தமிழினத்தின் எதிரியாகப் பெரியாரால் அடையாளங் காட்டப்பட்ட ஆரிய இனக் குறியீடு இராமன். அந்த இராமனின் மூதாதையர் ஆண்ட நாடு தென்னிந்தியாவில் விளங்கிய ‘திராவிட தேசம்’ என ஸ்ரீமத் பாகவதம் பேசுகிறது. ‘திராவிடர்’ என்ற சொல் தென்னிந்தியப் பார்ப்பனர்களைக் குறித்தது போலவே, ‘திராவிட தேசம்’ என்ற சொல் பார்ப்பன சமஸ்கிருத மரபுகளுடனும் தொன்மங்களுடனும் நெருக்கமான உறவு கொண்டது.

       மனு என்பவனிடமிருந்தே மனித இனம் தொடங்கியதாகவும், மாபெரும் கடற்கோள் தோன்றியபோது அவனே பெரும்படகு ஒன்றில் பல உயிர்களையும் ஏற்றிச் சென்று காத்ததாகவும், மனு என்பவனே மனுதர்மத்தை எழுதியதாகவும் புராணங்கள் பேசுகின்றன. இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி மனு என்பவன் திராவிட தேச அரசன் என்று இந்த புராணங்கள் கூறுவதுதான்.

       திராவிட தேசத்தை சத்யவிரதன் என்னும் மன்னன் ஆண்டுவந்த போது கடற்பிரளயம் ஏற்பட்டதாக மச்சபுராணம் கூறுகிறது. அவனே மனு எனப்பட்டான். இத்தொன்மக்கதையை மகாபாரதமும் கூறுகிறது. (மகாபாரம் - புத்தகம் 1, ஆதிபர்வம், பிரிவு: ஃஙீஙீங)

       புராணங்கள் வரலாறு அல்ல. எந்த புராணம் ஆயினும் அதில் கற்பனையும், அறிவுக்குப் புறம்பான செய்திகளும், சமூகத்தில் ஒரு பிரிவினருக்குச் சார்பான கருத்துகளும் விரவிக் கிடக்கும். புராணக் கதைகள் அவை எழுதப்படுவதற்கு முன்பு வரை பல மாறுபாடுகளை அடைந்து கொண்டே வந்திருக்கும். ஆனால், புராணங்களிலும் வரலாற்றுச் செய்திகள் ஒளிந்து கிடக்கின்றன. இப்புராணங்கள் சமீபகாலம் வரையிலும், மக்களின் வாழ்வு முறை மீது ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கின்றன. அது மட்டுமின்றி அக்குறிப்பிட்ட காலத்திய சமூகத்தை, அன்று நிலவிய பண்பாட்டை, சமயத்தை, பழக்க வழக்கங்களைப் பிரதிபலிக்கின்றன. உண்மை வரலாற்றில் வாழ்ந்து மறைந்த மனிதர்களும், மன்னர்களும் தெய்வீகத் தன்மை ஏற்றப்பட்டு இதிகாசநாயகர்களாகவும் தெய்வங்களாகவும் புராணங் களில் போற்றப்படுவதுண்டு.

       இந்திய வரலாற்றையும் தென்னக வரலாற்றையும் இன்றளவிலும் கூட இடைவெளிகள் இல்லாமல் எழுதிவிட்டதாகக் கூற முடியாது. தொல்லியல் சான்றுகள், இலக்கியச் சான்றுகள் ஆகியவற்றின் அடிப்படையில் வரலாற்றின் தெளிவானப் பகுதிகள் எழுதப்பட்டு விட்டன. ஆனாலும் இடைவெளிகள் இன்றளவும் இருக்கின்றன. இந்த இடைவெளிகளை நிரப்ப உதவக்கூடிய ஆனால் புனைவுகளிலிருந்து பிரித்தெடுக்கப் பட வேண்டிய செய்திகள் புராணங்களில் உள்ளன. பதினெட்டு புராணங்களில் கி.பி. 300 வரையிலான வரலாற்றுச் செய்திகள் மறைந்து கிடப்பதாக வரலாற்றி ஞர்கள் கருத்தறிவித்திருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

       “திராவிட தேசம்” என்பது பற்றிய செய்திகளைப் பேச முற்படும் போது, ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய நூல்களில் ஸ்ரீமத் பாகவதம்(பாகவத புராணம்) முதன்மை பெறுகிறது. ஸ்ரீமத் பாகவதம் என்பது ‘மகா புராணங்கள்’ என்பவற்றுள் ஒன்று. அது விதீணுவின் அவதாரங்கள், குறிப்பாக கிருதீண அவதாரம் பற்றிப் பேசுகிறது. இந்து மதத்தில் பேசப்படும் பல கடவுளர்களின் கதைகள் பாகவதத்தில் இடம் பெறுகின்றன. பாகவதத்தின் முக்கியத்துவம், அது இன்றளவும் கன்னடத் தெலுங்கு பகுதிகளில் ஒவ்வொரு முக்கியக் கோயில் நிகழ்ச்சியிலும் பாடப்படுவது தான். ஆண்டுதோறும் உடுப்பி போன்ற கோயில்களில் நாடகமாக அரங்கேறு கிறது. பாகவதம் ஐந்தாவது வேதம் என்று அழைக்கப்படுகிறது.

