ஆறாக் காயத்தில்
அமிலத்தை ஊற்றுகிறாய்
பொறுமும் நெஞ்சத்தில்
நெருப்பள்ளி வீசுகிறாய்..

மூடும் இமைகளில்
முள்வைத்துத் தைக்கிறாய்..
குமுறும் கோபத்தை
கொக்கரித்துப் பார்க்கிறாய்..

ஆடுகிறாய் நீ அகம்பாவமாய்..

ஆடு
இதுவரை பார்க்காத
எம் தமிழனின் கண்கள்
இப்போது பார்க்கிறது..

ஆடு
இதுவரை கேட்காத
எம் தமிழனின் காதுகள்
இப்போது கேட்கிறது..

ஆடு
உன் ஒப்பனைக் கரைந்து
இப்போது குரூரம் இளிக்கிறது
ஆடு..

நீ ஆட ஆட
எமக்குள் உறுமுகிறது
ஆதிப்பாட்டனின் சினம்
ஆடு இந்தியமே ஆடு
உன் ஆட்டம் முடிவதற்காய் ஆடு!