Peopleவந்துட்டாங்களய்யா... வந்துட்டாங்களய்யா...!
அஞ்சு வருஷத்துக்கப்புறமா வந்துட்டாங்களய்யா!

வீடுவீடா...தெருத்தெருவா...
ஊரு...ஊரா...கும்புட்டு
ஓட்டுக்கேட்டு வந்துட்டாங்களய்யா!

அதச் செய்வோம்; இதச் செய்வோம்
வெள்ளச்சட்டை கரைவேட்டியோட
வந்து ஓட்டுக்கேட்டவங்க... மறுபடியும்
வந்துட்டாங்கய்யா.... வந்துட்டாங்க...!

எங்கவூருக்கு எதையாவது செஞ்சா
சரிங்கய்யா ஒங்களுக்கே ஓட்டுன்னு
நாங்க வாக்களித்தபடி வாக்குப் போட்டு
அனுப்பினோம்...எங்க கந்தவேட்டியோட!

ஜெயிச்சப்புறம்...கோட்டைக்கு போனப்புறம்
வூட்டுக்கு வேணாம்...தெருவுக்கு வேணாம்
ஊருக்காச்சும் வருவாங்கன்னு வாராவாராம்
பாத்தோமய்யா...வருஷங்கள்தாம் வந்துபோச்சுய்யா!

ஆனா, இப்ப கரைவேட்டியோட வெள்ளையும்
சுள்ளையுமா வந்துட்டாங்கய்யா...எங்களைத்
தேடிவாராத மாமணிகள் வந்துட்டாங்கய்யா.....!

ரோடு என்னாச்சு? லைட்டு என்னாச்சு?
அட, தெருக்குழாய் தண்ணியும் என்னாச்சு?
தவிக்கத் தவிக்க தேடிப்போய் எம்.எல்.ஏவையும்
கேட்டோமய்யா... நாங்களும் கேட்டோமய்யா!

வரும்...வரும்... எல்லாம் வரும்...
அங்கங்கே சொல்லீருக்கேன் என்று
எங்க மொகம் பாக்காமக் கூடச் சொன்னாரு
எங்கவூரு எம்.எல்.ஏ.ங்கய்யா...!

இப்ப வீடுவீடா...தெருத்தெருவா...
ஊரு...ஊரா...கும்புட்டு
ஓட்டுக்கேட்டு வந்துட்டாங்களய்யா!

தெருவெளக்கும் வரல; கொழாய் தண்ணியும்
வரல; கல்லு ரோடு அப்படியே கெடக்கு...!
காருக்குள்ள கல்லுகுத்தாம செருக்கா ஒக்காந்து
இப்ப எதுக்கு வந்தீங்கய்யா? எதுக்கு வந்தீங்க?கேட்டோம்.

அட, என்னங்கய்யா வெபரம் புரியாம நீங்கள்ளாம்
கடகடன்னு பேசுறீங்க? நாங்க தண்ணி விட, போட்டாங்க
தடா...மத்தியில! தெருவிளக்கு கோடிக்கணக்கா
மடமடன்னு வாங்கினோம்; மின்சாரம் குடுக்கல மத்தியில!?

ரோடு போட கல்லு வேணும்; தாராளமா தார் வேணும்.
காடு போய் கல்லு வெட்டுவீங்க; ஆறு மணல் எடுப்பீங்க!
நாடு என்னாகும்? சுற்றுச் சூழல் கெட்டு நாட்டுக்கே
கேடு வந்துடும்ன்னு மத்தியில எழுதாத சட்டம் போட்டாங்கய்யா!?

இதுக்கெல்லாம் முடிவு வேணாமா? அதான் இப்ப தேர்தல்
இங்கும் மத்தியிலும் ஆட்சி ஒண்ணா இருந்தா வராது
இந்த சிரமம் எல்லாம்; நாங்களே எல்லாம் செய்வோம்!
இதனாலேயே எங்களுக்கு போடணும் நீங்க ஓட்டு! சொன்னாங்கய்யா.

