இனிவருங்காலத்தில் திட்டமிட்டப் பொருளியல், ஆண்டு வரவு - செலவுத் திட்டம் ஆகியவை பொருள் இழந்து போகும் வகையில் நலிந்து, மெலிந்து தேயும் திசை வழியை இந்த ஆண்டு வரவு - செலவுத் திட்டம் உறுதியாக எடுத்துக்காட்டுகிறது.

நரேந்திரமோடி அரசின் முதல் வரவு - செலவுத் திட்டம் என்பதால் மிகப்பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் பெருங்குழுமங்களின் ஊடகங்கள் உருவாக்கி வைத்திருந்தன. ஆனால் 2014 -- 2015-க்கான இந்திய அரசின் வரவு - செலவுத் திட்டம் முந்தைய ஆட்சியின் பொருளியல் திசையிலேயே முன்பை விட வேகமாகப் பயணிக்கிறது.

கடந்த 10.07.2014 அன்று நாடாளுமன்ற மக்களவையில் இந்திய நிதிஅமைச்சர் அருண்ஜெட்லி முன்வைத்த வரவு - செலவுத் திட்டம் அதிக பேச்சு, குறைந்த செயல் பாடு என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.

இந்த வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப்படு வதற்கு சில நாட்களுக்கு முன்னால் இந்திய அரசு அறிவித்த சில பொருளியல் நடவடிக்கைகளை இணைத்து ஆய்வு செய்தால் தான் மோடி அரசின் முதல் வரவு-செலவுத் திட்டத்தின் உண்மையான முகம் தெரியும்.

இந்தியப் பொருளியலிலிருந்து அரசை மிக வேகமாக விலக்கிக் கொள்ளும் தனியார் மய அறிவிப்புகள் நரேந்திரமோடி பதவி ஏற்றதிலிருந்து அடுத்தடுத்து வருகின்றன.

பா.ச.க அரசின் தொடர் வண்டித் துறை வரவு-செலவுத் திட்டம் கடந்த சூலை 8 ஆ-ம் நாள் முன் வைக்கப்பட்டாலும் அதற்கு முன்பாகவே பயணிகள் கட்டண மும், சரக்குக் கட்டணமும், கடுமை யாக ஏற்றப்பட்டுவிட்டன. சதானந் தகவுடா முன்வைத்த தொடர் வண்டித்துறை வரவு-செலவுத் திட்டம் கட்டண உயர்வு இல்லாத வரவு--செலவு அறிக்கை போல் பாசாங்கு செய்தது.

ஆனால் தொடர்வண்டியையும், அது ஓடும் தண்டவாளத்தையும் தவிர பிற அனைத்தும் தனியார் மயமாகும் அறிவிப்புகள் வெளியி டப்பட்டுள்ளன. அதே நேரம் 6 மாதத்திற்கு ஒரு முறை பயணிகள் கட்டணம், சரக்குக் கட்டணம், அனைத்தையும் தன்னிச்சையாக உயர்த்துவதற்கு நிலையான ஏற் பாடுகள் செய்யப்பட்டுவிட்டன.

தென்னக தொடர்வண்டித்துறையில் தமிழ்நாட்டுக்குள் மேற் கொள்ள வேண்டிய விரிவாக்கப் பணிகளோ, இரட்டைப்பாதை அமைக்கும் பணிகளோ, புதிய வண்டிகள் விடும் திட்டமோ, அறிவிக்கப்படாமல் வடநாட்டிலிருந்து சென்னைக்கு வரும் வகையில் 6 புதிய இரயில்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. வடமாநிலங்களிலிருந்து பெரும் எண்ணிக்கையில் வேலை தேடி தமிழ்நாட்டுக்குள் வந்து குவிவதை இத் திட்டங்கள் தீவிரப்படுத்துமே தவிர தமிழகத்துக்கு பெருமளவு பயன்தரப் போவதில்லை.

இந்திய அரசின் பொது வரவு-செலவுத் திட்டத்தில் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தனது நீண்ட 2லு மணி நேர உரையில் சொன்னதை விட சொல்லாததே அதிகம். அவை 2014--2015 வரவு--செலவுத் திட்ட அறிக்கையின்பின் இணைப்புகளிலும், அதற்கு முதல் நாள் முன் வைக்கப்பட்ட பொருளியல் ஆய்வறிக்கையிலும் காணப்படுகின்றன.