       பாகவத புராணம் எழுதப் பட்ட காலத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு புராணம் எழுதப்பட்ட காலம் என்பது அது அந்த வடிவத்தை அடைந்த காலத்தைக் குறிப்பிடுகிறது. பாகவத புராணத்திற்கு முந்தைய வடிவம் உண்டு. கி.பி. 500 அளவில் பாகவதம் தன் வடிவத்தை அடைந்திருக்க வேண்டும். கி.பி. 9 அல்லது 10ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று பல அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

       பாகவத புராணம் என்பது ஒரு ‘கதைசொல்லி’ நீண்ட கதை கூறும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. சூதர் என்னும் முனிவர் பல முனிவர்களுக்கு நைமிûõ காட்டில் இக்கதையைக் கூறுகிறார்.

       வேதங்களை எழுதிய வேதவியாசர் இவ்வளவு எழுதியும் மனநிறைவு அடையாமல் இருக்கவே, நாரதர் அவரிடம் பக்தியின் மகிமை பற்றி அவர் விளக்காமற் போனதாலேயே அம்மனக்குறை என்பதைத் தெரி விக்கிறார். அதன்படி வேதவியாசர் பாகவதத்தைப் படைக்கிறார். வேத வியாசரின் மகன் சுகர், அர்ஜூனனின் பேரனாகிய பரிக்ஷித் மன்னனுக்கு பாகவதத்தை மீண்டும் கூறுகிறார். ஏனென்றால், பரிக்ஷித் மன்னன் ஒரு ‘ரிஷி’யை அவமதித்ததற்காக, அந்த ரிஷியின் மகன் பரிக்ஷித் மன்னன் பாம்பு கடித்து இறக்கக் கடவது என்று சபித்து விடுகிறான். ஏழு நாட்களில் இறக்க இருக்கும் பரிக்ஷித் கிருதீணனின் பெருமை களை மீண்டும் கேட்க விரும்பிய தால், சுகர் பாகவதத்தை ஏழு நாட்களில் கூறி முடிக்கிறார்.

       பாகவத புராணம் தென்னாட்டில் எழுதப்பட்டது. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ள பாகவதம் மனுவைப் பற்றிக் கூறுகிறது. பாகவதம் மனிதவர்க்கம் பிரம்மாவிலிருந்து தோன்றியதாகக் கூறுகிறது. பிரம்மா 10 முனிவர்களைப் படைத்தார். அவர்களுள் ஒருவர் மாரிசி. மாரிசியின் மகன் காசியபர். அவர் 12 பிள்ளை களைப் பெற்றார். அவர்களில் ஒருவன் வைவாஸ்வதா அல்லது வைவாஸ்வன். வைவாஸ்வனுக்கு சூரியன் என்ற பெயரும் உண்டு. ஆகவே இவனது வம்சத்திற்கு சூரிய வம்சம் என்று பெயர் வந்தது.

       வைவாஸ்வனின் மகன் வைவாஸ்வதா மனு ஆவான். புராணங்கள் 14 மனுக்களைக் குறிப்பிடுகின்றன. ஒவ்வொரு மனுவின் காலமும் ‘மான்வந்தரா’ என்று குறிக்கப்படுகிறது. பதினான்கு மான்வந்தராக்களும் சேர்ந்தது ஒரு ‘கல்பம்’ ஆகும். முதல் மான்வந்தராவில் பிறந்த சத்யவிரதன் என்று பெயர் பெற்ற மனு அடுத்த மன்வந்தராவில் வைவாஸ்வதா மனுவாகப் பிறந்தான் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த சத்தியவிரதன் என்னும் முதல் மனு திராவிட தேசத்து மன்னன் என்று பாகவதம் பேசுகிறது.

       மன்னன் பரிக்ஷித் தனக்கு எதுவரை கதையை சுகர் கூறியிருக் கிறார் என்று கூறி நினைறூட்டு கிறான்.

       “த்ராவிட தேசத்துக்கு ஈஸ்வரனும் ஸத்யவரதன் என்ற பெயருள்ளவனுமான ராஜரிஷி எவரோ, எவர் சென்ற கல்பத்தின் முடிவில் புருûனான பகவானுடைய ஸேவையினால், ஞானத்தை யடைந்தாரோ அவரே சூரியனுடைய புத்திரனான மனுவாகவானார் என உம்மிடமிருந்து கேட்கப்பட்டது. இக்ஷூவாகு முதலியோரான அரசர்கள் அவருடைய புத்திரர் களாகவும் சொல்லப் பட்டனர். (கடலங்குடி நடேச சாதிதிரிகள், ஸ்ரீமத் பாகவதம், கடலங்குடி பப்ளிகேûன்);, சென்னை(1935), 1996, 9வது ஸ்கந்தம், அத்தியாயம் -1, பக்கம் 2)

       ஸ்ரீமத் பாகவதம் அளிக்கும் இரண்டு செய்திகளை கவனத்தில் கொள்ள வேண்டும். முதலாவது, மனு என்பவன் திராவிட தேசத்தைச் சேர்ந்தவன். ஆண்டாண்டு காலமாக மனிதர்களை வர்ண-சாதி அடிப் படையில் ஒடுக்குவதற்கான விதிமுறைகளை அளித்த மனு தர்மத்தை வகுத்தவன் ஏழாவது மனுவான வைவாஸ்வத மனு என்று கருதப்படுகிறான். மனுதர்மம் தென்னிந்தியாவில்தான் வகுக்கப் பட்டது என்று கருதலாம்.

