சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்துகிறீர்களே, அது சாதி எண்ணத்தையும், சாதி அமைப்புகளையும் வலுப்படுத்தாதா?

                மருந்துகளுக்குப் பக்க விளைவு இருப்பது போல், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதிலும் பக்க விளைவாகச் சாதி உணர்ச்சி தூண்டப்பட வாய்ப்புண்டு. சாதிவாரிக் கணக்கெடுப்பால் கிடைக்கும் பலன்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தீமையைவிட நன்மை கூடுதலாகக் கிடைக்கும் என்பதால் அக்கோரிக்கையை முன்வைக்கிறோம்.

                இந்தியத் துணைக்கண்ட சமூக அமைப்பில் உற்பத்தி, உழைப்பு ஆகியவற்றில் சாதிகளின் பங்களிப்பு மிக அதிகம். அதே போல் சாதிவழிச் சுரண்டலும் அதிகம். எனவே வர்க்கப் பிரிவுகளின் வெளிப் பாடாகவே சாதிகளைப் பார்க்க வேண்டியுள்ளது. இதனால்தான் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்கிறோம்.

                ஒவ்வொரு சாதியின் மக்கள் தொகை தெரிந்து விட்டால், ஒத்த தன்மையுள்ள சாதிகளை ஒரே தொகுப்பாக்கி, அதன் மக்கள் தொகை எண்ணிக்கை விகிதத்திற்கேற்ப இட ஒதுக்கீடு வழங்கலாம். ஒரு குறிப்பட்ட அளவிற்கு மேல் அதிக மக்கள் தொகை கொண்ட சாதிகளைத் தனித்தனி தொகுப்பாக்கி விடலாம். மாநிலவாரியாக இது வழங்கப்பட வேண்டும். ஒரு மாநிலத்தில் 50 இலட்சம் அல்லது 75 இலட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை கொண்ட சாதியைத் தனித் தொகுப்பாக்கி விடலாம். இவ்வாறான தொகுப்புமுறை ஏற்பாடு, இப்பொழுது இட ஒதுக்கீட்டில் நிலவும் முரண்பாடுகளை நீக்கும். நூறு விழுக்காட்டையும் தொகுப்பு முறையில் பிரித்து விடலாம்.

                இப்பொழுதே ஆறுவகைப் பிரிவுகளைக் கொண்ட தொகுப்பாக இட ஒதுக்கீடு இருக்கிறது. சாதி அடிப்படையில் ஆதிக்கம் செலுத்துவோர் மற்றும் சுரண்டுவோர் வரம்பைக் கட்டுப்படுத்த தொகுப்பு முறை உதவும். தங்கள் தங்கள் சாதி மக்களின் எண்ணிக்கையை மிகைப்படுத்திப் பேசி, சாதி அமைப்புகள் நடத்துவோரின் கற்பனை அரசியலுக்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பு வரம்பு கட்டி விடும்.

                தொகுப்பு முறை இடஒதுக்கீடு வந்து விட்டால் சாதி அமைப்புகளின் தேவை பெருமளவில் குறைந்து விடும்.

திருமண முறிவுகள் அதிகமாகி விட்டன. குறிப்பாக அதிகம் படித்தவர்கள் மற்றும் அதிகம் பொருளீட்டுவோர் ஆகியோரிடம்தான் மண முறிவு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதற்கு என்ன காரணம்? அதைக் குறைக்க என்ன செய்யலாம்? மணமுறிவு உரிமையைத் தடைசெய்ய முடியுமா?

                மண முறிவு உரிமையைத் தடைசெய்யக்கூடாது. அவ்வாறு தடை செய்வது குடும்பத்தில் கொடுங் கோன்மை நடக்க வழி வகுக்கும். அதே வேளை மிகை யான மணமுறிவுகள் ஒரு குடும்பத்தின் சிக்கல் என்பதைத் தாண்டி சமூகத்தின் மன அமைதியைக் கெடுத்துப் பதற்றம், எரிச்சல், பழிவாங்கல் போன்ற தீய உணர்ச்சிகளைத் தூண்டிவிடும்.