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த “குறைவான அரசாங்கம்’’ (less Government) என்பது சிறிய அமைச்சரவையை மட்டும் குறிக்கவில்லை அதை விட பொருளியலில் அரசு என்ற ஒன்றே இருப்பதை உணரமுடியா வண்ணம் மெலியச் செய்வதே ஆகும்.

நிதி அமைச்சகம் 09.07.2014 அன்று முன்வைத்த 2013 -- 2014க் கான பொருளியல் ஆய்வறிக்கை முன் மொழிந்துள்ள மாற்று நட வடிக்கைகள் இத்திசை வழியை சுட்டிக் காட்டுகின்றன. பொருளியல் செயல்பாடுகள் அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைத்து விடுவது, இத் தனியார் பெருங்குழுமங்களிடையே மோதல் வருமானால் அவற்றைச் சரிசெய்வதும், அரசின் செயல் பாட்டோடு இக்குழுமங்களின் செயல்பாட்டை ஒருங்கிணைப்பதும் மட்டுமே அரசாங்கத்தின் கடமையாக இருக்க வேண்டும் என்று இந்தப் பொருளியல் ஆய்வறிக்கை வரையறுக்கிறது.

இதற்கு ஏற்ப வரும் நிதியாண்டுக்கான பா.ச.க அரசு வரவு-செலவுத் திட்டத்தில் அயல்நாட்டு நேரடி முதலீட்டுக்கான வரம்புகள் துறை தோறும் தளர்த்தப்பட்டுள்ளன. கூரை மீது ஏறி தேசப் பக்த கூச்சல் போடும் பா.ச.க அரசு பாதுகாப்புத் துறையில் அயல்நாட்டு மூலதனங்களின் வரம்பை 26 விழுக்காட்டிலிருந்து 49 விழுக்காடாக உயர்த்தியிருக்கிறது.

காப்பீட்டுத் துறையிலும், மனை வணிகத் தொழிலிலும் அயல் முதலீட்டுக்கு இருந்த வரம்புகள் பெருமளவில் தளர்த்தப்பட்டு விட்டன. பெயருக்கு ஒரு இந்திய நாட்டு நிறுவனத்துடன் கூட்டு வைத்துக் கொண்டு வெளிநாட்டு பெருங்குழுமங்கள் மனை வணிகத்தில் முற்று முழுதாகக் கோலோச்ச முடியும்.

காப்பீட்டுத் துறையில் தனியார் குழுமங்கள் அனுமதிக்கப்பட்டால் ஏழை எளிய மக்களுக்கும் உழவர்களுக்கும் கடும் பாதகங்களையே ஏற்படுத்தும் என்பதை ஏற்கெனவே மக்கள் உணர்ந்து வருகின்றார்கள்.

எடுத்துக்காட்டாக மாற்றப் பட்ட வேளாண்மை காப்பீட்டுத் திட்டத்தில் உழவர்கள் செலுத்த வேண்டிய பருவக்கட்டணம் (பிரிமியம்) மிகப்பெரும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இழப்பு ஏற்பட்டால் காப்பீட்டுத் தொகை பெருவதற்கான வழிமுறைகளும் கெடுபிடியாக்கப்பட்டுவிட்டன. இக்காப்பீட்டுத் திட்டத்தில் ரிலையன்ஸ், பஜாஜ், டொயாட்டோ, ஸ்டார் போன்ற பெருங்குழுமங்கள் அனுமதிக்கப்பட்டதால் வந்த விளைவு இது. இப்போக்கு இனி தீவிரப்படவே செய்யும்.