       இரண்டாவதாக, ஏழாவது மனுவான வைவாஸ்வதா மனுதான் அயோத்தி நகரை உருவாக்கியதாகப் பாகவதம் கூறுகிறது. இந்த மனுவின் வழித்தோன்றலான இக்ஷூவாகு இந்த வம்சத்தின் முதல் பெரும் மன்னன். இவனுடைய மகன்கள் நூறு பேர் என்றும், அதில் 50 பேர் உத்தரபத் எனப்படும் வட இந்தியா வையும், 50 பேர் தக்ஷிணபத் எனப்படும் தென் இந்தியாவையும் ஆண்டனர். இந்த வம்சத்தின் 62வது மன்னன் தசரதன், 63வது மன்னன் இராமன் ஆவர். இவ்வாறு, புராணங்கள் கூறுகிறபடி மனு திராவிட தேசத்தவன், அயோத்தி இராமன் அவனுக்கு உறவுக்காரன்.

       திராவிடம் என்ற சொல்லும் திராவிட தேசம் என்னும் சொல்லும் பார்ப்பனர்களுக்கு உவப்பளிக்கக் கூடியவையாக இருந்து வந்திருக் கின்றன.

       மனுவின் புதல்வர்கள் பார்ப்பன‌ர்கள் என்றும் அவர்கள் சத்திரியத் தொழிலை மேற்கொண்டனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன.

       திராவிட தேசத்தைச் சேர்ந்த மனுவின் வாரிசுகளாகத் தென்னிந்தியாவில் எவரேனும் உரிமை கோரியிருக்கிறார்களா?

       அப்படிப் பட்ட ஒரு குரல் கன்னடப் பகுதி யிலிருந்து எழுப்பப் பட்டிருக்கிறது. இருபதாம் நூற் றாண்டில் தமிழர்கள், கன்னடர், தெலுங்கர், மலையாளிகள் ஆகியோர் திராவிடர்கள் என்ற கருத்து வலுவாக மக்கள் மயம் ஆனது. மனுவுக்கும், இராமனுக்கும், பார்ப் பனியத்துக்கும், ஆரியத்துக்கும் திராவிடர் எதிரானவர் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. இதை தமிழர்கள் ஏற்றார்கள். ஏனைய கன்னட, தெலுங்குப் பகுதிகளில் இருந்த திராவிடர்கள் ஏற்கவில்லை. இதற்கு கர்னாடகத்தைச் சேர்ந்த கன்னடர்கள் பார்ப்பனியத்துடனும், மனுவுடனும் வரலாற்று பூர்வமாகத் தொடர்புடையவர்கள் என்பதும் காரணம் எனக் கருதலாம்.

       தென்னிந்தியாவில் பார்ப் பனியத்தை நிலைநிறுத்தியதில் சாளுக்கியர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. தமிழகப் பகுதிகளில் சோழ மன்னர்களின் காலத்தில் பார்ப் பனியமும் சாதியமும் நிலவுடைமை வலுப்பெற்ற காலத்தில், சேர்ந்தே வளர்ந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால் வர்ண சாதியத்தின் முழுமையான ஒடுக்கு முறையும், பார்ப்பனியத்தின் மேலாண்மையும் வெறி கொண்டு ஆடிய காலம் கி.பி. 14ஆம் நூற்றாண்டில் விஜய நகர ஆட்சிக்கு தமிழகம் ஆட்பட்ட போதும் பிறமொழியாளர்களான நாயக்கர்கள் தமிழகத்தை ஆண்ட போதும் என்பது தெளிவான ஒரு வரலாற்று உண்மை ஆகும்.

       தமிழ் மன்னர் களிடம் காணப்பட்ட வர்ணசாதி உணர்வை விட கன்னட - ஆந்திர திராவிடர்களிடம் கூடுதலாகக் காணப்பட்டது. சோழ மன்னர்கள் ‘மனுமுறை’யைப் பின்பற்றினார்கள் என்பது உண்மை. ஆனால் சோழர்கள் கீழைச்சாளுக்கியர்களுடன் மணஉறவுக் கொண்டு அதில் பிறந்த முதலாம் குலோத்துங்கச் சோழன் சோழ அரியணை ஏறிய பிறகுதான் மனுதர்மம் முழுமையாக கடுமையாக நடைமுறை படுத்தப்பட்டது. இருபதாம் நூற்றாண்டிலும், தந்தை பெரியார் வர்ண - சாதி ஒடுக்கு முறைக்கு எதிராக ‘திராவிடர்’ என்ற பெயரில் இயக்கம் கட்டிய போது கூட தமிழர்கள் மட்டுமே அதை ஏற்றனர். திராவிட இயக்கம் கன்னட ஆந்திர, கேரளப் பகுதிகளில் ஏற்கப்படவில்லை.

       இதற்கு ஒரு வரலாற்றுக் காரணம் இருப்பதாகக் கருதலாம். கன்னட, தெலுங்கு நிலப்பரப்பு முழுவதுமே நீண்டகாலமாக பார்ப்பனிய மரபுகளிலும், உறவிலும் பெருமை கொண்டி ருந்தது.