                மண முறிவு உரிமை ஒரு பாதுகாப்புத் திறப்பான் (safety valve) போல் இருக்க வேண்டும். ஆபத்தி லிருந்து தப்பிக்க மட்டுமே பாதுகாப்புத் திறப்பான் உள்ளது. அன்றாடப் பயன்பாட்டிற்கு அன்று. அதுபோல் மணமுறிவு உரிமையைப் பயன்படுத்தும் மனப்பக்குவம் வேண்டும்.

                அதிகம் படித்தவர்கள் மற்றும் அதிகம் பொருளீட்டுவோரிடையே மணமுறிவு அதிகமாக இருப்பது உண்மை.

                சென்னை மாநகர நீதி மன்றங்களில் உள்ள குடும்ப வழக்குகளின் மொத்த எண்ணிக்கை 12,000. சென்னை தவிர்த்த தமிழ் நாட்டின் அனைத்து நீதிமன்றங்களிலும் உள்ள குடும்ப வழக்குகளின் எண்ணிக்கை 4000, என்று கடந்த மாதப் புள்ளி விவரம் கூறுகிறது.

                இது எதைக் காட்டுகிறது? விவரம் அறிந்த வர்கள், சொந்தக் காலில் நிற்க முடிந்தவர்கள் ஆகியோரிடையே மனித உறவில் விரிசல்கள் அதிகமாகி வருகின்றன என்பதைக் காட்டுகிறது.

                படிப்பு என்பது அறிவு வளர்ச்சியை மட்டும் இலக்காகக் கொண்டிருக்கக் கூடாது. அறிவு வளர்ச்சி யைப் போலவே மனவளர்ச்சியும் கல்வியின் இலக்காக இருக்க வேண்டும்.

                ஹைடிரசனும் ஆக்சிசனும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்தால் தண்ணீர் கிடைக்கும் என்று அறிந்து கொள்வது அறிவு வளர்ச்சி. தண்ணீரின்றி உயிரினம் வாழ முடியாது என்பதால், அதைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும், அதன் தூய்மையைக் காக்க வேண்டும், தண்ணீரை அடுத்த தலைமுறைக்கும் கையளித்துச் செல்லவேண்டும் என்று புரிந்து கொள்வது மன வளர்ச்சி.

                அறிவு வளர்ச்சிக்கு ஈடாக மன வளர்ச்சி ஏற்பட்டால் படித்த கணவனும் படித்த மனைவியும் தங்களுக்கிடையே உள்ள முரண்பாடுகளின் ஊடாகவே இணக்கம் காணும் மனப்பக்குவம் பெறுவர். வெறும் அறிவுகள் ஒன்றையொன்று வெல்ல முயன்று விரிசலை வளர்த்துவிடும்.

                தொல்காப்பியர் ஆறாம் அறிவு மனம் என்று கூறியதை ஊன்றிக் கவனியுங்கள்.

கருணாநிதி - செயலலிதா அறிக்கைப் போர் ஓயாது போல் இருக்கிறதே?

                தேர்தல் நெருங்குகிறது அல்லவா. அதனால்தான் இந்த அக்கப்போர். கருணாநிதியின் பலம் செயலலிதா. செயலலிதாவின் பலம் கருணாநிதி.

                தமிழக மக்கள் தொகையில் பெரும் எண்ணிக்கையில் கருணாநிதியைக் கண்டு அஞ்சுவோர் உள்ளனர். அதேபோல் பெரும் எண்ணிக்கையில் செயலலிதாவைக் கண்டு அஞ்சுவோரும் உள்ளனர். இந்த அச்சங்கள்தான் இருவரையும் தனிப் பெருந் தலைவர்களாக எதிர் எதிர் முனையில் வைத்துள்ளன. இந்த அச்சங்கள் மங்கிவிடாமல் பார்த்துக் கொள்வதில்தான் இருவரின் அரசியல் வாழ்வும் அடங்கி இருக்கிறது. அதற்காகவே இந்த அறிக்கைப் போர்.

