1) காங்கிரசுக் கட்சி உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் ஐந்தாவது இடம் பெற்றது; அதாவது ஏழு தொகுதிகளில் வென்றது. தில்லி மாநகராட்சித் தேர்தல்களில் மூன்றாவது இடம்தான் பெற்றுள்ளது. இராகுல்காந்தி தலைமை அவ்வளவுதானா? காங்கிரசுக்கு ஏன் இத்தகைய வீழ்ச்சி?

காங்கிரசுக்கு வீழ்ச்சி என்பதைவிட, இந்திராகாந்தி தொடங்கி வைத்த வாரிசுரிமை அரசியலுக்கு ஏற்பட்ட வீழ்ச்சி என்பதே மிகவும் பொருத்தம்!

நேருவின் மகள் என்ற அரசியல் பின்புலம் இந்திராகாந்திக்கு ஒரு வலிமையாக இருந்தது. ஆனால் நேருவால் வாரிசுரிமைப்படி கொண்டு வரப்பட்டவர் அல்லர் இந்திரா. அவருக்கென்று பொது வாழ்வில் ஈடுபாடு, அரசியல் அறிவு, போராட்ட உணர்வு, அரசியல் அனுபவம் எல்லாம் இருந்து, ஒரு கட்டத்தில் ஆட்சித் தலைமை, கட்சித் தலைமை ஆகியவற்றைக் கைப்பற்றினார்.

ஆனால் அதே இந்திராகாந்தி, தன் அரசியல் வாரிசாக முரட்டு மகன் சஞ்சய் காந்தியைத் திணித்தார். அவர் இறந்தபின், மூத்த மகன் இராசீவ்காந்தியைத் திணித்தார்.

இராசீவ்காந்திக்குப் பின் அவர் மனைவி சோனியா காந்தி _- சோனியா மகன் இராகுல் காந்தி ஆகிய இரண்டு வாரிசுரிமைகளும் சொந்தத்தகுதி அற்றவை. காங்கிரசின் வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணங்கள் சோனியாவும், இராகுல் காந்தியும் ஆவர்.

உ.பி.யில் முலாயம் - அகிலேசு சமாஜ்வாதி கட்சியின் வீழ்ச்சிக்குக் காரணம், முலாயம் சிங்கின் உடன் பிறப்புகளாக _ பிள்ளைகளாக உள்ள தகுதியற்ற ஆட்களின் வாரிசுரிமை அரசியல் ஆகும். ஏற்கெனவே, பீகாரில் லாலு கட்சியின் வீழ்ச்சிக்குக் காரணம் அவரின் வாரிசுரிமை அரசியல்தான்!

செயலலிதாவின் குடும்பம் அல்லாத குடும்ப அரசியல்தான் சசிகலா வாரிசுரிமை அரசியல்! அது இப்போது சந்தி சிரிக்கிறது.

கருணாநிதியின் வாரிசுரிமை அரசியல் எவ்வளவோ குத்துவெட்டுகளையும் கொலைகளையும் அரங்கேற்றி யுள்ளது. இனியும் என்னென்ன நடக்குமோ?

முதலில் வாரிசுரிமை அரசியல் - சனநாயகத்தைத் தண்டிக்கிறது. முடிவில், சனநாயகம் - வாரிசுரிமை அரசியலைத் தண்டிக்கிறது.

தகுதியும் மக்களுக்கான அர்ப்பணிப்பும் இருந்தால், தலைவரின் பிள்ளையோ உடன்பிறப்போ அடுத்த தலைமை ஆகலாம்; தவறில்லை. ஆனால், ”தலைவர் வாரிசு” என்ற ஒற்றைத் தகுதியைப் பெரிதும் நம்பி தலைவராவது அல்லது தலைவராக்குவது வீழ்ச்சிக்கே வழி வகுக்கும்! 

2) ஓ. பன்னீர்ச்செல்வம் வீட்டுவாசலில் நிற்க நேர்ந் தால் “தற்கொலை செய்து கொள்வேன்” என்று நாஞ்சில் சம்பத் கூறியது சரிதானா?

நாஞ்சில் சம்பத் போன்றவர்கள் நாக்கு நாட்டியக் கலைஞர்கள். அவர் கூற்றை இரசிக்கத் தெரியவில்லை உங்களுக்கு!

3) இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கோடி கடன் வாங்கி ஏமாற்றிவிடடு, இலண்டனுக்கு ஓடிவிட்ட விசய் மல்லையாவுக்கு - பிரித்தானிய நீதிமன்றம் பிணை வழங்கி இருப்பது சரியா?

விசய் மல்லையாவை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பும் தொடர் நடவடிக்கையில் ஒன்றாக, கைது, வழக்கு, அதில் பிணை என்று வழங்கப்பட்டிருக்கிறது. அடுத்து, வாய்தா போட்டுள்ளார்கள். அதில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

4) அ.இ.அ.தி.மு.க.வில் முழுநேரச் சொற்பொழிவா ளர்கள் 850 பேர் இருப்பதாகவும், இவர்களில் 10 பேர் விண்மீன் பேச்சாளர்கள் என்றும் கூறப் படுகிறது. செயலலிதா இறந்ததிலிருந்து, இவர் களுக்கு வாய்ப்பில்லாமல் வறுமையில் வாடுவதாகச் சொல்லப்படுகிறது. இவர்களுக்கு அ.தி.மு.க. தலைமை துயர் துடைப்பு நிதி உதவி செய்யாதா?