அரசிடமும், இந்திய நாட்டு தொழில் நிறுவனங்களிடமும் போதுமான மூலதனம் இல்லாததாலேயே வெளிநாட்டு மூலதனங்கள் வரவேற்கப்படுகின்றன என நிதிஅமைச்சர் அருண்ஜெட்லி இதற்கு நியாயம் கற்பிக்கிறார். இதற்கு ஏற்ப நிலம் கையெடுப்பு சட்டங்கள், சுற்றுச்சூழல் விதிகள், தொழிலாளர் நலச்சட்டங்கள் ஆகியவை வளைக்கப்படுகின்றன. (இதுபற்றி சென்ற இதழில் குறிப்பிட்டோம்)

ஆனால் விப்ரோ, இன்போசிஸ், சன்பார்மா, டாடாவின் டிசிஎஸ், நால்கோ, பாரத் எலக்ட்ரானிக்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களும், பி.எச்.இ.எல், கோல் இந்நியா போன்ற அரசுத் துறை நிறுவனங்களும், பல்லாயிரம் கோடி உபரி நிதியோடு உப்பியிருக்கின்றன. கடந்த சூன் 11, 2014 நாளிட்ட எகனாமிக் டைம்ஸ் நாளேடு இந்த உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. தனியார் மற்றும் இந்திய அரசின் தொழில் நிறுவனங்களில் முதல் வரிசையில் உள்ள 126 நிறுவனங்கள் கடந்த நிதியாண்டு இறுதியில் குவித்துவைத்துள்ள உபரி நிதி சுமார் 9.3 இலட்சம் கோடி ரூபாய் என அந் நாளேடு புள்ளிவிபரங்களை வெளியிட்டது.

இந்த உபரி நிதியில் பெரும்பாலான தொகை வெளிநாடுகளில் கருப்பு மூலதனங்களாக குவிக்கப் பட்டுள்ளன.

ஆனால் மூலதனப்பற்றாக்குறை எனக் காரணம் கூறி அயல்நாட்டு நேரடி முதலீட்டுக்கு இந்திய அரசு சலுகைகளை வாரி வழங்கிவரவேற்கிறது.

பொதுத்துறை - தனியார்த்துறை கூட்டாண்மை என்ற பெயரில் அனைத்து கட்டமைப்புத் திட்டங்களும் தனியாரிடம் ஒப்படைக்கப் படுகின்றன. இந்த வரவு - செலவுத் திட்டத்தில் இந்த வழிமுறை முதன்மையான ஒன்றாக முன்வைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் பயன்படுத்தும் சாலைகள், துறை முகங்கள், பிற நீர் வழிகள், தொடர்வண்டி பயணங்கள் ஆகிய அனைத்துக்கும் தனியாரிடம் கட்டணம் செலுத்த வேண்டும்.

பொதுத்துறை- தனியார்த் துறை கூட்டாண்மை என்பது தண்ணீர், மின்சாரம். எரிபொருள் அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான மென்மையான சொல்லாட்சி ஆகும்.

பொதுச் செலவினங்களை குறைப்பதன் வழியாக நிதிப்பற்றா குறையை சரிசெய்துக் கொள்வதற்கான முயற்சிகள் முன்வைக்கப் பட்டுள்ளனவே தவிர வசதிபடைத் தவரிடம் வரி வசூல் செய்து நிதி ஆதாரங்களை பெருக்கிக்கொள்ளும் வழிமுறை பின்பற்றப்படுவ தில்லை.

தனிநபர் வருமானவரி மட்டு மின்றி பிற நேரடி வரி விதிப்புகளும் சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளன. மறுபுறம் 7525 கோடி ரூபாய் மறைமுக வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

வரவு- செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட எதிர்பார்ப்புகளை விட குறைவான அளவிலேயே வரி வசூல் நடப்பது கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தொடர்கிறது. இது தெரிந்தே திட்டமிட்ட மோசடியாக நடக்கிறது.

இந்த ஆண்டும் அதுவே தொடர்வது உறுதி. எனவே எதிர் பார்க்கப்பட்ட அளவு வரவு கிடைக்கவில்லை என்று சொல்லி மக்களுக்கான பொதுச் செலவுகளை வெட்டிச் சுருக்குவது இந்த ஆண்டு நெடுகிலும் நடக்கும். மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடே இவ்வகையில் பெருமளவில் சேதாரத்தைச் சந்திக்கும்.