பழ. கருப்பையாவைத் தாக்கப்பட்டது பற்றி?

                பழ. கருப்பையா பேச்சாற்றல் எழுத்தாற்றல் மிக்கவர். அவரது அரசியலில் நமக்கு உடன்பாடில்லை. அவர் நல்ல தமிழ் உணர்வாளர் என்பதில் ஐயமில்லை. அவரைத் தாக்கிய குண்டர்களை காவல்துறை இதுவரை படிக்கவில்லை என்பது ஒன்றே போதும், அக்குண்டர்கள் தி.மு.க.வின் ஆதரவு பெற்றவர்கள் என்பதைப் புரிந்து கொள்ள. திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் வீட்டில் நிறுத்தியிருந்த கார்க்கண்ணாடியை உடைத்தவர்களை மறுநாளே பிடித்து விட்டனர். அப்படிப் பிடித்தது தவறு என்று நாம் கூறவில்லை. ஆனால் பழ. கருப்பையாவைத் தாக்கியவர்களை ஏன் இன்னும் பிடிக்கவில்லை.

                ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் சீமான், தா. பாண்டியன் ஆகியோர் காரைக் கொளுத்திய வர்களையும், பாரதிராஜா அலுவலகத்தைச் சூறையா டியர் களையும் இன்னும் பிடிக்கவில்லை. கருணாநிதி யை விமர்சிப்பவர்கள் தாக்கப்படுவார்கள்; அப்படித் தாக்கினால் அந்த அரம்பர்கள் பிடிபடமாட்டார்கள் என்பதுதான் தி.மு.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு.

                இந்தப் போக்கு தொடர்ந்தால் காலப்போக்கில் எதிர்த்தாக்குதல் நடத்துவோர் உருவாகி, மோதல்கள் பெருகும் வாய்ப்புண்டு.

தமிழர் - சிங்களர் நல்லிணக்கத்தைக் கெடுத்த தாகக் குற்றஞ்சாட்டி சீமானைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைத் துள்ளாரே கருணாநிதி?

                கருணாநிதி குடும்பத்திற்கும் இராசபட்சே குடும்பத்திற்கும் இடையே உள்ள நல்லிணக்கத்தையும் நல்லுறவையும் சீமான் பேச்சு கெடுத்துவிடும் என்று கருதியிருப்பார். அதைத்தான் ஒட்டு மொத்தத்தமிழர்க்கும் - சிங்களர்க்கும் உள்ள உறவாகக் கற்பித்துக் கூறுகிறார்.

        சிங்களக் கப்பற்படை தமிழக மீனவர்களைக் கடலில் கொல்லும். அதைக் கண்டிப்பவர்களை கருணாநிதியின் காவல்துறை சிறையில் தள்ளும்.

        சிங்கள அரசின் புறக்காவல் படையாக தமிழகக் காவல் துறையை கருணாநிதி மாற்றி விட்டார்.

        தமிழக அரசு தோழர் சீமானை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

இலங்கையில் சீனர்கள் ஆதிக்கம் அதிகரிப்பதை இந்தியா எதிர்க்கவில்லையே ஏன்?

        ஈழக்கடல் பகுதியில் மீன் பிடிக்கவும் மற்ற வேலைகளுக்கும் 25ஆயிரம் சீனர்கள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சீனர்களைவிட, ஈழத்தமிழர்களும் தமிழகத் தமிழர்களும்தாம் இந்திய அரசுக்கு எதிரிகளாகத் தெரிகிறார்கள். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பொது எதிரி தமிழர்கள் என்ற பார்வை இரு நாடுகளுக்கும் இருக்கிறது.