இவர்களுக்கு அ.தி.மு.க.வும் நிதி உதவி செய்யலாம்; தி.மு.க.வும் நிதி உதவி செய்யலாம். இவர்கள் அத்தனை பேரும் மேடையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோரைப் பற்றிதான் இத்தனை ஆண்டுகளாக வசைமாறிப் பொழிந்து வந்தார்கள். இவர்கள் மக்களுக்கு விவரம் சொல்லும் வகையிலா பேசினார்கள்? தி.மு.க.வை இழிவாகப் பேசாமல் இப்போது இருக்கிறார்கள் அல்லவா! அதற்காக தி.மு.க.வும் நிதி வழங்கலாம்!

5) தமிழிசை சவுந்திரராசனுக்கு எதிரான மறுப்பறிக் கை விட்ட துரைமுருகன் தி.மு.க. ஆட்சியால்தான் காவிரித் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது, 1998இல் காவிரி ஆணையம் அமைக்கப்பட்டது, காவிரித் தீர்ப்பாயம் இறுதித் தீர்ப்பை வழங்கியது, அதை அரசிதழில் வெளியிடத் தி.மு.க.தான் போராடியது என்று அடுக்கியுள்ளார். இவை உண்மையா?

துரைமுருகனின் இந்தச் சரடுகள் ஒரு பக்கம் இருக்கட்டும். அவர் அறிக்கையில் இடைக்காலத் தீர்ப்பின்படி, இறுதித் தீர்ப்பின்படி தி.மு.க.தான் கர்நாடகத்திடமிருந்து காவிரி நீர் வாங்கியது என்று ஓர் இடத்தில்கூட சொல்லவில்லையே, பிறகென்ன சாதனையாம்?

காவிரித் தீர்ப்பாயம் 1990இல் அமைக்கப்பட்டது உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால்தான்! அது, தி.மு.க. ஆதரித்த வி.பி.சிங் நடுவணரசின் கோரிக்கையால் அல்ல! வி.பி. சிங் அரசு, நீதிமன்றம் எத்தீர்ப்பு சொன் னாலும் ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறி ஒதுங்கிக் கொண்டது.

காவிரித் தீர்ப்பாய இடைக்காலத் தீர்ப்பைச் செயல்படுத்த தலைமை அமைச்சர் வாச்பாயியைத் தலைவராகக் கொண்டு, நான்கு மாநில முதலமைச்சர் களையும் உறுப்பினராகக் கொண்டு, ஒன்றுக்கும் உதவாத, “காவிரி ஆணையம்” அமைப்பதை அன்று தி.மு.க. ஆட்சி ஏற்றுக் கொண்டது. கர்நாடகத்தின் கோரிக்கைக்குத் துணை போய் தமிழ்நாட்டிற்குத் துரோகம் செய்தது.

தலைமை அமைச்சர் தலைமையிலான ஆணையத் தில் நான்கு முதலமைச்சர்களும் ஒப்புக் கொண்டால் தான் (Consensus), அதில் ஒரு முடிவெடுக்க முடியும்.

“எலி பிடிக்காதது பூனையா? அதிகாரமில்லாதது ஆணையமா?” என்று அப்போது நாம் கேட்டோம். அந்த ஆணையம் இடைக்காலத் தீர்ப்பைச் செயல் படுத்தவே இல்லை!

காவிரித் தீர்ப்பாய இறுதித் தீர்ப்பு தி.மு.க. ஆட்சி செய்த காலத்தில் 2007 பிப்ரவரி 5இல் வந்ததில் தி.மு.க.வுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லை. காவிரி இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட எந்த நாளில் என்ன போராட்டம் நடத்தியது தி.மு.க.? காவிரித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தானாகக் கட்டளையிட்டது. அது தி.மு.க. கோரிக்கையும் இல்லை. 

காவிரித் தீர்ப்பாயம் அமைத்ததை எதிர்த்து, அத் தீர்ப்பாய நீதிபதிகள் தமிழ்நாட்டில் கையூட்டு வாங்கி விட்டார்கள் என்று கூறி அவர்கள் மீது வழக்குப் போட்ட தேவகவுடாவை இந்தியாவின் தலைமை அமைச்சர் ஆக்கிய சாதனைதான் தி.மு.க.வின் ”சாதனை”!

காவிரி மேலாண்மை வாரியம் மறுநாள் அமைக்கப் படவிருந்த நிலையில், முதல் நாள் அதைத் தடுத்து, தமிழ்நாட்டைத் தவிக்கவிட்டுள்ள சாதனைதான் தமிழிசைக் கட்சி ஆட்சி செய்த “சாதனை”!

காவிரி பற்றி தருக்கம் செய்து கொள்ள தமிழி சைக்கும் துரைமுருகனுக்கும் அடிப்படைத் தகுதி எதுவுமில்லை!