எங்க கஷ்டத்தை சொன்னா விடிவு பொறக்கும்ன்னு
ஒங்ககிட்ட சொன்னா ஒங்க கஷ்டத்தைச் சொல்லுதியளே? இப்ப
நாங்க என்ன செய்யிறதய்யா? என்ன செய்யிறதய்யா?
எங்களுக்குப் புரியலையே அய்யா?! புரியலையே அய்யா?!

சிக்கன் முட்டை பிரியாணி சிறப்பாவே தாறோம்;திருப்தியாசாப்பிட்டு,
நிக்கும் என்னை கோட்டைக்கு அனுப்பவேண்டியது ஒங்க பொறுப்பு.
திக்கெட்டும் என் குரல் ஒங்களுக்காய் ஒலிக்கும்; இனி எந்த
இக்கட்டும் வராது ஒங்களுக்கு நம்புங்கய்யா; நம்புங்க!

மூணுவேளை சாப்பாடு இலவசம்; புள்ளைங்க படிப்பு இலவசம்'
நானும் செயிச்சால் தெருவிளக்கு பகல்போல எரியும்;
காணும் இடமெல்லாம் என் பிரதிநிதிகள் உங்கள் சேவைக்கு!
வேணும் இடமெல்லாம் தார்ச்சாலை; கிராமம் நகரமாகும், நம்புங்கய்யா!

காவிரியில் கங்கையை இணைப்பேன்; டவுண் பஸ்சில் பயணிக்க
தாவி ஏறினாலும் டிக்கெட் எடுக்காமல் இலவசமாய் போகலாம்!
காவி வேட்டி, சேலை இலவசம் நேர்த்திக்கடன் பக்தர்களுக்கு!
சாவி பூட்டு ஒவ்வொரு வீட்டுக்கும் இலவசம்; இன்னுமிருக்கய்யா..!

இப்ப வீடுவீடா...தெருத்தெருவா...
ஊரு...ஊரா...கும்புட்டு
ஓட்டுக்கேட்டு வந்துட்டாங்களய்யா! வந்துட்டாங்க!
இப்ப நாங்க என்ன செய்யிறதுங்கய்யா? என்ன செய்யிறது?

வாக்கு போடும் எங்களுக்கு வாக்களித்தபடி செய்வதில் சிக்கலாம்!
சாக்கு போக்கு சொல்லும் இவர்களை நம்பமுடியவில்லையே?! இவர்கள்
நாக்கு மாறும் விதம் கட்சிக்கு கட்சி மாறினாலும் காட்சிகள் மாறாது!
தாக்கும் தன்மைகளில்! பாவம் ஓரிடம்,பழி ஓரிடம் போல்!

எங்க பக்கத்து தொகுதி எம்.எல்.ஏ.,செத்துப் போனாரு; இடைத்தேர்தல்
அங்க வந்துச்சு! மூணுவருஷமா கேட்டுக்கேட்டு அலுத்துப் போன
அந்த தொகுதிக்கு அடிச்சுது லாட்டரி! அம்புட்டு வசதியும் அடுத்தடுத்து
அங்க வந்த அதிசயம் பாத்தோமுங்க அய்யா! பாத்தோமுங்க!

ஆனா, அப்பவும் இங்க இவுங்க! அங்க அவுங்க ஆட்சிதான்!
ஆனா, எப்படி இந்த அதிசயங்கள் மின்னலாய் நடந்தது? எப்படி?
வேணா முங்க தேர்தல் எங்களுக்கு! வேண்டவே வேண்டாம்! எங்க
கணா பலிக்கணும்ன்னா இடைத் தேர்தல்களே வேணுமய்யா! வேணும்!

தேர்தல்கள் வேண்டாம்! எங்களுக்கு வேணும் இடைத்தேர்தல்கள்!
தேர்தல் கமிசனே எங்களுக்கு தேறுதல் அளிப்பாயா? ஆறுதல் தருவாயா?
தேர்தல்களே இல்லை; இடைத் தேர்தல்கள் மட்டுமே என்ற அறிவிப்பை மட்டும்!

ஆல்பர்ட் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It