        பர்மா என்று அழைக்கப்பட்ட மியான்மர் நாட்டுடன் சீனா நல்லுறவு வைத்திருப்பதை இந்தியா எதிர்க்கிறது. அதைப் போல் நேப்பாளத்தில் சீனாவின் செல்வாக்கு பெருகுவதை இந்தியா எதிர்க்கிறது. ஆனால் இலங்கையில் அரசியல் உறவு, பொருளியல் உறவு, ஆட்கள் வரவு என பல்துறையிலும் சீனாவின் செல்வாக்குப் பெருகுவதை இந்தியா எதிர்க்கவில்லை. இந்தியா - இலங்கை இரு நாடுகளும் தமிழர்களைப் பொது எதிரியாகக் கருதுகின்றன என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்?

மகாராட்டிர மாநிலத்தின் எல்லையை ஒட்டி கர்நாடகத்தில் உள்ள மராத்தி பேசும் ஊர்களை மகாராட்டிரத்துடன் சேர்க்கக் கோரி அவ்வப் போது போராட்டம் வெடிப்பது ஏன்?

        மாநில மறுசீரமைப்பு ஆணையம், மராட்டி யத்துக்குச் சேரவேண்டிய 865 கிராமங்களைக் கர்நாடகத்துடன் சேர்த்துவிட்டது என்று நீண்ட காலமாக மகாராட்டிரம் குற்றம் சாட்டி வருகிறது. கர்நாடகத்தின் வடக்கு எல்லையில் உள்ள பெல்காம் மாவட்டம் மராத்தி பேசும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ளது.

        மகாராட்டிரத்தின் கோரிக்கையை ஆய்வு செய்வதற்காக மகாஜன் தலைமையில் மறுஆய்வு ஆணையம் அமைத்தது இந்திய அரசு. மகாஜன் ஆணையம் கர்நாடகத்தில் உள்ள 264 கிராமங்களை மகாராட்டிரத்துடன் சேர்க்க வேண்டும் என்று கூறியது.

        ஆனால் இந்திய அரசு மகாஜன் ஆணைய அறிக்கையை ஏற்க மறுக்கிறது. மகாராட்டிர அரசு இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.

        பெல்காமில் மராத்தியர்களுக்கான மாவட்டக் கட்சியே மக்களவைத் தேர்தலிலும் சட்டப் பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெற்று வருகின்றது. பெல்காம் மக்கள் தங்களை மகாராட்டிரத்துடன் இணைக்க வலியுறுத்திப் போராடுகின்றனர். அவர்களை ஆதரித்து மகாராட்டிரத்திலும் மராத்தியர்கள் போராடுகிறார்கள்.

        மராட்டிய சட்டப் பேரவையில் பெல்காம் மக்கள் கோரிக்கையை ஆதரித்து ஒரு மனதாகத் தீர்மானம் போட்டார்கள். நடுவண் அரசு தவறு செய்கிறது என்று அம்மாநில முதல்வர் அசோக் சவாண் சட்டப் பேரவையில் குற்றம் சாட்டினார். அங்கு நடப்பது காங்கிரஸ் ஆட்சி என்றாலும் தன் இனத்திற்காக நடுவண் அரசை எதிர்க்கத் தயங்கவில்லை அம்மாநில காங்கிரஸ் கட்சி. மராத்தியர்களின் கோரிக்கை ஞாயமானது.

        தமிழ் நாட்டை எண்ணிப் பாருங்கள். ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங்களிடம் இலட்சக் கணக்கான சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பையும் தமிழ் மக்களையும் இழந்து விட்டு எதுவும் செய்யாமல் திராவிட அரசியலுக்கும், இந்திய ஏகாதிபத்திய அரசியலுக்கும் வால் பிடித்துக் கொண்டுள்ளோம். மராத்தியர்களைப் பார்த்துத் தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

தமிழக அரசின் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உச்சநீதி மன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது நிலைக்குமா?