       சாளுக்கியர்கள் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து 8ஆம் நூற்றாண்டு வரையிலும், மீண்டும் 10ஆம் நூற்றாண்டிலிருந்து 12ஆம் நூற்றாண்டு வரையிலும் இன்றைய கன்னட, தெலுங்க, மகாராஷ்டிரப் பகுதிகளில் ஆட்சி செலுத்தினர். தொடக்க கால மேலை சாளுக்கியர் களான வாதாபி சாளுக்கியர்கள் ‘மானவ்ய கோத்திரத்தை சேர்ந்தவர்கள். மனித குலத்தின் ஏழு தாய்களால் வளர்க்கப்பட்டவர்கள் என்று கூறிக்கொண்டனர். மானவ்ய கோத்திரம் என்றால் மனுவின் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொருள்.

       புராணக்கதைகளும், கல் வெட்டுகளும், செப்புப் பட்ட யங்களும் சாளுக்கியர்கள் மனுவின் குலத்தின் ஏழு தாய்களால் வளர்க்கப் பட்டவர்கள் என்று பெருமை பேசுகின்றன. இந்த சான்றுகள் மனுவின் வழி வந்தவர்கள் என்று பேசுவதுடன், வடக்குக் கோசலத்தின் தலைநகரான அயோத்தியுடன் சாளுக்கியர்களைத் தொடர்பு படுத்துகின்றன. சாளுக்கிய வழிவந்த 59 அரசர்கள் அயோத்தியை ஆண்டனர் என்றும் 16 அரசர்கள் தென்னகத்தை ஆண்டனர் என்றும் கல்வெட்டு கூறுகிறது. மற்றொரு கல்வெட்டு, இந்த வம்சத்தைத் தோற்றவித்தவர் கடவுளரான பிரம்மா என்று கூறுகிறது. பிரம்மானவத் தொடர்ந்து சுயம்புவ மனுவும், அவனைத் தொடர்ந்து அவனுடைய மகன் மானவ்ய (அதாவது மற்றொரு மனு), அவனுக்குப் பின் ஹரித என்பவனும், அவனுக்குப் பின் பஞ்சசிகி ஹரிதியும் (கச்ஞிடச்ண்டிடுடடி ஏச்ணூடிtடடி), அவனுக்குப் பின் சாளுக்கியா என்ற மகனும் ஆளுகை செலுத்தினர்.

       இந்த சாளுக்கியா என்பவ னுடைய பெயரிலிருந்தே சாளுக்கிய வம்சம் பிறந்தது. வரலாற்றறிஞர்கள் இவற்றை ஒதுக்கிவிட்டு ஜெயசிம்ம (ஒச்தூச் ண்டிட்டச்), அவன் மகன் இரன ராகா (கீச்ணச்ணூச்ஞ்ச்) காலத்தி லிருந்தே சாளுக்கிய வரலாற்றைத் தொடங்கு வர். இரனராகாவுக்கு அடுத்து முதலாம் புலிகேசி (கி.பி. 535 - 566) ஆட்சி செய்தான். இவன் மானவ தர்ம சாஸ்திரத்தையும், புராணங் களையும், இதிகாசங்களையும் நன்கு கற்றவன்.

       கி.பி. 11ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த ஆறாம் விக்கிர மாதித்திய சாளுக்கியனின் நில குண்டா கல்வெட்டு (Nடிடூச்டுதணஞீச் ஐணண்ஞிணூணீtடிணிண), தொடக்கத்தில் சாளுக் கியர்கள் அயோத்தியிலிருந்து வந்தார்கள் என்றும் அயோத்தியை 51 சாளுக்கிய அரசர்கள் ஆண்டனர் என்றும், தென்னிந்தியாவில் குடியேறி 16 அரசர்கள் தென்னகத்தை ஆண்டனர் என்றும் கூறுகிறது. இரண்டாம் விஜயாதித்யனின் செப்புப் பட்டயம் அவன் மானவ்ய கோத்திரத்தைச் சேர்ந்தவன் என்று குறிப்பிடுகிறது.

       மேற்குறித்த செய்திகள் ஒன்றை தெளிவுபடுத்தும். பாகவத புராணம் பேசும் செய்திகளுக்கும், சாளுக்கிய மன்னர்களின் கல்வெட்டு கள் மற்றும் செப்பேடுகள் கூறும் செய்திகளுக்கும் ஒற்றுமைகள் இருக் கின்றன. இன்றைய கர்னாடகப் பகுதி மேலைச் சாளுக்கிய ஆளுகைப் பகுதியாகவும், ஆந்திரா கீழைச் சாளுக்கியப் பகுதியாகவும் இருந்தன.

       இன்றைய அளவில், திரா விடர்கள் பார்ப்பனியத்துக்கு எதிரானவர்கள் என்றும், பார்ப் பனர் தவிர்த்த தென்னிந்தியர்கள் அனை வரையும் திராவிடர்கள் என்றும் அடையாளப் படுத்து வதாக கருதி னால், அது ஒரு கோளாறான முடிவாகவே இருக்கும்.

