவே முரண்களரி வெளியீடாகவே கொண்டுவரலாமா என யாழினி முனுசாமியிடம் பேசினேன். முரண்களரியின் நண்பர்கள் அனைவரும் வேலைச் சுமையோடு இருந்தனர். புத்தகக் கண்காட்சி நெருங்கிய சமயம் என்பதால் அச்சகங்களும் பரபரத்துக் கொண்டிருந்தன.

தோழர் மயிலை பாலு பாரதி புத்தகாலயத்தில் கேட்கலாம் என்றார். பாரதி புத்தகாலயம் தோழர் நாகராஜனிடம் பேசிய பொழுது புத்தகக் கண்காட்சி முடிந்தபின் பணியைத் தொடங்கலாம் என்றார். இப்படி நாட்கள் நகர்ந்து டிசம்பர் மாதத்தின் இரண்டாம் வாரம் முடிந்திருந்தது. இம்முறையும் நீர்க்குமிழியாகி விடுவேனோ என நினைத்தேன். இனி தாமதிக்க வேண்டாம் என்று முரண்களரி பெயரில் பதிப்பிக்கும் எண்ணத்தை விட்டுவிட்டேன்.

மித்ராவில் கேட்கலாமென முடிவு செய்து பேசினேன். யாழினியின் கட்டுரைத் தொகுப்பு மித்ராவில் தயாரான சமயம். அவரும் உடனிருந்தார். ஒரு வாரத்தில் புத்தகம் வரவேண்டுமே. என் அரையாண்டு விடுமுறையில் முடித்தால் நல்லது என்ற பரபரப்பு வேறு. நூலக ஆணை கிடைத்தால் பதிப்பகம் சந்திக்கக்கூடிய சிக்கல்களைக் கருதி காபிரைட் மித்ராவிற்கே தரமுடியுமா? எனக் கேட்டனர். என்னால் எந்தத் தொந்தரவும் ஏற்படாது எனக் கூறியபின் மித்ரா பதிப்பிக்க ஒப்புக் கொண்டது.

என்னைக் காத்திருக்க விடாமல் நேரமற்று ஓடிக்கொண்டிருந்த நண்பர்களும் எழுதி கொடுத்து விட்டனர். சுமதி சென்னை வந்தவுடன் எழுதி பதிப்பகத்திற்கே அனுப்பிவைத்தார். மித்ராவில் தட்டச்சு முடிந்து பிரதிகளை மெய்ப்புத் திருத்தத் தந்தனர். யாழினியிடமும் சரிபார்த்துத் தரும்படி கேட்டிருந்தேன்.

நாங்கள் இருவருமே நேரம் ஒதுக்க மிகுந்த சிரமப்பட்டிருந்தோம். மித்ராவிலிருந்து இணைந்தே தொடர்வண்டியில் கிளம்பினோம். பூங்கா நிறுத்தத்தில் இரவு எட்டு முப்பதுக்கு இறங்கி தாள்களைப் புரட்டத் துவங்கினோம். யாழினியின் மனைவி வசந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டிய நெருக்கடியும் பதட்டமும் அவரை ஆட்கொண்டிருந்தது. கொசுக்கள் வேறு துளைத்தெடுத்தது.

என் வீட்டிலிருந்து அழைப்பதாக பலமுறை செல்பேசி கூறியது. மெய்ப்புத் திருத்தலை துரிதமாக முடித்துவிட வேண்டும். காலதாமதத்தின் பொருட்டுதான் செல்பேசி அலறுகிறது என்றெண்ணி பேசுவதைத் தவிர்த்துவிட்டு செல்பேசியை அணைத்தேன்.

9.30க்கு பணி முடித்து வீட்டிற்குப் பேசினேன். 5 நிமிடத்தில் வந்து சேர்வேன் என வழமை போலக் கூறிவிட்டு என்ன விஷயமென்றேன். உடனே வீட்டிற்கு வா என்றனர். அத்தையின் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும் என்ற அவசரத்தோடும் ஒரு பெண்துணை தேவை என்பதன் பொருட்டும் ஒருமணி நேரமாக என் செல்பேசிக்கு முயன்றதையறிந்ததும் நெஞ்சம் கலங்கியது. இச்சூழலில் தொகுப்பை வெளியிட வேண்டிய அவசியம்தான் என்ன என்ற கேள்விக்கு மீண்டும் என்னைத் தள்ளியது. அடுத்த நாள் என்னோடு பேசிய அறிவுமதி அண்ணன் கவிதைகளைக் கொண்டுவாவென கேட்டுவாங்கி வாஞ்சையோடு சரிபார்த்துத் தந்தார்.

அவ்வப்போது நண்பர்கள் அனைவரும் நூல் வருவது குறித்து காட்டிய ஆர்வம் ஆச்சரியப்பட வைத்தது. இரண்டரை ஆண்டுகாலமாக சுமந்திருந்த என் சுமையை பெரு வெளிப் பெண்ணாக பிரசவித்தேன். நச்சுக்கொடி வெளியேறியபின் நிலவும் வலியற்ற நிம்மதியை புத்தகத்தைக் கையில் பெற்ற கணத்தில் உணர்ந்தேன்.

Pin It