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்றும் பணம் திரட்டுவதையே முதன்மை நிதி ஆதாரமாக கடந்த அரசு செய்து வந்தது. இதே போக்கு மோடி அரசில் தீவிரப்பட்டுள்ளது. சென்ற ஆண்டை விட சுமார் 17 ஆயிரம் கோடி கூடுதலாக திரட்டும் வகையில் 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பொதுத்துறை நிறுவனப் பங்கு களைத் தனியாருக்கு விற்க இந்த வரவு - செலவுத் திட்டம் முன்மொ ழிந்துள்ளது.

பெட்ரோலியப் பொருள்கள் மீதான மானியம் 22054 கோடி ரூபாய் வெட்டப்பட்டுள்ளது. இதற்கு இசைய மாதந்தோறும் டீசல் விலையை 50 பைசாவும், சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு 50 ரூபாயும் உயர்த் திக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப் பட்டுவிட்டன.

தமிழ்நாட்டு நியாய விலை கடைகளுக்காக ஒதுக்கீடு செய்யப் படும் மண்ணென்ணெய் அளவு மேலும் வெட்டப்படுகிறது.

கடந்த பல ஆண்டுகளைப் போலவே அனைத்து வரிகள் மீதும் கல்வி மேல்வரியாக (சர்சார்ஜ்) 10 விழுக்காடும், உயர்கல்வி வரியாக 3 விழுக்காடும் திரட்டப்படுவது இந்த வரவு-செலவுத் திட்டத்திலும் தொடர்கிறது. இவ்வாறு திரட்டப் படும் நிதி கல்வி வளர்ச்சிக்கு செலவு செய்யப்படவில்லை. அரசின் பற்றாக்குறையை ஈடுசெய்துக் கொள்ளவே பயன்படுத்தப்படுகிறது. அதே நேரம் அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி உண்மை அளவில் குறைக்கப்பட்டு விட்டது.

சென்ற அரசின் இடைக்கால வரவு -- செலவுத் திட்டத்தில் எழுப்பப் பட்டது போலவே இந்த வரவு-செலவுத்திட்டத்திலும் வேளாண்மைக்கு அதிக நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக ஆரவாரம் எழுப்பப்படுகிறது. 5 இலட்சம் கோடி ரூபாய் வேளாண்மைக்கு ஒதுக்கப் பட்டுள்ளதாக தம்பட்டம் அடித்துக்கொண்டார் அருண் ஜெட்லி.

கடந்த மன்மோகன்சிங் ஆட்சியிலேயே வேளாண்மை என்ற தலைப்பில் வேளாண்மை சார்ந்த விதை நிறுவனங்கள் உணவுப்பதப்படுத்தும் நிறுவனங்கள் தனியார் சேமிப்புகிடங்குகள் போன்ற பலவும் கொண்டு வரப்பட்டுள்ளன.

அரசுத்துறை வங்கிகள் வழங்கும் வேளாண்மைக் கடனில் உண்மையில் உழவர்கள் மிகச்சிறிதளவே பயனடைகிறார்கள் என்பதை இதற்கு முன் பலமுறை எடுத்துக் காட்டியிருக்கிறோம்.

இதேபோக்கு இப்போதும் தொடர்கிறது. வரவு-- செலவுத் திட்டத்தில் வேளாண் கடனுக்கு இன்று அறிவித்துள்ள தொகையில் ஒரு ரூபாய் கூட உண்மையில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அவை எல்லாம் அரசுத் துறை வங்கி களுக்கு வழங்கப்படும் வழிகாட்டுநெறிகள் மட்டுமே.

கடந்த நிதியாண்டு அரசுத் துறை வங்கிகள் வழங்கிய வேளாண்கடனில் 10 ஏக்கருக்கு குறைவாக நிலம் உள்ள உழவர்கள் பெற்றுள்ள கடன் வெறும் 5 விழுக்காடு தான். மீதமுள்ள 95 விழுக்காடு வேளாண்கடனும், வேளாண்மையின் பெயரால் விதை நிறுவனங்கள், பூச்சுக்கொல்லி நிறுவனங்கள், உரத் தொழிற்சாலைகள், உணவுப் பதப்படுத்தும் தொழிலகங்கள், தனியார் கிட்டங்கிகள், போன்றவை பெற்ற வையே ஆகும்.

இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ள வேளாண் கடன் நிதியிலும் பெருந்தொழிலதிபர்களே குறைந்த வட்டிக்கடன் பெறுவார்கள்.