       இன்றைய கர்காடக, ஆந்திர, மகாராஷ்டிரப் பகுதிகளை ஆண்ட சாளுக்கியர்கள் பார்ப்பனியப் பாதுகாவலர்கள். மனுதர்மத்தை நிலை நிறுத்தியவர்கள்.

       மகாராஷ்டிரத்தை தாயக மாகக் கொண்ட இராஷ்டிரக் கூடர்கள் வாதாபி சாளுக்கியர் கி.பி. 8ஆம் நூற்றாண்டில் வீழ்ச்சியடைந்த போது ஆதிக்கம் பெற்றனர். இவர்கள் யது குடும்பத்தைச் (கிருஷ்ணரின் குலம்) சேர்ந்தவர்கள் என பட்டயங்கள் பேசுகின்றன. கி.பி. 871 இல் அளிக்கப்பட்ட சஞ்சன் பட்டயம், கிருஷ்ண பகவானின் வழிவந்த வர்கள் இராஷ்டிர கூடர் என்று தெரிவிக்கிறது. இராஷ்டிர கூடர் களின் தாய்மொழியும் கன்னடம்தான் என்றும் அவர்கள் தாயகமும் கர்னாடகப் பகுதிதான் என்றும் அல்டேகர் தெரிவிக்கிறார்.

       இவ்வாறு மனுவுடனும், கிருஷ்ணருடனும் தங்களைத் தொடர்புபடுத்திக் கொண்டு, நீண்ட காலமாக பார்ப்பனியத்துடன் உறவு கொண்டு, பார்ப்பனிய மரபுகளைப் போற்றிப் பாதுகாத்த வரலாற்று மரபு கொண்டவர்களைத்தான் கர்நாடகம், ஆந்திரம், மற்றும் கேரளத்தில் காணுகிறோம். தமிழகத்தைப் பொறுத்தவரை, வேற்று மொழியாளர்களின் ஆட்சிகாலம் நடைபெற்ற போதே வர்ண - சாதி ஒடுக்குமுறைகள் உச்சம் பெற்றன என்பது உண்மை. பொதுவில் தென்னிந்தியர் என்போர் திராவிடர், அவர்கள் பார்ப்பனியத்துக்கு எதிரானவர் என்று கருதுவது உண்மைக்குப் புறம்பானது ஆகும்.

       திராவிட தேசம் என்பது எது? கடந்த காலத்தில் சத்திய விரதன் திராவிட தேசத்தை ஆண்டதாக பாகவத புராணம் பேசுகிறது. அது எது? திராவிட தேசம் என்று கடந்த காலத்தில் குறிப்பிட்ட பகுதியில் நிச்சயமாக கிருஷ்ணா ஆற்றிலிருந்து காஞ்சிபுரம் வரையுள்ள பகுதிகள் இருந்தன என நாம் கருதலாம்.

       திராவிடம் என்று வடமொழி இலக்கியங்கள் தென்னிந்தியாவைக் குறிப்பிடுகின்றன. இதில் தமிழகமும் அடங்கும். திராவிடதேசம் என்பது தமிழகத்தையும் உள்ளடக்கி இருந்திருக்கலாம். ஆனால் கடந்த காலத்தில் இந்தியாவில் 56 தேசங்கள் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்கள். அதில் தமிழரசுகள் நீங்கலாக ஒரு திராவிட தேசம் இருந்திருக்கிறது.

       இன்றைய இந்திய வரைபடத்தில் மொழிவாரி மாநிலங்கள் காணப்படுகின்றது. கடந்த காலத்திய மாமன்னர்களின் பேரரசுகள் வரைபடத்தில் காட்டப்படுகின்றன. இவை அரசியல் வரைபடங்கள், இவை போன்றே மலைகள், காடுகள், ஆறுகள் இவை காட்டப்பட்டால், அவை இயற்கை அமைப்பு வரைபடங்கள். இது போன்றே ஒரு பெரு நிலப்பகுதியின் பண்பாட்டு வரைபடமும் வரையலாம்.

       இந்தியத் துணைக் கண்டத்திற்கு அப்படியொரு பண்பாட்டு வரைபடம் வரையப் பட்டால் அதில் தென்னிந்தியாவில் இருந்த திராவிட தேசம் என்னும் பகுதி முக்கிய இடம் பெறும். அரசியல் வரைபடத்தில் இடம் பெறாத திராவிட தேசம் பண்பாட்டு வரைபடத்தில் மிக முக்கிய இடம் பெறும். ஏனெனில், திராவிட தேசம் என்னும் இக்குறிப்பிட்ட நிலப்பகுதி பார்ப்பனிய மரபும், பண்பாடும் செழித்து ஓங்கிய நிலப்பகுதி ஆகும்.

       சேர, சோழ, பாண்டியர் ஆண்ட பகுதிகளைளயும் சேர்த்து ‘திராவிட தேசம்’ என்று அழைக்கலாமா? அவ்வாறு சில சமயங்களில் தென்னகம் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் தெலுங்க, கன்னட மொழி வழங்கப்பட்ட பகுதியிலேதான் தனியாக அப்படியொரு தேசம் விளங்கி வந்ததாக அறிகிறோம்.

