"எஸ்.ஐ.பி. நவநீதகிருஷ்ணன் இறந்துவிட்டார்"

நண்பர்கள் வந்து சொன்னபோது அதிர்ச்சியாக மட்டுமல்ல... வியப்பாகவும் இருந்தது. மரணத்தைத் தழுவும் வயசில்லையே அவருக்கு? பின் எப்படி என்று கொஞ்சம் மனசு வலியோடு யோசித்தேன். காலனுக்கு எப்போது அறிவிருந்திருக்கிறது? எத்தனை எத்தனை உன்னத உயிர்களையெல்லாம் காரண-காரியமின்றி, நியாயமின்றிக் கணக்குத் தீர்த்திருக்கிறது மரணம்? அப்படித்தான் இப்போதும் நடந்திருக்கிறது ஒரு இழப்பு.

மதுரை சர்வோதய இலக்கியப் பண்ணை உதயமானது மகாத்மா காந்தியின் நூற்றாண்டு சமயத்தில்தான். இன்று மதுரையின் அறிவுலகத்தின் ஒரு தனித்துவ அடையாளமாக உயர்ந்து, வளர்ந்து நிற்கிறது எஸ்.ஐ.பி. என்று செல்லமாக அழைக்கப்படும் மதுரை சர்வோதய இலக்கியப் பண்ணை அதன் ஆலம் விருட்ச வளர்ச்சிக்கு மிக முக்கிய உரம்தான் நவநீதகிருஷ்ணன். மதுரையை அடுத்த காரியாப்பட்டியிலிருந்து திருச்சுழி செல்லும் சாலையில் இடையே பிரிந்துசெல்ல வேண்டும் கிருஷ்ணாபுரத்துக்கு. இதுதான் நவநீதகிருஷ்ணணின் சொந்த ஊர்.

பள்ளி இறுதி வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த நவநீதகிருஷ்ணனுக்கு புத்தகங்களின் மீது காதல் அதிகம். இந்தக் காரணத்தினாலும் அவர் மதுரை சர்வோதய இலக்கியப் பண்ணையில் வேலைக்குச் சேர்ந்தார். தனது கடும் உழைப்பினால் அவர் விரைவிலேயே அந்த நிறுவனத்தின் செயலாளராக உயர்ந்தார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக நவநீதகிருஷ்ணன் எஸ்.ஐ.பி. யின் துடிப்புமிக்க செயலாளர்.

மதுரை புத்தகத் திருவிழா நடத்துவதில் நவநீதகிருஷ்ணனின் பங்கு அளப்பரியது. மற்ற ஊர்களின் புத்தகத் திருவிழாக்களை விடவும் மதுரை புத்தகத் திருவிழா அழகியல் தன்மையில் மக்களை ஈர்ப்பதாக அமைந்ததற்கு நவநீதகிருஷ்ணன் போன்ற ஆர்வமிக்க செயல் வீரர்களே காரணம் எனலாம். அதேபோல புத்தக விற்பனையில் எஸ்.ஐ.பி.யை குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறச் செய்ததும் அவரின் உளப்பூர்வமான தீவிர ஈடுபாட்டைப் பறை சாற்றும்.

நவநீதகிருஷ்ணன் குடும்பத்தில் இது இரண்டாவது சோகம். ஏற்கெனவே, இரண்டாண்டுகளுக்கு முன், 2007 ஆம் ஆண்டு அவரின் வீட்டில் பேரிடியாக இறங்கியது அவரின் ஒரே செல்வமகனின் மரணம். மனசெல்லாம் கனவுகளைச் சுமந்துகொண்டு, பொறியியல் கல்லூரி மாணவனாக, பெற்றோரின் நம்பிக்கைப் பிடிப்பாக, ஒரு பட்டாம்பூச்சிபோல உயிர்த்துடிப்புடன் வலம் வந்த அருமை மகனை ஒரு விஷக்காய்ச்சல் வாரிச்சுருட்டிக் கொண்டுபோனபோது நவநீதகிருஷ்ணனும் அவரது மனைவியும் திசையற்று நின்றார்கள். பின்னர் கொஞ்சம் சிந்தித்ததன் விளைவாக தங்கள் சொந்த ஊரில் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்த மகனின் நினைவாக எழுந்ததுதான் 'அறிவகம்'. இந்த அறிவகத்தில் ஒரு சமுதாயக்கூடமும், ஒரு நூலகமும் இருக்கின்றன. முற்றிலும் இலவசமாக மக்களுக்குப் பயன்படுகின்றது இந்த அறிவகம்.

நவநீதகிருஷ்ணனின் மகன் நந்தகுமார் தனது கல்லூரி நாட்களில் தனக்குக் கைச்செலவுக்காகப் பெற்றோர் தரும் பணத்தையெல்லாம் சிரமப்படும் தனது நண்பர்களுக்கே கொடுத்துவிடும் வழக்கம் உள்ளவர் என்பது மகனின் இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த நண்பர்கள் சொல்லித்தான் அவருக்கே தெரியவந்திருக்கிறது. மகனின் இந்தக் கொடுக்கும் குணம் அறிந்தே நவநீதகிருஷ்ணன் தன் மகனுக்காகச் சேர்த்த சொத்துக்களையெல்லாம் மக்கள் பயனுறச் செய்துவிட்டார்.

நவநீதகிருஷ்ணனுக்கு இன்னொரு ஆசையும் இருந்திருக்கிறது. தான் பணி ஓய்வு பெற்றபின்னர் தன் மகன் நினைவாகச் செயல்பட்டு வரும் அறிவகத்தை மேம்படுத்தி, அதனை ஒரு ஆய்வு மையமாகத் தரம் உயர்த்துவதே அவரின் அடுத்தக் கட்டக் கனவாக இருந்திருக்கிறது. அதற்குள் அவர் மதுரையிலிருந்து சென்னைக்கு ரயிலில் பயணம் செய்கிற வழியில் மாரடைப்பு வந்து அவரைச் சாய்த்துப் போட்டுவிட்டது.

புத்தகங்களே வாழ்க்கையாக வாழ்ந்துவிட்டுப் போய்விட்டார் அப்பழுக்கில்லா அன்பும், நிறைகுடமான அமைதியுமே உருவான நவநீதகிருஷ்ணன். அவரது லட்சியப்பூர்வ விருப்பங்களை அவரது அருமைத் துணைவியார் தொடரும்பொருட்டு நண்பர்களும், தோழர்களும், உற்றாரும்தான் அவருக்குப் பக்கம் நின்று பலம் சேர்க்கவேண்டும்.

Pin It