இரண்டாவது பசுமைப் புரட்சி ஊக்குவிக்கப்படும் என்று இந்த வரவு - -செலவுத்திட்ட அறிக்கை கூறுகிறது. இதன் பொருள் மரபீனி மாற்றப்பட்ட விதைகள் எந்தவித உருப்படியான அறிவியல் சோதனையும் இன்றி சந்தையில் இறக்கப் பட உள்ளன என்பதே ஆகும்.

இதற்கேற்ப கீரின் பீஸ் அமைப்பு, வந்தனா சிவாவின் நவ தானியா அமைப்பு உள்ளிட்ட தொண்டு அமைப்புகள் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. இந்த அமைப்புகள் மரபீனி மாற்று விதைகளுக்கு எதிராக மக்களையும் அறிவாளர்களையும் ஒருங்கு திரட்டும் பணியில் முன்னணியில் உள்ளன.

மதன்மோகன் மாளவியா, தீன தயாள் உபாத்தியாயா, சியாமா, பிரசாத் முகர்ஜி போன்ற இந்துத்துவா அமைப்பு தலைவர்களின் பெயர் அரசுத் திட்டங்களுக்கு சூட்டப் பட்டுள்ளன. ஏற்கெனவே உள்ள மக்கள் நலத்திட்டங்கள் சிலவற்றில் சிறு மாறுதல்கள் செய்து இந்தப் பெயர்சூட்டல்கள் நிகழ்ந்துள்ளன.

குசராத் முதலமைச்சராக மோடி இருந்த போது அறிவித்த மாபெரும் வல்லபாய் பட்டேல் சிலை நிறுவும் பணிக்கு இந்திய அரசின் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் பல்லாயிரம் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் கை நெசவுத் தொழில் மேம்பாட்டிற்கு வெறும் 50 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மோடி அரசின் முன்னுரிமை எப்படி அமையும் என்பதற்கான சான்று இது.

சூழலுக்கு இசைவான மின்சார உற்பத்திக்கு கவனம் செலுத்தப்படும் என்ற அறிவிப்போடு சூரிய ஒளி மின்சாரத்துக்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடும் வெளிநாட்டு பெருநிறுவனங்களுக்கு ஊக்கம் ஊட்டும் வகையில் வடிவமைக்கபட்டள்ளது.

சூரிய ஒளி பரவலானது. அதிலிருந்து செய்யப்படும் மின்சார உற்பத் தியும் பரவலானதாகவே இருக்க வேண்டும். 0.5 மெகாவாட், 1 மெகாவாட் என்ற அளவில் சிறு சிறு சூரிய ஒளி மின்உற்பத்தி ஏற்பாடுகள் செய்து அங்கங்கே உற்பத்தியாகும். இடத்திலேயே வழங்குவது தான் செலவு குறை வானதும் சுற்றுச்சூழலுக்கு இசை வானதும் ஆகும். இதற்கு மாறாக மொத்தம் 16 ஆயிரம் மெகாவாட் உற்பத்திக்கு பெரிய பெரிய சூரியஒளி மின்உற்பத்தி நிலையங்கள் நிறுவுவதற்கே இந்த வரவு--செலவுத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் திட்டச் செலவு ஒதுக்கீட்டை மாநிலங்களில் எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது என முடிவுசெய்வதில் மாநிலங்களுக் குள்ள அதிகாரம் பெருமளவு குறைக்கப்படுகிறது. மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி ((Central Assistance) பெருமளவு குறைக்கப் படுகிறது.

இந்த வரவு-செலவுத்திட்ட அறிக்கையிலும், அதற்கு முதல் நாள் வைக்கப்பட்ட பொருளியல் ஆய்வ றிக்கையிலும் திட்டக்குழு, திட்ட மிட்ட பொருளியல் கொள்கை ஆகியவை கைவிடப்படுவதற்கான கொள்கை அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

மொத்தத்தில் பா.ச.க அரசு முன்வைத்துள்ள 2014--2015 வரவு-செலவுத்திட்டம் உலகமயம், தாராள மயம், இந்துத்துவமயம், ஆகியவற்றின் கலவையாகும்.

Pin It