       1910-இல் அபிதான சிந்தாமணி என்னும் கலைக் களஞ்சியத்தை ஆ.சிங்கார வேலு முதலியார் வெளியிட்டார். இதில் இந்தியாவில் நிலவிய பழைய தேசங்களாக 56 தேசங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை:

அங்கம், அருணம், அவந்தி, ஆந்திரம், இலாடம், யவனம், ஒட்டியம், கருசம், கலிங்கம், கன்னடம், கர்நாடம், காசம், காசுமீரம், காந்தாரம், காம்போஜம், கிராமம், குருகு குடகம், குந்தளம், குரு, குலிந்தம், கூர்ச்சரம், கேகயம், கேரளம், கொங்கணம், கொல்லம், கோசலம், சகம், சவ்வீரம், சிங்களம், சிந்து, சீனம், சூரசேனம், சோழம், சோனகம், திராவிடம், துளுவம், தெங்கணம், நிடதம், நேபாளம், பாஞ்சாலம், பப்பரம், பல்லவம், பாண்டியம், புலிந்தம், போடம், மகதம், மச்சம், மராடம், மலையாளம், மாளவம், யுகந்தரம், வங்கம், வங்காளம், விதர்ப்பம்

(ஆ.சிங்காரவேலு முதலியார், அபிதான சிந்தாமணி, (1910), சாரதா பதிப்பகம், சென்னை, 2001, பக்கம் 890)

       இதில் சேர, சோழ, பாண்டிய நாடுகளுக்கு உட்படாமல் ஒரு தனித்தேசமாக திராவிடம் குறிப் பிடப்பட்டுள்ளது. திராவிடம் என்பது குறித்து ‘கோதாவரிக்குத் தென்னாடு’ என்றும் “கர்நாடக - ஆந்திர தேசங்களுக்கு இடையிலுள்ள நாடு என்றும் இக்கலைக் களஞ்சியம் (மேலது, பக்கம் 1633) குறிப்பிடுகிறது.

       மற்றோர் இடத்தில், ‘திராவிடம்’ என்ற சொல் தமிழ், ஆந்திரம், கன்னடம், மகாராஷ்டிரம் கூர்ச்சரம் - ஆகிய நிலப்பகுதிகளைக் குறிப்பிடுகிறது(மேலது பக்கம். 822). ‘திராவிடம்’ என்ற சொல்லுக்கு “தமிழுக்கு ஆரியரிட்ட ஒரு பெயர்” என்றும் ‘ஒரு தேசம்’ என்றும் குறிப்பிடுகிறது (மேலது பக்கம். 823). ஆகவே தமிழகம் இன்றி, ஏனைய மொழிகள் பேசும் தென்னிந்தியப் பகுதிகள் இன்றி, திராவிட தேசம் என்ற ஒன்று இருந்து வந்திருக்கிறது என்பதை உணரலாம்.

       1918ஆம் ஆண்டு, பி.வி.ஜகதீச அய்யர் என்பவரால் எழுதப்பட்டு, ‘புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்’ என்னும் நூல் வெளியிடப்பட்டது. இந்நூலின் முன்னுரையில் பி.வி. ஜகதீச அய்யர் கூறும் கருத்து முன்னோட்டம் அவருடைய நூலுக்கு அடிப்படையாக வேறு நூல்கள் 56 தேசங்கள் பற்றி குறிப்பிட்டுள்ள மையைப் பதிவு செய்கிறது.

       “நமது ஆரியர்கள் அனுஷ்டித்து வரும் வரதங்களின் லக்ஷணங்களை விவரிக்கக் கூடியதாய் “இந்து புண்ய கதை” என்னும் ஒரு சிறிய நூலை யான் சில மாதங்களுக்கு முன் இயற்றிய பிறகு அவைகளின் விசேஷங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் தருணத்தில் தஞ்சாவூர் அரண் மனை லைப்ரெரியிலி ருக்கும் சில சாஸ்திரங்களைக் கண்ணுற்று வருகையில் பாலகாப்ய மஹரிஷி யினால் செய்யப்பட்ட கஜசாஸ் திரமே நமது பூர்வ இந்தியாவின் பாக்கியமென்று விளங்கிற்து. ஏனெனில் அந்நூலில் குரு, சூரஸேனம், அங்கம், வங்கம் முதலான அனேக தேசங்களின் பெயரும் அவைகளின் நீர்நில வளமும், எல்லையிலடங்கிய மலை நதிகளும், மற்றும் சில சரித்திரங்களும் வெகு அழகாய் வரையப்பட்டிருந்தன. இந்தியாவில் பூர்வ நிலைமையிலிருந்த 56 தேசங்களின் விவரங்களைப் பற்றி ஒரு நூலை இயற்ற வேணுமென்று கருதிய எனக்கு அந்நூலே என் விருப்பத்தைத் தூண்டிவிட்டது”

(க.ஏ. ஜகதீச அய்யர், ‘புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்’, முதல்பாகம், சந்தியா பதிப்பகம், சென்னை, 2004)

       பி.வி. ஜகதீச அய்யர் வாழ்ந்த காலம் ஆரியர் - திராவிடர் என்பவற்றை மரபினங்களாக ஏற்று ஐரோப்பிய, இந்திய அறிஞர்கள் நூல்கள் எழுதிக்கொண்டிருந்த காலம். தாம் ‘ஆரியர்’ என்ற கருத்துடையவர் இவர் என்பதை வெளிப்படுத்துகிறார்.