        இந்தக் கல்வி ஆண்டுக்கு மட்டுமே 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அனுமதித்துள்ளது உச்சநீதி மன்றம். மேலும் தமிழகத்தில் பிற்படுத்தப் பட்ட மக்கள் தொகை 50 விழுக்காட்டிற்கு மேல் இருக்கிறது என்பதை மெய்ப்பித்தால் இந்த 69 விழுக்காட்டை உறுதிப்படுத்துவது பற்றி ஆய்வு செய்யலாம் என்று உச்ச நீதி மன்றம் கூறியுள்ளது.

        இப்பொழுது இந்திய அரசு எடுக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பல் பிற்படுத்தப்பட்ட வகுப்பு குறித்தும் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்ய இந்திய அரசு மறுத்தால், தமிழக அரசு பிற்படுத்தப்பட்ட மக்கள்தொகை குறித்து தனியே கணக்கு எடுக்க வேண்டும். அக்கணக்கை உச்ச நீதிமன்றத்தில் காட்டி 69 விழுக்காட்டை நிலைக்கச் செய்ய வேண்டும். தமிழ் நாட்டில் பிற்படுத்தப்பட்ட மக்கள் தொகை சற்றொப்ப 70 விழுக்காடு இருக்கும் என்பது நமது கணிப்பு.

மராட்டிய அரசு கோதாவரியில் அணை கட்டுவதை எதிர்த்து ஆந்திரப் பரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நடத்தும் போராட்டம் அரசியல் ஆதாயத்திற்கான தந்திர மா, அல்லது உண்மையான அக்கறையா?

        அரசியல் தந்திரமாகவே இருக்கட்டுமே, அது ஆந்திரப் பிரதேச மக்களின் உரிமையைப் பாதுகாக்கப் பயன்படுகிறது என்ற அளவில்தான் தெலுங்கு மக்கள் பார்ப்பார்கள். அப்படிப் பார்த்தால் அதில் குறை ஒன்றும் இல்லை. கோதாவரி ஆற்றில் மகாராட்டிர அரசு பாப்ளி என்ற இடத்தில் அணை கட்ட ஏற்பாடு செய்கிறது. அந்த அணை கட்டி நீர் தேக்கப்பட்டால் ஆந்திரப் பிரதேசத்திற்கு வரும் கோதாவரித் தண்ணீர் குறைந்து விடும் என்ற அச்சத்தில் தெலுங்கு மக்கள் உள்ளார்கள்.

        அதை வெளிப்படுத்தும் வகையில் சந்திரபாபு நாயுடு பாப்ளி அணை கட்டும் இடத்திற்கே தம்முடைய சட்டமன்ற உறுப்பினர்களையும் கட்சியினரையும் அழைத்துக் கொண்டு போனார். மராட்டிய அரசு அவர்களைத் தளைப்படுத்தியது. சிறை வைக்கப்பட்ட இடத்திலும் உண்ணாப் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தினர். மராட்டிய அரசு பிணையில் விடுதலை செய்ய முன்வந்தது. அந்தப் பிணையை ஏற்க மறுத்து சிறைக் காவலில் இருந்தனர். ஆந்திரப் பிரதேச மக்கள் முழு அடைப்பு நடத்தி சந்திரபாபு நாயுடு கைதைக் கண்டித்தனர். மராட்டிய அரசு சந்திரபாபு நாயுடுவையும் மற்றவர்களையும் வலுக்கட்டாயமாக விடுதலை செய்து வானூர்தியிலேற்றி ஐதராபாத்தில் கொண்டுவந்து விட்டது.

        காவிரி, முல்லைப் பெரியாறு அணை, பாலாறு, ஆகியவற்றைத் தடுக்கும். அண்டை மாநிலங்களுக்குச் சென்று தமிழகத் தலைவர்கள் சந்திரபாபு நாயுடு போல் போராடியதுண்டா என்பதைத்தான் தமிழர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். அரசியல் ஆதாயத்திற்காகக் கூட இங்குள்ளவர்கள் அவ்வாறு போராடவில்லையே.