சென்னை வட்டாரப் புனைகதைகள் என்றாலே வெகுசன இதழ்களில் வெளிவந்த பார்ப்பன பாஷையும், பாலகுமாரன், சுஜாதா, அசோகமித்திரன் முதலான எழுத்தாளர்களுமே அடையாளப்படுத்தப்படுகின்றனர். இன்னும் கொஞ்சம் போனால் ஜெயகாந்தன் குடிசைப் பகுதிகளைக் களனாகக் கொண்டு எழுதிய கதைகளும் மொழியுமே அடையாளம் காட்டப்படுகின்றன. இவ்வாறு சென்னையின் ஒரு பகுதியே கவனம் பெறுகிறது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து கணிசமான அளவில் குடியேறிய கீழ்மத்தியதர வர்க்கமும் குறிப்பாக தொழிலாளர் வர்க்கமும் அவர்களது வாழ்முறையும் உரிய கவனம் பெறுவதில்லை. இப்பின்புலத்தில் புதிய ஜீவாவின் ‘நான்காயிரம் கைகளும் ஒரே முகமும்‘ எனும் தொகுப்பு முக்கியத்துவம் பெறுகிறது. 

இத்தொகுப்பில் மூன்று குறுநாவல்கள் உள்ளன. ‘நான்காயிரம் கைகளும் ஒரே முகமும்‘ எனும் குறுநாவல், தொழிற்சாலை நிகழ்வுகளை தொழிலாளர்களின் பார்வையில் நகர்த்திச் செல்கிறது. இதனை ஒருவரின் பார்வையில் இருந்து விளக்காமல் பல்வேறு தொழிலாளர்களின் வாழ்க்கையோடும் விவரிக்கிறது. ஆனால் இவற்றுக் கிடையேயான இணைப்பும் புனைவு முடிச்சும் கைகூடவில்லை. அதேசமயம் இக்கதையிலுள்ள வெள்ளந்தியான மனிதமும் நம்பிக்கையுணர்வும் விந்தன் கதைகளை நினைவுபடுத்துகிறது. தொழிலாளர்களுக்கிடையே பிணக்குகளைஉருவாக்கல், தொழிலாளர்களைக் கொண்டே பிற தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டல், அப்ரென்டீஸ்களை முதலாளிகளும் அரசாங்கமும் பயன்படுத்தும் விதம் முதலான முதலாளித்துவ வன்மங்களையும் தொழிலாளர்களின் மன உணர்வுகளையும் நுட்பமாக பதிவு செய்துள்ளார்.

சென்னையில் தங்கியிருப்பவர்கள் பெரும்பாலும் கடந்த இரண்டு மூன்று தலைமுறைகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து குடியேறியவர்களே. இவர்கள் வாழ்வியல் முன்னேற்றம் கருதி சென்னைக்கு குடிபெயர்ந்தாலும் தங்கள் கிராமம் குறித்த ஏக்கம் கொண்டவர்கள். இந்த உணர்வை மிகச் சரியாக புதிய ஜீவா சித்திரித்துள்ளார். கிராமத்தின் சுற்றச்சூழல், இயல்பான வாழ்க்கை முதலானவற்றை நேர்மறையாகவும் சாதிய கட்டுமானத்தை எதிர்மறையாகவும் அடையாளம் காட்டுகிறார். 

இரண்டாவது குறுநாவலான ‘பனிமூட்டம்‘ ஒரு தொழிலாளியின் படிப்பார்வத்தையும் அதை முடக்க நினைக்கும் நிர்வாகத்தின் குரூர மனத்தையும் சித்திரிக்கிறது. இக்கதையின் மையபாத்திரம் முதுகலை இதழியல் படிப்பவர். புதிய ஜீவாவும் இப்படிப்பை முடித்தவர். எனவேதான் வேலையில் இருந்துகொண்டே படிப்பதிலுள்ள சிரமங்கள் யதார்த்தமாக கைகூடப் பெற்றுள்ளது. மேலும் வாசிப்பதிலுள்ள ஆர்வம், வாசிக்க ஏதுமில்லாத நிலையில் ஏற்படும் வெறுமை, பிற வேலைகளை செய்வதிலுள்ள சோம்பேறித்தனம் முதலானவை கூட்டுமன அனுபவமாய், வாசகனையும் பிரதிக்குள் ஆழச்செய்யும் தன்மையுடன் சித்திரிக்கப்பட்டுள்ளன. 

இத்தொகுப்பின் மூன்றாவது குறுநாவல் நிர்வாகத்துக்கு சார்பான ஒரு தொழிற்சங்கப் பிரதிநிதியின் கொலை குறித்து துப்பறியும் கதையாக உள்ளது. அவனது கொலைக்கு யார் காரணமாக இருக்கக்கூடும் எனப் பல மனிதர்களையும் நிகழ்வுகளையும் அவர்களின் வாழ்வியல் சூழலோடும் அரசியல் அர்த்தத்தோடும் பதிவு செய்துள்ளார். இவர் நிகழ்வுகளை நகர்த்தும் முறையும் மொழிநடையும் கதைதோறும் நேர்த்தியடைந்துள்ளன. ஆனால் சாதி மற்றும் வர்க்கம் குறித்து தெளிவான புரிதலையுடைய இவர் பெண்கள் குறித்து அவ்வாறான புரிதலுடன் இல்லையோ எனும் ஐயம் எழுகிறது. பெண் விடுதலைக்கு ஆதரவான கருத்தியலோடு செயல்படுவோரே தன் நனவிலி மனத்தில் பெண்களுக்கு கொடுத்துள்ள சித்திரம் குறித்து சுய அலசல் செய்துகொள்ள வேண்டிய தேவையுள்ளது. 

Pin It