       ஜகதீச அய்யர் 56 தேசங்களின் பெயர் பட்டியலை இந்நூலில் அளித்திருந்தாலும், முதல் பாகத்தில் 17 தேசங்களின் விபரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது பாகம் வெளிவந்ததா என்பது தெரியவில்லை. முதல் பாகத்தில் திராவிட தேசம் பற்றிய செய்தியும், பிற தென் தேசங்கள் பற்றிய தொகுப்புகளும் தரப்படவில்லை. அபிதான சிந்தாமணி அளித்த பட்டியலிலும் ஜகதீச அய்யர் அளித்துள்ள பட்டிலிலும் திராவிட தேசம் இடம் பெற்றிருக்கிறது. அது சேர, சோழ, பாண்டியர் ஆண்ட பகுதிகள், ஆந்திரம், கர்னாடகம் நீக்கலாக, தனியாகக் குறிப்பிடப் படுகிறது. அபிதான சிந்தாமணி அளிக்கும் பட்டியலிருந்து சற்று வேறுபடவும் செய்கிறது.

56 தேசங்கள்

1.     குருதேசம்

2.     சூரஸேந தேசம்

3.     குந்தி தேசம்

4.     குந்தல தேசம்

5.     விராட தேசம்

6.     மத்ஸ்ய தேசம்

7.     த்ரிகர்த்த தேசம்

8.     கேகய தேசம்

9.     பாஹ்லிக தேசம்

10.    கோஸல தேசம்

11.    பாஞ்சால தேசம்

12.    நிஷத தேசம்

13.    நிஷாத தேசம்

14.    சேதி தேசம்

15.    தசார்ண தேசம்

16.    விதர்ப்ப தேசம்

17.    அவந்தி தேசம்

18.    மாளவ தேசம்

19.    கொங்கண தேசம்

20.    கூர்ஜர தேசம்

21.    ஆபிர தேசம்

22.    ஸால்வ தேசம்

23.    ஸிந்து தேசம்

24.    ஸௌவீர தேசம்

25.    பாரஸீக தேசம்

26.    வநாயு தேசம்

27.    பர்பர தேசம்

28.    கிராத தேசம்

29.    காந்தார தேசம்

30.    மத்ர தேசம்

31.    காச்மீர தேசம்

32.    காம் போஜ தேசம்

33.    நேபாள தேசம்

34.    ஆரட்ட தேசம்

35.    விதேஹ தேசம்

36.    பார்வத தேசம்

37.    சீந தேசம்

38.    காமரூப தேசம்

39.    ப்ராக் ஜோதிஷ தேசம்

40.    ஸிம்ம தேசம்

41.    உத்கல தேசம்

42.    வங்க தேசம்

43.    அங்க தேசம்

44.    மகத தேசம்

45.    ஹேஹய தேசம்

46.    கலிங்க தேசம்

47.    ஆந்த்ர தேசம்

48.    யவன தேசம்

49.    மஹாராஷ்டிர தேசம்

50.    குளிந்த தேசம்

51.    த்ராவிட தேசம்

52.    சோள தேசம்

53.    ஸிம்மள தேசம்

54.    பாண்டிய தேசம்

55.    கேரள தேசம்

56.    கர்ணாடக தேசம்

(வரைபடம் ‘புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்’ என்ற நூலில் இருந்து தரப்பட்டுள்ளது)

       திராவிட தேசம் வேறு; சோழ தேசம், பாண்டிய தேசம், கேரள தேசம், ஆந்திர தேசம், கர்னாடக தேசம் என்பவை வெவ்வேறு தேசங்கள் எனப் பட்டியலிடப்பட்டுள்ளன. தென்னிந் தியாவில் ஏனைய தேசங்கள் அனைத்திலும் பார்ப்பனியம் போற்றப்பட்டாலும், தமிழகத்திற்கு வடக்கே அமைந்திருந்த திராவிட தேசம் தான் சமஸ்கிருதமும், பார்ப்பன மரபுகளும் செழித்தோங்கிய பகுதி. இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் உள்ள தேசங்களுக்கெல்லாம் ஆன்மீகத் தலைமை ஏற்ற பூமி. ஐரோப் பியாவுக்கு ரோம் போல இந்தியாவுக்கு திராவிட தேசம் என்று கூறலாம். இந்தியாவில் மன்னர்கள் எந்த தேசத்தை ஆண்டாலும் அவர்கள் அனைவரும் திராவிட தேசத்தை ஆண்ட மனுவின் வழி வந்தவர்களே என்ற பார்வை பார்ப்பனர்களிடம் இருந்து வந்திருக்கிறது. பி.வி.ஜகதீச அய்யர் இப்படி எழுதுகிறார்.

“ஆதிகாலத்தில் இந்த பரத கண்டமான வைவஸ்வதமனு என்னும் ஸூர்யபுத்ரனாகிய மனுவின் காலம் முதல் பல தேசங்களாகப் பிரிக்கப்பட்டு இக்ஷ்வாகு, ஸகரன், பகீரதன், ராமன், யயாதி, நளன், நஹூஷன், விக்ரமாதித்யன், போஜன் முதலிய ப்ரஸித்தியுள்ள ராஜாக்களால் விசேஷமாய் ஆண்டு வரப்பட்டது. இந்த தேசங்களை செழுமையாய் ஆளுவதற்கு தனித்தனி ராஜாக்கள் ஏற்பட்டிருந்தாலும் ஸூர்ய வம்சத்தரசர்களும், சந்த்ர வம்சத்தரசர்களுமே சக்ரவர்த்தியாய் இருந்தார்கள்” - (மேலது பக்கம் 12)

       வைவாஸ்வதா மனு சூரிய குலத்தவன் என்றும், அவனது குலம் பற்றிய விபரங்களையும் மகா பாரதம், இராமாயணம், பாகவத புராணம், இரகுவம்சம் ஆகியவை தருகின்றன. இராமன் மனுவுக்கு சொந்தக்காரன், மனு திராவிட தேசத்தவன். ஆ.சிங்காரவேலு முதலியார் எழுதிய அபிதான சிந்தாமணி, ‘திரவிடன்’ என்ற சொல்லுக்கு, “சூர்ய வம்சத்தரசன் இவன் யோகியாயினன்” (பக்கம். 822) என்று பொருள் கூறுகிறது.

       மேலே விவரிக்கப்பட்ட பல்வேறு செய்திகளிலிருந்து நாம் அறிந்து கொள்வது: ‘திராவிடர்’ என்பது தென்னிந்தியப் பார்ப் பனர்களைக் குறிக்கும் அல்லது பார்ப்பன மரபு போற்றும் மன்னர்களைக் குறிக்கும்; திராவிட தேசம் என்பது புராண இதிகாசங்கள், வர்ண - சாதி தர்மம் செழித்த பகுதி மற்றும் பார்ப்பன சமஸ்கிருத மரபில் தோய்ந்த ஒரு தேசம்.

       20ஆம் நூற்றாண்டில் திராவிட இயக்கம் நம்பியபடி ‘திராவிடர்’ என்ற சொல் பார்ப்பனர்களுக்கு அப்பாற்பட்ட சொல்லுமன்று, ‘திராவிட தேசம்’ என்பது பார்ப்பன ஆதிக்கம் இல்லா நிலமுமன்று. மாறாக, பார்ப் பனியத்தில் ஊறித் தோய்ந்த நிலப்பரப்பே திராவிடம்.

       தென்னிந்தியப் பார்ப் பனர்களை வடநாட்டவர் மற்றும் சமஸ்கிருத மரபாளர்கள் ‘திராவிடர்’ என்று அழைத்தது போலவே, தமிழகத்திலிருந்து பிறமொழிப் பகுதிகளுக்குக் குடியேறிய தமிழகப் பார்ப்பனர்களையும் ‘திராவிடர்’ என்று அழைத்தனர்; இன்றும் அழைத்து வருகின்றனர்.

       சிலநூறு ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரப் பகுதிக்குக் குடியேறிய பார்ப்பனர்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். அப்பார்ப்பனர்களைக் குறிக்க ‘திராவிட’ என்ற சொல் இன்றளவும் பயன்படுத்தப் பட்டு வருகிறது. தமிழகத்திலிருந்து அங்கு சென்ற பார்ப்பனர் அல்லா தாரைக் குறிக்க இச்சொல் பயன் படுத்தப்படுவதில்லை. ஆந்திராவில் வாழும் ‘புதுரு திராவிட பார்ப்பன‌ர்கள்’ 400 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திரப் பகுதியில் குடியேறினார்கள். முதன்முதல் அவர்கள் குடியேறிய பகுதியுடன் சேர்த்து அவர்கள் ‘புதுரு திராவிடலு’, தும்மகுந்த திராவிடலு, கோணசீம திராவிடலு, அரமா திராவிடலு, பெருரு திராவிடலு - என்று அழைக்கப்படுகின்றனர்.

       இவை அனைத்திலும் ‘திராவிடலு’ என்ற சொல் தமிழ்ப் பார்ப்பனர்களை மட்டுமே குறித்து நிற்பதைக் காணலாம். தமிழ்ப் பார்ப்பனர் - அல்லாதாரை திராவிடர் என்று அழைப்பதில்லை. அவர்கள் ‘அரவ - வந்தலு’ என்று அழைக்கப் படுகின்றனர். அரவம் என்ற சொல்லுக்கு பாம்பு என்று பொருள். 

       இந்த நீண்ட எழுத்துப் பயணத்தின் சாரம் இதுதான்:

       திராவிடம், திராவிடர், திராவிட தேசம் - ஆகிய சொற்கள் வரலாற்று ரீதியாக பார்ப்பனர்களோடு தொடர்புடைய சொற்கள். இச் சொற்கள் மீது பார்ப்பனர்களுக்கு முதல் உரிமை யும் முற்றுரிமையும் இருக் கிறது. ‘தமிழம்’ என்பது பார்ப்பனச் சார்புடைய சொல் அன்று. ஆனால், ‘திராவிடம்’ என்பது பார்ப்பன மரபுகளில் பல நூற்றாண்டுகள் ஊறிய சொல்; பார்ப்பன பண் பாட்டில் தோய்ந்த சொல்.

 உப்பில் ஊறினால்தான் அது ஊறுகாய்;

 பார்ப்பன மரபில் ஊறினால் அது திராவிடம்.

(வரும்)